👇 கதைகள் வாசிக்க / கேட்க 👇
💎 Premium Site🛒 Amazon Kindle▶️ YouTube Audio
Skip to content
Home » முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4

முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4

💟-4

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     அகமேந்தி அலுவலகம் வந்த நேரம் தருணேஷும் வந்திருந்தான்.

    ஆனால் முகம் வாடி ஓய்ந்திருந்தது. அவனை கடக்கும் நேரம் சின்னதாய் முறுவலித்து சென்றாள்.

       அதில் சிநேகிதம் தாண்டி எதுவுமில்லை. தருணேஷிற்கும் அது நன்றாகவே புரிந்தும் அங்கும் இங்கும் பார்ப்பவர்களின் கழுகு கண்களுக்கு அவள் தன்னை காதலோடு கடப்பதாய் பார்த்து மிதந்தான். 

    அருகே சென்று பேசினாலே காதல் என்று கசியும் என்று அகமேந்தி ஜாக்கிரதையாக இருந்தாள்.

   அப்படியிருந்தும் அவள் காதுபட, “வந்ததும் தருணேஷை காதலிக்க வைச்சிட்டா. கைக்காரி…” என்ற பேச்சு தான் எதிரொலித்தது.
   
    நேரடியாய் பேசினால் மறுத்து பேசியோ தன்னை விளக்கியோ நட்போடு, இல்லையென பகிர்ந்து இருப்பாள். ஆனால் தருணேஷிடம் விருப்பம் தெரிவித்து அவனால் அவமதிக்கப்பட்ட பெண்களுக்கு, அகமேந்தியை கண்டால் பொறாமையும் வந்தது. அதனால் வேண்டுமென்றே ஏகத்துக்கு அவள் காதில் விழ பேசியதே அதிகம்.

      தருணேஷிற்கு அது தெரிந்தும் தனக்கு அதுவும் லாபமே. புரளியை விரும்பியதும் அவன் தானே. அவன் தானே புரளிக்கு பிள்ளையார் சுழியிட்டு ஆரம்பித்தவனும் கூட.

  யார் கண்டுக் கொள்ள எண்ணினானோ அவளோ காதில் வாங்கியது போல இல்லை. தேஜூவோடு வருவாள். அலுவலகமே கண்ணாக பணிப்புரிந்து நடப்பாள். மாலை தேஜூ வந்தவுடன் புறப்பட்டு விடுவாள். மற்றவர்களிடம் சின்ன சிரிப்பு. ஒரு வரி பதில். இதை தான் வெளிப்படுத்துவாள் அகமேந்தி.

     வாரங்கள் மாதங்களாக கழிய, அலுவலகம் வருவதும் போவதிலும் கவனமிருக்க, அன்று அதிக பணியில் பக்கத்து அலுவலகத்தில் பணிப்புரியும் ரிச்சார்ட் அதிகமாக டீஸ் செய்து நெருங்கவும், பணிச்சோர்வு அதிகமாக இருந்ததாலும், பெண்ணுக்கு முக்கிய மூன்று நாளில் அவதிப்பட்டதாலும் பதிலுக்கு தவிர்க்கவோ, தாக்கவோ முடியாது தவித்தாள்.

     “ஏய் பேபி… டேட் போகலாமா?” என்று கேட்க, தருணேஷ் வந்து காதலனாக நடந்து அழைத்து செல்ல, நிம்மதி அடைந்தாள் அகமேந்தி.

       அடுத்த நாள் தொலைக்காட்சியில் அந்த ரிச்சார்ட் யாரோ ஒரு பெண்ணை டேட்டிங் அழைத்து சென்று, போதை வஸ்து கொடுத்து அத்துமீறியதாக பரபரப்பாக செய்தி வெளியானது.

      அதை பார்த்ததும் அகமேந்தி தேஜூவிடம் நேற்று தன்னை அழைத்ததையும் தருணேஷ் தான் காப்பாற்றியதையும் கூறி முடித்தாள்.

     “ஓஎம்ஜி அகமேந்தி… நேற்று மட்டும் தருணேஷ் வரலைனா என்ன ஆகறது. எப்பவும் ஹீரோ காப்பாற்றிடறான். என்னிடம் இப்படி நடந்தா தருணேஷ் கூட காதலித்து இருப்பேன். உனக்கு தோணலையா?” என்றதும் அகமேந்தி முறைத்து விட்டு அங்கும் இங்கும் நடந்தாள்.

       அப்பாவிடம் தருணேஷ் தன்னை விரும்புவதை சொல்லி அவனின் காதலை ஏற்று கொண்டால் என்ன? இதே சிந்தை சுழல, “நான் தருணேஷிடம் அவன் காதலை அக்சப்ட் பண்ண போறேன்.” என்றாள்.

      “ஏ… நிஜமா.?” என்றதும் “ம்ம்… எனக்கு இதுவரை காதல் என்று எல்லாம் இல்லை தேஜூ. தருணேஷ் விருப்பத்தை ஏற்றா என்ன? என்று தோணுது. அப்பாவிடம் சொன்னா காதலுக்கு மறுப்பு தெரிவிக்கற ஆள் இல்லை. என்ன கல்பனா ஆச்சி தான் ஏதாவது சொல்லும். வேலைக்கு இங்க வர்றப்பவே முணங்கிட்டே இருந்தது. அதுக்கு நான் இங்க வேலை பார்க்கறதே பிடிக்கலை.” என்று சொல்லவும்.

     “சூப்பர் நீ கிளம்பு. லவ் ஓகே பண்ணு. எனக்கு ட்ரீட் வை. அப்பறம் கிஷோரோட இன்ட்ரோ கொடு. அப்ப தான் ஆப்டர் மேரேஜ் நாம இதே பிரெண்டா இருக்கலாம். அவனும் பெங்களூர். நான் இங்க தான் செட்டில் ஆகப்போறேன். தருணேஷும் இங்க தான் என்றால் நம்ம இன்னமும் கிளோஸ் ஆகலாம். பேமிலி பிரெண்ட் கூட ஆகலாம்.” என்று பேசிக்கொண்டே போனாள்.

      “அது எப்படி டி மடமடவென பிளான் போடற… ஸ்ஸப்பா…” என்றவள் தேஜு இன்று விடுமுறை எடுத்து, அவள் சேர்த்து வைத்த அழுக்கு துணியை துவைக்க ஆரம்பித்தாள்.

     அதனால் இன்று ஆட்டோவில் பயணித்து அங்கே சென்று தருணேஷிடம் வந்து நின்றாள்.

     “தருணேஷ் உன்னிடம் பேசணும்.” என்று தயங்க,

     “வா கேண்டீன் போய் சாப்பிட்டுட்டே பேசுவோம்.” என்று தருணேஷ் கூறவும் ஆமோதித்து அவனோடு சென்றாள்.
 
     “ஆக்சுவலா நீயும் நானும் காதலரா இங்க வந்து காபி குடிச்சி… நிறைய பேசணும்னு எனக்கு கனவு. பட் நீ தான்…” என்று தயங்கினான்.

    “அதை தான் சொல்ல வந்தேன் தருணேஷ். நானும் உன்னை விரும்ப முயற்சி பண்ணறேன். லவ் பண்ணறேனு சொல்லலை. பட் காதலிக்கறதுல நோ பிராப்ளம்னு தான் நினைக்கறேன்” என்று சொல்லவும்

     “ஏய்… அகி…” என்று அணைக்க போனவனை, தடுத்து நிறுத்தி ”இது இது கேண்டீன். இந்த மாதிரி வேண்டாம்.” என்று சொல்ல, தருணேஷ் மகிழ்ச்சியடைந்து கொண்டான்.

    “நம்ம லவ்வை கொண்டாட எல்லாருக்கும் ட்ரீட் வைக்கலாமா?” தருணேஷ் கேட்டதும் புருவம் சுருக்கி, “எல்லோருக்கும் ட்ரீட் தர அளவுக்கு ரிச்சா?” என்று சந்தேகம் வரவும்,

    “நம்ம டீம் மெம்பருக்கு கொடுக்க கேட்டேன்” என்றான் தருணேஷ்.
    
   சம்மதமாய் தலையசைத்து தன் இடம் வந்து அமரவும் அவசரப்படுகின்றோமோ என்ற உணர்வு தாக்கியது. அதை பெரிதுப்படுத்தாது பணியில் முழ்கினாள்.

       வசந்த் மூலமாக தருணேஷ் அகமேந்தி கேண்டீன் சென்றதை அறிந்து அசையாதா சிலையாக இருந்தான் சைதன்யன்.

    அதுவும் மதியம் ட்ரீட் தந்து முடிக்க, இங்கு சைதன்யனோ ஒரு வாய் கூட சாப்பிடாமல் இருந்தான்.

     வசந்த் கடினபட்டு “சார் சாப்பிடாம?” என்றதும் சைதன்யன் அவனை நிமிரவும் பேசாது வார்த்தை அப்படியே நின்றான்.

     “எனக்கு என் போட்டோவை கொடுத்த தரகரிடம் அகமேந்தி அப்பாவிடம் சென்றவர்களுக்கு போன் பண்ணுங்க.” என்றான். ஏன் எதற்கு என்பதை புரியாமல் அவனும் அழைத்தான்.

    எல்லோரிடமும் ஒரே கேள்வியை கேட்டான். “என்னை எதற்காக அகமேந்தி அப்பா தவிர்த்து இருக்க கூடும்” என்பது தான். ‘நான்கு பேர் தெரியலை சார் அவருக்கு சரினு பட்ட ஜாதகம் போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டார்.’ என்று தான் சொன்னார்கள்.

   இரண்டு பேர் மட்டும் ‘அதீத பணம் படைத்தவர் ஜாதகம் வேண்டாமென ஒதுக்கியதை’ சொன்னார்கள்.

   இன்னும் இருவர் ‘இங்க தான் தாய் இல்லாம வளர்ந்துடுச்சு. போற இடத்துலயாவது அத்தை நாத்தனாரென இரண்டு பேர் இருக்கணுமே. நாத்தனார் இல்லைனாலும் அகமேந்தியை தாங்க நாளைப்பின் குழந்தைப்பேறு காலத்தில் மாமியார் வேண்டுமே’ என்பதும் தெரிய வந்தது.

     சைதன்யன் வசந்திடம், ”பார்த்தியா இதான் காரணம்” என்றவன் மீண்டும் அந்த தரகரிடம் ‘சாதரண அவங்க குடும்ப அளவுக்கு தான் நிலை என்றும், அம்மா இருப்பதாகவும் சொல்லுங்க’  என்றவாறு சொல்லி மீண்டும் ஒரிருமுறை முயற்சிக்க சொன்னான்.

     சாப்பாட்டை துறந்தவன் அங்கும் இங்கும் நடந்தான். கண்ணாடி திறப்பு வழியாக தருணேஷை கண்ட பொழுது வெற்றியடைந்த வேட்பாளராக மமதையில் அமர்ந்து இருப்பது போல இவனுக்கு பட்டது. அக்கோபத்தில் தன் பேப்பர்  வெயிட்டை தூக்கியெறிய அது அங்கிருந்த கிளாஸ்  பெயிட்டிங்கை பதம் பார்த்தது. சில்லுசில்லாக அந்த ஓவியம் சிதற, சைதன்யன் மனமும் அதே போல பல பிளவு கொண்டு சிதறியதை உணர்ந்தான்.

    ‘இவன் என்னை வென்றவனா?’ என்ற அலட்சியம் அதில் நிறைந்து வழிய, தன் போனிற்கு இனி அந்த எண்ணிற்கு அழைக்கவே கூடாதென இருந்த எண்ணிற்கு அழைத்தான்.

      போன் மணி ரிங் சென்றுக் கொண்டிருந்தது. மறுபக்கம் எடுக்கப்பட்டதும்…

     “எனக்காக ஒரு வீட்ல போய் பேசணும். கல்யாணம் பண்ண சாதகமா… வசந்த் மீதியை வந்து உங்களிடம் சொல்வான். உங்களால் முடியுமா? முடியாதா? என்பதை  மட்டும் சொல்லுங்க.” என்று பேசி முடிக்க,

     “நீ விரும்பற பெண் வீட்ல போய் பேச நான் தயார்.” என்றது மறுப்பக்கம் ஒரு பெண்ணின் குரல்.

      “அ..அங்க… நீங்க அம்மானு…” என்று போனை திருப்பி விட்டு தன்னை சாந்தப்படுத்தி விட்டு “அங்க அம்மாவா…” என்று மீண்டும் பேச அதனை இடைவெட்டி “பையனுக்கு அம்மாவா போய் தான் பேசணும். புரியுது… நீ வசந்த்கிட்ட என்ன விஷயம், இடம், என்ன பேசணும்னு சொல்லி விடு.” என்றதும் “தேங்க்ஸ்” என்று அணைத்து விட்டான்.

     “வசந்த்… அவங்களிடம் போய் நான் மிடில் கேட்டகிரி என்றும் எனக்கு அவங்க அம்மாவா போயி  அகமேந்தியை பெண் கேட்டு திருமணத்துல முடியற வகையில் மற்றவையை பார்க்க சொல்.” என்று ஆணைப் பிறப்பித்தான்.

      வசந்திற்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை இப்படி சைதன்யன் நடந்துக்கொண்டு பார்த்ததில்லை. எப்படி ப்ரியங்கா மேடத்திடம் உதவி கேட்கின்றார். எப்படியும் இது உதவி அல்ல அவரை பொருத்தவரை கட்டளை தான். அது கூட அவரிடம் கேட்க மாட்டாரே.
இன்னும் என்ன என்ற அர்த்தத்தில் சைதன்யன் பார்த்து வைக்க, வசந்த் சைதன்யன் கூறிய வேலையை பார்க்க சென்றான்.

     ஒரு வாரம் சென்றது.

          தருணேஷ் இரண்டு நாளாக அகமேந்தியை டிராப் செய்யும் வேலையில் சைதன்யன் உச்சப் பட்ச கோபம் அடைந்தான்.

     அகமேந்தி தனது பணியில் சில மெயிலை சைதன்யனுக்கு அனுப்ப அவனோ அதில் சில கோப்பையை பிரிண்ட் அவுட் கேட்டு இருந்தான்.

     அதை கொடுக்க செல்ல தப்பும் தவறியும் இருந்தவை தான் எடுத்து சென்றாள். சேவ் ஆகாமல் இருந்தமையால் பழைய பிழை அப்படியே இருந்தது. சைதன்யன் வாங்கி பார்த்து,

    “இது என்ன? ஏகப்பட்ட மிஸ்டேக் இருக்கு. பேர் காபியை எனக்கு அப்படியே எடுத்து வந்து இருக்க. பைனல் காபி இன்னும் ரெடியாகலையா? காதலிக்க ஆரம்பிச்சா வேலையில் கவனமிருக்காதா…” என்றான். அவன் பேச்சு சாதரணமாக இருக்க, பார்வை மட்டும் வேறு விதமாக கணிக்க இயலாத வகையில் இருந்தது.

     “சாரி சார். கரெக்ட் பண்ணினேன். பட் சேவ் ஆகாம அப்படியே இருக்கு. என்னனு பார்க்கறேன்.” என்றாள்.

     “என்னத்த கரெக்ட் பண்ண? நீ பண்ணியிருக்கறது அதே பிழையானதை தான். கெட் லாஸ்ட்” என்றான். அவன் குரலே இது இந்த பிரிண்ட் பற்றியதா? என்னும் வகையில் இருந்தாலும் அதற்கு மேல் அகமேந்தி யோசிக்கவில்லை.

      மீண்டும் அதே உணர்வுக்கு ஆளானாள். யாரோ தன்னை கூர்ந்து ஆராய்வது போன்று இருக்க தருணேஷ் தான் முதலில் கண்டாள். அவனோ அசட்டையாக பணிப்புரிவது கண்ணில் தோன்றியது. பிறகு இந்த உணர்வு எதனால்? என்று சுற்றி நோட்டமிட்டாள்.

          அங்கே… சைதன்யன் அறையில் இருந்து தன்னை பார்ப்பது தெளிவாக தெரிந்தது.

          எப்பொழுதும் அகமேந்தி இந்த பக்கம் பார்வை திருப்பினால் உடனே பார்வையை வேறு பக்கம் மாற்றும் சைதன்யன் இன்று அர்ஜுனன் குருவியின் கண்ணை மட்டுமே பார்த்து குறி வைப்பவன் போல அவள் மீது மட்டுமே பார்வையை வைக்க, அகமேந்தி தான் உடனடியாக பார்வையை மாற்றினாள்.

     ‘ஐயோ பிரிண்ட் அவுட் ஒழுங்கா கொடுக்கற வரை இவர் என்னை தான் நோட் பண்ணுவார் போல, இதுல நான் தருணேஷ் வேற பார்த்தேன். அதுக்கு ஏதாவது குட்டு வைத்து பேச போறார். முதலில் இந்த ஒர்க் சரியா பண்ணணும் இப்படி யாராவது பார்க்கின்ற உணர்வு இப்பவா நடக்குது. நமக்கு இங்க வந்ததில இருந்தே அப்படி தான் நம்ம வேலையை பார்ப்போம்’ என்றெண்ணி கொண்டாள்.  

          இங்கே சைதன்யனிடம் பேசிய பெண், வித்யாதரனிடம் வீட்டில் தரகரோடு வந்து, பெண்ணை பார்க்க வந்ததாக கூற, அவரோ முதல் முறை தானாக வந்த வரன் என்றதிலே அழைத்து அமரவைத்தார்.

          ”பெண் பெங்களூர்ல வேலை பார்க்குறா. இதான் போட்டோ” என்று கல்பனா ஆச்சி எடுத்து காட்டவும் தான் பிரியங்காவுக்கு அப்போ அதனால தான் இந்த இடம் ஊரில் பெண் இருக்கே என்று சந்தேகித்தேன். பொண்ணு அப்போ அவன் பார்வையில் இருக்கா? என்று எண்ணி சைதன்யனின் குணம் அறிந்தே வியந்தார்.

          வித்யாதரன் அதிகம் பேசவில்லை. எல்லாம் அவரின் தாய் கல்பனா பேச அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமர்ந்து இருந்தார்.

சுவடு பதியும்.

    -பிரவீணா தங்கராஜ்.

  *சைதன்யன் திட்டம் என்ன?

பிரியங்கா யார்?

தருணேஷ் – அகமேந்தி காதல் சேருமா? அடுத்த அத்தியாயம் வரும் வரை காத்திருக்கவும்.

3 thoughts on “முத்தமிட்டு சுவடுபதி ஆலியே-4”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!