Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம் -7

வாழ நினைத்தால் வாழலாம் -7

அத்தியாயம்..7

நண்பர்கள் போல் நடந்து கொண்டு பகையை கக்கும் சில உறவுகளால் காயபப்பட்டிருக்கும் ராஜகோபால் இந்த உறவை உள் நுழைக்க விரும்பவில்லை. நோ என்ட்ரி தான் இதுக்கு ஒரே வழி என்று நினைத்தான். வேலியில் போகும் ஓனானை யாராவது காதில் விடுவார்களா.? என்பது அவள் கட்சி….

“சந்தியா….நீ உன் சித்திக்கிட்டே அன்பா இருக்கியா.? சொல்லு. அவங்களை வீட்டில் வச்சு பார்த்துப்பியா.?”

“அன்பா தான் இப்பவும் இருக்கேன். அவங்களுக்கு எங்க அன்பு தேவையில்லைன்னு நினைக்கிறாங்க. அதான் பிரச்சனை. அவங்களோட அக்கா, தங்கச்சி. அவங்க குடும்பத்திடம் தான் அவங்க அன்பை காட்டுவாங்க. அவங்களுக்கு ஆதரவு இருக்கு. அப்பா இருக்கார். ஒரு வேளை சோற்றுக்கு அவங்க நம்ம கிட்டே வந்து நிக்கலை. ஆனா உங்க பாட்டி பாவம் வீடில்லாமல் நம்மை அண்டி வந்திருக்காங்க.  ஏதாவது பகை இருந்தாலும் அதை மறந்து மன்னிச்சு….”

“சரி உன் இஷ்டம்…” சந்தியாவே தெரிந்து கொள்ளட்டும். பட்டால் தான் தெரியும். பட்டுத் தெளியட்டும்…. விட்டுவிட்டான் ராஜகோபால்.

சந்தியாவின் முகம் மலர்ந்தது. “இது போதும்….சாப்பிட வாங்க.”

சாப்பிட்டுவிட்டு அவன் போனதும் அவள் பாட்டியிடம் வந்தாள்.

“பாட்டி….மதியம் உங்களுக்கு பிடிச்ச சமையல் செய்யப் போறேன். சொல்லுங்க உங்களுக்கு என்ன பிடிக்கும்.?’

“அம்மாடி….உன்னோட அன்பு ஒண்ணே போதும் மா. எனக்கு என்ன வயசான கட்டைக்கு.? கொஞ்ச சோறும் குழம்பும் கீரையும் இருந்தாப்  போதும். எத்தனை நாட்கள் பட்டினி கிடந்திருக்கேன் தெரியுமா.?”

வீட்டில் ஒரு பெரிய மனுஷி இருப்பது சந்தியாவுக்கு சௌகரியமாக இருந்தது. பிடித்தும் இருந்தது.

முதலில் பாட்டிம்மாவுக்கு கண்புரை சிகிச்சைக்கு ஏற்பாடு பண்ணி முடித்தாள். சிகிச்சைக்குப் பின் பாட்டிம்மாவுக்கு கண் நன்றாகத் தெரிந்தது. சந்தோஷம் தாங்கவில்லை அவருக்கு. “எனக்கு கண் நல்லாத் தெரியுது சந்தியா.” என்று ஒரே மகிழ்ச்சி.

“நீ எவ்வளவு அழகா இருக்கே.? உன் மனசும் எவ்வளவு அழகா இருக்கு.? உன் கல்யாணத்தப்போ என்னால் உன்னை சரியா பார்க்க முடியலை. இப்ப பாக்கேன். தேவதை மாதிரி இருக்கே.!” என்று வியந்து பாராட்டினார்.

“போங்க பாட்டி….இதுக்கு போய் பாராட்டிக்கிட்டு….”

அன்று முதல் பாட்டிக்கும் சந்தியாவுக்கும் ஒரு பந்தம் ஏற்பட்டது.

“சந்தியா….வாந்தி எடுக்காமல் இருக்க பன்னீர் திராட்சை சாப்பிடு.” என்றாள் பாட்டிம்மா. மூன்றாம் மாதம் தாண்டியது.

ஒவ்வொரு மாதம் போகப் போக புதிது புதிதாக பிரச்சனை வந்தது. டாக்டரிடம் ஒடுவதுக்கு பதில் அவள் பாட்டிம்மாவின் கை வைத்தியத்தையே நம்பினாள். அதில் நிவாரணமும் கிடைத்தது.

கால் வீங்கிக் கொண்டது.

“பார்லி கஞ்சி போட்டுத் தரேன்….வீக்கம் வத்திடும்.”

ஒரு அம்மா போலவே இருந்தார் பாட்டிம்மா. இடுப்பு வலித்தால் வெந்நீர் ஒத்தடம் கொடுத்தார். ஆரஞ்சு பழரசம் பிழிந்து கொடுத்தார்  மாதுளை பிரித்து தட்டில் வைத்து கொடுத்தார்.

சந்தியாவுக்கு எட்டாம் மாசம் வந்தது. வளைகாப்பு செய்யணும். அக்கா பிரபா ஏற்பாடு பண்ணினாள்.

சித்தி அண்ணன் இருவரையும் நேரில் சென்று அழைத்தாள் பிரபா.

சித்தி சரோஜா பாட்டிக்கு ஃபோன் செய்தாள்.

“ஏய் கிழவி….நான் உன்னை என்ன சொல்லி அனுப்பிச்சேன்.? சுளையா அஞ்சாயிரம் உன் வங்கிக் கணக்கில் போட்டேன். நீ அங்கே சொகுசா இருக்கே. நீ இருக்கும் தைரியத்தில் அந்த சந்தியா என்னை மதிப்பதில்லை. உனக்கு சங்கு தான் இரு.” என்றாள்.

பாட்டி கண்ணில் நீர் நின்றது. அவருக்கு சரோஜா ஒரு நாள் தன்னை வந்து பார்த்த நாள் ஞாபகம் வந்தது. மிக சிறிய வீட்டில் தனியாக இருந்தார். அன்றாட வேலைகள் கூட செய்ய முடியவில்லை.  உடல் நிலை பலகீனமாக இருந்தது. காரணம் ஒரு வேளை சோறு கூட கிடைக்க அடுத்தவர் தயவை நாடி நின்ற அவல நிலை.

இந்த நேரம் சரோஜா வந்தாள்.

“எப்படிம்மா இருக்கீங்க.?” என்றாள் குழைவான குரலில். யார் அது இவ்வளவு அக்கறையுடன் கேட்பது என்று கண்ணை இடுக்கிக்  கொண்டு பார்த்தார் பாட்டி.

“நான் தான் உங்க மருமகன் ராஜகோபாலின் மாமியார் சரோஜா. அவருக்கு அம்மாவின் அம்மா தானே நீங்க.?”

“ஓ….வாம்மா. என்ன இந்தப் பக்கம்.? கண்புரை வந்திடுச்சு. அதான் சரியா தெரியலை. மன்னிச்சிடும்மா..”

வீட்டை நோட்டமிட்டாள் சரோஜா. மிக மிக சிறிய ஹால்….பேருக்கு தான் ஹால். அதை ஒட்டி சமயலறை….குளியலறை. ஹாலின் மூலையில் ஒரு அழுக்கு தலையணை பெட்ஷீட்.

“உனக்கு குடுக்க என் கிட்டே ஏதுமில்லை. தண்ணி தரட்டுமா.?” என்று சங்கோஜத்துடன் உபசரித்தார்.

இந்த அழக்கு வீட்டில் உட்காரக் கூட மூக்கை பொத்திக் கொள்ள வேண்டியிருக்கு. இதில் தண்ணி குடிக்கணுமாம். காலரா வரதுக்கா.? என்று எண்ணமிட்டாள் சரோஜா.

“அதெல்லாம் வேண்டாம் பாட்டி. உங்க கிட்டே ஒரு டீலிங்க.”

“டீலிங்கா? அப்படீன்னா.?”

“ஒண்ணுமில்லே ஒரு வேண்டுகோள்….”

“சொல்லுமா….என் கிட்டே போய் உனக்கு ஆக வேண்டியது  என்ன இருக்கப் போவுது.? நானே பிச்சைகார நெலமையில் இருக்கேன்.”

“எதுக்கு பாட்டி நீங்க இப்படி கஷ்டப்படனும்.? காலை நீட்டி சொகுசா அதிகாரம் பண்ணிட்டு இருக்க வழியிருக்கும் போது.? ராஜகோபால் உங்களுக்கு சொந்தம் தானே.? அங்கே போய் இருக்க வேண்டியது தானே.?” என்று முதல் அஸ்திரத்தை வீசினாள் சரோஜா.

“நீ என்னம்மா சொல்றே.? எனக்கு ஒண்ணும் புரியலை. ராஜகோபால் என்னை மனுஷியாவே மதிக்கலை. என் ஆவியே அவனுக்கு ஆகாது. இந்த லட்சணத்தில் அங்க போய் அதிகாரம் பண்ணவா.? வாசப்படி மிதிக்க விட மாட்டான்….”

“பாட்டி….இப்படி சொந்தங்களை ஒருத்தன் தவிக்க விட்டா கேஸ் போடலாம். நான் இருக்கேன். நீங்க அங்கே போங்க….மூணு வேளை சாப்பாடு அதிகாரத்தோட கேக்கலாம்….”

“என்ன சொல்றே.? அவன் பெண்டாட்டியும் சேர்த்து என்னை பத்தி விடிட்டுவா. நீ வேற…. “

“சந்தியா ரொம்ப இரக்க சுபாவம் கொண்டவ. உங்களை விரட்ட மாட்டா. அதை சாக்கா வச்சு அங்க போய் உங்க நோக்கத்தை நிறைவேத்திக்கலாம்.”

கிழவி அவளை உத்துப் பார்த்தாள். “நோக்கமா.?” என்றாள்.

“ராஜகோபாலை வாழ விட மாட்டேன்னு சொன்னதெல்லாம் மறந்து போச்சா.? எல்லாம் எனக்குத் தெரியும்.”

“அதெல்லாம் உடம்பிலே நல்ல ரத்தம் ஓடும்போது சொன்னது. இப்ப  பூமிக்கு பாரமா இருக்கும் இந்த நேரத்தில் அதெல்லாம் நடக்குமா.?”

“நடக்கும்….உங்க வங்கிக் கணக்கில் இருபதாயிரம் போடறேன். அவ மாசமா இருக்கா. உங்களுக்குத் தான் ஏகப்பட்ட நாட்டு வைத்தியம் தெரியுமே. நிறைய கன்னிப் பெண்களுக்கு உங்க வழியில் அபார்ஷன் செஞ்சு காசு பார்த்தீங்க தானே.?”

திடுக்கிட்டாள் கிழவி. இவளுக்கு எப்படித் தெரியும்.? ஏதாவது சிக்கலில் மாட்டி விட்டுவிட்டால்? அவர் கதி அதோகதி….கிழவி கண்ணில் பயம் தெரிந்ததை சரோஜா கண்டாள்.

“சந்தியா மாசமா இருக்கா. நீங்க அங்க போய் உங்க வைத்தியத்தை பயன்படுத்தி கலச்சிடுங்க. அவளுக்கு புள்ளை பிறக்கவே கூடாது.”

சீரியல் மாமியார் போல் பேசும் சரோஜாவை ஐயத்துடன் பார்த்தார்.

“உன் பொண்ணு சாக ராஜகோபால் தானே காரணம்.? இது உங்களுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம்…. “

உறங்கிக் கிடந்த பழி உணர்வை சரோஜா தூண்டிவிட்டாள். எங்கிருந்து தான் அவளுக்கு விஷயங்கள் தெரியுதோ.?

“எத்தனாம் மாசம் அவளுக்கு.?”

“ரெண்டு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே புள்ளைய பெத்திட்டா  மாதிரி ஸீன் போடறா…. “

“சரி….நான் பார்த்துக்கறேன்”

சரோஜா மகிழ்ச்சியுடன் திரும்பினாள்.

ஒவ்வொரு நாளும் நல்ல செய்தி எதிர்பார்த்து காதை தீட்டிக் கொண்டிருந்தாள் சந்தியா. ஃபோன் அடிக்கும் போதெல்லாம் பாட்டிம்மா தானோ என்று அவசரமாக எடுத்தாள். ஒன்றும் வராததால் அவளே ஃபோன் செய்து கேட்டாள்.

“என்னாச்சு பாட்டிம்மா.? மூணு வேளை உண்ட மயக்கத்தில் இருக்கீங்களா.? சொன்னபடி செய்யாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க.?” என்று எரிந்து விழுந்தாள்.

“கவலையே படாதே சரோஜா….மருந்து கொடுத்திருக்கேன். நல்ல செய்தி வரும். அவசரப்படாதே.. சந்தேகம் வந்திடக் கூடாது இல்லே.?” என்றார்.

அப்படி இப்படி போக்கு காட்டி வளைகாப்பு வரை கொண்டு வந்து விட்டாள் கிழவி. நேரில் பேசிக்கலாம் என்று கருவிக் கொண்டே வளைகாப்புக்கு வந்தாள் சரோஜா. நெருங்கிய சொந்தம் எல்லாம் வந்துவிட்டார்கள். வளையல்காரன் சிறு பெண் குழந்தைகளுக்கு தன் கையால் வளையல் போட்டு விட்டுக் கொண்டிருந்தார்.

பிரபாவின் மகள்….அண்ணனின் மகள்….சரோஜாவின் அக்கா மகனின் மகள்கள் அக்கம் பக்கம் உள்ள பெண்களின் மகள்கள்—-அனைவரின் கைகளிலும் வளையல்கள் குலுங்கியது. சந்தியாவின் கைகளில் நாத்தனார் முறைக்கு ஒரு பெண் வளையல்களை ஜாக்கிரதையாக போட்டு விட்டாள். போடும் போது உடைந்து விடக் கூடாதே…. ஆண்கள் எல்லோருக்கும் பந்தி பரிமாறி, அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்க….சரோஜா பாட்டிம்மாவிடம்  வந்தாள். தனியாக அழைத்து மிரட்டினாள்.

“குப்பையில் கிடந்த உனக்கு நல்ல வழி காட்டினேன். ஆனா நீ இங்க வந்து சோறு கண்ட இடம் சொர்கம்ன்னு வந்த வேலையை விட்டு விட்டு, சந்தியாவுக்கு அம்மா மாதிரி இருந்திருக்கே….இதுக்கு நீ எனக்கு பதில் சொல்லிய ஆகணும்.”

“அம்மாடி சரோஜா….சந்தியாவுக்கு அம்மா ஸ்தானத்திலே இருக்கே. நீ தவறவிட்ட ஸ்தனத்தை நான் பிடிச்சுக்கிட்டேன். அவ வயத்திலே உள்ள குழந்தையை அழிக்க உனக்கு என்ன அவ்வளவு ஆவேசம்.?”

“எனக்கு துரோகம் செஞ்சுட்டான் இவ அப்பன். அவனுக்கு சர்க்கரை நோய் பாதிப்பால் எனக்கு குழந்தையை குடுக்க முடியலை. அதுக்கு தண்டனை வேணாமா.?”

“தண்டனை தான் கொடுத்திட்டியே. குடும்பத்தை பிரிச்சு போட்டிட்டே இல்லே.? நான் தான் சந்தியாவின் அண்ணனிடம் பேசி அவனை இந்த வளைகாப்புக்கு வரவழச்சேன். மனசிலே குப்பையை வளர்க்காதே சரோஜா. அது இடி மாதிரி. உன்னையே அழிச்சிடும். நீ பாட்டி ஆகப்போறே….அந்த வானவில்லை நினச்சுப் பார்.!”

“தத்துவம்….சாத்தான் வாயிலிருந்து தத்துவம். நீ என்ன செஞ்சே.? ராஜகோபாலின் வாழ்க்கையை கெடுக்கலை.? அதை பார்த்து திருப்தி அடையலை.? அவளே என் மகள் இல்லை. இதில் பாட்டி பட்டம் வேறா.? அதை நீயே வச்சுக்கோ. ஹும்……உன்னை கவனிச்சுக்கறேன்” என்று உறுமினாள்.

“உன்னாலே ஒண்ணும் பண்ண முடியாது. சந்தியாக் கிட்டே நான் செஞ்ச துரோகத்தை சொல்லிட்டேன். அவ என்னை மன்னிச்சி மனுஷி ஆக்கிட்டா. நான் குருடியா போக இருந்தேன். எனக்கு கண் அறுவை சிகிச்சை செய்யணும்னு அவளுக்கு என்ன தலையெழுத்தா.? அதுவும் ராஜகோபால் என்னை ஏத்துக்காத போது.? இப்ப கூட நான் திருந்தலைன்னா….என் வயசுக்கு அது அழகல்ல. உனக்கு புள்ள பொறக்காததுக்கும் சந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்.? அவளா உன் கிட்டே வந்து என் அப்பாவை கட்டிக்கோன்னு  சொன்னா.? வந்திட்டா பழி வாங்க. போ அங்கிட்டு….”

சரோஜா வாயடைத்து போனாள். பஞ்சப் பரதேசியா இருந்த கிழவி, உடல் தேறி சதை போட்டிருக்க திமிர்.!

“அம்பாவும்  வம்பாவும் இருந்தா வாழ்க்கை தேய்பிறை தான். அன்பாவும் வாசமாவும் இருந்தா வாழ்க்கை வளர பிறை… புருஞ்சுக்க” என்று விட்டுப் போனார் பாட்டிம்மா.

தன் பழி வாங்கும் படலம் தோல்வியில் முடிய சரோஜா வாலை சுருட்டிக் கொண்டு நிகழ்ச்சி முடியும்வரை போலி சிரிப்புடன் அமர்ந்திருந்தாள். ராஜகோபால் கிழவியை திரும்பிக் கூட பார்க்கவில்லை. பாட்டிம்மா செய்த துரோகம் என்ற முள்ளை அவன்  தன் மனசிலிருந்து எடுக்கவில்லை.

சரோஜாவுக்கு வன்மம். ராஜகோபாலுக்கு ஆற்றாமை….அவனின்  அப்பாவும் அம்மாவும் பிரிய காரணம் இந்த கிழவி தானே.? தனியாக   இந்த உலகை எதிர் கொண்டதால் மனசில் விழுந்த அடி…..ராஜகோபாலுக்கு மன்னிக்கத் தோன்றவில்லை

1 thought on “வாழ நினைத்தால் வாழலாம் -7”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *