Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-4

மனமெனும் ஊஞ்சல்-4

அத்தியாயம்-4

   நிரஞ்சன் மதிய உணவு சாப்பிட வராமல் போகவும் ஊருக்கு போனதாக முடிவெடுத்து கொண்டார்கள்.

   நைனிகாவுக்கும் ‘என்ன சொல்லாம போயிட்டார்’ என்று வருத்தம் உண்டானது.
  அதற்காக அதையே நினைக்க முடியுமா? நினைக்க தான் விடுவார்களா?

  மாதவன் குட்டி போட்ட பூனையாக நைனிகா முன் வந்து, “சாம்பாரும் புடலங்காய் பொரியலும் ருசியா இருந்தது நைனிகா. எங்க அந்த சுபத்ரா பிசாசு சமைக்கவே சமைக்காது. அம்மா சமையலும் வாய்க்கு ருசிக்கலை. என்னை கல்யாணம் பண்ணிட்டு நீ நல்லா பார்த்துப்பன்னு இப்பவே தெரியுது.” என்று கையை பிடித்து பேச, “மச்சான் கையை எடுங்க” என்று பதறி உதறி தள்ளி சென்றாள்.

   அதற்குள் இளவரசன் மகன் கதிர் வந்தான். “அக்கா?” என்று கூப்பிடவும், “வா கதிர் சாப்பிடு” என்று பரிமாற சென்றதாக நழுவினாள்.

மாதவன் கையை நாவல் நக்கி அலம்ப சென்றான்.

  கதிர் வந்ததும் பரிமாறியவளின் விழிகள் கண்ணீரால் பளபளத்தது.

  “ஒன்னு சொல்லட்டுமா அக்கா. நீயா மாதவன் மச்சானை அடிச்சி துரத்தினா ஆனந்தஜோதி அத்தை தானா உன்னை மருமகளா ஏற்றுக்க மாட்டாங்க. அவனும் ஓடிடுவான். எதுக்கு பயந்து வாழற?” என்றான்.
 
  “தெரியலை கதிர். நாலரை அடிச்சி விரட்ட தோணுது. ஆனா இருக்குற சொந்தத்தையும் இழக்கணுமான்னு பயம் வருது.” என்று பேசினாள்.

   ஏதோ கதிர் ஓரளவு நல்லவிதமாக பேசுவான்.
  “நீ அத்தையை ஆதரிச்சா, எங்கம்மா அப்பா உன்னை விரோதியா பார்க்கலாம். எங்கம்மா அப்பா சொன்ன மாதிரி எங்க வீட்ல வந்தேன்னுவை, முப்பது, முப்பத்தி ஐந்து வயசுல, எங்கம்மாவுமே  நாற்பது வயசுல இருக்கற அங்கிளுக்கு உன்னை கட்டி தர வாய்ப்புண்டு. மத்தபடி இப்பவே கல்யாணம் செய்து உன்னை நல்லபடியா வழியனுப்ப, இங்க எந்த மனசும் நினைக்காது. நீ பேசாம வெளியே ஹாஸ்டல்ல தங்கலாம். ஒரு வேலை மட்டும் கிடைச்சா பரவாயில்லை. இங்க இந்த ஊர்ல ஹாஸ்டல் எங்க இருக்கு. வேலையும் அந்தளவு கிடைக்காது. அப்படியே கிடைச்சா மணப்பாறையில முறுக்கு பிழிய தான் போகணும்” என்று கூறினான். 

    நைனிகா மனமோ சோர்வுற்றது. கதிர் பேசி முடித்து செல்லவும், தனியாக தன்னால் இந்த உலகில் வாழ முடியாதா? என்ற கலக்கத்தோடு சாப்பிட்டாள்.
   சாப்பாடு செய்தது என்னவோ இவளென்றாலும், உணவில் முதலில் கைவைக்கவில்லை. எல்லாரும் சாப்பிட்டு முடித்தப்பின் வயிற்றுக்கு தள்ளினாள்.

   இரவு இட்லி ஊற்ற ஆரம்பித்த பொழுது ராஜப்பன் வந்தார்.  

   “மாமா வந்துட்டிங்களா? உங்களை காணோம்னு பார்த்தேன் சாப்பிடறிங்களா? இட்லியும் கலையில் வச்ச சாம்பாரும் தான்” என்று கூறி புன்னகைத்தாள்.

  “நிரஞ்சன் வந்ததும் சாப்பிடறேன் மா” என்று கூறினார்.

   “அ…அவர் போகலையா மாமா?” என்று கேட்டாள் நைனிகா. அவள் கேள்வியை தொடர்ந்து ஆனந்தஜோதியும் கலையரசியும் வந்தார்கள்.

   “அதெப்படிம்மா பதினாறு முடியாம போவான். இங்க பொழுது போகலை. அதனால் வெளியே போனான். இப்ப வந்துடுவான்” என்று நிரஞ்சனின் வருகைக்காக காத்திருந்தார்.

   ஆயுசு நூறு என்பது போல கார் சத்தம் கேட்டது. இட்லியை விழுங்கிய சொந்தங்கள் ஆளாளுக்கு ஒரு அறைக்குள் பதுங்கினாரகள்.
 
   நைனிகா பதுங்க முடியுமா? இட்லி வேறு மூன்று தான் இருந்தது. ராஜப்பன் வருவாரென அறியாததால் அவருக்கு தோசை சுட முடிவெடுத்தாள்.

  இப்பொழுது நிரஞ்சனுக்கும் தோசை சுட வேண்டுமென்று கல்லை அடுப்பில் வைத்தாள். சாம்பாரும் போதுமா என்று ஐயம் துளிர்க்க தேங்காய் சட்னியை மடமடவென வைத்தாள்.

  அதற்குள் முகம் அலம்பி வருவதாக கூறிய நிரஞ்சன் வந்தான்‌.

   “சாரி அங்கிள் வீட்டுக்கு வந்ததும் ரெப்பிரஷ் பண்ணிட்டு வந்துடுவேன். அது பழகிடுச்சு. உங்களை சாப்பிட வெயிட் பண்ண வச்சிட்டேன்” என்று வந்தான்.

  “அதெல்லாம் இல்லை தம்பி. தனியா இருக்கேன். இன்னைக்கு உன் கூட சாப்பிட போறேன். இதோ நைனிகா கையால் சமையல்” என்றார். கையோடு தட்டை வைத்து சாம்பார் சட்னி என்று அருகே வைத்தார்.

  “அங்கிள்… உங்களுக்குன்னு யாரும் இல்லையா?” என்று சந்தேகத்தை கேட்டான்.

  “மனைவி நாலு வருஷம் முன்ன தவறிட்டா தம்பி. ஒரே பையன் மும்பையில செட்டில் ஆகிட்டான். அங்க நமக்கு செட்டாகலை. இங்கேயே இருக்கேன். நமக்கு மணப்பாறை தான்” என்று சொந்த ஊரை தாண்டி போக பிடிக்கவில்லை என்றுரைத்தார்.

  சூடான நெய் தோசை அதில் இட்லி பொடி தூவி மொறுகலாய் சுட்டு வந்து நைனிகா வைக்க, சாம்பார் சட்னி என்று தொட்டு நாவில் வைக்கவும் அப்படியே ருசி இழுத்தது.

   “டெலீசியஸ்” என்று பாராட்டி சாப்பிட்டான்.
  “இ..இட்லி கூட இருக்கு.” என்று மூன்றை எடுத்து நீட்ட, “தேங்க்ஸ்… தோசையே சூப்பரா இருக்கு. முட்டை தோசை கிடைக்குமா?” என்றான்.‌

   ராஜப்பன் நைனிகாவிடம் முட்டை உள்ளதா என்று பார்க்க, “இருக்கு. இரண்டு நிமிஷம்” என்று முட்டை உடைத்து ஊற்றினாள்.

   ”முட்டை தோசை நெய்தோசைன்னு பொண்டாட்டி கணக்கா சுட்டு தர்றா? இப்ப நீங்க போய் ராஜப்பனிடம் நைனிகாவை மாதவனுக்கு கேளுங்க” என்று ஆனந்தஜோதி கணவர் பாண்டியனை உந்தினார்.‌

  அவரும் ராஜப்பனை அப்பொழுது தான் காண்பது போல் வந்து அமர்ந்தார்.

  நிரஞ்சன் சாப்பிட்டதால், நாசூக்காய் எழுந்து, “ஓகே அங்கிள். நாளைக்கு பார்க்கலாம். அசதியா இருக்கு” என்று நழுவினான்.

  நைனிகாவை கடக்கும் பொழுது, விலகியே சென்றான். அவளுமே பாத்திரம் எடுத்து கழுவ கிணற்றடிக்கு சென்றாள்.

   ராஜப்பனிடம் மாதவனுக்கு நைனிகாவை கேட்க, அவரோ பதில் சொல்ல முடியாது தவித்தார்.

   “இங்க பாரு ராஜப்பா, நைனிகா அப்பா அம்மா இல்லாத பொண்ணு. ஏதோ அண்ணி வளர்த்து விட்டுடுட்டாங்க. மாதவனுக்கு தெரியாதனமா அசல்ல முடிச்ச கல்யாணம் விளங்கலை. இப்ப நம்ம நைனிகாவை வாழ்க்கை கொடுக்க கல்யாணம் செய்ய நினைக்கறேன்‌. நீ சரின்னு சொன்னா, அடுத்து விவாகரத்து முடிச்சிட்டு நைனிகா கல்யாணத்தை முடிக்கலாம்.” என்று கூறவும், ராஜப்பன் அவரை மேலும் கீழும் பார்த்தார்.

  “ஏங்க இப்ப தான் அந்த புள்ள தாயா நினைச்ச அத்தையை இழந்திருக்கு. அதுவே தன்னை மாத்திட்டு நடமாடிட்டு இருக்கா. அவளுக்கு ஆறுதலா இல்லாம என்ன பேச்சு இது?” என்று முகம் திருப்பினார்.‌

   பாண்டியனோ “ஏன் நீங்க நிரஞ்சனுக்கு கட்டிக்கொடுக்க விரும்பறிங்களா?” என்று கேட்டு விட்டார். பின் பூனையை சமையல் கட்டில் உருட்டுவது போல மனதில்
இருந்ததே.

   இன்று கேட்டுவிட்டால் தெரிந்திட போகின்றது.

  “நல்ல ஐடியா…. ஏதோ சம்பிரதாயம் செய்யறப்ப தடுக்கறாங்களேன்னு நான் தான் சொன்னது. ஆனா அந்த தம்பியிடம்‌ கேட்கவோ, சும்மா சொன்ன வார்த்தையை செயல்படுதாதவோ தோணலை. இப்ப இதை அவரிடம் கேட்டா என்னனு தோணுது. அம்மாவுக்காக இவ்வளோ தூரம் வந்த பையனுக்கு அம்மா மேல ப்ரியம் வச்ச மாமன் பொண்ணை விட மனசு இருக்குமா? ஒருவேளை ஆசையிருந்தா கேட்டுக்கறேன். நீங்க மாதவனுக்கு கட்டி வச்ச பிள்ளையிடம் ஒருமுறை பணிவா பேசி பாருங்க.” என்று பதில் தந்தார்.

    ஆனந்தஜோதி செவியை கூர்த்தீட்டி கேட்க, இளவரசி கிலுக்கி சிரிப்பதும் கேட்டது.

  இளவரசனோ, “சும்மாயிரு கலையரசி. எங்க அக்கா வன்மத்தை வளர்த்துக்காத” என்று கூறினார்.‌

  “ஆஹ்.. அம்மா” என்ற அலறல் கேட்டு ராஜப்பன் கிணற்று அடிக்கு செல்ல, ப்ளூ டூத்தில் பாடலை கேட்டு நிரஞ்சனோ நைனிகா கிணற்று பக்கம் கையை உதறி துள்ளி குதித்து பதட்டமாய் துடிப்பதை கண்டான்.

  ராஜப்பன் வேறு தரையை தரையை பார்த்து காலை பார்த்து பார்த்து வைத்தார்.‌

  ஒருவேளை பாம்பு இருந்து கொத்தி விட்டதோ என்று கதவை திறந்து ஓடிவந்தான்.

  “என்னாச்சு அங்கிள்?” என்று கேட்டான்.

‌ “ராத்திரி நேரமில்லையா தம்பி. கல்லுக்கு கீழே பூரான் இருந்து மேல ஊர்ந்திடுச்சு.” என்றார்.
  
   “இருட்டுல பார்த்தா கடிச்ச இடம் தெரியுமா? வெளிச்சத்துல வந்து பார்க்க சொல்லுங்க அங்கிள்” என்றான் நிரஞ்சன்.‌ நைனிகா காலை உதறி விளக்கொளியில் வந்தாள்.

  ராஜப்பன் வெற்றிலை மிளகு வெல்லம் எடுத்துவர சென்றார்.

  விளக்கு வெளிச்சத்தில் தாவணியை முட்டிவரை தூக்கி பார்த்ததும், ஓரிடம் தடிப்பு தெரிந்தது.

“ஐ திங்க். இந்த இடத்துல கடிச்சிருக்கு” என்று நிரஞ்சன் சுட்டி காட்ட சென்றவனிடமிருந்து இரண்டடி பின் நகர்ந்து துணியை இறக்கினாள்.
 
   “அம்மாடி நைனிகா… இந்த வெற்றிலையை கடித்து முழுங்கு. மிளகும் வெல்லமும் இருக்கு, நான் குப்பைமேனி செடியை கசக்கி எடுக்கறேன்.” என்று சாறை பிழிய முனைந்தார் ராஜப்பன்.

   நிரஞ்சனோ, நைனிகா பாவாடையை இறக்கவும், அறைக்கே திரும்பினான்.

   “இந்த வீட்ல நீ பூச்சி கடிச்சி அலறிட்டு இருக்க, உங்க சித்தப்பன் இளவரசன், அத்தை ஆனந்தஜோதி என்ன பண்ணுறாங்க. ஒரெட்டு தலையை காட்டிட்டு போகலாம்ல, இதுங்களை நம்பி எப்படி தான் உன்னை இலக்கியா தனியா விட்டுட்டு போனாளோ?” என்று ராஜப்பன் கடிந்தபடி சாற்றை பூரான் கடித்த இடித்தில் தடவினார்.

  நைனிகா லேசான பதட்டம் குறைந்து, இயல்பாகி “கதிர் ஹாஸ்டல்ல போயிரு. ஏதாவது வேலை செய்னு சொல்றான் மாமா” என்று கூறவும், ராஜப்பனோ, ‘கடைசில அதான் நடக்குமோ என்னவோ?’ என்று கூறி கூடத்திற்கு வரவும், ”நீ போய் படும்மா. நான் இரண்டு தடவை கண் முழிச்சு குப்பைமேனியை கால்ல பூசி விடறேன். நைட்டு தொட்டதும் பயந்துடாத” என்று கூறவும் செய்தார்.

   “சரிங்க மாமா. நீங்க இருந்தா கொஞ்சம் நிம்மதியாக இருக்கும்”  என்றாள்.

   அறைக்குள் நைனிகா உறங்க செல்லவும் கூடத்தில் ராஜப்பன் படுத்தார். போர்வையும் தலையணையும் கொடுக்க அங்கிருந்த சோபாவில் நீட்டி நிமிர்ந்தார். நிரஞ்சனோ ரூம்ல வந்து படுங்க அங்கிள்’ என்றதற்கு எனக்கு இதுவே போதும் தம்பி” என்று‌ அறைக்கு வர மறுத்தார்.

    இரவு இரண்டு முறை எழுந்து ராஜப்பன் மருந்தை பூசினார். நிரஞ்சன் தனதறையை மூடாமல் வைத்திருக்க, ராஜப்பனின் தூய்மையான உள்ளத்தை காண முடிந்தது.

  இந்த வீட்டில் அம்மாவின் தம்பி தங்கை இருந்தும், அவர்கள் தன்னிடம் நலம் விசாரிப்பாக கூட பேச முன்வரவில்லை. ஆனால் ராஜப்பன் அங்கிள் அப்பாவின் நண்பர். அவருக்கு எத்தனை அக்கறை. உறவை விட நட்பே பெரிதாக இருக்கும் என்று தோன்றியது. கோவாவுக்கு சென்றிருந்த நண்பர்களிடம் ஒரு இக்கட்டு வரவில்லை என்றதும் ஆளாளுக்கு கேட்டனரே.

    சொந்தங்கள் அவ்வளவு தானா? என்றவன் எண்ணங்களில், நீ மட்டும் என்ன? உன்னை பெற்றவளை பார்க்க அடிக்கடி வந்தவனா? இறப்புக்கு ராஜப்பன் சொல்லாமல் போனால் தாய் இறந்த செய்தி கூட அறியாமல் திரிந்திருப்போம். ஒருவிதத்தில் உறவில் ஒட்டுதலின்றி வாழ்வது தான் வழி உறவாலென்று முடிவுக்கட்டி கவலையோடு உறங்க முற்ப்பட்டான்‌.

-தொடரும்.
  
  

10 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-4”

  1. Very nice epi sis 👌👍😍 sondham ellam verum suyanalam dhan pa correct ah soneenga but adhulaium sila vidhivilakku eruku dhan but romba rare😢

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 4)

    அய்யய்யே..! என்ன இம்புட்டு நல்லவங்களா இருக்கிறாங்க எல்லாரும்…? இவங்களை எல்லாம் நினைச்சாக்கா அப்படியே பூரிச்சு போவுது மனசு. இந்த லஷ்ணத்துல அந்த வீணாப்போன மாதவனுக்கு கல்யாணம் மட்டும் தான் குறைச்சல்.. அதுவும் ரெண்டாவது கல்யாணம்.

    நல்ல வேளை, அந்த வீட்ல ராஜப்பன் மட்டும் தான் மனுசனா வாழ்ந்திட்டிருக்காரு.
    அதனால நைனிகா தப்பிச்சா.
    அதுவும் எத்தனை நாளைக்குன்னு தெரியலை.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *