Skip to content
Home » வாழ நினைத்தால் வாழலாம் -9

வாழ நினைத்தால் வாழலாம் -9

அத்தியாயம்..9

ராஜகோபால் படுக்கையில் விழுந்த நேரம் முதல்….மலர்வனமாக இருந்த குடும்ப வாழ்க்கை, பாலைவனம் ஆகத் தொடங்கியது. நல்லவேளை பிள்ளைகள் இந்த அவல நிலையை பார்க்க அருகில் இல்லை என்று தான் நிம்மதி அடைந்தாள் அவள். என்னோடு போகட்டும் இந்த வேதனை….

“சந்தியா….அங்க என்ன பண்ணற.? பசி உயிர் போகுது.”

“இதோ டிபன் ரெடி. சட்னி அரைச்சிட்டு வரேன்..”

மிக்சியை ஓட விட்டாள்.

“அய்யோ….நிறுத்து டீ. சத்தம் காதை பிளக்குது.”

“கொஞ்சம் பொறுத்துக்கங்க ப்ளீஸ்….இதோ முடிஞ்சிடுச்சு.”

ஆவி பறக்கும் இட்லி சட்டினியோடு வந்தாள்.

“ஊட்டி விடட்டுமா.?”

சிடு சிடு வென விழுந்தார். அதிருப்தியோட சாப்பிட்டார். ருசி இல்லை என்று திட்டினார்.

“நான் முடமா போயிட்டேன்னு உனக்கு அலட்சியம் இல்லே.?”

அவரைப் பார்க்க அக்கம் பக்கத்து ஆட்கள் வந்தனர்.

“ராஜகோபால் சார்….உங்களுக்கு கவலை இல்லை சார். நீங்க இப்படியே கிடந்தாலும் உங்களை கவனிக்க சந்தியா மேடம் இருக்காங்க. உடம்ப பார்த்துக்கங்க.” என்று ஒரு வாய் சொல்லியது.

“ஒடி ஓடி உழச்சீங்க. இது உங்களுக்கு ஒரு ரெஸ்ட் பிரியட். எனக்கெல்லாம் இப்படி ஆனா ஹாயா இருப்பேன். உப்பு தீந்து போச்சு வாங்கிட்டு வாங்க, தண்ணி அடைக்குது, டாங்கை கிளீன் பண்ணுங்கன்னு விரட்ட மாட்டாங்க…..என்ஜாய் த ரெஸ்ட்.” என்றது இன்னொரு வாய்.

ஒரு சிலர் டீசென்ட்டா நலம் விசாரித்தார்கள். இன்னும் சிலர் அக்குபங்சர் டிரை பண்ணுங்க என்று அட்வைஸ் செய்தனர்.

எல்லோரும் வந்துவிட்டு போன பிறகு ராஜகோபால் தலையில் தலையில் அடித்துக்கொண்டார்…. செயல்பட்ட ஒற்றை கையால்.

“எப்படி பேசிட்டு போறாங்க பார்த்தியா சந்தியா.? நாக்கிலே நரம்பு இல்லாம. நான் விழுந்து கிடப்பது எல்லோருக்கும் கேலியா இருக்கு.

“கூல் கூல். எதுக்கு நெகட்டிவ்வா எடுத்துக்றீங்க.? விடுங்க.”

“இது உங்களுக்கு ரெஸ்ட்ன்னு கிண்டல் பண்ணறான்..”

“அவர் பெண்டாட்டி விரட்டி விரட்டி வேலை வாங்கும் டைப். அதான் அப்படி தனக்கு ரெஸ்ட் இல்லயேன்னு இப்படி சொல்லிட்டுப் போறார். இது புரியலையே உங்களுக்கு.”

“அது சரி….இப்படியே கிட. உன் பெண்டாட்டி பாரத்துப்பான்னு சொல்றான். அது என்ன டைப்.?”

“எல்லாம் உங்களை பார்த்து பொறாமை. இப்படி ஆனா தன்னை   பெண்டாட்டி இப்படி கவனிக்க மாட்டாள் என்று தெரியும். அந்த ஆதங்கம் இப்படி வெளிப்படுது.”

“ஆக எனக்கு பெண்டாட்டி நல்ல அமைஞ்சதுன்னு….உனக்கு பாராட்டு பத்திரம் வாசிக்க வந்திருக்கானுக. எனக்கு ஆறுதல் சொல்ல துப்பில்லை. எல்லாம் புகழும் உனக்கே….இதுக்கு இவனுங்க வந்திருக்கவே வேண்டாம்….”

“அப்படியெல்லாம் எதுக்கு பிரிச்சு மேஞ்சு பார்க்கறீங்க. இவங்க எல்லாம் தான் பாரதி சொன்ன வேடிக்கை மனிதர்கள். ஜஸ்ட் லீவ் இட். ரிலாக்ஸ். உங்களுக்கு பிஸியோ ஆரம்பிச்சா நீங்க எழுந்து நடமாட முடியும்.. நீங்க தான் முடியாதுன்னு….”

“போதும்….வந்து டொக் டொக்ன்னு காலை தட்டிட்டு….எழுந்து நட. காலை ஊனு அப்படிங்கறான். இது ஒரு ட்ரீட்மெண்ட்டா.?”

நாட்கள் தான் மாறியது….அவர் மனசு மாறவில்லை.

“அக்கா….அவர் டிரீட்மென்ட்டுக்கு ஒத்துழைக்க மாட்டேங்கறார்.”

பிரபா வந்து சொன்னாள்.

“எல்லாத்துக்கும் மனசு தான் காரணம். தம்பி நீங்க கோவாப்பரேட் பண்ணுங்க. கண்டிப்பா சரியாகும்.”

எவ்வளவோ சொன்னாள். அவள் போன பிறகு அவளை திட்டினார்.

பிரபு வந்தான்.

“அப்பா….என் கூட அமெரிக்கா வாங்க. அங்க உங்களுக்கு இந்த குறையை எல்லாம் சரி பண்ணிடுவாங்க.”

“அங்கேயும் வந்து சீரழியவா.? போதுமடா சாமி.” என்று விட்டார்.

சந்தியாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தோழி சரசுவிடம் புலம்பினாள்.

“சரசு….அவருக்கு புரியவே மாட்டேங்குது. பிஸியோதிரப்பி மூலம் சரிபண்ணிடலாம்ன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறார்.”

“விட்டுப் பிடி சந்தியா. அவர் மனசு வச்சா தான் பலன் கிடைக்கும். நல்ல மனுஷன். திடீரென இப்படி ஆனதில் ஷாக் ஆகிவிட்டார். அவருக்கும் உனக்கும் உள்ள நட்பும் காதலும் சீக்கிரம் இதை சரி பண்ணிடும். பொறுமையா இரு.” என்றாள்.

ராஜகோபாலை நன்கு தெரிந்தவர்கள் இதே தான் சொன்னார்கள். பொறுமையாகத் தான் இருந்தாள் சந்தியா.

பிற்பகல் சாப்பாடு முடிந்ததும், அவர் சற்று கண் அயர்வது வழக்கம். அவள் கொஞ்சம் டென்ஷன் குறைந்து, ஹாலில் உள்ள டி. வி யை ஆன் செய்தாள். ஒரு பிரபல பட்டிமன்றத்தை அப்பாடா என்று சோபாவில் சாயிந்து கொண்டு கேட்க ஆரம்பித்தாள். பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது….ராஜகோபால் “ஏய்….” என்று கத்தினார். அய்யோ கீழே விழுந்துவிட்டாரோ என்று பதறிப் போய் ஓடினாள்.

“அறிவு கெட்ட முண்டம். இப்ப தான் கொஞ்சம் தூங்கலாம்ன்னு இருக்கேன். டிவி யை அலற விடறே.? இப்ப இந்த பிரோகிராம் பார்க்காட்டி உன் தலை வெடிச்சிடுமா.? ஆப் பண்ணித் தொலை.”

பயந்து பயந்து மிக்ஸியை கிரைன்டரை இயக்கினாள். அவர் அறைக் கதவை சாத்திவிட்டு வந்தாள். சத்தம் கொஞ்சம் குறையுமே என்று….

“கதவை சாத்தாதே டீ. நான் விழுந்து கிடந்தால் உனக்கு எப்படித்  தெரியும்.? கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா.?”

நடக்கும் சத்தம் கூட காதுக்கு இடி போல் இருக்கு என்று சொல்லிவிடுவாரோ என்று பயந்து பயந்து நடந்தாள் சந்தியா. வேலைக்காரி பாத்திரங்களை தடா புடா என்று போடுகிறாள் என்று அவளை நிப்பாட்டி ஆகிவிட்டது. துணி துவைக்கும் மிஷினை ஓட விடும் போதும் நெஞ்சு திக் திக் என்று இருக்கும்..

சமைக்கும் போது குக்கர் சத்தம் போடுகிறது என்று ஒரு நாள்  கத்தினார். வீட்டுக்கு வந்த மாமி ஒருவர் சந்தியாவிடம் சொன்னார். அவர் ஒருவர் தான் அவளுக்கு பரிந்து பேசினார்.

“அவருக்கு சத்தம் ஒரு பிரச்சனையா இருக்குன்னா…. அதுக்கு நான் ஒரு யோசனை சொல்றேன் சந்தியா.”

“என்ன யோசனை மாமி.? சொல்லுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.” என்று ஆர்வமுடன் கேட்டாள்.

“நான் ஒரு ஃபோன் நம்பர் தரேன். அங்கே வீட்டு சாப்பாடு மூணு வேளையும் செய்து கொடுக்கிறாங்க. காலையில் இட்லி பொங்கல். மதியம் ஒரு குழம்பு, ரசம் கூட்டு அப்பளம். மாலை தோசை, இடியாப்பம் இப்படி…. எது வேணும்னு ஆர்டர் பண்ணிட்டு நீ ஹாய்யா இருக்கலாம். எந்த சத்தமும் வராது….” என்றார்.

அது மாதிரியே அவள் ஒரு வாரம் செய்தாள். நேர நேரத்துக்கு டான் டான் என்று உணவு வந்து விடும். சூடாக இருக்கும்போதே சாப்பிடுங்க என்பாள்.

“இத பாரு….அவன் கொண்டு வர்ர நேரத்துக்கு நான் சாப்பிட முடியாது. சூடு ஆரிப் போனா, வாயிலே வைக்க வழங்கலை.” என்று புகார் படித்தார்.

“மைக்ரோ வேவில் சூடு பண்ணித் தரவா.?” என்று கேட்டது தான் தாமதம்….காதில் ரத்தம் வரும்வரை பேச்சு பேசினார்.

“உனக்கு சோம்பேறித்தனம். என்னை பழி வாங்குகிறே….”

நீளமாக ரயில் வண்டி போல் வசவு போனது.

சந்தியா மனசால் பாதிக்கப்பட்டாள்.

“அம்மா….நறுக்குன்னு நாலு கேள்வி கேளு அம்மா. இப்படி டார்ச்சர் பண்ணறார். என்னாலே முடியாது. நான் மனுஷியா மாடான்னு கேளு. சத்தம் போடாம சமைக்கணும். சத்தம் போடாம மிக்ஸி அரைக்கணும்….வெளிச் சாப்பாடும் ஆகாது. என்னம்மா இது.? கேளு.”

“எப்படி கேட்க முடியும் திவ்யா.? இதுநாள்வரை என்னை கண்ணுக்குள்ளே வச்சு பார்த்துக்கிட்டார்….வெடுக்குன்னு எப்படி பேசறது.? அதனாலே அவர் டென்ஷன் ஆகி ஹார்ட் அட்டாக்….”

“உனக்கு தான் வரப் போவுது. அம்மா ஒரு நர்ஸ் அப்பாயின்ட் பண்ணு. அண்ணா சொல்லச் சொன்னான்.”

மெதுவாக உதவிக்கு “ஒரு நர்ஸ் வச்சுக்கலாம். உங்க மகன் சஜஸ்ட் பண்ணியிருக்கான்.” என்றாள் சந்தியா.

“சரி வை. உனக்கு என்னை பார்க்க புடிக்கலை. ஏதோ ஹோமில் சேர்க்காமல் இந்தளவுக்கு சலுகை கொடுத்தியே தேங்க்ஸ்.” என்ற பதில் வந்தது. பிரபா அக்காவிடம் சொல்லி ஏற்பாடு செய்யச் சொன்னாள். பிரபா உடனே அஞ்சனா என்று சுறுசுறுப்பான  பெண்ணை அனுப்பி வைத்தாள். ஒரு வாரம் நன்றாகப் போனது.

சந்தியா அருகில் இருந்த கங்கை அம்மன் கோவிலுக்குப் போனாள்.

கூண்டிலிருந்து விடுப்பட்ட பறவை போல் உணர்ந்தாள். சிறகை விரி பற….என்று அவள் மனம் உயர உயர பறந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *