Skip to content
Home » மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17

கிஷோர் பேசுவதையெல்லாம் கேட்டு தருண்  எந்த அளவுக்கு அதிர்ச்சி அடைந்தானோ  அதே அளவிற்கு பூஜாவும் அதிர்ச்சி அடைந்தாள்.

இருவரும் பேச வார்த்தைகள் இன்றி அமைதியாகவே நின்று கொண்டிருக்க, “என்ன பிரதர் ஷாக்கா இருக்கா? இருக்கணும்…. அதுக்காக தானே இந்த கிஷோர் இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த எல்லா பிளானையும் போட்டேன்”  என்று சொல்லி நக்கலாக சிரித்தவன் “அது எப்படிடா….  நான் உன்னோட கூட பிறந்த தம்பி…. அப்படி இருக்கும்போது எல்லாத்தையும் உன்னோட கட்டுப்பாட்டுல வச்சிட்டு, உன்னோட கம்பெனில என்னை வேலை செய்ய வச்ச பாத்தியா…. நீ அங்க நிக்கிற டா…. ஆனா இப்போ நீ எங்க இருக்க பாரு” என்று பழி வாங்கிய சந்தோஷத்தோடு சொன்னான் கிஷோர்.

“கிஷோர்… இந்த சொத்து எல்லாம் என்னை விட்டு போனதுக்கு எனக்கு எந்த வருத்தமோ கஷ்டமோ இல்லை. ஆனால் நீ சேர்ந்து இருக்க இடம் ரொம்ப தப்பு டா… கெட்டவங்க சவகாசம் உனக்கு வேணாம். அவங்க இப்ப  என்னை எப்படி பலிஆடா  ஆக்கினாங்களோ அதே மாதிரி உன்னையும் ஏதாவது பண்ண நிறைய வாய்ப்பு இருக்கு”  என்று அந்த சூழ்நிலையிலும் கூட தன் தம்பிக்காக யோசித்து பேசினான் தருண்.

“அதெல்லாம் நான் பாத்துக்கிறேன். முதல்ல அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நீங்க என்ன செய்ய போறீங்கன்னு யோசிங்க”  என்று சொன்னவன் பூஜாவை பார்த்து நக்கலாக சிரித்தபடியே அங்கிருந்து கிளம்பினான்.

நடந்ததை எல்லாம் பார்த்து உடைந்து போய் வெறும் தரையிலேயே உட்கார்ந்து விட்டான் தருண்.

“இந்த கிஷோர் மேல  எனக்கு முன்ன இருந்தே  நல்ல அபிப்பிராயம் இல்ல. ஏதோ இவ்ளோ நேரம் தருண் அவனை நல்லவன்னு சொன்னாரு. நானும் அதை நம்பினேன். ஆனா இவன் இவ்வளவு கேவலமானவனா இருக்கான்.  தருண் அவரு தம்பிக்காக எவ்வளவு  பெரிய விஷயத்தை விட்டு கொடுத்திருக்காரு.  அவன் மேல எவ்வளவு பாசம் இருந்தா எல்லா சொத்தையும் அவனுக்காக இழந்திருப்பாரு… அந்த நன்றி கொஞ்சம் கூட இல்லாம அவனே பிளான் பண்ணி தருணை ஏமாத்திருக்கானே”  என்று தன் மனதில் நினைத்தவளோ அவனுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் நின்று கொண்டிருந்தாள்.

காலையிலிருந்து பூர்ணாவை எல்லா இடங்களிலும் தேடிக் கொண்டிருக்கிறான் கண்ணன்.
ஆனால் இரவு ஆகியும் பூர்ணாவை பற்றிய எந்த தகவலும் தெரியவில்லை. அவள் எங்கேயாவது போயிருப்பாளா என்று பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என்று எல்லா இடங்களிலும்  விடாமல் தேடினான். அவன் தேடுவது மட்டுமில்லாமல் அவனுடைய நண்பர்களுக்கும் அவளுடைய போட்டோவை அனுப்பி வைத்து எல்லா இடங்களிலும் தேடச் சொன்னான். ஆனால் அவளோ எங்கும் கிடைக்கவில்லை.

இரவு 11 மணி வரை ஆகிவிட்டதை உணர்ந்தவன் இதற்கு மேலும்  தாமதிப்பது ஆபத்து என்று நினைத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்க தயாரானான்.

காவல் நிலையத்தின் வாசல் வரை சென்றவனுக்கு அப்போது தான் நினைவு வந்தது.

“இப்போ போலீஸ் ஸ்டேஷன்குள்ள போய் நாம என்னன்னு கம்ப்ளைன்ட் குடுக்க முடியும்? பூர்ணாவை பத்தி என்ன சொல்றது? கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடி வந்த பொண்ணு… என் கூட தான் ஒரு வாரம் தங்கி இருக்கா… இப்போ அவளை மறுபடியும் காணோம். இதை எல்லாம் சேர்த்து வச்சு பார்த்தா கண்டிப்பா என்னை தான் அரஸ்ட் பண்ணி உள்ள வைப்பாங்க. நானே பூர்ணாவை ஏதோ பண்ணீட்டு இங்க வந்து காணோம்ன்னு  காம்ப்ளைண்ட்  பண்ணி டிராமா பண்ற மாதிரி நினைப்பாங்க” என்று யோசித்து தயங்கினான்.

சிறிது நேரம் யோசித்தபடியே  நின்றவன் “இல்லை. இப்போ பூர்ணா தான் முக்கியம். எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை… கம்ப்ளைன்ட் குடுத்திடலாம்” என்று தீர்மானித்தவன் உள்ளே நடக்க ஆரம்பித்தான்.

உள்ளே போனதும் ஆய்வாளரை சந்தித்தவன் அவரிடம் பேச ஆரம்பித்தான்.

“சார்..” என்று அவனோ பயத்துடன் பேச ஆரம்பிக்க

“என்னப்பா சொல்லு” என்று அவரோ அவர்கள் மொழியில் கனத்த குரலுடன் கேட்டார்.

“இல்லை… சார்… ஒரு பொண்ணை காணோம்…” என்று அவனோ பயத்தில் வார்த்தைகளை சரியே உச்சரிக்க முடியாமல் உளற

“இப்படி சொன்னா எப்படி?” எந்த பொண்ணு? உன்னோட தங்கச்சியா இல்ல பொண்டாட்டியா?” என்று அவர் கேட்க

இந்த கேள்விக்கு அவனால் எந்த பதில் சொல்வது என்றே தெரியாமல் திருத்திருவென விழிக்க

“உன்னோட முழியே சரில்லையே…? என்ன இழுத்துட்டு வந்த பொண்ணா?” என்று அந்த ஆய்வாளர் கேட்க

இதற்கும் அவனால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

இதனால் அந்த ஆய்வாளரின் சந்தேகம் இன்னும் அதிகமாகிறது. அதுவரை பொறுமையாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தவர் இப்பொழுது எழுந்து வந்து அவன் சட்டையை பிடித்து “டேய்… உண்மையை சொல்லுடா… அந்த பெண்ணை என்ன பண்ண?  அந்த பொண்ணு கிட்ட தப்பா நடந்துக்கிட்டயா? இல்ல கொலையே பண்ணிட்டியா?” என்று கேட்க

அந்த வார்த்தை அவனை இன்னும் பயமடைய செய்தது.  அவரிடம் என்ன பதில் பேசுவது என்றே அவனுக்கு தெரியவில்லை.  என்ன பேசினாலும் அது தவறாகத்தான் முடியும் என்பதை உணர்ந்தவன் பேச வார்த்தைகள் இன்றி அதிர்ச்சியில் நின்று கொண்டிருந்தான்.

கண்ணன் இன்னும் பேசாமல் அமைதியாக இருப்பது அந்த இன்ஸ்பெக்டரின் கோபத்தை தூண்டவே,  “இப்போ மட்டும் நீ வாய தொறந்து பேசல… அதுக்கப்புறம் உனக்கு போலீஸ் ட்ரீட்மென்ட் கொடுக்க வேண்டியதா இருக்கும்.  ஏற்கனவே இந்த ஒரு மாசத்துல மட்டும் மூணு பொண்ணுங்கள காணோம். அந்த அக்யூஸ்டை  நாங்க எல்லா இடத்திலும் தேடிட்டு இருக்கோம். அந்த பொண்ணுங்க எல்லாம் உயிரோட இருக்காங்களா இல்லையான்னு
கூட எங்களுக்கு தெரியல. அந்த மூணு கேஸையும்  உன் மேல தூக்கி போட்டுருவேன் பார்த்துக்கோ” என்று அவனை மிரட்டினார்.

இதுக்கு மேல் அமைதியாக இருந்தால் எல்லாம் கைமிறி போய்விடும் என்பதை உணர்ந்தவன்,  இப்பொழுது தைரியத்தை வரவழைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தான்.

“சார்… நான் நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் இல்ல…  நான் நாலு வருஷமா இந்த கம்பெனியில் ஒர்க் பண்றேன்.” என்று சொன்னவனும் தன்னுடைய கம்பெனியின் அடையாள அட்டையையும், அவன் அந்த கம்பெனியில் இதுவரை வேலை செய்ததற்கான ஆதாரங்களையும் அவரிடம் எடுத்து காட்டினான்.

அதையெல்லாம் வாங்கி பொறுமையாக பார்த்தவரோ “அப்போ இந்த கம்பெனியில் வேலை பண்ணிட்டே தான் இந்த கொலை எல்லாம் பண்ணிட்டு இருக்கியா?”  என்று கேட்டதும்

“சார்…. என்ன  இப்படியே பேசுறீங்க? சார் நீங்க என்னை என்ன வேணாலும் பேசுங்க… என்ன வேணும்னாலும் பண்ணுங்க…. என் மேல என்ன கேஸ் வேணும்னாலும் போட்டு உள்ள தூக்கி போடுங்க. எனக்கு அதைப் பத்தி எல்லாம் இப்போதைக்கு கவலையே இல்ல.  எனக்கு இப்போ பூர்ணா கிடைச்சாகணும்.  அவங்களுக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா அப்புறம் வாழ்க்கை முழுசும்  இந்த குற்ற உணர்ச்சி என்னை சும்மாவே விடாது” என்று அவனோ கண் கலங்கியபடி சொன்னான்.

அவன் சொன்ன விதம் அந்த இன்ஸ்பெக்டருக்கே கொஞ்சம் பரிதாபமாக இருக்கவே “சரி சொல்லு அந்த பொண்ணு பேரு பூர்ணாவா? அந்த பொண்ணு உனக்கு யாரு? தெளிவா சொல்லு” என்று சொன்னவர் இப்பொழுது அவர் இருக்கையில் போய் அமர்ந்தார்.

“சார்… பூர்ணா நான் லவ் பண்ண பொண்ணோட அக்கா. என்னோட அண்ணனுக்கு பூர்ணாவை கல்யாணம் பேசினாங்க. ஆனா கல்யாணம் அன்னைக்கு பூர்ணா மண்டபத்தை விட்டு ஓடி போய்ட்டாங்க. அதனால கல்யாணம் நின்னு போயிடுச்சு. என் அண்ணனோட  கல்யாணம் நின்னு போன கோவத்துல நான்  லவ் பண்ண பொண்ணு கிட்ட சரியா பேசல. கல்யாணம் நின்ன ரெண்டாவது நாள் நான் என்னோட வேலைக்காக மறுபடியும் பெங்களூர் கிளம்பி வந்தேன். அப்பொ தான் பஸ்ல பூர்ணாவை பார்த்தேன். அவங்கள பார்த்ததும் எனக்கு செம கோவம். அதனால அவங்க கிட்ட போய் சண்டை போட்டேன். எதுக்காக எங்க அண்ணன் கூட நடக்க இருந்த  கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடிப்போனீங்க? எதுக்காக என்னோட அண்ணனோட வாழ்க்கையை நாசமாக்குனீங்கன்னு சண்டை போட்டேன். ஆனா அதுக்கு எல்லாம் அவங்க பதில் பேசவே இல்ல. அழுதுட்டே தான் இருந்தாங்க. அவங்க அழுதது எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதனால அதுக்கு மேல நான் அவங்களை காயப்படுத்த விரும்பல.  அப்போ தான் அவங்க கிட்ட ஒரு உண்மைய சொன்னாங்க. பூர்ணா வேற ஒரு பையனை லவ் பண்ணி இருக்காங்க.  அதனால தான் எங்க அண்ணன் கூட நடக்க இருந்த  கல்யாணத்தை நிறுத்திட்டு ஓடிப் போயிருக்காங்க. ஆனா இவங்க ஓடிப் போனதும், அவங்க லவ் பண்ண பையன் அவங்களை ஏத்துக்கல. அந்த கஷ்டத்துல தான் அவங்களால லவ் பண்ண பையன் கூடவும் போக முடியாம, அவங்க வீட்டுக்கும் திரும்பி போக முடியாம, ரெண்டு நாளா இப்படித்தான் எல்லா இடத்திலும் அலைஞ்சுட்டு இருந்திருக்காங்க. அப்போ தான் நானும் அவங்கள பார்த்தேன்.  நான் அவங்க வீட்டுக்கு திரும்பி போக சொல்லி  எவ்வளவோ சமாதானம் சொன்னேன். ஆனா அவங்க போக மறுத்துட்டாங்க. அவங்களால திருப்பி பழைய கம்பெனிக்கே வேலைக்கு போக முடியாதுன்னு சொன்னதுனால நான் தான் அவங்களுக்கு வேற வேலை வாங்கி தரேன்னு பொய் சொல்லி கூட்டிட்டு வந்து என்கூட தங்க வச்சுருந்தேன். கொஞ்ச நாள் போனதும் நான் லவ் பண்ண அவங்க தங்கச்சி கிட்ட பேசி, அவங்க வீட்டுல எல்லாத்தையும் சமாதானப்படுத்தி, பூர்ணாவை  வீட்டுலையே விட்டுட்டு வந்திரலாம்ன்னு நினைச்சேன்.  ஒருவேளை அவங்களை அப்படியே விட்டுட்டு வந்தா அவங்களுக்கு ஏதாவது ஆகிடுமோன்னு தான் பொய் சொல்லி என் கூட கூட்டிட்டு வந்தேன். என்ன இருந்தாலும் நான் லவ் பண்ண பொண்ணோட அக்கா ஆச்சே. அதுனால தான் அப்படி பண்ணேன். ஒரு வாரம் என் கூட தான் தங்கி இருந்தாங்க. ஆனா அவங்களை இப்படி ரொம்ப நாள் என் கூட தங்க வச்சிக்குறது எனக்கு சரியா படல… சோ நான் லவ் பண்ண பூஜா கிட்ட நேர்ல போய்  எல்லா விஷயங்களையும் சொல்லி அவங்க வீட்டுல பேசி மறுபடியும் பூர்ணாவை அவங்க குடும்பத்தோட சேர்ந்து வாழ வைக்கலாம்னு நேத்து தான் பூர்ணா ஊருக்கு போயிருந்தேன். அப்போ தான் நான் லவ் பண்ண பொண்ணுக்கும்  வேற ஒருத்தருக்கும் அவசர கல்யாணம் ஆச்சு. அதை பார்த்த கோபத்துல, அதுக்கு பூர்ணா தான் காரணம்ன்னு அவங்க கிட்ட வந்து கோவமா சண்டை போட்டு பேசிட்டேன்.  அந்த கஷ்டத்துல தான் அவங்க கோச்சிட்டு வீட்டை விட்டு போயிட்டாங்க. எங்க போயிருக்காங்கன்னு எனக்கு எதுவுமே தெரியல” என்று நடந்த எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் சொன்னான் கண்ணன்.

“பரவாயில்லையே தம்பி…. நல்லா கதை சொல்ற. உங்க அண்ணனை அசிங்கப்படுத்திட்டு போன பொண்னை நீ உன்னோட வீட்டுல கூட்டிட்டு வந்து வச்சு நல்லா பாத்துக்கிட்டியா? நாங்க எல்லாரும் நம்பிட்டோம். ஏன்டா…  உன் குடும்பத்தை அசிங்கப்படுத்திட்டு போயிட்டான்னு அந்த பொண்ணை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து என்னடா பண்ண? அந்த பொண்ணை ஏதோ பண்ணிட்டு இங்க வந்து டிராமா பண்ணிட்டு இருக்கியா? இதை நீ மட்டும் தனியா பண்ணியா? இல்லை உன்னோட மொத்த குடும்பமும் கூட்டா?”  என்று கோபத்துடன் கத்தி கேட்ட இன்ஸ்பெக்டரோ “கான்ஸ்டபிள் அந்த பொண்ணு போட்டோவை இவன் கிட்ட இருந்து வாங்கிட்டு, இவன தூக்கி உள்ள வெச்சு நம்ம ஸ்டைல நல்லா விசாரிங்க… அப்போ தான் இவன் உண்மையை சொல்லுவான்…”  என்று கான்ஸ்டபிளுக்கு ஆர்டர் போட்டார் இன்ஸ்பெக்டர்.

2 thoughts on “மயங்கினேன்நின் மையலில்… அத்தியாயம் 17”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *