Skip to content
Home » மனமெனும் ஊஞ்சல்-9

மனமெனும் ஊஞ்சல்-9

அத்தியாயம்-9

   நைனிகா இவ்வீட்டில் வந்து குடும்பத்தில் ஒன்றாக கலந்து விட்டாள்.

  வாய் நிறைய அத்தை மாமா என்று தான் வீரராகவனையும், ஷோபனாவையும் அழைத்து பேசினாள்.

  நிரஞ்சன் இருக்கும் நேரம் மட்டும் நந்தையாக ஓட்டுக்குள் ஒடுங்குவாள்.

  நிரஞ்சனும் ”ஏன்‌ நைனிகா நான் வந்தா பேசமாட்டேங்கற?” என்பான்.  

   அவனிடம் தான் இரவில் நித்தம் நித்தம் கனவில் உரையாடுவதை கூறாமல் தவிப்பாள்.
  
     நைனிகா நிரஞ்சன் கட்டிய தாலியை மறைத்து வைத்து பூஜிக்கின்றாளே.

    நிரஞ்சனை கண் கண்ட கணவனாக பாவித்து அவள் வாழ ஆரம்பித்து இருந்தாள்.

    அதன் காரணமாய் அவளால் நிரஞ்சனோடு இயல்பாய் பேச நாணம் தடுத்தது.

    நிரஞ்சனுமே வலிய சென்று பேசாது அவளிடமிருந்து தவிர்த்தான்.

  இருபது நாளில் ஒரு அலுவலகத்தில் இன்டர்வியூ செல்வதற்கு தயாராகயிரு என்று கூறினான்.‌

  ‘வேலை கிடைத்தால் அந்த ஏரியா பக்கம் ஹாஸ்டல் பாருங்க’ என்று கூறவும், ஷோபனா உள் மனதில் கவலையானாள்.

  வீரராகவனிடம் இரவில் நிரஞ்சனுக்கு நைனிகாவை மணமுடித்து வைக்கலாமென்று ஷோபனா இக்கட்டாக பேச, “உன்னை கல்யாணம் செய்து ஒருவருஷம் முள்ளுல நடந்தேன் ஷோபனா. நினைவிருக்கா… என்னால் இலக்கியாவை மறக்க முடியாம, உன்னோடவும் வாழ முடியாம இருதலை கொள்ளியா வாழ்ந்தேன். என்‌ மகனுக்கு அந்த கஷ்டம் தரமாட்டேன். அவன் வாழ்க்கை அவனே முடிவெடுக்கணும்.
   உனக்கு அண்ணன் மகளோட வாழ்க்கை முக்கியமா இருக்கலாம். எனக்கு என் மகன் வாழ்க்கை முக்கியம்” என்று இதுவரை பாசத்தை அளந்து பாராது அன்பை பொழிந்தவர் கறாராக பேசினார்.

   “நிரஞ்சன் எனக்கும் பையன் தானே?” என்று ஷோபனா உரைக்க, “பெத்த மகனா இருந்தா நீ அவன் மனசு நோக கூடாதுன்னு யோசிப்ப” என்று கூறியதும் ஷோபனா ஆடிவிட்டார்‌. பெத்த மகனாக தானே வளர்த்தது.

   “நான் நிரஞ்சனை பெத்த மகனா தானே பார்த்துக்கறேன். எப்பயிருந்து என்‌ வளர்ப்புல குறையை கண்டிங்க?” என்றார்‌ கண்ணீர் மடையுடன்.

   வீரராகவனுக்கே பேசியப்பின் வார்த்தையின் வீரியம் புரிய, “இங்க பாரு நம்ம வீட்ல இதுக்கு முன்ன இப்படிப்பட்ட பிரச்சனை வந்ததேயில்லை. இப்ப இங்க தங்குற நைனிகாவால் இந்த பிரச்சனை ஆரம்பிக்குது. அவளை முதல்ல ஹாஸ்டல்ல சேர்த்துடுவோம். நிரஞ்சனோட அந்த பொண்ணை தொடர்புப்படுத்தி பேசாத” என்று முடித்து கொண்டார்.

   இப்படியாக இடைப்பட்ட நாட்கள் கழிந்தது.

  நைனிகா ஷோபனா நட்பாக பேசினார்கள். இலக்கியா அத்தையை போல ஷோபனா அத்தையும் மனதுக்கு நெருக்கமாக மாறினார் என்றால் சரியாக இருக்கும்.

வீரராகவன் தான் அடிக்கடி முகம் திருப்பி கொள்வார். அவருக்கும் நேரநேரத்துக்கு மணக்கும் டீ, சுவையான சிற்றுண்டி என்று அமர்களப்படுத்தியவளை எண்ணி, நிரஞ்சன் யாரை மணந்து இவ்வீட்டிற்கு வந்தாலும் இந்தளவு இயல்பான ஒற்றுமை அமையுமா? நைனிகா புது மனிதினியாக தோன்றவில்லை. ஏற்கனவே இங்கு வாழும் பெண்ணாக அவள் நடத்தை இருந்தது.

  நிரஞ்சன் கூட, வார்த்தைக்கு வார்த்தை ‘நைனிகா சமைச்சாளா அம்மா? நைனிகா காபி மணம் வீட்டையே மணக்க வைக்குது. வரவர நைனிகாவோட காபிக்கு நான் அடிக்ட் ஆகிடுவேன்’ என்பான்‌. புதிதாக ஒரு உணவோ, எம்பிராய்டரி வேலை செய்த துணியோ இருந்தால் ‘இது நைனிகா செய்ததா?’ என்று விசாரிப்பான்.

    அதெல்லாம் பாலைவனத்தில் பொழியும் பனித்துளியாக  நைனிகாவுக்கு இதமளிக்கும்.
  நாட்கள் செல்ல, நைனிகா நிரஞ்சன் சொன்ன இடத்தில் இன்டர்வியூ முடித்து வந்தாள். அந்த வேலைக்கு அன்றே தேர்வானதாக கூறி இனிப்பு பெட்டியை நீட்டினாள்.

    வீரராகவனுக்கும் ஷோபனாவுக்கும் இனிப்பை தந்து சம்பளத்தை கூறினாள்.

  நிரஞ்சன் முன் இனிப்பை நீட்டி, “வேலைக்கு போறயிடத்துக்கு பக்கத்துல ஹாஸ்டல் இருக்கான்னு பார்த்துடுங்க. என் சம்பளத்துக்குள் முடிஞ்சா இன்னும் நல்லாயிருக்கும். சிம்பிளா பாருங்க” என்று கூறினாள்.

   இனிப்பை கையில் எடுத்தவன் அவள் பேச்சிற்கு சம்மதமாய் தலையாட்டினான்.

   சட்டென அறைக்குள் வேறு நைனிகா சென்றுவிட்டாள்‌. ராஜப்பன் மாமாவிடம் சொல்ல வேண்டுமென்று போனை வேறு எடுத்துக்கொண்டாள்.

  ராஜப்பனிடம் நலம் விசாரித்து முடித்து “மாமா எனக்கு வேலை கிடைச்சிடுச்சு, 14,000 சம்பளம். இப்ப இது ஆரம்பம் தான். போக போக மாறும்.” என்று கூறினாள்.

“சந்தோஷம்மா… வீரராகவன் வீட்ல நல்லா பார்த்துக்கறாங்களா? எந்த பிரச்சனையும் இல்லையே” என்று கேட்டார்.

   “இல்லை மாமா.. இலக்கியா அத்தை போல இவங்களும் ரொம்ப நல்ல கேரக்டர். உருவம் கூட சில நேரம் இலக்கியா அத்தை போல இருக்கா, எனக்கு சில நேரம் அத்தையை மறுபிறப்பா பார்த்த மாதிரி இருக்கு.
    நான் அவங்க அண்ணன் மகள் வேற, நல்லா கவனிக்கறாங்க. வீரராகவன் மாமா கூட இலக்கியா அத்தை இறந்ததை யாரும் சொல்லாம விட்டுட்டிங்களே, சொல்லியிருந்தா நான் அவளை பார்த்துயிருப்பேனே‌ கடைசி‌யா கூட அவ முகத்தை பார்க்க முடியலைன்னு பீல் பண்ணினார். நீங்க இவரிடம்(நிரஞ்சனிடம்)  சொன்னது மாதிரி வீரராகவன் மாமாவிடமும் சொல்லியிருக்கலாம். அட்லீஸ்ட் ஷோபனா அத்தையிடமாவது சொல்லியிருக்கணும்.” என்றாள்‌.

  ராஜப்பனோ, ‘சொல்ல தோணலைம்மா‌ விவாகரத்து வாங்கிட்டு ஷோபனாவை மணந்திருக்க கூடாது. எப்படியாவது இலக்கியாவை வற்புறுத்தி சேர்த்து வச்சியிருக்கனும் சந்தேகப்பட்டான்னு ஷோபனாவை கட்டிக்கிட்டான். அவ்வளவு தானா திருமண வாழ்வு. சரி விடும்மா… முடிஞ்சை பேசி என்னவாக போகுது?

  நிரஞ்சன் கட்டின தாலியும் கழட்டிட சொல்லிட்டான். உனக்கு தான் ஒரு துணையை தேர்ந்தெடுக்கணும். ஊர்ல இங்க ஆனந்த்ஜோதி காட்டுல தீயை வச்ச மாதிரி, நைனிகா அவ அத்தை மகன் நிரஞ்சனை கல்யாணம் செய்துட்டாங்கன்னு பரப்பி விட்டுட்டு இருக்கா‌. அதனால் உன் வாழ்க்கை பாழாயிடுமோன்னு பயமாயிருக்கு.

  உன்னை கட்டிக்க போறவன் இதெல்லாம் தெரிந்தா எப்படி எடுத்துப்பானோ? எனக்கு இப்ப அதான் கவலை” என்றார். தற்போது தனி மரமாக இருக்க அவர் கவலை நைனிகா என்ற நல்ல பெண் மீது அக்கறை செலுத்தியது.

நைனிகாவோ “மாமா இதை பத்தி யோசிக்க வேண்டாம். அது மனசுக்கு வலியை தான் கொடுக்கும். நீங்க நேரத்துக்கு சாப்பிட்டு உடம்பை கவனிச்சிக்கோங்க. போனை வைக்கிறேன் மாமா” என்றாள்.

  நிரஞ்சனை பற்றி பேச்சு எடுத்தால் நைனிகா நாசூக்காய் கத்தரிப்பதை உணர்ந்து தானும் அப்பெண்‌ மனதில் ஆசையை கூட்டிட கூடாதென்று எண்ணினார்.

     இரண்டு தினத்தில் வேலைக்கு வரக்கூறியதால் ஓரளவு புது ஆடையை வாங்க ஷோபனாவோடு கடைக்கு சென்றாள்‌.

   நல்ல உடைகளை தேர்ந்தெடுத்து பில் போட்டு வீட்டுக்கு வரும் போது நிரஞ்சன் தலையை தாங்கி வீற்றிருந்தான்.

     “என்ன நிரஞ்சன் சீக்கிரம் வந்துட்ட?” என்று ஷோபனா கேட்க, தலைவலியா இருந்தது வந்துட்டேன் அம்மா” என்றவன் பார்வை இரண்டு கட்டைப்பையில் உடையுடன் வந்தவள், “அங்கன்னா சேலை தாவணினு கூட வேலைக்கு போயிடுவேன். இங்க எல்லாமே சுடிதார் போடணும்னு சேலை எல்லாம் அங்கேயே வச்சிட்டு வந்தேன். புது சுடிதார் வாங்கினேன். அப்ப அத்தைக்கும் உங்களுக்கும் வாங்கியது” என்று ஒரு டீ-ஷர்ட்டை நீட்டினாள்.
 
  ”இப்ப எதுக்கு காசை செலவு பண்ணிட்டு இருக்க? உனக்கு வாங்கியது போதாதா? எங்களுக்கு எதுக்கு?” என்றான்.

   “நல்லா கேளுடா. நான் அவளுக்கு தான் சேலை வாங்கறான்னு விட்டுட்டேன். பில் போட்டுட்டு இது உங்களுக்கு அத்தைன்னு சொல்றா. உனக்கு டீ-ஷர்ட் வாங்கறப்பவே சுதாரிச்சு இருக்கணும். அவ சுடிதார் வாங்கறப்ப எல்லாம் மீடியம் பட்ஜெட்ல எடுத்துட்டு ஒரு சேலைக்கு விலை அதிகமா எடுத்தாளேன்னு.” என்று ஷோபனா கடையில் வாங்கியதை விளக்கினார்.

  நைனிகா காதில் வாங்கினால் தானே? அவள் தலைவலிக்கு இதமாக டீயை தயாரிக்க சென்றிருந்தாள்.
 
   காபியை தவிர டீ பழக்கம் இல்லாதவனோ, அவள் தட்டில் கொண்டு வந்து நீட்டி, “தலைவலிக்கு சட்டுனு இதமாயிருக்கு” என்று கூறவும் மறுக்க தோன்றாமல் வாங்கி பருகினான்.

   அதன்பின் கூட தலைவலி போனதா இல்லையா அவனே அறிவான். வீட்டில் முசுடாக பொரிந்து தள்ளினான்.

வீரராகவனுக்கு இந்த வித்தியாசம் புரிப்படவும், மைந்தனிடம் பேச எண்ணினார். எப்பொழுதும் இந்த வீட்டில் ஒளிவுமறைவு என்பது கிடையாது. சாப்பிடும் பொழுதும், டிவி பார்க்கும் நேரமும் குடும்ப விஷயம் மைந்தனின் மற்ற எந்த விஷயமும் பேசி பகிரப்படும்.

  வீரராகவனுக்கு நைனிகா இருப்பதால் மகனிடம் நேரிடையாக கேட்க முடியவில்லை‌. அதற்கான நேரங்காலத்திற்கு காத்திருந்தார்.

  நைனிகா சென்றப்பின் கேட்டிடும் ஆவலில் இருந்தார் எனலாம். தற்போது நைனிகா காலையில் எட்டு மணிக்கே செல்லும் போது மகனும் சென்றிடுகின்றான். நைனிகா வந்தப்பின் தான் மகனும் வந்து சேர்வதால் தனித்து கேட்டு பேச தாமதித்தார்.

    அன்று நைனிகா அலுவலகம் செல்லும் போது டிபன் பாக்ஸை திணித்து “அத்தை… இன்னிக்கே கூட ஹாஸ்டலுக்கு கிளம்பினாலும் கிளம்புவேன். அதனால் எல்லா டிரஸும் மெஷின்ல போட்டு எடுத்துட்டேன்‌. எனக்கு இந்த இட்லிபொடியும் ஊறுகாயும் மட்டும் செய்து தந்துடுங்க அத்தை.” என்று கூறினாள் நைனிகா.

ஷோபனாவுக்கு கவலையானது தன் மற்றொரு உறவாக வந்தவளும் செல்கின்றாளா? என்று. ஆனால் தன்னை அத்தையாக முழு மனதாக ஏற்று ஊறுகாய் எல்லாம் செய்ய சொல்லியது பெரிய சந்தோஷத்தை தந்தது.

  வீரராகவனோ, அப்பாடி இன்னிக்கு அந்த பொண்ணு போயிட்டா நாளைக்கு பையனிடம் மனசு விட்டு பேசணும். கோவா போறப்பவே அந்த ஆபிஸ்ல வேலை செய்யுற பொண்ணு நிஷா, இவனை விரும்புவதாக கிசுகிசு வந்துச்சு. இப்ப இரண்டு மாசத்தை நெருங்குது.’ என்று ஒருபக்கம் எண்ணினார். 

   அறைக்குள் நிரஞ்சனோ ‘ஊறுகாய்… பொல்லாத ஊறுகாய்’ என்றவனோ ‘என் இதயத்தை வெட்டி ஊறுகாய் போட்டு எடுத்துட்டு போ’ என்று காட்டு இரைச்சலில் இதயத்தோடு போர் நிகழ்த்தி கொண்டிருந்தான்.

     ஆம் நிரஞ்சன் நைனிகாவை விரும்ப ஆரம்பித்திருந்தான். அவன் அதை உணரும் நொடி அவள் செல்வது அவனுக்கு பிடிக்கவில்லை.

இங்கு வரும் போது வேலை ஹாஸ்டல் இரண்டும் நான் பார்த்து அமைத்து தருவதாக அழைத்து வந்தவனும் அவன் தான்.‌

  இன்று அவள் ஹாஸ்டல் செல்ல உள்ளுக்குள் நொறுங்கியவனாக இருப்பவனும் அவனே.

       இங்கேயே இருந்தால் பைத்தியம் பிடிக்காத குறையாக இருக்குமென அலுவலகத்திற்கு அதிவிரைவாக சென்றிருந்தான்.

   “அம்மா அப்பா போயிட்டு வர்றேன்” என்று ஓடினான்.

‘நைனிகா போயிட்டு வர்றேன்னு ஒரு வார்த்தை சொல்ல வாய் வரலை. ஏன்‌ நிரஞ்சன்? என்னை கடைசிவரை ஒரு கெஸ்டா, உறவுக்கார பொண்ணா மட்டும் பார்ததுட்டியே’ என்று நைனிகா இதயமும் பாரம் அழுத்த வேலைக்கு புறப்பட்டாள்.

   ஷோபனா மாங்காய் வாங்கி அதை வெட்டி ஊறுகாய் போட ஆயத்தமாக, “நிஷா பத்தி நிரஞ்சன் ஏதாவது சொன்னானா?” என்று கேட்டு வந்தார் வீரராகவன்.

   “இல்லைங்க… அவனா சொல்லாம நானா கேட்க வேண்டாம்னு தவிர்த்துட்டேன். அதுவுமில்லாம, இப்ப நைனிகா வேற கல்யாண வயசுல இருக்கா. நாம நம்ம பையனுக்கு கல்யாண பேச்சை எடுத்தா, அது அவளை கஷ்டப்படுத்தலாம். அப்பா அம்மா இருந்திருந்தா, நமக்கும் கல்யாணத்தை பத்தி பேசுவாங்கள்லனு நினைக்க தோணும்.

  நைனிகாவுக்கு எப்படியும் ஒரு வரன் முடிச்சிட்டு தான் நிரஞ்சனோட அந்த  நிஷாகான உறவு எந்தளவு போயிருக்குன்னு கேட்கணும்.” என்று மாங்காயை தாளிக்க ஆரம்பித்தார் ஷோபனா.

   “அதென்னவோ உண்மை தான். நைனிகாவை வச்சிட்டு இனி கல்யாண விஷயம் பேசமுடியாது. அவளுக்கும் ஒரு வரன் பார்க்கணும். நான் ராஜப்பனிடம் பேசலாம்னா இரண்டு முறை கட் பண்ணிட்டான்.

   நிரஞ்சனோட பேசி முடிச்சு அவன் காதல் விஷயம் என்னாச்சுனு கேட்கணும்.
    அதோட நாளைக்கு ராஜப்பன் போன் எடுக்கலைன்னா ஊர்ல போய் ஒரெட்டு பார்க்கலாம்னு இருக்கேன்” என்று கூறினானர்.
  ” பெண்டாஸ்டிக் ஐடியாங்க. நேர்ல போய் உங்க பிரெண்டை பாருங்க.” என்று உரைத்திடவும் அடுத்தடுத்த வேலையில் மூழ்கினார் ஷோபனா‌.

வீரராகவன் மதியம் உணவருந்தி தொலைக்காட்சியில் பழைய படம் ஒன்றை ஓடவிட்டு காலாட்டி பார்த்திருக்கும் பொழுது, வாசலில் நிரஞ்சன் பைக் சத்தம் கேட்டது.

   வீரராகவன் ஏதாவது தெருவில் நிரஞ்சன் பைக் போல ஓசையிட்டு இருக்கும் என்று நினைத்திருக்க புயலாய் அறைக்குள் புகுந்தான்.

  “நிரஞ்சன் நிரஞ்சன்” என்று‌ கூப்பிட அறைக்குள் அடைந்தவனை கண்டு அவசரமாக டிவியை நிறுத்தினார்.

  “அம்மாடி ஷோபனா பையன் வந்துட்டான்” என்று அவர்கள் அறையொட்டி குரல் கொடுத்தார்.

   ஷோபனா காலையிலிருந்து நைனிகாவிற்கு ஊறுகாய்கள், பொடிகள் செய்து வைத்து கண்ணயர்ந்திருந்தார்.

  வீரராகவன் மகனின் பின்னால் வந்து கதவில் கை வைக்க, அது சாற்றப்படாமல் இருக்கவும் திறந்து உள்ளே வந்தார்.

   அலுவலகத்திற்கு போட்டு சென்ற உடையோடு வந்து, மெத்தையில் விழுந்தவன் தலையணையை தான் இறுக பற்றி கலங்கினான்.

  “டேய் கண்ணா.. நிரஞ்சன். என்னாச்சு?” என்று பதறினார்.

    “அப்பா நான் ஒருத்தியை விரும்பறேன்” என்றான்.

  “ஆபிஸ்ல நிஷாவிடம் காதலை சொல்லிட்டியா நிரஞ்சன். அவ ஏற்றுக்கலையா?” என்று கவலையோடு கேட்டார்.

  மகன் மட்டுமே தங்கள் வாழ்வின் சந்தோஷமென்று வாழும் மனிதராயிற்றே.

  “அப்பா நிஷா கோவா போயிட்டு வந்து, என்னிடம் பிரப்போஸ் பண்ணினா. ஆனா என்னால தான் அவ காதலை அக்சப்ட் பண்ண முடியலை. ஏன்னு தெரியலை… அவளிடம் டைம் கேட்டேன். இந்த இடைப்பட்ட நாள்ல முடிவெடுத்தப்ப, நிஷாவை நான் விரும்பலைன்னு எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சு. மத்த பிரெண்ட்ஸ் என்னையும் அவளையும் சோர்ந்து வைத்து பேசவும், அதை லைக் பண்ணிருக்கேன். ஆனா லவ்… அது வரலைப்பா.” என்று மனம் உடைந்தவனாக கூறினான்.

  “சரி… அப்ப நீ ரிஜெக்ட் பண்ணியதுக்கு நீயேன் கலங்கியிருக்க? அந்த பொண்ணு சூசைட் பண்ணிட்டாளா?” என்று பயத்தார். இப்பொழுதும் கூட பழைய பாணியில், காதல் கைக்கூடவில்லை என்றால் தற்கொலை தான் முடிவென இருக்கும் உள்ளம் உள்ளதே.

   இலக்கியாவிடம் கூட, விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடாமல் சண்டையிட்டதற்கு,’விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடலை தற்கொலைப் பண்ணிப்பேன் வீரா’ என்று மிரட்டினாளே.

  “இல்லைப்பா.. நிஷா அந்தளவு போகலை‌. போகமாட்டா… ஆனா நான் வேற ஒருத்தியை விரும்பறேன். அவ.. அவ தான்” என்று தொண்டைக்குழி ஏறியிறங்க தடுமாற்றத்தோடு பேசினான் நிரஞ்சன்.

  -தொடரும்

13 thoughts on “மனமெனும் ஊஞ்சல்-9”

  1. Super sis nice epi 👌👍😍 appo niranjan ku love vandhuduchu😍😍😍 edhu Nainika ku therinja evlo santhosha paduva 🥰❤️ semma😍

  2. M. Sarathi Rio

    மனமெனும் ஊஞ்சல்..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 9)

    அடப்பாவி! அதான் தாலியையே கட்டிப்புட்டியே இதுக்கு மேல என்னடா தயக்கம்…? பேசாம விஷயத்தை போட்டு உடைக்க வேண்டியது தானே…..?
    நைனிகாவும் ஒண்ணா ஒரே வீட்டுக்குள்ள உன்னோடவே இருப்பா தானே..?

    ஒருவேளை, அது பொய்யா கட்டின தாலி கழட்டிடுன்னு சொல்லிட்டு இப்ப திரும்பவும் அவளையே நேசிக்கறேன்னு சொன்னா உதைக்க வருவாளோன்னு பயப்படுறானோ…?

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  3. ஒருவழியா சொல்லப் போறான் 😃 அடுத்த பகுதிக்கு மிக மிக மிக மிக மிக மிக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *