Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 20

முகப்பு இல்லா பனுவல் – 20

தேவராஜன் மாதவி திருமணத்திற்கு புடவை வாங்குவதற்காக விசு தன் மனைவி மற்றும் மாதவியை அழைத்துக்கொண்டு கடைக்கு வர, அவர்களுக்கு முன்பே அங்கு இருந்தான் தேவராஜன்.

அவனைப் பார்த்து சிரித்துக்கொண்டே “என்னடா? வேற எந்த வேலையும் இல்லையா?” என்று கேட்டவாறு நண்பனின் தோளில் கையை போட்டு “வாழ்த்துக்கள் மச்சான்” என்றான். 

“ஆமாடா, நானும் உன்னையே போலோ பண்ணலாம் என்று நினைத்தேன். அதான் என் பொண்டாட்டிக்கு புடவை எடுக்க வந்துவிட்டேன்” என்றான். 

இருவரும் புன்னகைத்துக் கொண்டு அணைத்து தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார்கள். மாதவிக்கு அவர்களின் அன்பை கண்டு மனம் மகிழ்ந்தது. அதன் பிறகு கடையையே ஒரு புரட்டு புரட்டி அவளுக்கான புடவையை எடுத்தான் தேவராஜன்.

மயிலின் கழுத்தில் உள்ள வண்ணங்கள் நிறைந்த அழகான புடவை புடவையை பார்த்ததுமே மாதவிக்கு பிடித்து விட, அதை அவள் மேல் வைத்தான். 

அவளோ சலித்துக் கொண்டு “இன்னும் எத்தனை புடவையை தான் இப்படி வைத்து வைத்து பார்ப்பீர்கள். இதிலேயே நான்  மிகவும் களைத்து விட்டேன். இனிமேல் எதையும் நீங்கள் தேட வேண்டாம். இதுவே கடைசி புடவையாக இருக்கட்டும். எனக்கு இந்த வண்ணம் மிகவும் பிடித்திருக்கிறது” என்று முடிவாகச் சொல்லிவிட்டாள்.

புடவையை விரித்து திருப்பி திருப்பி பார்த்து அதன் தரத்தில் மிகவும் திருப்தியானான் தேவராஜன். 

அதன் பிறகு மற்றவர்களுக்கு துணி எடுத்துவிட்டு, தேவையான அனைத்தையுமே வாங்கிக் கொண்டு, ஹோட்டலுக்கு சென்றார்கள். அங்கு இரவு உணவை முடித்துவிட்டு விசுவும் ராதாவும் கிளம்பி விட, தேவராஜனும் மாதவியும் தனியாக வீட்டை நோக்கி பயணித்தார்கள். 

தனிமை கிடைத்ததும் மாதவி “சார் நல்லா யோசிச்சுக்கிட்டீங்களா? கண்டிப்பாக இந்த கல்யாணம் அவசியம் தானா?” என்று மீண்டும் ஆரம்பித்தாள். 

காரை ஓரமாக நிறுத்திய தேவராஜன், “போதும் மாதவி. இனிமேல் இந்த கேள்வியை தயவுசெய்து கேட்காதே. தேவையான அளவிற்கு நான் ஏற்கனவே உன்னிடம் சொல்லிவிட்டேன். இதன் பிறகு சொல்வதற்கு ஒன்றுமில்லை. வேண்டுமென்றால் உன்னிடம் கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எனக்கு வாழ்வு கொடு” என்று கோவமாக ஆரம்பித்து கெஞ்சுதலாக முடித்தான்.

அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு வந்துவிட, வாய்விட்டு சிரித்து விட்டாள். 

சிரிக்கும் பொழுது அவள் கன்னத்தில் விழுந்த குழியை கண்டு ரசித்து, 

“உன் சங்கீத சிரிப்பில் 

மெய் மறந்து போனேன்.. 

உன்  கன்னக்குழியில் விழுந்து 

மெய் தொலைந்து போனேனே.. என்றான்.

“ஆஹா, காவல்துறைக்கு கவிதை எல்லாம் வருகிறதே” 

“”நன்றி நன்றி”

“ஹலோ, நான் சும்மா சொன்னேன். இதை கவிதை என்று வெளியே போய் சொல்லி விடாதீர்கள்” என்று அவனை நக்கல் அடித்தாள். 

இப்படி பேசிக் கொண்டே அவர்கள் வீட்டிற்கு வந்துவிட, காமாட்சியிடம் சென்று வாங்கியவற்றை காண்பிப்பதற்காக நேராக அவர்கள் வீட்டிற்கு சென்றாள். 

வீட்டிற்கு வந்த மருமகளை அன்புடன் வரவேற்ற காமாட்சி, “கதிரும் வாங்கியவற்றை பார்க்க வேண்டும் அல்லவா? அதனால் உங்கள் வீட்டிற்கே போகலாம்” என்று அனைத்தையும் எடுத்துக் கொண்டு கதிரின் வீட்டிற்கு வந்து விட்டார். 

அவர்களின் பின்னாடியே வர இருந்த தேவராஜன் தடுத்த காமாட்சி, “நான்தான் சொன்னேனே. இனிமேல் கல்யாணத்துக்கு அப்புறம் தான் அவள் வீட்டிற்கு நீ போக வேண்டும். நீ போ” என்று மகனை தங்கள் வீட்டிலேயே வைத்துவிட்டு, மாதவியுடன் வந்து வாங்கிய பொருட்களை எல்லாம் பார்த்தார். 

இவர்களுக்கு தேவையான பொருட்களை அங்கேயே வைத்துவிட்டு, மற்றவற்றையெல்லாம் எடுத்துக்கொண்டு, “சரி மா. இந்த புதன் கிழமை திருமணம் என்று சொல்லி இருக்கிறான். அனைத்தையும் தேவாவும் அவங்க அப்பாவுமே பார்த்து வாங்க. அதனால் நீங்க எதைப் பற்றியும் கவலைப்படாமல் நன்றாக ஓய்வெடுங்கள்” என்று இருவரையும் பார்த்து கூறினார். 

தேவராஜன் ஆவலுடன் எதிர்பார்த்த புதன்கிழமை வந்தது. காலையிலேயே அனைவரும் எழுந்து தயாராகியதும், முதலில் தேவராஜன் குடும்பம் வடபழனி முருகன் கோயிலுக்கு வந்து விட்டார்கள். அவனின் நண்பர்களும் காவல்துறை நண்பர்களும் அங்கே கூடியிருந்தார்கள். 

மாதவியை வீட்டிலேயே அலங்காரம் செய்ய வைத்து, அடுத்து காரில் அழைத்து வந்தான் கதிர். முகூர்த்த நேரத்திற்கு சரியாக மாதவி வர, மயிலின் வண்ண புடவை கட்டி, மயில் போல அசைந்து நடந்து வரும் மாதவியை, வாயில் ஈ போவது கூட தெரியாத அளவுக்கு வாய் திறந்து பார்த்த தேவராஜனை, டேய், வாயை மூடுடா. கோயிலுக்குள் வெள்ளம் வந்துவிட போகுது என்று கிண்டல் செய்தான் விசு.

நல்ல நேரத்தில் கோயிலில் வைத்து, தேவராஜன் மாதவி திருமணம் இனிதே முடிய, காமாட்சி இருவரையும் முருகன் சன்னதிக்கு அழைத்து வந்தார். முருகனை வணங்கி அவனின் ஆசியையும் அருளையும் பெற்றுக்கொண்ட பிறகு, வந்திருந்த அனைவரிடமும் ஆசி வாங்க கூறினார் காமாட்சி.

பெரியவர்களும் சிறியவர்களும் இருவரையும் மனமார்ந்த வாழ்த்த, அனைவரும் மகிழ்வாக மதிய உணவை ஹோட்டலில் முடித்துவிட்டு, அவரவர் வீட்டிற்கு சென்றார்கள். 

முதலில் கதரின் வீட்டிற்கு செல்ல, ராதா அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றாள். பின்னர் அங்கு விளக்கேற்றி சாமி கும்பிட்டு விட்டு, கதிர் இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தான். 

இப்படியே அனைவரும் பேசிக் கொண்டிருக்க நேரம் கடந்து இரவும் ஆனது. 

காமாட்சி வந்து மாதவியை அழைத்து குளித்துவிட்டு அவர் கொடுத்த புடவையை கட்டிக்கொண்டு வரும்படி கூறினார். தேவ்வையும் கதிரின் அறைக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படி சொல்லிவிட்டு, அனைவரும் இரவு உணவிற்கு நம் வீட்டிற்கு வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். 

இருவரும் தயாரானதும் தேவராஜனின் வீட்டிற்கு செல்ல, காமாட்சி இருவரையும் ஆரத்தி எடுத்து வரவேற்று, விளக்கேற்றி சாமி கும்பிட வைத்தார். சாமி கும்பிட்டு முடிந்ததும், தேவராஜனின் தங்கை, தம்பி அவனின் காலை கட்டிக் கொள்ள, வாசுகியை தூக்கிய தேவராஜன், மாதவியை பார்க்க அவளோ துருவ்வை தூக்கிக் கொண்டிருந்தாள். 

இருவரும் குழந்தைகளை கையில் வைத்திருக்க, காமாட்சி இருவருக்கும் பாலும் பழமும் கொடுத்தார். மகிழ்ச்சியுடன் இருவரும் தங்கள் தாய் தந்தையரின் கால்களில் விழுந்து வணங்க, இருவரையும் மனமார்ந்த வாழ்த்தினர் இந்திரனும் காமாட்சியும். 

அதன் பிறகு இரவும் உணவுவை முடித்துவிட்டு தேவராஜனின் நண்பர்கள் கிளம்ப, விசுவும் தன் மனைவியை அழைத்துக் கொண்டு கிளம்பினான். 

கதிர் தன் அக்காவை அணைத்து “ஆல் த பெஸ்ட் அக்கா. நம் அம்மா இருந்தால் இன்று மிகவும் சந்தோஷப்பட்டு இருப்பார்கள்” என்றான். 

அவளுக்கும் தன் தாயை நினைத்து கண்கள் கலங்க, காமாட்சி இருவரையும், “இப்பவும் அவர்கள் மகிழ்ச்சியாக உங்களை ஆசீர்வதித்து கொண்டு தான் இருப்பார்கள்” என்று இருவரிடமும் சொல்லி “அம்மா இல்லை என்ற குறை உங்களுக்கு என்றும் இருக்கக்கூடாது. நான் இருக்கிறேன் அல்லவா?” என்று இருவரையும் தன்னுடன் அணைத்துக் கொண்டார். 

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கதிர், “நிச்சயமாக அத்தை” என்று சொல்லிவிட்டு, “சரி காலையில் பார்க்கலாம் தூக்கம் வருகிறது” என்றான். 

அனைவரிடம் சொல்லிவிட்டு தன் வீட்டிற்கு சென்று விட்டான். 

பிள்ளைகளும் உறக்கத்திற்கு தயாராக, “சரி தேவா, துருவ்விற்கும் உறக்கம் வருகிறது. நாங்களும் சென்று உறங்குகிறோம்” என்று சொல்லிவிட்டு, மாதவியிடம், “பால் காச்சி வைத்திருக்கிறேன்மா! ரெண்டு பேரும் குடிங்க” என்று சொல்லிவிட்டு அவர்களது அறைக்குள் சென்று விட்டார்கள். 

தனித்து உட்கார்ந்து இருந்த, தேவராஜனும் மாதிரியும் சிறிது நேரம் ஏதேதோ பேசிக் கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தார்கள். 

மாதவி தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்க, தேவராஜன் டிவியையும் அவளையும் மாறி மாறி பார்த்தான். அவள் கொஞ்சம் அசையாமல் உட்கார்ந்திருக்க, உடலை நெளித்துக் கொண்டு, “சரி, எனக்கு தூக்கம் வருகிறது” என்றான். 

அதன் பிறகு தான் நேரம் ஆவது உணர்ந்த மாதவி, “அத்தை பால் கொடுக்க சொன்னாங்க” என்று சொல்லி சமையலறைக்குச் சென்று காமாட்சி ஊற்றி வைத்திருந்த பாலை எடுத்து வந்து தேவராஜனின் கையில் கொடுத்தாள்.

அவன் அவளை மேலிருந்து கீழ் பார்த்து, “ஹலோ மேடம், இன்னைக்கு நமக்கு ஃபர்ஸ்ட் நைட். நான் கட்டில்ல உங்களுக்காக காத்திருக்க, நீங்கள் பால் சொம்பை எடுத்துக்கிட்டு வெட்கப்பட்டுக்கிட்டே வந்து, என்கிட்ட கொடுக்கணும். இதுதான் ரூல்ஸ். தெரியுமா? தெரியாதா?” என்றான். 

உடனே அவளோ “என்னது வெட்கமா? ஹலோ பாஸ், அதையெல்லாம் நீங்க என்கிட்ட எதிர்பார்க்க முடியாதுன்னு நான் அன்னைக்கே சொல்லிட்டேன்” என்றாள் விரக்தியாக. 

அச்சச்சோ. விளையாட்டாக ஏதோ சொல்லப் போக, இவள் ரொம்ப சீரியஸா ஆகிறாளே என்று மனதில் நினைத்த தேவராஜன், “ஏய், நான் சும்மா சினிமாவில் வருவதை சொன்னேன்” என்று அவளை தன் தன்னுடன் அழைத்துக் கொண்டு தங்களது அறைக்கு வந்தான். 

அறைக்குள் வந்த இருவருமே அதிர்ந்தனர். சினிமாவில் எப்படி முதல் இரவு அறையை அலங்கரித்து இருப்பார்களோ? அதே போலவே முழுவதும் வண்ண வண்ண வாசனை மலர்களால் அலங்கரித்து இருக்க, ஒருபுறம் ஊதுபத்தி எரிந்து அணைந்து இருந்தது. தட்டுகளில் சுவீட்டும் பழங்களும் இருக்க, அனைத்தையும் சுற்றிப் பார்த்த இருவரும், ஒன்று போல் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டார்கள். “நாம் இன்னைக்கு தூங்கவே கூடாது என்று நினைக்கிறேன். தட்டில் உள்ள சுவீட்டையும் பழங்களையும் சாப்பிட்டு முடிப்பதற்குள்ளையே விடிந்து விடும்” என்றான். 

“எல்லோரும் நிறைய தமிழ் படம் பார்த்து கெட்டுப் போய் இருக்காங்க” என்றான். 

“ஆமாம், கொஞ்சம் முன்னாடி நீங்களும் அதே தானே சொன்னீர்கள்” என்று சிரித்துக் கொண்டே கட்டிலில் அமர, அவளின் அருகில் அமர்ந்த தேவராஜன் அவளின் நெற்றியில் முத்தம் கொடுத்து விட்டு, அவளின் காதில் இதழ் உரசி சம்மதம் வேண்ட, அவளும் அவனது ஆசைக்கு இணங்கினாள். 

இத்தனை வருடங்களாக திருமணம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்த தேவராஜன் தன் இல்வாழ்க்கையை அவனின் இதய ராணியுடன் தொடங்கினான். 

சேரியில் பிறந்து வளர்ந்த மாதவி, விதியின் கோலத்தால் வாழ்க்கை சீரழிந்து அப்படியே போய்விடும் என்று நினைத்திருக்கும் வேளையில், தம்பியால் காப்பாற்றப்பட்டு இன்று தேவராஜனுக்கு மனைவியாய் மகிழ்வாய் வலம் வந்து கொண்டிருந்தாள். 

குடும்பத்தின் மூத்த மருமகளாக அனைத்து பொறுப்புகளையும் எடுத்துக் கொண்டு காமாட்சிக்கு கொஞ்சம் ஓய்வு கொடுத்தாள். துருவ்வும் வாசுகியும் அண்ணி அண்ணி என்று எப்பொழுதும் அவளுடன் ஒட்டிக் கொண்டார்கள். 

கதிர் வழக்கம் போல் அவனது வேலைகளை செவ்வனே செய்து கொண்டிருக்க, அவனுக்கு உதவியாக இப்பொழுது மாதவியும் அவன் காப்பாற்றும் பெண்களுக்கு தேவையான மன உறுதியை வழங்கினாள். 

இருவருக்கும் பாதுகாப்பு அரணாக தேவராஜன் இருந்தான். ஒரு நாள் தேவராஜனின் மார்பில் சாய்ந்தபடி, “கதிர் எவ்வளவு தான் முயன்றாலும் மீண்டும் மீண்டும் பெண்கள் புற்றீசல் போல வந்து கொண்டே இருக்கிறார்களே!” என்று வருத்தப்பட்டாள் மாதவி.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

9 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 20”

  1. CRVS2797

    இதெல்லாம் ஒரே நாளில் ஒழித்துவிடும் விஷயமா என்ன..? இதற்கு பின்னாடி ஒரு நெட் வொர்க்கே இருக்குதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *