📖 Premium தளத்தில் கதைகள் வாசிக்க, 🛒 Amazon Kindle‑இல் கதைகள் வாசிக்க, ▶️ YouTube Channel‑இல் Audio novel கேட்க👇
Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-33

90’s பையன் 2k பொண்ணு-33

ரிஷிவா-33

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      ரிஷி வேகமாக பைக்கிலிருந்து இறங்கியவன் வீட்டுக்குள் நுழையும் போது அம்மியை அரைத்து கொண்டிருந்தாள் ஷிவாலி.

     இவனை கண்டதும் கண்ணை கண்ணை பிழிந்து விட்டாள்.

     “அரைச்சியா இல்லையா.” என்று அதிகார குரல் கவிதாவின் மாமியார் வனஜா என்று சொல்லாமல் சொன்னது.

     “வாப்பா… உட்காரு.” என்று சூப்பை கொடுக்க ஷிவாலி ‘ஙே’ என விழித்து அந்த பௌவுலை வெறித்தாள்.

     மூச்சு வாங்க அதனை வாங்கியவன் ஷிவ்வை காண அவளோ முறைக்கவில்லை மாறாக “என்னை காப்பாத்து டா” என்று நின்றிருந்தாள்.

     “பிள்ளைகளை கவிதா கூட்டியாற போயிருக்கா. மணி பன்னிரெண்டாகுது. இதுக்கு மேல மிளகாய் வத்தல் தண்ணில ஊறி எப்ப குழம்பு வைக்க? உன் பொஞ்சாதி அரைக்க சொன்னா உருட்டறா. எல்லாம் மிக்ஸில பழகியிருக்காங்க போல, உதவி கேட்டா செய்யறதே அதிசயம். பிள்ளை அழகா கத்துக்கறா” என்று ஷிவாலியை புகழ்ந்தார்.

       ரிஷிவேந்தன் உடனடியாக ஷிவாலியை தன் பக்கம் இழுக்க முடியாது பார்வையாளராய் வெறித்தான்.

     கவிதா அந்த நேரம் குழந்தையை அழைத்து வர இதை காண நேர்ந்தது.

“டேய் தம்பி அக்கா மேல எந்த தப்பும் இல்லைடா. நான் குழந்தையை கூட்டிட்டு வர்றேன் டிவி பாருனு தான் சொல்லிட்டு போனேன். எங்கத்தை என்ன பண்ணி வச்சாங்களோ” என்று ரிஷியின் அதிர்ச்சியில் கவிதா பயந்தாள்.

    கவிதா ஊருக்கு அழைக்கும் போதே ‘என் பொண்டாட்டிய ஏதாவது குறை சொல்லிட்டே இருப்ப. அவளுக்கு மேரேஜ் என்றதே அதிர்ச்சி. அவ மாடர்ன் தான். அப்படி தான் டிரஸ் போடுவா. நீ அவளை காயப்படுத்துவ அக்கா. இரண்டு மூன்று மாசம் போக விட்டு வர்றேன்’ என்றவனை பிடித்து ‘அதெல்லாம் பேசமாட்டேன். உடனே விருந்து வைக்கலைனா நல்லாயிருக்காது டா’ என்று பேசி அவளை எதுவும் சொல்லமாட்டேன்’ என்று கவிதா கூற வந்தவனாயிற்றே.

       “மாமா வந்துட்டியா” என்று தன்னை இரண்டு மழலை செல்வங்கள் அணைக்க அதனை கூட உணராது ஷிவாலியை நோக்கினான்.

       கைகளை தண்ணிரில் மூழ்கி கை அலம்பி “பெரிம்மா… இந்தாங்க.” என்று கொடுத்தாள்.
  
     “ராசாத்தி நல்லா மைய அரைச்சிருக்க டி” என்று சமைக்க ஆரம்பித்தார் வனஜா குமாரின் அம்மா.

     ரிஷிக்கு குமார் அம்மாவை பெரிம்மா என்கின்றாளே என்ற ஆனந்தம் ஒரு பக்கம், பாவம் ஷிவ் அம்மியில் அரைப்பட்டு மிருதுவான கைகள் என்ன நிலையில் இருக்கின்றதோ? என்ற கவலை மறுபுறம்.

      ” வருண் வாசுவோ டிரஸ் மாத்திட்டு வாங்கடா” என்று அனுப்பினான். மாமா அத்தை வாங்கி வந்த விளையாட்டு பேட்டினை எடுத்து கொண்டு ஓடினார்கள்.

     சோபாவருகே ஷிவாலியை அமர கூற, “ரிஷி புருஷன் முன்ன பொண்டாட்டி உட்கார கூடாதாம். நீ உட்காரு நான் மேனேஜ் பண்ணிக்கறேன்” என்றவளை அதிசயமாக கண்டான்.

     குமாரோ பைக் நிறுத்திவிட்டு, “ஏய் கவிதா… இந்தாடி இரத்த பொரியல் வைக்க கேட்டியே. சொல்லி வச்சி வாங்கினது. இதையும் செய்” என்று குமார் அதட்டு போடவும் கவிதா வாங்கி செல்ல ஷிவாலி பாவமாய் பார்த்தாள். ஆனால் கவிதா கணவனின் இந்த வேலை ஏவுவயிலும் அந்த நொடி அன்பை கண்டாள். மனைவியின் தம்பிக்கு வாங்கி வந்து தருகின்றான் என்ற உண்மை புரிந்தது. பெண்ணை வேலை ஏவுகின்றானே என்ற எண்ணம் தோன்றாதது அதிசயமே.

      மதியம் விருந்துணவை பரிமாறும் பொழுது ரிஷியோடு ஷிவாலி அமர்ந்தாள்.

      அப்பொழுது கூட இத்தனை வெரைட்டியா… அதுவும் இவங்களே செய்ததா என்று மலைப்பாய் இருந்தது.

   அதுவும் ரிஷி சப்புக் கொட்டி சாப்பிட, அவன் உண்ணும் அழகை ரசித்தாள். மனதிலோ இப்படி சாப்பிடறவனுக்கு அப்பள சாதம் போட்டுட்டோமே. என்ற எண்ணம் வந்து சென்றது.

    முட்களை பிய்க்க தெரியாது விழித்தவளுக்கு பிய்த்து கொடுக்கவும் செய்தான்.

    இரத்த பொரியல் பீட்ரூட் பொரியல் என்று பாதி திண்றுவிட்ட பிறகே தெரிய வேண்டாமென மறுத்தாள்.

     “சரிடி நான் சின்னவன் வீடு வரை போயிட்டு இதை கொடுத்துட்டு வர்றேன். ராசாத்தி இதோ வந்துடறேன்.” என்று மருமகளிடமும் ஷிவாலியிடமும் கூறி குமார் அம்மா கிளம்பினார்கள்.

    “எங்கம்மா இங்க செய்ததை தம்பிக்கும் கொடுக்கும். இல்லைனா தூக்கம் வராது அதுக்கு” என்றவர் கலர் சோடா வாங்க சென்றார்.

       “ஷிவ்” என்று தோளை தொட “ரிஷி… எங்க போன. அந்த பெரிம்மா வீட்டுக்கு வந்தாங்க டா. யாருமில்லையா… வந்ததும் வந்துட்டிங்களா எப்படியிருக்க? அதுயிதுனு கேட்டாங்க. நான் திருதிருனு முழிச்சேனா. அந்த நேரம் பார்த்து யாரோ வந்து யார் இந்த பொண்ணுனு கேட்டாங்க.

    அடிச்சிறுக்கி பொண்ணாம்ல பொண்ணு. மதினியாருனு உறவு முறை வச்சி பேசாம எடுபட்ட சிரிக்கி.

    அத்தை மாமா சித்தப்பா சித்தினு பெரிம்மா பெரிப்பா அண்ணி மதினி  எதுக்குல உறவுமுறை? சகட்ட மேனிக்கு பொண்ணாம்ல. நாக்கை இழுத்து வச்சி அறுஞ்சிடுவேன். மருமகளோட தம்பி பொண்டாட்டி உனக்கு மதினி.” என்று கூறினார்.

    “அய்ய ஏன் ஆச்சி என்ன முறைனு தெரிந்தா தானே முறை வச்சி கூப்பிட. அலுத்துக்குற மதினி பயப்படுது பாரு.” என்று வந்த பெண் சொன்னாள்.
   
  அதுக்கு அந்த பெரிம்மா… “கண்ணு நான் தான் பெரிம்மா உன் அண்ணியோட மாமியாரு. உனக்கு பெரிம்மா தான் பயப்படாதே.”னு ஒரு என்ட்ரி.

    குமாரு எங்க போனான்.” கேட்டாங்க. அண்ணா… அண்ணா எங்கயோ போனார்னு சொன்னேன்.

    சரியாத்தா இங்க வானு கூட்டிட்டு போய் உட்கார வச்சி ஒரு அடை கொடுத்தாங்க. சாப்பிட சொன்னாங்க.

    அதோட மிளகாய் இவ்ளோ நேரம் ஊறுதோ. இன்னும் வந்து அரைச்சி எப்ப சமைக்கனு இப்படி ஆட்டு நான் குழம்பு வைக்கிறேன்னு கேட்டாங்க.

    ஓல்ட் லேடி ஹெல்ப் கேட்கறாங்கனு வந்தேன். அவ்வ்.. கை வலிக்குது டா. இன்னும் அரைக்கணும் இன்னும் அரைக்கணும்னு அரை மணி நேரமா அதையே அரைச்சேன். இங்க பாரு… கை வலிக்கு” என்று காட்டினாள்.

     ரிஷி அவளின் கையை பிடித்து கன்னம் ஒற்றி “சாரிடி” என்று துடித்தான்.

     “ரிஷி… அவங்களை பார்த்தா டெரரா இருக்காங்க. பாவம் உங்க அக்கா.” என்றதும் சிரித்தான்.

    “ஏய்.. அக்கா அதெல்லாம் சமாளிப்பா.” என்று கையை முத்தமிட்டான்.

     வருண் வாசு வெளியே போகும் உடையணிந்து வந்தனர்.

    “மாமா அப்பா தியேட்டர்ல படம் பார்க்கலாம். அத்த வாங்க” என்று இழுக்க, படம் பார்க்கும் ஜோரில் கிளம்பினார்கள்.

     “இந்த மல்லிப்பூ வச்சிவிடறேன் ஒரு நிமிஷம்” என்று கவிதா ஷிவாலிக்கு வைத்து அழகு பார்த்தார்.

     “என் தம்பி உன்னை எம்புட்டு விரும்புது. உனக்குன்னா துடிக்குது. கொடுத்து வச்சவள் நீ. இப்ப சொல்லறேன் உங்கக்கா பாவம் கொடுத்து வைக்கலை” என்று கூறவும் ஷிவாலி இம்முறை நிஜமாகவே ரிஷி என்பவனின் அன்பில் கரைந்து நின்றாள்.

    அதன் பின் படம் பார்க்க சென்று, ஐஸ்கிரீம் பாப்கார்ன் என்று குழந்தையோடு கொட்டம் அடித்து வீட்டுக்கு வந்தார்கள்.

   தேனி பரோட்டா சிக்கன் கிரேவி என்று வீட்டிலேயே சமைத்து கொடுக்க சுவைத்தாள்.

     “ஏன்டா… இங்கயே ஒரு வாரம் இருக்கலாமே. காலையில போகணுமா?” என்று கேட்டாள் கவிதா.

    “அக்கா… கொடைக்கானல் தான் பிளானே. மாமா கூப்பிட்டு மறுக்க கூடாதேனு வந்தேன். இதுக்கு மேல முடியாது. அங்க மூன்று நாள் அதுக்கு பிறகு நாலாவது நாள் ஊருக்கு போய் வேலைக்கு போகணும்.

     இல்லைனு வை… சம்பளத்தை கட் பண்ணிடுவான். யார் கண்டா வேலை விட்டு தூக்கிடுவாங்க.” என்று சாப்பிட்டான்.

       இரவு அவர்களுக்கு என்று தங்கும் அறையில் ஒரு ஏணியிருக்க அதிலேறி வானத்தை காட்டினான்.

   கீழே இறங்கி அவளிடை பிடித்து இறக்கியவன் ஊர் பிடித்ததா என்று கேட்க, “உன்னை பிடிச்சதால எல்லாம் பிடிக்குது.” என்று கூறவும் ரிஷிக்கு நிறைவு கொடுத்தது.

     அந்த சந்தோஷத்தோடு கூடலில் கலந்தனர்.

       அடுத்த நாள் கொடைக்கானல் செல்ல தயாராகி இருந்தனர்.

   மாமா கூட நாங்களும் போறோம் என்ற சில்வண்டை அடக்கி பள்ளிக்கூடம் விரட்டினர் கவிதா.

     காலையில் சாப்பிட்டு விட்டு புறப்பட்டனர்.

     “முடிஞ்சா திரும்பறப்ப இங்க வந்துட்டு போ.” என்று குமாரின் அன்னை வனஜாவிடம் ஆசிர்வாதம் வாங்கி கிளம்பினார்கள்.

   சரிகாவை போல கவிதாவும் பட்டு புடவை  வளையல் குங்குமசிமிழ் என்று நீட்டவும் வாங்கி கொண்டாள்.

       “அடுத்த முறை ஜாக்கேட் தச்சி சேலை போட்டு காட்டு” என்று தம்பி மனைவிக்கு வீட்டு தோட்டத்தில் மலர்ந்த பூவை சூடி நெட்டி முறித்தாள்.

     “தேங்க்ஸ் அண்ணி. பை” என்று கிளம்பினாள்.

     ரிஷியோடு மீண்டும் பயணம் ஆனால் இந்த முறை சொகுசு பயணமல்ல தெரிந்தவரின் காரில் சென்றனர்.

   குமார் கொண்டு சென்று விட்டுவிட்டு வர பேசி அழைத்தான்.

    காரில் டிரைவர் முன் நல்லப்பிள்ளையாய் கைகட்டி இருந்தான்.

     ஷிவாலி மட்டும் புது இடம் என்றும் ரிஷியின் சேட்டையிலும் அசதி கொண்டவள் அவனின் தோளிலேயே உறங்கினாள்.
 
     இரண்டு மணி நேரப்பயணமாக செல்ல அவள் எழுந்து கண்ணை கசக்கும் நேரம் எங்கும் பச்சை பசேலென்ற மரம் செடி காட்சியளித்தது.

      மரம் செடி கொடிகள் ஊட்டியிலும் இவ்வாறு பார்த்ததால் பெரிதாய் வியப்பு இல்லை. ஆனால் இயற்கையை ரசிக்க ஆரம்பித்து எழுந்து அமர்ந்தாள்.

    அவர்கள் புக் செய்த அறை வரவும் கார்டை கொடுத்து பணம் செலுத்தி அறைக்குள் அடைந்தனர்.

      ரிஷியோ ஷிவாலியை பார்க்க அவனோ அவளை பார்க்க, “பசிக்குதா ஷிவ்?” என்று அவனும் “பசிக்குது ரிஷி” என்று அவளும் கூற  நேராக கீழே இருந்த ஹோட்டலிலேயே சாப்பிட வந்தனர்.

   ரிஷியோ “எங்க அக்கா ஹர்ட் பண்ணலையே.?” என்றான்.

    “இல்லை.” என்று ஷிவாலி சிரிக்க, ரிஷியும் நிம்மதியடைந்தான்.

      “என்ன சொல்லி வச்சியா? என் ஓய்பை கேள்வி கேட்டு குடையாதேனு?” என்று கேட்டாள்.

     “ம்ம்… அதுவும் தான்.” என்றவன் சாப்பிட்டனர்.

     சாப்பிட்டு சாப்பிட்டு உறங்கினால் எப்படியிருக்கும். அப்படி தான் இருந்தனர்கள்.

வெளியே பெயருக்கும் இயற்கையை ரசிக்க ரிஷிக்கு உடன்பாடில்லை. அவனுமே இங்கு இரண்டு மூன்று முறை வந்ததால் ஷிவ்வை தவிர சுற்றி பார்க்க எதுவும் தேவைப்படவில்லை.

    மூன்று நாட்களும் இனிமைகளும் இளமைகளும் பரிமாறி கொண்டனர்.

    கடைசி நாள் நாலாவது நாள் அன்று மட்டும் சுற்றி பார்த்து புகைப்படம் எடுத்து, ஹாட் சாக்லேட் வளையல், மரச்சாமான் கொண்ட வளையல் பெட்டி உடைகள், பழங்கள் அந்த ஊர் பூக்கள் என்று தைலம் முதல் அவ்வூரின் விளைச்சல் கொண்டது அனைத்தும் பேக் செய்து முடித்தனர்.

     கடைசியாய் அந்த அறையில் கிளம்பும் நேரம் இரவு பஸ்ஸிற்கு கூறிவிட்டனர்.

     “ரிஷி… நாம இங்கயே இருக்கலாமா?” என்று புலம்பினாள்.

    “உங்கப்பா ராமமூர்த்தியை இங்க இரண்டு வீடு வாங்கி போட சொல்லு. ஒன்னுல நாமளும், இன்னொன்னுல வாடகைக்கும் விட்டு இங்கயே இருக்கலாம்.” என்றதும் ஷிவாலி முறைத்தவள் சட்டென சிரித்து விட்டாள்.

       “என்ன பார்க்குற.. என்ன இருந்தாலும் நம்ம ஊரு நம்ம வீடு போய் சேரணும். அம்மா கையால ரசம் சோறை செய்ய சொல்லி முதல்ல சாப்பிடணும்” என்று கூறி பெட்டியில் தங்களின் உடைமையை எடுத்து வைத்தான்.

    “ரிஷி ரசம் சோறு தானே. நானே செய்து தர்றேன் டா.” என்று ஷிவாலி கூற ரிஷியோ ‘நீயா.. ம்.. சரிதான்’ என்று மனதில் புலம்பினான்.

    “ரியலி டா… அந்த பெரிம்மா சொல்லிக் கொடுத்தாங்க. நீ போன அந்த இன்பிட்வின் கேப்ல ஒரு குழம்புல சின்ன சின்ன வெஜிடேபிள் மாறினா வேற குழம்பா மாறுறதை கத்து கொடுத்தாங்க தெரியுமா.” என்று கூறினாள்.
  
     “அப்பள சாதத்துக்கு பதிலா மிளகு சாதம் செய்ய போறியா” என்று கலாய்த்து பெட்டியை எடுத்து தயார் நிலையில் வைத்தான்.

      “கிண்டல் பண்ணாதே. சரி இங்கயிருந்து நேரா நம்ம வீட்டுக்கா போறோம்.” என்றதும் ரிஷி அந்த சொல்லில் மகிழ்ந்து “ஆமா நம்ம வீட்டுக்கு தான் போறோம்” என கூறினான்.

     இருவரின் எண்ணங்கள் ஒரு கோட்டில் பயணித்து விட்டதாய் ரிஷி எண்ணியிருக்க விதியோ என் பயணத்தையும் உன்னோடு கைகோர்த்து விடுகின்றேன் என்று வந்து நிற்க தயாராய் இருந்தது.

-தொடரும்
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2k பொண்ணு-33”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!