தேவராஜன் பிறந்ததைப் பற்றி சொல்லும் பொழுது, இந்திரன் முகத்தில் அவ்வளவு பூரிப்பு நிரம்பி வழிந்தது. “அவன் பிறந்ததும் இந்த கைகளில் தான் வாங்கினேன். செவிலியர் என்னிடம் கொடுக்கும் பொழுது எவ்வளவு ஆனந்தமாக இருந்தது தெரியுமா?” என்று சொல்லிவிட்டு “உனக்கு இன்னும் ஒன்று தெரியுமா? எல்லா குழந்தைகளும் முதலில் அம்மா என்று தானே அழைக்கும்? ஆனால் என் குழந்தை, என் தேவா முதன் முதலில் அப்பா என்றுதான் சொன்னான்” என்று பூரித்தார்.
அவரின் முகத்தில் இருந்த சந்தோஷத்தை பார்த்த காமாட்சிக்கு மிகவும் மகிழ்ச்சியாக, தானே அக்குழந்தையை கையில் ஏந்தியது போல் உணர்ந்தார்.
“அதன் பிறகு தேவாவிற்கு பத்து வயது இருக்கும்” என்று சோகமானார்.
காமாட்சியோ ‘அப்பொழுதுதான் தேவாவின் அம்மா இறந்து இருப்பார் போலிருக்கு’ என்று நினைத்துக் கொண்டு அவரை எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் மௌனமாக அவரின் முகத்தை பார்த்து அமர்ந்திருந்தார்.
“தேவாவின் அம்மாவிற்கு என்னுடன் வாழ பிடிக்கவில்லை என்று, என்னையும் தேவாவையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்றுவிட்டாள்” என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினார்.
அதைக் கேட்டு அதிர்ந்த காமாட்சி “அச்சோ!” என்று சொல்லி வாயை பொத்திக் கொண்டார்.
“அதன் பிறகு நான் தேவாவிற்காகவே வாழ ஆரம்பித்தேன். என் வாழ்க்கையை நினைத்து என் அம்மாவும், அப்பாவும் சீக்கிரத்திலேயே இறந்து விட்டார்கள். அதன் பிறகு இவனை பார்த்துக் கொள்வதிலேயே என் கவனம் இருந்தது. தேவா கல்லூரி முடிக்கும் பொழுது” என்று தயங்கி காமாட்சியை பார்த்தார்.
அவர் அமைதியாக சொல்லுங்கள் என்னும் விதமாக அவரைப் பார்த்துக் கொண்டிருக்க, “இன்று உன் கழுத்தில் நான் தாலி கட்டி உன்னை மனைவியாக ஏற்றுக் கொண்டு விட்டேன். நமக்குள் எந்த ஒளிவு மறைவும் இருக்கக்கூடாது என்று நினைக்கின்றேன்” என்று சொல்லிவிட்டு அன்று நடந்ததை மறைக்காமல் காமாட்சி இடம் கூறினார்.
ஆனால் காமாட்சி எந்த ஒரு உணர்ச்சியும் காட்டாமல் அமைதியாக இருக்க, “நீ என்னை தவறாக நினைத்து விடாதே. நான் தினமும் அப்படி” என்று தயங்கினார்.
“பரவாயில்லை. நான் ஒன்றும் நினைக்கவில்லை. நீங்கள் சொல்லுங்கள்” என்றார் அமைதியாக.
அதன் பிறகு தேவா என்னுடன் பேசுவதை முழுவதுமாக நிறுத்தி விட்டான். என்னிடம் பேசாமல் மட்டும் இருந்திருந்தால் பரவாயில்லை, என் மேல் உள்ள கோபத்தில், இல்லாத தீய பழக்கங்களை எல்லாம் கற்றுக் கொண்டான். என் மகன், என் கண் முன்னாலேயே குடித்து சீரழிவதை கண்டு என் உள்ளம் கதறி அழுததை அவன் கொஞ்சம் கூட உணரவே இல்லை.
நான் தேவாவிடம் பேச வேண்டும் என்று நினைப்பவற்றையெல்லாம் விசுவிடம்தான் சொல்வேன். விசு என்ன சொன்னாலும் கேட்கும் தேவா, என்னைப் பற்றி பேசும்பொழுது மட்டும், காது கொடுத்தே கேட்க மாட்டான். இப்படியே நாட்கள் இவ்வளவு காலம் ஓடிவிட்டது. இன்று தான் அவன் என்னுடன் பேசுகிறேன் என்று சொல்லி இருக்கிறான். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அப்படி இருக்க, அவன் கேட்டது உன்னை திருமணம் செய்து கொள்ளத்தானே. அதான் உன்னை கல்யாணம் செய்து கொண்டேன்.
அவனுடன் பேச வேண்டும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் உன்னை திருமணம் செய்து கொண்டேன் என்று நினைத்து நீ கவலைப்பட வேண்டாம். இன்று எந்த நொடி உன் கழுத்தில் தாலி கட்டி என் மனைவியாக மாற்றினேனோ, அந்த நொடியில் இருந்து என் வாழ்நாள் முழுவதும் உன்னை கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வேன். தேவாவின் அம்மாவிற்கு பணக்கார வாழ்க்கை வேண்டி தான் என்னை விட்டுட்டு போய்விட்டாள். ஆனால் நீ நிச்சயம் அப்படி இருக்க மாட்டாய் என்று எனக்கு தெரியும்” என்று அவரைப் பார்த்தான்.
அவரோ குழப்பமாக இந்திரனை பார்க்க, “எப்படி தெரியும் என்று நினைக்கின்றாயா? உன்னை அவன் அம்மா என்று முடிவு செய்து இருக்கின்றான் என்றால், நிச்சயம் அவன் விரும்பும் படி தான் நீ இருப்பாய். அவனுடைய விருப்பம், பாசமும் அன்பும் மட்டும்தான். அவன் உன்னிடம் அந்த அன்பையும் பாசத்தையும் தான் எதிர்பார்த்திருக்கின்றான். அதை நீ இவ்வளவு காலம் தேவை இல்லாமல் யாருக்கோ கொடுத்து இருக்கின்றாய் என்பதை அவன் தெரிந்து இருப்பான். அதனால்தான் அவன் உன்னை அழைத்து வந்து என்னுடன் திருமணம் செய்து வைத்திருக்கின்றான்” என்று புன்னகைத்தபடி கூறினார்.
“அதனால் என் மனைவியாக உன்னை என்றும் கண்கலங்காமல் பாதுகாப்பேன் என்று உனக்கு நான் உறுதி கூறுகிறேன். வாசுகியும் இனிமேல் என் மகள். அவளுக்கு ஒரு நல்ல அப்பாவாக நான் இருப்பேன்” என்று சொல்லி “இதுதான் என் வாழ்க்கையில் நடந்தது. இனிமேல் என் மகனுடன் நான் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ்வேன் என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது” என்று மகிழ்வாக கூறினார்.
“இவ்வளவுதான் என் வாழ்க்கை. உன்னை பற்றி சொல்வதற்கு உனக்கு விருப்பம் இருந்தால் மட்டும் சொல். மற்றபடி எனக்கு அவசியம் இல்லை. இந்த வீட்டில் உன் வரவினால் ஏதோ நிம்மதி கிடைக்கும் என்ற எண்ணம் எனக்கு இன்று நீ விளக்கு ஏற்றும் போதே தோன்றியது. அதுவே எனக்கு போதும்” என்று கூறி “இரவு உணவுக்கு என்ன செய்ய?” என்றார்.
‘என்ன இது. என்ன சமையல் என்று கேட்கிறார்?’ என்று அதிர்ந்து அவரைப் பார்த்த காமாட்சி, “இல்லை இல்லை.. என்ன வேண்டும் என்று நீங்கள் சொல்லுங்கள்? நான் சமைக்கிறேன்” என்று சமையல் அறைக்கு செல்ல எழுந்தார்.
அவரின் கைகளை பற்றி தடுத்து நிறுத்தினார். இந்திரன் கையைப் பிடித்ததும் அதிர்ந்து அவரை பார்க்க “இன்று நீ எதுவும் செய்ய வேண்டாம். இவ்வளவு காலம் நான் தானே சமைத்தேன். இனிமேலும் நானே சமைக்கிறேன். நீ ஓய்வெடு” என்று சமையலறைக்குச் சென்றார்.
அவரின் பின்னாலையே சென்ற காமாட்சி, “இவ்வளவு காலம் நீங்கள் சமைத்தீர்கள் அல்லவா? இனிமேல் நான் சமைக்கிறேன். நீங்கள் ஓய்வெடுங்கள்” என்று சொல்லிவிட்டு குளிர்சாதன பெட்டியை திறந்து “இரவுக்கு என்ன சமைக்கலாம்? இருவருக்கும் என்ன பிடிக்கும்?” என்று கேட்டார்.
அதன் பிறகு இரவு உணவிற்கு தான் தேவராஜன் தங்கையை அழைத்துக் கொண்டு வெளியே வந்தான். அம்மாவும் அப்பாவும் சேர்ந்து சமைத்ததை சாப்பிட்டுவிட்டு, “இன்று வாசுகி என்னுடனே படுத்துக் கொள்ளட்டும்” என்று சொல்லிவிட்டு தங்தையை தூக்கிக் கொண்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.
இரவு உணவு முடிந்ததும் சிறிது நேரம், எங்கு சென்று படுப்பது என்று தயங்கிக் கொண்டிருந்த காமாட்சி, எப்படியும் தேவராஜன் இருவரும் தனித்தனியா அறையில் படுத்தால் ஏதாவது சொல்லுவான் என்று நினைத்த மெதுவாகச் சென்று இந்திரனின் அறையின் கதவை தட்டினார்.
கதவை திறந்த இந்திரன் வா என்று தலையை அசைத்து விட்டு உள்ளே சென்றுவிட்டார். அவரின் பின்னாடியே சென்ற காமாட்சி தயங்கி நின்று கொண்டிருக்க, “நீ கட்டிலில் படுத்துக்கொள். நான் ஹால்ல சோபால” என்று சொன்னதும்
“வேண்டாம். நீங்களும் இங்கேயே படுத்துக் கொள்ளுங்கள். வெளியே படுத்தால் தம்பி ஏதாவது சொல்லும்” என்று சொல்லிவிட்டு ஒரு ஓரமாக அமைதியாக படுத்துக் கொண்டார்.
இருவரும் முதுகை காட்டி படுத்து இருக்க, சற்று நேரம் கழித்து, “தூங்கிட்டீங்களா?” என்று கேட்டார் காமாட்சி.
“இல்லை. எதுவும் வேண்டுமா?” என்று உடனே இந்திரனும் சொல்ல,
“உங்களிடம் நான் என்னைப் பற்றி சொல்லி விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு அவரின் குடும்ப வாழ்க்கையை பற்றி ஆரம்பத்தில் இருந்து, இன்று காலையில் விவாகரத்துக்கு கையெழுத்திட்டது வரை அனைத்தையும் ஒன்று விடாமல் கூறி முடித்தார்.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட இந்திரன், காமாட்சியின் உண்மையான நிலைமையை நன்கு புரிந்து கொண்டார். ‘நிச்சயம் அவன் ஏதோ தவறு செய்திருப்பான். அதனால் தான் விவாகரத்து செய்து, தனக்கு திருமணம் வைத்து முடித்து வைத்திருக்கின்றான் தேவா’ என்று நினைத்துக் கொண்டார். இருந்தாலும் உடனே திருமணம் என்பது இந்த பொண்ணுக்கும் கொஞ்சம் கஷ்டமாக தானே இருந்திருக்கும் என்று அவரை குழப்பமாக பார்த்தார்.
“நான் தேவாவிற்காக உன்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்றார் அமைதியாக.
“ஏன்?”
“அது” என்று தயங்கி, “ஏற்கனவே உன் குடும்பத்தார் உன்னை மிகவும் நோகடித்து இருக்காங்க. இப்போது இவனும் உடனே உன்னை கட்டாயப்படுத்தி என்னை கல்யாணம் பண்ண வைத்திருக்கிறான்”
“அவன் என்னை கட்டாயப்படுத்தினாலும், எனக்கு ஒரு நல்ல குடும்பத்தை தான் கொடுத்திருக்கிறான்” என்று கூறி விட்டு அமைதியாக படுத்து விட்டார்.
மறுநாள் காலையில் காமாட்சியையும் இந்திரனையும் வேகமாக கிளம்பச் சொன்னான் தேவராஜன்.
“ஏன் இவ்வளவு அவசரப்படுத்துகிறாய்? எங்கே செல்ல வேண்டும்?” என்று பொறுமை இழந்து கேட்டார் இந்திரன்.
இருவரையும் ஆழ்ந்து பார்த்த தேவராஜன், ஒரு பிரபலமான மருத்துவமனையின் பெயரைச் சொல்லி, அங்கு செல்ல வேண்டும் என்றான்.
அந்த மருத்துவமனையை பற்றி தெரிந்திருந்த இந்திரன், புருவம் சுருக்கி “இப்பொழுது எதற்கு அங்கு?” என்றார்.
“அம்மாவிற்காகத்தான்” என்றான்.
புரியாமல் இருவரும் குழப்பமாக அவனைப் பார்க்க, காமாட்சியை பார்த்து “உங்களுக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும் இல்லையா?” என்றான்.
அவரின் தலை ஆமாம் என்று தன்னிச்சையாய் ஆடியது.
“உங்களுக்கு ஒன்று தெரியுமா? என்று அமைதியாக இருந்தான்.
என்ன என்று புரியாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்த காமாட்சியிடம், “ஒருமுறை நீங்கள் குழந்தை உண்டாகி இருந்தீர்கள் அல்லவா? அந்த குழந்தை கருவிலேயே கலைந்து விட்டது அல்லவா?” என்று கேட்டான்.
அவரின் கண்கள் கலங்கி ஆமாம் என்று தலையை ஆட்டினார்.
“உங்கள் குழந்தை இயற்கையாகவே உங்களை விட்டுப் போகவில்லை. உங்கள் கணவன் செய்த சதியால்தான் உங்களுக்கு கரு கலைத்தது.
அவர் அதிர்ந்து அவனைப் பார்க்க, “உங்கள் முன்னால் கணவனை விசாரிக்கும் விதத்தில் விசாரித்ததில் அவன் இத்தனை காலம் உங்களுடன் எப்படி வாழ்ந்தான் என்பதை ஒரு வரி இல்லாமல் கக்கி விட்டான். உங்களுக்கு குழந்தை பிறக்கக் கூடாது என்பதில் அவன் மிகவும் கவனமாக இருந்திருக்கிறான்.
அதையும் மீறி நீங்கள் குழந்தை உண்டாகி விட்டீர்கள். அதை உங்களுக்கு தெரியாமல் கலைத்தும் விட்டான் அந்த ரஸ்கள்” என்று சொல்லி திட்டினான்.
தேவராஜன் சொல்லியதை கேட்டதும் கலங்கி நின்றார் காமாட்சி. அவரை தோளுடன் அணைத்து ஆறுதல் சொன்னான்.
“அதனால்தான் நான் முடிவு செய்து இருக்கிறேன். உங்களுக்கென்று ஒரு குழந்தை வேண்டும் என்று. அதற்காகத்தான் இன்று மருத்துவமனைக்கு செல்கிறோம்” என்றான் தேவராஜன்.
தொடரும்…
– அருள்மொழி மணவாளன்…
சூப்பர்…. அன்ட் வெரி நைஸ் கோயிங்.
👍👍👍
நன்றி 😊😊
Sema
Thank you 😊😊
Pavam kamatchi eppadilam pani irukan paru deva ellathaium kandu pidichitan superb la athu enanu pathu kolanthai varanum apo tha avan mugathula kari pesuna mari irukum
நன்றி மா 😊😊
Nice going
Nice epi