Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-21

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-21

 ஆலி-21

   வீட்டுக்கு வந்ததும் முதல் ஆளாக அகமேந்தியை தட்டாமாலை சுற்றி முடித்தான்.

     “க்ரஷ்… க்ரஷ்… தலைசுத்துது. மயக்கம் வருது. டா” என்று கூறவும் அவளை விடுவித்தான்.

      அதே நேரம் போன் மணியடிக்க, வசந்த் என்றதும் அதனை யெடுத்துக் காதில் வைத்தான்.

    “சொல்லு வசந்த்.”

     “சார் அந்தத் தருணேஷ் முட்டாளா சார். கம்பெனியை வந்த விலைக்கு விற்க ஆள் பார்த்துட்டு இருக்கான்.” என்று தகவல் அளித்தார்.

     “வசந்த் நீயா ஒர் ஆளை ஏற்பாடு செய்து அதை விலைக்கு வாங்கு. அவன் முட்டாள் தனமா பண்ணியிருக்க மாட்டான். வெறியில் விற்க பார்க்கறான்.” என்றான் சைதன்யன்.

      “சார் அப்போ என்ன காரணம்னு தெரியுமா. முட்டாள் தனமா போதையில் உளறலில் பண்ணலையே?” என்று கேட்டதும்

      “ம்ம்… அப்படியெல்லாம் இல்லை.” என்றதும் “ஓகே சார் நான் வைக்கிறேன்.”

    “வசந்த் ஒர் நிமிஷம்… எனக்கு ஒரு நர்ஸ் வேண்டும் தெரிந்தவர்களைப் பார்த்துக்க…” என்றதும், வசந்த் “சார் ரொம்பத் தெரிந்தவரா…” என்று வசந்த்  மறுமுறையும் கேட்டான்.

      “ஆமா வசந்த் தெரிந்தவர் தான்.” என்றான். தருணேஷ் என்றும் போதை வஸ்து எடுத்துக் கொள்பவனைப் பார்த்துக்கொள்ள என்றும் கூறாமல் தெரிந்தவர் என்று மட்டும் கூறினான்.
    
     “சார்… மார்னிங் டூ நைட் வரை என்றால் தெரிந்தவங்க இருக்காங்க. உங்களுக்கு ஓகே வா.” என்றான்.

     “வசந்த் இப்பொபழுது இதே போதும். ஏற்பாடு பண்ணுங்க. பார்த்துக்கப் போற நபரிடம் கொஞ்சம் தன்மையா தன்னம்பிக்கையா பேசி, போல்டானவங்களா இருந்தா போதும்.” என்று நிம்மதியானான்.

     “ஓகே சார் நான் உங்களுக்கு நம்பர் தர்றேன். நீங்களே யாரை பார்த்துக்கணும், என்ன பணி என்பதை நாளைக்குத் தெளிவாகப் பேசிக்கோங்க.” என்று பதிவோடு கட் செய்துவிட்டான்.

   தருணேஷ் கம்பெனியை விற்க முனைவது ருத்ரேஷ் மருத்துவச் செலவிற்காக என்பது தன்னால் புரிந்தது.

  ருத்ரேஷ் தன்னோடு எடுத்த புகைப்படம் அனுப்பவும் தருணேஷ் தானாக அண்ணன் ஸ்தானத்தில் கம்பெனி விற்றாவது மருத்துவம் பார்க்க முடிவெடுத்து இருப்பான்.

     லட்சங்களில் கொடுத்தால் சரியாகும் வியாதியா . இதயம் பலகீனம் பெற்று உள்ளது. கூடுமானளவு மாற்று இதயம் பொருத்த வேண்டும். அது புரியாமல் கம்பெனி விற்று என்ன செய்வானும், இருந்தும் தருணேஷ் இந்த அளவு யோசிப்பதே திருப்பதியாக இருந்தது.

   என்ன இந்த வஸ்துகளை எப்படி மாற்றி அவனைச் சரிப்படுத்த, பொறுமையாகத் தான் கையாளணும்.
   
     இன்று இத்தனை சூழ்நிலை தன்னைத் தாக்கினாலும் ஏனோ மனநிறைவு பெற்றான்.

     தம்பியென்ற ருத்ரேஷ் உறவு, கம்பெனி திரும்பத் தானே வாங்கிச் செயல்படுத்த வேண்டும். தருணேஷ் பற்றிப் பெரிதாகத் தற்போது எண்ண தோன்றவில்லை.

     ரெப்ரெஷ் ஆகி ஹாலில் வரவும் சூடாக நெய் ஊற்றி முறுவலாகத் தோசை வார்த்து நீட்டவும் சாப்பிட துவங்கினான்.

     அதே நேரம் வசந்த் எண்ணிலிருந்து நம்பர் வரவும் அதனைப் பதிவு செய்து கொண்டான்.

     ”ஸ்வீட் ஹார்ட் சந்தோஷமா இருக்கேன் டி.” என்றவன் சாப்பிடவும் அகமேந்தி “ருத்ரேஷ் அம்மா நேற்று, நீ வந்ததும் அவனை அழைத்துப் போனதும் ருத்ரேஷ் குணமானது போல இருக்குனு சொன்னாங்க.”

      “இதயம் கிடைக்கணும் அகமேந்தி. சுந்தர் அங்கிளிடம் பேசியிருக்கேன். இதயமருத்துவர் இமயனிடம் கேட்டு இருக்கேன் ப்ரைன் டெத் ஆர் கோமா இப்படி இறப்பில் போராடறவங்களோட இதயம் தானம் பண்ணுவாங்களா  பார்ப்போம்.” என்றவன் கை அலம்பி “வத்தக்குழம்பு சூப்பர்.” என்றவன் கன்னத்தில் இதழ்யொற்றி ஓடினான்.

    கன்னத்தில் முத்தம் வைத்துச் செல்லும் சைதன்யனை கண்டவள் க்ரஷ்… என்று சிணுங்கி அவளும் உணவை சாப்பிட்டு முடித்தமையால் மற்றவையை மூடி வைத்து சென்றாள்.

       அங்கே சைதன்யன் போனில், “இல்லை மா ஒரு பையனை கூடயிருந்து பார்த்துக்கணும். நீங்க சின்ன வயசா சொல்லறீங்க. சரி வருமா.”
  
     “……”

     “நர்ஸ் என்றால் எல்லாரும் சமம் தான் மா. இல்லைனு சொல்லலை. அவன் டிரக்ஸ் அடிக்ட் எப்பதிலருந்து எடுத்துக்கறானு தெரியலை. மினிமம் இரண்டு வருடத்துக்குள் தான் இருக்கும். அவன் ஏதேனும் மிஞ்சி நடந்தா உங்களுக்குப் பாதுகாப்பா இருக்கணும். ஏன் சொல்றேன்னா இன்னிக்குச் சின்னப் பையனை கன்னம் சிவக்க அடிச்சிட்டான்.”

     “……”

     “அன்னைதெரசா கனிவுன்னா அவங்க அம்மாவே திருத்த முயற்சிக்கலாமே. இது கொஞ்சம் பர்சனல் பிரச்சனையால வேண்டுமென்றே செய்யறது. உங்களுக்கு நான் நாளைக்கு அவனைப் பற்றித் தெளிவா சொல்லறேன். அப்பவும் ஓகேனா தாராளமா எங்க டாக்டர் அங்கிளிடம் ஒர் ஒபினியன் கேட்டுட்டு நீங்க அவனைப் பார்த்து முடிவு செய்து பிறகு வேலைக்கு வரலாம்.” என்றதும்

    “……”

    “நன்றிமா” என்று சைதன்யன் அருகேயிருந்த அகமேந்தியின் இடைப் பற்றித் தூக்கி சுற்றினான்.

    அவளின் இடையை இறுக பற்றி ஹாலில் சுற்றியதை காட்டிலும் நீண்ட நேரம் சுற்றி முடித்தான். அவர்களாக மெத்தையில் விழுந்தப்பின் இருவருக்கும் மூச்சு வாங்கிப் பேச்சு வர நேரமெடுத்தது.

    சைதன்யன் அகமேந்தியை கைக்குள்ளே வைத்திருக்க அவனின் மூச்சும் இவளின் மூச்சும் சீராக நேரமெடுத்தப்பின் சைதன்யன் கண்கள் அவளின் தாமரை வதனத்தில் நிலைகுத்தியது.

     படபடக்கும் இமைக்கு இரு முத்தங்களை வாரி வழங்கவும் அகமேந்தி கண்கள் சொருகி மயக்கத்தில் நின்றாள்.

        அவளின் மயக்கம் சைதன்யனுக்குச் சிரிப்பை தர மூக்கை வலிக்காமல் கடித்து வைத்தான்.

      “க்ரஷ்… என்ன பண்ற தள்ளு.” என்று மூக்கு தேய்த்துக் கொண்டு பேசவும்,

      “ஸ்வீட்ஹார்ட்… ஸ்வீட்லிப்ஸ் கொல்லுது.” என்று இதழை ஏக்கமாகப் பார்க்கவும்

   “தன்யன் என் பெட்டை நீங்க அந்த ரூம்ல போடறதா நேற்று சொன்னிங்க. போய் மாற்றிடுங்க.” என்று முகத்தை அந்தபக்கமும் இந்தபக்கமும் திருப்பவும் இயலாமல் போனது.

சைதன்யனின் இரும்பு கரமாக இடது கை தலையைத் தாங்கியும் வலது கை அவளின் கன்னத்தைப் பற்றியும் அவன் முகம் நோக்கி பிடித்திருக்க, அகமேந்தியின் மேனியில் படர்ந்தும் இருந்தான்.

     “தன்யன்..?”

     “என்ன நீ சம்மதிக்கலைனு சொல்லப் போறியா… ஆல்ரெடி ஓட்டு வீட்ல பாதி மில் குடிச்சி உன் சம்மதத்தை அன்றைக்கே சொல்லிட்ட. இங்கயும் நீயா சின்னதா கன்னமுத்தம் கொடுத்து இருக்க ஸ்வீட்ஹார்ட். சோ… எஸ்கேப் ஆகாதே…” என்று அதரத்தை நெருங்க, சிப்பிப் போன்ற கண்கள் தானாக இறுக மூடிக்கொண்டது.

      அதரத்தின் தேன் குடித்த கள்வன், அவளின் சின்னச் சின்னச் சிணுங்கலை ஸ்வரமாக எண்ணி, தன் நேசத்தால் ஆளத்துவங்கினான்.

     அதிகாலை எழுந்ததும் ப்ரியங்கா வீட்டில் தருணேஷ் மெத்தையில் இருக்கக் கண்டவன் கண்களை அழுத்த தேய்த்து நேற்று நடந்த நிகழ்வை அசைப்போட்டான்.
 
    இங்கு வந்து டிவி பார்த்துக் கொண்டிருந்த ருத்ரேஷை அடித்தது தான் நினைவில் மோதியது.

    அவனுக்கு எதுவும் தெரியாமல் இருக்க வேண்டும் என்று எண்ணிய தானே அவனிடம் உண்மை உளறியது கண்டு தன்னையே நொந்தான்.

    அம்மா அடிக்கும் பொழுது கத்தி சொன்னாரே அவனுக்கு எதுவும் தெரியாது டா. ட்ரீட்மெண்ட் மட்டும் அழைச்சிட்டுப் போனான் இன்று பலமுறை சொல்லியும் தான் மூர்க்கதனமாக அடித்து உண்மை உளறியதை எண்ணியவன்.

    கடைசியில் அவன் வந்தானா? சைதன்யன் வந்தானா…? என்னை அடித்தானா? என்றது சரியாக நினைவில் இல்லை.

     எழுந்து வெளியே வர, ருத்ரேஷ் தருணேஷை பார்த்து அதேயிடத்தில் அமர்ந்திருந்தான்.

     “சாரி டா.” என்று தருணேஷ் நெருங்கவும்.

     “நீ அடிச்சது வலிக்கலை அண்ணா. ஆனா நீ என்னவோ நேற்று சரியில்லை. நீ முன்ன என்னோட செஸ் விளையாடறப்ப இருப்பியே அப்படி மாறு. எனக்கு இந்த அண்ணா வேண்டாம். நீ எந்தக் காரணத்துக்காகவும் ரூடா மாறுவது எனக்குப் பிடிக்கலை.” என்று எழுந்து அறைக்குச் சென்றான்.

   தருணேஷிற்கு என்ன செய்து தம்பியின் மனதில் தன்னிலை புரிய வைக்கயென்று துடித்தான்.

     நேற்று பேச்சில் வேறு அவன் கூட்டிட்டு போய் நீ பிழைக்க வேண்டாம் அதற்குச் செத்துடு என்பதாகப் பேசிய நொடிகள் தன்னை அறைந்தது.

    நான் அண்ணா… எனக்குக் கம்பெனி இருக்கு. அதை விற்று நான் என் தம்பிக்கு மருத்துவம் பார்ப்பேன். அவன் பார்க்க தேவையில்லை. இவ்வாறு மனதில் எழுவும் தன் கம்பெனியை விற்க சொல்லியிருந்த ஆளிடம் பேசியபடி தான் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றான்.

   அங்குச் சென்று குளித்து உடை மாற்றி அலுவலகம் செல்லும் நோக்கத்தோடு புறப்பட்டான்.

     சைதன்யன் ஏற்பாடு செய்தவன் தயாராக வாங்க காத்திருந்தான்.

    வசந்த் விற்காத என்பது போல நாடகமாட, தருணேஷ் விற்க ஆர்வமானான்.

      சைதன்யனோ அரையுருக்கத்தில்  தன்னவளை அணைக்கத் தேட, அவளோ பஞ்சணையில் இல்லை.

      “ஸ்வீட்ஹார்ட்…” என்று எழுந்து குளியலறை சென்று புத்துணர்வு பெற்று அவளை அழைத்தபடி வெளியே வந்தான்.

      போன் பேசுவதாகச் சைகை காட்டினாள்.
   
     “ஓகே ஓகே டே கேர்.” என்றவன் வசந்த் அழைக்கக் கண்டு குறுஞ்செய்தியை பார்த்து ‘வந்துட்டே இருக்கேன் வசந்த்’ என்று மட்டும் அனுப்பினான்.

    போன் பேசிமுடித்து வந்த அகமேந்தி எங்கோ செல்லும் வகையில், ஆடை அணிந்து வந்தவனைக் கண்டு கேட்க வாயெடுத்தாள்.

     தன்யனோ, “முக்கியமான விஷயம் ஸ்வீட்ஹார்ட் ஆபிஸை விற்கறான். நான் தெரிந்தவர் மூலமா வாங்கற மாதிரி வாங்க சொல்லி என் பேர்ல மாற்றணும். அவன் ருத்ரேஷ் மருத்துவத்துக்குத் தான் பணம் தயார் பண்ணறான். பட் ஒன்று புரியலை அவனுக்குத் தேவை இதயம்.” என்று ஷூ அணிந்து அகமேந்தியிடம் வந்தவன், சின்னதாய் முத்தமிட, பதில் முத்தமிட்டு விடைக் கொடுத்தாள்.

       இன்று சற்று அசதி காண வீட்டிலிருக்க எண்ணி சைதன்யனின்  ஆல்பம் காண முடிவெடுத்தாள்.

      ப்ரியங்காவிடம் இருந்து போன் வரவும் மணியைப் பார்த்தாள்.

    இவ்ளோ நேரம் போனதே தெரியலை என்று அட்டன் செய்யவும், “பெரியவன் இல்லையா மா. போன் பண்ணினா அட்டன் பண்ணலை.” என்று கேட்கவும்,

     “அவர் வெளியே போயிருக்காரே.. என்னாச்சு…?” என்றதும்

      ‘அவனுக்குக் கால் பண்ணறியா..’ என்ற தருணேஷ் குரல் கேட்டதும் சத்தம் அடங்கியது. அங்கே தருணேஷ் போனை உடைத்திருந்தான்.

     அகமேந்திக்கு என்ன செய்வதென்ற புரியாமல் சைதன்யனுக்கு அழைக்க ரிங் போய் எடுக்கப்படாமல் இருக்கவும் உடனடியாக நேற்று போல ருத்ரேஷை அடித்திருப்பானோ என்று பயந்து அங்கே வெளியே தென்பட்ட ஆட்டோ ஏறி புறப்பட்டாள்.

       அவள் சென்ற நேரம் வீடு அலங்கோலமாக இருந்தது.

    “ருத்ரேஷ்…” என்று அழைக்க, ப்ரியங்கா எட்டி பார்த்து வரவும், தருணேஷ் அதற்கு முன் தள்ளாடி அருகே வந்திருந்தான்.

     “அண்ணி ரூம்ல தான் இருக்கேன். எனக்கு ஒன்றுமில்லை.” என்று குரல் வரவும், அந்த அறைக்குச் செல்ல முயன்றாள்.

   தருணேஷ் அவள் முன் வந்து, “பார்டா நீ அண்ணியா… சரி தான் அவனுக்கு நான் தான் அண்ணா. அப்ப நீ எப்படிம்மா அண்ணி?” என்று ஏளனமாக ஆரம்பித்தான்

      “அகமேந்தி நீ ஏன் தனியா வந்த? பெரியவன் வரலைனா இங்க வராதே. வீட்டுக்கு போ” என்று அனுப்பவே முயன்றாள்.

     “ஓ… சேப்டி பண்ணறிங்களா? நான் என்ன வில்லனா.” என்று கையில் முகர்ந்தான். அதில் தேய்த்திருந்த ஒன்று அவனின் மூளையை முடக்கியது.

       “அய்யோ… நீ போ” என்று ப்ரியங்கா கூற, “நான் ருத்ரேஷை பார்க்க வந்தேன்.” என்று அவனறைக்குச் செல்ல, “எங்க போற? எனக்குச் சில பதில் வேண்டும் சொல்லிட்டு போ” என்று அவன் கையை நீட்ட அதே நேரம் துப்பட்டா அவன் கையோடு வந்து சேர்ந்தது.

      இதைத் தவறாக எண்ணிய ப்ரியங்கா, “தருணேஷ் என்ன பண்ணற?” என்று அவனை அடக்க வர, அவனோ அவர்களை அந்த அறையில் தள்ளி வெளிப்பக்கம் பூட்டினான்.

       அதன் பிறகே அகமேந்தி மனம் என்னவோ பதற, ருத்ரேஷ் பக்கம் சென்றவளை இழுக்க, தருணேஷை தள்ளிவிட்டு ருத்ரேஷ் அறைக்கு வந்து தாழிட முனைந்தாள். ஆனால் அதற்குள் தருணேஷும் வந்து வழிமறைத்தான்.

     “இங்க பாரு என்னை நெருங்கி வந்த தன்யன் சும்மா விடமாட்டார்.  கதவை திற. நாங்க போகணும்” என்று சொல்வதைக் காதில் கேட்காமல் தலையைப் பூம்பூம் மாடாக ஆட்டினான்.

     “அண்ணா என்னை வேண்டும்னா அடி. அண்ணியைப் போகவிடு. பாரு பயப்படறாங்க.” என்று ருத்ரேஷ் பயந்தாலும் கூறிமுடித்தான்.

     “இவளுக்கா பயம்… என்னை அறைந்து இருக்கா… என்னை உதாசீனப்படுத்தியிருக்கா.

    என்னைக் கோமாளியாக்கி இருக்கா. என்னை விரும்பறவ நான் திருமணம் பண்ணலைனா கல்யாணத்தை நிறுத்த வேண்டியது தானே. இவள் என்ன பண்ணா… அவனுக்குச் சம்மதிச்சு தாலி வாங்கியிருக்கா. இவ… இவ மனசுல அவன் அப்போ இருக்கான். இவளுக்கு அவன் விரும்பியது தெரிந்துயிருக்கு.

    நடுவுல என்னை ஏன் கெட்டவனா மாற்றிட்டிங்க. இல்லை…. நான் கெட்டவனாவே இருக்கேன்.” என்று அவளருகே வந்தான்.

-சுவடுபதியும்.

-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!