Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21

“ஏய் பூஜா…. அம்மா பேசுறது கேக்குதா இல்லையாடி?’  என்று பார்வதியோ இப்பொழுது சத்தமாக கேட்க

“அம்மா கேக்குதும்மா… காபி போட்டுட்டு இருந்தேனா, அதனால நீங்க பேசறது சரியா காதுல விழுகல” என்று சமாளித்தாள் பூஜா.

“அட என்னோட பொண்ணு  காபி எல்லாம் போடுறாளா? அதுவும் காலையில இவ்ளோ சீக்கிரமாவா….? நான் கூட நீ இன்னும் தூங்கிட்டு இருப்ப, உன்னை எழுப்பி விடலாம்ன்னு   தான் போனே பண்ணேன். ஆனா என்னோட பொண்ணு இவ்ளோ  பொறுப்பா காலையிலேயே எழுந்து காபி போடுறாளே….” என்று தன் மகளைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டார் பார்வதி. 

“இல்லம்மா…. புது இடம் இல்ல… அதனால சரியா தூக்கம் வரல. எவ்ளோ நேரம் தான் சும்மா முழிச்சே படுத்து இருக்கிறதுன்னு? அதான் நானே வந்து காபி போட்டுட்டேன்” என்று பூஜா சொன்னதும்

“இங்க பாரு பூஜா… அது ஒன்னும் நம்ம வீடு மாதிரி இல்ல… பெரிய பணக்கார வீடு.  அங்க உனக்கு வேலை செய்றதுக்கு நிறைய பேர் இருப்பாங்க. அப்படி இருக்கும்போது போன உடனேயே எல்லா வேலையையும் தூக்கி உன்னோட தலையில போட்டுக்காத. புரியுதா? நீ வேணும்னு கேட்டா உனக்கு வேலை செய்யவே நிறைய பேர் இருப்பாங்க. என்னோட பொண்ணு மகாராணி மாதிரி வாழ போறா. ஆனா நீ இன்னும் நம்ம வீடு மாதிரியே நினைச்சிட்டு இருந்தா எப்படி?” என்று பார்வதி கனவு உலகத்தில் பறக்க ஆரம்பித்தார்.

“ரைட்டு….  இப்போ எங்க அம்மா கிட்ட  உண்மைய சொன்னா கண்டிப்பா அம்மாக்கு நெஞ்சுவலியே வந்துரும்.  அதனால இப்போதைக்கு இதை பத்தி பேசிக்க வேண்டாம்”  என்று தன் மனதில் முடிவெடுத்தவளோ

“சரிம்மா… நீ காபி குடிச்சிட்டியா? என்ன பண்ணிட்டு இருக்க?”  என்று தன் அம்மா பேசும் விஷயத்தை திசை திருப்ப முயற்சி செய்தாள்.

“அம்மா எங்கடி காபி குடிச்சேன்? காலையிலிருந்து அம்மாவுக்கு ஒரு வேலை கூட ஓடல. காலையிலேயே எப்பவும் உங்க சண்டையில தான் எனக்கு விடியவே செய்யும். ஆனா இன்னைக்கு காலையில நான் முழிக்கும் போது நீங்க ரெண்டு பேருமே வீட்டுல இல்லையேடி.  அதனால என்னமோ மனசுக்கு ஒரு மாதிரியாவே இருந்தது.  அம்மா இன்னும் எந்த வேலையும் ஆரம்பிக்கல பூஜா.  அம்மாவுக்கு இப்பவே உன்ன பாக்கணும் போல இருக்கு. ஆனா கல்யாணம் ஆகிப் போன அடுத்த நாளே உன்னை பாக்கணும்னு வந்து நின்னா, சம்மந்தி வீட்டுல என்ன நினைப்பாங்களோன்னு கஷ்டமா இருக்கு.  இன்னும் ஒரு வாரமாவது போகட்டும்.  அதுக்கப்புறம் அம்மாவும் அப்பாவும் மறுவீட்டுக்கு அழைக்கும் போது உன்னை வந்து  பார்க்கிறோம். அதுவரைக்கும் தனியா எல்லாத்தையும் சமாளிச்சுக்கோ. கொஞ்சம் புத்திசாலியா நடந்துக்கோ. மாப்பிள நல்லவரா இருக்காரு. அதனால அவரு மனசுக்கு கோணாமா நடந்துக்கோ. நீயாவது சந்தோஷமா இரு டி”  என்று சொல்லும் பொழுதே பார்வதி கண்ணிலிருந்து கண்ணீர் வடிந்தது.

