லாவா மன்னவா-18
அதிகாலை கண்விழித்த நேரம் சோபாவில் படுத்திருந்த ஹரிணியை கண்டு, ‘எந்திரிக்காம தூங்கறா’ என்று கிச்சனை நோட்டமிட்டான்.
அங்கு எந்த உணவும் தயாராகவில்லை என்றதும், தலையிலடித்து டிவியை அதீத ஒலியில் வைத்தான் விக்ரம்.
முகம் சுணங்கி ஹரிணி எழுந்தவள், எரிச்சலோடு “டிவியை ஆஃப் பண்ணு” என்று கத்தினாள்.
“ஹலோ.. இது என் வீடு. என் டிவி. அப்படி தான் சவுண்ட் வைப்பேன். என்னடி பண்ணுவ?” என்றான்.
“உன் வீடு தான். இல்லைன்னு சொல்லலை. அதான் நாய் மாதிரி என்னை வெளிய வச்சி லாக் பண்ணிட்டியே. உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சி இல்லையா?” என்றாள்.
“ஏய்.. நீ தான்டி நேத்து தண்ணி குடிக்க வரலாம்னு கதவை திறக்கலாம்னா, வெளிய லாக் பண்ணியிருந்த. உனக்கு தான் மனசாட்சி இல்லை. ஏன் அவ்ளோ பயமா? கற்பை சூறையாடிடுவேன்னு. அந்தளவு பயமிருக்கறவ என்னை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்ட.” என்றான்.
ஹரிணியோ நான் லாக் பண்ணியதும் நீ லாக் பண்ணியதும் ஒன்னா? உனக்கு அப்ப கூட வாட்டர் பாட்டிலில் தண்ணி வச்சிட்டு தானே லாக் பண்ணினேன். ஆனா இந்த வீட்ல அந்த ரூம்ல மட்டும் தான் ரெஸ்ட் ரூம் இருக்கு. அதை யோசிச்சியா? எனக்கு பீரியட்ஸ்… பேட் அந்த ரூம்ல தான் இருக்கு. நீ பாட்டுக்கு கதவை லாக் பண்ணிட்ட. நான் நேத்து எந்த நிலையில துடிச்சேன்னு தெரியுமா? கதவை தட்டினா திறக்கவும் இல்லை. இந்தளவு மனசாட்சி இல்லாதவனா இருந்தா, நீ ஏன்டா தாலி கட்டின?” என்றதும், அவளது கைகால்கள் வலுவிழந்து பேசுவதை அப்பொழுது தான் கவனித்தான் விக்ரம்.
தலையிலடித்தபடி விக்ரம் திரும்ப, கோபமாக அறைக்குள் சென்றாள். அவள் உடையில் ஆங்காங்கே கறையிருக்க, கூடுதலாக சங்கடப்பட்டான் விக்ரம்.
இந்தளவு அவன் யோசிக்கவில்லை. ஆனாலும் இயற்கை உபாதைக்கும் அவள் தவிப்பாளென யோசித்திருக்க வேண்டும். அவள் யோசித்து வாட்டர் பாட்டிலை வைத்தாளே. ஏன் தனக்கு அந்த எண்ணம் போல யோசிக்கவில்லை என்று முதல் முறை தலைகவிழ்ந்தான்.
குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்க, பாலை சூடுபடுத்தினான். அதோடு காலை உணவை ஆன்லைனில் ஆர்டர் தந்துவிட்டு, ஹரிணியிடம் மன்னிப்பு கேட்க நின்றான்.
அவளோ முப்பது நிமிடம் கழித்து தான் அறையிலிருந்து வெளியே வந்தாள்.
அவள் கதவை திறக்கும் நேரம் மீண்டும் பாலை சூடுப்படுத்தி தர நினைத்தான். ஆனால் அவளை போலவே கிச்சனில் வைத்துவிட்டு பால்கனிக்கு சென்றிருந்தான்.
ஒரு மனம் அவளிடம் மனம் விட்டு பேசிப் பார் என்றது. மறுமனமோ, ‘பேசுன்னா.. என்னத்த பேச. முதல் கோணல் முற்றிலும் கோணலா முட்டிட்டு இருக்கேன். எது பேசினாலும் சண்டையில முடியுது. என்னை அறியாம நானும் பேசி தொலைக்கறேன்.’ என்று நினைத்தவனுக்கு அலுவலகம் வேறு செல்ல வேண்டும் என்று தோன்ற ஹரிணியை பார்வையிட்டான்.
அவளோ அறையின் உள்பக்க தாழ்பாளை அகற்ற முயன்றாள்.
ஏதோ இவன் இனியும் கதவை தாழிட்டு அவளை காயப்படுத்துவதாக அவளது நடவெடிக்கை இருக்க, அவள் தாழ்பாளை நீக்கியதும், அவளிடமிருந்து ஸ்க்ரூவை பிடுங்கி இவன் வெளி தாழ்பாளின் நட்டை நீக்கினான். இருவரின் பார்வையும் கோபத்தில் சிவக்க, விக்ரமாகவே அலுவலகம் செல்ல பையை தூக்கினான்.
சரியாக வெளி கதவை திறக்கும் நேரம், “போன் மின்னியது. “ஹலோ” என்றதும் மறுபக்கம் டெலிவெரி பாயின் பேச்சு கேட்டது.
“ஆமா.. இந்த அட்ரஸ் தேர்ட் ப்ளோர்ல செகண்ட் வீடு” என்றான். இரண்டு நொடியில் புட் பார்சல் வந்து நீட்ட, அதனை வாங்கி பால் இருந்த பக்கம் வைத்துவிட்டு பணத்தை வழங்கினான்.
டெலிவெரி பாய் செல்லும் பொழுது அவனும் கூடவே சென்றான். அவனுக்கும் சேர்த்தே தான் உணவை ஆர்டர் தந்தது. ஆனால் அங்கிருக்க ஏனோ மனம் முரண்டியது.
விக்ரம் சென்றதும், அங்கிருந்த சூடான பாலை கண்டவள், அதை எடுத்து பருகினாள்.
உணவையும் பிரித்து பார்த்தவள், நேரத்தை கவனித்து கொஞ்ச நேரம் கழித்து சாப்பிடலாமென முடிவெடுத்தாள்.
தற்போது இருந்த அறையிலும் தாழ்பாளை இருபக்கமும் எடுத்தாயிற்று.
நிதானமாக யோசிக்கவும், ‘என் மேல தான் முதல் தப்பு. நான் வாட்டர் பாட்டிலை உள்ள வச்சிட்டு லாக் பண்ணிருக்க கூடாது.
ஒரு மாதிரி பயமா இருந்தது. தனியா விக்ரமோட இந்த வீட்ல இருந்ததில் முட்டாள்தனம் பண்ணிட்டேன். அவன் வீட்ல அவனை லாக் பண்ணினேன்.
அதுக்கு அவனும் பதிலுக்கு பண்ணினான்.
ஆனா என்ன செய்ய, பாத்ரூம் போக முடியாம கஷ்டமா போச்சு. இதுல பீரியட்ஸ் வேற.’ என்றவள், அவனாக பாலாத்தி வைத்ததை எண்ணியும் உதட்டில் புன்னகை பூத்தாள். பால் எல்லாம் ஆத்தி தந்திருக்கான்’ என்று எண்ணினாள்.
குளிக்கும் பொழுது கூட டிபன் செய்யணும். லஞ்ச் கூட செய்யலை என்று எண்ணியவளுக்கு வேலை இல்லாமல் டிபனை ஆர்டர் தந்து விட்டான். ஏனோ இது போன்ற செய்கை தான் அவனை மணக்க சம்மதிக்க வைத்தது.
ஹரிணி கைகள் தானாக அவன் புத்திசுவாதினம் இல்லாத பெண்ணுக்கு உடையை போட்ட வீடியோவை பார்வையிட்டாள்.
கீழே கமெண்ட்ஸுகள் பாராட்டியபடி குவிந்திருந்தன.
அதிலும் சில கமெண்ட்ஸில், ‘உண்மையான ஆண்மகன்’
‘பெண்ணை இப்படி தான் பாதுக்காப்பா நடத்தணும்’ என்ற கருத்துகளில் ஹரிணிக்கு சிரிப்பு தான் வந்தது.
‘இந்த மூஞ்சி என்கிட்ட என்ன பேச்சு பேசுச்சு. இப்பவரை எனக்கும் அவனுக்கும் ஏதோ வார்த்தைப்போர் அதிகமாகுது. ஆனா உலகத்துல எப்படிப்பட்ட பெயர் வாங்கிட்டான்’ என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.
இரண்டு செட் பூரி பாக்ஸில் இருக்கவும், ‘அவனுக்கும் சேர்த்து வாங்கியிருப்பானோ?’ என்று எண்ணினாலும், பூரியை சுவைத்தாள்.
மதியம் தயிர் சாதம் செய்திட நினைத்தாள். தனக்கு மட்டுமென எண்ணும் போது இது போதுமானதாக தோன்றியது.
மெட்ரோவில் பயணம் செய்யும் பொழுது, விக்ரமிற்கு ஹரிணி நினைவுகளே துரத்தியது.
அவள் காலையில் தன்னை திட்டிவிட்டு அறைக்குள் செல்லும் பொழுது அவளது உடையில் படிந்த கறைகளை கண்டவனுக்கு, அவன் தவறு உறுத்தியது.
அவளாவது தண்ணி பாட்டிலை பிடிச்சு ரூமுக்குள் வச்சிட்டு லாக் பண்ணினா. நான் அது போல யோசித்திருக்கணும்.
ஏற்கனவே அவளிடம் ‘ஃபக்-யூ’ என்றதில் தனியாக தன்னோடு தங்கும் போது அவள் பயந்ததில் ஆச்சரியமில்லை.
அவளுக்கு தெரிந்தவனில்லை, இதற்கு முன் அவளிடம் சாதாரணமாக பேசியது கூட இல்லை. முதலிரவு அன்று காதலில்லாமல் கூட உன்னை புணர தயாரென வீம்பு பேசியதில் அவளது மனம் அப்படி யோசித்ததில் தவறில்லை என்று அவளுக்காக வாதாடியது.
விக்ரம் இறங்கும் இடம் வந்ததும், பேக்பேக்கை மாட்டியபடி இறங்கினான். மனதால் இறங்கி வந்து சேர்வது எப்பொழுதோ?
அங்கே ஸ்டஷனில் சமோசா, சாண்ட்வெச் என்று முழுங்கி விட்டு தண்ணீரை குடித்தான்.
அலுவலகம் செல்லும் வழியெங்கும், ஆளாளுக்கு போனில் தலைவிட்டு மூழ்கியிருக்க, அந்த பொண்ணு நம்பர் வேற தெரியாது.’ என்றவனுக்கு அஜயிடம் அவளது எண் இருப்பது நினைவு வந்தது.
அஜயுக்கு மெஸேஜில் ‘ஹரிணி நம்பர் செண்ட் பண்ணுடா’ என்று அனுப்பினான்.
அஜயும் பார்த்துவிட்டதாக ப்ளூ டிக் காட்டிய சில நிமிடத்தில் ‘ஹரிணி சிஸ்டர்’ என்று காண்டெக் வந்தது.
‘சிஸ்டரா? உவாக்’ என்று ‘ஹரிணி’ என்று அவன் போனில் பதிய வைத்து முடித்தான்.
சிஸ்டருக்கு உன் நம்பரை அனுப்பவா?” என்று அஜய் கேட்க, ‘அனுப்பறதும் அனுப்பாததும் உன்னிஷ்டம், நம்பரை சேவ் செய்வதும் செய்யாததும் அவ இஷ்டம்’ என்று அனுப்பினான்.
‘இவனிடம் பேசினா பைத்தியம் பிடிச்சிடும்’ என்று கையோடு கையாக, ஹரிணி போனுக்கு, ‘ஹாய் மா, நான் அஜய். நேத்து விக்ரம் நம்பர் தெரியாம இருந்தியே அதனால அவன் நம்பர் அனுப்பியிருக்கேன். அவசரத்துக்கு உதவும்’ என்று அனுப்பியிருந்தான்.
‘விக்ரம்’ என்ற பெயரில் அப்படியே அவளும் சேமித்து கொண்டாள்.
இதே மற்ற நேரமென்றால் யோசித்திருப்பாள். நேற்று அலைந்ததில் ஞானோதயம் வந்ததில் சேமித்துவிட்டாள்.
வலது கையால் பின்னக்கழுத்தில் உள்ள பிடரியில் சட்டை படாதவாறு திமிராய் சட்டையை இழுத்துவிட்டபடி இருக்கும் விக்ரமின் புகைப்படம்.
அதையே சில நொடி பார்வையிட்டவளுக்கு, “பொறுக்கி” என்று வாய் உச்சரித்தது.
அஜயின் தயவால் ‘உன் நம்பரை சிஸ்டருக்கு அனுப்பிட்டேன்.’ என்று அனுப்பியிருக்க, அவள் சேமித்திருப்பாளா? என்று பார்வையிட, குடும்பத்தோடு திருமணத்தில் எடுத்த புகைப்படத்தை வைத்திருந்தாள்.
‘கல்யாணமனதும் என்னோட சேர்ந்திருக்கற போட்டோவை வச்சிருக்கணும். இது இன்னமும் அவங்க அப்பா அம்மா தங்கச்சினு வச்சிருக்கு.’ என்றவனுக்குள், வினோதினியை கண்டதும், ‘நேத்து காலையில அந்த பொண்ணு ஏதோ பேச வந்துச்சு, அத்தை போனு விரட்டிட்டாங்க. என்னைக்காவது ஹரிணியிடம் ‘அக்கா அக்கா.. டிரஸ் மாத்தறப்ப இவர் இருந்தார்னு சொன்னா?’ என்றவனுக்குள் வேர்த்துவிட்டது.
ஹரிணியை அசிங்கமான வார்த்தையால் திட்டிய போது அவள் தவறாக எடுத்துப்பாளோ என்று கூட யோசித்ததில்லை. ஆனால் வினோதினி இந்த விவகாரத்தை ஹரிணியிடம் சொல்லி, அவள் அதை எப்படி எடுத்துப்பாளென எண்ணியதும் பயந்தான். நிச்சயம் நல்லவனாக துளியும் நினைக்க மாட்டாள்.
திருமணமாகி இருக்கின்ற பிளவு கூடுதலாக விரிசலை தரும்.
நிச்சயம் இவளோடு சாதாரண கணவன் மனைவி பந்தத்தோடு வாழ்வது கடினமென இன்றும் தோன்றியது.
அவனது கேபினுக்கு வரவும், பணியை கவனிக்க ஆரம்பித்தான்.
இங்குள்ளவர்களிடம் ஊர்ல கல்யாணம் என்று கூறியிருந்தான். மற்றபடி, இங்குள்ளவர்களிடம் ஒன்றிரண்டு நபரை தவிர யாரிடமும் நெருங்கியது இல்லை.
இங்கு வந்ததிலிருந்தே அப்படி தான்.
தினமும் அஜயே காலை மாலை என்று போன் போட்டு பேசிடுவான். நட்பை இழக்காமல் அவனோடு கதை அளக்க, மற்றவரை அவன் நண்பனாக கூட சேர்க்கவில்லை. அப்படியிருக்க பெண்களின் நட்பும் இல்லை.
கணினியை உயிர்த்தெழுத்தப்பின், அங்கே விக்ரமிற்கு பணிகள் வரிசைக்கட்டி இருந்தது. அதனால் ஹரிணியை முதற்கொண்டு மறந்திருந்தான்.
மதியம் கேண்டீனில் தான் சாப்பாடு வாங்கி அமர்ந்தான்.
அவ சாப்பிட்டு இருப்பாளா?’ என்று யோசிக்க, ‘அவளொன்னும் சிறுகுழந்தை கிடையாது. அவளை அவளே பார்த்துப்பா.’ என்று மனதை அடக்கினான்.
இவன் செய்த தவறுக்கு(?) அவளிடம் இப்பொழுதும் இயல்பாக பேசுவது கடினமே. அதனால் எதையும் யோசிக்காமல் சாப்பிட்டான்.
தனது வாழ்க்கை எந்தபக்கம் போகின்றதென்று கூட தெரியாமல் காற்று வீசும் பக்கம் எல்லாம் பறக்கும் பட்டம் போல வாழ்ந்தான் எனலாம்.
விக்ரமிற்கு அது தான் வரும். ஆனால் இந்த இடைப்பட்ட நாளில் நதியாவை அவன் மறந்திருந்தான்.
முன்பு என்னதான் நதியாவை மறக்க எண்ணினாலும், அவ அப்படி பேசியது, அவனால் தாங்கமுடியவில்லை. ஆனால் ஹரிணியோடு தந்தை பேசி முடித்ததிலிருந்து, சண்டையிட்ட ஹரிணி நினைவு தான் மனதை ஆக்கிரமித்து இருந்தது.
அதுவே அவன் நிம்மதியாக வாழ்க்கை பயணம் செய்ய போதுமானதாக தோன்றியது.
இந்த வாழ்க்கை கூட தற்போது போதும். குடும்பஸ்தன், குழந்தை குட்டி, செக்ஸ், இதெல்லாம் கூட பிற்பாடு பார்த்துக் கொள்ளலாமென நிம்மதியடைந்தான்.
இவன் நிம்மதிக்கு ஆயுள் குறைவு என்று பிரம்மன் எழுத்தாணியை எடுத்து வினோதினி வாயிலாக அலைப்பேசி அழைப்பு வந்தது.
-தொடரும்.

Super sis nice epi 👌😍 seyiradhu thappu nu therinjum andha ponnu kita yerangi poi pesa matenguraney🙄😕