அத்தியாயம்….10
கோவில் மாதிரி மனதுக்கு அமைதி கொடுக்கும் இடம் எங்கும் இல்லை. கடவுளே உன்னிடம் பிச்சை கேட்டு வந்திருக்கேன். என்று வரும் பக்தர்களுக்கு, கடவுள் என்ன பதில் வச்சிருக்கார்.? அது அவர் அவர் கேட்கும் பிச்சையை பொறுத்தது….
சந்தியாவும் கடவுளிடம் பிச்சை கேட்டு தான் வந்திருக்கிறாள். விடுதலை வேண்டி. இந்த உயிர் இனி வேண்டாம்….
“எனக்கு விடுதலை வேணும் தாயே.? என் உயிரை எடுத்துவிடு என்னால் இந்த நரகத்தில் இனி வாழ முடியாது. நான் அவரை என் உயிருக்கு உயிரா நேசிக்கிறேன். ஆனால் அவர் தரும் இம்சைகள் என்னை ரொம்ப சோதிக்குது. அழுகை அழுகையா வருது. பைத்தியம் பிடிக்கும் போல் இருக்கு….ஒரு வருஷம் ஹவுஸ் அரெஸ்ட். பத்தாததுக்கு ஏச்சும் பேச்சும், சமயத்தில் அடியும் வாங்கிட்டு இருக்கேன். மனசு முட்டிப் போச்சு. நானும் மனுஷி தானே.? என் துயரத்தை யாரிடமும் சொல்லி ஆத்திக்க முடியலை. உன் சன்னதியில் என்னையே அர்ப்பணிக்கிறேன்……வழி காட்டு.”
கோவில் பிரகாரத்தில் அமர்ந்து அவள் உருக்கமாக மானசீகமாக வேண்டிக் கொண்டாள். அப்படி வேண்டிக் கொள்ளும் போதே அவளுக்கு ஒரு குற்ற உணர்வும் வந்தது.
“எவ்வளவு சுயநலக்காரி நீ.? நீ போய்விட்டால் அவருக்கு யார் துணை.? அநாதை போல் கணவனை விட்டுவிட்டு போக ஆசைப்படற….ஹோமில் சீரழியட்டும்ன்னு நினச்சுட்டே இல்லை.? அவன் பயந்தபடி நீ அவனை ஹோமில் தள்ள திட்டமிட்டுவிட்டே.”
மாறி மாறி அவள் தன் மனதோடு சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஒரு அடிகளார் ராமாயண உபன்யாசம் சொல்லத் தொடங்கினார்….அவளும் கேட்டாள்.
ராமன் முடி சூட ஏற்பாடு ஆகியிருக்கும் நன்னாள். ராஜ்யமே கொண்டாட்டத்தில் இருக்கு. எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்…. அப்பொழுது கைகேயி….
“ராமா நீ பதினாலு வருஷம் காட்டுக்கு போக வேண்டும். ராஜிய பணி இனி உன் தம்பி பரதனுக்குத் தான்….இது மன்னனின் கட்டளை.” என்கிறாள். இது கேட்டதும் சாதாரண மனிதர்கள் என்ன செய்வார்கள்.? சண்டை போடுவார்கள்….ஆத்திரம் அடைவார்கள். ஆனால் ராமர் சொன்னார்….
“மன்னவன் பணி என்றாகில் நும் பணி மறுப்பனோ.?
என் பின்னவன் பெற்ற செல்வம் அடியேன் பெற்றதன்றோ.?”
என்று சொன்னதோடு நிற்காமல் “மின் ஒளிர் கானகம் இன்றே போகின்றேன்; விடையும் கொண்டேன்.” என்று சொன்னான் ராமன்.
உனக்கு பட்டாபிஷேகம்…. என்ற போது ராமனின் முகம் எப்படி மகிழ்ச்சியாக இருந்ததோ, அதே மகிழ்ச்சி தான் நீ காட்டுக்கு போக வேண்டும் என்று கைகேயி சொன்ன போதும் இருந்தது.
ராமன் காடு செல்வதை கேட்டு கிளிகள் அழுதன, நாகண வாய்ப் பறவைகள் அழுதன. உயர் மாளிகையில் இருக்கும் பூனைகள் அழுதன. சிறு பிள்ளைகள் அழுதன. தெருவெல்லாம் நின்று நின்று மனிதர்கள் அழுதனர். யானைகள் அழுதன. மலர்கள் கண்ணீர் வடித்தன….இப்படி மனிதனும் இயற்கையும் அழ….ராமன் மட்டும் அன்றலறந்த செந்தாமரையை வென்ற முகத்துடன் காடு செல்ல தயாராகி விட்டான்…
அழகு தமிழில் அவர் சொல்லி விட்டு….
“சூழ்நிலை எப்படி இருப்பினும் அதற்கு தகுந்தாற் போல் தன்னை பொருத்திக் கொள்பவனே உயர்ந்தவன். அய்யோ பட்டாபிஷேகம் நடக்க வேண்டிய எனக்கு, காட்டில் வாழ கட்டளையா? என்று ராமன் புலம்பவில்லை. யாரையும் குறை சொல்லவில்லை….”
ஆகவே சாமானியன் தெரிந்து கொள்ள வேண்டிய சங்கதி..
எது நடக்கிறதோ அது எல்லாம் நன்மைக்கே….அந்த பக்குவம் வரணும். அப்ப மனம் தன்னால் அந்த சூழ்நிலையை ஏற்றுக் கொண்டு விடும்…..மனதில் அமைதி பிறக்கும்.
மேலும் சொல்லிக் கொண்டே போனார்..
சந்தியா இது கேட்டு சிந்திக்க ஆரம்பித்தாள். நான் ஏன் புலம்புகிறேன்.? எட்டடுக்கு மாளிகையில் ஏற்றி வைத்து என்னை பூப் போல் பார்த்துக் கொண்ட கணவன்….இன்று முடியாமல் போனதால் ஆதாங்கத்தில் ஏதோ சொல்கிறார்….அதுக்கு நான் இப்படி ரீயாக்ட் பண்ணுவது சரியா.? இல்லை என்று அவள் மனம் சொல்லியது.
“தாயே….எனக்கு ஒரு கஷ்டத்தை கொடுத்திட்ட. அதை எதிர்கொள்ள எனக்கு மன வலிமை கொடு. என் கணவரை, அவர் மனசை எனக்கு திருப்பிக் கொடு.” என்று வேண்டிக் கொண்டு வீடு வந்தாள்.
“என்னங்க….” என்று புது சந்தியாவாக உள்ளே நுழைந்தாள். அஞ்சனா சோபாவில் உட்கார்ந்து டி. வி சீரியல் பார்த்துக் கொண்டிருந்தாள். சந்தியா வந்தது கூட கவனியாமல் அதில் வந்த ஜோக்கை ரசித்து சிரித்துக் கொண்டிருந்தாள்.
உள்ளே அறையலிருந்து சந்தியா சந்தியா என்ற கணவனின் குரல் பலகீனமாக கேட்டது. உள்ளே ஓடினாள்.
ராஜகோபால் கட்டிலை விட்டு சரிந்து அலங்கோலமாக தரைக்கும் கட்டிலுக்குமாக விழுந்து கிடந்தார்.
“ஏய் அஞ்சனா…..அஞ்சனா..”
“மேடம்..” ஓடி வந்தாள்.
பளாரென்று அவள் கன்னத்தில் ஒரு அடி விழுந்தது.
“உனக்கு சம்பளம் கொடுத்து எதுக்கு இங்க வச்சிருக்கு.? சார் விழுந்து கிடக்கார்…..துப்பு கெட்ட மூதேவி….”
“ஸாரி மேம்….”
இருவரும் சேர்ந்து அவரை கட்டிலில் படுக்க வைத்தனர். கீழே விழுந்ததில். ரொம்பவே ஆடிப் போவிட்டார்.
சம்பளத்தைக் கொடுத்து அப்பவே அவளை விரட்டி விட்டாள் சந்தியா. அவளுக்கு அழுகையே வந்துவிட்டது.
“என்னை மன்னிச்சிடுங்க. இனிமே நான் எங்கேயும் போகலை.” என்று கதறி அழுதாள்.
அழு டீ….விட்டிட்டு போக ஆரம்பிச்சிட்டே. இப்படியே விட்டா நீ ஊரு சுத்த போயிடுவே….அதான் நானே உருண்டு கீழே விழுந்தேன்….
ராஜகோபால் மனதுக்குள் கருவிக் கொண்டார். அழட்டும்….
நாட்கள் ஓடியது.
கோவிலில் கேட்ட பிரசங்கத்தின் படி சந்தியா தன் மனதை பக்குவப் படுத்தி இருந்தாள். எனவே அவள் ராஜகோபால் ஆட்டி வைத்ததுக்கெல்லாம் கோபப்படாமலும் சலித்துக் கொள்ளாமலும் பணிவிடை செய்து வந்தாள்.
விட்டுட்டா போனே….வன்மம் ஏற ஏற, இம்மைசைகளும் அதிகமானது.
“என்ன இது சோறு களி மாதிரி இருக்கு….” ஒற்றைக் கையால் தட்டை தூக்கி எறிந்தார்.
வெண்ணி வேணும் என்பார்….அது ஆறும்வரை இருந்துவிட்டு, மீண்டும் சுட வைத்து கொண்டு வரச் சொல்வார்.
பிரபா வந்திருந்த சமயம் அவர் மாத்திரை சாப்பிட மாட்டேன் என்று அடம் பிடித்தார்.
“தம்பி….மாத்திரை உட்கொண்டால் தானே குணமாகும்.? இப்படியே சந்தியாவை பாடாய் படுத்தினா….அவளுக்கு மன நோய் வரும்.” என்று சொல்லிவிட்டாள்.
“அக்கா….ப்ளீஸ் அக்கா. நான் பார்த்துக்கறேன். தாஜா பண்ணி கொடுத்திடுவேன். அவர் சின்னக் குழந்தை மாதிரி ஆயிட்டார்.”
பிரபா போனதும் சந்தியாவை திட்டி தீர்த்தார்.
“அக்காகிட்டே என்னைப் பத்தி புகார் படிச்சியா.?”
“இல்லீங்க….”
“அப்புறம் எதுக்கு வந்து நாட்டாம பண்ணறா.? எம் புருஷன் முடமா போயிட்டான். அவன் செத்து ஒளிஞ்சா தேவலைன்னு சொல்லியிருப்பே. எல்லார் கிட்டயும் சிம்பத்தி கிரியேட் பண்ணிட்டு, என்னை ஹோமில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டு இருகே இல்லே.?”
“அப்படியெல்லாம் இல்லீங்க. காம் டவுன். நீங்க எனக்கு பாரமில்லை. அன்பா தான் செஞ்சிட்டு இருக்கேன்….”
ஒரு நாள் மாடியில் துணி காயப் போட போனாள் சந்தியா.
“பத்து நிமிஷத்தில் வந்திடறேன். பேனிக் ஆகாதீங்க சரியா.?”
அவள் துணிகளை கொடியில் போடும் போது, அடுத்த வீட்டு மரகதமும் அவள் வீட்டு கொடியில் துணி காயப் போட வந்தாள்.
“சந்தியா….உன் கணவர் உடம்பு சரியில்லாமல் படுத்தாலும் படுத்தார், உன்னைப் பார்க்கவே முடியலை.”
“மரகதம்….என்ன உன் வீட்டில் நேற்று ஒரே விருந்தாளி போலிருக்கு. என்ன விஷேசம்.? இவர் கூட சத்தம் அதிகமா இருக்குன்னு ஜன்னலை சாத்த சொன்னார்.” என்றாள் சந்தியா.
“என் ரெண்டாவது மகளை பொண்ணு பார்க்க வந்தாங்க…”
பேச்சு சுவாரஸ்யத்தில் சந்தியா. பத்து நிமிஷத்தில் கீழே போக வேண்டும் என்பதையே மறந்துவிட்டாள்.
முகங்களை பார்க்க, பேச என்ற ஈர்ப்பு அவளை கட்டிப் போட்டுவிட்டது. பலமான இருமல் சத்தம் கீழே கேட்கவும், அரக்கப் பரக்க தன்னிலை அடைந்தவளாய்….
“மரகதம்….அவருக்கு தண்ணி வேணும் போலிருக்கு. நான் வரேன்…. “
அவசரமாக கீழே ஓடினாள். மரகதம் உற்றுக் கேட்டாள். ராஜகோபால் அவளை கன்னா பின்னா என்று திட்டுவது கேட்டது.
“ஸாரிங்க. மன்னிச்சிடுங்க. பொண்ணுக்கு வரன் கூடி வந்ததை சொல்லிட்டு இருந்தா…..அதான்….”
பாவம் சந்தியா….என்று நினைத்துக் கொண்ட மரகதம், அந்த தெருவாசிகளிடம் எல்லாம் இந்த விஷயத்தை கண் காது மூக்கு வைத்து பரப்பி விட்டாள்.
எதிர்வீட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராகவ் வந்தார்.
“என்ன ராஜகோபால் சார்.? எப்படி இருக்கீங்க.? நீங்க பிஸியோதிரபிஸ்ட கிட்டே சிகிச்சை எடுத்துக்கிட்டா ஓரளவு குணமாகும். நீங்களே உங்க காரியங்களை பார்த்துக்க முடியும். சிஸ்டரை சார்ந்தே இருக்க வேண்டாம். அவங்களுக்கும் ஒரு ரெஸ்ட் வேண்டாமா.? இப்படி ஓவரா மனைவியை பர்டன் பண்ணுவது, சட்டப்படி குற்றம். தப்பா நினைக்காதீங்க….உடல் ஊனம் பரவாயில்லை. மன ஊனம் தான் தப்பு. நான் வரேன் சார். பீ ஹாப்பி.” என்றான்.
அவனுக்கு காப்பி கலந்து கொண்டு வந்து கொடுத்தாள் சந்தியா.
“சார்….காப்பி குடிக்க மாட்டார். கொண்டு போயிடு.” என்று வெடுக்கென்று ராஜகோபால் சொல்ல…. ராகவ் திடுக்கிட்டார்
inta nilamaila irukavanga mana nilamai thanu purinalum but oru situation la sandhiya va niancha pavama than iruku