பல சிந்தனைகளின் ஊடே மயூரனின் முன் அமர்ந்தான் ஆதன்.
சில நிமிடங்கள் ஆதனை அளவெடுத்த மயூரன், அவன் இருக்கையில் இருந்து ஆதனுக்கு அருகில் வந்து நின்றான். மேசை மேல் சாய்ந்து கொண்டு ஆதனை நேருக்கு நேராக சந்தித்தான். மயூரனின் விழிகள் கூறிய செய்தியை ஆதனால் நன்றாகவே புரிந்து கொள்ள முடிந்தது. இதற்கு மேல் உன்னால் எதையுமே அசைக்க முடியாது என்ற திண்ணக்கம் அவன் விழிகளில் வெளிப்பட்டது.
ஆதன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு மயூரனை பார்த்தான்.
“என்ன? என்னை கொல்லனும் போல இருக்கா?”
ஆதன் பதிலும் சொல்லாமல் மயூரனை பார்த்தான்.
“என்னை என்ன அவ்வளவு சாதாரணமா எடை போட்டுட்டியா. நீ செஞ்ச காரியத்துக்கு உன்னை வேலையை விட்டு தூக்கலாம் தெரியுமா?” என்று கூறியவனை அலட்சியமும் கோபமும் கலந்து பார்த்தான்.
“முடிஞ்சா செய்ங்க” என்றான் ஆதன் திமிராகவே. நேற்றைய சம்பவத்தில் ஒன்று மட்டும் ஆதனுக்கு விளங்கியது. மயூரன் அவன் மேல் நடவடிக்கை எடுத்திருந்தால், ஏதோ பெரிய விஷயம் இருக்கிறது என்று தோன்றியிருக்கூடும். ஆனால் திருடனுக்கு தேள் கொட்டியதுபோல், அவனை அழைத்து பொறுமையாக கையாள்கிறான் என்றால், ஆதன் நினைத்தைவிட இது பெரிய விஷயமாய் இருக்கக் கூடும் என்று கணித்தான். ஒருவேளை ஆதன் அருகில் இருந்தால் அவனை கண்கானிக்கலாம் என்று கூட நினைத்திருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு தரமான காரணம் இருக்கிறது.
அடுத்து ஆதன் சிறுகுடியில் சென்று இறந்தவனைப் பற்றி விசாரிக்க, மீண்டும் குழம்பிப்போனான். ஏனெனில் இறப்புக்கு காரணம் லிவர் பெயிலியர் என்று இல்லை. வேறு ஏதோ இருந்தது.
ஆதனுக்கு எரிச்சலாக வந்தது. எங்கு சென்றாலும் மீண்டும் மீண்டும் முதல் இடத்திற்கே வந்து நிற்பது போல் தோன்றியது. நெடுமாறன் கொலை தொட்டு எதற்குமே ஆதாரம் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு விஷயத்தை நுணுக்கமாக அணுகலாம் என்று நினைத்தால், அதை தொடர முடியாது, பாதியோடு நிறுத்த வேண்டியதாயிற்று.
மேலும் சில நாட்கள் முன் அங்கு பெயிதிருந்த கணமழையால் மண் சரிவு ஏற்பட்டு மக்கள் அனைவரும் கவலைக்குள்ளாகி இருந்தனர். அவர்களின் வீடு எல்லாம் தற்போது சரி செய்யப்பட்டு இருந்தது. மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி இருந்தனர். அந்த கிராமத்திலிருந்து ஒரு சிலரை மட்டும் ஊர் தலைவர் வெளியூருக்கு வேலைக்காக அனுப்பியிருப்பதாக தகவல் கிடைத்தது. ஏன் திடீரென்று இந்த முடிவு என்று கேட்டதற்கு இது வாடிக்கையாக நடப்பதுதான் என்றும் கூறினர். அப்பொழுது யாருக்காவது ஒரு தலைவர் சில வாய்ப்புகளை ஏற்படுத்தி வெளியூரில் வேலை வாங்கித் தருவார் என்றும் கூறியிருந்தனர். அதனால அவர்களின் வாழ்வாதாரம் நன்றாக மாறி இருப்பதாக கூட சிலர் கூறினர். எந்த நாட்டிற்கு எங்கு வேலை என்று கேட்க, சில தகவல்கள் அவனுக்கு பரிமாறபட்டது.
ஆதனுக்கு எதைக் கேட்டாலும் சந்தேகமாக இருந்தது. இறந்தவனுக்கு லிவர் ஃபெயிலியர் என்று மஞ்சரி தீர்க்கமாக கூறியிருந்தாளே முன்தினம். ஆனால் இப்பொழுது எப்படி இந்த அறிக்கை மாறி இருக்கக்கூடும் என்று சிந்தித்தவன் மஞ்சரிக்கு அழைத்து அவளை சந்திக்க வேண்டும் என்று வினவ, அடுத்த சில மணி நேரங்களில் அவன் முன் அமர்ந்திருந்தாள்.
மஞ்சரியிடம் அறிக்கையை கொடுக்க, அதை வாங்கிப் பார்த்தாள் அவள்.
“மஞ்சரி அதெப்படி ஒரு பொய்யான ரிப்போர்ட்டை கொடுக்க முடியும்?”
“எனக்கும் தெரியல சார்… ஆனால் எனக்கு உறுதியா தெரியும்.. அன்னைக்கு அவருடைய ரிப்போர்ட்டை நான் பார்த்தேன்.. அதை எப்படி மாத்தினாங்கன்னு டவுட்டா இருக்கு..”
“அதெப்படி இவ்ளோ உறுதியா சொல்றீங்க?”
“அவரோட பெயர், ஊர் எல்லாம் சரியா பொறுந்தி போகுதே. அதில் நமக்கு தேவையான தகவல் ஏதாவது காடைக்குமான்னு ஒருமுறைக்கு இரண்டு முறை பார்த்தான்” என்றாள் அவள் உறுதியாக.
“அதை யாரிடம் கொடுப்பீங்க? அதில் யாரெல்லாம் கையெழுத்திடணும்?”
“எனக்கு தெரிஞ்சு சீஃப் டாக்டர், டீன்… அவ்ளோதான்..”
“அப்போ மருத்துவமனையோட தலைமைக்கு தெரியாம அங்க எதுவும் நடக்க வாய்ப்பில்லை. அவுங்க ரெண்டு பேரையும் கண்காணிக்கனும்” என்று கூறியவன் அவர்கள் இருவரைப் பற்றியும் விசாரித்தான்.
போஸ்ட்மார்ட்டம் செய்ய அந்த பிணத்தை தோண்ட சென்றால், அதை தடுத்து நிறுத்துகிறார்கள். இது இயற்கையான சாவே இல்லை போல. இயற்கை போல் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.
அடுத்த மருத்துவமனையின் தரவுதளத்தை ஊடுருவி தகவல் பெறலாமா என்றெல்லாம் தோன்றியது ஆதனுக்கு. ஆனால் அது அவ்வளவு எளிதில் சாத்தியமில்லை. இம்மியளவுகூட அவனுக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாது என்று நினைக்கும் கூட்டம் அதிகம். தரவு தளத்தை ஊடுருவினால் நிச்சயம் தெரிந்துவிடும். அவன் ஒரு அடி முன்னே எடுத்து வைக்கும் முன்ன அவர்கள் பத்தடி முன்னே சென்று விடுகிறார்கள்.
“ஆனா ஒரு விஷயம் உண்மை சார். அவருக்கு ஃபேட்டி லிவர் கண்டிஷன் இருந்துச்சு.. அதோட விளைவா அவருக்கு லிவர் பெயிலியர் வந்துச்சு” என்று அவள் கூற, அவனும் சிந்தனையில் ஆழ்ந்தான்.
அவளுக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைப்பை ஏற்று விஷயத்தை அறிந்தவன் முகம் அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தது. இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை.
அவளுடைய முகம் மாற்றங்களை கணித்த ஆதன் “என்னாச்சு?” என்றான்.
அவள் பதிலை கூறாமல் எழுந்து நடக்க தொடங்கினாள். ஆதன் அவள் பின்னே ஓடிக் கொண்டிருந்தான்.
“மஞ்சரி, என்ன ஆச்சு? ஏன் எதுவுமே சொல்லாம போறீங்க?” என்று அவளுக்கு முன்னே சென்று அவளை வழிமறித்து நின்றான்.
அவளோ அவனை வலியுடன் ஒரு பார்வை பார்த்தாள். பின் அவனை சட்டை செய்யாமல் மீண்டும் சில அடிகள் முன்னே எடுத்து வைக்க, அவளின் கைகளைப் பிடித்து வலுக்கட்டாயமாக நிறுத்தினான்.
“கையை விடுங்க.. இல்லைனா நடக்குறதே வேற” என்று அவள் கோபமாக கூற, ஆதனுக்கு குழப்பம்தான் மிஞ்சியது. நன்றாக பேசிக் கொண்டிருந்தவள், ஏன் இப்படி நடந்து கொள்ள வேண்டும்.
அவனுக்கும் கோபம் தலைக்கேற, “என்னனு சொல்லித் தொலை.. எதுவுமே சொல்லாம போனா என்ன அர்த்தம்” என்று கத்தினான்.
வழியில் நடந்து சென்ற சிலர், இருவரையும் பார்த்துவிட்டுப் போக, அவளுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அவர்களின் பார்வை அவளை ஒழுக்கம்கெட்டவள் என்று குத்திக் கிழித்துவிட்டு சென்றது.
யாரோ சிலரின் விமர்சன பார்வைகளில் அவளின் ஒழுக்கம் போய்விடுமா என்ன?
நான் அப்படிப்பட்ட பெண்ணல்ல என்று எபப்டிப்பட்ட பெண்ணாயிருந்தாலும், சமூகத்தின் ஒழுக்கங்கெட்ட பார்வைக்கு விளக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தால், ஒருவேளை ஒழுக்கமானவள் என்று சமூகம் பட்டமளித்திருக்கும். பட்டத்தை மனச்சட்டத்திலிட்டு பூட்டி வைத்து பெருமிதம் கொள்ள வேண்டியதுதான். அத்தோடு நின்றால் பரவாயில்லையே! வாங்கிய பட்டத்தை பேண வாழ்நாள் முழுக்க ஓட வேண்டும்.
“ப்ளீஸ்.. டோண்ட் க்ரியேட் சீன்?” என்று அவன் பொறுமையிழக்க, அவள் சகலத்தையும் மறந்தாள்.
“என்ன தெரியனும் உங்களுக்கு? நான்தான் சொன்னேனே. என்னை இந்த விஷயத்தில் உள்ளே இழுக்காதீங்கன்னு. என்னோட கல்யாணம் நின்னு போச்சு. இரண்டாவது முறையா செய்யாத தப்புக்கு நான் தண்டனை அனுபவிக்கிறேன்..” என்று அவள் வெடிக்க, அவன் பதிலேதும் கூறவில்லை. என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவளை எப்படி சமாதானம் செய்வதென்றும் தெரியவில்லை.
“ப்ளீஸ்.. என்ன நடந்துச்சுன்னு கொஞ்சம் பொறுமையா சொல்லுங்க. நான் என்னால முடிஞ்ச உதவியை நிச்சயம் செய்றேன்..” என்றான் பொறுமையாக.
“நீங்க செஞ்சவரை போதும். நிலா செத்துட்டா. அவளுக்காக நிறைய அழுதுட்டேன். ஒரு சக மனுசியா அவ்வளவு தான் என்னால் செய்ய முடியும். அதுக்காக என்னோட வாழ்க்கையையும் நிம்மதியையும் தொலைச்சிட்டு நிக்க முடியாது” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று சென்றுவிட்டாள்.
ஆதனுக்கு மனமே இல்லை. திருமணம் நின்று போனதற்கு அவனும் நிலாவும் ஒருவகையில் காரணம் என்று மட்டும் விளங்கியது. கொஞ்சம் குற்றவுணர்வு தலைதூக்கியது. அவளின் நிலையை நன்றாகவே விளங்கிக் கொள்ள முடிந்தது.
அவளுக்கு பலமுறை அழைத்துவிட்டான். அழைப்பை அவள் ஏற்கவே இல்லை. தீவிர சிந்தனைக்குபின் ஒரு விஷயம் அவனுக்கு விளங்கியது. அவனுக்கு இந்த வழக்கில் உதவிய அனைவரையும் துண்டித்தாயிற்று. முருகனுக்கு அடிபட்டு மருத்துவமனையில் இருக்கிறார். மஞ்சரிக்கு திருமணம் நின்றுவிட்டது. அவனை கொல்லாமல் விடுவதற்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கிறது. ஏதோ ஒருவகையில் அவன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டுவிட்டான். அவனை கொன்றால் சந்தேகம் வலுக்குமோ என்று கூட அவனை விட்டு வைத்திருக்கலாம். ஆனால் ஒன்று மட்டும் விளங்கவில்லை. நெடுமாறனும் கண்ணனும் கொடூரமாங வெட்டி கொலை செய்யப் பட்டிருக்கின்றனர். அவர்களை கொன்றவர்களுக்கு அவனைக் கொல்லும் தைரியம் ஏனில்லை என்பது மட்டும்தான் புரியவில்லை. நடந்த அனைத்து குழப்பங்களில் அவனைக் காப்பாற்றும் ஒரு முக்கியமான விஷயம் இருக்க வேண்டும். அதனால் மட்டுமே அவன் உயிருடன் இருக்கிறான். மயூரன் அவனை ஒன்றும் செய்யாமல் விட்டதற்கும் அந்த ஒன்றுதான் காரணமாய் இருக்க வேண்டும் என்று யூகித்தான் அவன். இவ்வளவு விஷயங்களை ஊகித்தவனுக்கு, அந்த ஒரு காரணம் என்னவென்று ஊகிக்க முடியவில்லை.
இனி முருகனும் மஞ்சரியும் அவனுக்கு உதவுவது நடவாத காரியம். இந்த லிவர் பெயிலியர் வேறு அவன் மனதை அரித்தெடுத்துவிட்டது. காரணம் என்னவாக இருக்கும் என்று கணிக்கவே முடியவில்லை. சிறுகுடி கிராம மக்களின் இரத்த மாதிரிகளை யாருக்கும் தெரியாமல் சேகரித்தான். அதை ரகசியமாக ஆய்வகத்தில் கொடுத்து ஆராயச்சிக்குட்படுத்த அதில் சந்தேப்படும்படி எதுவுமே இல்லை. அவர்கள் யாரும் எந்த மருந்தையும் உட்கொள்ளவில்லை. அவர்களின் உணவு மற்றும் நீர் என்று அனைத்தையும் சோதனை செய்தாயிற்று. காரணம் ஏதும் இருப்பதுபோல் தெரியவில்லை.
இனி உதவியென்று யாரிடமும் நிற்பதில் பயனில்லை. இதை மிகவும் ரகசியமாக விசாரிப்பது என்று முடிவு செய்தான். யாரையும் உள்ளே இழுப்பதில்லை என்றும் முடிவு செய்தான். முருகன் நகையை அடமானம் வைக்க சென்ற போது, அதை அங்கிருந்து விலை கொடுத்து வாங்கியவனை முதலில் தேடுவது என்று முடிவு செய்தான். அங்கிருந்த சிக்னலில் கிடைத்த சி.சி.டிவியை ஆராய்ந்து பார்த்ததில் அவனுக்கு பெரிதாக எந்த தகவலும் இல்லை. வாங்கிச் சென்றவன் இருசக்கர வாகனத்தில் வந்தது மட்டும்தான் தெரிந்தது.
அந்த சி.சி.டீவி ஃபுட்டேஜை மீண்டும் மீண்டும் ஓடவிட்டுப் பார்க்க ஒரு சிறு துப்பு கிடைத்தது. ஆனால் அது எந்தளவு அவனுக்கு உதவும் என்று அவனுக்கு தெரியவில்லை. ஆனாலும் அதை குறித்துக் கொண்டான். அவனுடைய கைகளில் ஒரு பட்டாம்பூச்சி டாட்டூ இருந்தது. சி.சி.டீவி ஃபுட்டேஜில் அது தெளிவாக தெரியவில்லையெனினும், அது ஒரு பட்டாம்பூச்சி என்று ஊகிக்க முடிந்தது. டாட்டூ குத்துவது பெரிய விஷயமில்லை என்றாலும், ஆண்கள் யாரும் பட்டாம்பூச்சியை டாட்டூவாக போட்டுப் பார்த்ததில்லை. இந்த வழக்கிற்கு அது ஒரு தனித்தன்மை.
மஞ்சரி கொடுத்த நிவாவின் டைரியில் ஏதேனும் குறிப்பு இருக்கிறதா என்று மீண்டும் படித்தான் அவன். அவன் நினைத்ததுபோல் எதுவும் கிடைக்கவில்லை. தலை வலிப்பதுபோல் இருந்தது. இரவு மணி பதினொன்று இருக்கும். வெளியே சென்று வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, அவனுடைய இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றான்.
குறிஞ்சி நிலத்தின் ஊதைக் காற்று அவனுக்குள் இருந்த இறுக்கத்தை தளர்த்தியது. திடீரென ஒரு பெண்ணின் பதற்றமான வீல்லென்ற ஒலி கேட்க, வண்டியை நிறுத்தினான்.
சிலர் ஓடும் சத்தமும் கேட்க, அவன் சுற்றி சுற்றி பார்த்தான். திடிரென மஞ்சரி அவன் வண்டி மீது வந்து மோத, அவளை சிலர் துரத்திக்கொண்டு வர, அடுத்த அரைமணி நேரம் அந்த இடமே களேபரம் ஆனது.
முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் அவளைத் துரத்திக்கொண்டு வர, அவர்களை எதிர்த்து ஆதன் சண்டையிட, நன்றாக மழைப் பிடித்துக் கொண்டது. நாள் முழுக்க அலைந்து திரிந்ததில், ஆதனும் மிகவும் களைப்பாக இருந்தான். அவனால் இருவரையும் அடித்து வீழ்த்த முடியவில்லை. மஞ்சரியும் இடை புகுந்து ஆதனுக்கு உதவினாள். அவளும் பதற்றத்துடன் இருந்ததால், முகமூடி மனிதர்களை பிடிக்க முடியவில்லை. பெய்த மழை அவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலையை உருவாக்க இருவரும் தப்பித்து ஓடினார்கள்.
பின் மஞ்சரியை அழைத்துக் கொண்டு, அந்த இடத்தைவிட்டு சென்றான். அவளிடம் எதுவுமே கேட்கவில்லை. அவளை அவளுடைய வீட்டில் விட்டுவிட்டு, உள்ளே போக சொல்ல, அவள் பயந்து கொண்டே நின்றாள். அவள் அந்த வீட்டில் தனியாக வசிக்கிறாள். நிலாவின் பிரச்சனைக்கு பின் பல போராட்டங்கள். அதன் பிறகே மீண்டும் வேலைக்கு வந்தாள். இப்பொழுது நடந்த விடயம் வெளியே தெரிந்தால், அவளின் சுதந்திரம் நிச்சயம் பரி போய்விடும்.
அவளிடம் பல கேள்விகள் அவனுக்கு கேட்க இருந்தாலும் அவளுடைய நிலையை எண்ணி, அவளிடம் எதுவுமே அவன் கேட்கவில்லை. அவள் இன்னும் தயங்கி நிற்பதை பார்த்து, “கவலைப்படாம உள்ள போங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல லேடி கான்ஸ்டபிள் ஒருத்தவங்க வருவாங்க. அவங்க உங்க கூட நைட் இருப்பாங்க. மத்த எல்லாத்தையும் காலையில பேசிக்கலாம்” என்று அவன் கூற, அவள் கொஞ்சம் தெளிந்தவளாக வீட்டின் உள்ளே சென்றாள்.
மஞ்சளின் இதயம் அதிவேகமாக துடிக்க, அவளால் சமநிலையில் நடக்கவே முடியவில்லை. அஆதன் வர சற்று தாமதமாகியிருந்தாலும்… அதை அவளால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. முந்தைய தினம் ‘நிலாவிற்காக நிறைய அழுதுவிட்டேன். இனி நிலாவிற்காக ஒண்ணுமே செய்ய முடியாது’ என்று கூறியதெல்லாம் மனப்பெட்டகத்திலிருந்து வெளியில் வந்து அவளை வருத்தியது. நிலாவும் இதே நிலையில்தானே இருந்திருப்பாள். யாராவது ஒருவர் வந்து காப்பாற்றினால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்திருப்பாளே. அவளுக்கு ஒழுங்கான நியாயம் கூட கிடைக்கவில்லையெனில்… அதற்காக போராடும் ஆதன் உண்மையில் உயர்வானவன்தான். இடையில் அவனுக்கு உதவினாலும் அவள் மனதில் ஒரு குழப்பம் இருக்கும். எப்பொழுதும் ஒரு எல்லை இருக்கும்.
நிலாவிற்கு நடந்த அநீதியை நினைத்து மனம் பலமுறை குமுறி எழுந்தாலும், குடும்பம் சமூகம் என்று கட்டமைப்புக்குள் அவளால் வேறு எதுவும் அந்த விஷயத்தில் செய்ய முடிவதில்லை. இதுதானே உண்மையான நிலை.
அந்தக் கோர நிகழ்வுக்கு பின், காவலர்கள் அவளை விசாரித்த விதம், மக்கள் அவளை பேசிய விதம், திருமணம் நின்றது என்று அவளின் மன அழுத்தங்களுக்கு காரணங்கள் ஆயிரம் இருந்தது. நிலாவிற்காக அவளால் ஒரு நாள் கூட அவளை மட்டுமே நினைத்து வருந்த முடிந்ததில்லை. அத்தனை அழுத்தும் வெளி உலகிலிருந்து.
இன்று ஏனோ நிலவின் முகம் மட்டுமே மனதில் வந்து நின்றது. வீட்டிற்குள் சென்றது தனது ஈர ஆடைகளை கலைந்துவிட்டு, சுடுநீரில் குளித்து முடித்தாள். இரவு ஒரு மணி இருக்கும். வயிறு மிகவும் பசிப்பது போல் இருந்தது. சூடாக தேனீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, தேனீரை நன்றாக கொதிக்கவிட்டு, இரண்டு கோப்பையில் ஊற்றினாள்.
ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். அதன் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சாய்ந்து நின்றுகொண்டிருந்தான். இரவு டூயூட்டியில் இருந்த பெண் காவலருக்குதான் அழைத்திருந்தான். அவளுக்காக காத்துக் கொண்டிருந்தான்.
அலைபேசியை எடுத்து ஆதனின் எண்ணிற்கு அழைத்தாள். அவன் அழைப்பை ஏற்றவுடன், “கொஞ்சம் மேல வாங்க சார்” என்றாள்.
“கான்ஸ்டபிள் வந்தா தெரியாது, நான் இங்கேயே இருக்கேன்” என்றான் அவன். அவனுடைய அந்த பேச்சில் ஓர் ஒதுக்கம் இருந்தது. அதற்கு காரணம் அவள்தான் என்றும் அவள் உணர்ந்திருந்தாள்.
“வந்தா உங்களுக்கு போன் பண்ணுவாங்க. ஒரு நிமிஷம் வாங்க” என்றாள் மீண்டும். அவளுடைய அழைப்பில் கொஞ்சம் கெஞ்சல் தொணியும், கொஞ்சம் நன்றியுணர்வும் இருந்தது.
மீண்டும் ஒருமுறை பார்வையை சுழலவிட்டான். அது ஒரு தனி வீடு. கீழே வீட்டின் உரிமையாளர் இருப்பதாக ஒருமுறை மஞ்சரி கூறியிருந்தாள். வீடு பூட்டியிருந்தது. ஊருக்கு சென்றிருக்க வேண்டும் போல. மேலே இவள் வாடகைக்கு இருக்கிறாள்.
மேலே சென்றதும், ஒரு தேனீர் கோப்பையை அவனுக்கு நீட்ட, அவன் மறுக்கவில்லை. இரண்டு நிமிடங்கள் அந்த தேனீரை அருந்தியிருப்பான் ஆதன்.
ஆயிரம் கேள்விகள் அவன் மனதில் ஓடியது. ஆயிரம் பதில்கள் அவள் மனதில் ஓடியது. ஆனால் இருவருமே வேறு எதுவும் பேசவில்லை. அவள் தெளிந்து விட்டது போல், சமநிலைக்கு வந்துவிட்டது போல் தன்னை காட்டிக் கொண்டாளென்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
சற்று நேரத்திற்கெல்லாம், அந்தப் பெண் காவலரும் வந்து சேர, அவளிடம் பாதி விவரம் கூறி, பாதி விவரம் கூறாமல், காலை அவன் வரும்வரை மஞ்சரிக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றான்.
“உள்ள வாங்க மேடம்..” என்று அந்த பெண் காவலரை உள்ளே அழைத்துச் சென்றாள் மஞ்சரி. அவளை உள்ளே அமர வைத்துவிட்டு, அடுக்களைக்குள் சென்றவள், ஒரு கோப்பையில் மீதமிருந்த தேநீரில் ஊற்றி, அவளுக்கு கொண்டு வந்து கொடுத்தாள்.
அதை வாங்கிக் கொண்டவள், அந்த வீட்டினை கண்களால் அளவெடுத்தாள்.
“உன்னோட பேர் என்ன?”
“மஞ்சரி மேடம்..”
“மேடமெல்லாம் வேண்டாம். என்னோட பேர் சுமதி. சுமதின்னே கூப்பிடுங்க” என்றாள் அவள்.
மஞ்சரிக்கும் அவளுக்கும் ஒத்த வயது தான் இருக்க வேண்டும். அவள் மஞ்சரியைவிட சிறு பெண்ணாக கூட இருக்கலாம். அதனால் மஞ்சரி மறுப்பேதும் கூறவில்லை. சரி என்று தலையசைத்தாள். சுமதி காவலர் என்பதை எல்லாம் தாண்டி, அன்றிரவு மஞ்சரியுடன் துணைக்கு படுத்துக்கொள்ள வந்த தோழியாகவே தெரிந்தாள். ஏனெனில் ஆதன் அவ்வாறு தான் அறிமுகப்படுத்தியிருந்தான்.
“அவங்க கான்ஸ்டபில்.. அப்படி எல்லாம் பார்க்க வேண்டாம் கூட உங்க தோழியோ இல்ல நிலாவோ இருந்தா எப்படி இருப்பீங்களோ அப்படியே இருக்கலாம்” என்று தான் அறிமுகப்படுத்தியிருந்தான்.
மழைத் தொடரும்…
💛💛💛💛
Next ud seekriam podunga sis… Curiosity thaangala😂😜
Manjari ethukku aathan kita kobapatta thu ippo aval ah attack panna vandhu ellamae ava aadan ku endha help um panna koodathu na ra thu than ah
Ipo than ellam yosikura etho onu nadanthu iruku nila ku atha solravangaluku avalukaga help panravangala la ellam kolla pakuranga yar itha panrathu yen ippadi panranga