Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23

தருண், பூஜா இருவரும் காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொழுது கண்ணனிடமிருந்து அவளுக்கு போன் வந்தது.

“ஹலோ பூஜா கிளம்பிட்டீங்களா?” என்று கேட்டான் கண்ணன்.

“ம்ம்ம்…கிளம்பிட்டேன்”  என்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டாள் அவள்.

“எப்படி வரீங்க பூஜா? பஸ்ஸா இல்லை ட்ரைனா?”  என்று அவன் கேட்டிட “இல்ல…. தருண் கூட கார்ல தான் வரேன்” என்று அவள் சொன்னதும் அவளுடைய கணவனின் பெயர் தருண் என்பதையும் அவளுடைய கணவனும் இப்போது அவளுடன் வருகிறான் என்பதையும் புரிந்து கொண்டான் அவன்.

“ஓகே பூஜா…. சீக்கிரமா வாங்க” என்று சொன்னவன் போனை வைத்து விட்டான்.

இவ்வளவு நேரமும் அந்த 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி தான் பூர்ணாவை பார்த்து கொண்டிருந்தார். அவளுக்கு தேவையான எல்லா விஷயங்களை அவர்தான் செய்து கொண்டிருந்தார்.

அவ்வபோது பூர்ணாவை எட்டி எட்டி பார்த்துக் கொள்வான் அவன்.

பூஜா வரும் விஷயத்தை பூர்ணாவிடம் சொன்னால், அவள் கொஞ்சமாவது நிம்மதியாக இருப்பாள் என்று நினைத்தவனோ அந்த பெண்மணியை வெளியே அழைத்தான்.

“சொல்லுப்பா…..”  என்று அந்த பெண்மணி கேட்கவும்,

“அம்மா…. அவங்களோட தங்கச்சி பூஜா அவங்கள பாத்துக்க வராங்கன்னு சொல்லுங்க.”  என்று அவரிடம் சொல்லி அனுப்பினான்.

“ஹோ…. அவங்க வீட்டு ஆளுங்க ஊர்ல இருந்து வந்துட்டாங்களா? சரிப்பா… நான் அந்த பொண்ணு கிட்ட சொல்லிடுறேன்” என்று சொன்னவரும் பூர்ணாவின் அருகில் போய் “பாப்பா…. உன்னோட தங்கச்சி உன்னை பார்த்துக்க வர்றதா  உன்னோட வீட்டுக்காரர் சொல்லி விட்டாரு”  என்று சொன்னார்.

“எனது பூஜா வர்றாளா?”  என்று தன் மனதில் நினைத்தவளும் வெளியே எட்டி பார்க்க, அங்கே கண்ணன் நின்று கொண்டு, ஆமாம் என்பது போல் தலையை அசைத்தான்.  அதை வைத்தே புரிந்து கொண்டாள், பூஜா தன்னை பார்க்க வருவதையும்,  இந்த அம்மா வீட்டுக்காரர் என்று  சொன்னது கண்ணனை தான் என்பதையும்…

“அம்மா என்னோட தங்கச்சி எப்போ வருவான்ன்னு கேட்டு சொல்றீங்களா? இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்?”  என்று அவள் அத்தனை கஷ்டத்திலும் அவ்வளவு ஆர்வமாகவும் சந்தோஷமாகவும் கேட்டாள்.

“ஏம்மா உன்னோட தங்கச்சியை பார்க்க இவ்வளவு ஆர்வமா கேக்குற?”  என்று அந்த பெண்மணி கேட்டதும்

“இல்லம்மா எங்க வீட்ல யாரும் என் கூட பேசறது இல்ல. எல்லாரையும் நான் பார்த்தே ரொம்ப நாளாச்சு. அதனால தான் கேட்டேன். இப்போ எனக்கு ஆக்சிடென்ட்ன்னு சொன்னதும் என்னை பார்க்க வர்றா போல” என்று பூர்ணா சொல்லிட,

“என்னம்மா சொல்ற? உங்க வீட்ல யாரும் உன் கூட பேசறது இல்லையா? அப்போ நீங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா? உங்க வீட்ல  உங்க ரெண்டு பேரையும் ஏத்துக்கலையா?”  என்று அந்த பெண்மணி கேட்ட கேள்விக்கு பூர்ணாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை.

அவளால் இல்லை என்று அதற்கு மறுப்பு சொல்லவும் முடியவில்லை, அதே சமயம் அந்த வார்த்தை அவளை ஏதோ செய்தது என்று தான் சொல்ல வேண்டும்.

பூர்ணாவோ அமைதியாய் இருக்க, “ஆனால் அந்த பையன் உன்னை நெனச்சு ரொம்ப தவிச்சுப் போயிட்டான்.  உன்னை பாத்துக்க  யாரும் இல்லன்னதும் என்ன பண்றதுன்னு தெரியாம தவிச்சி போய் இருந்தான். நான் தான் உங்க வீட்டு ஆளுங்க யாராவது வரவரைக்கும் உன்னை பார்த்துக்கிறேன்னு சொன்னேன். அதுக்கு அப்புறம் தான் அந்த பையன் கொஞ்சம் நிம்மதியா இருந்தான். பரவால்ல ஓடி வந்து கல்யாணம் பண்ணாலும் நல்ல பையனா தான் கல்யாணம் பண்ணி இருக்க. உனக்கு ஒன்னுன்னா துடிச்சு போயிடுறான். காலையில இருந்து வெளியவே தான் நின்னுட்டு இருக்கான். உன்னை எட்டி எட்டி பார்த்துட்டே இருக்கான்.”  என்று பூர்ணாவிடம் கண்ணனை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி.

இந்த வார்த்தை எல்லாம் கேட்கவே பூர்ணாவிற்கு சந்தோஷமாக இருந்தது.  தான் நம்பி வந்த ஒருவன் தன்னை ஏமாற்றி விட்டாலும், இப்பொழுது இவன் தனக்காக நிற்கிறானே என்று எண்ணம் அவள் மனதில் ஓடிக் கொண்டுதான் இருந்தது.

ஆனால் அதே சமயம் பூஜாவை காதலித்தவனாயிற்றே…  பூஜா இப்பொழுது இங்கே வரும் பொழுது இருவரின் மனநிலை என்னவாக இருக்கும் என்பதையும் பூர்ணா தன் மனதில் போட்டு குழப்பிக் கொள்ள ஆரம்பித்து விட்டாள்.

தான் செய்த தவறால் தான் தன் தங்கையின் வாழ்க்கை இப்படியாகிவிட்டது. கண்ணன் போல் ஒருவன் அவளுக்கு கணவனாக அமைய கொடுத்து வைக்கவில்லை என்ற வருத்தம் அவளின் மனதில் இருந்தாலும், பூஜாவிற்கு கிடைக்காததால் தான் கண்ணன் இப்பொழுது தனக்கு கிடைக்கப் போகிறான் என்று சுயநலமாகவும் அவளுடைய மனது யோசிக்க ஆரம்பித்தது.

சிறு வயதிலிருந்து  பூர்ணா இப்படி தான். ஆனால்  பூஜாவோ இரக்க குணம் உடையவள். யாராவது உதவி என்று கேட்டால் எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் செய்துவிடுவாள். அதனால் என்னவோ சில வருடங்களுக்கு முன்பு ஒரு கணவன் மனைவிக்கு விபத்து ஏற்பட்டதும் தன் கழுத்தில் இருந்த செயினை விற்று மருத்துவமனைக்கு பணம் கட்டினாள். அதேபோல் தன் மனம் அறிந்து யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டாள். முக்கியமாக தன்னுடைய குடும்பத்திற்குள் சுயநலமாக ஒருபோதும் யோசிக்க மாட்டாள்.

பூர்ணாவும் ஏறக்குறைய பூஜாவின் குணம் தான். ஆனால் சில சமயங்களில் மட்டும் தனக்கு வேண்டிய பொருள் மீது அதிக அளவில் சுயநலம் காட்டுவாள்.

இப்பொழுது அவளின் சுயநலம் கண்ணன் மேல் திரும்பி உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

ஆரம்பத்திலிருந்து கண்ணன் அவளை அனுகிய விதமும், அவளிடம் பேசிய வார்த்தைகளும் அவளிடம் காட்டிய உரிமையும், அக்கறையும் அவளை ஏதோ செய்தது.  இருந்தாலும் இந்த உணர்வு காதல் தானா என்று அவளுக்குத் தெரியவில்லை.

சில மணி நேர பயணத்தில் பூஜாவும் தருணும் அந்த மருத்துவமனையை அடைந்து விட்டார்கள். பூர்ணா இருக்கும் அந்த வார்டின் வாசலில் பூஜா, தருண், கண்ணன் மூன்று பேரும் சந்தித்துக் கொண்டார்கள்.

தருணுக்கு கண்ணனை பற்றி துல்லியமாக எந்த விஷயமும் தெரியாமல் இருந்தாலும், ஏதோ ஒரு சந்தேகம் அவன் மனதில் ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.

பூஜாவும் கண்ணனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பிறகு, அவர்கள் இருவரின் ஒவ்வொரு சின்ன சின்ன முக அசைவுகளையும் அவன் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான்.

பூஜாவும் தருணும் கண்ணனை நோக்கி வரும்பொழுது, கண்ணனும் வேகமாக அவர்களை நோக்கி ஓடிச் சென்று “பூஜா…. உங்க அக்கா அந்த ரூம்ல தான் இருக்காங்க”  என்று சொன்னான்.

கண்ணனிடம் அவளுக்கு நிறைய கேட்கவும் தோன்றியது, நிறைய பேசவும் தோன்றியது.  ஆனால் அதற்கு இது சரியான நேரம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள் அவள்.

உண்மையை சொன்னாள் பூஜா வேறு ஒருவனுக்கு சொந்தமான பிறகு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து கொள்வதே தவறு என்றே இருவரும் நினைத்தார்கள்.

கண்ணன் சொன்னதும் தன் அக்காவை பார்க்க ஓடி சென்றாள் பூஜா.

தன்னுடைய அக்காவின் அந்த நிலைமையை பார்த்தவளோ மனது பொறுக்காமல் அழுதே விட்டாள்.

“ஏன் இப்படி பண்ண? உனக்கு என்னதான் ஆச்சு? என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்லக்கா?”  என்று தன் அக்காவின் கன்னத்தில் கைவைத்து தடவிய படியே சொன்னவள் அழுக, அதை பார்த்த பூர்ணாவும் அழுது விட்டாள்.

“என்னோட நிலைமையை விடுடி.  ஆனால் உன்னோட வாழ்க்கை இப்படியாக  நானே காரணம் ஆயிட்டேன்”  என்று பேச முடியாமல் மெதுவாக சொன்னால் பூர்ணா.

இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கும் போதே செவிலியரின் அனுமதியோடு கண்ணனும் தருணும் அங்கே வந்து விட்டார்கள்.

தருணை அடையாளம் தெரியாதவளோ கண்ணன் உள்ளே வந்ததும், பூஜாவை பார்த்து “ஏன் பூஜா… நீயும் கண்ணனும் ….” என்று அவர்களை பற்றி சொல்ல ஆரம்பிக்க, அதை சொல்ல வருவதை முன்பே யூகித்துக் கொண்ட கண்ணனும் “பூர்ணா இவர் தான் தருண்… பூஜாவோட ஹஸ்பண்ட்”  என்று தருணை அவளிடம் அறிமுகப்படுத்தி வைத்தான்.

கண்ணன் மறைமுகமாக சொல்ல வரும் விஷயத்தை புரிந்து கொண்ட பூர்ணாவோ, இவர்களின் காதல் விஷயத்தை பற்றி பேசாமல் விட்டு விட்டாள்.

பூர்ணாவை மனக்கோலத்தில் ஏற்கனவே மண்டபத்தில் பார்த்த தருணோ, இப்பொழுது இந்தக் கோலத்தில் பார்க்க மிகவும் வருந்தினான்.

“உங்களுக்கு என்ன ஆச்சு பூர்ணா? எதுக்காக இங்க வந்தீங்க? இதெல்லாம் இப்ப கேக்கலாமான்னு எனக்கு தெரியல. இருந்தாலும் உங்க நிலைமையை பார்க்கும் பொழுது மனசு தாங்கல. அதனால் தான் கேட்டேன்”  என்று தருண் சொன்னதும் “பூர்ணா…. நீ எதுக்காக கல்யாணத்துல இருந்து ஓடி வந்த?  இப்போ எப்படி உனக்கு ஆக்சிடென்ட் ஆச்சு?”  என்று பூஜாவும் கேட்டாள்.

“சாரி பூஜா… என்ன மன்னிச்சிடு… அம்மாவும் அப்பாவும் என்னை மன்னிச்சு ஏத்துப்பாங்களான்னு தெரியல. நீயாவது என்னை பார்க்க வந்தீயே… அதுவே எனக்கு சந்தோஷம் தான்” என்று கண்ணீரோடு சொன்னாள் பூர்ணா.

“அதெல்லாம் சரி தாக்கா….  நீ எதுக்காக கல்யாணத்துல இருந்து ஓடி வந்த?  இப்போ எப்படி உனக்கு இப்படி  ஆச்சு? இதெல்லாம் எனக்கு இப்ப தெரிஞ்சாகனும்” என்று பூஜா சொன்னதும் பூர்ணாவோ பேச ஆரம்பித்தாள்.

“பூஜா…. நான் ஒரு பையனை லவ் பண்னேன். ஆனால் என்னோட விருப்பத்தை கேட்காமயே அப்பாவும் அம்மாவும் கல்யாணம் முடிவு பண்ணிட்டாங்க. அப்போ கூட  வீட்ல வந்து பேச சொல்லி நான் அவர்கிட்ட சொன்னேன். ஆனா அவரு இப்போதைக்கு கல்யாணம் வேண்டாம்னு அவாய்ட் பண்ணிட்டு இருந்தாரு. நானும் நிறைய முறை நேர்ல அவரை பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொன்னேன். ஆனா அப்போ கூட அவரு என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு அவாய்ட் பண்ணிட்டே தான் இருந்தாரு. கொஞ்ச நாள் போகட்டும்ன்னு சொன்னாரு.  கல்யாண மண்டபத்துல இருந்து வர  வரவேண்டாம்னு சொன்னாரு. ஆனா நான் தான் செழியனை  கல்யாணம் பண்ணிக்க பிடிக்காம   ஓடி  வந்துட்டேன். மண்டபத்துல இருந்து கிளம்புனதும் அவர பார்த்து பேசினேன். ஆனா அந்த நிலைமையில் கூட என்னை அவரு ஏத்துக்கல. இப்ப கல்யாணம் பண்ணிக்க முடியவே முடியாதுன்னு உறுதியா சொல்லிட்டாரு. அப்புறம் வேற வழி இல்லாம தான் நான் இங்க வந்தேன்” என்று பூர்ணா சொன்னதும்

“இப்படி சொன்னா எப்படி பூர்ணா. நீங்க யாரை லவ் பண்ணீங்க? எதுக்காக அவர் உங்களை வேண்டாம்ன்னு சொன்னாரு? இந்த நிலைமையில் கூட உங்களை அவரு பார்க்க வரலையா?”  என்று தருண் கேட்டான்.

“அவரு பேரு கிஷோர். பெரிய பணக்காரர். நிறைய கம்பெனிஸ் ரன் பண்ணீட்டு இருக்காரு. ஒரு நாள் வேலை விஷயமா என்னோட கம்பெனிக்கு  வந்தாரு. அப்போ இருந்து தான் எனக்கு அவரை தெரியும்.” என்று சொன்னாள் பூர்ணா.

2 thoughts on “மயங்கினேன் நின் மையலில்… அத்தியாயம் 23”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *