Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-6

மனமெனும் ஊஞ்சல்-6

அத்தியாயம்-6

   இலக்கியாவிற்கு இன்று பதினாறாம் நாள் படையலிட்டு வழிபட்டு, உறவுகள் கிளம்ப வேண்டியது தான்.

  இதில் நிரஞ்சனும் அடக்கம். அவன் எப்படியும் இனியும் இங்கே தங்க மாட்டான், அவன் சென்றதும் நைனிகாவின் கழுத்தில் மாதவனை தாலி கட்ட வைத்து, அழைத்து சென்றிட ஆனந்தஜோதி முடிவெடுத்தார். காரணம் மாதவன் மனைவி சுபத்ரா மனமொத்திய விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டு அனுப்பியிருந்தாள். அதன் காரணமாக முதல் மனைவியிடம் விவாகரத்து வாங்கிவிடுவதாக பத்திரம் காட்டி நைனிகாவை அழைத்து செல்ல அவசரம் காட்டினார்கள் ஆனந்தஜோதியும் அவர் மகன் மாதவனும்.

பாண்டியன் வேடிக்கை பார்ப்பவராக இருந்தார். அவர் அறியாததா? மாதவன் ஏதோ புது வீடு வாங்கி தருவதாக மருமகளிடம் சாமர்த்தியமாக பேசி வீட்டு  பத்திரத்தில் கையெழுத்து கேட்பதாக விவாகரத்து பத்திரத்தில்  வாங்கினான். மாதவனின் மனைவி வீட்டில் தெரிய வரும் போது மகனுக்கு தர்ம அடி என்று எண்ணிக்கொண்டார்.

இளவரசன் கலையரசியை பொறுத்தவரை அக்கா குடும்பத்திற்கு எப்படியும் ராஜப்பன் கட்டி வைக்க மாட்டார். எப்படியும் தனது வீட்டிற்கு அழைத்து சென்றிட துடித்தார்கள்.

வீட்டு வேலையை நைனிகா பார்த்துக் கொண்டால், கலையரசியை கடையில் உட்கார வைத்து அழகு பார்க்க ஆசைக்கொண்டார்.

   கதிர் மட்டும் அக்காவை பாவமாக பார்த்து நின்றான்.‌ உண்மையில் இலக்கியா அத்தை இறப்பை விட, அக்கா பாவம் இனி தனியா நிற்கும் என்றவொன்று கவலையைத்தந்தது. அதற்காக மாதவனை கட்டி கொள்வது  தற்கொலை செய்வது போல. காமத்தின் மறுபிறவி. அதற்கு தன் வீட்டில் இருப்பது கூட பரவாயில்லை என்றெண்ணினான்.

   இப்படி இருக்கும் இடத்தில் தான், நைனிகா கையால் வடை பாயசம் கறி குழம்பென்று செய்து முடித்து இலை போட்டு இலக்கியாவின் சில உடைகளையும், உடமைகளையும் முன்னே வைத்து வணங்கிட ஆயத்தமாக வைத்தாள்.

  அதில் தந்தை வீரராகவன் தாயுக்கு அணிவித்த மாங்கல்யம் இருந்தது. இலக்கியா மாங்கல்யம் அணிந்து இங்கே யாரும் பார்த்ததில்லை. வீரராகவனும் ஷோபனாவும் மணந்து சென்றப்பின் தாலியை கழட்டி வைத்தது. அதன் பின் இன்று தான் இந்த பெட்டியில் காண்கின்றார்கள். அதில் நிரஞ்சன் சிறுவயதில் பால் குடித்த சங்கும், அவன் அணிந்த கருகமணியும் இருந்தது. கூடுதலாக எப்பொழுதும் கூடை பின்னும் உபகரணங்கள். இலக்கியா பிளாஸ்டிக் கயிற்றில் கூடை பின்னுவது மட்டும் தான் பொழுதுபோக்கு.

   அதெல்லாம் முன் வைத்து வழிபட்டு, மாடியில் காக்காவிற்கு சோறெடுத்து வைத்தாள். அங்கிருந்தவர்களில் நைனிகாவிற்கு தான் கண்கள் கலங்கியது. ஏதோ பெற்ற அன்னையை பிரிந்தது போல அழுகை.

  கண்களை துடைத்து, இலக்கியாவிற்கு படைத்த இலையில் நிரஞ்சனை சாப்பிட அமர்த்தினாள்.

மற்றவர்களுக்கு தனியாக வீற்றுக்கொண்டு உணவருந்தினர். அவர்களுக்கும் பரிமாறினாள்.

  நிரஞ்சனோ “அங்கிள் அவளையும் சாப்பிட சொல்லுங்க. இல்லைன்னா கிளம்பி போக கஷ்டம்” என்றான்.‌

   மாதவன் ‘அவயெங்க கிளம்பறா?’ என்ற தோரணையில் தாய் தந்தையரை கண்டு பார்வையாலே விசாரிக்க, ‘பொறுமை நான் கேட்கறேன்.’ என்று செய்கையில் மொழிந்தார். முதலில் வயிற்றை நிரப்பிக் கொள்ள கூறவும் மாதவனுக்கு வயிற்று பசியை விட உடற்பசிக்கு ஏற்ற நைனிகாவை கைப்பிடிக்கும் வேகத்தில் கையை உதறி பாதி சாப்பாட்டில் எழுந்து கொண்டான்.

  ஓரளவு உணவருந்தி மீண்டும் பேச்செடுக்க, ஆனந்தஜோதி கேட்கும் முன், கலையரசியோ, “கொஞ்ச நாள் சித்தப்பா என்ற உரிமையில் எங்க வீட்ல இருக்கட்டும். நாங்க நைனிகாவை பார்த்துக்கறோம்” என்றார். அதற்கு பின்வாத்தியம் இசைக்கும் பொருட்டு, இளவரசன் ”நாங்க எங்க பொண்ணா பார்த்துப்போம்” என்று முடித்தார்.

  ராஜப்பன் வாய் திறக்கும் முன், “மாதவன் சுபத்ராவுக்கும் விவாகரத்து கொடுக்க கையெழுத்து எல்லாம் வாங்கிட்டான்.
    நைனிகாவை என் தங்கை இலக்கியா போட்டோ முன்ன ஒரு மஞ்சள் தாலி எடுத்து கல்யாணம் பண்ண ரெடி. நாங்க அவளை எங்க வீட்டுக்கு இந்த நிமிஷம் கூட கூட்டிட்டு போறோம்.” என்று குரலுயர்த்தினார்கள்.

இருவர் பேச்சை செவிமடுக்காமல் “அம்மாடி நைனிகா… வந்தவங்களுக்கு பழம் ஸ்வீட் பேக் பண்ணிடு‌. போறவங்க அதை எடுத்துட்டு போகட்டும்” என்று கூறியவர் “இந்த பேச்சு ஆரம்பத்துலயிருந்து சொல்லிட்டேன். நைனிகாவை மாதவனுக்கு கட்டி கொடுக்க கேட்காதிங்க. அவன் லட்சணம் தான் நாலு நாள் முன்ன தெரிந்ததே. விவாகரத்து பத்திரத்தை கிழிச்சி எறிந்துட்டு கல்யாணம் பண்ணினா புள்ளையோட ஒழுங்கா வாழ சொல்லுங்க. நைனிகாவை இரண்டாதாரமா கட்டி கொடுக்க எனக்கு இஷ்டமில்லை.” என்று நேரிடையாகவே ஜோதியிடம் தெரிவித்தார்.

  “நல்லா சொல்லுங்க.” என்று இளவரசன் கூற, “உங்களுக்கும் தான்… வயசு புள்ளைக்கு ஒரே வீட்ல ஆபத்துன்னா பாதுகாப்புக்கு கூட வெளிவரலை. பூரான் கடிச்சாலும், பாலியல் சீண்டல் நடந்தாலும் கதவை மூடி வேலை வேலைக்கு சாப்பிட மட்டும் வந்து எட்டி பார்த்திருக்கிங்க. உங்களை நம்பி நைனிகா பொண்ணை அனுப்ப முடியாது‌.” என்றார் கறாராக.

  “ராஜப்பன் நீங்க வீரராகவனோட பிரெண்ட்‌. இலக்கியா அக்காவுக்கு உங்க பிரெண்ட் துரோகம் செய்தார் என்று தெரிந்தும் நட்பை முறிச்சி எங்க அக்காவுக்கு நல்லவரா இருக்கலாம். ஆனா நைனிகா என் அண்ணன் பொண்ணு. அவ விஷயத்துல நீங்க தலையிடாதிங்க. ஏதோ இதே ஊர் என்றதால எல்லா காரியத்தையும் எடுத்து செய்யவும், இதோ இலக்கியா புள்ளையை வரவழைக்கறேன்னு சொன்னதும் உங்க இஷ்டத்துல விட்டு ஒதுங்கி நின்றோம்‌.” என்று இளவரசன் நீண்ட உரையாற்றினார்.‌

  “உண்மை தான் எனக்கு நைனிகாவை உங்களிடம் போய் இருன்னு சொல்லவோ, அல்லது மாதவனை கட்டிட்டு வாழுன்னு சொல்லவோ எந்த உரிமையும் இல்லை. நான் வீரராகவன் பிரெண்ட் மட்டுமே. இலக்கியாவுக்கும் நண்பன்.
 
  ஆனா நைனிகா நிரஞ்சன் கூட போகப் போறா. அதாவது அவ அத்தை மகனோடு” என்றதும் ஆளாளுக்கு திரும்பி பார்த்து அதிருப்தி ஆனார்கள்.

இளவரசன் மனைவி கலையரசியோ “இங்க பாருங்க இந்த தம்பி எப்பவோ அவங்க அப்பாவோட போயிடுச்சு. இத்தனை வருஷமா அம்மாவை பார்க்க இந்த ஊருக்கு அடியெடுத்து வைக்கலை. இப்ப கொள்ளி போட வந்துட்டு நைனிகாவை அவரோட எப்படி அனுப்பறது? கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போறது வேற.

   இந்த நிமிஷம் கல்யாணம் செய்து கூட்டிட்டு போகட்டும். நாங்க தடுக்க மாட்டோம். ஆனா தனியா நைனிகாவை அனுப்ப முடியாது” என்று கூறவும் ஆனந்தஜோதியும் ”அதானே… இவன் தாலி காட்டுவானா? எதுனாலும் நல்லது கெட்டது நைனிகாவுக்கு நாங்க பார்த்துப்போம்” என்று எகத்தாளமாய் உரைத்தார்.

  எப்படியும் நிரஞ்சன் தாலி கட்ட மாட்டான் அல்லவா?!

  நிரஞ்சன் ராஜப்பனை அழைத்து கிசுகிசுக்க, அவரோ தலையாட்டி கூடத்திற்கு வந்தார்.

   “இப்ப என்ன? தாலி கட்டி கூட்டிட்டு போனா சந்தோஷமா?” என்று கேட்டு இலக்கியாவின் உடமையில் இருந்த பொன் தாலியை எடுத்து நிரஞ்சனிடம் நீட்டினார்.

  “உங்கப்பா அம்மாவுக்கு அணிவித்த பொன் தாலி.” என்று நீட்ட, அதனை வாங்கியவன் நைனிகா முன் வந்து கழுத்தில் அணிவித்தான்.‌

   நைனிகா அதிர்ச்சியோடு நிரஞ்சனை காண, “உன் திங்க்ஸ் ஏற்கனவே பேக் பண்ணியதை கார்ல எடுத்துவை. தேவையானது மட்டும் போதும்.” என்று கூறினான்.

அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்திட, மாதவனோ அங்கிருந்த பூஜாடியை தட்டி விட்டான். அது உருண்டு சப்தம் எழுப்பியது.

   ஆனந்தஜோதி கணவர் பாண்டியனை இழுத்து செல்ல, இளவரசனோ “இப்படி பொசுக்குன்னு தாலி கட்டிட்டா யார் சீர் செய்வா? எங்களுக்கு நேரம் கொடுத்திருக்கலாம்” என்று பேசினார். அண்ணன்‌ மகளுக்கு தந்தையிடத்தில் ஏதாவது செய்ய வேண்டுமோ என்ற பயம்.

  நிரஞ்சனோ, “சீர் நான் எதையும் கேட்கலையே.‌ நீங்க செய்யணும்னு அவசியமும் இல்லை. நான் அவளை கூட்டிட்டு போறேன். தட்ஸ் இட்” என்று முடித்து கொண்டான்.‌

  இதற்கு மேல் அவர்கள் இருப்பார்களா? அவர்களும் நடையை கட்ட உடமையை திணித்தார்கள்.

கதிர் கூடவே திரிய, நிரஞ்சன் நைனிகாவை கார் வரை நடக்க, “மச்சான்… அக்காவை நல்லா பார்த்துக்கோங்க” என்று மட்டும் கூறினான்.
 
  ராஜப்பனோ ”போன் பண்ணுங்க தம்பி. இப்ப கிளம்புங்க” என்று அனுப்பி வைத்தார். இந்த வீட்டை ராஜப்பன் தான் பூட்டி பாதுகாக்கப்போவதால் நைனிகாவும் ராஜப்பனிடம் “வர்றேன் மாமா” என்று சொல்லிவிட்டு நிரஞ்சன் அணிவித்த தாலியை குழப்பமாய் பார்வையிட்டு அவன் பின்னால் நடந்தாள்‌.

   கார் கதவை கதிர் திறந்துவிட, நைனிகா ஏறவும் நிரஞ்சன் தலையாட்டி கிளம்புவதாக உரைத்து காரை இயக்க ஆரம்பித்தான்.
  
  ராஜப்பன் மறையும் வரை திரும்பி பார்த்த நைனிகா அதன் பின் தலைக்குணிந்து அதே அதிர்ச்சியில் இருந்தாள்.

  இதென்ன சட்டென இலக்கியா அத்தையின் தாலியை எடுத்து என் கழுத்தில் அணிவித்து விட்டார்.
  இப்பொழுது திருமணம் முடிவடைந்து விட்டதென எண்ணுவதா?!
  இனி இவர் தான் என் கணவரா?

  அத்தை இறப்பிற்கு கூட வராத வீரராகவன் மாமா இந்த திருமணத்தை எப்படி ஏற்பார்?
 
   என்னை அவர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றால் ஷோபனா அத்தை என்ன எப்படி நடத்துவார்?

   ஷோபனா அத்தை? என்று எண்ணுவதற்கே மலைப்பு.
   நிரஞ்சனே ஷோபனாவை அம்மாவாக ஏற்று மரியாதையாக நடத்தும் போது அத்தை தானே?! ஆனால் இலக்கியா அத்தையின் வாழ்வை சூன்யமாக்கிய பெண் என்று, ஷோபனா மீது இதுநாள் வரை கோபம் தானே உண்டு.

  பல எண்ணங்களின் ஊர்வலத்தில் வண்டி நின்றதை நைனிகா அறியவில்லை.

  “நைனிகா.” என்ற நிரஞ்சன் குரலில் ‘ஆஹ்’ என்று திடுக்கிட்டு திரும்பினாள்‌.

   “ஐ அம் சாரி.. சாதாரணமா உன்னை என்னோட அனுப்ப மாட்டாங்க என்று தெரிந்தது. அதான் அவங்க என்னோட உன்னை அனுப்ப தாலி கட்டினேன்.

  நமக்குள்ள கல்யாணம் நடக்கலை. ஜஸ்ட் ஒரு செயினை உன் கழுத்துல போட்டேன். நீ எமோஷனல் ஆகிடாத. நீ ப்ரீயா இருக்கலாம். சென்னை போனதும் அம்மா அப்பாவிடம் உன்னை அறிமுகப்படுத்தறேன். அவங்களுக்கு இலக்கியா அம்மா இறந்தது தெரியாது.

  அதனால் நான் இங்க வந்ததுக்கு திட்டலாம். திட்டி முடிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் பேசுவாங்க. அதுவரை வீட்லயிரு.
வேலை சொல்லி வச்சியிருக்கேன். படிப்புக்கு ஏத்த வேலை கிடைக்கவும் ஹாஸ்டல்ல சேர்ந்துக்கோ. இந்த தாலி எல்லாம் பாஸிங் க்ளவுட்டா நினைச்சிக்கோ.

   ப்யூச்சர்ல உனக்கு பிடிச்சவனோட கல்யாணம் செய்து வாழு.  இப்ப இந்த தாலியை கழட்டி வச்சிடு.” என்று தெள்ளத்தெளிவாக பேசினான்.

   நைனிகாவிற்கு கனவெல்லாம் கலைந்து பூமி தரைமட்டமாக இயங்க ஆரம்பிப்பது போல பூகம்பம் நிகழ்ந்திட, “ராஜப்பன் மாமா திட்டுவாரே” என்றாள்.

   “ராஜப்பன் அங்கிளுக்கு தெரியும்‌. அந்த நேரம் அவரிடம் தாலி கட்டிட்டு போறப்ப கழட்டிட சொல்லிடலாம்னு நான் தான் சொன்னேன். அவரும் சரின்னு சொன்னார். ஒன்‌செகண்ட்” என்று ராஜப்பனுக்கு போனை போட்டு ”அங்கிள் நைனிகாவுக்கு தாலி கட்டிய இக்கட்டான சிச்சுவேஷனை சொல்லிட்டேன். இப்ப நைனிகாவிடம் அந்த டிராமாவை சொல்லிட்டேன். உங்களிடம் பேசணுமாம்.” என்று பேசி நைனிகாவிடம் நீட்டினான்.

   நடுக்கமாய் போனை வாங்கி “மாமா” என்று அழைக்க, “என்னடா.. மனசு உடையற மாதிரி இருக்கா? வேற வழியில்லைமா. தாலி கட்டாம உன்னை நிரஞ்சனோட அனுப்ப மாட்டா உன் சின்ன அத்தை ஜோதி. அதான்… அந்த தம்பி சொன்னப்ப கஷ்டமா இருந்தது. ஆனா நீ அங்க போய் வேற வாழ்க்கை வாழ்ந்து நல்லாயிருக்கணும்.” என்றார்.

  ”இந்த தாலி மாமா?” என்று கேட்டாள். நிரஞ்சன் சற்று தள்ளி குளிர்பானம் வாங்க சென்றிடவும் பளபளப்பான கண்ணீரோடு கன்னம் வழிய கேட்டாள்.

  ”அவன் மாமன் மகள்னு ஆசையா கட்டியதில்லையே. உன்னை காப்பாற்ற கட்டியது. இதை சாக்கா வச்சி நாம பிரச்சனை திணிக்க முடியாது‌‌. தாலி என்னம்மா தாலி.” என்றார் விரக்தியுடன்.

   நைனிகா இதற்கு மேல் அவரை கஷ்டப்படுத்தாமல் “புரியுது மாமா. இனி நான் சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி இருந்துக்கறேன்” என்றாள்.
 
  போன் துண்டித்து விட்டு கண்ணீரை துடைத்தாள்.
 
  ரோட்டை கிராஸ் செய்து குளிர்பானம் வாங்கி வந்த நிரஞ்சனோ, ”எவரிதிங் ஓகேவா?” என்றதும் தலையாட்டினாள்.
  
  ”அப்பாடா.‌‌ அப்ப தாலியை கழட்டிட்டு ஜூஸ் குடி நைனிகா” என்றான்‌.
  எத்தனை இயல்பாய் கூறிவிட்டான். கல் மனதாக இதயத்தை மாற்றி தாலியை கழற்றி அவனிடம் நீட்ட, “அம்மாவோடது நீயே வச்சிக்கோ.” என்று வாங்க மறுத்தான்.

-தொடரும்

11 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-6”

  1. Romba easy ya sollitan🥺 paavam Nainika evaloda emotion’s avanuku puriyalaiye parpom chennai ku poi ennum enenna lam kaathiruko🙄

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    அடே கிறுக்கா…. ! இவன் என்னவோ பெரிய பிஸ்தா மாதிரி பொசுக்குன்னு அம்மாவோட தாலியை எடுத்து கட்டிட்ட, ரொம்ப கூலா இப்ப கழட்டி வைச்சிடுங்கிறான். இந்த ஆம்பிளைங்களுக்கு வேணுமின்னா அது வெறும் சையினா தெரியலாம். ஆனா, பொண்ணுங்களுக்கு அதை தங்கத்துல போட்டாலும், வெறும் கயிற்றுல போட்டாலும் அது தாலியாயிடும். அதோட மகிமையே தனித்தான். இது தெரியாம இவன் இஷ்டத்துக்கு கட்டுறான், கழட்டி வைன்னு சொல்லுறான். அவங்கப்பா மாதிரி இவனுக்கும் கல்யாணம், தாலி அதோட மதிப்பே தெரியலை போல.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. Niranjan ah solli yum thappu illa nainika ah va kapathanum na ra ore karanathuku ipadi pannitan avan kita wife nu ava urimai eduthuka mudiyum ah enna atleast anga irundhu thappicha varaikkum pothum nu than rajappan avar kooda ipadi oru mudivukku othukitaru pola

  4. எதிர்பார்த்தேன் இப்படித்தான் நடக்கும் பாவம் தான் ஆனால் அங்கிருந்து தப்பிக்க ஒரு வழி யோசிச்சு காப்பாத்திட்டான் சூப்பர் சிஸ் கதை அழகாக நகர்கிறது 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *