நெடுமாறனுக்கு இறுதி காரியம் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஆதாரங்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என்பது அந்த மக்களுக்கு வருத்தமாக இருந்தது.
சிதம்பரம் என்பவர் தான் அந்த தேயிலை தோட்டத்தின் முதலாளி. அன்று படையலுக்காக அவரும் வந்திருந்தார்.
ஆதனின் அருகில் அமர்ந்தவர், அவனைப் பார்த்து புன்னகைத்தார்.
“ஆதன் சார்.. நெடுமாறன் வழக்கை நீங்கதான் கையாள்வதாக சொன்னாங்க. உங்களுக்கு என்ன உதவி வேணும்னாலும் எங்கிட்ட கேளுங்க.. நான் இந்த கிராமத்துக்கு கடமைப் பட்டிருக்கேன்..” என்றார் அவர், அவரை ஆச்சரியமாக பார்த்தான் ஆதன்.
தோட்ட முதலாளிகள் அனைவரும் ஏழைகளின் உழைப்பை சுரண்டுவதில் அதிகம் முனைப்புடன் இருப்பார்கள். ஆனால் அவர் மிகவும் மர்மமாக இருந்தார். உண்மையில் அவர் நல்லவராக கூட இருக்கலாம். ஆனால் அவனுடைய காவல் புத்தி அவரை சந்தேகப்படும்படி கூறியது.
அவனுடைய மனவோட்டம் அவருக்கு புரியாமல் இல்லை. அது ஒரு பொதுபுத்தி. பணக்காரர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று சமூகத்தில் ஒரு பொதுபுத்தி உண்டு.
“என்ன தம்பி.. இந்தாளுக்கு ஏன் இவ்வளவு அக்கரைனு தோணுதா?” என்றார் அவர் வெளிப்படையாக.
“இல்ல சார்..” என்றான் அவன் மழுப்பலாக.
“நீங்க சந்தேகப்படுவது தப்பில்லை. உங்க வேலையே அதானே. எனக்கு அதனால வருத்தம் இல்லை..” என்றார் அவர் சமாதானாக.
“ஆனா மக்களின் உழைப்பை சுரண்டும் முதலாளிகளுக்கு மத்தியில் உங்களை பாராட்டணும் சார்..”
“இதிலும் சுயநலம் இருக்கு தம்பி.. இவுங்க நல்லாயிருந்தா, என்னோட தோட்டமும் செழிப்பா நல்லா இருக்குமே…”
“எல்லாரும் படிச்சுட்டு வேலைக்கு போயிட்டா, உங்களுக்கு வேலை யார் செய்வா?”
“என்ன தம்பி.. போட்டு வாங்குறீங்களா?” என்றார் அவர் சிரித்துக் கொண்டே.
“இல்ல சார்… இதுதான் மனித இயல்பு..”
“வேற இடத்திலிருந்து ஆட்களை இறக்குவேன்.. ஆட்கள் கூட வேண்டாம் தம்பி. இங்க இருக்க மக்களுக்கு என் மேல் நிறைய மரியாதை இருக்கு. நான் படிக்க வச்ச பிள்ளைகளே, தேயிலை பறிக்க ஏதாவது இயந்திரம் கண்டுபிடிச்சு தரட்டும். ஏனா கஷ்டப்பட்டு வேலைப் பாக்குறவனுக்குதானே தெரியும் அதோட கஷ்டம் என்னனு.. உலகம் மாற மாற நாமளும் மாறிக்கணும். அப்போதான் நமக்கு மரியாதையும் இருக்கும். பணமும் பெருகும். இதுவும் ஒரு யுக்தி தம்பி. மத்த தோட்டக்காரங்களுக்கும் எனக்கும் இது ஒண்ணுதான் வித்யாசம். ஆனா லாபம் எல்லாருக்கும் ஒரே மாதிரிதான் இருக்கு. ஒருத்தரை கஷ்டப்படுத்தி எதுக்கு வேலை வாங்கணும். செய்றவனும் சந்தோஷமா இருக்கட்டும். நாமளும் சந்தோஷமா இருப்போம்..”
ஆதன் பதிலேதும் கூறவில்லை. புன்னகைத்துக் கொண்டான்.
சுமார் முந்நூறு தலைகளைக் கொண்ட கிராமம் அது. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் அந்த தேயிலை தோட்டத்தில் வேலைப் பார்த்தனர்.
அன்று இரவு மக்கள் அனைவரும் ஒரு பெரிய திடலில் கூடியிருந்தனர். இவர்கள் நெடுங்காலமாக அங்கு வாழ்ந்தவர்கள். அதாவது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே. நம் சங்ககாலத்தின் மிஞ்சியிருக்கும் உயிர்கள். தொல்குடி மக்கள் என்றும் கூறலாம். அதனால் இவர்களிடம் நடுகற்களை வழிபடும் முறை இருந்தது. இன்னும் அந்துவன் என்பவனை வணங்கிவருகிறார்கள்.
அந்துவன் என்பவனுக்கு பிடித்தமான உணவுவகைகளைப் படைத்தனர். பனையோலையில் மடித்திருந்த கொலுக்கட்டை, பணியாரம், ஆப்பம் என்று அவனுக்கு பிடித்தமான உணவுகளை காலம்காலமாக சமைத்து படையலிடுவார்கள். அந்துவனின் ஆயுதமாக ஒரு கோடாரியும் வைத்துப் படைத்தனர். அது மிகவும் கனமான ஆயுதமாக இருந்தது. கூர்மையாகவும் இருந்தது. அதைப் பார்த்ததும் ஆதனுக்கு ஒரு சந்தேகம். அந்த ஆயுதத்தை எடுத்துப் பார்த்தான்.
நெடுமாறன் இறந்த இடத்தில் எந்த ஆயுதமும் கிடைக்கவில்லை. அவனின் கழுத்தை கூர்மையான ஆயுதம் கொண்டு அறுத்து கொன்றுவிட்டார்கள் என்று மட்டும்தான் அறிக்கை வந்திருந்தது.
ஏதேனும் கூர்மையான நவீன ஆயுதம் பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான். ஆனால் இதுபோல் உள்ள ஆயுதம் கொண்டும் அவ்வாறு கழுத்தை அறுக்க முடியும் என்று அவனுக்கு தோன்றியது. அதைப் புகைப்படம் எடுத்துக் கொண்டான்.
அதன்பிறகு அந்துவனின் கதையை ஒரு கிழவி பாட்டாக பாடினாள். அதற்கு நங்கையர் சிலர் நடனமும் ஆடினார்கள். ஊர் பெரியவருக்கு மாலை போட்டு மரியாதையும் செலுத்தினார்கள்.
யாரோ ஒருவருக்கு சாமி வந்து அவர் சாமியாட, அனைவரும் அவரிடம் குறி கேட்கத் தொடங்கினர். ஆதன் அனைத்தையும் வேடிக்கைப் பார்த்தான்.
“அந்துவன் வந்துருக்கேன்டா… இந்த ஊருக்கே அழிவுகாலம் நெருங்குது. பொழைக்கப் பாருங்க. உங்களை நம்பி வந்த பெண் தெய்வத்தை கைவிட்டுட்டீங்க. அவ தீராத கோவத்தில் இருக்கா.. அந்த கன்னி தெய்வத்தையும் வணங்குங்க. அவ மனசு வைக்கணும், நீங்க பொழச்சு வாழ” என்று ஒருவர் கத்த, அனைவரும் சத்தமிட்டனர்.
அங்கிருந்த ஒருவனை அழைத்து, “அவர் என்ன சொல்றாரு.. ஏன் இப்படி சொல்றாரு” என்று வினவினான் ஆதன்.
“சார்.. போன வருஷம் ஒரு பெண்ணை எங்க ஊருல எங்க ஊரை சேர்ந்த ரெண்டு பேர் பலாத்காரம் செஞ்சு கொன்னுட்டாங்க சார்.. அதுலேந்து எங்க ஊருக்கு சாபம் வந்துட்டதா நம்புறோம்.. அந்த நிகழ்வுக்கு பிறகு நிறைய கெட்ட விஷயங்கள் நடக்குது.. நிறைய பேருக்கு உடம்பு முடியாம போகுது. ஐயாவும் அவர் மகனும் எங்க மருத்துவ செலவு எல்லாத்தையும் பாத்துக்குறாங்க சார். அரசோட திட்டங்களை சரியா பயன்படுத்தும் அறிவும் திறமையும் எங்களுக்கு இல்லை. அவுங்க எல்லா விதத்திலும் எங்களுக்கு உதவியா இருக்காங்க” என்று அவன் கூற, ஆதனின் மனதில் ஏனோ நெருடலாக இருந்தது.
தேயிலைத் தோட்டத்தின் முதலாளி ஏன் இதை செய்ய வேண்டும். பொதுவாக எளிய மக்களின் உழைப்பை சுரணடுவதில்தான் இவர்கள் அதிகம் மெனக்கடுவார்கள். அவர்கள் படிப்பதையோ வேறு வேலைக்கு செல்வதையோ விரும்பவே மாட்டார்கள். அவர் சொல்லும் காரணம் ஏற்புடையாதாய் இருந்தாலும், இங்கு எப்படி தலைகீழாக இருக்கிறது என்று நினைத்தவனின் மனதில் அடுத்து அங்கு நடந்த எதுவும் பெரிதாக மனதில் பதியவில்லை. மூளையின் நியூரான்கள் பல கேள்விகளைத் தொடுத்துக் கொண்டிருக்க, அவைகளுக்கு பதிலையும் தேடிக் கொண்டிருந்தான்.
மறுநாள் காலை அலுவலகத்தில், முருகனிடம் சிறுகுடியில் கொல்லப்பட்ட பெண்ணின் தகவல்கள் இருக்கும் கோப்பை எடுத்துவரும்படி கூற, அவரும் முணுமுணுத்துக் கொண்டே எடுத்து வந்தார்.
“சார்… இதை எதுக்கு இப்போ பாக்குறீங்க. இந்த ரேப் கேஸை உடனே க்லோஸ் பண்ணியாச்சு. நிலுவையில் இருக்கும் பல வன்கொடுமை வழக்கிற்கு நடுவில், நம்ம டிப்பார்ட்மெண்ட்டுக்கு நல்ல பேர் கிடைச்சதே இந்த கேஸ்லதான்…” என்று கூற, முருகனை ஒரு பார்வை பார்த்தவன், “அந்த சம்பவம் நடந்ததில் இருந்துதான், அந்த கிராமத்தில் நிறைய கெட்ட விஷயங்கள் நடக்குறதா நம்புறாங்க. அப்போ அது என்னனு தெரிஞ்சுக்கிறது இந்க வழக்கிற்கு உதவும்னு நம்புறேன்” என்றான் ஆதன்.
அந்த பெண்ணின் வழக்கில், பெரும் திருப்பங்கள் எல்லாம் இல்லை. அவள் ஒரு மருத்துவமனையில் பயோ கெமிஸ்ட்டாக வேலைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.வேலைப் பார்த்துக்கொண்டு பி.ஹெச்.டியும் செய்தாள். அது தொடர்பாக அந்த கிராமத்து மக்களை சந்திக்க சென்ற போதுதான், அங்கிருந்த இருண்டு நபர்கள் அவளை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றுவிட்டார்கள் என்று வழக்கு எழுதப்பட்டிருந்தது. அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் தூக்கு தண்டனை கொடுத்ததாகவும், சிறையில் இருந்து அவர்கள் தப்பிக்க முற்பட்டதாகவும், என்கவுண்டரில் அவர்களை சுட்டுக்கொன்றதாகும் வழக்கு முடிக்கப்பட்டிருந்தது.
“முருகன்.. இந்த கேஸ்ல நீங்களும் தானே இருந்தீங்க? இந்த கேள்வி என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்…”
“உங்களுக்கு முன்னாடி இருந்த ஏ.எஸ்.பிதான் சார் இந்த கேஸ் பார்த்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டதும் தப்பிச்சு போக முயற்சி பண்ணாங்க. அதனால என்கவுண்டர் இல்ல சுட்டுட்டாங்க” என்று அவர் கூற, அந்த வழக்கின் தரவுகளை ஆராய்ந்தான் ஆதன்.
சில நிமிடங்களில் மீண்டும் பரபரப்பு தொற்றுக் கொண்டது. நெடுமாறன் இறந்து கிடந்த இடத்தில் அடுத்தது யாரோ இறந்து கிடப்பதாக செய்தி வர காவல்துறை அங்கே விரைந்தது.
அவனும் விசித்திரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தான். உடலில் உள்ள சில பாகங்களில் உலக ரத்த நாளங்கள் அறுக்கப்பட்டு இருந்தது.
காரியங்கள் அடுத்தடுத்து துரிதமாக நடக்க, முருகன் முகத்தில் மட்டும் திகில் படர்ந்திருந்தது. முந்தைய நாள் அவரை சந்திக்க வந்தவன் அவன். இப்பொழுது அவன் கொல்லப்பட்டிருக்கிறான்.
தடயவியல் துறையிலிருந்து ஆட்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். இறந்தவனின் உடலை உடற்கூறைவுக்கு அனுப்பிவிட்டனர்.
“முருகன்… இந்த கொலை எப்படி நடந்து இருக்கும்னு நினைக்கிறீங்க…?”
“தெரியலையே சார்” என்றவரின் உதடுகளிருந்து வார்த்தைகள் வர மறுத்தது.
“நெடுமாறனோட கொலைக்கும், இந்த கொலைக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கு இல்லையா?”
“இருக்கலாம் சார்…”
“கண்டிப்பா இருக்கு..”
“எப்படி சார் இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”
“இங்க செத்துப்போன பொண்ணு.. நெடுமாறன்.. இப்போ செத்திருக்கவன்.. இது எல்லாத்துக்கும் ஏதோ ஒரு கனெக்சன் இருக்கு. நெடுமாறனை கழுத்தை அறுத்துக் கொன்னுருக்காங்க. இங்க இருக்க ஒரு நடுக்கல்லில் அதே மாதிரி ஒரு குறியீடு இருக்கு. இப்போ அடுத்தது இன்னொரு கொலை இங்கே ஏன் நடக்கணும். நவகண்டம் என்கிற முறையில் தான் இவன கொன்னு இருக்கணும். இன்னொரு நடுகல்லில் உடலில் ஒன்பது இடத்தில் நரம்புகளை அறுத்துக் கொண்டு உயிரை விடுவது நவகண்டம்னு படிச்சேன். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வரட்டும்” என்று ஆதன் கூற, முருகன் அமர்நத நிலையில் அழத் தொடங்கிவிட்டார்.
ஆதனுக்கு ஒன்றுமே புரியவில்லை.
“என்ன ஆச்சு முருகன்? ஏன் அழறீங்க?” என்னு அவரின் தோள்பட்டையைப் பிடித்து அவரைத் தூக்கி நிறுத்தினான்.
அவருக்கு வார்த்தைகளே வரவில்லை. முழு அதிர்ச்சியில் இருந்தார். இந்த கொலையை அவர் எதிர்பார்க்கவே இல்லை. ஆதன் மேல் இருந்த காழ்ப்பில், ஒரு வன்மத்துடன், அந்த விஷயத்தை மறைத்தார். அதுவுமில்லாமல், அந்த சங்கிலி ஒரு பவுன் இருக்கும். அதை அவர் எடுத்துக் கொள்ள நினைத்தார்.
“என்னை மன்னிச்சிருங்க சார்..” என்று அவர் மீண்டும் மீண்டும் கூறியதையே கூறினார். அவருக்கு வேலை போய்விடுமோ என்ற பயம்.
“என்ன ஆச்சுன்னு சொல்லுங்க முதலில்..”
அவர் நடந்த விஷயத்தைக் கூற ஆதனுக்கு அதிர்ச்சி. அவனால் நடந்த விஷயத்தை ஜீரணிக்க முடியவில்லை.
“ஏன் இப்படி செஞ்சீங்க? எங்கிட்ட சொல்லியிருந்தா இப்போ இப்படி ஒரு உயிர் போயிருக்காதே” என்று கத்தினான். அவரை அடித்தும்விட்டான்.
“ஐயோ… இப்படி எல்லாம் நடக்கும்னு நான் நினைக்கவே இல்லை. ஒரு உயிரை துச்சமா நினைக்கிற அளவு, நான் பொறுப்பில்லாதவன் இல்லை” என்று அவர் கதற, அவரை அங்கே கொன்றுவிடும் அளவு ஆதனுக்கு ஆத்திரம்.
“பின்ன வேற என்னதான் காரணம். அந்த பாழா போன காரணம் என் மேல் உள்ள வன்மம். நான் அப்படி என்ன செஞ்சேன்! படிச்சு பரிட்சை எழுதி, உங்களுக்கு மேலதிகாரியா வந்தது பெரிய தப்பா?” என்று அவரின் சட்டைப் பிடித்து அவன் கேட்க, அவர் குற்றவுணர்வில் தவித்தார்.
அவன் கேட்பது உண்மைதானே. ஒரு நாள் கூட, அவரை அவன் மரியாதை இல்லாமல் நடத்தியது கிடையாது. சில சமயங்களில் அவருடைய பேச்சு அதிகப்படியாய் இருப்பினும், அதை ஒரு பொருட்டாய் மதிக்காமல் கடந்து சென்று விடுவான்.
“என்னை நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்கு. உங்களுக்கு முன்னாடி வேலை பார்த்த யாரும் எனக்கு பெருசா மரியாதை கொடுத்ததில்லை. எவ்ளோ கஷ்டப்பட்டு வேலை செஞ்சாலும், பெயரை மட்டும் அவுங்க எடுத்துக்குவாங்க” என்று அவர் கூற, “பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம்! இல்லையா?” என்றான் வருத்தமாக.
“அந்த செயின் எங்க?” என்று கேட்க, அவரிடம் பதிலில்லை. அவனுக்கு புரிந்தது. அவரைக் கேவலமான பார்வை மட்டுமே அவனால் பார்க்க முடிந்தது.
“வண்டியை எடுங்க” என்று ஜீப்பில் ஏறி அமர்ந்தான். அவர் வேகமாக சென்று ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தார். அவன் எங்கு செல்ல வேண்டும் என்று கட்டளையிடாமலே அவர் வாகனத்தை இயக்கத் தொடங்கினார். அடுத்த சில நிமிடங்களில், ஒரு கடையின் முன் சென்று நின்றனர்.
வண்டியை நிறுத்திவிட்டு இருவரும் உள்ளே சென்று அந்த கடை முதலாளியிடம் விசாரிக்க, முருகன் கொடுத்த நகையை யாரோ பாலிஷ் போட்டு வாங்கி சென்றுவிட்டதாக கூறினார்.
“யாருன்னு தெரியுமா? அதெப்படி பழைய நகையை வாங்கிட்டு போனாங்க?”
“முருகன் சார் வந்துட்டு போன அடுத்த நிமிஷம் வந்தாரு சார். இந்த நகையைப் பாத்துட்டு, ஒரு நாள் முன்னாடி தொலைந்து போனதாகவும், அது ரொம்ப செண்டிமெண்டான நகைன்னும் சொன்னாரு. அதை நான் காசு கொடுத்து வாங்கியிருக்கேன்னு சொல்ல, அதை அவர் வாங்கிக் கொள்வதாக கூறி, அதை வாங்கியும் சென்றுவிட்டார்” என்று முந்தைய தினம் நடந்ததை அவர் கூறினார்.
“சி.சி. டீவி புட்டேஜ் பார்க்கணும்” என்று ஆதன் வினவ, அவரும் அழைத்துச் சென்றார். ஆனால் அவனுடைய முகம் தெளிவாக தெரியவில்லை. அதை ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டு வெளியே வந்தான்.
அவருடைய மேலதிகாரியிடம் இருந்து அழைப்பு வந்தது. அவனை சரமாறியாக திட்டியவர் நேரில் வருமாறு கூற, “கேஸ் விஷயமா விசாரிக்க வந்தேன்” என்று கூறினான்.
“நீ விசாரிச்சு கிழிச்சதெல்லாம் போதும். முதல்ல ஆபீஸ்க்கு வந்து சேரு” என்று அழைப்பைத் துண்டித்தார்.
இருவரும் எஸ்.பியை காண அலுவலகம் கிளம்பினார்கள்.
அலுவலகத்தில் ஆதனை வாயில் வந்த வார்த்தைகள் எல்லாம் கூறி திட்டிவிட்டார் அவர். அவனுக்கு ஒன்று மட்டும் விளங்கியது. இந்த திட்டு வழக்கை தவறாக கையாள்வதால் இல்லை. சரியாக கையாள்வதால் மட்டுமே இந்த வசை என்று புரிந்தது. இனி அவன் இந்த வழக்கை பார்க்க வேண்டாம் என்றும் கூற, அவர் என்றோ விலை போய்விட்டதை பட்டவர்த்தனமாக அவனுக்கு பறைசாற்றியது. உள்ளுக்குள் தோன்றிய ஏளனமான புன்னகையை மறைத்துக் கொண்டு, அவருக்கு சல்யூட் அடித்து விட்டு கிளம்பினான் ஆதன்.
அவன் வருகைக்காக வெளியே காத்திருந்தார் முருகன்.
“சார்… என்ன ஆச்சு?”
“என்ன ஆகணும்? இனி இந்த கேஸை நான் பார்க்க வேண்டாமாம்.”
“என்னை மன்னிச்சிடுங்க சார். உங்களோட இந்த நிலைக்கு நானும் ஒரு காரணம். நேத்தே நான் சொல்லியிருக்கணும். அல்பத்தனமா நடந்துக்கிட்டேன்.”
“நீங்க நேத்தே இதை எங்கிட்ட சொல்லியிருந்தாலும், இந்த கொலை நடந்திருக்கும். நம்ம டிபார்ட்மெண்டில் நிறைய விலை போயிட்டாங்க.”
“நான் வேணா உண்மையை சொல்லட்டுமா?”
“என்ன சொல்லப் போறீங்க?”
“நேத்து இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சுன்னு?”
“அது அவருக்கு தெரியாதுன்னா நினைக்கிறீங்க?”
“அதெப்படி அவருக்கு தெரியும்? தெரிய வாய்ப்பில்லை. அவன் பின் பக்கமா வந்தான். ஒரு மறைவான பகுதியில் அந்த செயினை கொடுத்துட்டு உடனே ஓடிட்டான்.”
“இன்னைக்கு காலையில் அவன் கொல்லப்பட்டிருக்கதா நமக்கு நியூஸ் வந்துடுச்சு. அப்போ கூப்பிட்டு திட்டாத மேலதிகாரி, இப்போ கூப்பிட்டு திட்ட காரணம் என்ன?” என்று ஏளனமாக ஆதன் வினவ, அவர் சிந்தனைக்குள்ளானார்.
“என்ன சார் சொல்றீங்க? நடந்த விஷயம் அவங்களுக்கு தெரிஞ்சிருந்தா என்னை இந்நேரம் டிஸ்மிஸ் பண்ணிருக்க வேண்டாமா?”
“அவங்க நினைச்ச மாதிரியே இந்த கொலைக்கும் பெருசா எந்த தடையும் கிடைக்கல. இருக்க ஒரே ஒரு தடையும் இறந்தவன் உங்களை சந்தித்ததுதான். உங்ககிட்ட ஏதோ ஒரு பொருளை கொடுத்தது மட்டும்தான். அதை நீங்கள் சொல்லாமல் மறைச்சுட்டீங்க. ஆனால் இன்றைக்கு கொலை நடந்த அப்புறம் என்கிட்ட அதை சொல்லிட்டீங்க. நம்ம ரெண்டு பேரும் அதை தொடர்ந்து போறோம். நாம கடையில் போய் விசாரிச்சு முடிக்கவே இல்ல! அதுக்குள்ள இவர் கால் பண்றார்னா என்ன அர்த்தம்? நம்மளை ஃபாலோ பண்றாங்கன்னு அர்த்தம். இந்த விஷயத்தை நீங்களா போய் சொல்லி இருந்தா, உங்கள டிஸ்மிஸ் பண்ணிட்டு அதோட முடிச்சிருப்பாங்க. எனக்கு இந்த விஷயம் தெரிய வந்துருச்சு. அதனால என்னை இந்த வழக்கை விட்டு விலகி வச்சுட்டாங்க. இதுக்கு பின்னாடி ஏதோ ஒரு பெரிய காரணம் இருக்கு” என்று ஆதன் கூறி முடிக்க, அவருக்கு மண்டை வெடிப்பதுபோல் தெரிந்தது.
“இப்போ உங்களை இந்த கேஸை பார்க்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க சரி. அப்போ என்னை என்ன செய்வாங்க?”
“உங்களை ஒண்ணும் செய்ய மாட்டாங்க. ரெண்டு நாள் கழிச்சு விளக்கி வைப்பாங்க. சரி.. இனி இதைப் பத்தி இங்க எதுவும் பேச வேண்டாம். வண்டியை எடுங்க. போயிகிட்டே பேசலாம்..” என்று கூறி வண்டியில் ஏறி அமர்ந்தான் ஆதன்.
Interesting
Aadhan doubt padurathu pola sethu pona andha ponnu kum ippo erandha ivanga rendu per oda savukum etho link iruku aana athu enna nu avan kandupidikirathukula avan ah andha case ah investigate panna venam nu sollitaga
IPPADI ORU oru kolaikum connection iruku eyar ethukukaga panranga ithula police vera avangaluku thunaiya poranga