பட்டாம்பூச்சிகளை ரசிக்காத மனிதன் நான்!
படபடக்கும் அதன் இறக்கைகளால் சலனம் தோன்றியதே இல்லை!
அதன் வர்ணங்கள் என் எண்ணங்களுள் புகுந்ததே இல்லை!
ஒரு முட்டை, புழுவாகி, கூட்டுப்புழுவாகி முழு பட்டாம்பூச்சியாக உருப்பெறுகிறது. அவ்வளவுதான். இதில் கவிநயமும் கலர் நயமும் எங்கிருந்து தோன்றியது.
பட்டாம்பூச்சியின் பின் செல்லும் கவிஞன் மூடன் என்றே நினைத்திருந்தேன். அதன் வண்ணங்களை எழுத்தாய் வர்ணிப்பவனை, படபடக்கும் இறக்கைகளைப் பார்த்ததும் படபடக்கும் மனதை கொண்டவனையும் பார்க்கும் போது, அதீத சிந்தனையின் வெளிபாடோ என்று தோன்றும்.
திருடனைப் பிடிக்க ஓடியே பழக்கப்பட்ட கால்கள். ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் வேகம். வேகத்தடைகளைக் கூட கருத்தில் கொண்டதில்லை. இதுதான் வாழ்க்கை என்று நினைத்திருந்த என்னை… ‘அட.. சற்று பொறேன். கால்களுக்கு ஓய்வளி.. நின்று என்னை ஒருமுறை பாரேன் என்று ஒரு பட்டாம்பூச்சி என் முன்னால் வந்து நின்றது.
அள்ளித் தெளித்த வண்ணங்கள், செல்லரித்துப் போன இதயத்துடிப்பை வேகப்படுத்தியது.
பசைப்போட்டதுபோல் கால்கள் நின்றது. பார் முழுதும் பசுமையானது.
உச்சிவெயிலும் குளிர்ந்தது.
பார்க்கும் இடமெல்லாம் நிலாக்கள் முளைத்தது.
தூரவெளியில் அவளும் நானும் நடை பயின்றோம்!
பல பால்நிலாகள் வெள்ளியாய் வெளிச்சம் பாய்ச்ச, காதல் காய்ச்சலடிக்க, கண்கள் கூச……. இத்யாதி… இத்யாதியெல்லாம் என்னை இம்சிக்க, நான் முட்டாள் என்று பார்த்து சிரித்தவனெல்லாம், என்னை அடிமுட்டாளென்று நகைத்துக் கொண்டிருந்தனர்.
அவர்களின் சிரிப்பு சத்தம் என் செவி பிளக்க, திடுக்கிட்டு விழித்தேன் நான்.
அட… கனவா!
என்ன கொடுமை இது. பொக்ளைன் இயந்திரம் வைத்து யாரோ என் மனதை தூர் வாரிய உணர்வு.
இரண்டு நாட்களாய் இதே உணர்வுதான். இந்த பெண்கள் மனதில் என்னதான் நினைத்திருப்பார்களோ?
தெரியாமல் கிடந்து தவிக்கிறது மனம். அவள் மனப்பூட்டு திறக்க கடவுச்சொல் தேடி அலைகிறது மனம். கிடைக்காமல் களைத்துப் போன மனம் அனுமதியில்லாமல் உள்ளே நுழைந்துவிடு என்று அறிவுகெட்டதனமாய் அறிவுரை வழங்குகிறது. அது தெரிந்தால் இப்படி பைத்தியமாய் சுற்ற வேண்டாமே.
கோபமோ?
தாபமோ?
காதலோ?
ஏக்கமோ?
என்னவென்று தெரியவில்லை. ஆனால் எல்லாம் அவள் மேல் ஒருசேர வந்து தொலைத்துவிட்டது. அவளைத் திட்டிக் கொண்டே அலுவலுக்கு கிளம்பிவிட்டேன்.
வெளியில் அமர்ந்து என்னுடைய காலுறை அணிந்து கொண்டிருந்தேன். எதிர்வீட்டின் கதவுகள் மூடியே இருந்தது. காலையிலிருந்து நூறுமுறை பார்த்துவிட்டேன். அவள் வந்துவிட்டாளா என்று தெரிந்து கொள்ள, அவளுடைய காலணி இருக்கிறதா என்று பார்க்க, அதிர்ச்சிதான் மிஞ்சியது. இரண்டே பெண்கள் இருக்கும் வீட்டில் இருபது காலணிகள். அரம்பை கண் முன் தோன்றுவாளா? காட்சி தருவாளா? என்றெல்லாம் தறிகெட்டு ஓடும் மனதை காரி உமிழ்ந்து கொண்டேன். ஏனெனில் காலுறையைக் கூட என்னால் சரியாக மாட்ட முடியவில்லை.
க்ரிஞ் என்ற சத்தத்தில் அடக்கி வைத்திருந்த உணர்வுகள் எல்லாம், அடிவயிற்றில் இருந்து பட்டென்று வெளி வந்தது.
அவளும் அவள் தோழியும் ஒன்றாக வெளியில் வந்தனர். வீட்டைப் பூட்டினாள். ஒரு நொடிக்கும் குறைவாகவே என் விழிகளை சந்தித்தாள் அவள். என்னை யாரென்றே தெரியாது போல் காலணிகளை அணிந்து கொண்டு கிளம்பினாள்.
எனக்கு அதிர்ச்சிதான். எப்படி இவளால் இப்படி நடந்து கொள்ள முடிகிறது என்று. நான் இமைக் கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். எதார்த்தமாக என்னைத் திரும்பி ஒரு பார்வைப் பார்த்தாள். இரண்டு நாட்களாக தவியாய் தவித்திருந்த என் உடலணுக்களுக்கு உற்சாகமாய் இருந்தது.
ஒரு நொடி.. ஒரு பார்வை.. ஆனால் அவள் விழிகள் உகுத்ததென்னவோ ஓராயிரம் சங்கதிகள். ஒன்று மட்டும் விளங்கியது அவனுக்கு. இந்த அப்பார்ட்மெண்ட்டுக்குள் நீயும் நானும் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்த்தினாள். அன்று அவன் வீட்டிற்கு வந்திருக்கும்போது, அவளின் அசாதாரண நிலை விளங்கியது.
அவளைக் கடத்திச் சென்றுவிடலாமா என்று தோன்ற, தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டேன். அவசரமாக வீட்டைப் பூட்டிவிட்டு அவள் பின்னே சென்றேன். யாரும் அறியாமல்… ஆனால் அவளுக்கு தெரிந்திருக்கும் என்பது என் அனுமானம். அவள் மட்டும் சிறுகுடி கிராமத்திற்கு சென்றாள். அவளை இடைவெளிவிட்டு பின் தொடர்ந்தேன்.
அவள் அங்கு சென்று யாருக்கோ அழைக்க, ஒருவன் அவளைப் பார்க்க வந்தான்.
“நெடுமாறன்.. எப்படி இருக்க?” என்றாள்.
“ம்ம்ம்.. நல்லாருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க? போன வாரமே வர்றதா சொன்னீங்களே.. என்னாச்சு?” என்றான் அவன்.
“இல்ல தம்பி.. ஊருக்கு போயிட்டேன்..”
“ஆச்சரியமா இருக்கு.. வேலையே கதின்னு கிடப்பீங்க..” என்று கிண்டலடித்தவன், அவள் சிரித்துக் கொள்ளவும், “ஏதாச்சும் விஷேசமா?” என்றான்.
“விஷேசமா? என்ன விஷேசம்?” என்றாள் புருவம் சுருக்கி..
“உங்க முகம் பிரகாசமா இருக்கு. கல்யாணம் ஏதும் முடிவாயிடுச்சோ?” என்று அவன் வினவ, “அப்படியா தெரியிது?” என்றாள்.
“ஆமாக்கா..”
“முடிவானா உனக்கு சொல்லாமயா?” என்றவள், “சரி.. இன்னும் நாலு பேர் கேட்டேனே.. ரெடியா?” என்றாள் அர்வமாக.
“அதுவா.. அது …” என்று இழுக்க, “என்னடா இழுக்குற?” என்றாள் சிறிது ஏமாற்றத்துடன்.
“ஏற்கனவே பத்து பேருகிட்ட ரத்தம் வாங்கி கொடுத்தேன். அதுல என்ன கண்டுபுடிச்சீங்க.. அதை சொன்னா அடுத்து பாக்கலாம்.”
அவன் கேட்டது அவளுக்கு மிகவும் பிடித்தது. அவளிடம் நிறைய கேள்வி கேட்பான். நிறைய தெரிந்து கொள்ள நினைப்பான்.
“பத்து மலைவாழ் இனத்தை தேர்ந்தெடுத்து பரிசோதனை செய்றோம். அதில் உங்க டி. என்.ஏ தான் மிகவும் பழைமையான டி.என்.ஏ. மனிதர்கள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருந்துதான் இங்கு குடிபெயர்ந்து வந்ததா வரலாறு இருக்கு. சிந்து சமவெளில கிடைச்ச மனித எச்சத்தின் டி.என்.ஏவும், ஆப்பிரிக்காவில் தொல் பழங்காலத்தில் கிடைத்த மனித எச்சத்தின் டி.என்.ஏவும் ஒத்துப் போகுது…” என்றாள் குரலில் துள்ளலுடன்.
“அப்போ உலகத்திலே நாங்கதான் ரொம்ப ரொம்ப பழைய பொருள் போல..” என்று அவன் கூற, அவளுக்கு சிறிது சங்கடமாக இருந்நது.
அவனுடைய கூற்றில் ஏதோ சில துயரங்களும் மறைந்து கிடப்பது போல் அவளுக்கு தோன்றியது.
“பழைய பொருளா இருந்தாலும் சரி.. பழைய ஆளா இருந்தாலும் சரி. மனித சமுதாயத்தில் பழையதுக்கு எப்பவுமே மதிப்பு அதிகம்தான்..” என்றாள் சமாதானமாக.
“அதெல்லாம் வார்த்தை அளவுதான் அக்கா. பல வருஷமா அடிமையாவே வாழ்ந்துட்டோம். இப்போ ஐயாவால ஏதோ படிக்கிறோம். கொஞ்சம் வெளில போறோம். யாரும் எங்களை மனிசனா கூட மதிக்கிறதில்லை..” என்று சலித்துக் கொண்டான்.
அடுத்து அங்கு சில இரத்த மாதிரிகளை சேகரித்துக் கொண்டாள். அவளை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன் நான்.
திடிரென என்னைக் கண்டவளின் விழிகளில் சிறிது தடுமாற்றம். விழியின் கவனம் என் மேல் விழ, அனிச்சையாய் அடுத்த அடி எடுத்து வைத்தவளின் பாதங்கள் நொடிக்க, “ஸ்ஸ்” என்று முகம் சுளித்துக் கெண்டாள்.
எங்கிருந்தோ வந்த வண்ண வண்ண தட்டாரப்பூச்சிகள் அவளை சுற்றி வட்டமடித்தன. மலரில் தேனுண்ணும் தட்டாரப்பூச்சிகளுக்கு அவளிடம் என்ன வேலை.
‘இம்ம்ம்’ என்னும் இசையை இமிழ்ந்துகொண்டே, அவளின் இமையிதழ் மயிர் தீண்டி, கருவிழிக்குள் தேனகழ துடித்ததோ?
அடேய் மடையா! அவள் உன்னைப் பார்த்துக் கொண்டே நிலம் சாய்ந்து பொன்னெடுக்கிறாள். நீ அவளைப் பார்த்துக் கொண்டே மேலே பார்க்க மறுக்கிறாய். தலைக்கு மேலே மேகம் திரண்டிருக்கிறது. மழை வருவதை இசையிமிழ்ந்து பறையறிவிக்கிறது தும்பிகள்.
சில நாட்களிலேயே கவிஞனாகிவிட்டேன். காரணம் காதலா காதலியா என்று தெரியவில்லை.
வேலையில் நாட்டமில்லை. உணவில் நாட்டமில்லை. உறக்கத்திலும் நாட்டமில்லை. அருகிவரும் மனத்தெளிவை மீட்டெடுக்க முனைந்தால், பெருகி வரும் காதல் தலையில் கொட்டி, ‘பரவாயில்லை. பைத்தியமாகவே இரு’ என்கிறது.
ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்றாள். என்னை அலையவிடுகிறாளா ? இல்லை நான் அவள் பின்னால் அலைகிறேனா? என்று மனமுமிழ்ந்த இமாலய சந்தேகத்தைப் புறம்தள்ளிவிட்டு, பின்னே சென்றேன். யாருமில்லா இடத்தில் நின்று திரும்பி பார்த்தாள்.
இல்லை. இல்லை.. வெறும் பார்வையில்லை. கண்டனப்பார்வை.. ‘பிழையிழைத்த பாலகனாய் நானும், பிரம்பு வைத்திருக்கும் ஆசிரியையாய் அவளும்..’
அவளை நானும் என் காதலும் பெரிதாய் பாதிக்கவில்லையோ! அவள்பாடு வேலையைப் பார்த்துக் கெண்டே இருக்கிறாள். என் மனப்புழுக்கம் அங்கில்லையோ? இல்லை தணிய வைக்க அவள் மனம் தகையவில்லையோ? காதலென்ன ஆண்களுக்கு சாபமா? என்றெல்லாம் என்னுடன் நானே உரையாடிக் கொண்டு அவளின் அருகண்மை தேடி அடிகள் எடுத்து வைத்தேன். அருகில் செல்ல செல்ல பெருகி ஊற்றாய் வழியும் காதலையும், அருகி புள்ளியாய் தொலையும் பொறுமையையும் என்ன செய்வது?
புலம்பிக் கொண்டே அருகில் சென்றால் இரண்டையும் விலங்கிட்டு, அவளின் மனச்சிறையில் அடைத்துவிட்டாள்.
“உங்களுக்கு வேலையில்லையா இப்போ?” என்ற அவளின் கேள்வியில் மருந்து காலியான மத்தாப்பூவாய் போனேன்.
“ம்ம்ம்.. இருக்கு..” என்று நான் கூற, பிறகு என் பின் ஏன் வந்தாய் என்று பார்த்து வைத்தாள்.
கொஞ்சம் கோபம் வந்தது எனக்கு.
“இங்க பாரு.. மூணு நாள் முன்னாடி எனக்கு ஓகே சொல்லிட்டு, நீ உன்னோட வேலையைப் பார்த்தா என்ன அர்த்தம்..”
“வேற என்ன செய்யணும்னு எதிர்பார்க்குறீங்க?”
“உனக்கு என்னோட ஞாபகமே வரலையா? உன்னால எப்படி சாதாரணமா இருக்க முடியிது?”
“எனக்கு நிறைய கட்டுபாடுகள் இருக்கு. அப்பார்ட்மெண்ட்ல எங்களுக்கு வீடு கொடுக்கவே ரொம்ப யோசிச்சாங்க. நம்ம ரெண்டு பேரை பொறுத்தவரை இது காதல். ஆனா மத்தவுங்களுக்கு அது அப்படி தெரியாது. உங்களோட பகிரங்கமா என்னால பழக முடியாது.”
“புரியல.. நாம என்ன தப்பா செய்றோம். என்னோட கண்ணியத்தை நீ சந்தேகப்படுற மாதிரி தெரியிது..” என்றான் வருத்தமாக.
“நம்ம காதலை, எங்க வீட்ல நான்தான் சொல்லணும்னு நினைக்கிறேன். யாரோ ஒருத்தர் சொல்லி தெரியக்கூடாது. அது சரியாவும் வராது. எப்படி சொல்லி புரிய வைக்கிறதுன்னு எனக்கு தெரியல” என்று திணறியவள், “எனக்கு நீங்க வாழ்க்கை முழுக்க வேணும். அது மட்டும் உண்மை” என்று அவள் அழுத்திக் கூற, அது மட்டும் எனக்கு விளங்கியது.
“அதுக்காக பார்க்கவோ பேசவோ கூடாதா என்ன?”
“நான் அப்படி சொல்லல.. கொஞ்சம் விலகியிருக்கலாம்னு சொல்றேன்..”
“இதுக்கு பருத்தி மூட்டை குடோன்லையே இருந்திருக்கலாம்” என்று நான் முணுமுணுக்க, அவள் சிரித்தாள்.
“உங்களுக்கு என்னோட தனியா இருக்கும்போது, ஏதோ தப்பு செய்ற மாதிரி உணர்விருக்கா?”
“இல்லை..”
“ஆனா எனக்கிருக்கு. ஒரு பையனோட தனியா பேசுறதே தப்புன்னு சொல்லி வளர்த்துருக்காங்க. இந்த காதல், ரகசிய சந்திப்புகள் எல்லாம் என் மனசு ஏத்துக்கணும். இதையெல்லாம் கையாளும் மனப்பக்குவம் எனக்கு இன்னும் முழுசா வரல. என் இயல்பை மீறி ஏதோ ஒன்னை செய்ற உணர்வு. என் வீட்டுக்கு ஏதோ துரோகம் செய்ற உணர்வு. இந்த காதலில் இப்போ ப்ரீமெச்சூர்ட் ஸ்டேஜ்ல இருக்கேன். அதையெல்லாம் மனசுல போட்டு குழப்பிட்டு இருக்கேன். கொஞ்சம் டைம் குடுங்க..” என்று அவள் நேரடியாகவே கூறினாள்.
இவ்வளவு தெளிவாக பேசுகிறாள். ஆனால் ஏதோ பயம் தொற்றிக் கொண்டிருக்கிறது என்று கூறுகிறாள். அவளுடைய உணர்வுகளை அவனால் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அவள் சொன்ன எந்த பிரச்சனையும் அவனுக்கு இல்லை. விளங்கிக் கொள்ள முடியாவிட்டாலும், அவள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்று முடிவு செய்தான். பதில் கூறாமல் அவன் சிந்திப்பதைப் பார்த்தவள் மீண்டும் தொடர்ந்தாள்.
“நான் என்ன சொல்றேன்னு புரியுதா உங்களுக்கு? நான் உங்களை விரும்புறேன். அளவுக்கதிகமா! எனக்கும் நிறைய கனவுகளும் ஆசைகளும் இருக்கு. ஆனால் கனவுகளுக்கும் ஆசைகளுக்கும் பின்னாடி என்னை பல விஷயங்கள் துரத்துது.”
சமுதாயம், அம்மா, அப்பா, குடும்ப கௌரவம், நான் தங்கியிருக்கும் வீடு, பெண் என்பதால் என் பேரில் எழுதி ஒட்டியிருக்கும் கற்பு, அதன் நீட்சியான ஒழுக்கம் என்று என் காதலுக்கு எதிரில் கத்தியுடன் தயாராய் இருக்கிறது என்று அழகாக கூறிவிட்டாள்.
கொஞ்சம் அருகிபோயிருந்த அவனின் மனத்தெளிவை, அவளின் காதல் பற்றிய தெளிவில்லாத தெளிவால் தெளிய வைத்துவிட்டாள். அவனை அவனே மீளாய்வு செய்யும்படி நிர்பந்திந்துவிட்டாள்.
அவனுடைய வானில் சிறகடித்துப் பறந்த பட்டாம்பூச்சிகள் எல்லாம் கூட்டிற்குள் சென்றடங்கியது.
ஏனோ மனம் வெறுமையானது. பட்டாம்பூச்சியை ரசிக்க வேண்டும்தான். ஆனால் இனி தனியாக அல்ல. அவளுடன் சேர்ந்து. என் வாழ்வை அவளுக்குப் பகிர்ந்தளிக்க முடிவு செய்தபின், அவள் பகிரும் சங்கதிகளை கிடப்பில் போட முடியாதே. அவளுடைய சிக்கல்களை என்னால் தீர்த்து வைக்க முடியாது. ஆனால் சிக்கலெனும் பட்சனத்தில் பாதியை உண்டு செரித்துவிட்டால், அவளுக்கு மலைப்பாக இருக்காதே.
யுகம் நொடிகளாகட்டும். அவள் கரம் கோர்க்கும்வரை. நொடி யுகங்களாகட்டும் அவள் கரம் சேர்ந்த பின்னர்.
காலமிருக்கிறது காதலிக்க!
இல்லையென்றாலும் என்ன?
பருபொருளை ஆக்கவோ அழிக்கவோ காலம் காலமாய் காலம் வைத்திருக்கும் பிரபஞ்சத்திடம் காலத்தை கடனாய் கேட்டுவிடலாம்! நீயும் நானும் காதலிக்க!
பிரபஞ்சம் அவனைப் பார்த்து சிரிக்கிறது.
காதலெனும் மடமையால் காலம் தள்ளும் மடையனே! காலனாய் காலம் பறிக்க வந்துவிட்டாய்! உனக்களிக்க காலமேது என்னிடம்?
மழை தொடரும்…
Nice interesting
Nila ah va nedumaran akka nu than solluran avan than aval oda research thevai ah na samples collect panna help pannavan ivanga rendu perumae ippo uyir oda illa .
Nila oda lover police polayae oru vela athu aadan ah iruku ah vaipu iruki ah