அதற்கு தன் அம்மாவிடம் என்ன பதில் சொல்வது என்றே தெரியாதவளோ “சரிம்மா…. தருண் வராரு. நான் அப்புறம் பேசுறேன்” என்று பொய் சொல்லியபடியே போனை வைத்து விட்டாள்.

தருணின் சூழ்நிலைகளை கூட அவளால் சமாளித்து விட முடியும் போல… ஆனால் தன் அம்மாவை எப்படி சமாளிப்பது என்று தான் அவளுக்கு தெரியவில்லை.

பூர்ணாவை நார்மல் வார்டுக்கு மாற்றிய பிறகு,  கண்ணன் பூர்ணா இருக்கும் வார்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்க,  கண்ணை நோக்கி வந்த செவிலியரோ “சார் இது லேடிஸ் வார்டு…  சோ அவங்கள பாத்துக்க லேடிஸ் யாராவது இருந்தா வர சொல்லுங்க.  உங்கள எல்லா நேரத்திலும் உள்ள அலோ பண்ண மாட்டோம்.  அது மட்டும் இல்லாம அவங்களுக்கு உதவிக்கு கண்டிப்பா யாராவது தேவை. எல்லா நேரமும் உங்களால அவங்க கூட இருக்க முடியாது. ஏன்னா நீங்க அவங்க கூட இருந்தா  மத்த லேடி பேஷன்ட்க்கு கொஞ்சம் அன்கம்ஃபார்டேபிலா
இருக்கும். உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்.”  என்று சொல்லிய செவிலியர் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

“அய்யய்யோ…. இவங்க என்ன இப்படி சொல்றாங்க. இப்போ என்ன பண்றது? எனக்கு தெரிஞ்ச பொண்ணு ஃப்ரெண்ட்ஸ் யாருமே இல்லயே. எனக்கு பழக்கமா இருந்த ஒரே ஒரு பொண்ணு பூஜா மட்டும் தான். இப்போ அவளும் என்கூட இல்ல.  இப்போ பூர்ணாவை பார்த்துக்க யாரை தான் அரேஞ்ச் பண்றது?” என்று தன் மனதில் நினைத்த கண்ணனோ, அவனிடம் சொல்லிவிட்டு அவனை கடந்து சென்ற செவிலியரை நோக்கி ஓடினான்.

“சிஸ்டர்…. சிஸ்டர்….” என்ற படியே அவர் பின்னால் ஓடியதும் அவனின் குரல் கேட்டு அந்த பெண்ணும் திரும்பி பார்த்தார்.

“சிஸ்டர்…. அவங்க வீட்ல யாருமே ஊர்ல இல்ல.  எல்லாரும் வெளியூர் போயிருக்காங்க. சோ இப்போ லேடீஸ் யாருமே இங்க இல்ல. வேற ஏதாவது ஆப்ஷன் இருக்கா?” என்று கேட்டான்.

“இல்லை சார். கண்டிப்பா யாராவது வரணும். அட்லீஸ்ட்  அவங்களோட வேலையை அவங்ளே செய்ய முடியிற அளவுக்கு இருந்தா கூட  பரவாயில்லை.  ஆனா அவங்க ஒவ்வொரு விஷயமும் இன்னொருத்தங்களை  டிப்பன்ட் பண்ணி தான் இருக்கணும்.  அப்படி இருக்கும் போது கூட யாராவது இருக்கணும். நீங்க அவங்களோட ஹஸ்பண்டாவே இருக்கலாம். ஆனாலும் லேடீஸ் வார்டுக்குள்ள அலோ பண்ண முடியாது.  உங்களுக்கு புரியும்ன்னு நினைக்கிறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருந்தா கூட வர சொல்லுங்க” என்று சொல்லியவரும் அங்கிருந்து கிளம்பி விட்டார்.

அப்பொழுது பின்னால் இருந்து அவனை யாரோ அழைக்கும் குரல் கேட்கவே திரும்பிப் பார்த்தான் கண்ணன்.

40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் தான் அவனை அழைத்து இருந்தார்.

கண்ணனும் வேகமாக அந்த பெண்ணை நோக்கி ஓடிச் சென்ற படியே “என்னம்மா…?”  என்று கேட்டான்.

“ஏப்பா… அந்த பொண்ணு உன்னோட பொண்டாட்டி தானே? அந்த பொண்ணு ரொம்ப நேரமா தண்ணி கேட்டுட்டு இருக்கு. அந்த பொண்ணு கூட லேடிஸ் யாரும் வரலையா?”  என்று கேட்டார்.

“இல்லம்மா…. அவங்க வீட்ல எல்லாரும் ஊருக்கு போயிருக்காங்க. யாரும் இங்க இல்ல. அதான் என்ன பண்றதுன்னு யோசிச்சிட்டு இருக்கேன்” என்று அவனும் தயங்கியபடியே சொல்ல,

“சரிப்பா…. அங்க பக்கத்து பெட்ல படுத்து இருக்கிறது என்னோட பொண்ணு தான். அவளுக்கு உடம்பு சரியில்லைன்னு இங்க வந்து அட்மிட் பண்ணி இருக்கேன். நாங்க இன்னும் ரெண்டு நாள்ல கிளம்பிருவோம்.  உங்க வீட்ல இருந்து யாராவது வர்ற வரைக்கும் உன்னோட பொண்டாட்டியை நானே பார்த்துக்கிறேன்.  நீ வருத்தப்படாத” என்று அவனுக்கு ஆறுதல் சொல்லியவரோ “ஒரு தண்ணி பாட்டில் மட்டும் வாங்கிட்டு வந்து கொடுப்பா.  அந்த பொண்ணுக்கு நான் கொடுக்கிறேன்” என்று சொன்னார்.

அவனோ புன்னகைத்தபடியே “சரிம்மா…”  என்று சொல்லிவிட்டு வேக வேகமாக தண்ணீர் பாட்டில் வாங்க ஓடினான்.

அந்தப் பெண்மணி பூர்ணாவிற்கு தண்ணீர் கொடுப்பதை வெளியே நின்றபடியே பார்த்துக் கொண்டிருந்தான் கண்ணன்.

“ஒரு பொண்ணு மேல  பரிதாபப்பட்டது பெரிய தப்பா?  அதுக்கு எதுக்காக கடவுளை என்னை இந்த அளவுக்கு தண்டிக்கிற? இப்போ என்ன பண்றதுன்னு தெரியாம முழிக்கிறேனே….  நேத்து முழுசா பூர்ணாவை காணோம்னு பைத்தியம் மாதிரி தேடிட்டு திரிஞ்சேன்.  அதுக்கு அப்புறம் போலீஸ்ல அடி வாங்குனேன்… இப்போ இந்த பிரச்சனை…. இப்ப நான் யார் கிட்ட போய் உதவி கேட்கிறது? ஏதோ நல்ல மனசுக்காரங்க கொஞ்சமாவது இருக்காங்க.  இந்த அம்மா மட்டும் இல்லன்னா என் நிலைமை இன்னும் கஷ்டமா இருந்திருக்கும். அவங்களே கூப்பிட்டு உதவி பண்றேன்னு சொல்றாங்க. அவங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே எனக்கு தெரியல.  இருந்தாலும் இவங்களை  நம்பி  எவ்ளோ நாள் தான் இருக்க முடியும்?  கொஞ்சம் கஷ்டம் தான். இப்போ ஏதாவது பண்ணி ஆகணும். பூர்ணாவை நல்லா பாத்துக்கிற யாராவது ஒருத்தர் இங்க வரணுமே…”  என்று தன் மனதில் யோசித்தவனுக்கு இப்பொழுது பூஜாவை அழைப்பதே தவிர வேறு வழி தெரியவில்லை.

யோசிக்காமல் தன்னுடைய பேண்ட் பாக்கட்டிலிருந்து   போனை எடுத்து பூஜாவை என்னை டயல் செய்தவன், இப்பொழுது சில நிமிடம் யோசிக்க ஆரம்பித்தான்.

“பூஜாவுக்கு வேற கல்யாணம் ஆயிடுச்சு.  இந்த நேரத்துல நாம அவளுக்கு போன் பண்றது சரியா வருமான்னு தெரியல. அதே சமயம் அவளோட புருஷன் பக்கத்துல இருந்தா  தேவை இல்லாம  பூஜாவுக்கு ஏதாவது பிரச்சனை வரும்.  ஹஸ்பண்ட கிட்ட என்ன பத்தி சொல்லி இருக்களான்னு வேற  தெரியலை.  நாமளே ஃபோன் பண்ணி அவ வாழ்க்கையை கெடுக்கிற மாதிரி ஆகிடக்கூடாது. இப்ப என்ன பண்றது…”  என்று அவளுக்கு போன் செய்யவும் முடியாமல், போன் செய்யாமல் இருக்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.

“இப்போ பூஜாவை விட்டா நமக்கு வேற வழி இல்ல. ஏன்னா பூஜா வீட்ல யாரோட நம்பரும் நம்மகிட்ட இல்ல. அப்படியே நாம போன் பண்ணி சொன்னாலும் அவங்களோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு எனக்கு தெரியல.  பூஜா கொஞ்சம் புத்திசாலியான பொண்ணு.   போன் பண்ணி விஷயத்தை சொன்னா  அங்க என்ன மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் கண்டிப்பா  அதை ஃபேஸ் பண்ணிப்பான்னு நம்புறேன். ஏன்னா இப்போ பூஜாவோட வாழ்க்கை எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு பூர்ணாவோட உயிரும் முக்கியம் தானே”  என்று தன் மனதில் நினைத்தவனோ மனதை கல்லாக்கி கொண்டு  அவளுக்கு போன் செய்து விட்டான்.

பூஜாவும் தன்னுடைய அம்மாவிடம் பேசிவிட்டு, படுக்கையறையில் தன்னுடைய போனை சார்ஜ் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தாள்.

தருண் குளித்து முடித்து வெளியே வரவும், சார்ஜரில் போடப்பட்டிருக்கும் பூஜாவின் போன் ரிங் ஆகவும் சரியாக இருந்தது.

குளித்து முடித்து தலையை துடைத்தபடியே வெளியே வந்தவன் காதில், பூஜாவின் போன் ரிங்டோன் விழுகவே, எதிர்ச்சியாக அவளின் போனின் திரையை கவனித்தான்.

அவளுடைய போனில் “மை லைஃப்….💕💕💕”  என்றும் அதன் அருகில் மூன்று ஹாட்டீன்கள் போட்டப்படியும் திரையில் கண்ணனுடைய எண் வந்தது.

“என்னது இது?? மை லைஃப்ன்னு பூஜா சேவ் பண்ணி இருக்காங்க.  இந்த நம்பர் யாரா இருக்கும்? ஒருவேளை அன்னைக்கு பூஜா அழுததுக்கும், இந்த நம்பருக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? என்று யோசித்தவன் பூஜாவின் போனில் திரையில் தெரியும் கண்ணனின் நம்பரை தன்னுடைய மொபைலில் போட்டு சேமித்து வைத்துக் கொண்டான்.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 21”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *