Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15

“என்ன சொல்றீங்க தருண்? உங்களுக்கு அப்பா அம்மா இல்லையா? அப்போ  நேத்து வீட்டுக்கு வந்திருந்தவங்க?” என்று அவள் அதிர்ச்சியாய் கேட்க

“இரண்டு நாள் முன்னாடி வரைக்கும் நான் அவங்கள தான் அப்பா அம்மாவா தான் நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்போ…..”  என்று அவன் எதையோ சொல்ல வர, அழுகை அவன் வார்த்தையை தடுமாற செய்தது.

“என்ன சொல்றீங்க? எனக்கு எதுவுமே புரியல தருண்…”  என்று பூஜா குழப்பமாய் கேட்டிட

“நேத்து உங்க வீட்டுக்கு வந்திருந்தது எங்க அப்பா அம்மா கிடையாது. என்னோட அத்தையும் மாமாவும். அதாவது எங்க அப்பாவோட தங்கச்சியும் அவங்க ஹஸ்பண்டும்” என்று அவன் சொன்னதும்

“அவங்க உங்களோட அத்தை மாமா அப்படின்னா, உங்களோட அப்பா அம்மா எங்க? அப்புறம் எதுக்காக நீங்க அவங்களை அம்மான்னு கூப்பிட்டீங்க?” என்று பூஜா கேட்க

“சின்ன வயசுல இருந்து எங்க குடும்பமும்  எங்க அத்தை குடும்பமும் சேர்ந்து தான் இருந்தோம். எங்க அப்பாவுக்கு எங்க அத்தை மேல ரொம்ப பிரியம். அதனாலேயே அவங்க மேல இருந்த பாசத்துல அவங்களுக்கு வீட்டோட மாப்பிள்ளையா பார்த்து தான் கல்யாணம் பண்ணி வச்சாரு.  எனக்கு விவரம் தெரிஞ்சதுல இருந்தே எங்க அத்தை குடும்பம் எங்க கூட தான் இருக்காங்க. எங்க அத்தையும் எங்களை அம்மா மாதிரி தான் பாத்துக்கிட்டாங்க. நான் பொறந்து ரொம்ப வருஷமா எங்க அத்தைக்கு குழந்தைங்க இல்ல. அதனாலயே அவங்க வருத்தப்பட கூடாதுன்னு அம்மா அம்மான்னு கூப்பிட்டு பழகிட்டேன். கொஞ்ச வருஷம் கழிச்சு தான் அவங்களுக்கு ஆதிரா பொறந்தா.  திடீர்னு நாலு வருஷம் முன்னாடி நடந்த ஆக்சிடென்ட்ல எங்க அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. அந்தக் கஷ்டத்தில் இருந்து என்னையும் என்னோட தம்பியையும் மீண்டு வர வச்சதே அவங்க ரெண்டு பேரும் தான்.  கொஞ்ச நாள் முன்னாடி தான் எனக்கு எங்க அம்மா அப்பா எழுதி வச்ச உயில் கிடைச்சது. அதாவது எங்க அம்மா அப்பா காலத்துக்கு அப்புறம் எல்லா சொத்தும் எனக்கு தான் வரணும்.   என்னோட கல்யாணத்துக்கு அப்புறம் நானும் என்னோட மனைவியும் சேர்ந்து எழுதி கொடுத்தா மட்டும் தான் அந்த ட்ரான்ஸ்ஷாக்ஷன் செல்லும்ன்னு அந்த உயில்ல தெளிவாக எழுதி இருந்தாங்க. ஆனா எனக்கு இந்த விஷயம் கொஞ்ச நாள் முன்னாடி தான் தெரிய வந்தது.  எங்க அத்தைக்கு ஒரே  பொண்ணு ஆதிரா மட்டும் தான். அவளை எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முயற்சி பண்ணாங்க.  ஆனா அவளை கல்யாணம் பண்ணிக்க எனக்கு மனசு இடம் கொடுக்கல. உண்மைய சொல்லனும்னா சின்ன வயசுல இருந்து ரெண்டு பேரும் ஒண்ணா தான் வளர்ந்தோம்.  அவள் எனக்கு தங்கச்சி மாதிரி. அப்படி இருக்கும் போது என்னால எப்படி அவளை கல்யாணம் பண்ணிக்க முடியும்? அதனால நான் அதை வேண்டாம்ன்னு சொல்லிட்டேன். அதுக்கு அப்புறம் தான் எனக்கு அவங்களோட உண்மையான முகமே தெரிய வந்தது.  எங்க அப்பா பேருல இருந்த சொத்துக்காக தான் அவங்க இவ்ளோ வருஷமா எங்க மேல பாசமா இருக்க மாதிரி நடிச்சிருக்காங்கன்னு புரிஞ்சுகிட்டேன். ரெண்டு நாள் முன்னாடி, நம்ம கல்யாணம் முடிவாக அன்னைக்கு தான், என்னோட தம்பி கிஷோரை கடத்தி வச்சிட்டாங்க. எனக்கு கல்யாணம் ஆகி நானும் என்னோட மனைவியும் சேர்ந்து எழுதிக் கொடுத்தா மட்டும் தான் அந்த சொத்து அவங்களுக்கு வரும். அதனால எனக்கு திடீர் கல்யாணம் பண்ண முடிவு பண்ணாங்க. நானும் என்னோட தம்பி கிஷோரும் பூர்ணா கல்யாணத்துக்கு வந்திருந்ததை பாலோ பண்ணி இருக்காங்க.  சோ பூர்ணா ஓடி போனது அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு…  அப்படி இருக்கும் போது உங்களை பொண்ணு கேட்டா உங்க வீட்டுல இந்த திடீர் கல்யாணத்துக்கு சம்பாதிப்பாங்கன்னு தான் அவங்க உங்களை பொண்ணா தெரிந்தெடுத்திருக்காங்க.   அதுக்கு அப்புறமா கிஷோரை கடத்தி வச்சு, உங்களை நான் கல்யாணம் பண்ணி எல்லா சொத்தையும் எழுதி கொடுத்தா மட்டும் தான் கிஷோரை விடுவேன்னு மிரட்டுனாங்க.   நம்ம கல்யாணம் முடிஞ்சதும் நான் ஒரு ஹோட்டல்ல போய் தங்கி இருந்தேன்.  அங்கேயே வந்து என்கிட்ட எல்லா பேப்பர்ஸ்லயும் சைன் வாங்கிட்டாங்க. இதுக்கு அப்புறம் என்கிட்ட எதுவுமே இல்ல பூஜா… உங்களை தவிர…” என்று அவன் சொல்லி முடித்ததும் பூஜாவிற்கும் என்ன சொல்வது என்றே தெரியவில்லை.  அவளுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியாக அவன் கொடுத்துக் கொண்டிருந்தான்.

“என்ன தருண் சொல்றீங்க? கிஷோர் உங்க தம்பியா? அப்படி இருக்கும்போது எதுக்காக அவர் உங்க கம்பெனியில வேலை செஞ்சுட்டு இருந்தாரு?”  என்று பூஜா கேட்க

“ஆமா பூஜா… அவன் கொஞ்சம் சின்ன பையன்.  அது மட்டும் இல்லாம அவனுக்கு பிசினஸ் விஷம் எல்லாம் எதுவுமே தெரியாது. அதனால கொஞ்ச நாள் நம்ம கம்பெனியில் ஒர்க் பண்ண வச்சிட்டு, அவனுக்கு எக்ஸ்பீரியன்ஸ் ஆனதும், அவனுக்கும் தனியா ஒரு கம்பெனி ஸ்டார்ட் பண்ணி தரலாம்னு நினைச்சேன். ஆனா அதுக்குள்ள இப்படி மொத்த சொத்தும் எங்ககிட்ட இருந்து போகும்ன்னு நாங்க நினைச்சு கூட பாக்கல”

“நீங்க என்னென்னமோ சொல்றீங்க தருண்….  ஆனா எனக்கு எதுவுமே புரியல. ஒரே குழப்பமா இருக்கு. நீங்க என்ன சின்ன குழந்தையா? உங்களை மிரட்டி கல்யாணம் பண்ண சொன்னா நீங்க கல்யாணம் பண்ணிடுவீங்களா?” என்று அவளோ கோபமாய் கேட்க

“என்னை வேற என்ன பண்ண சொல்றீங்க பூஜா? எங்க அம்மா அப்பா போனதுக்கப்புறம் எனக்குன்னு இருக்க ஒரே ஒரு உறவு என்னோட தம்பி மட்டும் தான்.  அவனையும் இழந்துட்டு நிக்க  சொல்றீங்களா? அவனை கடத்தி வச்சிட்டு என்னை மிரட்டும் போது எனக்கு வேற வழி தெரியல. என்னோட மூளை வேற எதையுமே யோசிக்கல. அது மட்டும் இல்லாம கல்யாண பொண்ணா உங்க போட்டோவ காட்டுனாங்க. அதனால என்னால அதை மறுக்க முடியல. எனக்கு கிஷோர் எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு நீங்களும் முக்கியம் பூஜா.  உங்க ரெண்டு பேருக்காகவும் தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்” என்று சொன்னான் தருண்.

“இல்ல தருண்… எனக்கு புரியல. உங்க தம்பிக்காக இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டீங்க அப்படின்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு.  எனக்காக தான்  நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்கன்னு  சொல்றீங்க… எதுக்காக??” என்று அவள் கேட்க

“ஒருவேளை உங்களை நான் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னா, உங்களுக்கு அவசர அவசரமா வேற ஏதாவது மாப்பிள்ளை பார்ப்பாங்க. வேற யாராவது தப்பான பையனை கல்யாணம் பண்ணி  வச்சு, உங்க வாழ்க்கைக்கு எதுவும் ஆகிடக் கூடாது இல்லையா? அதனால உங்க ரெண்டு பேருக்காகவும் உங்களை கல்யாணம் பண்ணிக்க சம்மதிச்சேன்”

“அதெல்லாம் சரி…. ஆனா நேத்து கூட நீங்க உங்க அத்தையை பார்த்ததும் அம்மான்னு கூப்டிங்களே… அவங்களுக்காக எழுந்து நின்னு எல்லாம் பேசினீங்க…. அப்புறம் சித்தின்னு ஒருத்தங்க வந்தாங்களே… எனக்கு எதுவுமே புரியல தருண். தலையே வெடிக்கிற மாதிரி இருக்கு” என்று அவள் சொன்னதும்

“இல்லை பூஜா… ஆரம்பத்துல எங்க மாமா மட்டும் தான் கிஷோரை கடத்தி வச்சு மிரட்டினாங்க. உங்களை கல்யாணம் பண்ணி நாம ரெண்டு பேரும் சேர்ந்து சொத்தை எல்லாம் எழுதி கொடுக்கலைன்னா கிஷோரை கொன்னுருவேன்னு மிரட்டுனாங்க. அத்தைக்கு சித்திக்கு எல்லாம் இந்த விஷயம் தெரியாதுன்னு சொன்னாங்க. ஒருவேளை அத்தை கிட்ட நான் இதை பத்தி சொன்னேன்னா அவங்களையும் கொன்றுவேன்ன்னு மிரட்டுனாங்க. அத்தைக்கு இதெல்லாம் தெரியாதுன்னு நெனச்சிட்டு இருந்தேன். நேத்து நைட்டு வரைக்கும் எல்லாரையும் நம்பிட்டு இருந்தேன் பூஜா. ஆனா நேத்து நைட் அந்த ஹோட்டல்ல என்கிட்ட சைன் வாங்க வந்தப்போ தான் எல்லாருமே கூட்டு சேர்ந்து தான் என்னை ஏமாத்திட்டாங்கன்னு எனக்கு தெரிஞ்சது. நான்  அம்மாவா நெனச்ச என்னோட அத்தை…. மாமா… சித்தின்னு எல்லாருமே சேர்ந்து தான் என்னை முட்டாளாக்கி இருக்காங்க. எல்லாரையும் கண் மூடி தனம்மா நம்புனது எவ்வளவு தப்புன்னு இப்போ புரியுது பூஜா….” என்று சொன்னவனும் அழுக ஆரம்பித்து விட்டான்.

இத்தனை நேரமும் பூஜா தனக்கு மட்டும் தான் இத்தனை கஷ்டம். தன்னுடைய குடும்பத்திற்கு மட்டும் தான் இத்தனை பிரச்சனை, என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்பொழுது தருண் பிரச்சனையும் அவன் குடும்பத்தில் நடந்த விஷயங்களையும் கேட்கும் பொழுது, அவளுடைய பிரச்சனை எல்லாம் பெரிய விஷயமே இல்லை என்று தோன்றியது.

அவன் அருகில் போனவள் “அழுகாதீங்க தருண்…  வெறும் சொத்து தானே… அது போனா போகட்டும். நீங்க நல்லா இருக்கீங்களே… அதுவே போதும்ன்னு நினைச்சுக்கோங்க” என்று அவளுக்கு ஆறுதல் சொன்னாள்.

“என்னோட அம்மா அப்பாவே போனதுக்கு அப்புறம் இந்த சொத்து எல்லாம் எனக்கு பெரிய விஷயமே கிடையாது. இருந்தாலும் நான் குடும்பமா நினைச்ச எல்லாரும் என்னை ஏமாத்திட்டாங்கன்னு நினைக்கும் போது தான் எனக்கு  கஷ்டமா இருக்கு. அது மட்டும் இல்லாம மிச்ச மீதி இருக்க என்னோட ஒரே ஒரு உறவையும்  பனையமா வெச்சு என்னை மிரட்டுறது அதைவிட கஷ்டமா இருக்கு. கிஷோர் இருக்கான்ல   விளையாட்டு பையன் மாதிரி இருப்பான்.  அவன் ரொம்ப நல்லவன் தெரியுமா? அவனை வச்சே என்கிட்ட இருந்து எல்லாத்தையும் வாங்கிட்டாங்க”  என்று சொன்னவன் அருகில் இருக்கும் சோபாவில் உட்கார்ந்து அழுக,

அதைப் பார்த்த அவளின் மனது கனமாகியது. “இவ்வளவு கஷ்டத்தை மனசுல வச்சுட்டு எப்படி இவரால இவ்வளவு நார்மலா இருக்க முடிஞ்சது? இவரோட இடத்துல நான் இருந்தேன்னா கண்டிப்பா உயிரோடவே இருக்க மாட்டேன். எல்லா கஷ்டத்தையும் ஒரே ஆளா தாங்கி இருக்காரு.  அதனால தான் எப்பயும் சிடுமூஞ்சியா இருந்திருக்காரு போல… ஆனா இப்போ கார்ல என் கூட வரும்போது கூட எவ்வளவு சகஜமா பேசிட்டு வந்தாரு.  இந்த மாதிரி மனுஷங்களை எல்லாம் பார்க்கவே எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு.” என்று தன் மனதில் நினைத்த வருந்தியவளோ, அவனின் அழுகையை எப்படி சமாதானம் செய்வது என்று தெரியாமல் தவித்தாள்.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 15”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *