Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-7

மனமெனும் ஊஞ்சல்-7

அத்தியாயம்-7

  நிரஞ்சன் கொடுத்த ஜூஸை பருகினாள். தற்போது அவளுக்கு நெஞ்சை அடைப்பது போல பாரம். அதனை விழுங்க முடியாது தத்தளித்தாள்.

  இலக்கியா அத்தை இறந்ததிற்கு அழுதவள் சடங்கு செய்யும் போது மகளாக கடமையாற்ற துடித்தாள். ஆனால் அவளை செய்ய கூடாதென்று சிலர் தடுத்திடவும், ‘அம்மாவுக்கு அவ என்ன செய்ய விரும்பினாலோ செய்யட்டும்’ என்ற குரலில் தான் திரும்பினாள்.
 
   இலக்கியாவின் உடலுக்கு பெரிய மாலையை அணிவித்து போடும் போது விழியை நிமிர்த்தி ‘யாரிது?’ என்று ஏறிட்டாள்.

  அவன் தான் இலக்கியா அத்தையின் மகன் நிரஞ்சன் என்று முதல் முதலில் கவனித்தாள். போட்டோவில் காட்டினால் அந்தளவு உன்னிப்பாக என்றுமே காண மாட்டாள்.

    அம்மாவை வந்து பார்க்காத பையன் மீது கோபம் மட்டுமே.
ஆனால் கொள்ளி போட வந்ததும் ஒரு மரியாதை உதித்தது. 

  அதோடு யாரிடமும் ஒட்டி உறவாடாமல் ஒதுங்கி சென்றவனின் மரியாதை வெகுவாய் ஈர்த்தது. பூரான் கடித்த அன்று தன் நலனில் அக்கறை காட்டிய விழிகளை கண்டவளுக்கு இலக்கியா அத்தையே தனக்கு நினைவுப்படுத்தினான்.

  இதில் மாதவன் தன்னிடம் வரம்பு மீறிய நேரத்தில் சரியாக வந்து பாதுகாப்பாக நின்றதுமின்றி, உரிமையாக கடிந்த பொழுது, தனக்காக எந்தவித எதிர்பார்ப்புமின்றி காட்டும் அக்கறையில் மகிழ்ந்தாள்.

  தனக்கு தன் படிப்புக்கு ஏற்ற வேலை வாங்கி, ஹாஸ்டலில் சேர்த்து விடுவதாக கூறியதும் இலக்கியா அத்தையின் பொறுப்பை மகனிடம் பார்த்த திருப்தி.

  இதில் தாலியை எடுத்து அணிவித்ததும் உலகமே ஸ்தம்பித்தது.

  இனி இவர் என் கணவரா? என்ற ஆனந்தம். இனி எதற்கும் யோசித்து கலங்க வேண்டியதில்லை என்று மனநிம்மதி அடைந்தவளால் நன்றியாக வார்த்தை கூட உச்சரிக்காமல் பசை தடவியவளாக சந்தோஷத்தில் வாயடைத்து வந்தாள்.

  இந்த நிமிடம் அதற்கெல்லாம் சேர்த்து வைத்து இதயத்தை நெருப்பிலிட்டு வதைத்து விட்டான்.

  இது சாதாரண செயினாக எடுத்து கொண்டாரே. தாலி அணிவிக்கும் முன் ராஜப்பனோ நிரஞ்சனோட போம்மா. அவங்க வீட்ல இரண்டு நாள் தங்கு‌. அதுக்குள்ள ஹாஸ்டல்ல தேடிடுவார். அதுக்கு பிறகு வேலையும் கேட்டிருக்கார். இரண்டு வாரத்துல கிடைக்க சாத்தியம் இருக்கு.’ என்றதற்கு தான் நிரஞ்சனோடு புறப்பட மனதை தயார்படுத்தியிருந்தாள்‌.

தற்போது தாலி அணிவித்த பின் பழைய மனநிலையில் அவளால் போகமுடியவில்லை.

  இத்தனைக்கும், இரண்டு மணி நேரம் முன் நடந்த சம்பவங்கள். அதற்கு தன் வாழ்வில் தன் இதயத்தில் இத்தனை பெரிய இடமாக கிடைத்து விட்டது என்ற ஆச்சரியத்தோடு கலங்கியவளாக வந்தாள். இந்த உணர்வை ஆனந்தமாகவோ அபத்தமாகவோ காண முடியாவில்லை. பிரித்தரியா உணர்வில் சிக்கிவிட்டாள்.

  தனக்கு இத்தனை பாதிப்பை இதயத்தில் வழங்கியவன் முகத்தை கண்டாள்.

  சாலையில் காரை இயக்கும் பணியை ஒட்டும் அர்ஜுனின் சாரதியாக கிருஷ்ணனாக அல்லவா இருக்கின்றான்.

முகத்தில் துளியும் அவனது உணர்வுகளை பிரதிபலிக்கவில்லை.

   உள்ளமெல்லாம் பாரமேற்றி வந்தவள் நைனிகா மட்டுமே.

   பாதி தூரம் கடக்கும் போது காரை நிறுத்தி, சிற்றுண்டி சாப்பிட ஆரம்பித்தார்கள். வடை பணியாரம் எல்லாம் இலையில் இருந்ததில் ருசித்தவனுக்கு மாலையில் செல்லும் போது சுவைக்க எடுத்து கொண்டது.

   ”உனக்கு பசிக்கலை?” என்றான்.

   “பசிக்கலை.” என்றாள். இதயம் முழுவதும் பாரம் ஏறியிருந்த நிலையில் வயிற்றுக்கு எந்த இனிப்பு இறங்கும்?

    நைனிகா கார் புறப்படவும் ஜன்னலை பார்வையிட்டவாறு, “அங்க வீரராகவன் மாமா என்னை வாசல்ல நிறுத்தி விரட்டினார்னா என்ன செய்யறது?” என்று கேட்டாள்.

   “அப்பா அப்படி செய்ய மாட்டார். அப்படியிருந்தா இன்னிக்கே ஹாஸ்டல்ல கொண்டு போய் விட்டுடறேன்” என்று மொழிந்தான்‌.

    இகழ்ச்சியான வறட்டு சிரிப்பு வெளியே பார்வையிருக்க, காரை ஓட்டிய நிரஞ்சனோ, “வேலை கிடைச்சப் பிறகுன்னா அதே ஏரியாவுல ஹாஸ்டல்ல சேர்க்க நினைச்சேன். இப்ப அவசரம்னா கொஞ்சம் கஷ்டப்பட்டு தேடணும். என் ஆபிஸ்ல நிஷான்னு ஒரு பொண்ணு ஹாஸ்டல் தான். மேபீ அவளிடம் கேட்டா அவ ஹாஸ்டல்லயே தங்க எல்லா ஏற்பாடும் செய்வா.” என்று கூறியவன் முகத்தில் சிறு சிரிப்பை நைனிகா நிச்சயம் காணவில்லை.

   சென்னை உங்களை அன்புடன் வரவேற்கின்றது என்ற வார்த்தையில்  நிரஞ்சன் நைனிகாவை திரும்பி பார்த்தான்.

  “நைனிகா.. நைனிகா” என்று அழைக்க அவளோ அரை உறக்கத்தில் ‘ஆஹ்’ என்று விழித்தாள்.
  மனதிற்குள் அழுத்திய சோகத்தில் கண் அசந்தாள். நிரஞ்சன் உறங்கியவளை எழுப்பியதும் திடுக்கிட்டவள் “என்னாச்சு?” என்று கேட்டாள்.
   நெற்றியில் கட்டை விரலால் கீறி, “நைனிகா வீடு வரப்போகுது. ஆக்சுவலி அம்மா இறந்தது அப்பாவுக்கு தெரியாது. நான் சொல்லலை. ராஜப்பன் அங்கிளும் சொல்லை. இப்ப நான் கோவா போகலை. இந்த பதினாறு நாள் மணப்பாறை வந்தேன்னும், கொள்ளிப்போட்டதும், அங்க தங்கியதும் அப்பாவுக்கு தெரியாது.

  இப்ப உன்னை வீட்டுக்கு கூட்டிட்டு போறதால எப்படியும் அவரிடம் சொல்லணும். அப்பா ஏதாவது பேசினா கொஞ்சம் அட்ஜஸ் பண்ணிக்கோ” என்றான்.

  நைனிகாவிற்கு இதை கேட்க மேலும் அதிர்ச்சியே. அத்தையின் இறப்பிற்கு கூட இவர் அவரிடம் கூறவில்லையா? என்ற வருத்தம்.
  
   ‘இந்த தாலி கல்…கல்யாணம்?’ என்று திகைத்து அதை பற்றி கேட்க தயங்க, “ஆஹ்… தாலியெல்லாம் மாட்டினேன்னு தயவு செய்து சொல்லிடாத. அப்பறம் தேவையில்லாத பிரச்சனை ஆரம்பிக்கலாம்.

  எனக்கு இந்த பிரச்சனைகளில் மாட்டி எக்ஸ்பிளைன் பண்ண பிடிக்காது. நீயே பார்த்திருப்ப, அங்க நான் யாரிடமும் நானா வலிய பேசியதில்லை. புரிஞ்சுப்பன்னு நினைக்கறேன்” என்று கூறவும் அதற்கும் சம்மதமாய் தலையாட்டினாள்.

    “தேங்க்யூ” என்று மொழிந்தவன் காரை இயக்கவும், நைனிகா உடைந்த இதயத்தோடு, காதல் வலியில் நிரஞ்சனை ஏறிட்டாள்.

   இன்று காலை வரை காதல் என்பதே இவனிடம் பிறக்கவில்லை. தாலி அணிவித்த பின் ஏன் என் நெஞ்சு இவனை மனதில் ஆக்கிரமித்தது. மிக குறைந்த பொழுதில் ஆக்கிரமித்தும் வேறூன்றிவிட்டானே. என் மனம் இவன் காதலை யாசிக்கின்றதே? ஏன்..?

‌ இந்த தாலியை இலக்கியா அத்தையை போல நானும் மறைத்து வைத்து பூஜிக்க வேண்டுமா? கட்டியவனோடு ஆசை தீர மார்பில் மாங்கல்யம் உரச, பகிரங்கமாக மனைவியாக வாழ முடியாதா?

இதே சஞ்சலமும் தவிப்பும் தள்ளாட்ட, வாகனம் நின்றது.
  வீட்டிற்கு வர இரவு எட்டாகியது. கதவை திறந்து, தன் லக்கேஜை எடுத்தான்.

  நைனிகா அவளது லக்கேஜை எடுத்து நின்றாள்.

  அதற்குள் ஷோபனா எட்டி பார்த்து, “பையன் வந்துட்டாங்க. இருபது நாள்னு போனான். அதுக்கு முன்னாலே வந்துட்டான்.” என்று பெண் குரல் கேட்டது.

  “ஷோபனா யாரோ பொண்ணு கூட வந்திருக்கான் மா. நிஷாவா இருக்குமோ” என்று ஆண் குரலாய்  வீரராகவன் வெளியே வருவது தெரிந்தது.

    இருவரும் ஹாலில் சந்திக்கும் போது, “நிஷா?” என்று கேட்டார் ஷோபனா.

   “அம்மா… அவ நிஷா இல்லை. நைனிகா.” என்றான்.‌

   “நைனிகா? நைனிகாவா.. இந்த பெயர்? இந்த பெயர் எங்கண்ணன் கருணாகரனோட பொண்ணு பெயர் ஆச்சே” என்றார். ஆம் இலக்கியாவோடு ஒரு வயிற்றில் பிறந்த இரட்டையரில் ஒருத்தி ஷோபனா.

  நிரஞ்சனோ தலைக்குனிந்து “அவ தான் மா” என்று கூறினான்.

  “என்ன?” என்று வீரராகவனும், ஷோபனாவோ அதிர்ச்சியோட தன் அண்ணன் மகளை கண்டார். சிறு வயதில் பார்த்த முகத்தோடு ஒப்புமைப்படுத்தி பார்க்க, இப்பொழுது தன் சொந்த ரத்தமென்று புரிபட்டது.

   நிரஞ்சன் கோவா சென்றவன் தன்‌ அண்ணன் கருணாகரன் மகளை எப்படி அழைத்து வந்தானென்று எல்லாம் யோசிக்காமல், “அக்கா… அக்கா.. வந்திருக்காளா டா?” என்று தான் குரலே வராது கேட்டார்.

  “சாரிம்மா… இலக்கியா அம்மா இறந்துட்டாங்க. நான் நம்ம வீட்ல கோவாவுக்கு போக கிளம்பினேனே, அப்ப தான் அப்பாவோட பழைய நண்பன் ராஜப்பன் அங்கிள் கால் பண்ணினார். தெரியாத நம்பர் அவர் பேச அம்மா இறந்ததும் என்னை மகனா கொள்ளி போட கூப்பிட்டார்.

  ஆல்ரெடி கோவாவுக்கு கிளம்பியது. இப்ப மணப்பாறை போகணுமான்னு யோசிச்சேன். அப்பாவிடம் சொல்லலாமானு தயங்கினேன்.
  அப்பாவுக்கும் இலக்கியா அம்மாவுக்கும் தான் முறைப்படி விவாகரத்து முடிஞ்சி இத்தனை வருஷம் பேசிக்கிட்டது கூடயில்லை. அதோட ராஜப்பன் அங்கிளும் அப்பாவிடம் சொல்ல நினைச்சா அவரே சொல்லிருப்பார்.

  என்னை மட்டும் மகனா காரியம் செய்ய கூப்பிட்டதால, கோவா ட்ரிப்பை கேன்சல் பண்ணிட்டு, மணப்பாறை கிளம்பிட்டேன். அங்க இலக்கியா அம்மாவுக்கு கொள்ளி போட்டேன். ராஜப்பன் அங்கிள் தான் பதினாறு நாள் இருக்க சொன்னார். அங்க இருந்தேன். இன்னியோட பதினாறு நாள் முடியவும் இங்க வந்துட்டேன்” என்றான்.‌

   இலக்கியா இறந்துவிட்டதாக கூறிய போதே வீரராகவன் நெஞ்சை பிடித்து தொப்பென்று சோஃபாவில் விழ, ஷோபனாவோ மடை திறந்த வெள்ளமாய் வாயை மூடி அழுதார்.

   “அ..அக்..அக்கா..” என்று குலுங்கி குலுங்கி அழுதார்.

   ‘பார்த்திங்களாங்க… என்னை கடைசிவரை அக்கா பார்க்கலை. மன்னிக்கலை‌” என்று அழுதார்.

இங்கே வீரராகவனையே யாராவது ஆறுதல்படுத்தும் நிலைமையில் இருந்தார்.

    “என்னிடம் ஒரு வார்த்தை சொல்லலையே. அந்தளவு கட்டினவன் வேண்டாதவனா போயிட்டேனா? என்‌ நண்பன்‌ கூட என்னிடம் மறைக்கணும்னு நினைச்சிட்டானே. ஏன்டா நீயாவது என்னிடம் சொல்லியிருந்தா, மூன்று பேரும் அவளை கடைசியா பார்த்திருக்கலாமே.” என்று ஆண்மகனாக இல்லாமல் இலக்கியாவை மணந்த கணவனாக அழுதார்.

   நிரஞ்சனுக்கு ஆச்சரியம். தந்தை இதுவரை இலக்கியா அன்னை பற்றி வெளிப்படையாக பேசியதில்லையே. அப்படியயிருக்க சொல்லாமல் போவது சிறந்தது என்று அல்லவா தவறாய் நினைத்தான். அன்னையும் தந்தையும் இப்படி அழுகின்றனரே.

   அங்கே அன்னை இறப்புக்கு நைனிகாவை தவிர அழவில்லை என்று எண்ணினேன். இங்கே இந்த அழுகை அறையெங்கும் எதிரொலிக்கின்றது. அப்படியென்றால்? அன்பில்லாதது போல நடித்தார்களா?

   நைனிகாவுமே இலக்கியா அத்தைக்காக இவர்கள் அழுகின்றார்களா? என்று வியந்தாள்.

  இருபது நிமிடம் மாறிமாறி வீரராகவன் ஷோபனா அழுதார்கள்.

   நைனிகா கால் விரல்கள் உள்ளிழுத்து நின்றவாறு வேடிக்கை பார்க்க, ஷோபனா மெதுமெதுவாக நைனிகாவை ஏறிட துவங்கி காணவும், நிரஞ்சனோ அவர்கள் பார்வையின் பொருட்டு, “இலக்கியா அம்மா தான் நைனிகாவை வளர்த்தாங்க. இத்தனை நாள் அவங்க கூட இருந்தா. அந்த வீட்ல தனியா இருக்குற தைரியசாலி தான்‌. ஆனா ஜோதி சித்தியோட பையன் மாதவன் நாலு நாள் முன்ன நைனிகாவிடம் தப்பா நடக்க முயற்சி செய்தான். நான் இருக்கவும் அவன் எண்ணம் நிறைவேறலை. ராஜப்பன் அங்கிள் தான் மாதவன் இங்கிருந்தா மாதவன் இரண்டாவது கல்யாணமா நைனிகாவை தவறான முறையிலாவது அடைய குள்ளநரி தந்திரம் செய்வான். எங்க வீட்லயும் உரிமையா இருக்க சொல்ல முடியாது. அதனால சென்னையில் ஒரு வேலையும் ஹாஸ்டல்ல இடமும் பார்த்து தங்க வைக்க சொன்னார். அதனால் கூட அனுப்பினார். நைனிகாவும் மாதவனுக்கு பயந்து வந்திருக்கா. நான் தான் கூடவே புஷ் பண்ணி கூட்டிட்டு வந்தேன். ஹாஸ்டல் வேலை கிடைக்குற வரை இங்க இருக்கட்டும் அப்பா. ஷோபனாம்மா உங்க பெரியண்ணன் பொண்ணு தானே” என்றான் வெகு இயல்பாய்.

   ஷோபனாவிற்கு அண்ணன் அண்ணி இறந்தது தெரியும். வீரராகவனை மணந்து வந்தப்பொழுதே அறிவாள்.
  இலக்கியா அக்காவிற்கு துரோகம் செய்ததாக தங்கை தம்பி உறவுகள் தூற்றி விட்டார்கள். ஒட்டு உறவு எதுவும் இல்லாமல் போனது. இன்று அண்ணன் கருணாகரன் மகளை வீட்டுக்கு நிரஞ்சன் அழைத்து வந்திருக்க, “நைனிகா… இந்த அத்தையை பத்தி உங்க இலக்கியா அத்தை சொல்லியிருக்காளா?” என்று கேட்டார்.

  நைனிகா தஞ்சாவூர் தலையாட்டும் விதமாக தெரியும் என்றாள்.

  நெஞ்சை பிடித்து ‘கூடவே பிறந்து கூடவே வளர்ந்து கட்டின புருஷனை, அவளோட குழந்தையை அபகரித்த பாவின்னு சொன்னாளா?” என்று அச்சத்துடன் கேட்டார். ஏனெனில் தங்கை ஜோதி, தம்பி இளவரசன் ஏன் நைனிகா தந்தை கருணாகரன் கூட அப்படி தானே கூறியது.

-தொடரும்.

‌குறுநாவல் என்பதால் குட்டி டிவிஸ்ட். 😆

வாசிக்கும் அன்பர்களுக்கு நன்றி.

13 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-7”

  1. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 7)

    அய்யய்யோ….! நான் இம்புட்டு பெரிய டுவீஸ்டை எதிர் பார்க்கவேயில்லையே…?
    அப்ப இலக்கியாவும் ஷோபனாவும் அக்கா தங்கச்சியா…? அட ராமா..!

    இப்ப புரியுது. வீர ராகவன் ஆல்ரெடி ஷோபனாவை லவ் பண்ணியிருக்கணும். பட்..
    அக்கா இலக்கியாவை கல்யாணம் பண்ண வேண்டிய சூழ்நிலை. இதுல ஒரு பையனும் உண்டாகியாச்சு.
    அதற்கப்புறம் உண்மை தெரிஞ்ச இலக்கியா, தன்னோட கணவனோட வாழ்க்கையை தொடர விரும்பாம ஒரேயடியா விலகிட்டாங்க. பையனையும் விட்டுக் கொடுத்துட்டாங்கன்னு நினைக்கிறேன்.

    ஸோ.. வீரராகவன் அந்த இடத்துக்கு திரும்பவும் ஷோபனாவை கொண்டு வந்துட்டார். தவிர, பையனையும் தங்களோடவே கூட்டி வந்துட்டாங்க அப்படித்தானே..?
    என்னோட கெஸ்ஸிங் கரெக்ட்டா..?
    (கரெக்ட்ன்னா ஸ்மைலி இமோஜீ ப்ளீஸ்)

    இல்லை, பையன் கூட ஷோபனாவுக்கு பிறந்தவனோ ?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Ipdi oru twistuuu ethirpaakkave illa sis 😲😲😲😲😲😲😲😲😲

    Ilakkiyaa kooda piranthavanga thaan intha shobana Amma vaa

    1. செம 😃
      அடுத்த பகுதிக்கு மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் 😊

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *