அத்தியாயம்.. 11
குற்றம் என்று தெரிந்தே செய்வது….செய்தவருக்கே அது உறுத்தும் ராஜகோபாலுக்கு வாயில் வந்த வார்த்தையை திரும்பவும் பெற்றுக் கொள்ள தோன்றியது. முடியுமா.? விருந்தினர் வந்தால் அவர்களை வரவேற்று காப்பி கொடுப்பது நாகரீகம். குடிக்க மாட்டார் என்று சொல்லி, தன் வெறுப்பை அப்பட்டமாக காட்டியது அநாகரீகம்.
ராகவ் “நான் இப்ப தான் காப்பி சாப்பிட்டு வந்தேன். சிரமப்படாதீங்க ஆன்ட்டி.” என்று சொல்லி எழுந்து கொண்டான். போடா உனக்கு காப்பி ஒரு கேடா.? என்று சொல்லாமல் சொல்லிவிட்டார். முகம் கருக அவன் கிளம்பிவிட்டான்.
சந்தியா அவனை வழியனுப்ப வாசல் வரை சென்றவள்..
“தப்பா நினைக்காதீங்க தம்பி. அவர் ஏதோ உடல் உபாதையில்..”
“புரியுதுங்க. ஏதாவது ஹெல்ப் வேணும்னா ஃபோன் பண்ணுங்க. உங்களுக்கு யாருமில்லைன்னு நினைக்காதீங்க….”
“ரொம்ப தேங்க்ஸ் தம்பி”
அவரை அனுப்பிவிட்டு அவள் கணவனிடம் வந்தாள்.
“உங்களை பார்த்து நலம் விசாரிக்கத் தானே வந்தார்?….அவர் கிட்டே உங்க கோபத்தை காட்டனுமா.?” என்றாள்.
“என்னை கேவலப்படுத்த முடிவு பண்ணிட்டே. சந்தோஷம் தானே உனக்கு.? இதை விட நீ என்னை கொன்னு போட்டிடலாம்.”
சந்தியா அருகில் வந்தாள்.
“புரியமா பேசதீங்க. நான் யார் கிட்டவும் ஒண்ணும் சொல்லலை. உங்களை நான் பார்த்துக்கிறேன். நான் ஏதாவது இதுவரை சொல்லியிருக்கேனா.? மத்தவங்க சொல்றதுக்கெல்லாம் நாம ரீயாக்ட் பண்ண வேண்டாமே ப்ளீஸ்.”
அவர் தலையை அன்புடன் வருடி இதமான வார்த்தைகள் பல சொன்னாள் சந்தியா. வெகு நேரம் அவரிடம் பேசினாள். ஒரு குழந்தையை போல் பாவித்து மடியில் போட்டு பாடினாள்..
“சின்னஞ் சிறு கண்ணன், அந்த சிங்கார வண்ணன்
சேட்டைகளும் திருட்டுகளும் செய்வதில் மன்னன்..”
அவருக்கு அன்பு தேவை….நிறைய நிறைய அன்பு தேவை. கம்பீரமாக நடந்து கொண்டிருந்தவர்….நாலு பேரிடம் பேசி. வெளியில் வாசலில் சென்று வந்தவர்….முடங்க வேண்டி வந்தால்? அவள் அன்னை தெரசாவாக மாறி கருணை மழை பொழிந்தாள்.
தாயை போல் உடம்பு துடைத்து….உணவூட்டி தூங்க வைத்து….முன்பும் செய்தாள் தான். ஆனால் அவன் திட்டுக்கும், கோபத்துக்கும் பயந்து பயந்து செய்தோமோ….என்ற எண்ணம் அவளுக்கு இருந்தது……
இவ்வளவும் அவள் அன்புடன் முகம் சுளிக்காமல் செய்ய செய்ய அவர் மனம் பக்குவப்பட்டதா என்றால் இல்லை….
பார்க்க வரும் பிரெண்ட்ஸ் பலரிடமும் அவர் இப்பொழுது முந்திக் கொண்டு சொல்வது….
“சந்தியா பாவம் என்னை நல்லாத் தான் பார்த்துக்கறா. ஆனாலும் கிழவன் எப்படா போவான்னு அவ மனசிலே இருக்கும். இந்த மாதிரி ஸ்டேஜ்லே உயிர் வாழவே கூடாது….என்னதான் பொண்டாட்டியா இருந்தாலும் அவளும் மனுஷி தானே.? எனக்கு சாவு வர மாட்டேங்குது….”
தோள் குலுங்க அழுதார். விதம் விதமாக வருவோரிடம் சொல்லி அனுதாபத்தை சம்பாதித்துக் கொண்டார். அவள் கவணிப்பை அன்பை சிலாகித்து திருப்தியுடன் அவர் பேசவே இல்லை.
டைட்டானிக் கப்பல் மாதிரி சந்தியாவின் வாழ்க்கை கப்பல் தரை தட்டி நின்றது.
மகள் திவ்யா குழந்தைகளுடன் வந்தாள்.
‘அப்பா.. எப்படிப்பா இருக்கீங்க.? உங்க பேரப் பிள்ளைகள் உங்களை பார்க்கணும்னு சொன்னாங்க. ஆர்த்தி, கண்ணா ரெண்டு பேரும் வாங்க. தாத்தா கூட பேசுங்க….”
மருமகன் சுரேஷ் “மாமா எப்படி இருக்கீங்க.? ஒரு சேஞ்சுக்கு பெங்களூரு வாங்களேன்.” என்று அன்புடன் கூறினான்.
“நீங்க எல்லாம் வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம். நான் நல்லா இருக்கேன். சந்தியா என்னை ரொம்ப நல்லா பார்த்துக்கறா. அங்க வந்தா எனக்கு அந்த கிளைமேட் ஒத்துக்காது…வேற ஒண்ணுமில்லே.” என்றார்.
பதினைந்து நாட்கள் இருந்தார்கள். ராஜகோபால் பூனை போல் அடங்கி இருந்தார். சந்தியாவுடன் அன்பாக பேசினார்…. ‘
சந்தியா நினைத்தாள்….இந்த மனுஷன் எப்பவும் இப்படியே இருந்தா வாழ்க்கை எவ்வளவு நல்லாயிருக்கும்….தெரியும் இவர் இவர்கள் முன் சந்தோஷமா இருப்பது போல் காட்டிக்கறார்….
அவர்கள் நிம்மதியுடன் புறப்பட்டு போனார்கள்.
மகன் குடும்பத்துடன் வந்தான். யு. எஸ் அழைத்தான். அவனிடமும் அன்பொழுக பேசினார்.
“அப்பா இப்ப நல்லா கோவாப்பரேட் பண்ணறார் போலிருக்கே….” என்றான் மகன். அவனும் பதினைந்து நாட்கள் இருந்துவிட்டுப் போனான். சந்தியாவுக்கு இது ஒரு மாற்றமாக இருந்தது.
பேரப் பிள்ளைகளுடன் கொஞ்சுவது…..அவர்களுக்கு பிடித்ததை செய்து போடுவது….மகள் மகனுடன் சிரித்து பேசுவது என்று அந்த நாட்கள் அழகாக அமைந்தது.
தீபாவளி வந்தது…… அக்கா பிரபா வந்திருந்தாள். அவளுடன் ராஜகோபால் அருமையாக பேசினார். ஒரு கையால் மத்தாப்பு கொளுத்தி மகிழ்ந்தார்.
“சந்தியா….தம்பி இப்ப மாறிட்டார். ரொம்ப சந்தோஷமா இருக்கு.” என்றாள். பொங்கல் வந்த போதும் இதே கதை தான். புதுசு உடுத்திக் கொண்டு பொங்கல் சாப்பிட்டு சிரித்து பேசினார். கரும்பாய் பேசினார்.
நாளும் கிழமையும் வந்தால் பிரபா வந்தாள்.
“இப்ப தம்பி நான் வந்தால் கத்துவது இல்லே. உன் கூட பேச முடியுது. பைய பைய அவரை பிஸியோ செய்ய என்கரேஜ் பண்ணு.” என்றாள். “சரிக்கா….அவர் மட்டும் அதுக்கு ஒத்துக்கிட்டா ரொம்ப நல்லாயிருக்கும். அந்த நாளுக்காகத் தான் நான் காத்திட்டு இருக்கேன்.” என்றாள் உண்மையுடன்.
எல்லோரும் போனதும் வேதாளம் முருங்கை மரம் ஏறிக் கொள்ளும். அவரின் ரெட்டை வேடம் அவளுக்கு பாதகமாகவே இருந்தது. “சந்தியா….அவர் மாறிட்டார். நீ தான் இன்னும் கொஞ்சம் பேசி அவருக்கு ட்ரீட்மெண்டுக்கு ஏற்பாடு பண்ணனும்.” என்றனர்.
அவள் கணவனிடம் வந்தாள்.
“இத பாருங்க…..எதுக்கு இந்த ரெட்டை வேடம்.? பேசாம நிஜமாவே சாப்ட்டா இருக்கலாமில்லே.? எனக்கும் மனம் ரிலாக்ஸ்சா இருக்கும். இந்த நிலையிலும் நாம வாழ்க்கையை ரசிச்சு வாழலாமுங்க. சேர்ந்து டி. வி யில் பிடித்த நிகழ்ச்சி பார்க்கலாம். பாட்டு கேக்கலாம்…”
“போதும் நிறுத்து. என்னை கெட்டவனா சித்தரித்து நீ வேஷம் போடல.? அதான் நான் கவுண்டர் கொடுக்கிறேன். உனக்கு என் மேல் நிஜமான பாசமோ அன்போ இல்லை. இன்னும் சொல்லப் போனா நன்றியே இல்லை. உன்னை கண்ணுக்குள்ளே வச்சு, மாடா உழச்சு பார்த்துக்கிட்டேன். என்ன பிரயோஜனம்.? என்னை உள்ளன்போட பார்த்துக்க உனக்கு மனசில்லை. அடுத்தவங்க கிட்டே உன்னை நல்லவளா காட்டிக்க தானே நடிக்கிறே.? எல்லாம் போச்சு சந்தியா. மனைவி பிள்ளைகள் எல்லோரும் நான் நல்லா இருந்தா தான் கவனிப்பு இருக்கும். இல்லே குப்பையை போல தூக்கி போட்டிடுவாங்க.”
“ராஜகோபால் சார்….உங்களுக்கு புலம்பல் செட் ஆகலை. உங்க நல்ல மனசை எங்க ஒளிச்சு வச்சிருக்கீங்க.? இந்த ஏழைக்கு கொஞ்சம் கருணை காட்டுங்க சார். உங்க மேலே எனக்கு இருக்கும் காதல் தான் உங்க சொத்து. மறந்திடாதீங்க.” என்றபடி அவன் மூக்கை செல்லமாக திருகினாள் சந்தியா. நகைச்சுவை சில சமயம் கை கொடுக்கும் என்று அவள் நிஜமான அன்புடன் சொல்ல….
“சீ….என்ன இது மாடல் மனைவி மாதிரி. போய் வேலையைப் பாரு.” என்றுவிட்டார். ஷாக் ஆகி விலகினாள் சந்தியா. என்ன இப்படி பேசறார்.? அவள் கண்களில் குபுக்கென்று கண்ணீர் வந்தது.
அவள் மனம் உடைந்தது. இரவு அவள் விட்ட கண்ணீர் அவள் பக்குவப்பட்ட ஞானி மனசை சோதித்தது. செத்திடலாம் போல் இருந்தது. இவ்வளவு தானா அவர் என்னை புரிந்து கொண்டது.? சிரிக்கவும் கூடாது. அழவும் கூடாது. பேசாமலும் இருக்கக் கூடாது. பேசினாலும் குறை கண்டு பிடிக்கிறார்….என்ன தான் செய்வது.?
மகள் மகனிடம் சொன்னால் இனி செல்லாது. அவர்களை அப்படி குளிப்பாட்டி வச்சிருக்கார். அவர்கள் நம்பப் போவதில்லை. அக்காவிடம் இவர் விசித்திர நடத்தை பற்றி அழுதபடி சொன்னால். அக்கா கேட்கக் கூடும்…..ஆனால் அவளிடம் சொல்ல சந்தியாவுக்கு மனசில்லை. ஒவ்வொருவரிடமும் போய் சிம்பத்தி கிரியேட் பண்ணி தன்னை நல்லவளாக காட்டிக் கொள்வதில் என்ன பெரிய நன்மை.? அவர் குணமாகனும். இந்த சுயபச்சாதாபத்திலிருந்து வெளி வரணும். தன் நிலையை முயற்சி செய்து இம்ரூவ் பண்ணனும். அவர் உடல் குறையை அவர் ஏத்துக்கணும்….இப்பவும் சந்தோஷமா இருக்க முடியும்.! இதை அவர் புரிந்து கொள்ளணும்…….
அவளுக்கு இதுக்கு மேல் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
ஆப்பிள் ஜூஸ் செய்து கொண்டு கொண்டு போய் கொடுத்து சொன்னாள். “என்னை எதிரி மாதிரி பார்க்காதீங்க. முதல்லே என் அன்பும் டிவோஷனும் நிஜம். அதை நீங்க டவுட் பண்ணா நான் எங்க போவேன்.? உங்களுக்கு இந்த நிலை வந்திருக்கக் கூடாது. வந்தாச்சு. அதுக்கு நானா காரணம்.? தரைக்கு நிலா வராது. நாமும் நிலவில் கால் வைக்க முடியாது. விண்ணுக்கும் மண்ணுக்கும் தொடர்பு மழை தான். அன்பு மழை தான் நம்ம உறவை பாதுகாக்கும். அதிலே சந்தேகம் வந்தா….வாழ் நாள் முழுக்க நரகம் தான்.” என்றாள்.
அவள் சொன்னதை எல்லாம் கவனிக்காமல். கடைசியில் அவள் சொன்ன நரகம் என்பதை மட்டும் எடுத்துக் கொண்டு….
“அது சரி….இந்த முடவனோடு வாழ்வது உனக்கு நரகம் தான். ஒப்புக்கிட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்.” என்றார்.
“சரி விடுங்க என்னை நம்புங்கன்னு என்னாலே கெஞ்சவா முடியும்.? நான்….நான் கண்டிப்பா என் கடமையை செய்வேன்.” என்றபடி கண்களை துடைத்துக் கொண்டு அவள் காலி டம்பளரை எடுத்துக் கொண்டு திரும்பினாள்….
“நில்லு ஒரு நிமிஷம்…”
“சொல்லுங்க….”
“கடமையை செய்வேன்னு சொன்னே….அதுக்கு ஒரு நர்ஸ் போதுமே. மனைவி எதுக்கு.? அன்பற்ற உன் பணிவடை என் கால் தூசுக்கு சமம். நீ தாராளமா உன் அக்கா வீட்டிலே போய் இருந்துக் கிட்டு உனக்கு பிடிச்சதை செஞ்சுக்கிட்டு சந்தோஷமா இருந்துக்கோ. ஒரு நல்ல அன்பான நர்ஸ்சை ஏற்பாடு பண்ணிட்டுப் போ….நான் விளையாட்டுக்கு சொல்லலை. உனக்கு விடுதலை தரேன். தாலி கட்டிய பாவத்துக்காக நீ புழுக்க வேலை செய்ய வேண்டாம். இதுவரை பார்த்ததுக்கு நன்றி. இனி உன் முகத்தை பார்க்கவே நான் விரும்பலை….புரிஞ்சுதா.?”
அதிர்ச்சியுடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் சந்தியா….அவளை போகச் சொல்கிறார்….இது நிஜமா.? வானம் இடிந்து தன் தலையில் விழுந்தது போல் இருந்தது.
“நான் உங்களுக்கு அவ்வளவு வேண்டாதவளா போயிட்டேனா.? இது உங்களுக்கே நல்லாயிருக்கா.? நீங்க நல்ல நினைவோட தான் பேசறீங்களா.? நான் என்னங்க அப்படி தப்பு செஞ்சேன்.?” குரலை உயர்த்தி பேசினாள்.
“நான் உன்னை போகச் சொல்லி அஞ்சு நிமிஷம் ஆச்சு. எனக்கு பயித்தியம்ன்னு நீ சொல்லாம சொல்றே. அப்படியே வச்சுக்க. உன்னோட புலம்பலை நான் கேக்கத் தயாரா இல்லே. கெட் லாஸ்ட். இந்த அறைக்கும் உனக்கும் இனி சம்பந்தம் இல்லே……ஐ டோன்ட் வான்ட் டூ ஸீ யு எனிமோர்….”
திட்ட வட்டமாக அவர் சொல்லி முடிக்க….தன் வாழ்வே முடிந்து விட்டதை உணர்ந்து உள்ளம் கதற அவள் திடுக்கிடலுடன் அறையை விட்டு ஓடினாள்.
எப்படி இந்த நிலைமை வந்தது.? எங்கே நான் கோட்டை விட்டேன்.? அவருக்கு இந்தளவு வெறுப்பு வர காரணம் என்ன.? இல்லை….இது அவள் ராஜகோபால் இல்லை. பட்டு கம்பளம் விரித்து அவளை இதுவரை பூ போல் நடத்தி அன்பு காட்டி ரட்சித்த அவரால் எப்படி இப்படி பேச முடிந்தது.?
அவள் கண்ணீர் கூட இந்த அதிர்ச்சி கண்டு நின்று போனது. அவரே உலகம்ன்னு வாழ்ந்திட்டேன்….எனக்கு வேறு ஒரு உலகம் இருக்குன்னு நான் நினைக்கவே இல்லையே. எங்கே போவேன்.? போனாலும் நிம்மதியா இருக்க முடியுமா.?
ஒரே வழி தான்….இந்த உலகத்தை விட்டு போவது தான் இதுக்கான தீர்வா இருக்கும்….அவள் மனசில் இந்த எண்ணம் துளிர் விட்ட சமயம், வாசலில் மணி அடித்தது. யாராக இருக்கும்.? அவள் சென்று கதவு திறந்தாள். வாசலில் ஆம்புலன்ஸ் நின்றது….ஒரு இளம் பெண் நின்று கொண்டிருந்தாள்.
“நீங்க….”
“மிஸ்டர் ராஜகோபாலை எங்க அன்னை தெரசா ஹோமுக்கு கூட்டி செல்ல அம்புலன்ஸ்சோட வந்திருக்கோம். அவர் தான் ஃபோன் பண்ணி வரச் சொன்னார். நான் அவரை கவனித்துக் கொள்ள அப்பாய்ன்ட் பண்ண நர்ஸ் நிவேதா….உள்ளே வரலாமா.?”
நீ வெளியே போறியா என்பது போல் இது சந்தியாவின் காதில் விழ அவள் வெற்று பொம்மை போல் தலை அசைத்தாள்.
வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் மரக் கிளை போல் வாழ்க்கை அவளை எங்கு இட்டுச் செல்கிறது.?
ethuku ippadi panraru sandiya va pavam ava etho oru reason iruku