Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20

கண்ணனோ  கோபத்திலும், வலியிலும், அவளை தன்னையும் மீறி திட்டிக் கொண்டிருந்தான். கோபத்தில் இவ்வளவு நேரம் மூச்சு கூட விடாமல் திட்டியவன், இப்பொழுது தான் பூர்ணாவின் முகத்தையே கவனிக்கிறான்.

அவன் பேசுவதற்கும் திட்டுவதற்கும் எந்தவித பதிலும் சொல்ல முடியாதவள், எதுவும் பேசவும் முடியாமல் கண்களில் கண்ணீரோடு அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு வாயை திறந்து பேசவே தோன்றியது. ஆனாலும் அவளின் உடல் நிலை அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை.

இப்பொழுது மூச்சை வேகமாக இழுத்து விட்டவன், சூழ்நிலை அறிந்து அவளின் அருகில் போய் “உன்னோட இந்த நிலைமைக்கு நானும் ஒரு காரணம். என்னோட கண்முடித்தனமான கோபத்துனால  தான் நீ இந்த இடத்தில வந்து நிக்கிறேன்னு நினைக்கிறேன்”  என்று இப்பொழுது  ஆறுதலாய் பேசினான்.

ஆனால் இது எப்படி சாத்தியம்? இத்தனை நேரம் மூச்சு விடாமல் கோபத்தில் இத்தனை வார்த்தைகளை பேசியவன்,  அடுத்த இரண்டே நொடிகளில் இப்படி ஆறுதலாய் பேசுவது சாத்தியமா? என்று தன் மனதிற்குள் அவளே கேள்வி கேட்டுக் கொண்டாள்.

இப்பொழுது அந்த அறையில் இருந்த ஒரு நாற்காலியை பூர்ணாவின் அருகில் இழுத்து போட்டு அமர்ந்தவன்,  “எல்லா பிரச்சினைக்கும் தற்கொலை மட்டுமே ஒரு முடிவு கிடையாது.  இதுநாள் வரைக்கும் நான் உன்னை ஓரளவுக்காவது தைரியமான பொண்ணுன்னு நினைச்சுட்டு இருந்தேன்.  ஆனா இப்போ தான் புரியுது, உன்னோட மனசுல கொஞ்சம் கூட தைரியமே இல்லைன்னு… இப்படி சின்ன சின்ன பிரச்சனைக்கு பயந்து ஓடினா  எப்படி?  நீ படிச்ச பொண்ணு தானே? உன்னை ஆக்சிடென்ட் பண்ண அரவிந்த் என்கிட்ட வந்து நீயே தான் அவன் கார்ல வந்து விழுந்தேன்னு சொல்லும்போது எனக்கு எப்படி இருந்தது தெரியுமா?  உனக்கு இவ்வளவு நேரம் நான் அட்வைஸ் பண்ணிட்டு இருக்கேன். ஆனா இந்த விஷயத்துல என் மேலையும் கொஞ்சம் தப்பு இருக்கு.  உன்னை மாதிரியே எனக்கும் ஒரு பிரச்சனை இருக்கு…நீ எப்படி எல்லா பிரச்சனையிலையும்  கொஞ்சம் கூட யோசிக்காம  திடீர்னு ஒரு முடிவு எடுக்கிறியோ, அதே மாதிரி தான் நானும் … எந்த பிரச்சனையிலையும் கொஞ்சம் கூட யோசிக்காம அதிகமா கோபப்படுவேன்.  அதனால என்னோட வாழ்க்கையில நான் இழந்த விஷயங்கள் நிறையா… பூஜாவையே எடுத்துக்கோ…  நீ கல்யாணம் அன்னைக்கு ஓடிப்போனதுக்கு நான் அவகிட்ட அவ்வளவு கோபமா, வெறுப்பா நடந்துகிட்டேன். அவள் சொல்ல வர்றதை கூட நான் காது கொடுத்து கேட்கல. கடைசியா எனக்கு நிறையா முறை போன் பண்ணிக்கிட்டே இருந்தா. அவ மேல இருந்த கோபத்தில நான் போனை கூட எடுக்கல.  ஆனா அது எல்லாத்துக்கும் தண்டனையா தான், வேற ஒருத்தன் அவள் கழுத்துல தாலி கட்டுறதை . பார்த்தேன்.  உன்னோட விஷயத்துலையும்  நான் அதே தப்பு தான் பண்ணேன். பூஜா கல்யாணத்தை பார்த்ததும், உன்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காம உன் கிட்ட அவ்ளோ கோபமா கொடூரமா நடந்துகிட்டேன்.  அதுனால தான் நீ  இப்போ இங்க வந்து நிக்கிற.  நீயும் அதே தப்பு பண்ணாத. எந்த விஷயத்தையும் யோசிக்காம முடிவு பண்ணாத.  கொஞ்ச நேரம் டைம் கொடுத்தா கண்டிப்பா எவ்வளவு பெரிய பிரச்சினையா இருந்தாலும் சரி பண்றதுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும். இப்போ பாரு இந்த வலி எல்லாம் உனக்கு தேவையா?”  என்று கண்ணன் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே செவிலியர் அந்த அறைக்கு வந்தார்.

“சார்… நான் உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தான் டைம் கொடுத்தேன்.  அதுவும் எனக்கு இந்த பொண்ணை பார்க்கவே ரொம்ப பாவமா இருந்தது. அந்த பொண்ணு போன்ல இருந்து நான் தான் உங்க கிட்ட பேசினேன். இன்னும் கொஞ்ச நேரத்துல இவங்களை நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்.  அதுக்கப்புறம் நீங்க அவங்க கிட்ட பேசலாம்” என்று அந்த செவிலியர் பெண் சொன்னதும் கண்ணனும் அமைதியாக எழுந்து வெளியே கிளம்பி விட்டான்.

பூஜா சொன்னதும் தருணோ படுக்கையறைக்குள்  போய் படுத்துக் கொண்டான்.  அவன் உள்ளே தூங்கியதும் பூஜாவோ ஹாலியிலேயே பாய் விரித்து படுத்துக் கொண்டாள்.

விடுமுறை நாட்களிலேயே காலை 10 மணிக்கு வரை கண் விழிக்காதவள்   இப்பொழுதோ காலை 6:00 மணிக்கே எழுந்து கொண்டாள்.

அவளுக்கு சுத்தமாக தூக்கமே வரவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஹாலில் இருக்கும் மின்விசிறி சரியாக ஓடாததால் அவளுக்கு புழுக்கமாகவே இருந்தது. இருந்தாலும் அது எல்லாம் கூட அவளுக்கு பெரிதாய் தெரியவில்லை.  இது எல்லாம் அவள் பழக்கப்பட்டது தானே. ஆனால் கொசுக்கடியை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதனாலேயே சீக்கிரம் கண் விழித்து விட்டாள்.

அவளோ காலை ஆறு மணிக்கே எழுந்து வீட்டு வேலை எல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டாள்.  காரணம் அந்த வீடு அவ்வளவு குப்பையும் தூசியுமாய் இருந்தது.  சிறிது நேரம் கழித்து தான் தருணின் தூக்கம் கொஞ்சம் கலைய, படுக்கையில் இருந்தபடியே தன்னுடைய போனில் மணியை பார்த்தான்.

மணி ஒன்பது முப்பதை காட்டிடவே, “இவ்ளோ நேரம் தூங்கிருக்கேன்.  எப்பவுமே காலைல அஞ்சு மணிக்கு எழுந்திருப்பது தானே என்னோட வழக்கம்.  இன்னைக்கு ஏன் இப்படி ஆயிடுச்சு.  காலையிலேயே லேட்டா எழுந்தா என்னோட மத்த வேலை எல்லாம் இன்னிக்கு நடந்த மாதிரி தான்” என்று தன் மனதிற்குள் சொல்லியவாறே இல்லை இல்லை புலம்பியவாறே,  கட்டிலில் இருந்து கீழே இறங்கி, ஹாலை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் பொழுது தான், அந்த அறையை சுற்றிலும் ஒவ்வொரு இடத்தையும் கவனிக்க ஆரம்பித்தான்.

தூங்கி எழுந்ததும் நேற்று நடந்த விஷயங்களும், அவனிடம் இப்பொழுது எந்த சொத்தும் இல்லை, பழைய வீடும் இல்லை, அவனுடைய கம்பெனியும் இப்பொழுது அவன் கையில் இல்லை, என்பதை மறந்து இப்படி எல்லாம் புலம்பி கொண்டிருந்தான்.

அவன் நிறைய கம்பெனிகளை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது, காலை 5 மணிக்கு எழுந்தால் தான் எல்லா வேலையும் சரியாக செய்ய முடியும். அந்த எண்ணத்திலேயே  இப்பொழுதும் புழம்பிக் கொண்டிருந்தான்.

ஒவ்வொரு வேலையாக செய்து முடித்தவள், இப்பொழுது கிச்சனில் காபி போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, அந்த படுக்கை அறையில் இருந்து வெளியே வந்தான் தருண்.

நேற்று நடந்த ஒவ்வொரு விஷயங்களையும் தன்னுடைய நினைவுக்கு கொண்டு வந்தபடியே கிச்சனை நோக்கி நடந்து வந்தவனுக்கு, அந்த காபியின் நறுமணம் கொஞ்சம்  மனதுக்கு இதமாக இருந்தது.

“ஆனால் இது எப்படி?”  என்று புரியாதவனோ பூஜாவின் அருகில் சென்று “எப்படி பூஜா… இந்த பொருள் எல்லாம் இங்க எப்படி வந்தது?” என்று  கேட்டான்.

“ஆமா தருண்…. காபி கூடவா கடையில வாங்க முடியும்? அதனால தான் நானே  கடைக்கு போய் சின்னதா ஒரு இண்டக்ஷன், அதுக்கப்புறம் காஃபி போட தேவையான பாத்திரமும் பால் எல்லாம் வாங்கிட்டு வந்தேன்” என்று சொன்னாள் அவள்.

“இதெல்லாம் வாங்குறதுக்கு உங்ககிட்ட பணம்?”  என்று அவன் புரியாமல் கேட்க

“என்ன தருண்… இவ்வளவு வருஷம் ஒர்க் பண்ணி இருக்கேன், என்கிட்ட சேவிங்ஸ்  இல்லாமலா இருக்கும்?  நம்ம கல்யாணமும் பெருசா ஒன்னும் விமர்சையா நடக்கல. அப்படி இருந்தா கூட எல்லா சேவிங்சும் அதுல செலவாகி இருக்கும். நம்ம கல்யாணம் எப்படி நடந்ததுன்னு உங்களுக்கே தெரியும். சோ என்கிட்ட ஒரு பெரிய அமௌன்ட் சேவிங்ஸ் இருக்கு. அதுல தான் இந்த சின்ன சின்ன பொருள்  எல்லாம் வாங்கினேன்”  என்று அவள் சொன்ன விஷயத்தை கேட்டு அவன்  வியந்து தான் போனான்.

அவனோ  அமைதியாய் நின்று கொண்டிருக்க “சாரி தருண்….  நீங்க காபி குடிப்பீங்களான்னு தெரியாம ஏதோ ஒரு ஞாபகத்துல காபி போட்டுட்டேன்.  நீங்க காபி குடிப்பீங்களா இல்ல டீ குடிப்பிங்களா?” என்று அவள் கேட்டிட

‘இல்ல பூஜா எனக்கு காபி தான் பிடிக்கும்”  என்று அவன் சொன்னதும் அவளோ ஒரு புன்னகையோடு காபி கப்பை அவன் கையில் கொடுத்தாள்.

அவள் கையில் இருந்து காபி கப்பை வாங்கியவனும் “இன்னைக்கு நீங்க காபி போட்டுட்டீங்க…  நாளைக்கு என்னோட டே…. சோ நாளைக்கு நான் தான் காபி போடுவேன்” என்று அவனும் பிடிவாதமாய் சொல்லிவிட்டான்.

அவளும் அதற்கு புன்னகைத்துக் கொண்டே தலையை அசைத்திட “சரி பூஜா…. அடுத்ததா நாம என்ன செய்யப் போறோம்?”  என்று கேட்டான் அவன்.

“எனக்கு புரியல தருண்…. நீங்க எதை பத்தி கேக்குறீங்க?”  என்று அவளோ  புரியாமல் கேட்டிட “இல்ல பூஜா…. நம்ம லைஃபை கொண்டு போறதுக்கு நமக்கு பணம்ன்னு ஒன்னு தேவை இல்லையா? பணம் மட்டுமே தேவை இல்லை அப்படின்னாலும், பணமும் கொஞ்சம் தேவை.  சோ நம்மளோட பினான்சியல் நீட்ஸுக்கு நாம என்ன செய்யப் போறோம்?”  என்று கேட்டான்

“இதுல என்ன இருக்கு தருண்? நான் எப்போவும் போல  நம்ம ஆபீஸ்க்கு வேலைக்கு போறேன்” என்று சொல்லி முடித்தவளோ, அப்பொழுது தான் அவளுக்கு நடந்தது நினைவு வர, லேசாக நாக்கை கடித்தபடியே “சாரி தருண் மறந்துட்டேன். என்னால இப்போ நம்ம  கம்பெனிக்கு வேலைக்கு போக முடியாது இல்லையா?” என்று சொன்னாள்.

அவள் சொன்னதையும், அவளின் ரியாக்ஷனையும் பார்த்தவனோ இல்லை இல்லை ரசித்தவனோ  “நாம ஏதாவது பண்ணலாம். இப்போ நான் போய் குளிச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

தருண் அங்கே இருந்து கிளம்பியதும் பூஜாவிற்கோ அவளின் அம்மா பார்வதியிடம் இருந்து அழைப்பு வந்தது.

பூஜாவும் தயங்கியபடியே போனை எடுத்து பேசினாள்.

அவள் அட்டென்ட் செய்து காதில் வைத்ததும் “நல்லா இருக்கியாம்மா? நேத்து தான் நீங்க இங்க இருந்து கிளம்பினீங்க. ஆனா ரொம்ப நாள் ஆன மாதிரி இருக்கு. என்ன பண்ற? அந்த வீடு  ரொம்ப பெருசா இருக்கா? மாப்பிள்ளை உன்னை நல்லா பாத்துக்கிறாரா?”  என்று அவரோ சந்தோஷத்தில் படபடப்பாக ஒவ்வொரு விஷயங்களையும் கேட்டு முடித்தார்

தன் அம்மாவின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று பூஜாவுக்கு தெரியவில்லை.

“அம்மாகிட்ட இப்போ என்ன சொல்றது? உண்மையா சொல்லலாமா? இல்லை வேணாமா? ஒருவேளை அம்மா கிட்ட பொய் சொன்னா திடீர்னு என்னை பார்க்க வரணும்ன்னு தருணோட பழைய வீட்டுக்கு போயிட்டா அம்மாக்கு எல்லாமே தெரிஞ்சிடுமே.  இப்போ என்ன பண்றது?” என்று சில நொடி யோசித்தாள்.

தன்னுடைய மகள் அமைதியாய் இருப்பதை உணர்ந்த பார்வதி “நீ ஏண்டி அமைதியாக இருக்க?” என்று கேட்டார்.

“இல்ல…. இப்போ  அம்மாகிட்ட பொய் சொன்னா கண்டிப்பா மாட்டிப்போம். அது மட்டும் இல்லாம அவங்களே பண்ணி வச்ச கல்யாணம் தானே. சோ சொன்னா புரிஞ்சிப்பாங்க” என்று தன் மனதில் நினைத்தவள்  நேற்று நடந்த விஷயங்களையும் தருணின் தற்போதைய சூழ்நிலையையும் தன் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்தாள்.

ஆனால்  இந்த விஷயத்தை தன்னுடைய அப்பாவும் அம்மாவும் எப்படி எடுத்து கொள்வார்கள் என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

இதனால் நடக்கவிருக்கும் விளைவுகளை இப்போது அவள் அறியவில்லை.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்…. அத்தியாயம் 20”

  1. Kalidevi

    Crt tha pooja nee kandipa unga amma appa kitta solli tha aganum athu tha nallathum kuda sollama irunthu ennaikathu therinja avanga manasu kasta padum rendu perum kasta patutu irukinganu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *