Skip to content
Home » முகப்பு இல்லா பனுவல் – 5

முகப்பு இல்லா பனுவல் – 5

இன்னும் ஒரு செமஸ்டர் முடிந்தால் தேவராஜனின் பிஎஸ்சி பட்டம் படிப்பு முடிந்துவிடும்.

தேவராஜன் தனக்காக பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் செய்த தன் தந்தையை மனதில் ஒரு ஹீரோவாக வைத்திருந்தான் அப்படிப்பட்டவரை இன்று  ஒரு விலைமாதுவுடன் பார்த்ததை, அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. வெகு தூரம் வண்டியில் சென்ற பிறகுதான் எப்படியும் வீட்டிற்கு சென்று தானே ஆக வேண்டும் என்று வண்டியை திருப்பினான். அவன் கண்ணில் பட்டது சாராயக்கடை. 

தந்தையின் செயலை மறப்பதற்கு வேகமாக சாராயக் கடைக்குள் சென்று விட்டான். 

மகனிடம் இன்று நடந்ததை பற்றி கூறி, இனிமேல் இப்படி நடக்காது என்று சொல்லி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காத்திருந்தார் இந்திரன்.

வழக்கமாக கல்லூரி முடிந்ததும் சிறிது நேரம் நண்பர்களுடன் அரட்டை அடித்து விட்டு ஆறு அரை மணிக்கு ஜிம்முக்கு சென்று விடுவான். எட்டு மணி அளவில் வீட்டிற்கு வந்து குளித்து முடித்து எட்டுரைக்கு எல்லாம் இரவு உணவை முடித்து விடுவான். அதன் பிறகு தான் படிப்பது தந்தையுடன் உட்கார்ந்து பேசுவது படம் பார்ப்பது என்று நேரத்தை கடத்தி பத்தரை மணிக்கு எல்லாம் படுக்கும் பழக்கத்தை உடையவன். 

அதேபோல் காலையில் நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வீட்டில் தன் தந்தையுடன் அமர்ந்து யோகா செய்யும் பழக்கம் சிறுவயதிலிருந்தே அவனுக்கு இருந்தது. ஆனால் இன்று அவன் வீட்டிற்கு வர காலதாமதம் ஆகியது. 

இந்திரனுக்கு தனது மகன் கோபமாக சென்றதை நினைத்து கவலையாகவும் நேரம் ஆக ஆக பயமாகவும் இருந்தது. 

தேவராஜன் வீட்டிற்கு பத்திரமாக வரவேண்டும் என்று கடவுளை வணங்கிக் கொண்டு, வாசலையும் கடிகாரத்தையும் மாற்றி மாற்றி பார்த்துக்கொண்டு இருந்தார். 

ஒருவழியாக பன்னிரண்டு மணி அளவில் வீட்டிற்கு வந்தான்.  அவனுக்காக கதவை திறந்து வைத்தே காத்திருந்த இந்திரன், அவன்  தள்ளாடியபடி வருவதை கண்டு அதிர்ந்தார். அவனது கண்கள் ரத்தச் சிவப்பாக சிவந்து போய் இருந்தது. 

அந்நிலையில் அவனைப் பார்த்ததும் அவருக்கு இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. இத்தனை காலம் எந்தவித கெட்ட பழக்கமும் இல்லாமல் இருந்த தன் பையன், இன்று தன்னாலேயே மது அருந்திவிட்டு வந்திருக்கிறான் என்பதை அறிந்து அவர் துடித்துப் போனார். 

தள்ளாடியபடியே கீழே விழ சென்ற மகனை வேகமாகச் சென்று தாங்கி பிடிக்க முயன்றார். அவர் கை அவன் மேல் பட்டதும் அவரை தட்டி விட்டு விட்டு “என்னை தொடும் வேலை எல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள்” என்று கோபமாக கத்தினான். 

இதுவரை தன்னிடம் அதிர்ந்து கூட எதுவும் பேசாத தேவராஜன் இன்று கோபமாக கத்தியதில் வருத்தமாக அவனிடம் “சாரிடா” என்றார். 

“உங்கள் சாரியை தூக்கி குப்பை கூடையில் போடுங்கள்” என்று சொல்லிவிட்டு அவனது அறைக்குள் சென்று கதவை அடித்துச் சாத்திக் கொண்டான். 

சரி இப்பொழுது கோபமாக இருக்கிறான், விடிந்ததும் அவனிடம் பேசி மன்னிப்பு கேட்கலாம் என்று அவரும் வேதனையுடனே அவரது அறைக்கு உறங்கச் சென்றார். 

மழை பெய்து ஓய்ந்ததால், ஊரே அமைதியாக இருக்க குடிபோதையில் தேவராஜன் உறங்கி விட்டான். ஆனால் புயல் கடந்த பூமி போல், தன் குற்ற உணர்வால் இந்திரனால் உறங்க முடியவே இல்லை. நாளை மகனிடம் பேசிய பிறகுதான் தன்னால் நிம்மதியாக இருக்க முடியும் என்று அவனிடம் பேசும் நேரத்திற்காக காத்திருந்தார். 

மறுநாள் வழக்கம் போல் எழுந்து மகனுக்காக காத்திருந்தார் இந்திரன். இரவு குடித்த மதுவால் காலையில் நேரம் கழித்து எழுந்தான் தேவராஜன். எழுந்ததும் தலை பாரமாக இருக்க, தலையைப் பிடித்துக் கொண்டே வெளியே வந்தான். 

மகனைப் பார்த்ததும் இந்திரன் எழுந்து “ராஜா” என்று அவனிடம் பேச வர, கையை காட்டி அவரை பேசாதபடிக்கு தடுத்து நிறுத்தினான் தேவராஜன். 

அவர் மீண்டும் அவனிடம் பேச வர, அவரை அழுத்தமாக பார்த்துக் கொண்டே சோபாவில் சாய்ந்து கால் மேல் கால் போட்டு அமர்ந்து சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். 

அதைக் கண்டு அதிர்ந்த இந்திரன், அவனிடமிருந்து சிகரட்டை பிடுங்கி தூர எரிந்து “என்ன பழக்கம் இது ராஜா?” என்றார் கவலையாக. 

ஆனால் அவனோ எந்த பதிலும் சொல்லாமல், அழுத்தமாக அவரை பார்த்துக் கொண்டே, அடுத்த சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான். 

அவனது பார்வையே சொல்லியது இனிமேல் என்னிடம் பேசாதே என்று. அவனது பார்வையில் முற்றும் உடைந்து விட்டார் இந்திரன். வேதனையாக அவனை பார்த்துக் கொண்டே தனது அறைக்கு சென்று விட்டார். 

அவர் சென்றதும் சிகரெட்டை தூக்கி எறிந்து விட்டு “ஆஆஆஆ” என்று கத்தி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டான் . 

கதவுக்கு பின்னால் இருந்து மகனின் குரல் கேட்டு இதயம் வெடிக்க சத்தம் இல்லாமல் கதறி அழுதார் இந்திரன். 

பத்து வயது கதிரின் வாழ்க்கை அனாதையாக நின்ற அதே நாளில் தான் தேவராஜன் தனது இருபத்தி ஓர் வயதில் தன்னை அனாதையாக ஆக்கிக் கொண்டான். 

தன் தந்தையின் மேல் உள்ள கோபத்தை காண்பிப்பதற்காக தவறான வழியில் நடக்கத் தொடங்கினான். 

அன்றிலிருந்து தந்தையை பார்க்கும் பொழுதெல்லாம் சிகரெட் பிடித்து அவரின் எதிரிலேயே புகையை ஊதுவான். 

இரவானால் குடிப்பழக்கத்தையும் பழகினான். இந்திரன் அவனது நண்பர்கள் மூலம் அவனது பழக்கத்தை மாற்ற முயற்சி செய்தார். 

சில நண்பர்கள் நல்ல விதமாக அவனை மாற்ற நினைத்தாலும், சிலர் அவனை தவறான பாதைக்கு அழைத்துச் சென்றார்கள். 

தனக்கு அட்வைஸ் செய்யும் நண்பர்களை தள்ளி நிறுத்தினான். அளவோடு பழக ஆரம்பித்தான். 

தனக்கு ஆதரவாக பேசுபவர்களுடன் அதிகம் இருந்தான்.

மொத்தமாய் பார்ப்பதற்கு அவனது நல்ல நண்பர்களை எல்லாம் எட்ட நிறுத்தி இருப்பது போல் தோன்றியது. அவனை கெடுக்கக்கூடிய நண்பர்கள் அவனின் அருகில் மிகவும் நெருக்கமாக இருப்பது போல் இருந்தது. 

ஆனால் உண்மையில் அவன் தன்னை உசுப்பேற்றும் நண்பர்களையும் எச்சரிக்கையாக தள்ளியே நிறுத்தி இருந்தான். உண்மையான நண்பர்களுடன் அளவாக பேசினாலும், அவர்களுடன் உணர்வுபூர்வமாக இருந்தான். 

அவனது மிக நெருங்கிய தோழன் விசுவநாதன் என்ற விசு. அவனுக்கு மட்டுமே தெரியும் தேவ ராஜன் ஏன் இப்படி மாறினான் என்று. 

கல்லூரி முடிந்ததும் விசு தந்தையின் தொழிலை பார்க்க சென்று விட, இவன் ஐபிஎஸ் எக்ஸாமுக்கு தயாராகினான் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தேவராஜனை வந்து பார்க்கும் விசு, “டேய் தேவா.. ஏன் உன்னை இப்படி பாழ்படுத்திக் கொள்கிறாய்? அப்பா என்றோ ஒரு நாள் செய்த தவறுக்கு தண்டனை கொடுப்பதாகச் சொல்லி, இப்போது அதைவிட பயங்கரமான தவறுகளை எல்லாம் நீ செய்து கொண்டிருக்கிறாய். உனக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்?” என்று கேட்பான். 

விசு உடன் இருக்கும் பொழுது மட்டும்தான் தேவா உண்மையான குணத்துடன் இருப்பான். விசுவிடம் இதுவரை தேவா எதையும் மறைத்ததில்லை. முதல் முறை புகைபிடித்ததிலிருந்து, இன்று அவன் எந்த பெண்ணுடன் சென்றான் என்பது வரைக்கும் விசுவிற்கு தெரியும்.

ஆம் முதலில் தந்தையின்  மேல் உள்ள கோபத்தில் புகையையும் மதுவையும் கையில் தொட்ட தேவா, நாட்கள் கடக்க தீய நண்பர்களின் சவகாசத்தால் மதுவை மட்டுமல்ல மாதுவையும் சுகிக்க தொடங்கி விட்டான். 

என்னதான் சிகரெட் குடி என்று இருந்தாலும் தன் உடற்பயிற்சியையும் போலீஸ் ஆக வேண்டும் என்ற எண்ணத்தையும் சிறிதும் கைவிடாமல் தொடர்ந்து அதற்கான முயற்சியை எடுத்துக் கொண்டே இருந்தான். 

அவனது விடாமுயற்சியின் விளைவாக ஐபிஎஸ் பரீட்சையில் முதன்மை மதிப்பெண் எடுத்து, நேரடியாக இன்ஸ்பெக்டர் பதவியில் தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் பதவி ஏற்றான். 

அவனது திறமை, ஆளுமை இவற்றால் படிப்படியாக முன்னேறி இன்று சென்னை கமிஷனர் ஆக பதவி வகிக்கின்றான். 

நண்பன் விசு அவனிடம் தொடர்ந்து பேசிப் பேசியே அவனது அப்பாவின் மீது இருந்தன் கோபத்தை குறைத்து விட்டான். அதன்பிறகு நிதானமாக யோசிக்கும் பொழுது தான் அவனுக்குமே தான் செய்த தவறு தெரிந்தது. 

இருபத்தி ஏழு வயதில் அவனின் கூட படித்த நண்பர்கள் அனைவரும் வாழ்க்கையின் அடுத்த கட்டமான திருமணத்திற்கு ஒவ்வொருவரும் நுழைய, தேவராஜனோ எனக்கு திருமணமே வேண்டாம் என்று இருந்து விட்டான். 

விசுவும் எவ்வளவோ வற்புறுத்தியும் இவன் தன்னுடைய நிலையை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ள மாட்டேன் என்று இருந்து விட்டான். 

விசு  இந்திரனிடம் என்னால் தேவாவின் மனதை கொஞ்சம் கூட மாற்ற முடியவில்லை அப்பா. சாரி என்று மன்னிப்பு கேட்டான். 

அவரும் பெருமூச்சு விட்டுக்கொண்டு நான் செய்த ஒரு தவறு என் மகனின் வாழ்க்கையை இப்படி மாற்றி விட்டது என்று மிகவும் வருந்தினார்.

“கவலைப்படாதீங்கப்பா. என்றாவது ஒரு நாள் நிச்சயம் மாறுவான்” என்று சொல்லி தனது திருமண பத்திரிக்கையை கொடுத்துவிட்டு சென்றான். 

சென்னையில் உள்ள பிரபல ஹோட்டலில் தான் விசுவின் திருமணம் நடைபெற்றது. இரவு ரிசப்ஷன் முடிந்து நண்பர்கள் பேச்சிலர் பார்ட்டி கேட்க ஒரு அறையில் அவர்களுக்கு பார்ட்டி ஏற்பாடு செய்திருந்தான். 

அதில் கூடி பேசிக் கொண்டிருந்த நண்பர்கள் ஒரு கட்டத்தில் விசுவையும் குடிக்க வற்புறுத்தினர். 

அவர்களின் விளையாட்டு தீவிரமடைய “டேய் சும்மா இருங்கடா. ஒருத்தர் வேண்டாம் என்றால் அவர்களை வற்புறுத்தக் கூடாது” என்று அனைவரையும் திட்டிய தேவராஜன் விசுவை அழைத்துக் கொண்டு அவனது அறைக்கு வந்து விட்டான். 

“நாளை காலையில் முதல் முகூர்த்தம் டா. அதனால நீ கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு அதை முடித்துவிட்டு காலையிலேயே வந்துவிடுகிறேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பினான். 

விசுவின் திருமணத்தின் போது அவன் அசிஸ்டன்ட் கமிஷனராக இருந்தான். அவன் பொறுப்பில் இருந்த காவல் நிலையத்திற்குச் சென்று சில வேலைகளை முடித்துவிட்டு அங்கிருந்த இன்ஸ்பெக்டரிடம், இங்கிருந்து அவன் வீடு இருக்கும் ஏரியாவின் பெயரைச் சொல்லி அதுவரை அதுவரை இன்று நான் ரோந்து போய் விடுகிறேன். நீங்கள் மற்ற ஏரியாவை பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு கிளம்பினான். 

அவனது போலிஸ் தீர்ப்பை மெதுவாக ஓட்டிக்கொண்டு சாலையின் இரு புறத்திலும் கண்களால் வலை வீசிக்கொண்டே தனது வீடு நோக்கி பயணித்தான். 

அவன் செல்லும் திசைக்கு எதிர் திசையில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருப்பது போல் தெரிந்தது. தன் காவல் வண்டியை திருப்பிக் கொண்டு அவரின் அருகில் வந்து நிறுத்தினான். 

ஒரு பக்கம் ஒரு பையும் மறுபக்கம் ஒரு இரண்டு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தையை அணைத்தபடி உட்கார்ந்திருந்தார் அந்த பெண்மணி. 

அந்தக் குழந்தை சுகமாக அந்தப் பெண்மணியின் மடியில் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தது. அந்தப் பெண்மணியும் உட்கார்ந்து கொண்டே தூங்கிக் கொண்டிருக்க, தன் கையில் இருந்த லத்தியை வைத்து அங்கிருந்த இரும்பு பெஞ்சில் கட்டினான். சத்தத்தில் திடுக்கிட்டு எழுந்த அந்த பெண்மணி தன் எதிரில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் ஒருவன் நிற்பதை கண்டதும் பயந்து நடுங்கினார். 

“யார் நீ? இங்கே ஏன் உட்கார்ந்து இருக்க?” என்று கேட்டுவிட்டு விரைத்தபடி நின்றான் தேவராஜன்.

தொடரும்…

– அருள்மொழி மணவாளன்…

8 thoughts on “முகப்பு இல்லா பனுவல் – 5”

    1. CRVS 2797

      அட.. அந்த பொண்ணு ஒருவேளை தேவராஜோட பழகின பெண்கள்ல ஒருத்தியோ…??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *