Skip to content
Home » 10. ஒரு மழைப்பொழுதினில்

10. ஒரு மழைப்பொழுதினில்

அவளிடம் தலையாட்டிவிட்டு வந்துவிட்டேன். ஆனால் அவளைப் பார்க்காமல் இருப்பது எப்படி என்று எனக்கு தெரியவில்லை. உலகிலேயே மிகவும் கொடூரமான வன்முறை எதுவென்று தெரியுமா? இதுவரை படித்ததும் கேட்டதும் இல்லை. முதலாம் இரண்டாம் உலகப் போர்களும் இல்லை. ஹிட்லர் கொத்து கொத்தாய் கொன்று குவித்த மனிதர்களும் அல்ல.

அவளின் கருவிழிகள் என் மீது நிகழ்த்தும் வன்முறையே உலகின் கொடூரமான வன்முறை பட்டியலில் முதலிடம் வகிக்கும்.

அடுத்த சந்திப்பு எப்போது என்று ஏங்கிக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் முடியவும் இல்லை. தொடங்கவும் இல்லை. நேரமே இல்லாத பிரபஞ்ச கோடியில் அவளுக்காக காத்திருப்பதாக தோன்றியது‌.

அவன் வீட்டுக் கதவுகள் திறந்தே இருந்தது, எப்போதாவது திறக்கும் அவள் வீட்டின் கதவுகளுக்காக. இனி இந்த அவஸ்தைகளை தாங்கவே முடியாது என்று முடிவெடுத்தான். மனக்கதவுகளை உடைத்து உள்நுழைந்துவிட்டதாக நினைத்திருந்தான். ஆனால் உள்ளே ஒரு கதவு வைத்திருக்கிறாள் அவள்.

அன்று அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் காத்திருந்தான். அவளை எப்படியாவது சந்தித்துவிடுவது என்றும் முடிவு செய்திருந்தான்‌.

அன்று நிலா வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பியவள், பல சிந்தனையுடன் அந்த வழியைக் கடந்து சென்றாள். அங்கு அவளுக்காக காத்திருந்த என்னை சட்டை செய்யாமலே அவள் செல்ல, எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. வெடுக்கென்று அவளின் கை பிடித்து இழுத்துச் சென்றேன்.

அதிர்ச்சியில் அவள் கால்கள் தடுமாற, அவசரமாக அவளை எங்கள் ஆஸ்தான இடத்திற்கு இழுத்துச் சென்றேன். அவளுக்கு நான்தான் என்று நிச்சயமாக தெரிந்திருக்கும். ஆனால் என்னிடம் இப்படி ஒரு அதிரடியான செயலை அவள் எதிர்பார்த்திருக்க மாட்டாள்.

அதனால் தவிப்பு அடங்காமலே என்னை கோபமாக பார்த்தாள். நான் எதுவும் பேசாமல் அவளையே பார்த்திருந்தேன். அவள் எதுவும் பேசாமல் திரும்பி நடக்க தொடங்கினாள். எனக்கு கோபம் வந்துவிட்டது. அவளின் முன்னே சென்று வழியை மரித்து நின்றேன்.

“என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் கோபம் குறையாமல்.

நான் எதையெல்லாம் வேண்டுகிறேன் என்று சொன்னால் கொடுத்துவிடுவாளா என்ன?

“உன்னோட பேசணும்” என்றேன் பொறுமையை இழுத்துப் பிடித்து.

“எனக்கு இப்போ பேச விருப்பமில்லை” என்று மீண்டும் நகர்ந்தாள் அவள்.

அவளை வலுக்கட்டாயமாக தடுத்து நிறுத்தினேன். அவளின் கைகள் இரண்டும் என்னிடம் சிறைபட்டிருக்க, அவள் கொஞ்சம் தடுமாறினாள். ஒற்றைக் கையில் அவளின் கைகளை சிறையெடுத்து, அவளின் முன்னே சென்று நின்றேன். நெருக்கமாக. மிகவும் நெருக்கமாக. நெருக்கம் தாளாமல் அவள் விலக முயற்சிக்க, எனக்கு இன்னும் அனுகூலமாய் முடிந்தது. தடுமாறி வழுந்தவளை தாங்கி நிற்கும் தருணம் நானுமே தடுமாறிவிட்டேன்‌.

ஒரே ஒரு நொடிதான் அவள் விழிகளை சந்தித்தேன். வாழ்வில் வசமிழந்த பொழுதனைத்தும் என் வசமான உணர்வு. பின் கணைகள் கோடி செலுத்தி, மீண்டும் வரைமுறையற்ற வன்முறைகள் பல நிகழ்த்திவிட்டாள்.

நான் வசமிழக்க, என் வசமிருந்தவள், சுதாரித்துவிட்டாள். இன்னும் சில நொடிகள் கிடைத்திருந்தால் போதும்… கொடையுள்ளம் கொண்ட கர்ணனாக கனவுகளில் அள்ளி வழங்கிய முத்தங்களில், கொஞ்சம் கிள்ளியேனும் கொடுத்திருப்பேன்.

ஆனால் அவளோ ஆசையை துறந்த புத்தனை போல் இருக்க வேண்டும் என்கிறாள். அவள் ஆசைப்படியே அனைத்தையும் துறந்து விடலாம். புத்தனுக்கு போதிமரம். எனக்கு அவள். அவ்வளவு தான் வித்தியாசம்.

“இன்னொரு தடவை என்கிட்ட இது மாதிரி நடந்துக்காதீங்க. யூ ஆர் க்ராஸிங் யுவர் லிமிட்” என்றாள் அவள் கோபமாக.

“எதுவுமே நான் பிளான் பண்ணி பண்ணல. உன் கூட பேசணும்.”

“உங்க வேலைக்கு ஒரு மரியாதை இருக்கு. அதை மனசுல வச்சுக்கிட்டு நடந்துக்கோங்க. இந்த ஆம்பிளைங்களே இப்படித்தான் போல” என்று அவள் சிறு எரிச்சலுடன் கூற, ‘அப்படி என்ன தரக்குறைவான காரியம் செய்துவிட்டோம் என்று எனக்கும் ஆதங்கம்.

“என்னைப்பத்தி பேசணும்னா என்னை மட்டும் பேசு. இப்பிடி பொத்தாம் பொதுவா பேச வேண்டாம்” என்று கூறி, இரண்டு அடிகள் நகர்ந்து நின்றேன்.

மீண்டும் அவளின் அருகில் எதிர்பாராத விதமாக வந்து, என் கைகளை அவள் கழுத்தின் அருகில் கொண்டு சென்றேன்.

“இப்படியே உன் குரல்வளையை நெரிச்சு கொல்லணும் போல இருக்கு. நான் நானாவே இல்லை. உன்னை காதலிக்க ஆரம்பிச்சதிலிருந்து, என்னால எதையும் செய்ய முடியல. என்னோட நினைவுகளிலும் கனவுகளிலும், நீ இப்படி பத்தடி தள்ளியெல்லாம் இல்லை. அதனால உன்னை நேரில் பார்க்கும்போது இப்படி தொடாமல் தள்ளியிருப்பது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று நான் கூற, அவள் ஓரடி பின்னே நகர்ந்தாள். மருண்டு விழித்தாள்.

அவளை எதுவும் செய்ய முடியாமல் அங்கிருந்த கல்லில் எட்டி உதைத்தேன். தேயிலை தோட்டத்தின் சரிவுகளில் அது உருண்டு சென்றது.

என்னின் கோபங்கள் அவளுக்கு புதிது. அவர்களின் சில சந்திப்புகளில் எல்லாம் வெறும் தவிப்பை மட்டுமே பார்த்திருக்கிறாள் அவள்.

நான் இப்படி அனைத்திற்கும் பொறுத்துப் போகும் ஆள் இல்லை. அவள் சொல்வதற்கெல்லாம் மண்டையை ஆட்டுகிறேன். அவள் முன். அவள் என் கண்களிலிருந்து மறைந்ததும், அவளெடுத்த பாடமெல்லாம் மறந்துவிடுகிறது. என்னுள் அவளை தொலைக்கப் போகும் உறுத்தல்.

“நீ உண்மையாவே என்னைக் காதலிக்கிறியா? எனக்கு உன்னை.. உன்னோட தினமும் கனவுகளில்” என்று முடிக்காமல் திணறினேன்.

ஏனெனில் தள்ளியிருப்பது சிரமமாய் இருக்கிறது என்று கூறியதிலிருந்து, அவள் உடல் மொழியில் பெருத்த மாற்றம். கொஞ்சம் அவளையே அவளுக்குள் புதைப்பதுபோல் குறுக்கிக்கொண்டாள். துப்பட்டாவை போர்த்திக் கொண்டாள். குறிஞ்சி நில ஊதைக் காற்றின் ஊடுருவல் ஒரு காரணமாய் இருந்தாலும், என்னுடைய இந்த அவதாரம் மற்றொரு காரணம்.

“மூச்சுக்கு முன்னூறு முத்தம் பிரமாறிக்கிறோம். எப்போதும் என்னோட ஒட்டிக்கிட்டே இருக்க. இப்படி இழுத்துப் போத்திக்கிட்டெல்லாம் நீ இல்லை” என்று கூறி, அவளின் துப்பட்டாவை மெதுவாகவே பறித்துக் கொண்டேன்‌.

அவளிடம் கொஞ்சம் கடுமையாக நடந்துவிட்டேனோ என்ற தவிப்பு என்னுள். சொல்ல வந்த விஷயத்தை நிச்சயமாக சரியாக சொல்லவில்லை. நேரில் பார்க்கும்போது என்னால் தள்ளியிருக்க முடியாது என்று நான் கூறிய ஒற்றை வரியில் அவளின் புரிதல் என்னவென்று என்னால் நன்றாக உணர்ந்து கொள்ள முடிந்தது. துப்பட்டா என் கைகளுக்கு வந்தபின் அவளின் தவிப்பு இன்னும் அதிகமானது. என் மேல் இவ்வளவுதான் நம்பிக்கையா என்று கேட்க தோன்றியது.

ஆனால் இது நம்பிக்கை சம்மந்தப்பட்ட விஷயமல்ல என்று அவள் கூறுகிறாள். அவளிடம் பொறுமையாக அமர்ந்து பேச வேண்டும் போல் தோன்றியது.  அங்கிருந்த திட்டில் அவள் அமர்ந்திருந்தாள். நிலத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதுபோல் தோன்றியது. அருகில் சென்று அமர்ந்தேன்.

அவள் நிலத்தை வெறித்தபடி அமர்ந்திருப்பதுபோல் இருந்தாலும் உண்மை அதுவல்ல. அவள் விழிகளில் நீர் கோர்த்து நின்றது. அதை மறைப்பதற்கே தலை தாழ்த்தி அமர்ந்திருக்கிறாள். 

சில நிமிடங்களுக்கு தள்ளி நின்று அவளைப் பார்க்கும்போது தோன்றிய எண்ணங்கள், அவள் அருகில் வந்ததும் பொய்த்துப் போனது. நம் பார்வை அனைத்து நேரங்களிலும் உண்மையென்று கூறிவிட முடியாதே. என்னோடு ஒன்றமுடியாமல் அவளுக்குள் வேறு புழுக்கங்கள் இருக்கிறதோ என்று தோன்றியது.

அவளின் வலகரத்தை எடுத்து எனது இரு கரங்களுக்குள் புதைத்துக் கொண்டேன். அதில் ஆறுதல் கண்டாளோ என்னவோ? எனக்கு தெரியாது. ஆனால் அதுவரை விழிகளை குளமாய் நிரப்பியிருந்த கண்ணீர் திவளைகள் நிலம் தழுவியது. நிலம் தழுவும் முன் சில துளிகள் அவன் கைகளையும் தழுவிச் சென்றது.

மனம் அழன்று அழுகிறாள். என்னால் எதுவும் செய்யமுடியவில்லை. கட்டியணைத்து உனக்கு நானிருக்கிறேன் என்று கூறிட ஆசைதான். ஆனால் அவள் எண்ணங்கிளில் இருந்து கீழிறங்கிவிடுவேனோ என்று பயமாக இருந்தது. என் அணைப்பில் ஆறுதல் தேட அவள் மனம் விழைய வேண்டுமே.

அவளைக் காதலிக்கிறேன். அவளிடம் கூறியும்விட்டேன்‌. இனி அவளை திருமணம் செய்யப் போகும் நாள் என்றோ என்பது மட்டும்தான் என் கவலை. அவளுக்கும் அது மட்டும்தான் என்று நினைத்திருந்தேன். வேறு என்ன கவலை இருக்க முடியும். அவள் சொன்னால்தானே தெரியும்.

என்னைக் காதலிப்பதாக ஒப்புக் கொண்டவள், அவளின் கவலைகளையும் துயரங்களையும் ஏன் என்னிடமிருந்து மறைக்க வேண்டும்.

முதல்முறையாக அவளுக்கு ஆறுதல் அளித்தேன். விஷயம் என்னவென்றே தெரியாமல். என் கைகளுக்குள் புதைந்திருந்த கையை அவள் எடுக்கவில்லை. நான் அழுத்தம் கொடுக்கவும், உருவ முயன்றாள். ஆனால் நான் விடுவிப்பதாய் இல்லை. அவள் மனம் அமைதியுறும்வரை என்னிடமே இருக்கட்டும் என்று இன்னும் பாதுகாப்பாய் புதைத்துக் கொண்டேன்‌.

பெண்களுக்கு கட்டாயமான அணைப்புகள் தேவையோ இல்லையோ.. ஆனால் கட்டாயமான ஆறுதல் தேவை. தன்னைத் தொடுவதை அனுமதிக்காத பெண்ணுக்கு ஆண் மேல் நம்பிக்கை இல்லாமலில்லை. அவள் சமூகத்தை நம்பவில்லை. காதலிப்பவனின் தீண்டல் அவளுக்கு நிச்சயம் பிடிக்கும். அவள் மனம் தேடும். ஆனால் வெளியில் அதை காட்டிக் கொள்ளக்கூடாது. அவ்வளவுதான்.

மகிழ்ச்சியாக இருக்கும்போது காதலனின் தீண்டலை தடுப்பாள். விலகி நிற்பாள். காதலன் படும் அவஸ்த்தையை கண்டு மனதிற்குள் ரசிப்பாள். தொடுவதும் தடுப்பதும் காதலில் ஒரு விளையாட்டு. ஆனால் கவலையில் இருக்கும்போது கட்டாயமான ஆறுதல் தேடுவாள் அவனிடம்.

சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது. இருவரின் மனமும் லேசானது. சில பட்டாம்பூச்சிகள் பறந்தது. அவர்களை சுற்றியும் சில வண்ணத்துப்பூச்சிகள் பறக்க, அவள் இதழ்கள் லேசாக விரிந்தது.

அவனுக்கு அவளைப் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் ஒரு விஷயம் முதல் சந்திப்பிலேயே தெரியும். அதுதான் பட்டாம்பூச்சிகள் அவளுக்கு பிடிக்குமென்பது. கொஞ்சம் பட்டாம்பூச்சிகளின் மேல் பொறாமைதான் எனக்கு. அதை பார்த்தவுடன் விரியும் விழிகள் எனைக் காணும் பொழுதும் விரியலாம்.

“என்ன பிரச்சனை உனக்கு?” என்றேன்.

“பயமா இருக்கு?”

“எதுக்கு?”

எனக்கொன்றும் புரியவில்லை.

“வீட்டில் சொல்லவே பயமா இருக்கு. நான் ரொம்பவே முயற்சி பண்ணிட்டேன். ஆனாலும் சொல்ல முடியல” என்றாள்.

“சரி.. சொல்லிடலாம்.. அப்புறம்?”

“சொன்னாலும் ஏத்துக்குவாங்களான்னு தெரியாது..”

“எல்லாத்தையும் நீயே ஏன் குழப்பிக்கிற. காதலில் இதெல்லாம் சகஜம்தானே. என்னை காதலிக்கிறேன்னு ஒத்துக்கும்போது இந்த எதிர்ப்பு எல்லாம் வரும்னு நீ எதிர்பார்த்ததானே..”

அவள் பதிலே சொல்லாமல் அமர்ந்திருந்தாள்.


சரி இந்த பிரச்சனையை நான் பாத்துக்குறேன். நம்ம கல்யாணம் என்னோட பொறுப்பு. யாராலும் தடுக்க முடியாது.”


என்னால அம்மா அப்பா இல்லாம இருக்க முடியாது. எனக்கு அவங்களும் வேணும்.”


உங்க வீட்ல சம்மதம் வாங்கி உன்னை கல்யாணம் பண்ண வேண்டியது என்னோட பொறுப்பு. நீ நிம்மதியா இரு.”

இன்னும் அவளுடைய கை என்னுடைய கரங்களுக்குள்தான் அடங்கி இருந்தது. மேலிருந்த கரத்தை எடுத்தவன், மற்றொரு கரங்களின் ஐவிரல்களையும் அவள் விரல்களுடன் கோர்த்துக் கொண்டேன். ஆறுதல் படலம் முடிந்துவிட்டது.  முயங்கிய கைகளில் முத்தம் வைத்து, நெஞ்சில் குமைந்து கொண்டிருந்த முனகல்களை தீர்த்துக் கொண்டேன்.

என் மீசையின் மயிற்கால்கள் அவள் நியூரான்களை நீட்டியிழுக்க, பட்டென்று கைகளை உருவினாள். ஆனால் என் பிடி அழுத்தமாக, கொஞ்சம் தருமாறிவிட்டாள். இறைஞ்சுதலாய் என்னைப் பார்க்க, நான் இன்னும் இழைய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன். அவளை உரசிக் கொண்டு அமர்ந்தேன்.

ஒரு விஷயம் புரிந்தது. தள்ளியிருந்து கெஞ்சும்வரைதான் அவளால் அதிகாரம் செய்ய முடிந்தது. என்னை ஆட்டுவிக்க முடிந்தது. என் அணுக்கம் அதிகரித்ததில் இருந்து அவளை நான் ஆட்டுவித்தேன்.

அவள் இதயம் அதிகமாய் துடிப்பதை நானும் உணர்ந்தேன்‌. என்னை அருகில் விடாமல் தவிக்க வைத்தாயே. இந்த நொடியிலிருந்து தவிப்பு உன்னிடம் இடம்பெயரட்டும்.

என் தீண்டலில் செத்துப்போ. மீண்டும் பிழைக்க வைக்கிறேன் என் முத்தங்களால்.

“என்னோட கண்ணை பாரேன்.. கையை விடுறேன்” என்று காதல் நாடகத்தை நான் தொடர, அவள் தவிப்பு அதிகமானது.

“சரி.. இன்னைக்கு இது போதும்..” என்று அவள் கைகளை விடுவிக்க, அவள் வேகமாக நகர்ந்து அமர்ந்து கொண்டாள். சத்தமாக சிரித்துக் கொண்டேன்.

“கிளம்பளாமா?” என்றாள் அவள்.

“இன்னும் பேசணும்” என்றதும், அவள் பதிலே சொல்லவில்லை.

“என்ன பேசணும்னு கேட்க மாட்டியா?”

“என்ன பேசணும்” என்றாள் அடிக்குரலில். இன்னும் என்னவெல்லாம் செய்யப்போகிறோனோ என்ற தவிப்பு அப்பட்டமாக வெளிப்பட்டது அவள் குரலில்.

“உனக்கு என்ன பிரச்சினைனு கேட்டு அதுக்கு ஆறுதல் சொல்லி, வழியும் சொல்லிருக்கேன். எனக்கு என்ன பிரச்சனைனு கேட்கவே மாட்டியா?”

“உங்களுக்கு என்ன பிரச்சனை?” என்றாள் குழப்பமாக.

“கொஞ்ச நாளா செத்துட்டு இருக்கேன்டி. என்னால இனிமே உன்னை பார்க்காம பேசாம இருக்க முடியாது” என்று நான் கூற, அவள் பதிலே கூறாமல் அமர்ந்திருந்தாள்.

அவனும் பதில் கூறாமல் அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.

“இப்படி என்னோட பிரச்சினைக்கு பதில் சொல்லாம இருந்தா, அப்புறம் அதை எனக்கு பிடிச்ச மாதிரி நானே சரி செய்ய வேண்டியிருக்கும்” என்று அவன் மிரட்டும் தொனியில் கூற, “ஐயோ.. இனிமே தனியா பாக்கலாம். பேசலாம்..” என்றாள் அவசரமாக.


“சரி.. பேசு..” என்று நான் கூற, “இன்னைக்கு இது போதும் நாளைக்கு பேசலாம்..” என்றாள்.

“அப்போ நாளைக்கும் இதே இடத்தில் சந்திக்கலாம்னு சொல்ற..” என்று அடுத்த சந்திப்புக்கான ஏற்பாடுகளை நான் செய்ய, அவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள்.

“சரி வா கிளம்பலாம்” என்று நான் எழ, அவளும் எழுந்து கொண்டாள் அவசரமாக.

இருவரும் தேயிலையின் தோட்டத்தின் மழைப்பாதைகளில் நடந்து வந்தனர். தட்டாரபூச்சிகள் வொயிங் என்ற சத்தத்துடன் அந்த இடத்தை சூழ்ந்தது. தூவானத்தின் தூற்றலில் குறிஞ்சி காட்டின் வனப்பு வகைதொகையில்லாமல் வடிவாகியிருந்தது.

4 thoughts on “10. ஒரு மழைப்பொழுதினில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *