“எங்களுக்கு இந்த கல்யாணத்துல சம்மதம். உங்க பொண்ணுக்கு சம்மந்தமான்னு ஒரு வார்த்தை கேட்டுக்கோங்க” என்று அறிவழகன் சொன்னதும்
“பூர்ணா அவங்க அப்பாவோட செல்லம். அவங்க அப்பா என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுப்பா. ஆனா நான் சொல்றதை தான் ரெண்டு பொண்ணுங்களும் கேட்க மாட்டாங்க. அவங்க அப்பா சொல்றத தட்டவே மாட்டாங்க. இந்த பிள்ளைங்களுக்கு அப்பா தான் உயிர்.” என்று தன் மனதில் உள்ளவற்றை வெகுளியாக வெளிப்படையாய் சொன்னார் பார்வதி.
அதைக் கேட்டு சிரித்த செல்வியோ “நிச்சயதார்த்தம் கல்யாணத்துக்கு முன்னாடி நாள் நைட் வச்சுக்கலாம். சோ கல்யாண தேதி குறிச்சிடலாமா?” என்று கேட்டார்.
“அதைத்தான் நாங்களும் நினைச்சோம். எங்க சொந்தக்காரங்களை ரெண்டு முறை அலைய வைக்க முடியாது இல்லையா? அதனால கல்யாணம் கிராண்டா வைக்கும் போது நிச்சயம் வெச்சுக்குறது நல்லது தான்” என்று சொன்னார் மெய்யரசன்.
“அடுத்த மாசமே ஒரு நல்ல முகூர்த்தம் வருது. அதுலயே கல்யாணம் வச்சுக்கலாமா?” என்று செல்வி கேட்க இறுதியாக ஒரு மாத இடைவெளியில் திருமண தேதி குறிக்கப்பட்டது.
செழியனும் மனது நிறைய கல்யாண கனவோடும், பூர்ணாவின் நினைவோடும் அந்த வீட்டை விட்டு வெளியே போனான்.
“பொண்ணே பார்த்து முடிச்சாச்சு. என்ன நம்மாளை இன்னும் காணோம்” என்று வீட்டிற்க்குள் எட்டி எட்டி பார்த்தபடியே வெளியே போனான் கண்ணன்.
அப்பொழுது மொட்டை மாடியில் நின்றபடி கண்ணனை பார்த்துக் கொண்டிருந்தாள் பூஜா.
ஆனால் கண்ணனோ மேலே பார்க்காமல் வீட்டிற்குள் எட்டி பார்ப்பதை கவனித்தவளோ அவனுக்கு போன் செய்தாள்.
“டேய் லூசு… நான் வீட்டுக்குள்ள இல்ல. மொட்டை மாடியில நிற்கிறேன் .மேல பாரு” என்று சொன்னாள்.
“ஏன்டி… உன்னை பார்க்க தான நான் வந்தேன். ஆனா நீ வெளியேவே வரல” என்று அவன் எரிச்சலாக சொல்ல
“அது ஒரு பெரிய கதை டா… அத நான் அப்புறம் சொல்றேன். எனக்கு இந்த சாரி எப்படி இருக்கு?” என்று கேட்டாள்.
“அடிப்பாவி இங்கிருந்து உன்னோட முகமே சரியா தெரியலடி… என்கிட்ட போய் சாரி எப்படி இருக்குன்னு கேட்கிற?” என்று அவனும் அலுத்து கொள்ள
“சரி இரு கீழ இறங்கி வரேன்” என்று சொன்னவளோ வேகவேகமாக கீழே இறங்கி போனாள்.
கண்ணனின் குடும்பம் காரில் ஏறப்போகும் தருணத்தில் பூஜாவோ வெளியில் ஓடி வர, கண்ணன் அவளின் அழகை பார்த்து அசந்து தான் போனான்.
“அடிப்பாவி இவ்வளவு முறை நாம மீட் பண்ணும் போது உன்னை சாரியில வர சொல்லி கெஞ்சி இருப்பேன். அப்போ எல்லாம் சாரில வராம, இன்னும் ரெண்டு செகண்ட்ல இங்கிருந்து கிளம்பிருவேண்டி… இப்ப போய் சாரில வந்து என்னை பாடா படுத்துரியே டி…. உன்னை இப்படி பார்க்கும்போது பார்த்துகிட்டே இருக்கணும்னு தோணுது. ஆனா என்னால இப்போ நல்லா கூட பார்க்க முடியாதே” என்று தன் மனதில் நினைத்து புலம்பியவனோ ஓரக்கண்ணில் அவளை பார்த்தபடியே பார்த்தும் பார்க்காதவன் போல் காரில் ஏறப் போனான்.
பூஜாவின் குடும்பம் அவர்களை வழியனுப்ப வெளியே நின்று கொண்டிருக்க, அப்பொழுது பூஜாவை பார்த்த செல்வியோ “இந்த பொண்ணு யாருங்க?” என்று கேட்டார்.
அப்பொழுது தான் பூஜா நிற்பதை கவனித்த பார்வதி “இது என்னோட இரண்டாவது பொண்ணுங்க. பூர்ணாவோட தங்கச்சி” என்று சொன்னதும்
“அப்படியா….? உங்க சின்ன பொண்ணும் பூர்ணா மாதிரியே பார்க்க லட்சணமா இருக்கா” என்று சொல்லியவர் அவர்களிடம் விடைபெற்று கிளம்பி விட கண்ணனுக்கு பூஜாவை பார்த்துக் கொண்டே இருக்கணும் போல் தோன்றியது.
ஆனாலும் வேறு வழி இல்லை. காரில் ஏறி பூஜா கண்களை விட்டு மறையும் வரை ஓர கண்ணில் அவளையே பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
இவர்கள் எல்லோரும் வாசலில் சந்தோஷமாக மாப்பிள்ளை வீட்டுக்காரர்களை வழி அனுப்பி வைத்துக் கொண்டிருக்க, உள்ளே பூர்ணாவோ அறையில் உட்கார்ந்து அழுது கொண்டிருந்தாள்.
அன்று இரவு பூர்ணா அறையில் தனியாக உட்கார்ந்து மனதுக்குள் அழுது கொண்டிருக்க, அப்பொழுது அங்கே வந்த பூஜாவோ “என்னக்கா? இன்னைக்கு வேலைக்கு கிளம்பலையா?” என்று கேட்டாள்.
“என்னடி இவ்ளோ அசால்டா கேட்கிற? உன்கிட்ட நான் என்ன சொன்னேன்? எனக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கூட கேட்க்காம கல்யாண தேதியே குறிச்சுட்டாங்க” என்று அவளும் கலங்கிய கண்களோடு சொல்ல
“என்னக்கா நீ இன்னும் இப்படி பேசிட்டு இருக்க? நம்மளோட குடும்ப சூழ்நிலையை பத்தி உனக்கு நல்லாவே தெரியும். நாம ரெண்டு பேரும் வேலைக்கு போக ஆரம்பிச்சதுக்கு அப்புறமா தான் நாம ஓரளவுக்கு வசதியாவே இருக்கோம். அப்படி இருந்துமே நம்மளால இன்னும் மேல வர முடியல. இப்போ தான் நம்மளோட அடிப்படையே தேவைகளையே பூர்த்தி பண்ணிட்டு இருக்கோம். அப்படி இருக்கிற சமயத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்களை பாத்தியா? நம்ம கிட்ட வரதட்சணை எதுவுமே கேட்கல. அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சு போயிடுச்சுக்கா. அவங்களுக்கு பணம் முக்கியம் இல்ல. உன்னை மாதிரி ஒரு நல்ல பொண்ணு தான் முக்கியம். அப்படி இருக்கும்போது கண்டிப்பா உன்னை அவங்க நல்லா பாத்துப்பாங்க. உன்னோட கனவுக்கு அவங்க ஒரு தடையா இருக்கவே மாட்டாங்க” என்று பூஜா அவள் தரப்பு நியாயத்தை பூர்ணாவிற்கு எடுத்துச் சொன்னாள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் கண்ணனை அவள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக பூர்ணாவுக்கு இப்படி அறிவுரை சொல்லவில்லை. கண்ணனின் குடும்பத்தை குடும்பத்தை பற்றி அவளுக்கு ஓரளவு முன்பே தெரிந்திருந்தது. ஆனால் இன்று நடந்த விஷயத்தில் அவர்களின் குடும்பம் எத்தகையது என்பதை அவள் புரிந்து கொண்டாள். அப்படி ஒரு குடும்பத்தில் தன்னுடைய அக்கா வாழும் பொழுது நிம்மதியாக வாழ்வாள் என்று நினைத்தே இப்படி பேசினாள்.
பூஜா சொல்வதை எல்லாம் கேட்ட பூர்ணாவோ இதற்கு மேல் பூஜாவிடம் பேசுவது பயனற்றது என்பதை புரிந்து கொண்டாள்.
“சரிடி… போய் தூங்கு” என்று சொல்லிய பூர்ணா போர்வையை மூடி படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து பூஜா தூங்கிவிட்டதை உறுதி செய்தவள் தன்னுடைய போனை எடுத்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் மொட்டை மாடிக்கு போனாள்.
தன்னுடைய போனிலிருந்து யாருக்கோ போன் செய்தவள் “நான் தான் நேத்து நைட்டே சொன்னேன்ல. இன்னைக்கு கல்யாண தேதியே குறிச்சிட்டாங்க. என்னால எதுவுமே பண்ண முடியல. எங்க அப்பா கிட்ட போய் உண்மையை சொல்றதுக்கு எனக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. அதை எல்லாரும் எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியல. எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவளுடைய அலைபேசியில் சிறிது நேர உரையாடலுக்குப் பிறகு தன்னுடைய இரு கண்களையும் துடைத்து கொண்டு அறையில் வந்து படுத்துக் கொண்டாள்.
பூர்ணாவிற்கும் செழியனுக்கும் கல்யாண தேதி குறிக்கப்பட்டதில் பூஜாவிற்கு அதீத ஆனந்தம் ஆயிற்று.
தனக்குத் தெரிந்தவர்களை அழைக்க தனக்கும் தனியாக 50 திருமண பத்திரிகைகள் வேண்டும் என்று அடம் பிடித்து பூஜா பத்திரிகைகளை எடுத்து தன்னுடைய கைப்பையில் வைத்துக் கொண்டாள்.
தன்னுடைய அலுவலகம் போனதும் தனக்குத் தெரிந்த எல்லோரிடமும் தன் அக்காவின் திருமண பத்திரிகையை கொடுத்து அவர்களை திருமணத்திற்கு வரவேற்றாள்.
ஜமுனா, எம் டி தருண், என்று முக்கியமானவர்களுக்கு எல்லாம் பத்திரிகை வைத்தவள் கிஷோரை மட்டும் கவனிக்காமல் விட்டு விட்டாள்.
தான் எடுத்துப் போன 50 பத்திரிகைகளில் கிட்டத்தட்ட 30 பத்திரிகைகளை தன் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களுக்கு கொடுத்தாள்.
பத்திக்கைகளை எல்லாம் ஒரு வழியாக குடுத்து முடித்து ஓய்ந்தவள் ஒரு வழியாக அசதியுடன் தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தாள்.
காலையில் இருந்து பத்திரிக்கை கொடுப்பதில் அதீத பிசியாக இருந்தவள், அலுவலகத்தில் இப்போது தான் தன்னுடைய வேலையை ஆரம்பிக்க கணினியை ஆன் செய்தாள்.
கணினி திறந்ததும் அதில் எப்போதும் தேதியும் நேரமும் பார்ப்பது பூஜாவின் வழக்கம்.
அப்படி அன்றும் கணினியின் மூலையில் இருக்கும் தேதியையும் நேரத்தையும் பார்த்தவளின் முகம் வாடி போனது.
சிறுது நேரம் ஏதோ யோசனையில் ஒரே இடத்தை வெறித்து பார்த்தபடியே உட்கார்ந்திருந்தாள்.
அப்போது பூஜாவின் முகத்தை எதிர்ச்சியாக பார்த்த ஜமுனாவோ “என்னடி ஆச்சு? என்ன யோசிக்கிற?” என்று கேட்டாள்.
“இல்லைடி… நாலு வருஷம் முன்னாடி இந்த நாள்ல ஒரு பெரிய சம்பவம் நடந்தது. அதான் சிஸ்டம்ல டேட் பாத்ததும் அந்த நியாபகம் வந்துருச்சு” என்று சொன்னாள் பூஜா..
“அப்படி என்னடி ஆச்சு?” என்று ஜமுனா கேட்டதும் பூஜா அன்று நடந்ததை சொல்ல ஆரம்பித்தாள்.
“நாலு வருஷம் முன்னாடி, நான் வேலை தேடிட்டு இருந்த டைம்டி அதை… அன்னைக்கு காலையில நான் ஒரு கம்பனிக்கு இன்டர்வியூ போய்ட்டு இருந்தேன். அப்போ ஒரு பெரிய காஸ்ட்லி கார் டி… அது என் கண்ணு முன்னாடியே ஆக்சிடன்ட் ஆகிருச்சு. ரெண்டு பேர் டி… ஹஸ்பண்ட் அண்ட் வைப் போல… அடி பட்டு துடிச்சுட்டு இருந்தாங்க. அந்த இடத்துல வேற யாருமே இல்லை. எனக்கு வேற என்ன பண்றதுன்னே தெரியலை. தனியா இருந்ததுனால எனக்கு என்ன பண்ணனும்ன்னு கூட தெரியலை. ஒரு வழியா நானும் கொஞ்சம் இயல்பு நிலைமைக்கு வந்து நானே ஆம்புலன்ஸ்க்கு போன் பண்ணி அவங்களை பக்கத்துல இருந்த ஒரு பிரைவேட் ஹாஸ்பிட்டல்ல சேர்த்தேன். அங்க பேஷண்ட்டை உள்ள அட்மிட் பண்ணவே ஒருத்தருக்கு இருபதாயிரம் கட்ட சொல்லீட்டாங்க. எனக்கு எதுவுமே புரியலை. அப்போ காலையில அம்மா சாப்பாட்டுக்கு குடுத்த 100ரூபாய் மட்டும் தான் என் கையில இருந்தது. அந்த நேரத்துல ரெண்டு உயிரை காப்பாத்துறதை விட எனக்கு வேற எதுவும் முக்கியமா தெரியல. அதுனால எங்க அப்பா, எனக்கும் அக்காக்கும் ஒரே மாதிரி வாங்கி கொடுத்த Pன்னு இனிஷியல் டாலர் போட்ட செயினை வித்து, அன்னைக்கு அவங்களுக்கு ஹாஸ்பிட்டல்க்கு பணம் கட்டுனேன். அப்புறன் ரொம்ப நேரம் வெயிட் பண்ணேன். அவங்க குடும்பத்தில இருந்து யாரும் வரவே இல்லை. அதுக்கு அப்புறம் போலீஸ் வந்ததும் அவங்க கிட்ட நடந்ததை சொல்லீட்டு கிளம்பி வந்துட்டேன். அவங்க எப்படி இருக்காங்கன்னு அடுத்த நாள் காலையில பாக்க போனப்போ அவங்க அந்த ஹாஸ்ப்பிட்டல்ல இல்லை. அவங்க பையன் வந்து வேற ஹாஸ்பிட்டல்க்கு கூட்டிட்டு போய்ட்டதா சொல்லீட்டாங்க. அந்த ஆக்சிடன்ட் என் கண்ணு முன்னாடி நடந்ததுனால என்னால அதை இன்னும் மறக்க முடியலை. ஒவ்வொரு வருஷமும் இந்த நாள், எனக்கு அது நியாபகம் வந்துரும்” என்று அந்த விபத்தை நினைவு கூர்ந்தபடியே சொல்லி முடித்தாள் பூஜா.
“அடிப்பாவி… யாருன்னே தெரியாதவங்களுக்காக செயினை வித்தியாடி? அவ்ளோ நல்லவளாடி நீ?” என்று ஜமுனா கேட்க
“அந்த நேரத்துல எங்க அப்பா ஆசையா வாங்கி குடுத்த செயினை விட, அவங்க உயிர் தான் முக்கியம்ன்னு தோணுச்சிடி” என்று சொன்னாள் பூஜா.
அந்த நொடி தன் தோழியை நினைத்து பெருமை கொண்டாள் ஜமுனா. அப்போது தான் ஜமுனாவிற்கு ஏதோ நியாபகம் வரவே “ஏய் லூசு… நம்ம வாட்ச்மேன் அண்ணாக்கு பத்திரிக்கை குடித்தியா?” என்று கேட்க
“ஐயோ… மறந்துட்டேன்டி.. இரு இப்போவே போய் குடுத்துட்டு வந்துடுறேன்” என்று சொன்ன பூஜாவோ ஒரு பத்திரிக்கையை கையில் எடுத்த படியே வெளியே போனாள்.
அங்கே பூஜாவோ ஓடி ஓடி பத்திரிக்கை கொடுத்து கொண்டிருக்க, இங்கே பூர்ணாவோ மணப்பெண்ணுக்குரிய எந்த கலையும் இல்லாமல், முகத்தில் கவலையோடு இருந்தாள். அதை பூஜாவும் கவனிக்க தவறவில்லை. தன்னுடைய அக்கா தன்னுடைய கனவு கலைந்து போவதை நினைத்து கவலை கொள்கிறாள் என்றே நினைத்துக் கொண்டாள்.
திருமணப் புடவை எடுப்பது, நகைகள் எடுப்பது என்று எதிலுமே பூர்ணா பங்கு கொள்ளவில்லை. எல்லாவற்றையும் பார்வதியே பார்த்துக்கொண்டார்.
விடிந்தால் திருமணம். இன்று இரவு நிச்சயதார்த்தமும் ரிசப்ஷனும் என்று முடிவு செய்து இருந்தார்கள்.
நாளை காலை அலுவலகம் இருப்பதால் இன்று இரவு ரிசப்ஷனுக்கே பூஜாவின் அலுவலகத்தில் வேலை செய்யும் எல்லா நண்பர்களும் வந்து விட்டார்கள்.
ஜமுனா தருண் இருவரும் கூட அந்த திருமணத்திற்கு வந்திருந்தார்கள். பூஜா அழைக்கவில்லை என்றாலும் கிஷோரும் அந்த திருமணத்திற்கு வந்திருந்தான். கிஷோரை அங்கு பார்த்தவளுக்கு எதுவும் புரியவில்லை.
“இவன தான் நாம கல்யாணத்துக்கு இன்வைட் பண்ணவே இல்லையே அப்புறம் எதுக்கு வந்தான்?” என்று தன் மனதில் நினைத்துக் கொண்டவளோ தன்னுடைய வீடு தேடி தங்களுடைய குடும்ப விசேஷத்துக்கு வந்த காரணத்தினால் அவனை கண்டு கொள்ளாமல், அவனிடம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விட்டாள்.
நிச்சயதார்த்தம் செய்ய மணப்பெண்ணை அழைக்க, அவளுடைய அறைக்கு போகும் பொழுது தான் அங்கே பூர்ணா இல்லாததை கண்டு பூஜா கொஞ்சம் குழம்பி போனாள்.
எல்லா இடங்களிலும் பூர்ணாவை தேடினாள். ஆனால் அவளோ எங்கும் இல்லை.
அப்பொழுதுதான் அவளின் மனது கொஞ்சம் படப்படுத்தது. “அப்போ… அக்கா ஏதாவது தப்பான முடிவு எடுத்துட்டாளா?” என்று யோசித்தவள் ஓடிச் சென்று தன்னுடைய அம்மா அப்பாவிடம் விஷயத்தை சொன்னாள்.
Nice
Nice epi👍