Skip to content
Home » 10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்

காலேஜ் முடிந்து கிளம்பும் போது ஸ்ரீ அந்தப்பக்கம் செல்ல பெண்ணவள் ஆட்டோக்காக காத்திருக்க தொடங்கினாள் அவளை கடந்து பல பஸ் சென்றாலும் ஏனோ அதில் ஏறி செல்ல விருப்பமில்லை அன்று நடந்த சம்பவத்திற்கு பிறகு பஸ் பயணத்தை முற்றாக தவிர்க்க தொடங்கி இருந்தாள் பாதையின் அந்தப் பக்கமும் இந்த பக்கமும் பார்வையை திருப்பி திருப்பி பார்த்தப்படி இருந்தவள் முன்பு காரை கொண்டு வந்து நிறுத்தி கண்ணாடியை இறக்கினான் யாதவ் அவனை திகைத்து பார்த்துக்கொண்டு இருக்க “வந்து காருல ஏறு செல்வி பக்கத்திலே இருக்கிற பார்க் வரைக்கும் போய் வந்திடலாம்…” என்றவனிடம் அவள் முடியாது என்பது போல் தலையசைக்க ஸ்டியரிங்கில் கையை மடக்கி குத்தி அவன் கோபத்தை காட்ட தயக்கத்துடன் காரில் ஏறி அமர்ந்தாள்.

முன்பை விட அளவுக்கு அதிகமாக இப்போது கோபத்தை வைத்து பல விடயங்களை சாதித்துக் கொள்கிறான் என எண்ணியதை மறைக்காமல் “ஆ… ஊன்னா உங்களுக்கு இப்போ ரொம்ப கோவம் வருது யாதவ்…” என்றவளின் பேச்சைக் கேட்டு உதட்டோரம் சிறு புன்னகை வந்தது‌ அதை அவளிடம் காட்டிக்கொள்ளாமல் ஆட்கள் நடமாட்டம் குறைவான பக்கம் சற்று மறைவாக காரை நிறுத்தி விட்டு அவள் புறம் திரும்பி அமர்ந்தவன் அவள் கையில் ஒரு பார்சலை நீட்டினான்.

“என்ன இது..” என்றவளிடம் பிரிச்சு பார் என்பது போல் சைகையில் சொல்ல அதில் சில வைட்னிங் க்ரீம் மற்றும் எடையை குறைக்கும் ஹெல்த்தி ட்ரிங்க்யும் இருந்தது “இதை ஒரு வாரம் பூசினா நீயும் என் கலருக்கு வந்திடலாம் கூடவே இந்த எடையும் குறைத்து ஸ்லிம் ஆகிறலாம் யூஸ் பண்ணு அப்போ தான் உங்களை என்னாலே லவ் பண்ண முடியாது, உங்களுக்கு நான் செட் ஆக மாட்டேன்னு சொல்லி என்னை டார்ச்சர் பண்ண மாட்ட உனக்காக ராத்திரி முழுக்க தூங்காம எல்லாத்தையும் தேடி வாங்கி இருக்கேன் யூஸ் பண்ணாம இருந்திடாதமா இதை கொடுக்க தான் உன்னை அழைச்சிட்டு வந்தேன் காலேஜ்ல வெச்சு கொடுக்க சரியான சிடுவேஷன் கிடைக்கல…” என்றவனை யோசனையாக பார்த்தவளிடம் “இப்போ என்ன யோசனை இதுல விருப்பம் இல்லையா?…”

“இதுவரைக்கும் இது எல்லாம் பூசி பழக்கம் இல்லை ஆனா நீங்க இவ்வளவு கேர் பண்ணி வாங்கி கொடுக்குறீங்கன்னா அது என் நல்லதுக்கு தானே சரி நான் இதை யூஸ் பண்ணி உங்க கலருக்கு வர பார்க்கிறேன்…” என்றவள் கண்சிமிட்டி புன்னகைக்க அவள் கரங்களை தன் கரத்துக்குள் வைத்துக் கொண்டவன் “நீ எப்போதும் இப்படி சிரிச்சுகிட்டே இருக்கனும் செல்வி அதுதான் என்னோட ஹேப்பினஸ்…” என்றவன் ஒரு பெருமூச்சுடன் “சரி டைம் ஆகுது ஆட்டோ பிடிச்சு தரேன் பத்திரமா வீட்டுக்கு போயிட்டு போன் பண்ணு…” என்றவன் அவளை ஒரு ஆட்டோவில் ஏற்றி அனுப்பி வைத்தான்.

வீட்டுக்கு வந்த பெண்ணவள் அவன் வாங்கி கொடுத்த பொருட்களை பார்த்து விட்டு அதை தன் சருமத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து பாவிக்க தொடங்கினாள் முகத்தோடு கை, கால்களை எல்லாம் வெள்ளை நிறமாக மாற்ற வேண்டும் என்று எண்ணி க்ரீம் பத்தாமல் கடைகளில் வாங்குவதற்கு தேட அது அவளுக்கு கிடைக்கவே இல்லை அதை யாதவிடம் கூற கூடுதலாக அடுத்தநாள் அந்த பொருட்களை வாங்கி கொண்டு வந்து கொடுத்தான்.

“என்னையா கிண்டல் பண்ணுறீங்க என் கலரையே மாத்திட்டு உங்க முன்னாடி வந்து நிக்கிறேன் அப்போ நீங்க எல்லாரும் வாய் அடைச்சு போறதை நான் நின்னு நிதானமா பார்த்து ரசிக்கிறேன்…” என தன்னை வைத்து கிண்டல் செய்த பெண்களிடம் மனதிற்குள் பேசி அவர்கள் முகம் ஆச்சிரியத்தை காட்டும் விதமாக கற்பனை பண்ணி பார்த்து சிரித்தவளுக்கு தான் ஒன்றை முழுவதும் நம்பி தவறு செய்கிறோம் என்பது தெரியாமல் போய்விட்டது.

ஸ்ரீயும் அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக தெரியும் மாற்றங்களை கவனிக்க தொடங்கினாள் பல நேரங்களில் யாதவோடு தான் காலேஜ் முழுக்க வலம் வந்தாள் ஏன் காலேஜ் கட் அடித்து விட்டு கூட வெளியே செல்வதை கவனித்த ஸ்ரீக்கு ஒரு கட்டத்துக்கு மேல் ஏதும் கூற முடியவில்லை சொன்னாலும் கேட்கும் நிலையில் அவள் இல்லையே அவள் தான் முழுநேரமும் யாதவ் யாதவ்… என யாதவ் பைத்தியம் பிடித்து சுற்றிக்கொண்டு இருக்கிறாளே இதில் எங்கு அவள் பேச்சு எடுபட போகிறது.

நாட்கள் மாதங்களாக கடந்தது மூன்று மாதங்கள் கடந்து இருந்தது பழைய கலைச்செல்விக்கும் புதிய கலைச்செல்விக்கும் ஏகப்பட்ட வேறுபாடுகள் இருந்தது முன்பை விட அழகாக வெள்ளையாக மாறி இருந்தாள் அதே நேரம் உடல் எடையும் குறைந்து இருந்தது வழமையாக அணியும் கருப்பு நிற உடை தூர சென்று பல வண்ண ஆடைகளை அணிந்து தன்‌ மேனியை அலங்கரிக்க வைத்திருந்தாள்‌ ஆனால் எல்லாம் நன்றாக போய் விட்டாலே எந்த பிரச்சனையும் இல்லையே வாழ்க்கை எனும் போராட்டத்தில் பல சவால்களை தாண்டி தானே ஜெயிக்க வேண்டி இருக்கிறது.

இரண்டு நாட்களாக படுத்த படுக்கையில் இருந்தாள் கலைச்செல்வி எழுந்து கொள்ளவே முடியவில்லை கை காலை அசைக்க கூட பெரும்பாடாக இருந்தது மகளின் நிலையை பார்த்து கண்கலங்கி‌ இருவரும் சிரமப்பட்டு ஹாஸ்பிடல் அழைத்து சென்றனர் அங்கு என்ன ஏதென்று கண்டுபிடிக்க முடியவில்லை அதிகளவில் சோர்வு மூட்டு மூட்டாக வலி எடுப்பதை கூற ஹீமோகுளோபின் அளவு குறைவாகி விட்டதோ என்று ரத்தப் பரிசோதனை செய்து பார்த்தும் எதுவும் தெரியவில்லை சத்து மாத்திரை கொடுத்து ஸ்கேன்னுக்கும் எழுதிக்கொடுத்து அனுப்பி வைக்க இவளும் வீடு வந்தாள்.

எதை சாப்பிட்டாலும் ஒரு வித ஒவ்வாமை, முகம் முழுவதும் பெரிய பெரிய பரு முதற்கொண்டு சிவந்து தடித்து தடித்து வர தொடங்கி இருந்தது முதலில் சிறிது சிறிதாக வர தொடங்கியதை கண்டு கொள்ளாமல் இருக்க அது நாளாக நாளாக பெரிதாக மாறி அவள் முகத்தை பார்க்க பயங்கரமாக இருந்தது காலேஜ் வராமல் இரண்டொரு முறை போனில் அழைத்தும் ஒழுங்காக பேச முடியாமல் உடம்பு சரியில்லை என்பதோடு அழைப்பை துண்டித்தவளை கண்டு குழப்பத்துடன் அவளை அன்று பார்ப்பதற்காக காலேஜ் முடிந்து வீட்டுக்கு வந்தாள்‌ ஸ்ரீ.

கட்டிலில் சுருண்டு படுத்துக் கொண்டு இருந்தவளை கண்டு அவள் கண்கள் கலங்கிப் போனது அவள் தலையை மெதுவாக வருடி விட அதில் லேசாக கண் திறந்து பார்த்தவள் ஸ்ரீ… என அழைக்க “டாக்டர் என்ன சொன்னாங்க?..”

“வலிக்கு மாத்திரையை மட்டும் தான் தராங்க இன்னும் கொஞ்ச நாளையிலே சரியாகிடும் நினைக்கிறேன் பார்க்கலாம்…” இருவரும் பேசிக் கொண்டு இருக்க கல்யாணி அறைக்குள் வந்தவர் “செல்வி‌ எந்திரி வா பின்னாலே தண்ணி கொதிக்க வெச்சிருக்கேன் கொஞ்சம் குளிச்சாவது பார்க்கலாம் சரியாகுதான்னு…” என்றவர் அவளை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வீட்டின் பின்புறமாக சென்றவர் அவளை இருக்க வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தலையில் தண்ணீர் ஊற்றி குளிக்க வைத்து விட்டு வேப்பிலை, மஞ்சள் மற்றும் கற்றாழை சேர்த்து அரைத்து வைத்திருந்த கலவையை அவளின் முகத்தில் பூச அதன் வீரியத்தில் முகம் எல்லாம் எரிய தொடங்க வலி பொறுக்காது அவள் கத்திய சத்தத்தில் பார்த்திருந்த ஸ்ரீ ஓடி வந்து அவள் முகத்தை நன்கு கழுவி விட்டு தோழியை தன்னோடு அணைத்துக் கொண்டாள்.

“ஆ… அம்மா… முடியலே எரியிது ஆ… ஸ்ரீ எரியிதுடி என்னாலே தாங்க முடியல வலிக்குதுடி…” என பிதற்றியவளை தோளில் தட்டி சமாதானப் படுத்திவள் அவளை மெதுவாக குளிக்க‌ வைத்து தலை துவட்டி கட்டிலில் சாய வைத்திருந்தாள்.

“கண்ட கண்ட கருமத்தை எல்லாம் வாங்கி இனி நானும் வெள்ளையாக போறேன் என்னை யாரும் இனி கருவாச்சி, கருப்பட்டி, காக்கானு பட்டப்பேர் வெச்சி கூப்பிட மாட்டாங்க என்னை ஒதுக்கி வைக்காம எல்லாரும் என்கூட சகஜமா பழகுவாங்கனு சொல்லி நான் சொல்ல சொல்ல கேட்காம டப்பா டப்பாவா வாங்கி பாரின் க்ரீம்னு சொல்லி பூசினியே இப்போ நிலமையை பாரு இதுக்கு முன்னாடி கெடந்த முகமே எவ்ளோ பரவாயில்லைஒரு பரு வராத முகம் இன்னைக்கு எப்படி மாறி இருக்குன்னு அந்த கண்ணாடியை பாரு‌…” என திட்டி விட்டு அவர் கிட்ஷனுக்குள் செல்ல ஸ்ரீ கோபமாக இவள் புறம் திரும்பினாள்.

“நீ வெள்ளையாக எந்த க்ரீமும் யூஸ் பண்ணாத எல்லாம் வெறும் பீளிச்சிங் வேற நோயை கொண்டு வந்து போடும்னு நான் சொன்ன எதையும் நீ காதுல வாங்கல உன் இஷ்டப்படி தான் நடந்து இருக்க அப்படிதானே…” என கேட்க தலையை குனிந்து கொண்டாள் கலைச்செல்வி “ஏன்டி அறிவுக் கெட்டவளே படிச்சவ தானே நீ இது நல்லதா கெட்டதான்னு உனக்கு தெரியல அந்தளவுக்கா மூளை இல்லாம போச்சு….”

“இல்ல அது யாதவ் கொடுத்தது அதான்…” என இழுத்தவளை கண்டு “அப்படியே கன்னத்திலே ஒன்னு வெச்சிடுவேன் வாயை மூடிரு யாரு கொடுத்தாலும் அதை பத்தி எதையும் தெரியாம எல்லாத்தையும் யூஸ் பண்ணுவியா?..” என கத்த அமைதியாக இருந்து விட்டாள் கலைச்செல்வி.

“ஓகே நாளைக்கு காலையிலே ரெடியா இரு எனக்கு ஒரு dermatologistயை தெரியும் அவங்கிட்ட போய் இதெல்லாம் காட்டி என்ன ஏதுன்னு கேட்டு வரலாம் சரியா நீ ரெஸ்ட் எடு நான் கிளம்புறேன்…” என்றவளை தடுத்தாள் கலைச்செல்வி “ஸ்ரீ யாதவை பார்த்தியா?..”

“ம்ம் அவங்களுக்கு எக்ஸாம் நடக்குது‌ இன்னைக்கு தான் கடைசி எக்ஸாம்….”

“எக்ஸாமா?..” என கேட்டவளை புருவம் சுருக்கி பார்த்தவள் “ஏன் உனக்கு தெரியாதா? ஆமா நீ சீனியர் கூட பேசுறியா இல்லையா?..”

“இல்லை ஸ்ரீ இரண்டு வாரத்துக்கு மேல ஆகுது ஒரு வேளை எக்ஸாம் டைம்ல பேச முடியாம இருக்காரு போல சரிடி நீ பத்திரமா வீட்டுக்கு போ…” என்றவள் அவளை அனுப்பி விட்டு தன் ஃபோனில் இருந்து அவனுக்கு அனுப்பிய குறுஞ்செய்திகளை பார்த்தாள் அனைத்தையும் பார்த்து இருக்கிறான் ஆனால் எந்த பதிலும் அவனிடம் இருந்து வரவில்லை கடைசியாக ஒரு முறை அழைத்து பார்க்கலாம் என்று அழைக்க கடைசி நொடி அழைப்பை ஏற்றவனின் ஒட்டாத பேச்சில் முகம் வாடி போனவள் நாளை அவனை சந்திப்பதற்காக வலியையும் பொறுத்துக் கொண்டு காலேஜ் கிளம்பினாள்.

6 thoughts on “10.அழகிற்கு ஏதடி வர்ணங்கள்”

  1. CRVS 2797

    அடப்பாவி…! நல்லவன் மாதிரி நம்ப வைச்சு இவனும் கழுத்தறுத்துட்டானோ…? இவன் யாரு பிள்ளை ..?முதலமைச்சர் புள்ளையாச்சே…. அதான் அந்தஸ்துக்கு ஒத்து வராதுன்னு கழிச்சு கட்டிட்டானோ… என்னவோ….?
    😥😥😥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *