Skip to content
Home » 8. ஒரு மழைப்பொழுதினில்

8. ஒரு மழைப்பொழுதினில்

ஆதன் மற்றும் மஞ்சரி இருவரும் சற்று நேரம் உரையாடிவிட்டு அந்த இடத்தைவிட்டு கிளம்பினார்கள்.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

சில நிமிடங்களில், முருகன் அவனுக்கு அழைக்க, கொஞ்சம் ஆர்வமாகவே அழைப்பை ஏற்றான்.

“என்ன ஆச்சு முருகன்? ஏதாவது தகவல் கிடைச்சுதா?” என்று அவன் வினவ, எதிர்முனையில் கூறிய செய்தியில் அதிர்ச்சியுற்றான்.

நிலாவின் ஆராய்ச்சிக்கு இரத்த மாதிரி கொடுத்த இரண்டு நபர் உயிரோடில்லை என்பதுதான் அந்த தகவல்.

“இறப்புக்கு என்ன காரணம்?” என்று அவன் வினவ, ‘லிவர் பெயிலியர்’ என்று அவர் கூறினார்‌.

அதெப்படி மூவரும் ஒரே காரணத்தால் இறக்க முடியும். அவர்கள் மூவரின் தகவல்கள் அனைத்தையும் அடுத்த சில மணிநேரத்தில் ஆதனுக்கு கொடுத்தார் முருகன்.

மஞ்சரி வேலை பார்க்கும் மருத்துவமனையில் அந்த இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. மஞ்சரிக்கு அழைத்து அந்த இருவரை பற்றிய தகவல் வேண்டும் என்று வினவினான்.

அன்று தனது அலுவல்களை முடித்துக் கொண்டு, வெளியே கிளம்ப, மயூரனை சந்திக்கும்படி ஆயிற்று.

“யோவ்..” என்று அழைத்தான் ஆதனை.

ஆதனின் மனதில் அவனைக் கண்டாலே எரிச்சல் மண்டியது. இவனெல்லாம் படித்து, இந்த பதவிக்கு ஏன் வர வேண்டும். பணம் சம்பாதிக்க ஆயிரம் வழிகள் இருக்கிறதே என்று மனதில் நினைத்துக் கொண்டே, அவன் அருகில் சென்று நின்றான்.

“ஆமா.. உன் பேர் என்ன?” என்றான் மயூரன்.

“ஆதன்” என்று அவன் கூறி முடிப்பதற்குள், மயூரனுக்கு அழைப்பு வர, அழைப்பை ஏற்றான். வேண்டுமென்றே அலட்சியம் செய்கிறான் என்பது தெரியும்தான்.

ஆனாலும் ஆதனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. மயூரன் வேண்டுமென்றே சில நிமிடங்கள் அவனைக் காக்க வைத்தான்.

“ஆமா.. என்ன கேட்டேன்?” என்றான் நக்கலாக.

“பேர் என்னனு கோட்டீங்க..”

“ஓஓ… சரி பேர் என்ன?” என்றான் மீண்டும்.

“ஆதன்..” என்றான் பல்லை கடித்துக் கொண்டே.

“என்ன? கேக்கல..” என்றவனை முறைத்தான் ஆதன்.

“என்ன முறைக்கிற? நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா? மொட்டையா பதில் சொல்ற. சார்னு சொல்லு” என்று வம்பிக்கிழுத்தான் மயூரன்.

பதிலே சொல்லாமல் அவனைப் பார்த்தான் ஆதன். அவனின் எல்லை என்னவென்று பார்த்துவிடலாம் என்று தோன்றியது. மனதின் புகைச்சலை “உஃப்” என்று ஊதி அனைத்தான்.

“கான்ஸ்டபிளை டீ வாங்கிட்டு வர சொன்னேன். போய் வாங்கிட்டாரான்னு பாத்துட்டு வா..” என்று அவன் கூற, இடுப்பில் இருந்த ரிவால்வரை எடுத்து மயூரனை சுட்டுவிடலாமா என்றே தோன்றியது ஆதனுக்கு.

“இதெல்லாம் செய்றது என்னோட வேலை இல்லை. நான் வரேன்” என்று ஆதன் அடுத்த அடி எடுத்து வைக்க, மயூரன் கால்களை வைத்து தடுத்தான்.

ஆதனுக்கு ஒன்று மட்டும் விளங்கியது. மயூரன் அவனை சும்மா விடப் போவதில்லை என்று.

ஆதன் கைகளைக்கட்டிக் கொண்டு மயூரனைப் பார்த்தான். அவனுடைய உதடுகள் ஏளனமாக வளைந்தது.

“என்ன வேணும் உங்களுக்கு?” என்றான் அழுத்தமாக‌.

இதுவரை ஒரு சார் கூட அவன் வாயிலிருந்து வரவில்லை என்பதைக் குறித்துக் கொண்டான் மயூரன்.

“நீ எனக்கடில வேலை பாக்குற.. நான் என்ன சொன்னாலும் செய்யணும்..”

“சாரி மிஸ்டர்…” என்று இழுத்தவன், அவனுடைய பெயரை மார்பில் இருந்த பேட்ஜில் பார்த்தான். வேண்டுமென்றே செய்தான்.

“மிஸ்டர் மயூரன், நான் டிப்பார்ட்மெண்ட்டுக்கு வேலை பாக்குறேன்.. உங்களுக்கு இல்லை” என்றான் மீண்டும் அழுத்தமாக.

“டிப்பார்ட்மெண்ட்டு உனக்கு என்ன வேலை கொடுத்திருக்கோ அதை மட்டும் செஞ்சா போதும். தேவையில்லாம வேற விஷயத்தில் மூக்கை நுழைஞ்சா….” என்று இழுத்தான் மயூரன்.

இதோ வந்துவிட்டான் அவனுக்கு தேவையான இடத்துக்கு. இதற்குதான் இவ்வளவு நேரம் ஒத்திகை நடந்து கொண்டிருந்தது. மயூரனின் கடைசி வாக்கியத்தில் எரிச்சல் மண்டிக் கிடந்தது.  ஏனெனில் அவன் எதிர்பார்த்தது வேறு. முதல் மிரட்டலிலே ஆதன் ஒதுங்கி சென்றுவிட வேண்டும் என்று நினைத்தான். கொலை செய்துவிடுவானோ என்ற பயம் எதிராளிக்கு இருக்க வேண்டும். அதுவரைதான் மிரட்டல் எடுபடும். கொலை செய்துவிடுவேன் என்று அவன் வாக்குமூலம் கொடுக்கும்வரை வேடிக்கைப் பார்த்தால், எதிராளிக்கு பயமில்லை என்று பொருள்.

மயூரனின் மிரட்டலெல்லாம் ஆதனிடம் எடுபடாது என்பதை மயூரன் அறிந்து கொண்டதால் வந்த எரிச்சல் அது.

மேலும் அவனின் எரிச்சலை அதிகப்படுத்த, “நுழைஞ்சா என்ன செய்வீங்க?” என்று திமிராக பார்த்தான் அவன்.

“ஆதனுக்கு அட்ரெஸ் இல்லாம போகும். ஆதன் இருந்ததுக்கான ஆதாரமும் இருக்காது. இல்லாம போன ஆதாரமும் இருக்காது” என்று மயூரன் மிரட்ட, ஆதன் அவனை ஏளனமாக பார்த்தான்.

“கை நிறைய லஞ்சம் வாங்கியாச்சு போல..” என்று தனது கண்ணாடியைக் கழட்டி துடைத்து மீண்டும் மாட்டினான் ஆதன்.

“உனக்கும் வேணும்னாலும் வாங்கிக்கலாம். ஆனா என்னோட வழில குறுக்க வராம இருந்தா உயிரோட இருக்கலாம்” என்று மயூரன் கூற, ஆதன் முடிந்ததை செய்து கொள் என்பதுபோல் பார்த்துவிட்டு அங்கிருந்து அகன்றான். மயூரனின் சிரிப்பு சத்தம் அவன் செவியை வந்தடைந்தது. அதில் கொஞ்சம் அலட்சியமும் ஆணவமும் கலந்திருந்ததாக ஆதனுக்கு தோன்றியது.

********

“மனோ, அந்த ஆதன் இன்னும் விசாரணையை நிறுத்தல.. லிவர் பெயிலியர் வரைக்கும் கண்டுபிடிச்சுட்டான்..” என்றான் மாதவன் கொஞ்சம் ஆதங்கமாக.

“அவனை கொன்னா, இன்னும் சென்சேஷனாகுமேன்னு பேசாம இருக்க வேண்டி இருக்கு. ஏதாவது செஞ்சு அவனை தொடரவிடாம நிறுத்து..” என்று மாதவன் கூற, மனோ யாருக்கோ அழைத்து சில கட்டளைகள் பிறப்பித்தான்.

“இனி யாருக்கும் லிவர் பெயிலியர்னு வராது..” என்றும் அவன் சேர்த்து சொல்ல,  அடுத்து சில திட்டங்களைத் தீட்டினர்.

“அந்த ஜட்ஜ் சொல்ற மாதிரி கொஞ்ச நாள், எல்லாத்தையும் நிறுத்திடலாம். ஐலேண்ட் ப்ராஜெக்கடை சேவ் பண்ணியே ஆகணும்..” என்று கூற, மனோவும் ஆமோதித்தான்.

**************

மஞ்சரி ஆதனுக்கு அழைத்து, “சார், கொஞ்சம் நான் சொல்ற இடத்துக்கு வர முடியுமா?” என்று வினவ, அவனும் அவசரமாக கிளம்பி சென்றான்.

அவள் குரலில் ஒரு பதற்றம் இருந்நது. ஒரு அவசரம் தொணித்தது. அவசர அவசரமாக வண்டியை எடுத்துக் கொண்டு சென்றான் அவன்.

மஞ்சரி அவனுக்காக தேனீர் கடை ஒன்றில் காத்துக் கொண்டிருந்தாள்.

“சொல்லுங்க மஞ்சரி. என்னாச்சு? ஏன் இவ்ளோ அவசரமா வர சொன்னீங்க? ஏதாவது க்ளூ கிடைச்சதா?” என்று அடுக்கடுக்காக கேள்விகளை அடுக்க, அவள் பையில் இருந்து சில தாள்களை எடுத்து நீட்டினாள்.

சிந்தனையுடன் அதை வாங்கி பார்த்தவனுக்கு அதிர்ச்சி.

“இது எப்படி சாத்தியம்?”

“நேத்து வந்து அட்மிட் ஆகியிருக்காரு சார்.. லிவர் பெயிலியர்” என்று அவள் கூற, அவன் அவனுடைய அலைபேசி எடுத்து சில கோப்புகளைத் திறந்து பார்த்தான்.

கண்ணில் ஆர்வம் மின்ன அவன் தேட, அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள் ஆர்வமாக.

“என்ன சார்? ஏதாவது குளு கிடைச்சி இருக்கா?”

“அப்படி தான் தெரியுது. ஆனா அதுலயும் குழப்பம் இருக்கு. நிலாவோட ஆராய்ச்சி பட்டியலில் இருந்த இருவர் லிவர் பெயிலியர் மூலமா இறந்திருக்காங்க. அது எப்படி ஒரே கிராமத்தில் அடுத்தடுத்து, அவங்களுக்கு லிவர் ஃபெயிலியர் வரும். அப்ப அந்த கிராமத்துல ஏதோ மர்மம் இருக்குனு அர்த்தம் தானே?”

“நீங்க சொல்றது சரிதான் சார். ஏதோ ஒரு விதத்துல, ஏதோ ஒரு விஷயத்தால,  அவங்க பாதிக்கப்பட்டு இருக்காங்க..”

“ஆனா இதில் இன்னொரு குழப்பம் இருக்கு. நிலாவோட பட்டியலில் இன்னைக்கே இறந்தவரோட பெயர் இல்லை.” என்றவன் மீண்டும் தொடர்ந்தான்.

“உங்களுக்கு இந்த லிவர் ஃபீலர் பற்றியும் அதுக்கு என்ன காரணம் என்பதை பற்றி ஏதாவது தெரியுமா? கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன்.”

“லிவர் ஃபெயிலியர் வரதுக்கு சில காரணங்கள் இருக்கு சார். அதிகமா குடிக்கிறது, வேற ஏதாவது நோய்க்கான ஸ்டீராய்டு மருந்துகள், சில வைரஸ்னால ஏற்படும் தொற்றுக் கூட லிவர் ஃபெயிலியரை கொண்டு வரும்” என்று அவள் கூற, அவன் சிந்திக்கத் தொடங்கினான்.

“இதை நீங்க எப்படியாவது கண்டுபிடிக்கணும். மூணு பேரோட முழுமையான ரிப்போர்ட் வேணும். இவுங்களுக்கு ஏன் லிவர் பெயிலியர் வந்துச்சுன்னு சரியா தெரியணும். எல்லாருக்கும் ஒரே காரணமா இருந்தா, நான் போகும் பாதை ரொம்பவே சரி” என்று கூறியவன் அடுத்து சில திட்டங்களை மனதில் வகுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.

மஞ்சுரி வேலை பார்க்கும் மருத்துவமனைக்கும் இந்த தொடர் மரணங்களுக்கும் பெரிய தொடர்பு இருப்பது போல் அவனுக்கு தோன்றியது.

ஒழுங்கான அங்கீகாரம் இல்லாத மருந்தை பயன்படுத்தி அப்பாவி மக்களை பரிசோதனைக்குள்ளாக்குகிறார்களா என்ற சந்தேகம் அவனுக்கு இருந்தது. மஞ்சரியிடம் அதை கண்டறிய ஏதேனும் வழி இருக்கிறதா என்று சிந்திக்கும்படி கூறினான்‌.  அவளும் ஏதாவது செய்கிறேன் என்று சொல்லிவிட்டு தான் சென்றிருக்கிறாள்.

இறந்தவரின் உடல் அவர் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அன்று அவருக்கு இறுதி காரியமும் முடிந்தது.

அன்றிரவே முருகனுடன் ஆதன் இன்னும் சில ஆட்களை கூட்டிக்கொண்டு சுடுகாட்டிற்கு சென்றான்.

“சார் இதெல்லாம் நம்ம செய்றோம்னு தெரிஞ்சதுனா நம்ம வேலையே போயிடும் சார்..” என்றான் முருகன் வருத்தமாக.

அதற்கு பதிலேதும் ஆதன் கூறவில்லை.  அடக்கம் செய்யப்பட்ட பிணத்தை தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்து ஏதாவது அறிந்து கொள்ள முடிகிறதா என்று பார்ப்பதுதான் அவனது திட்டம். ஏற்கனவே இறந்த இருவரைப் பற்றி மஞ்சரி ஏதேனும் தகவல் கொடுத்தால் அதை சரிபார்ப்பது என்று முடிவு செய்தான்.

ஆனால் ஆதன் நினைத்தது போல் அந்த காரியம் எளிதாக இல்லை அவனுக்கு. சூழ்நிலையும் சரியாக அமையவில்லை.

அன்றிரவு நன்றாக மழை பிடித்துக் கொண்டது. அந்த கிராமம் மலைப்பகுதியில் இருப்பதால் சுடுகாடும் அந்த கிராமத்திற்கு அருகிலேதான் இருந்தது. பூச்சிகளின் சத்தம் காதை பிளக்க, காதுக்குள்ளே இடி இடித்தது. கண்களுக்குள் மின்னல் வெட்டியது. ‌ ஒரு அசாதாரண சூழ்நிலையில் உருவானது அவ்விடத்தில். சென்று கொண்டிருந்த அனைவருக்கும் மனம் திக் திக் என்ற அடித்துக் கொண்டது.

பிணத்தை தோண்டி எடுத்து சில மணி நேரங்களில் உடற்கூராய்வு முடித்து மீண்டும் பிணத்தை அதே இடத்தில் வைத்து புதைத்து விடுவது தான் திட்டம். ஆனால் மழைப்பிடித்துக் கொண்டிருப்பதால் காலை விடியலுக்குள் இதை செய்து முடிக்க முடியுமா என்பதில் பெரும் ஐயம் எழுந்தது. இத்திட்டம் கொஞ்சம் பிசகினாலும் அவன் வேலை போவது உறுதி. இதை ஏன் செய்தான் என்று விளக்கங்கள் கூற வேண்டும். சந்தேகம் இருப்பதாய் விளக்கம் கூறினாலும் இந்த வழக்கை சுடுகாட்டில் புதைத்த பிணம் போல மூட நினைப்பவர்களுக்கு, இவனின் இந்த செயல் நிச்சயம் பிடிக்காது. அவனை வேலையை விட்டு துரத்தவே முயற்சி செய்வார்கள்.

அவனுடைய கணிப்பு உண்மை என்றால் உண்மையில் இந்த கொலைகளுக்கு பின்னால் பெரும் மர்மம் இருக்கிறது. தவறு நிகழ்ந்தால், அவன் வேலை போகும் அல்லது உயிரே கூட போகலாம்.

ஏதேதோ எண்ணங்கள் மனதில் பலவாறு ஓடிக் கொண்டிருக்க, பிணம் புதைத்த இடத்தை அடைந்தனர்.

ஆதனுடன் வந்த இருவரும் கடப்பாறையை கொண்டு அந்த இடத்தை தோண்டினர். அந்த அசாதாரண சூழல் ஒருவிதத்தில் அவர்களுக்கு உதவியது. சிறு சத்தம் கூட வெளியுலகிற்கு கேட்காமல் பாதுகாத்தது.

நால்வரும் பிணத்தைத் தூக்கிக்கொண்டு வண்டியை நோக்கி நடந்தனர். பிணத்தின் நாற்றம் ஒரு பக்கம் வயிற்றைப் பிரட்டியது. மறுபக்கம், பிணத்தின் கணம் அவர்களை பூமிக்குள்ளே புதைத்திடும் போல் இருந்தது.

சற்று நேரத்திற்கெல்லாம் யாரோ சிலர் வந்து அவர்களை தாக்க அந்த இடமே தலைவருமானது. பணத்தைத் தோண்டி எடுக்க வந்த கூலி ஆட்கள் தப்பித்து ஓடி விட்டனர். ஆதனும் முருகனும் எவ்வளவு போராடியும் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. முகமூடி அணிந்திருந்த சிலர் அந்த பிணத்தை தூக்கிக்கொண்டு ஓடி மறைந்தனர்.

முருகனுக்கு காலில் நன்றாக அடிபட, ஆதனால் எதுவுமே செய்ய முடியவில்லை. முருகன் வலியால் துடித்துக் கொண்டிருக்க ஆதனின் கவனம் முருகன் மேல் திரும்பியது. அவரை காப்பாற்ற வேண்டும் என்று புத்தியுரைக்க, அவரை தூக்கி கொண்டு அவனுடைய வாகனத்தில் புறப்பட்டான். மருத்துவமனையில் அவரை சேர்த்தான்.

அவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. ஏதோ ஒரு விதத்தில் அவருடைய இந்த நிலைக்கு அவனும் ஒரு காரணமென்று. முருகனுடைய குடும்பத்திற்கு அழைத்து விஷயத்தை கூற, அவர்கள் ஓடி வந்தனர்.

மறுநாள் காலை மயூரனிடம் இருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. ஆதனுக்கு உள்ளுக்குள் நன்றாகவே சந்தேகம் இருந்தது மயூரன் மேல். ஏனெனில் சில நாட்களாகவே மயூரன் ஆதனை கண்காணிப்பதும், இந்த வழக்கில் அவன் எதை தேட முனைந்தாலும் அதனை தடுப்பதும், மிரட்டுவதுமாக இருந்தான். அவன் விலை போய்விட்டது அதனுக்கு நன்றாகவே தெரியும் என்றாலும், முந்தைய தின சம்பவத்தில் மயூரனின் பங்கு இருக்கும் என்று அவன் சிறிதும் சந்தேகிக்கவில்லை. மயூரன் அவனை மிரட்டுகிறான் என்றுதான் நினைத்திருந்தான்.

ஆனால் மயூரனுக்கு எப்படி விஷயம் தெரிந்தது. வேறு யாருக்குமே தெரிய வாய்ப்பில்லையே.

ஆதன் செய்யப் போகும் காரியம் யாருக்கும் தெரியாது என்று தான் நினைத்திருந்தான். மஞ்சரி ஆதன் முருகன் மூவரைத் தவிர வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை. மஞ்சரிக்கு கூட பிணத்தை தோண்டும் விடயம் தெரியாது. சில மணி நேரங்களுக்கு முன்பே முருகனுக்கு அழைத்துக் கூறியிருந்தான். முருகன் மேல் அவனால் சந்தேகப்பட முடியவில்லை. ஏனெனில் அவரே அடிபட்டு கிடக்கிறார்.

எப்படி இந்த விடயம் தெரிந்து, அந்த பிணத்தை கடத்திக் கொண்டு போக முடியும் அந்த பிணத்தை கடத்திக் கொண்டு போய் இருக்கிறார்கள் என்றால் இதில் எவ்வளவு பெரிய ரகசியம் இருக்கிறது. மேலும் அவனை யாரோ இருபத்தி நாலு மணி நேரமும் பின்தொடர்வது தெரிந்தது. முந்தைய நாள் சம்பவப் அதை மட்டுமே உறுதி செய்தது.

4 thoughts on “8. ஒரு மழைப்பொழுதினில்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!