ரிஷிவா-39
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
ஹரிஷ் தன் மனைவிக்காக நண்பனின் காரை வாங்கி வந்தான். அதில் முன்னே மனைவி சரிகாவை ஏற்றிக்கொண்டான்.
பின்னால் இரண்டு இரண்டு இருக்கை வசதி கொண்ட பெரிய கார் என்பதால் கண்ணபிரான் சரண்யாவை குமாரை முதல் இருக்கையிலும் பின்னால் கவிதா மடியில் வருண், கொஞ்சம் இடித்து வாசு மற்றும் ரிஷி-ஷிவாலியை ஏற்றிக்க அளவாய் இருந்தது.
காரில் ஏறிய இரண்டு விநாடியில் “தண்ணி எடுத்து வச்சிங்களா? எங்ஸ்ட்ரா டிரஸ் ரெடியா என்றதும் கவிதா இருங்க தலையை துவட்ட டவல் எடுத்துட்டு வந்துடறேன்’ என்று இறங்கி சென்றாள்.
புது டவல் எங்கு உள்ளதென்ற தேடுதலில் நேரம் போகவும், ஷிவாலி ரிஷியின் கையை சுரண்டினாள்.
“ஒரு மாதிரி அடைச்ச மாதிரி இருக்கு. மூச்சு முட்டுது வாந்தி வந்திடுமோனு இருக்கு டா” என்று காதை கடித்தாள்.
“இரண்டு நாளா உனக்கு ஏதோ புட் ஒத்துக்கலை ஷிவ். அதே நினைவோட இருக்க, அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.” என்று கூறினான்.
“ரிஷி…. நிஜமாவே ஒரு மாதிரி இருக்கு டா. நான் ப்ளே பண்ணலை.” என்று கூறவும் ரிஷி நம்பாத பார்வை பதித்தான்.
ஆனால் உடல் மொழி உண்மை கூறிவிடும் அல்லவா. ஷிவாலியின் கண்கள் சோர்வாய் இருக்க, இறங்க கூறினான்.
வெளியே இறங்கியதும் சற்று தெளிவுப்பிறக்க, கவிதா வந்தாச்சு ஏறு டா” என்று சரண்யா கூறவும், ரிஷிவேந்தனோ, “நாங்க பைக்ல வந்துடட்டுமா?” என்று கேட்டான்.
சரிகா முகம் வாடியது. கவிதாவோ முகம் திருப்பி கொண்டாள்.
சரண்யாவோ முறைத்து என்ன என்று விழியில் கேட்டு தொலைக்க, ஷிவாலியால் என்று கூறவும் தயங்கினான்.
அந்த நிலையில் கண்ணபிரானோ, “வேந்தா அப்படின்னா பைக்கில வந்துடு” என்று கூறிட, பெரியவர் என்றதாலும் குமாரும் ஹரிஷூம் எதையும் கூறாது வேடிக்கை பார்த்தனர்.
மாமா அப்ப நானும் பைக்கில வர்றேன். மாமா நானும் என்று வருண் வாசு திட்டமிட, “சும்மா இருக்கியா இங்கயே உட்காரு. அவங்களே தனியா போகட்டும்” என்றதும் ஷிவாலிக்கு முதல் முறை கவலை ஆழ்த்தியது.
சற்று பொறுத்து கொண்டு பயணித்து இருக்கலாமோ என்ற கலக்கம்.
“வேந்தா வருணை மட்டும் அழைச்சிட்டு கிளம்பு” என்று கூறிவிட்டு “மாப்பிள்ளை வண்டியை எடுங்க” என்று ஆணையிட்டார்.
ரிஷி ஷிவாலி முன்னே வருண் அமர்ந்து கொண்டு பைக்கில் காற்றோட்டமாய் வந்தார்கள்.
வருணின் காதில் பாடல் ஒலிக்க விட்டு ஹெட்போனில் கேட்டபடி வண்டியை செலுத்தினான்.
“மச் பெட்டர் ரிஷி” என்று அவனின் இடையை வளைத்து அணைத்து கொண்டாள்.
“இட்ஸ் நாட் பேர் ஷிவி. எல்லாரும் ஒன்னா போறதுக்கு தான் பிளான். இப்படி தனியா வர வச்சிட்ட.
நீ சொன்னியே… என் மேல நீ அடிக்ட் ஆகிட்டனு. அது பொய். நான் தான் உன் மேல அடிக்ட் ஆகிட்டேன்” என்று வருண் காதில் ஹெட்செட் பாடல் வைத்தமையால் தைரியமாய் ரிஷி பேசினான்.
“ரிஷி… அப்படி சொல்லாத. ட்ரூலி நான் ப்ளே பண்ணலை. அந்த கார்ல ஏர் ப்ரஸ்னர் ஸ்மெல் எனக்கு குமட்டுச்சு.” என்றாள்.
ரிஷி பதில் வினை காட்டாமல் வண்டியை செலுத்த, ஷிவாலியோ மெதுவாய் அவன் முதுகில் சாய்ந்து கொண்டாள். அதற்கெல்லாம் கோபம் காட்டாமல் அமைதியாய் ஏற்றான்.
பத்து நிமிடம் செல்ல தன் முதுகில் வெட்ப நீர் ஈரம் உணர, “அழுவறியா டி” என்றான்.
“இல்லை” என்றாள் குரல் கமறலோடு.
“அங்க உங்க அப்பா அம்மா தாத்தா பாட்டி சந்தியா ஹரிகரன் வர்றாங்க. அது தெரியுமா இல்லையா. அங்க வந்து நீ அழுது என்னை கெட்டவனா ஆக்காதே.” என்றான்.
இடையில் பெட்ரோல் போட ஒரு இடத்தில் நிறுத்தவும் பாப்கார்ன் வாங்கி தர வருண் கேட்டதும் இரண்டாய் வாங்கி வந்து அவளிடமும் நீட்டினான்.
“தேங்க்யூ” என்று வாங்கவும், ரிஷி பொறுமையாய் மீண்டும் பயணத்தை தொடர்ந்தான்.
நீண்ட தூரம் கை வலிக்கவும் அடிக்கடி ஒரு கையை பிடித்து ஓட்டி ரிலாக்ஸ் செய்யவும் வருணோ “மாமா இரண்டு கையை விட்டு ஓட்டு” என்று உசுப்பேத்தினான்.
“வருண் கண்ணா… தனியானா கிரவுண்ட்னா ஓகே டா. இந்த இடத்துல டிராபிக் அதிகமா இருக்கும். நிறைய வண்டி சல்சல்னு போகும். அதனால மெதுவா சர்க்கஸ் காட்டாம ஓட்டணும். மாமா கை வலிக்குனு ரிலாக்ஸ் பண்ணினேன்” என்று வகுப்பெடுத்தான்.
ஷிவாலியோ “சாரி டா.” என்று கூற, அவனோ கோபத்தில் வார்த்தை விட்டு விடுவோமோ என்று அமைதி காத்தான்.
காரை விட பைக்கில் தீம்பார்கிற்கு விரைவில் வந்ததும் டிக்கெட் எடுக்க தலையை கணக்கிட்டான்.
நம்ம வீட்ல 8 பெரியவங்க, 2 அரை டிக்கெட், உங்க வீட்ல 6 பெரிய டிக்கெட் என்று கணக்கெடுத்து, 14 ஃபுல் டிக்கெட் இரண்டு அரை டிக்கெட் என்று எடுத்தான்.
அதன் பின் ஹரிஷ் வரவும் ஹரிகரன் வரவும் கையில் டேக் போட்டுவிட்டு நுழைந்தனர்.
உள்ளே நுழைந்ததும் முதலில் எல்லாரும் சேர்ந்து போட்டோ எடுப்போம் என்று எடுத்தார்கள்.
செல்பி எடுக்கின்ற பேர்வழி என்று ஆளாளுக்கு சரியாய் எடுக்காமல் இருக்க, ஷிவாலி நான் எடுக்கறேன் என்று அழகாய் எடுத்து முடித்தாள்.
குடும்பத்தோடு எடுத்து முடிக்கவும், மனோகரி பாட்டி இனிப்பை எடுத்து கொடுக்க கூற, சரிகாவுக்கு இனிப்பு வகைகள் கை மாறியது. கூடவே சந்தியா உண்டாகியிருப்பதாக கூறவும் மகிழ்ந்தனர்.
ஷிவாலி கூட அனைத்து வாழ்த்து கூறவும் சந்தியா முறுவலித்து சந்தோஷம் கொண்டாள்.
ஹரிகரனிடம் சின்ன சின்ன மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டு வலம் வந்தாள்.
கவிதாவோ “நம்ம ரிஷிக்கு எப்ப கொடுத்து வைக்க போகுதோ. ஒரே நேரத்துல கல்யாணம்.” என்று பெருமூச்சை விடுத்து குமாரிடம் புலம்பினாள்.
ஹரிகரனோ மனைவியோடு இருந்துக் கொள்வதாக கூறி சந்தியாவிடம் இருக்க ரெயிடில் ஏற குமார் கவிதா வருண் வாசு ரிஷி ஷிவாலி ஹரிஷ் என்று கிளம்பினார்கள். பெரியவர்கள் மட்டும் வட்டமிட்டு கதைகள் அலசி பேசினார்கள்.
ராமமூர்த்தி கண்ணபிரான் மற்றும் வேதாச்சலம் மூவரும் தங்கள் வாழ்வின் சிறுவயது அனுபவத்தினை பகிர்ந்தவண்ணம் கொண்டு வந்த சிற்றுண்டி உணவை சுவைத்தனர்.
ஹரிகரனோ சந்தியாவின் கைப்பற்றி தனியாக அமர்ந்து “இதே மாதிரி இரண்டு மூன்று முறை நாம அவுட்டிங் வந்திருக்கும் சந்தியா. அப்ப நமக்குள் சண்டை வந்த நாட்களும் உண்டு.
அப்ப எல்லாம் திரும்பி போறப்ப என்னிடம் சமாதானமாகிடுவ. இப்ப மட்டும் என்ன சந்தியா. நீ என்னிடம் பேசி நாலு நாள் ஆகுது.
எங்கப்பா திருடினார் அதுக்கு நான் என்ன பண்ணினேன் சாரி கேட்டுட்டேன்.” என்றதும் சந்தியாவோ “என் கோபம் இப்ப வந்ததில்லை ஹரி. ரொம்ப நாளா இருக்கு. முதல்ல என்னை பொண்ணு பார்க்க வரவிட்டு வேடிக்கை பார்த்த. ரிஷியா வந்து பேசியதும் தலையாட்டின. அடுத்து ஊர்ல உங்க அப்பா அம்மா என்ன பேசினாலும் கண்டுக்கலை. என்னை பொருட்டாவே மதிக்கலை. அப்பவே சங்கடமா இருந்தது.
நகை போனதை விட நீ என்னை சில இடத்துல தவிக்க விட்ட பாரு அது தான் ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு.” என்று அழுதாள்.
“ப்ளிஸ் இங்க அழாதே. உங்கப்பா இருக்கார். ஏற்கனவே அவருக்கு என்னை பிடிக்காது. நீ வாயும் வயிறுமா இருக்க அழவச்சேனு என்னை கூடுதலா மதிக்க மாட்டார்.
அத்தை ஏதோ பெருந்தன்மையா நடந்துக்கிட்டாலும் எனக்கு அதுவே பெரிய தண்டனை தெரியுமா.” என்று சோகமானான்.
சரிகா சரண்யா மற்றும் மனோகரி ராஜலட்சுமி நால்வரும் பேசி பழக, மனோகரியோ “சின்னவளுக்கும் ஒரு புள்ள பூச்சி பார்த்துட்டா நிறைவா கண்ணை மூடலாம்னு அவர் சொல்லிட்டு இருக்கார். செல்ல பேத்தியாச்சே. அவளோட குழந்தையை ரொம்ப எதிர்பார்க்கறார். எங்களுக்கு வயசு இருக்குமோ என்னவோ. காலகாலத்துக்கு நடந்தா கண்முன்ன பார்த்துட்டு போவோம்” என்று பேசவும் “அதெல்லாம் ஷிவா உண்டானதை கண்குளிர பார்ப்பிங்க அம்மா” என்றதும் மனோகரி பேத்தியை தான் பார்வையிட்டார்.
ஒருவித சோகை கண்டவள் போல உம்மென்று இருப்பது கண்ணில்பட்டது.
ரிஷியும் வருணை மடியில் வைத்து ராட்டினத்தில் சுற்றவும் ஷிவாலி அமைதியாய் இருப்பது மனதிற்கு வருத்தம் அளிக்கவும் என்ன ஏதென கலக்கம் கொண்டார்.
இதே மற்ற நேரமாக இருந்தால் பேத்தி கையை விரித்து வானத்தில் பறவைக்கு போட்டியாய் கைகளை விரித்து கூச்சலிட்டு இருப்பாளே என்ற எண்ணமே மோதியது.
பாதி ஏறி விளையாடி விட்டு வர, மதியம் சாப்பிடும் நேரம் பேத்தி அருகாமை கிட்டியது.
அதுவரை ரிஷியோடு தான் கைகோர்த்தது.
சாப்பிடும் நேரம், “டேய் இங்கயும் வந்து நூடுல்ஸ் கேட்டிங்க. மவனே தலையை திருப்பி விட்டுடுவேன்” என்றவன் சேரை எடுத்து அவள் அமர சௌகரியம் செய்து கொடுத்தான்.
ஷிவாலியோ “என்ன தானே நூடுல்ஸ் சாப்பிட கூடாதுனு இன்டேரக்டா சொல்லற?” என்றதும், “அப்படி தான் வச்சிக்கோ” என்றான்.
சிக்கன் ப்ரைடு ரைஸ் ஆர்டர் கொடுத்து சாப்பிட்டு முடிக்க சந்தியா பக்கம் ஹரிகரனே பே செய்து முடிக்க ராமமூர்த்திக்கு மெலிதாய் பெரிய மாப்பிள்ளை மீதும் பற்று வந்தது.
முன்பு பொறுப்பை தட்டி கழிக்கும் குணம் கண்டவர் இன்று செய்வதை கண்டு அகமகிழ்ந்தார்.
மீண்டும் ராட்டினம் சுற்ற, ஷிவாலி வாயை பொத்தி கொண்டு ரிஷியின் சட்டையை பிடித்து இழுத்தாள்.
அவனோ படகு ராட்டினத்தினை கண்டு பயப்படுகின்றாளோ என்று அணைத்து கொள்ள, குமட்டிக்கொண்டு நிறுத்த கூற, ரிஷி அதன் பின்னே அவள் வாந்தி வருவதை அறிந்து நிறுத்த கூறினான்.
சட்டென கூறினால் அது நிற்குமா எந்திரமாயிற்றே. அதற்குள் ஷிவாலி ரிஷியின் சட்டை முழுதும் வாந்தி எடுத்து முடிக்க, நிறுத்தம் பெற்றதும் முதல் வேலையாக தனியாக அழைத்து வந்து “இன்னும் வாமிட் வருதா?” என்று கேட்டு முடிக்க அவள் இதுவரை அவன் அணைப்பில் தள்ளாடி நடந்து வந்தவள் மயங்கி சரிய அவளை மீண்டும் தோளில் பிடித்து நிறுத்தினான்.
அதற்குள் கவிதா வந்து, “என்னடா ஆச்சு.” என்று குழுமவும் “தெரியலை அக்கா” என்றவன் அன்னையை தேடினான்.
அதற்குள் குமார் நீரை கொண்டு வந்து நீட்ட முகத்தில் தெளித்து நீரை புகட்டினான்.
தன்னுடையில் வாந்தி இருக்க கைக்குட்டையை எடுத்து அவளின் சொப்பு வாயை துடைத்து விட்டான்.
ரிஷி முதல்ல டிரஸை மாத்து” என்று கூறவும் குளித்து விட்டு போட எடுத்து வந்த உடையை எடுத்து தனது போட்டிருந்த சட்டையை மாட்டி தன் மேனியை துடைத்து விட்டு போட்டான்.
அதற்குள் சரண்யா மனோகரி அருகே கவிதா அழைத்து வந்து விட்டு வாந்தி எடுத்துவிட்டதை கூறவும் மனோ என்று மடியில் சாய்ந்தாள்.
மற்றவர்கள் மீண்டும் கொண்டாட்டத்தில் மூழ்க, ரிஷி அன்று போலவே லெமன்வித் சுகர் ஜூஸ் எடுத்து வந்தான்.
“என்னனு தெரியலை மா. இரண்டு மூன்று நாளாவே எதுவும் ஒத்துக்கலை. வாமிட் எடுக்கறா. மயங்கிட்டா. நானே ஹாஸ்பிடலுக்கு அழைச்சிட்டு என்னனு டெஸ்ட் எடுக்க நினைச்சேன். இன்னிக்கு இங்க போகணும்னு சொன்னதும் விட்டுட்டேன். காலையில கூட கார் ஏர்ஸ்பிரே ஸ்மெல் ஒத்துக்கலைனு சொன்னா.” என்று குறைப்பட்டான்.
சரண்யாவோ மகிழ்ச்சியாய் ரிஷியை பார்த்துவிட்டு ஷிவாலியை நோக்கி கேட்க தயங்கினார்.
மனோகரியோ சரண்யாவை அர்த்தம் பொதிந்து பார்க்க, “எப்படிம்மா கேட்க” என்று கையை பிசைந்தார்.
ரிஷி அதன் பின் அவளை விட்டு நகராமல் அமர்ந்து கொண்டான். வருண் வாசு அழைக்க, “மாமா டயர்டு டா.” என்று பொய்யுரைத்தான்.
ஆளாளுக்கு கேட்க தயங்கி ஏமாற்றம் அடைய பிடிக்காமல் இருந்தனர்.
மனோகரி மடியில் படுத்துறங்க கண்ணபிரான் வேதாச்சலம் ராமமூர்த்தி வந்து என்ன ஏதென கேட்க கூறவும் தூங்கட்டும்’ என்று மட்டும் சொல்ல, ராஜலட்சுமியோ அவரின் அத்தை மனோகரியை பார்த்து நின்றார்.
“ஏன் பாட்டி வாந்தி மயக்கம் எதனால வரும்.” என்று கேட்டு வைத்தாள்.
“சாப்பிட்டது ஒத்துக்காது டா… நீ தான் சொன்னியே பீட்சா சாப்பிட்டனு அது செட்டாகலை போல. இப்ப சாப்பிட்ட ப்ரைடு ரைஸும் சேரலை போல” என்றதும் கூறினார்.
“பாட்டி எனக்கு அறுபத்தி இரண்டு நாள் கிட்ட ஆச்சு ப்ரீயட்ஸ் வரலை. அது ஏன்” என்று கேட்டாள்.
“சந்தியா மாதிரி ஏதாவது நல்ல செய்தி வச்சியிருக்கியா” என்று ராஜலட்சுமி கேட்டு வைத்தார்.
“முந்தாநேத்து டாக்டரிடம் ரிஷி கூட்டிட்டு போனோர் ஆனா நெகட்டிவ்னு வந்துச்சே” என்று கூறவும், மனோகரியோ “எதுக்கோ சாயந்திரம் ஒரு செக்கப் போயிடலாம். இப்ப ரெஸ்ட் எடு. என்ன ஏதென மத்தவங்களை கலவரப்படுத்த வேண்டாம். இப்பவே நீங்க வரலை என்றதும் பசங்க டல்லாயிட்டாங்க தம்பி போய் விளையாடுங்க.” என்றதும் விளையாட செல்ல மனமின்றி ஷிவாலியை நோக்கினான்.
“வாட்டர்ல விளையாடறப்ப நான் வர்றேன். அதுவரை தூங்கிக்கறேன்” என்று பாட்டியின் மடியை இறுக பிடித்தாள். ரிஷியோ ஹாஸ்பிடல் லைனிற்கு போன் போட்டு காத்திருந்தான். ரிட்டர்ன் போகும் போது அவளை காட்டி விட்டு செல்வதற்கு.
-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Motherland ellenu sonnanga. Eppo yennavo
Which also pregnant.very happy. Super super narration sis.
shiv una ippadi paka nalla illaye negative vanthuduchi aana yen unaku udambu mudila?