Skip to content
Home » 90’s பையன் 2k பொண்ணு-5

90’s பையன் 2k பொண்ணு-5

ரி-ஷி-வா-5

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

      அடுக்கியிருந்த புத்தகங்களை தட்டி விட்டு, முதல்ல அப்பாவை தாத்தாவை வரச்சொல்லுங்க” என்று அழுத்தமாக கத்தினாள்.

    “அவங்க என்ன அங்கயேவா இருக்க போறாங்க வருவாங்க. இங்க பாருடா ஷிவா குட்டி. அக்காவை கட்டி கொடுத்தா உனக்கு மாப்பிள்ளை அமையறது கஷ்டம் டி…  இப்ப பார்த்த பையன் அதெல்லாம் யோசிக்க மாட்டானு தோணுது. அதுவும் இல்லாம நீ மறுத்தா உன் அக்கா கல்யாணம் இன்னமும் தள்ளி போகும். உனக்கு இந்த அஸ்ட்ராலஜி தெரியும் தானே. ரொம்ப பிடிக்குமே… தினமும் நீ கூட காலெண்டரில் டேட் கிழிக்கறப்ப உன் ராசிக்கு என்ன பலன்னு பார்ப்பியே. அதுல என்ன போட்டிருக்கு தெரியுமா?

    இந்த வீட்ல இரண்டு திருமண யோகம் இருக்காம். அப்படி இரண்டு திருமணம் நடக்கலைனா வீட்டுல இருக்கற பெரிய உசுருல ஒரு உசிரு டிக்கேட் வாங்கிடுமாம்.” என்றதும் ஷிவாலி மனோகரியை நம்பாத பார்வை பார்த்தார்.

    “மனோ.. எனக்கு ராசி கல்லு, ராசி பலன் இதெல்லாம் பிடிக்கும்னு என்னை மடக்கறியா..?” என்று சாய்வு நாற்காலியில் அமர்ந்து குறுகுறுவென பார்த்தாள்.

    “இரண்டாவது திருமணம் தான் நடக்கணும்னா…. எங்கப்பாவுக்கு நல்ல மனைவியா, உனக்கு இன்னொரு நல்ல மருமகளா பாரு. நானே ரெஜிஸ்டர் மேரேஜுக்கு கையெழுத்து போடறேன்.

    ஆண் வாரிசு வேண்டும்னு இன்னொரு மேரேஜ் பண்ணறதா இருக்கட்டும்” என்று ஷிவாலி பேசினாள்.

“அடிச்செருப்பாலா… உனக்கு கல்யாணத்தை கட்டி வைக்க போராடினா… எனக்கு சக்காளத்தி செட் பண்ணறியோ. எங்க அந்த விளக்குமாறு” என்று கதவுக்கு பின்னால் ராஜலட்சுமி தேடவும் ஷிவாலி அருகேயிருந்த அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.

     “அத்த… இவளென்ன கேட்கறது. அந்த தம்பியை இவளுக்கு கட்டி வையுங்க. சந்தியா தான் யாரையோ காதலிச்சிட்டா. இவளை எல்லாம் யாரு காதலிச்சிருக்க மாட்டாங்க. பேயை காதலிக்க எவனும் விரும்ப மாட்டான்.” என்று ராஜி கூறிட, “ஏன் யாரையாவது காதலிச்சிருந்தா என்ன பண்ணிருப்ப” என்று கதவுக்கு அந்த பக்கமிருந்து கத்தவும் “ஏன்டி… கதவு உடைச்சாவது  வந்து விளக்காமாறு பின்னி எடுப்பேன்” என்று பேசி முடித்தார்.

     அதற்குள் வேதாச்சலம் மற்றும் ராமமூர்த்தி வந்ததும் மனோகரி “என்னங்க ஆச்சு?” என்று கேட்டு அருகே வர, “அவங்க நம்ம ஷிவாலியோட சம்மதம் கேட்கறாங்க. ஒருத்தி காலவாறியது போல இன்னொருத்தி செய்ய கூடாது பாரு”  என்றதும் ஷிவாலி கதவை திறந்து வந்தாள்.

     “அந்தளவு டவுட் என்றால் அவனை அப்படியே போக சொல்லுங்க.” என்று ஷிவாலி ஆவேசமாய் வந்தாள்.

     “ஷிவா குட்டிம்மா… பையன் நல்லவனா இருக்கான். நாங்களா தான் போனோம் பேசினோம். இப்பவும் சம்மதம் கேட்டுயிருக்கார். எங்களுக்கு என்னவோ அந்த பையனை மிஸ் பண்ண வேண்டாம்னு தோணுது டா.” என்று வேதாச்சலம் கூறினார்.

     “தாத்தா… மிஸ் பண்ண வேண்டாம்னா பிரெண்டா ட்ரீட் பண்ணுங்க. எதுக்கு பொண்ணு கொடுக்கணும்? அதுவும் நான் தான் ஊறுகாயா?” என்று கடுகடுத்தாள்.

    “அதான் சொன்னேனே இரண்டு உயிர்ல ஒன்று போயிடுமாம். உனக்கு ஆசையினா விடு. நாங்க இரண்டு பேர்ல யாராவது டிக்கேட் வாங்கிக்கறோம்” என்று கூற, “ஏன் சேர்ந்தே டிக்கேட் வாங்குங்க” என்று ஷிவாலினி அறை கதவை அடைத்து கொண்டு படுத்தாள்.

    ‘யார்கிட்ட காம்பர்மைன்ஸ் பண்ணறாங்க. நான் எல்லாம் 2k கிட்ஸ் செண்டிமெண்ட் லாக் பண்ண முடியாது’ என்று பாட்டு போட்டு கேட்க  ஆரம்பித்தாள்.

      மதியம் மூன்று மணியளவில் அறைக்குள் இருந்தால், நொறுக்கு தீனியான லிட்டில் ஹார்ட், டார்க் பேண்டஸி என்று தின்று விட்டு ஒப்பேத்திவிட்டு இனி கொறிக்கும் உணவு செல்லாது என்று மதிய உணவை சாப்பிட வெளியே எட்டி பார்த்தாள்.
  
    கல்யாணம் அதுயிது என்று ஆரம்பித்தால் தட்டோடு அறைக்கு வந்து விடும் நோக்கில் தட்டில் சாப்பாட்டை எடுத்து வைத்து தண்ணீர் பாட்டிலை எடுத்து வைத்து சாப்பிட்டாள்.

     ஆனால் அவள் எதிர்பார்த்தது போல யாருமில்லை. வீடே காலியாக இருந்தது. ஹாலிலும் பக்கத்து அறையிலும் எட்டி பார்த்துவிட்டு உணவை தட்டை டேபிளில் வைத்து விட்டு மாடிக்கு சென்று பார்த்தாள்.

   யாருமில்லை என்றதும் யோசனையோடு முதலில் சாப்பிடுவோமென சாப்பிட ஆரம்பித்தாள்.

      மாலை நான்கு மணிக்கு சந்தியா வந்தாள். அதுவும் ஹரிகரனோடு பைக்கில் அமர்ந்து.

      “என்ன அப்பா-அம்மா, தாத்தா-பாட்டி இல்லை என்றதும் தைரியமா உன் லவ்வரோட வந்து இறங்குற. ஆமா எல்லாரும் எங்க?” என்று கேட்க ஷிவாலியை இடித்து கொண்டு சந்தியா சென்றாள்.

      “கேட்கறேன்.. போயிட்டே இருக்க. சந்தியாக்கா” என்று கூப்பிட சந்தியா நின்றாள்.

      ஹாலில் ஷிவாலி சோபாவில் அமரவும், சந்தியா தண்ணீரை பருகி முடித்து, “தாத்தாவுக்கு நெஞ்சு வலி ஆஸ்பிடல்ல சேர்த்துயிருக்கு.” என்றாள் உடைந்த குரலில்.

     “என்னாலயா… நான் போனதுமா?” என்று உள்ளுக்குள் சென்ற குரலில் கேட்டாள்.

      நீ போன அரைமணி நேரம் கழித்து, உன்னை கூப்பிட கதவை தட்டினோம். நீ திறக்கலை. எதிர்க்க ஹரிகரனிடம் சொல்லவும் உடனே ஆட்டோ பிடிச்சிட்டு வர மொத்தமா கிளம்பிட்டும்.

        இப்ப தான் மெல்ட் அட்டாக்னு டாக்டர் சொன்னாங்க. இப்ப பரவாயில்லை. கண்ணு முழிச்சிட்டார் ஆனாலும் ஐசியூல தான் இருக்கார்.

     உன்னை தனியா விட்டுட்டு வந்ததை தெரிந்ததும் என்னை இவரோட பாட்டி அனுப்பிட்டாங்க” என்று கூற அதிர்ந்தாள்.

      அதன் பின் சந்தியா ஹரிகரனிடம் டீ போட்டு சூடாக கொடுத்து விட்டாள்.

     ஷிவாலியோ வேறேதும் கேட்க வில்லை. அதோடு மூன்று நாட்கள் வாயை திறக்கவில்லை. பேச்சுக்கு கூட தாத்தா எப்படியிருக்கார். பாட்டி உடைஞ்சிட்டாங்களா, என்று சாதாரணமாக கூட கேட்கவில்லை.

   இதில் என்ன இடைச்செறுகல் என்றால் ஹரிகரன் நன்றாக வீட்டின் ஆட்களோடு கலந்து விட்டான். ராமமூர்த்தியை சந்தியாவை அழைத்து செல்வதென மூத்த மருமகன் என்பதை சொல்லாமல் ஏற்றனர்.

   சற்று தளர்ந்தவாறு ஐந்து நாள் கழித்து வேதாச்சலம் கார் வைத்து வீட்டுக்கு அழைத்து வந்திருந்தனர்.

    ஷிவாலி வாசல் வரை ஓடி வந்து பேசவில்லை. முறுக்கிட்டு மீண்டும் அறைக்குள் வந்தடைந்தாள்.
   
   அரைமணி நேரம் ஆனதும் நகம் கடித்தபடி தாத்தா அறைக்குள் வந்தாள்.

    “இப்ப என்ன அவசரம் டிக்கேட் போட சொன்னா உடனே போட்டுறதா? பிறகு சந்தியா கல்யாணம் என் கல்யாணம் ஒரே நேரத்துல வச்சிட்டு எங்கப்பா முழிக்கறதா.

   பெரியவங்க நீங்க இருக்கற தைரியத்துல தான் இருக்கார்.” என்று நகத்தை துப்பியபடி கூறினாள்.

      “அதான் டிக்கேட் கேன்சல் பண்ணிட்டு வந்துட்டேனே மா. என் பேத்தி சந்தியா கல்யாணத்தை விட உன் கல்யாணம் பார்க்கணும் டா. நீ குடும்பம் நடத்துற அழகை பார்க்கணும். என்னோட அம்மா விஷாலாட்சி சாட்சாத் உன்னை மாதிரி ராங்கி கணக்கா இருப்பா. அன்பை கூட அதட்டலா.

     உனக்கு செல்லம் கொடுக்கறதே உங்கப்பன் திட்டுவான். என் அம்மாவுக்கு இல்லாத செல்லம் இங்க அவனுக்கே இல்லை.

    இப்ப சொன்னியே கல்யாணத்தை வச்சிட்டு.. இரண்டு கல்யாணம் வச்சிட்டு பொறுப்பில்லாம போக மாட்டேன் டா ஷிவா குட்டி” என்றார்.

     ஷிவாலி தாத்தாவை அணைத்து “உங்க ஓய்ப் மனோகரியை விட என்னை தானே பிடிக்கும்?” என்று கொஞ்சினாள்.

     “ஆமாடா” என்றார் வேதாச்சலம். மனோகரி “போதும் போதும். பையன் வீட்ல பதிலை சொல்லுங்க. ஒரு வாரம் ஆச்சுனு வேற பொண்ணை பார்த்துட போறாங்க.

    ஏன்டிம்மா சந்தியா.. ஹரிகரன் வீட்ல வந்து பேச சொல்லு” என்று மனோகரி தங்கள் இருக்கும் போதே பேத்திகளின் திருமணத்தை காண ஆவலாய் எடுத்துரைத்தார்.

    மாப்பிள்ளை வீடு என்றதும் ஷிவாலி மனம் மீண்டும் வேதாளம் எடுத்து வெளியேறிவிட்டது.

     மனோகரி உடனே, “அவ அமைதியா இருக்கா. இப்பவே போன் பேசி சம்மதம் சொல்லிடு. ஏன் இத்தனை நாள்னு கேட்டா உடம்பு முடியலைனு சொல்லிடுடா. ரொம்ப யோசித்தா ஹாஸ்பிடல்ல இருந்ததை சொல்லு.” என்று ராமமூர்த்திக்கு ஆலோசனை வழங்க அதன்படி அன்னை சொல் தட்டாதவராய் அவரும் போன் போட்டார்.

   ஹாலில் நாற்காலியில் அமர்ந்து மாம்பழ பீஸை எடுத்து சாப்பிட்டிருந்தாள்.

     ராமமூர்த்திக்கு என்னவோ போன் பேசும் போது கத்துவாளோ என்று பயந்து சற்று தள்ளி வந்தார். ரிங் அடித்துக் கொண்டே இருக்க, தவிப்பாய் கடந்தார்.

      “ஆஹ்… சொல்லுங்க சார்” என்று கண்ணபிரான் கேட்டதும், “முதல்ல மன்னிச்சிடுங்க. உடனே தகவல் தர முடியலை. வீட்ல அன்னைக்கே சின்ன பொண்ணிடம் கேட்டேன். உங்கஷ்டப்பானு சொல்லிட்டா. ஆனா சொல்லறதுக்கு முன்ன அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சுகவீனமா போச்சு.” என்றதும் அடுத்த நொடி கண்ணபிரான் “அச்சச்சோ இப்ப எப்படியிருக்கார்?” என்று கேட்டுவிட்டார்.

     “இப்ப பரவாயில்லை. இவ்ளோ நாளா ஹாஸ்பிடல்ல இருந்தோம். பதில் தர கூட தோணலை. அப்பா இப்ப தான் காலையில வீட்டுக்கு டிஸ்சார்ஜாகி வந்தார்.” என்று கூறினார்.

    “ஆண்டவனுக்கு நன்றி. ஏன்க பெரிய பொண்ணு விசயமா ரொம்ப யோசிச்சிட்டாரா.” என்று கேட்டார் கண்ணபிரான்.

     “இருக்கலாம்ங்க… வீட்டுக்கு வந்ததும் அப்பா போன்ல சம்மதம் சொல்லிட்டியானு கேட்டார். இல்லை என்றதும் முதல் வேளையா போன் பண்ணு அவங்க தப்பா எடுத்துக்க போறாங்கனு திட்டினார்.” என்று ராமமூர்த்தி பேச, கண்ணபிரான் சிரிக்க ஆரம்பித்தார்.
  
    “என்னங்க நாம என்ன கடை தெருவுல துணியா வாங்கறோம். பிள்ளைங்க வாழ்க்கை விஷயமாச்சே. அதனால தாமதம் ஆனாலும் தப்பில்லையே…” என்று பதவிசமாய் முடித்தார்.

     ராமமூர்த்திக்கு நிம்மதி பரவியது. “அப்ப இனி சாருனு கூப்பிடறதுக்கு பதிலா சம்மந்தினு பேசிப்போம்.” என்று கூற கண்ணபிரானோ நிச்சயமா.. நிச்சயமா.” என்று பேசினார்.

   ரிஷி வேந்தனோ யாரிடம் பேசிட்டு இருக்கார் என்பது போல பார்த்து வைத்தான்.

   “அந்த பொண்ணு கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாலாம் டா. சரண்யா… சரண்யா.. நம்ம வீட்டுக்கு கல்யாண கலை வரப்போகுது” என்று மாடியில் துணி காயப்போட சென்ற மனைவியிடம் பகிர சென்றார்.

      வேர்கடலையை மென்று கொண்டிருந்த ரிஷிவேந்தனுக்கு அன்று பார்த்த பெண்ணை மீண்டும் மனத்திரையில் ஓடவிட்டு, இமை மூடினான்.

    சுடிதார் டாப், லாங் ஸ்கர்ட் என்று போனிடெய்ல், சிறு கம்பள், கழுத்தில் செயின் அணியவில்லை. கையில் வளையல் அணியவில்லை, விரலில் மட்டும் ஏதோ மோதிரம் அணிந்திருந்தாள். பொட்டு அதுவும் நெற்றியில் இருந்ததற்கான அறிகுறியில்லை.
   ஆனால் துடைத்து வைத்த பால் முகம். உதட்டிற்கு ஏதோ சாயம் பூசியிருபபால் ஆரேஞ்சும் சிவப்பும் கலந்த வண்ணம் என்றிருந்தது. அன்று பார்த்த அவளை அணுஅணுவாய் பார்த்து முடித்தான் இன்று மூடிய இமையில்.

-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

1 thought on “90’s பையன் 2k பொண்ணு-5”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!