Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 16

முகப்பு இல்லா பனுவல் – 16

தேவராஜன், மாதவியை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கதிரிடம் கேட்க, கதிருக்கோ என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். 

“ஏன் அமைதியாக இருக்கிறாய்?” என்று தேவராஜன் கதிரை பார்க்க, 

“இல்லை சார். அக்காவை பற்றி தான்” என்று தயக்கமாக இழுத்தான். 

“உன் அக்காவை நான் கேட்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?” என்றான். 

சிறிது யோசித்த கதிர் அழுத்தமாக “இல்லை சார். உங்கள் அப்பா அம்மா என்ன சொல்வார்களோ?” என்று தயங்க, 

“அதைப் பற்றி உனக்கு என்ன கவலை. என் அப்பா அம்மா என்றுமே என் ஆசைக்கு குறுக்கே நிற்க மாட்டார்கள். அது எனக்கு தெரியும். நீ உனக்கு சம்மதமா? என்பதை மட்டும் சொல்” என்றான் அழுத்தமாக. 

“உங்களைப் போல் நல்லவர் என் அக்காவிற்கு கிடைப்பதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அக்கா என்ன சொல்வாளோ என்று தெரியவில்லையே?” என்று சந்தேகமாக கேட்டான். 

அவனின் சம்மதத்தை தெரிந்து கொண்டதும் புன்னகைத்த தேவராஜன், “அப்புறம்.. நீ நினைக்கிற மாதிரி நான் ஒன்றும் ரொம்ப நல்லவன் இல்லை” என்று சொல்லிவிட்டு, “உனக்கு சம்மதம் தானே. எனக்கு அது போதும். உன் அக்காவை எப்படி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். அதை பற்றி நீ கவலைப்படாதே. நன்றாக ஓய்வெடு. கல்யாணத்திற்கு ஓடியாடி வேலை செய்ய வேண்டும் அல்லவா?” என்று சொல்லிவிட்டு கதவைத் திறந்தான். 

தேவராஜன் கதிருடன் தனியாக பேச விரும்புகிறான் என்று தெரிந்ததும் வெளியே வந்த மாதவி, உணவு மேஜையின் நாற்காலியில் அமர்ந்து இருந்தாள். தம்பியின் அறைக்கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் திரும்பி பார்க்க, தேவராஜன் வந்து அவளின் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தான். 

அவன் அமர்ந்ததும் அவள் சற்றென்று எழ, அவள் கையை பிடித்து உட்கார வைத்துவிட்டு, “என்ன? உன் தம்பிக்கு மட்டும் தான் சூப் எல்லாம் கொடுத்து கவனிப்பாயா? நீ எதையும் சாப்பிட மாட்டாயா? ஒரே நாளில் இப்படி வாடிப் போய் இருக்கிறாய்?” என்று அவளை பார்த்து கேட்க, 

அவளோ அதிர்ந்து அவனைப் பார்த்து “நான் நல்லா தான் சாப்பிட்டேன்” என்று அவளுக்கே கேட்காத குரலில் கூறினாள். 

அவனும் “நல்லா சாப்பிட்ட போ” என்று சொல்லிக் கொண்டு “சரி இன்று நைட்டு நீ சமையல் செய்யாதே! அம்மாவிடம் செய்து தர சொல்கிறேன்” என்றான். 

அவளும் மறுப்பாக “அதெல்லாம் வேண்டாம். அம்மாவுக்கு எதற்கு சிரமம். நான் சமைத்துக் கொள்வேன். எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை” என்றாள். 

“உனக்கு கஷ்டம் இல்லை தான். ஆனால் நீ சமைப்பது எனக்கு இஷ்டம் இல்லை” என்று சொல்லிவிட்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டான். 

இவர் என்ன சொல்கிறார் என்று புரியாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். 

பின்னர் மற்ற வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டாள். சற்று நேரத்திற்கு எல்லாம் தேவேந்திரன் தன் குடும்பம் மொத்தத்தையும் அழைத்துக் கொண்டு அங்கு வந்தான். 

அனைவரையும் வரவேற்ற மாதவி, என்ன என்று கேள்வியாக அனைவரையும் பார்த்தாள். 

அவள்  பார்வையை கவனிக்காது போல, கதிரின் அறைக்குச் சென்று அவனை கைதாங்களாக அழைத்துக்கு வந்து நாற்காலியில் உட்கார வைத்தான் தேவராஜன்.

அங்கிருந்த தேவராஜன் குடும்பத்தை பார்த்து, “வாங்க” என்று வரவேற்ற கதிர், என்ன என்பதாக இந்திரனை பார்த்தான். 

அதற்குள் காமாட்சி மாதவியை அழைத்து தன் அருகில் உட்கார வைக்க, அவரின் கையில் இருந்த துருவ் மாதவியிடம் தாவினான். அவளும் குழந்தையை வாங்கி கொஞ்சினாள்.

அங்கு குழந்தையின் சத்தம் மட்டுமே ஒலித்துக் கொண்டிருந்தது. தேவராஜன் தன் தந்தையிடம் தலையசைத்து, மாதவியிடம் பேசும்படி சொல்ல, அவரோ காமாட்சியை பார்த்தார். 

காமாட்சியோ நான் மாட்டேன் பா, நீங்களே பேசுங்க, என்பது போல் தலையை ஆட்ட, இவர்களின் செய்கையை பார்த்துக் கொண்டிருந்த கதிர் இந்திரனை பார்த்து, “என்ன சார்? ஏதாவது சொல்ல வேண்டுமா?” என்று பேச்சை தொடங்கி வைத்தான். 

கதிர் கேட்டதும் தொண்டையை செருமிய இந்திரன், “தம்பி நான் கேட்கிறேன் என்று தப்பா எடுத்துக்காதீங்க” என்று ஆரம்பித்து, “உங்கள் அக்காவை, என் மகனுக்கு கல்யாணம் செய்ய சொல்லி கேட்பதற்கு தான் வந்தோம்” என்றார். 

அவர் பேசியதும் அதிர்ந்து எழுந்து விட்டாள் மாதவி. “சார்! என்ன சொல்றீங்க?” என்று அதிர்ந்தாள். 

“ஏன் புரியலையா? எனக்கு உன்னை கல்யாணம் செய்து வைக்க போகிறார்களாம்!” என்றான் தேவராஜன்.

“எனக்கு கல்யாணமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம். எல்லோரும் தயவு செய்து எந்திரிச்சு வெளியே போங்க” என்று கோபமாக கத்தினாள் மாதவி. 

அவளின் சத்தத்தில் தேவராஜனின் மடியில் இருந்த வாசுகி பயந்து தன் அண்ணனை கட்டிக் கொண்டாள். மாதவியின் கையில் இருந்த துருவ்வோ அவளின் சத்தத்தை கேட்டு அழ ஆரம்பித்து விட்டான். 

குழந்தையின் அழுகுரலில் தான் மாதவி தான் கத்தியதை உணர்ந்து குழந்தையை தட்டிக் கொடுத்து “சாரி டா. தெரியாமல் கத்தி விட்டேன். ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை” என்று என்று குழந்தையை சமாதானம் படுத்தினாள். 

மற்ற எல்லோரும் அமைதியாக மாதவியை பார்த்துக் கொண்டிருக்க, மாதவி காமாட்சியின் அருகில் வந்து, அவரின் கையைப் பிடித்துக் கொண்டு, “அம்மா ப்ளீஸ்.. நீங்களாவது புரிந்து கொள்ளுங்கள். என்னால் யாரையும் கல்யாணம் செய்து கொள்ள முடியாது” என்றாள் அழுதவாறு. 

அவளின் கண்ணீரைத் துடைத்த காமாட்சி, துருவ்வை தன்னிடம் வாங்கிக் கொண்டு, “இனிமேல் என்னை அம்மா என்று கூப்பிடாதே! ஒழுங்கா அத்தைன்னு சொல்லணும் சரியா?” என்று சொல்லிவிட்டு தேவராஜனை பார்த்து “அவளை நம் வீட்டுக்கு அழைத்துச் சென்று பேசி சம்மதிக்க வை” என்றார். 

காமாட்சியின் கூற்றில் அதிர்ந்து அவரைப் பார்த்துக் கொண்டிருந்த மாதவியை தோளை பிடித்து உலுக்கி, “முதலில் அவனிடம் சென்று பேசு. அதன் பிறகு கல்யாணம் வேண்டுமா? வேண்டாமா? என்பதை முடிவு செய்து கொள்ளலாம்” என்றார். 

வேகமாக கதிரிடம் திரும்பிய மாதவி “கதிர்.. ப்ளீஸ்.. நீயாவது சொல். எனக்கு இப்பொழுது திருமணம் வேண்டாம் என்று” கெஞ்சினாள். 

“இப்பொழுது திருமண வேண்டாமா? இல்லை எப்பொழுதுமே வேண்டாமா?” என்றான் தேவராஜன் அழுத்தமாக. 

“எனக்கு திருமணமே வேண்டாம். என்னால் திருமணம் செய்து கொள்ளவே முடியாது” என்று சொல்லிவிட்டு வேகமாக அவளது அறைக்குள் ஓடி கதவை சாத்தினாள். 

அவள் கதவை மூடுவதற்கு முன்பாக கதவை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான் தேவராஜன். 

அவனின் அழுத்தத்தை மீறி அவளால் கதவை சாற்ற முடியாமல் விலகி விட, கதவை திறந்து கொண்டு உள்ளே வந்த தேவராஜன் கதவை சாற்றி தாளிட்டான். 

“ஏன் இப்போ கல்யாண வேண்டாம் என்கிறாய்?” 

“இப்ப மட்டும் இல்ல, எப்பவுமே எனக்கு கல்யாணம் வேண்டாம்” 

“அதுதான் ஏன் என்று கேட்கிறேன்?” 

“ஏன்? உங்களுக்கு தெரியாதா? நான் யார் என்று? என்னை போய் நீங்கள் ஏன் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? ஏதாவது ஒரு நல்ல பெண்ணாக பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். ப்ளீஸ், என்னை விட்டு விடுங்கள்”

“ஏன்? நீ நல்ல பெண் இல்லையா?” என்று அவளை மேலிருந்து கீழ் பார்த்தான்.

“ப்ளீஸ்.. தயவு செய்து வெளியே போங்க. என்னால் உங்களை மட்டுமல்ல எந்த ஒரு ஆணையுமே திருமணம் செய்து கொள்ள முடியாது”

“நான் ஏன்? என்று கேட்டால், அதற்குரிய சரியான பதில் எனக்கு வேண்டும். நீ சொல்லும் பதில் எனக்கு திருப்தியாக இருந்தால், நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்” 

“அதைத்தான் நானும் சொல்கிறேன். என்னால் உங்களை திருப்தி படுத்த முடியாது. ஒரு ஆண் எதிர்பார்க்கும் வெட்கம், மடம், நாணம், பயிர்ப்பு எதுவும் என்னிடத்தில் இருக்காது. வெறும் ஜடத்துடன் வாழ்வது போல் தான் நீங்கள் வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்க்கை உங்களுக்கு அவசியமா? தயவு செய்து வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்து கொள்ளுங்கள். அப்பொழுதுதான் உங்கள் திருமண வாழ்க்கை நல்லபடியாக அமையும்”

“பரவாயில்லை அதை நான் பார்த்துக் கொள்கிறேன்”

“ப்ளீஸ், சொல்வதை புரிந்து கொள்ளுங்கள். ஏதோ ஒரு வேகத்தில் நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ள நினைத்து இருக்கலாம். ஆனால் ஒரு வாரத்திலேயே என்னுடன் உங்களது இல்லற வாழ்க்கை சலித்து விடும். அதனால் தான் சொல்கிறேன், புரிந்து கொள்ளுங்கள். என்னால் உங்களுக்கு எந்த சுகத்தையும் கொடுக்க முடியாது என்று சொல்வதை விட, உங்களால் என்னை..” என்று நிறுத்தி முகத்தை மூடி அழு ஆரம்பித்து விட்டாள். 

அவள் முகத்தை மூடியிருந்த கைகளை பற்றி விலக்கி, அவள் கண்களைப் பார்த்து “உன்னைத் தவிர வேறு யாராலும் என்னை திருப்தி படுத்த முடியாது. அதேபோல் என்னைத் தவிர வேறு யாராலும் உன்னை திருப்தி படுத்த முடியாது. புரிஞ்சுதா? சோனா..” என்றான். 

அவன் சோனா என்றதும் அதிர்ந்து அவனை பார்த்தாள் மாதவி. 

“என்ன? என்னை நினைவு இருக்கிறதா? சோனா” என்று சோனாவை அழுத்தமாக கூறினான்.

அவள் அதிர்ந்து எழுந்து நிற்க, அவளின் தோளில் கைகளை போட்டு அணைத்தபடி அருகில் வைத்துக் கொண்டு கட்டிலில் உட்கார்ந்தான். 

அவளோ அதிர்ந்து அவனை பார்த்துக் கொண்டே இருக்க, புன்னகைத்தபடியே “உனக்கு சோனாவை நினைவு இருக்கிறதா?” என்று கேட்டான். அவள் ஆமாம் என்று தலையை ஆட்டினாள். 

அவள் அவனது அணைப்பிலிருந்து விலகி, தள்ளி அமர்ந்து “உங்களுக்கு சோனாவை எப்படி தெரியும்?”

அவளின் கேள்வியில், புன்னகையை தன் உதட்டிற்குள்ளே மறைத்துக் கொண்டு, “அவளிடம் ஓர் நாள் சென்றேன்” என்றான். 

அவளோ அதிர்ந்து அவனைப் பார்க்க

“என்னவென்றாலும் அவளை மறக்க முடியாது. ஒன்று தெரியுமா? சோனாவை பார்த்த பிறகு தான் நான் கொஞ்சம் திருந்தி உள்ளேன்” என்று அவளைப் பார்த்தான். 

அவள் புரியாமல் அவனைப் பார்க்க, நான் ஒன்றும் நீ நினைப்பது போல் நல்லவன் இல்லடி” என்று சொல்லி, தன் வாழ்க்கையில் தான் செய்த தவறுகளை அவளிடம் கூறினான். அப்படி தினமும் ஒரு பெண்ணுடன் இருந்த என்னை மாற்றியது சோனா தான். 

“என்னை மாற்றி அவள் தான் நல்வழி படுத்தினாள். ஆனால் அது அவளுக்கு தெரியுமா? என்று தெரியாது” என்று மாதவியை ஆழ்ந்து பார்த்தான். 

மாதவி புருவம் சுருக்கி யோசனையில் ஆழ்ந்தாள். 

அவள் புருவம் முடிச்சியே நீவி விட்டபடி, “ரொம்ப யோசிக்காத” என்றான். 

அவள் குழப்பமாக அவனைப் பார்க்க, “நீ கதிருடன் வந்த பிறகு, இந்த மூன்று மாதங்களும் நிம்மதியாக இருக்கிறாய் அல்லவா? பழையவற்றையெல்லாம் மறக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாய்… அல்லவா?” என்றான். 

அவளும் ஆமாம் என்று தலையை ஆட்ட 

“அப்படி இருக்க, ஏன் இப்பொழுது சோனாவை பற்றி யோசிக்கிறாய்?” என்றான் அவளை பார்த்தவாறு. 

“இல்லை.. நீங்கள்..” என்று அவள் தடுமாற, 

“நீ என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல். உனக்கு நான் சோனாவை சந்தித்தது பற்றி முழுவதையும் சொல்கிறேன்” என்றான்.

“அச்சோ.. உங்களுக்கு ஏன் புரிய மாட்டேங்குது?” என்று அவள் சலித்துக் கொள்ள,

“சோனாவை பற்றி சொன்ன பிறகும், உனக்கு ஏன் புரிய மாட்டேங்குது? என்னை திருமணம் செய்வதில் உனக்கு என்ன கஷ்டம் வந்து விடப் போகிறது?” என்று சற்று சத்தமாக அதட்டியபடி கேட்டான் தேவராஜன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 16”

  1. CRVS2797

    அட ஏன்ப்பா…மிரட்டறா..!
    நல்லபடியா சொன்னா கேட்டுக்கப் போறா. அதான் சோனாவைப் பத்தி டூவீஸ்ட் வைச்சிருக்கே இல்லை அப்புறம் என்ன..? அந்த சோனாவே இந்த மாதவி தான் போல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *