Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22

பூஜாவின் போனை சார்ஜரிருந்து எடுத்தவன், அதை வெளியே போய் அவளிடம்   கொடுத்தான்.

பூஜாவோ வெளியே வாசலில் உட்கார்ந்தபடியே, வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, அவளின் அருகில் போனவன் “இந்தாங்க பூஜா…. உங்க போன் ரொம்ப நேரம் ரிங் ஆகிட்டே இருக்கு” என்று சொல்லியபடியே அவளை நோக்கி அந்த போனை நீட்டினான்.

“எங்க அம்மாவா இருக்கும் தருண்… காலையில இருந்து ரெண்டு தடவை கூப்பிட்டுடாங்க. அவங்களுக்கு நான் அங்க இல்லாம நாளே போகல போல” என்று சொல்லியபடியே அவன் கையில் இருந்து போனை வாங்கி பார்த்தவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அவளுடைய போனின் திரையில் கண்ணனின் என்னை பார்த்தவளோ, அடுத்த நொடியே தருணின் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள்.

அவளுடைய போனின் திரையையும் தருணின் முகத்தையும் மாறி மாறி அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு என்ன செய்வது, என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஃபோனை எடுத்து பேசுவதா வேண்டாமா என்று யோசித்தவள், தருண் இந்த எண்ணை பார்த்திருப்பானா என்றும் யோசித்தாள்.

திருமணம் முடிந்ததும் கண்ணனின் எண்ணை அவளுடைய போனில் இருந்து டெலிட் செய்ய வேண்டும் என்று தான் நினைத்திருந்தாள்.

ஆனால் அடுத்தடுத்து நடந்த குழப்பங்களாலும், பிரச்சனைகளாலும் அதை அவள் மறந்தே போய்விட்டாள்.  அது மட்டும் இல்லாமல் கண்ணனின் குணத்தை பற்றி அவளுக்கு நன்றாகவே தெரியும்.  இன்னொருவனுக்கு மனைவியாகிய பின்னும் அவளுக்கு போன் செய்து எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டான் என்றே அவள் நினைத்திருந்தாள். அதனால் அவனுடைய எண்ணை அழிப்பது அவளுக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை. ஆனால் இப்பொழுது போன் செய்வான் என்று அவள் கொஞ்சம் கூட நினைத்து பார்க்கவில்லை.

“மை லைஃப்….”  என்ற வார்த்தையை பார்த்தவனுக்கு ஏற்பட்டிருந்த சந்தேகம் இப்பொழுது பூஜாவின் அதிர்ச்சியில் ஓரளவு உறுதியானது.

பூஜாவும் போனை அட்டென்ட் செய்யாமல் கொஞ்சம் டென்ஷனோடு அப்படியே உட்கார்ந்து இருக்க, கண்ணனின் போன் கட் ஆனது.

பூஜாவிற்கு “அப்பாடா….”  என்று இருக்க, அங்கே அவனுக்கு இருக்கும் பிரச்சனையில் மீண்டும் அவளுக்கு போன் முயற்சி செய்தான்.

போன் மறுபடியும் ரிங் ஆக ஆரம்பிக்க, மறுபடியும் அதிர்ச்சியில் தருணை பார்த்தாள்.

“என்ன பூஜா என்னோட முகத்தையே பாத்துட்டு இருக்கீங்க? போனை எடுத்து பேசுங்க. ஏதாவது முக்கியமான விஷயமா இருக்க போகுது”  என்று அவன் சொல்ல

“இல்ல தருண்…. இல்ல….. அப்படி எதுவும் முக்கியமான விஷயமா இருக்காது”  என்று அவள் தயக்கமாகவே உலரியபடியே சொன்னாள்.

“இல்ல பூஜா ஒரு தடவை கூப்பிட்டா கூட பரவால்ல. இதோட மூணாவது முறையா உங்களுக்கு கால் பண்றாங்க. அப்படின்னா கண்டிப்பா ஏதாவது முக்கியமான விஷயமா தான் இருக்கும். நீங்க முதல்ல அட்டென்ட் பண்ணி பேசுங்க” என்று அவனும் அவளை வற்புறுத்தினான்.

அவனிடம் என்ன பதில் சொல்வது என்றே தெரியாதவளோ, வேறு வழி இல்லாமல் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.

“ஹலோ….”  என்று பூஜா தயங்கியபடியே பேச,

“பூஜா உனக்கு எவ்வளவு தடவை கால் பண்றது? போனை எடுக்கவே மாட்டியா? முக்கியமான விஷயம்ன்னு தான அவ்வளவு முறை கூப்பிடுறேன்? ஏன் புரிஞ்சுக்கவே மாட்டேங்குற?” என்று அவனோ சத்தமாக பேச

“இப்போ என்ன முக்கியமான விஷயம் பேச போறீங்க? என்கிட்ட பேசுறதுக்கு உங்களுக்கு என்ன இருக்கு?”  என்று பூஜாவும் கோபமாக பேசினாள். இருக்காதா பின்பு? கல்யாண மண்டபத்தில் அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இன்னும் அவள் காதில் கேட்டு கொண்டே தானே இருக்கிறது.

“ஐயோ…. பூஜா… உங்க அக்கா இங்க தான் இருக்காங்க.  அவளுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சு….  இப்போ அவளை பாத்துக்க யாராவது லேடிஸ் வரணும்.  எனக்கு யாரை கூப்பிடறது…. என்ன பண்றதுன்னு எதுவுமே தெரியல.  சோ இந்த மாதிரி டைம்ல  உன்னை கூப்பிட்டு நான் டிஸ்டர்ப் பண்ண கூடாது தான். ஆனா எனக்கு வேற வழி தெரியல. உன்னை தவிர யாரை கூப்பிடறதுன்னு எனக்கு தெரியல பூஜா. உன்னால உடனே கிளம்பி வர முடியுமா?”  என்று கண்ணன் சொன்னதும் அவளுக்கு அது அதிர்ச்சியாக இருந்தது.

“என்ன சொல்ற? பூர்ணாவுக்கு ஆக்சிடென்ட்டா?”  என்று அவளோ அதிர்ச்சியாக கேட்டாள்.

“ஐயோ ஆமா பூஜா…. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வர முடியுமா?”  என்று அவனும் அவளை அவசரப்படுத்தினான்.

“என்னாச்சு அக்காவுக்கு? அக்கா இப்போ எப்படி இருக்கா? பூர்ணா எப்படி அங்க வந்தா? நீ எப்படி அவளை பார்த்த?”  என்று அடுக்கடுக்காக அவளோ நிறைய கேள்விகளை கேட்க

“இங்க பாரு பூஜா… உனக்கு எல்லாமே ஃபோன்ல சொல்ல முடியாது. கொஞ்சம் சீக்கிரம் கிளம்பி வா.. உனக்கு நான் மத்த எல்லா விஷயத்தையும் நேர்ல தெளிவா சொல்றேன்.  பூர்ணா பத்தி பேசுறதுக்காக தான் நான் உங்க கல்யாணம் அன்னைக்கு உங்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்னேன். ஆனா அதுக்குள்ள என்னென்னமோ நடந்திருச்சு.  இப்போ உன்னை கூப்பிடறதை தவிர வேற வழியே இல்ல பூஜா.  சாரி பூஜா….  சீக்கிரம் வரியா?” என்று அவன் கேட்டதும் சரி “சரி நான் உடனே கிளம்பி வரேன்” என்று சொன்னாள் அவள்.

பூஜாவின் அதிர்ச்சியையும், அவள் பேசிய சிறிய சிறிய வார்த்தைகளையும் வைத்து பூர்ணாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது என்பதை ஓரளவு புரிந்து கொண்டான் தருண்.

அவள் போனை வைத்ததும் “பூர்ணாவுக்கு என்ன ஆச்சு பூஜா?” என்று கேட்டான்.

“எனக்கும் எதுவுமே கிளியரா தெரியல தருண்.  அக்காவுக்கு ஆக்சிடென்ட் ஆயிடுச்சுன்னு சொல்றாங்க. அவளைப் பார்த்துக்க உடனே வர சொல்றாங்க” எனக்கு எதுவுமே புரியல என்று பூஜா சொன்னதும்

“என்ன சொல்ற பூஜா? யார் சொன்னாங்க? எங்க வர சொல்றாங்க? தெளிவா சொல்லுங்க. அப்போ தானே நம்மளால எதுவும் செய்ய முடியும்?”  என்று அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று அவளுக்கு தெரியவில்லை.

“இல்ல தருண்….  அட்ரஸ் இப்போ அனுப்புறேன்னு சொன்னாங்க. உடனே கிளம்பி வர சொன்னாங்க”  என்று அவளும் கண்ணன் பெயரை மட்டும் மறைத்து மற்ற எல்லா விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“எல்லாம் சரி பூஜா…. நீங்க சொன்னாங்க சொன்னாங்கன்னு சொல்றீங்களே தவிர, யாரு சொன்னாங்கன்னு சொல்ல மாட்டேங்கிறீங்க… ஒருவேளை தப்பான தகவலை  நம்பி நாம எங்கேயும் போய் மாட்டிக்க கூடாது இல்லையா? அதுக்காக தான் கேட்கிறேன்”  என்று தருண் சொன்னதும்

“இல்ல தருண்….” என்று சொன்னவளோ என்ன சொல்வது என்று தெரியாமல் குழம்பி கொண்டிருந்தாள்.  அவளுக்கு கண்ணனை பற்றி அவனிடம் எப்படி சொல்வது என்ற தயக்கம் தான்.  ஆனால் பயம் இல்லை.

அவளோ அமைதியாகவே இருக்க, அவளின் தயக்கத்தை புரிந்து கொண்டவனும்,  இதற்கு மேல் அவளை வற்புறுத்தக் கூடாது என்பதை உணர்ந்து “சரி பூஜா…. அட்ரஸ் அனுப்பிட்டாங்களான்னு பாருங்க…. நாம கிளம்பி போகலாம்” என்று சொன்னான்.

அவளோ தன்னுடைய போனை லாக் எடுத்து பார்த்தாள், அவனும் வாட்ஸ் அப்பில் அவர்கள் இருக்கும் மருத்துவமனையின் முகவரியை அனுப்பி இருந்தான்.

அந்த whatsapp சாட்டில் ஏற்கனவே அதில் பேசியிருந்த விஷயங்கள் எதுவுமே டெலிட் செய்யப்படாமல் அப்படியே இருந்தது. அதையும் தருண் கவனிக்க தவறவில்லை.

“அனுப்பிட்டாங்க தருண்…”  என்று சொன்னவளோ அந்த மருத்துவமனையின் முகவரியை அவனிடம் சொன்னாள்.

“சரி வாங்க பூஜா கிளம்பலாம்…”  என்று சொன்னவனும் தேவையான பொருள்களை எல்லாம் எடுத்து வைக்க உள்ளே போக, “இல்லை தருண் நீங்க எதுக்காக வரணும்? நான் மட்டுமே போய் பார்த்துகிறேன்”  என்று சொன்னாள் அவள்.

“அது எப்படி பூஜா உங்களை மட்டும் தனியா அனுப்ப முடியும்? அதுவும் அவ்வளவு தூரம்???  கண்டிப்பா நானும் உங்க கூட வருவேன்.  நீங்க உங்க அக்காவ பாத்துப்பீங்க…உங்களை யாரு பார்த்துப்பா? உங்களுக்கு ஏதாவது  தேவை இருந்தா கண்டிப்பா உங்களுக்கு ஹெல்ப் பண்ண யாராவது வேணும்.  எல்லாத்தையும் உங்க ஒருத்தராலேயே செய்ய முடியாது” என்று தருணோ விடாமல் பேசினான்..

இதற்கு மேலும் அவனை அவாய்ட் செய்ய முடியாது என்பதை உணர்ந்தவளோ அமைதியாகி விட்டாள்.

அவர்களுக்கு தேவையான பொருட்களை எல்லாம் எடுத்து வைத்துக் கொண்டவர்கள், காரில் கிளம்பினார்கள்.

“இப்போ எதுக்கு தருண் நாம கார்ல போறோம்?  பஸ்லையே போலாமே…”  என்று அவளோ சொல்ல

“இல்ல பூஜா…. நாம ஹாஸ்பிட்டல் போறோம்…. சோ அங்க ஏதாவது வேணும்னா நமக்கு வண்டி தேவைப்படும். அந்த நேரத்துல நமக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்கும். அதனால தான்” என்று சொன்னான் அவன்.

“இல்ல கார்ல போனா பணம் நிறைய செலவாகுமே…. அதனால தான் சொன்னேன்” என்று பூஜா சொன்னதும் “அதெல்லாம் பரவால்ல பூஜா… பாத்துக்கலாம். என்கிட்ட இப்போ எந்த பொருளும் இல்லை…. இந்த கார் மட்டும் தான் இருக்கு. இது  எங்க அப்பா அம்மா கார்.  இந்த  கார்ல போகும் போது தான் அவங்களுக்கு ஆக்சிடன்ட் ஆச்சு. அதுக்கு அப்புறம் நான் தான்  அவங்க நியாபாகமா இந்த காரை மறுபடியும் சரி பண்ணி யூஸ் பண்ணீட்டு இருக்கேன். இது ஆக்சிடன்ட் ஆன கார் அப்டிங்கிறதால மட்டும் தான் இந்த கார் மேல அவங்க பெருசா இன்ட்ரஸ்ட் காட்டல.   அதனால தான் இந்த காரை என்கிட்ட விட்டு வச்சிருக்காங்க. இல்லன்னா இதையுமே என்கிட்ட இருந்து வாங்கி இருப்பாங்க” என்று அவனோ வருத்தமாக சொன்னான்.

அவனுடைய வேதனை அவளுக்கு நிறையவே புரிந்தது.  இருந்தாலும் இப்பொழுது அவள் மாட்டியிருக்கும் சூழ்நிலையை எப்படி சமாளிப்பது என்றுதான் அவளுக்கே தெரியவில்லை.

பூஜாவுக்கு கண்ணனை பற்றி அவனிடம் சொல்ல வேண்டும் என்றே தோன்றியது. ஆனால் எப்படி ஆரம்பிப்பது? என்னவென்று சொல்வது? என்று தான் அவளுக்கு எதுவுமே புரியவில்லை.

அங்கே தன்னுடைய அக்காவின் நிலை என்னவாக இருக்கும்? கண்ணனை பார்க்கும் பொழுது அவளின் மனநிலை என்னவாக இருக்கும்? கண்ணனுடைய மனநிலை என்னவாக இருக்கும்? கண்ணனும் தருணும் சந்தித்துக் கொள்ளும் பொழுது என்னவெல்லாம் நடக்கும்? என்று ஒவ்வொரு விஷயத்தையும் யோசித்துக் கொண்டே அந்த காரில் பயணம் செய்து கொண்டிருந்தாள் பூஜா.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 22”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *