அத்தியாயம்- 34
அன்று முழுவதும் அவனது சிந்தனையை ஆட்கொண்டவள் மேதாவே..
இப்படி தன் எண்ணத்தை சிதற வைப்பவள் மேல் அவனே அறியாமல் ஒரு ஈர்ப்பு வருவதை உணர்ந்தவன் அவள்மேல் கோவமாக காட்டி அவளது எண்ணத்தை அவனை விட்டு தூர நிறுத்த முயற்சிக்கிறான்.. அது முடியுமா?
அவன் உயிராய் அவனது உடலில் ஓடும் குருதியாய் இரண்டற கலந்தவளை அவனால் அடையாளம் காண இயலாவிடினும் அவளால் அவன் ஈர்க்கப்படுவதை உணராமலா இருப்பான்..
‘ஒருவேளை அவள் இவளாக இருப்பாளோ?’ என்ற எண்ணம் எழ திடுக்கிட்டு அமர்ந்தவன்
‘ச்சே..இருக்காது..அவ பணக்கார வீட்டு பொண்ணுனு அண்ணா சொல்லி இருக்காங்களே.. இவ என்னோட அசிஸ்டெண்ட்டா ல வேலை செய்யுறா? அவளோட கண்ணு அதுல உயிர் இருந்துச்சு..எனக்கான ஏக்கம் இருந்துச்சு ஆனா இவ அப்படி ஒன்னும் உலக அழகி இல்லையே.. பார்க்க ரொம்ப சாதாரணமா இருக்காளே..கண்டிப்பாக இவ அவளா இருக்கவே முடியாது’என்ற முடிவுக்கு வந்த பிறகே அவனுக்கு உறக்கம் வந்தது..
ஆனால் அவளோ..இவனது வேலைகளையெல்லாம் முடித்து அதன்பிறகு அவளது வேலைகளை துவங்குவாள்..
இடைஇடையே அடிக்கடி வயிறு வேறு வலி வந்து பாடாயா படுத்துகிறது..கொஞ்ச நேர வலிதான் ஆனால் அதுவே உயிர்போகும் வலியை ஏற்படுத்தும்.. அதற்குமருத்துவரிடம் ஃபோன் செய்து மருந்து வாங்கி கொண்டாள்..
வலி வரும் போது அந்த மாத்திரையை போட்டால் வலி அடங்கும் ஆனால் ஒருமுறை வந்து செக்கப் செய்து பார்க்க சொன்னதை காற்றில் விட்டுவிட்டாள்..
திரும்ப மருத்துவம் பார்க்க சென்றால் தன்னை வேலைக்கு வேண்டாம் என்று அவனும் கூறி விடுவான் தன் அண்ணன் அதற்கு மேல் எப்போது என்று காத்துக்கொண்டு இருக்கிறார்..
தேஜுவும் குழந்தையை விட்டு இப்போது வர இயலாது..
இந்த ஒரு வருடகாலம் தன்னை எவ்வளவு புரட்டி போட்டு விட்டது என்று எண்ணியவளுக்கு வருத்தம் வர அதை ஓரங்கட்டியவள் நான்கு வருடங்களாய் தான் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்த அந்த சின்னவன் ஆராஷி தான் அவள் மனக்கண்ணில் வந்து வந்து போனான்..
அப்போது பார்க்க சின்ன குழந்தை போல கள்ளம் கபடம் இல்லாமல் கோவப்படும் அதே குழந்தை யாரையும் தன் அருகில் சேர்க்காத குழந்தை..
அந்த ஒருநாள் அவனது உயிரை காப்பாற்ற தான் துடித்தது அவனுக்கு தன்னை காட்டிக்கொடுத்து இருக்குமோ? இருந்திருந்தால் இந்நேரம் தன்னை தேடி இருப்பாரே தேடவில்லை என்றாள் அவர் தன்னை மறந்தது தானே உண்மை.. என்று எண்ணியவள் மனதில் தன் ஒருதலை காதலின் பாரம் ஏறிக்கொண்டே இருந்தது..
‘அவர்கிட்ட எதுவுமே இல்லாதப்போ தான் நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் இந்த நாலு வருஷம்ல அவர் எவ்ளோ வேணா வளர்ந்து இருக்கலாம் ஆனா எனக்கு எப்பவும் அந்த ஆராஷி தான் பிடிக்கும்.. ஆனா அவர் அப்படி இருக்கலையே இப்போ? ஏதோ நடந்து இருக்கு அதும் லேடீஸ்ஸ பார்த்தாலே எறிஞ்சு விழுற அளவுக்கு..
லேடீஸ்ஸ பார்த்தாலேவா இல்ல நம்மள பார்த்தா மட்டுமா? இந்த கேள்வியும் அவளது மனதில் எழுந்தது..
ஆனால் எதையும் ஆராய்ச்சி செய்யும் நிலையில் அவளது உடலும் ஒத்துழைக்க வில்லை..
அன்று இரவு முழுவதும் அவனது நினைவிலேயே இருந்தவள் உறக்கம் மறந்துபோனாள்..
அவனும்தான்..
இருவரது எண்ணங்களும் நான்கு வருடங்களாய் இருவருக்கும் இடையில் உள்ள பந்தத்தை எண்ணி பார்த்தபடி இருந்தனர்..
அவளுக்கு தெரிந்த பந்தம் அவனுக்கு அவளையே தெரியாத பந்தம்..
அருகிலேயே இருந்தும் அவளை அடையாளம் காண தெரியாத பந்தம்..
ஜப்பானின் அதிக மக்கள் தொகை வாழும் டோக்கியோ மாநகரில் அப்போது தான் அவளது தந்தையின் உந்துதலிலும் அவளுக்கு பிடித்த ரோபோடிக் இன்ஜினியரிங் படிப்பை படிக்கவும் அங்கு தங்கி படிக்க அதிக செலவு ஆகும் என்பதால் அவர்களது விட்டிலிருந்தும் அவளது கல்லூரி தூரம் என்பதால் அங்கு தமிழர்கள் சங்கம் மூலம் தமிழர்கள் தங்கும் வீட்டில் ஒரு அப்பார்ட்மெண்டில் அவளும் ஒரு அப்பார்ட்மெண்ட் எடுத்து தங்கினாள்..
அந்த அப்பார்ட்மெண்ட்டையே வாங்கி தருவதாக தந்தை கூற அவரை தன் முறைப்பால் தூர நிறுத்தியவள்.. “நான் தி கிரேட் ரெனி ஃபேஷன்ஸ்ஸோட ஓனர் சரத் ஶ்ரீ அவரோட பொண்ணா இங்க வாழ விரும்பல.. ஒரு சாதாரண வீட்டுல இருந்து வந்த மஹாலட்சுமியோட மகளா சாதாரணமா இருக்க ஆசை படுறேன்..ப்ளீஸ்பா.. என்னை இப்படியே இருக்க விடுங்க..?” என்று அவள் கோவமாய் பேச..
“என்னம்மா இப்படி பேசுற? அப்பா உன் நல்லதுக்காக தானே யோசிச்சேன்?” என்று அவர் பாவமாக கேட்க..
“போதும் இப்படி சின்ன பிள்ளை மூஞ்சி வெச்சு பேசினா ஞான் சமாதானம் ஆகல்லே.. நான் மஹாவோட பொண்ணு உங்க டிராமாலாம் என்கிட்ட வேணாம்.. எனக்கு இப்படி இருக்கத்தான் பிடிச்சு இருக்கு.. தயவுசெஞ்சு நான் கம்பெனி பொறுப்புலாம் ஏத்துக்குற வரை என்னை சாதாரணமா வாழ விடுங்க” என்றாள்..
“அங்க அங்க அப்பா திடீர் பணக்காரரா ஆனாலே தாம் தூம்னு பந்தா பண்ணுறாங்க புள்ளைங்க இங்க அப்பன் பரம்பரை பணக்காரனா இருந்தாலும் சாதாரணமா இருக்க நினைக்குறீங்க? உலக வாழ்க்கையை அனுபவிக்க தெரியாத பிள்ளையா இருக்கியே?” என்று அவர் கேட்க..
“ஓஹோ.. அப்படியா மிஸ்டர் சரத்ஶ்ரீ அவர்களே..பரம்பரை பணக்காரர் சாதாரண வீட்டு பொண்ணு மஹாலட்சுமியை துரத்தி துரத்தி லவ் பண்ணி கல்யாணம் பண்ணது ஏனோ?” என்று அவள் அவரை கேள்வி கேட்க..
“அதெல்லாம் அன்கன்டிஷனல் லவ் மா உனக்கு அதெல்லாம் புரியாது நீ குழந்தைடா” என்று அவர் காதலோடு கூற.. தாய் இறந்து இத்தனை வருடங்கள் ஆகியும் தனக்கென ஒரு துணை தேடாமல் இன்றளவும் அவர்மேல் இவ்வளவு அன்பை பொழியும் இந்த காதல் எவ்வளவு வலிமையானது என்றுதான் எண்ணினாள்..
ஆனால் அந்த காதல் உயிர்போகும் வலியையும் சேர்த்தே தரும் என்பதை அவளுக்கு யாரும் சொல்லவில்லையே..
சரத்ஶ்ரீ-மஹாலட்சுமி தம்பதியர் சரத்ஶ்ரீ அவர்கள் மலையாள குடும்பத்தை சேர்ந்த ராஜ பரம்பரையில் பிறந்தவர்..
மஹாலட்சுமி தமிழ்நாட்டை சேர்ந்த ஏழை துணி நெசவு வேலை செய்யும் தொழிலாளியின் மகள்..
தனது சொந்த சம்பாத்யத்தில் வாழ நினைத்த சரத்ஶ்ரீ ஒரு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து சிறிது பணம் சேர்த்தவர் திடீரென ஐடியா வர நெசவு செய்பவர்களிடம் மொத்தமாக வாங்கி துணிகளை விற்க துவங்கினார் கலைநயம் கலந்து நெசவு செய்யப்படும் துணிகளை செய்வதில் திறமைசாலியான மஹாலட்சுமி தன் தந்தைக்கு உதவியாக கலைநயமான புடவைகளை நெசவு செய்து தருவார்.. அதில் வரும் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடத்தி வந்தனர்..
ஒருமுறை ஒரு பெண் திருவிழாவிற்கு உடுத்தி வந்த நெசவு சேலையின் கலைவண்ணம் அவரது கண்ணில் பட அவரிடம் விசாரித்ததில் அவர்கள் சொன்ன நெசவு தொழில் செய்பவர்கள் தான் மஹாலட்சுமியின் தந்தை..அங்கே சென்று அவரிடம் விசாரிக்க அவர் கைகாட்டியதோ தன் மகளை..
அவர்தான் அந்த கலைநயத்துக்கு சொந்தகாரர் என்பதை அவரால் நம்பவே முடியவில்லை ஆளுக்கும் அவரது திறமைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார் மஹாலட்சுமி அமைதியான நிதானமாக முகம் வெள்ளந்தியான முகம்.. அதில் விழுந்தவர் அவரது திறமையை அவரோடு அழிந்து போக விடாமல் தங்களது தொழிலில் ஈடுபடுத்தினார்..
அவரது தொழிலோடு நெசவு தொழிலும் வளரும்படி செய்தவர் ஒருநாள் மஹாவை அவருக்கு பிடித்து இருக்கிறது திருமணம் செய்ய என்று அவரது தந்தையிடம் கேட்க அவருக்கோ அதிர்ச்சி..
இராஜ வம்சத்தை சேர்ந்தவர் ஏழை வீட்டு பெண்ணை கேட்கிறாரே என..
சரத்ஶ்ரீ அவரது காதலை அவர்களுக்கு புரியும்படி விளக்கி எப்படியோ சம்மதம் பெற்று மஹாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார்.. ஆனால் அவரது குடும்பத்தினர் அவர்களை ஏற்க மறுக்க ஏற்கனவே தன் உழைப்பில் உருவான ரெனி ஃபேஷன்ஸ் மட்டும் வைத்துக்கொண்டு மற்ற சொத்துக்களையெல்லாம் வேணாம் என ஒப்படைத்தவர் தன் மனைவியோடு ஊட்டியில் குடியேறினார்.. மனைவியின் ஆதரவோடு தன் தொழிலை வளர்த்தவர் இரண்டாவது மகளான மேதஷ்வினி பிறந்து சில வருடத்திலேயே மஹாலட்சுமி நோய்வாய்பட்டு இறந்து போக அதன்பின் மகள்களுக்காகவே வாழ்ந்தார்..
மகள்களின் மனமறிந்து நடப்பவர் சரத்ஶ்ரீ..மகள் அறிமுகம் செய்த அவளது நண்பர்களையும் சேர்த்தே வளர்த்தார்..தன் அண்ணன் குடும்பம் ஆக்சிடெண்ட்டில் அழிந்துவிட அநாதையாய் நின்ற அண்ணன் மகனை தன் மகனாய் எண்ணி வளர்த்தார்..
இப்போது மகளோ தன்னை போலவே தன் குடும்ப பெயரை உபயோகிக்காமல் அவளது சொந்த முயற்சியில் முன்னேற நினைப்பதை எண்ணி பெருமை கொண்டவர்.. மகள் மனைவியை பற்றி கேட்டதும் வெட்கம் வர
“அதெல்லாம் லவ்வு மோளே..நிங்கள் அம்மே வள்ளிய சுந்தரியானு..” என்று மனைவியை வர்ணிக்க ஆரம்பித்து விட்டார்.. அவரை ஆச்சர்யமாக பார்த்த மகளை பார்த்து..
“எந்தா மோளே? அங்கன நோக்கினது?” என்று கேட்க..