Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 2

முகப்பு இல்லா பனுவல் – 2

ராணி வேலைக்குச் சென்றதும், வீட்டின் பொறுப்பான மகளாக, மாதவி  தம்பியுடன் தங்களின் எதிர்கால படிப்பை பற்றி பேசிக்கொண்டே, மீதி இருந்த வீட்டு வேலைகளை பார்த்து முடித்தாள். 

வேலை முடிந்ததும் தம்பிக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறேன் என்று, அவனையும் அருகில் அமர வைத்துக் கொண்டு, அவனுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டே படிக்க ஆரம்பித்தாள்.  

அவர்கள் படித்துக் கொண்டிருக்கும் பொழுது, எதிர் குடிசையில் இருக்கும் பாட்டி,  “மாதவி.. மாதவி..” என்று அழைத்து கதவை தட்டினார். 

எதிர் குடிசையில் பாட்டியும் தாத்தாவும் அவர்களது மகள் வயிற்று பேரன் ரவியுடன் வசிக்கிறார்கள். ரவி பிறந்து கொஞ்ச நாளில் அவனின் அம்மா பாட்டியின் மகள் இறந்து விட்டார். 

அவனின் அப்பா கொஞ்ச நாள் ரவியை தன்னுடன் வைத்துக்கொண்டு, குழந்தையை பார்க்க முடியவில்லை என்று சொல்லி வேறு கல்யாணம் பண்ணிக் கொண்டான். 

இரண்டாம் தரமாக வந்த பெண் ரவியை பார்ப்பது மிகவும் கடினமாக இருக்கு என்று சொல்லி, அவனது பாட்டி தாத்தா வீட்டில் விட்டுவிட சொல்லிவிட்டாள். அன்றே கொண்டு வந்து பாட்டி தாத்தாவிடம் விட்டு விட்டு, “என்னால் இவனை கவனித்துக் கொள்ள முடியாது. நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். அவனுக்கு தேவையானவற்றிற்கு நான் பணம் கொடுத்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டான். 

அன்றிலிருந்து ரவி தாத்தா பாட்டியுடன் தான் இருக்கின்றான்.  ஆரம்பத்தில் ரவிக்கு தேவையானவற்றுக்கான பணத்தை ஒழுங்காக கொடுத்துக்கொண்டு தான் இருந்தான் அவனின் அப்பா. நாட்கள் கடக்க அவன் இங்கு வருவது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. பண தேவைக்காக இவர் தாத்தாவோ பாட்டியோ தான் அவனிடம் சென்று வாங்கி வருவார்கள். ஒரு நாள் ரவியை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று அவனிடம் சொல்லி பணம் வாங்கி வர சென்ற பொழுது, அவனின் இரண்டாவது மனைவி பாட்டியை மிகவும் கேவலமாக பேசி அனுப்பி விட்டாள். 

அதில் மிகவும் கோபமடைந்த தாத்தா, என் பெண்ணை வளர்த்த எனக்கு, அவள் பெற்ற பையனை வளர்க்கத் தெரியாதா? என்று சொல்லி அன்றிலிருந்து அவருக்குத் தெரிந்த வேலைகளை செய்து, மனைவியையும் பேரனையும் காப்பாற்றி வருகிறார். இப்பொழுது கதிரும் ரவியும் ஒரே வகுப்பில் தான் படிக்கிறார்கள்.

“என்ன பாட்டி? ஏன் சகதிக்குள் நடந்து வருகிறீர்கள்? அங்கிருந்தே கூப்பிட வேண்டியதுதானே?” என்று கதவைத் திறந்து கேட்டாள். 

“ஆமா சகதிதுக்குள்ள நடக்கிறது நமக்கு என்ன புதுசா?” என்று கேட்டுக் கொண்டே, “ரவிக்கு உடம்பு சரியில்லம்மா! தாத்தா தான் அவனை கூப்பிட்டு ஆஸ்பத்திரிக்கு போக போறாரு. கூட கதிரையும் அனுப்பி வைச்சின்னா நல்லா இருக்கும். டாக்டரை பார்த்ததும் தாத்தா வேலைக்கு போயிடுவாரு. ரவியும் கதிரும் ஒன்னா வீட்டுக்கு வந்துருவாங்க. எனக்கு ரொம்ப மூட்டு வலிக்குது. அதனாலதான் நான் கதிர் அனுப்ப சொல்றேன். இல்லன்னா நானே போயிடுவேன்” என்றார் சோகமாக. 

“பரவாயில்லை பாட்டி. இதில் என்ன இருக்கு?” என்று சொல்லிவிட்டு கதிரை அழைத்து, “நீ தாத்தா கூட ரவியை கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வா. தாத்தா வேலைக்கு போனதும் பத்திரமா அவனை கூப்பிட்டுகிட்டு வந்துடு. எங்கும் நின்னு ரெண்டு பேரும் விளையாட கூடாது” என்று மிரட்டி உருட்டி வீட்டிலிருந்த ஒரு குடையை அவனிடம் கொடுத்து அனுப்பி வைத்தாள். 

“மழை லேசா தூறினாலும், நனையாம குடை புடிச்சுக்கோங்க. நல்லா பெஞ்சுதுன்னா எங்கேயாவது ஒதுங்கி நின்னுட்டு தான் வரணும். மழையில நனைஞ்சுகிட்டு வரக்கூடாது. புரியுதா?” என்றாள். 

“அக்கா நான் ஒன்றும் சின்ன பிள்ளை இல்லை. நனையாம போயிட்டு வருவேன்” என்று சொல்லி விட்டு வேகமாக ரவியின் குடிசை நோக்கி ஓடினான். 

அவன் ஓடியதை பார்த்து, “மெதுவா போடா..” என்று சொல்லிய பாட்டி, மாதவியை பார்த்து, “நீயும் அவர்கள் வரும் வரை என் கூடவே வந்து இருந்துக்கோ மாதவி. எப்படியும் ஒரு மணி நேரத்திற்கு மேலே தான் ஆகும். அதுவரை நீ தனியாக தானே இருக்கணும்” என்றார். 

“பரவாயில்லை பாட்டி. நீங்கள் கால் வலிக்கிறது என்று சொல்கிறீர்கள் அல்லவா? அவர்கள் வரும் வரை பேசாமல் படுத்து தூங்குங்கள். நான் அங்கு உட்காந்து படித்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்கும்.  நான் கதவை மூடி க்கொண்டுதான் பத்திரமாக இருந்து கொள்வேன்” என்று சொல்லி அனுப்பி வைத்தாள். 

நம் வாழ்க்கையில் ஏதாவது ஒரு பெரிய துக்கமான நிகழ்ச்சியோ, அல்லது கஷ்டமான நிகழ்ச்சியோ அல்லது ஆபத்தான நிகழ்வுவோ நடப்பதற்கு சில நேரத்திற்கு முன்பு நடக்கும் ஒரு நிகழ்வை, நாம் சாதகமாக பயன்படுத்திக் கொண்டிருந்தால், நம் வாழ்க்கையில் அந்த துக்கமோ, துயரமோ, கஷ்டமோ அல்லது ஆபத்தோ நமக்கு நிகழ்ந்திருக்காது என்பதை, காலம் கடந்து நாம் உணர்வோம். அதுபோலத்தான் இன்று மாதவியின் வாழ்விலும் இந்த நிகழ்வு நடந்தது. பாட்டி கூப்பிடும் போதே, அவர்களின் குடிசைக்கு மாதவி சென்று இருந்தால், அவளின் வாழ்க்கை அவள் நினைத்தது போல் ஒரு புகழ்வாய்ந்த மருத்துவராக வந்திருக்கலாமோ என்னவோ? ஆனால் விதி வழியது அல்லவா?  காலத்தால் நடக்க வேண்டும் என்று இருப்பதை யாரால் தடுக்க முடியும்?

பாட்டியும் கதிரும் சென்றதும் கதவை பூட்டிக் கொண்டு படிக்க ஆரம்பித்தாள் மாதவி. பள்ளிக்கூடத்தில் எப்படி ஒவ்வொரு பாட வகுப்பு நடக்குமோ? அதேபோல் இன்றைய நாள்படி உள்ள பாடத்தை படிக்க ஆரம்பித்தாள். முதலில் ஆங்கிலம் படித்தாள், அதன்பிறகு கணிதம். 

ரஃப் நோட் எடுத்து கணக்கு போட்டு பார்க்க ஆரம்பித்தாள். அந்த நேரம், “ராணி.. ராணி.. அடியே ராணி..” என்று கதவை போட்டு தட்டு தட்டு என்று தட்டினான் முனியன். 

அவனின் முதல் குரலிலேயே மாதவிக்கு தெரிந்தது. அவன் நன்றாக குடித்து வந்திருக்கின்றான் என்று. பயந்து கொண்டே தான் கதவை திறந்தாள்.

“ஏய் பொட்ட கழுதை. கதவை எவ்வளவு நேரமா தட்டுறது. ஆடி அசைஞ்சு வந்து திறக்குறியா?” என்று தள்ளாடிய படியே வந்து  அவளின் புத்தக பையில் அருகில் உட்கார்ந்தான். 

அவனின் செய்கையை பயந்து பார்த்துக்கொண்டு ஓரமாய் நின்றிருந்த மாதவியிடம், “எங்க உங்க அம்மா? காலங்காத்தால ஊர் மேயப் போயிட்டாளா?” என்று கத்தினான். 

அவன் கூறியது அவளுக்கு புரியாவிட்டாலும், “அம்மா ஒன்றும் ஊர் சுற்ற போகவில்லை. வேலைக்கு தான் போயிருக்கு. சும்மா எதுக்கு எடுத்தாலும் அம்மாவை திட்டாதீங்க” என்றாள் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, கொஞ்சம் சத்தமாக. 

ராணி இல்லை என்றதும், மகளைப் பார்த்த அவனின் கண்கள் ஒளிர்ந்தது.  வாய் குழற, “கதிர் எங்கே?” என்றான் அடுத்து. 

“அவன் ஃப்ரெண்டு ரவிக்கு உடம்பு சரியில்ல. தாத்தா கூட அவனையும் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு போயிருக்கார். இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்” என்று சொல்லி புத்தகப்பையை தூக்கிக்கொண்டு, வாசல் கதவின் அருகில் உட்கார்ந்து படிக்க ஆரம்பித்தாள். 

ராணிக்கு தன் கணவனைப் பற்றியும் அவன் செய்யும் தொழிலை பற்றியும் தெரியும். ஆதலால் மாதவியை முனியனின் கண்ணில் படும்படி இருக்க விடமாட்டார். அருகிலேயே வைத்து பாதுகாத்துக் கொள்வார். 

ஆனால் இன்று காப்பாரற்று தனியாக அமர்ந்து பாடத்தை படித்துக் கொண்டிருக்கும் மகளை மேலிருந்து கீழ் பார்த்தான். பதிமூன்று வயது பெண்ணுக்குரிய வளர்ச்சியில் அழகாக இருந்தாள் மாதவி. 

எப்படியும் இன்னும் ஒரு வருடத்தில் வயசுக்கு வந்துருவா. இவ்வளவு நாள் எப்படி இதை கவனிக்காமல் இருந்தேன், என்று பிடியை இழுத்துக்கொண்டு சுவற்றில் சாய்ந்து உட்கார்ந்து மகளை அங்குலம் அங்குலமாக பார்த்துக் கொண்டிருந்தான். 

கதிர் வருவதற்கு எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். ராணி நாலு வீட்டிலும் வேலை முடித்து வர மதியம் ஆகிவிடும். அதற்குள் இவளை இங்கிருந்து கூட்டிக்கொண்டு சென்று விட வேண்டும் என்று திட்டம் போட்டான். பெற்ற மகள் என்பது கூட அவன் மண்டையில் உறைக்க வில்லை. பணம் ஒன்றுதான் அவனின் கண்களில் மின்னியது.

அதன்படியே மெதுவாக மாதவிடம் பேச ஆரம்பித்தான். “நான் இன்னைக்கு உங்க அம்மாவை வேலைக்கு லீவு போட சொன்னேனே. ஏன் போனா?” என்றான். 

“அடிக்கடி லீவு போட்டாக்கா, சம்பளத்துல புடிச்சிடு வாங்கல? அதனாலதான் வேலைக்கு போயிட்டாங்க!” என்றாள் புத்தகத்தில் இருந்து கண்ணை எடுக்காமல்.

“இன்னைக்கு ஒயின் ஷாப் முதலாளி வீட்டுல, அவரு பொண்ணுக்கு பிறந்த நாளு. அதுக்கு அவங்க சொந்தக்காரங்க எல்லாருக்கும் விருந்து வைக்கிறார். அதனால அங்க வேலை செய்ய போகணும் என்று சொல்லி இருந்தேனே?” அந்த வீடுங்கல்ல, மாசம் பூரா வேலை செஞ்சாலும், இரண்டாயிரம் மூவாயிரம் தான் தருவாங்க. ஆனா இன்னைக்கு ஒரு நாள் முதலாளி வீட்டில வேலை செஞ்சாலே, ஒரு ஆளுக்கு ஆயிரம் ரூபா தருவாரு. அங்க ஒரு நாள் லீவு போட்டுட்டு இங்கே வந்து இருக்கலாம் இல்ல. ஆயிரம் ரூபா கிடைக்கும் இல்ல” என்றான் மெதுவாக. பணத்தின் மீது மாதிரிக்கு ஆசை இருக்கிறதா என்று பார்க்கும் விதமாக. 

சிறுபிள்ளை அல்லவா? அவனது வஞ்சக குணம் தெரியாமல் ஆயிரம் ரூபாய் என்றதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். “உண்மையாகவே ஆயிரம் ரூபாய் தருவாங்களா?” என்றாள் ஆச்சரியமாக. ஆயிரம் ரூபாய் கிடைத்தால், தம்பிக்கு இந்த வருட தீபாவளிக்கு புது டிரெஸ்ஸும், அவனுக்கு பட்டாசு வாங்கி கொடுக்கலாமே? என்ற எண்ணம் அவளுக்கு தோன்றியது.

அவள் முகத்தில் தெரிந்த ஆசையை கண்டு மகிழ்ந்தான் முனியன்.  

“ஆமாம் ஆயிரம் ரூபாய் தான் தருவார்கள். அதான் உங்க அம்மா போய்ட்டாளே இப்ப என்ன செய்யறது” என்று சோகமானான். 

“நான் வேணா வந்து வேலை செய்யட்டுமா?” என்றால் ஆர்வமாக. 

அது தானே அவனுக்கும் வேண்டும். “உன்னால முடியுமா? பெரிய பெரிய பாத்திரம் எல்லாம் இருக்கும்” என்றான் வேண்டாம் வெறுப்பாக கூப்பிட்டு செல்வது போல்.

“நான் செய்வேன்” என்று சொல்லி புத்தகங்களை எடுத்து பையில் வைத்து, பையை ஓரமாக வைத்து விட்டு, “இப்பொழுதே போகலாம்” என்றாள்  ராணி சொன்னதை மறந்து. 

முனியனின் குணத்தை அறிந்த ராணி, நேரம் கிடைக்கும்போது எல்லாம் மாதவியிடம், நான் இல்லாமல் உன் அப்பாவோடு எங்கும் செல்லக்கூடாது என்று, சொல்லிக் கொண்டே தான் இருப்பார். ஆனால் இன்று ஆயிரம் ரூபாயில், தம்பிக்கு ஏதாவது வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில், அம்மா சொன்னது ஒன்றும் சுத்தமாக அவளுக்கு நினைவில்லை.

“சரி போகலாம்.. ஆனால் உங்க அம்மா தான் திட்டுவா! எதுக்கு பிள்ளையே வேலைக்கு கூட்டிட்டு போனேன்ட்டு?” என்று சொல்லிக்கொண்டு எழுந்து, “ஒரு நல்ல டிரஸ்சா எடுத்து போட்டுக்கோ” என்றான். 

தன்னை குனிந்து பார்த்த மாதவி, “வேலைக்கு தானே போறேன். இந்த டிரஸ் பரவாயில்லை” என்றாள். 

“வேலைக்கு தான் என்றாலும், அது பெரிய இடம்.  வேலைக்காரங்களே பட்டு சேலையில்தான் இருப்பாங்க. அதனால நல்லதா ஒரு டிரஸ் எடுத்து போட்டுக்கிட்டு வா” என்றான். 

“சரி” என்று மூளையில் இருந்த, ட்ரங்கு பெட்டியை திறந்து,  உள்ளே இருக்கும் துணிகளை பார்த்தாள். போன வருடம் ராணி வேலை செய்யும் வீட்டில் இருந்து, அவர்கள் மகள் போட்ட பழைய உடுப்பு என்று, ஒரு பச்சை வண்ண பட்டு பாவாடை சட்டை கொடுத்து இருந்தார்கள். 

அதை  எடுத்து பார்த்தால் கசங்கி இருந்தாலும் மற்ற உடைகளை விட இதுதான் கொஞ்சம் நன்றாக இருந்தது. 

‘சரி இதையே போட்டுக் கொள்வோம்’ என்று அதை உடுத்திக் கொண்டு, தன் தந்தையுடன் சந்தோசமாக கிளம்பினாள் மாதவி.

தொடரும்…

அருள்மொழி மணவாளன்…

11 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 2”

  1. Enna solradhunu therila sis…manasu romba kastama irukku maadhavi ku edhavadhu agumo nu …. story nalla iruku…. waiting for next ud

    1. Arulmozhi Manavalan

      நன்றி மா 😊😊
      இப்படிப்பட்ட கீழ்த்தரமானவர்களும் இருக்கிறார்கள். என்செய்ய 😞😞

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *