புது தளத்திலும் கதைகள் பதிவிடப்படுகின்றன. Register Login செய்து வாசிக்கவும்.
Skip to content

வெண்மேகமாய் கலைந்ததே-19

அத்தியாயம்-19

   பிருந்தா மானஸ்வி காரில் ஏற வரும் நேரம் அதிவேகமாக ஆம்புலன்ஸ் வண்டி வரவும் விஹான் பதறி போனவனாக கத்தினான்.

   “ஏய் பார்த்து” என்று சப்தமிட, மானஸ்வி ‘என்னாச்சு இவருக்கு?’ என்று நெற்றி சுருக்கி விசித்திரமாய் பார்க்கவும், இவர்களை நெருங்கிய ஆம்புலன்ஸ் அதிவேகமாக வந்து நின்று அதிலிருந்து அவசர சிகிச்சை பிரிவிற்கு மருத்துவம் பார்க்க அழைத்து சென்றார்கள்.

  “என்ன விஹான் நிறைய படம் பார்த்து எதிரிகளோட வண்டி நம்மளை இடிக்க வருதுன்னு பயந்துட்டியா?” என்று பிருந்தா சிரிக்க அவளருகே மானஸ்வியும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் நகைத்தாள். 

   விஹானுக்கு இதில் லாவா பீடபூமி வெடித்து சிதற, “ஏய் பிருந்தாவுக்கு தான் சீரியஸ்னஸ் தெரியலை. நீ அந்த கூட்டத்துக்குள் போயிட்டு வந்து எவ்ளோ கஷ்டப்பட்ட, உனக்கு அறிவில்லை‌? இதுக்கு முன்ன எங்க  அண்ணா இறுதி ஊர்வலத்தோட நாடகம் நடந்தப்ப, உன்னை ஒரு கூட்டம் துரத்தலை? இப்ப மட்டும் துரத்தாம வேடிக்கை பார்ப்பாங்களா?” என்றதும் மானஸ்வி முகம் வாடியது‌.

  உண்மை தானே?! எத்தகைய இடம், அத்தனை பேரிடமிருந்து கடலில் குதித்து அல்லவா உயிரையும் மானத்தையும் காப்பாற்றி கொண்டாள். சர்வாவின் செட்டப் இறுதி ஊர்வலத்தில் எத்தனை பேர் துரத்தினார்கள். இன்றும் துரத்துவார்களா? என்று பயந்தாள்‌. அதை வைத்து விஹான் திட்டவும் முகம் வாட்டத்தில் மூழ்கியது.

  “ஏன்‌‌ விஹான் மானஸ்வியை திட்டிட்டே இருக்க.‌ பாவம்டா.” என்று பிருந்தா கூறவும், “யாரு அவளா? அதெல்லாம் அத்தனை கூட்டத்திலிருந்து தப்பிச்சு வந்திருக்கா. அதோட அண்ணா சொன்னதை செய்து முடிச்சிருக்கா. புத்திசாலி பொண்ணு பாவம் எல்லாம் இல்லை” என்று காரில் ஏறக்கூறி செய்கையில் கூறினான்.

   புத்திசாலின்னு பாராட்டுறாரா? இல்லை பாவம் எல்லாம் இல்லைன்னு திட்டறாரா? ஆண்டவனுக்கே வெளிச்சம் என்பது போல காரில் ஏறினாள்.

  வீட்டுக்கு வந்து நிறுத்தும் வரை மௌனம் சாதித்த விஹான் அதன் பின் அவனுக்கான அறையில் சென்றான்.‌
சர்வா பெற்றோரிடம் “நான் அவரை பார்த்தேன்‌. பேசினேன். எழுந்து உட்கார்ந்து பேசிட்டார். அடுத்த வாரத்துல வீட்டுக்கு வந்துடறதா என்கிட்ட சொன்னார்.” என்று ஆசையுடன் இத்தனை நாள் பட்ட கஷ்டம் தீர்ந்து பேசினாள்‌ பிருந்தா.

   மானஸ்வி வினோத் சிறையிலிருக்க அவன் தன்னை சந்திக்க விரும்புவதாக கூறியதை அசைப்போட்டாள்.

‘என்னவாம் அவனுக்கு, உயிரையும் மானத்தையும் அடமானம் வைக்க பார்த்தான்.‌
  இந்த லட்சணத்துல குழந்தையை கடத்துற கும்பலோடு சகவாசம் வேற. அவனை நேர்ல பார்த்தா செருப்பாலயே அடிக்கணும். என்னையும் தான் அடிக்கணும் அவனை மாதிரி ஆளை காதலிச்சதுக்கு’ என்று தன்னை தானே அறைந்து அழுதாள்.

   அந்தப்பக்கம் கடக்கும் நேரம் விஹான் அறைக்கதவை லேசாக தள்ளி பார்த்து மானஸ்வியின் நிலையை கண்டு இடுப்பில் கையை வைத்து, “நீயென்ன லூசா?” என்று கதவை சாற்றி அறைக்குள் வந்தவன், “நீ விரும்பின விஷயம் எங்கண்ணா சர்வாவுக்கும் அண்ணி பிருந்தாவுக்கு மட்டும் தெரியும். ஆனா நீ பைத்தியம் மாதிரி உன்னை நீயே அடிச்சிட்டு, நான் வினோத் என்பவனை காதலிச்சேனு தண்டோரா போடப்போறியா?

   இந்த உலகத்துல எல்லாரும் எல்லா நேரமும் புத்திசாலியா இருக்க மாட்டாங்க. சில நேரம் முட்டாளா ஏமாற்றப்படுறாங்க. அவ்ளோ தான்‌.

  ஒருதடவை ஏமாந்தியா இனி ஏமாறாத. அதை விட்டு தனி ரூம்ல தன்னை தானே அடிச்சிக்கிட்டு.
   ஏன் செருப்பை வச்சி அடிச்சிக்க வேண்டியது தானே.” என்று திட்டினான்.

  “செருப்பு வெளியே இருக்கே” என்று மூக்குறிந்து கூறினாள் மானஸ்வி.

   விஹானுக்கு சிரிப்பு வரவேண்டியது. ஆனால் “நான் வேண்டுமின்னா புது செருப்பு அமேசான்ல ஆர்டர் போட்டு தர்றேன். வீட்டுக்குள்ள வச்சி அடிச்சிக்கோ” என்று அதற்கும் கடிந்துவிட்டு கதவை திறந்து வெளியே வந்தான்.

  சுதாகர் நேர் எதிரே அவனை கனலாய் முறைக்க, விசிலடித்து மெதுவாய் அவனது அறைக்கு ஓடினான்.

   அவன் சென்றதும் மானஸ்வி அறையில் அவளை காண அவளோ தரையில் உட்கார்ந்து கண்ணை துடைத்து கொண்டிருந்தாள்.

  ‘இவன் என்ன பண்ணிட்டு போறான்.’ என்று யோகலட்சுமியை தேடினார்‌‌.

  அப்பாவுக்கும் சின்ன மகனுக்கும் சொற்போர் நடக்க யோக லட்சுமி பாடு திண்டாட்டம் தான்.‌

    இதில் மனைவியை கூப்பிட்டு, “அவன் எப்ப போறான்” என்று கேட்டு வைத்தார்.

  ‘ஏங்க இப்படி கேட்கறிங்க. அவனே வந்திருக்கானு நான் சந்தோஷப்பட்டிருக்கேன்.‌” என்று சலித்துக் கொண்டு சென்றார்‌.

  ஒரு வாரம் சென்றிருக்கும் சர்வானந்தன் வீட்டுக்கு அழைத்து வந்தான் விஹான்.

  சர்வானந்தனுக்கு ஆலம் கரைத்து மறுஜென்மமாக வரவேற்றார்கள்.

   வீட்டிலே காலடி எடுத்து வைக்க கூடாதென்று பிடிவாதம் பிடித்த தாய் தந்தை அவனை தாங்கி பிடித்து வரவேற்று அமர வைத்தனர்.

   பிருந்தா சுடத் தண்ணீரை வைத்து அவனை குளிக்க தயார் செய்தாள்.

  கையில் கட்டு இன்னமும் இருக்க நீர் படாமல் குழந்தையை குளிக்கவைப்பது போல கவனித்து கொண்டாள்.

   “ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன்.‌ இப்பவும் கஷ்டம் தர்றேன்.‌ இரண்டு வாரம் இப்படி தான். ஒரு மாசமாவது உடலை ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு சொல்லிருக்காங்க.” என்று குளிப்பாட்டும் மனைவியிடம் கூறினான்.‌

  அவன் தாடை நிமிர்த்தி, “கல்யாணம் ஆனா இரண்டு மாசம் எப்படி வாழ்ந்தோம்?! ஒரே பாத்ரூம்ல குளிக்கலையா? இல்லை நாம நம்மளையே குளிப்பாட்டி விடலையா. இது அது மாதிரி தான். நீங்களா ஏன் கஷ்டம்னு பேசறிங்க. உயிர் திரும்பி மறுஜென்மமா வந்திருக்கிங்க‌. எனக்கு உயிரை கொடுத்திருக்கிங்க. இப்படி இன்னொரு முறை பேசாதிங்க. அப்பறம் மாமாவிடம் போட்டு கொடுப்பேன்.” என்று மிரட்டினாள்.

  இணையான துணை, தூணாக இருக்க, காயப்பட்ட வலிகள் இதமானது.

    தலையை உயர்த்திவிட்டு கறி விருந்து போல உணவை கடை பரப்பியிருந்தார்கள். எல்லாம் சர்வானந்தன் உடலை பலப்படுத்தும் நோக்கத்தில்.

   பிருந்தா ஊட்டி விட வரவும், யோக லட்சுமி தடுத்து, “பிள்ளையை குளிப்பாட்டி விட்டது உன் வேலை. என் பையனுக்கு நான் சோறூட்டறேன். வயிற்று பிள்ளைக்காரி நீயும் சாப்பிடு‌.” என்று கூறவும் மனநிறைவாக அமர்ந்து சாப்பிட்டாள்.

  “அம்மா…‌ அவனை கவனிக்கறது இருக்கட்டும். என்னை கவனிங்க. இரண்டு வாரத்துல நான் கிளம்பிடுவேன்” என்று விஹான் போட்டிக்கு வந்தவனாக உட்கார்ந்தான்.

  “என்னடா சொல்லற? எங்களோட இருக்க மாட்டியா? ஏன் போகணும்? எதுக்கு போகணும்? அப்பா ஏதோ சொன்னார்.‌ அதுக்கு கோவிச்சுக்கிட்டு போவியா?

  ஏதோ ஆபிஸ் விஷயமா வெளியூர் வேலைன்னு சொன்ன. நாங்களும் அனுப்பி வச்சோம். ஓரு நாள் அப்பா உன்னை பார்க்க ஆசையா தங்கியிருந்த வீட்டுக்கு வந்தா கையில்லாத சட்டையை போட்டுக்கிட்டு ஒரு பொண்ணு வந்து கதவை திறக்கறா? போதாத குறைக்கு, விஹான் டியர் யாரோ ஒருத்தர் வந்திருக்கார்னு கத்திருக்கா. நீயென்னடான்னா ஷார்ட்ஸ் பனியன்னு உள்ளயிருந்து வந்தியாம். உங்கப்பாவுக்கு எப்படியிருந்திருக்கும்? அதான் கோபத்துல கத்திட்டு வந்துட்டார்.

  மனசு கேட்காம உன்னை பேசினார்.‌

   சர்வேஷிடம் கூட அப்ப சொல்லலை. ஏதோ அவன் பிருந்தாவை கட்டிட்க்கிட்டு வந்தப்ப ஆதங்கத்துல, நீயும் ஒரு பொண்ணு கூட தங்கியதை சொன்னார். இதுல என்னடா தப்பிருக்கு” என்று நீண்ட நெடுவுரையாக பேசினார்.‌

   விஹானோ “இருக்கற கடுப்புல குக்கரை தூக்கி அடிச்சிடுவேன்.  அவர் வந்ததெல்லாம் சரிதான். ஆனா அது பொண்ணுன்னு இவரா முடிவுக்கும் வந்து என்னை பேசினது தப்பு. என் கூட தங்கினது பொண்ணே இல்லை அவன் பையன் பெயரு ரவிகுமார். ஏதோ லாங் ஹேர் வைக்கணும்னு ஆசைப்பட்டு வச்சிட்டு சுத்தினான். அதுக்கு அவன் பொண்ணாயிடுவானா?” என்று தட்டை தள்ளிவிட்டான் அப்படியொன்றும் தூரமாக தட்டு நகரவில்லை. இரண்டு எட்டு நகர்ந்தது.

“நான் பார்த்தேன் டி அது ஒரு பொண்ணு தான். தோள் வரைக்கும் முடி வளர்ந்துடுச்சு. நெத்தியில கருப்பு கலர்ல ஒரு பொட்டு.
இதுல கை இல்லாம சட்டை அதுவும் முன்னாடி… என்று பேச முடியாமல் திணறினார். முன்னழகை கூற முடியுமா?

“அவனுடன் நெத்தியில கருப்பு கலர்ல மச்சம் இருக்கு அதுதான் உங்களுக்கு பொட்டா தெரிஞ்சிருக்கு அதுக்கு நான் என்ன செய்யறது சோல்டர் வரையில முடி வளத்திருந்தா பொண்ணா? ஊர் சுத்திகித்தி போய் பாருங்க எல்லாரும் பேஷன் சொல்லி அவனவன் வளர்த்து வச்சிருக்கான். இதுல டிப்ரண்ட் டிஃபரண்டா டிசைன்ல ஹேர் ஸ்டைல் மாத்தி இருக்கான் உங்களுக்கு என்ன தெரியப் போகுது கேட்டா பொண்ணு பொண்ணுன்னு சொல்றீங்க. என் கேரக்டரை ஸ்பாயில் பண்ணறிங்க” என்று விஹான் அன்று பேசமுடியாத வலியில் இன்று துள்ளினான்.

  ”யோக பொண்ணுக்குண்டான உடல்வாகு. அதெல்லாம் இருந்தது.” என்று சங்கடமாய் மனைவி காதை கடித்தார். அருகே மானஸ்வி கதை கேட்ட தினுசில் சிரிப்பதா அழுவதா என்று அமைதியாக சோற்றை விழுங்கினாள்.

  “இப்ப என்ன பொண்ணு மாதிரி உடல்வாகு இருந்தது. உங்களுக்கு அதானே கண்ணை உறுத்துச்சு?” என்று தன் போனில் போட்டோவை எடுத்து அன்னையிடம் காட்டி, “இதான் மா ரவிகுமார் அப்பா சொன்ன பொண்ணு. என் கூட தான் தங்கினான். பாருங்க நல்லா பாருங்க” என்று‌ காட்டினான்.

  எங்கோ அருவியில் குளிக்க சென்றிருப்பார்கள் போல அந்த ரவிகுமார் விஹானோடு போட்டோ எடுத்திருந்தான்.‌
  
  அதே கைகளற்ற வெள்ளை பனியன் தோள்வரை புரண்ட கூந்தல்‌. நன்றாக கொழுக்மொழுக்கென்ற பையன்‌. பக்கத்தில் விஹான் படிக்கட்டு வேகத்தோடு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து நீர்துளிகள் மேலே விழுந்து சென்ற சுவடு தெரிய குரூப் போட்டோவில் தெரிந்தனர்.

  “ஆமா பையன் தான்.” என்று யோக லட்சுமி கூற சுதாகரிடம் போன் மாறியது. அவர் கூர்ந்து பார்த்து, மகனை சங்கடமாய் பார்த்தார்.

  விஹானோ விடுவானா? “இதுக்கு தான் ஒரு நிமிஷம் இருங்கப்பானு கத்தினேன்.‌ ரோட்ல நீங்க பாட்டுக்கு போறிங்க. என் மேல நம்பிக்கை இல்லை. இங்கேயும் அம்மாவிடம் என்னை அசிங்கப்படுத்தி வச்சியிருக்கிங்க.

  அம்மா என்னடானா எங்கடா அவ. குடும்பத்தை பிரிச்ச பாவி. அவளுக்கு திமிர் எடுத்து உங்கப்பாவை வெளியே நிற்க வச்சாளாமே? குண்டா அசிங்கமா இருந்தா உன் பையனுக்கு என்னடி டேஸ்ட்னு அப்பா சொல்றார். ஏன்டா லட்சணமா ஒருத்தி காதலிக்க கூடாதானு சொன்னிங்களா இல்லையா.” என்று பொறிச்ச மீனை சுவைத்து கூறினான்.‌

  “சரிடா ஏதோ எங்க தப்புதான் நீ உங்க அண்ணகிட்ட டெய்லி பேசுவ இல்ல அவன்கிட்ட சொல்லி இருக்கலாம் இல்ல” என்றார்.

  அவனிடம் அது பொண்ணு இல்ல பையன் என்று சொல்லி இருந்தா இத்தனை நாள் உன்னை சந்தேகப்பட்டு இருக்க மாட்டோம் இல்லையா?! நீயும் எங்களோடவே இருந்துருக்கலாமே என்று கூறினார் யோகலட்சுமி.

விஹானோ கோபமாக “அது எப்படி? அப்பா என்னை பத்தி தப்பா சொல்லுவாரு நீங்களும் நம்புறீங்க. நான் வந்து விளக்கம் சொல்லனுமா சான்ஸே இல்ல. நான் விளக்கம் சொல்றதா இருந்தா பிராஜெக்ட் முடிய வீட்டுக்கு வந்திருப்பேன். எனக்கு இங்க வர பிடிக்கலை. 
சர்வாவிடமும் நீங்க எதுவும் சொல்லலை‌ அதான்‌ பேசும்போது நான் அந்த விஷயத்தை சொல்லலை. அவனா உங்களிடம் கேட்டு‌ நீங்க சொல்லி., அவன் கேட்கட்டும்னு இருந்தேன்.”  என்று தட்டில் கை அலம்பி உதறினான்.

  அது மானஸ்வி கண்ணில் தெறிக்க காரம் கண்ணில் உறுத்தியது.

‘அச்சோ” என்று ஓடி முகம் கழுவினாள்.
  தன் கையிலிருந்த தண்ணீர்பட்டு காரம் கண்ணில் உறுத்துவதை அறிந்தவனோ, “சாரி… இரண்டு வாரத்துல கிளம்பிடுவேன்.” என்று அனைவரிடமும் உரைத்து மாடிக்கு சென்றான்.‌

   அங்கே தான் ஒரு அறை மட்டுமா தனித்து இருக்கும். அங்கே வந்து, காலாட்டி இயற்கையை ரசிக்க அமர்ந்தான்.
  
   மானஸ்வி கண் உறுத்தல் சரியாகவும், அவளிடம் மற்றவர்கள் விஹானுக்காக மன்னிப்பு கேட்டார்கள்.

   அவளுமே, ‘தெரியாம தானே அங்கிள். பரவாயில்லை” என்று அறைக்குள் பதுங்கினாள்.

   அதன் பின் பிருந்தா தாய் தந்தையர் வந்திருந்தனர். அவர்களை கவனிக்க நேரம் பறந்தது.
இந்த ஒரு வாரத்தில் இரண்டு முறை மாப்பிள்ளையை காண வந்துவிட்டார்கள்.

பிரிந்த உறவுகள் ஒன்று சேர்ந்திட அறைக்குள் மானஸ்வியும் மாடியில் விஹானும் இருந்தார்கள்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
 
  

6 thoughts on “வெண்மேகமாய் கலைந்ததே-19”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!