ரி-ஷி-வா-7
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அறைக்குள் வந்து சாஸ்ஸின் கரையை அகற்றியபடி ரிஷியை மனதிற்குள்ளே திட்டிக் கொண்டிருந்தாள்.
“என்னடி முனங்குற?” என்று சந்தியா கேட்டதற்கு முறைத்து நின்றாள்.
வீட்டில் பெரும்பாலும் ஷிவாலி வாயை திறக்காமல் அமைதியாய் இருக்கவே அப்படியே விடுத்தனர்.
சந்தியாவின் ஸெல்பை புரட்டி எடுத்து முடிக்க, “என்ன தேடற?” என்று கேட்டாள் சந்தியா.
“அவனோட ஜாதகம் எங்க?” என்று கேட்டாள்.
“எவனோட?” என்று கேட்க, ஓ.. ரிஷியோடையதா?” என்று அருகே வந்து “ஏன் உன் ஜாதடத்தோட மேட்ச் பண்ணி பார்க்க போறியா? அதெல்லாம் என்னை விட உனக்கு அதிகமா பொருந்துதாம். மனோகரி பாட்டி பார்த்துட்டு வந்தாங்க.” என்று கூற, “அய்யோ ஆண்டவா… அவன் ஆபிஸ் எது?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் தெரியாது ஷிவா? ஏன் கேட்குற?” என்று கேட்க “ம்ம் அவனை பத்தி தெரிஞ்சுக்க. அவன் தானே கண் கண்ட கணவன்” என்று இடக்காய் கூறினாள்.
“தாதுஸ்து” என்று சந்தியா கூறி ஓட்டமெடுக்க, வலது கை நகம் கடித்துக் கொண்டே பூஜையறைக்கு சென்றாள்.
அங்கே ரிஷிவேந்தனின் ஜாதகம் இருக்கவும், ‘உப்ஸ் முதல்லயே இங்க தேடியிருக்கலாம்.’ என்றவள் ஜாதகத்தின் எடுத்து பார்வையிட்டாள்.
“வாட்… சந்தியா… அவனுக்கு ஏஜ் 31 ஆஹ்.” என்று கேட்டாள்.
“ம்ம்.. 31 தான்” என்று சாதாரணமாக கூறினாள்.
“அடிப்பாவி எனக்கு 22 அவனுக்கு 31. எங்களுக்குள்ள ஒன்பது வயசு வித்தியாசம் வருது. கூலா 31 சொல்லற” என்று கொதித்தெழுந்து கேட்டாள்.
“ஏய்… எனக்கு 27 சோ அப்பா 4 வருஷ இடைவேளையில எனக்கு செட்டாவாறுனு ஜாதகம் பார்த்தார். இப்படி உனக்கு செட்டாவாறுனு யாருக்கு தெரியும்” என்று கூறினாள்.
“பன்னி மாடே… உன்னால தான் அவனை எனக்கு ராங் கனெக்ஷன் தர பார்க்கறாங்க. அவனுக்காவது அறிவு வேண்டாம்.
இந்த அப்பா அம்மா எப்படி விட்டாங்க?” என்று பொறுமினாள்.
“ஏய்.. தாத்தாவுக்கும் பாட்டிக்கும் பதினாலு வயசு வித்தியாசம். அப்பா அம்மாவுக்கு பதினென்று வயது வித்தியாசம் அதனால ஒன்பது வயசு வித்தியாசம் பெரிசா எடுத்திருக்க மாட்டாங்க.” என்றவளை கழுத்தை நெறிக்கும் விதமாக வந்தாள் ஷிவாலி.
“எல்லாம் உன்னை சொல்லணும். பொண்ணு பார்க்க வர்றதுக்கு முன்ன காதலை பாட்டி தாத்தாவிடம் சொல்ல என்னவாம். கொஞ்சம் யோசித்து இருப்பாங்க. இப்ப பாரு அவனை பிடிச்சி போய் என் தலையில கட்ட பார்க்கறாங்க விடமாட்டேன்” என்று எழுந்தவளை சந்தியா கைப்பிடித்து, “இங்க பாரு ஷிவா. ஹரிகரனை இப்ப தான் ஏற்றுக்கறாங்க. இன்னும் கூட இப்ப வந்தவங்களை மாதிரி அப்பா அம்மா தாத்தா பாட்டி ட்ரீட் பண்ணலை. ஏதோ என்னனா என்னனு பேசறாங்க. அந்த ரிஷியை பார்த்தியா. தாத்தா அவரோட கையை பிடிச்சி வாஞ்சையா பேசினார்.
நீ ஏதாவது செய்து இருக்குற பிரச்சனையை இழுக்காதே. எனக்கு பயமா இருக்கு. ஹரிகரன் வேற, ஊர்ல அவங்க அப்பா அம்மாவிடம் பேச போயிருக்கார். கல்யாணத்துக்கு ஒத்துக்க வச்சாலும் அவங்க வீட்டுக்கு வந்து ஒரு தடவை கை நனைக்கலை. நீயா ஏதாவது செய்து கெடுக்காதே.” என்று பாவமாக கெஞ்சினாள்.
ஷிவாலியோ குறுக்கும் நெடுக்கும் நடந்து இதற்கு முடிவென்ன என்று யோசித்தாள்.
நாம மறுத்தா தானே கஷ்டம் அவனா உங்க பொண்ணு வேண்டாம்னு சொன்னா… இந்த தாத்தாவுக்கு அவன் புகழாரம் சூட்டறதை நிறுத்திட்டு அவரே திட்டுவார். இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்’ என்று யோசித்தவளின் சிந்தனையை அந்த ஜாதக பேப்பரே சத்தமிட்டு அதனிடம் வரவழைத்தது.
அதனை எடுத்து பார்த்தவள் அவனின் படிப்பு வேலை சொந்த ஊர் என்று பார்த்தாள்.
அக்கா ஒன்று தங்கை ஒன்று இருவரும் திருமணமானவர் என்று இருந்தது.
அவளுக்கு தேவையானது அவனின் வேலை செய்யும் இடமாக தோன்ற, அதனை போனில் ஏற்றி அவனின் அலுவலகத்தின் இடத்தை கண்டறிந்தாள்.
அதில் அவனின் அலுவலக கட்டிடம் காட்சிக்கு வந்தது.
பரவாயில்லையே நல்ல வேலையில இருக்கான்.’ என்று உதடு சொன்னது. ஆனாலும் அவள் பணத்தையும் வேலையும் பொருட்டாக எண்ணாமல் அவனை நாளை சந்திச்சு அவனிடம் என்னை பிடிக்கலைனு சொல்ல சொல்லணும். அச்சச்சோ சாஸை டிரஸ்ல அடிச்சிட்டு போனதுக்கு திட்ட வேற போகணுமே.
திட்டிட்டா நம்மளோட ரெக்வஸ்டை ரிஜெக்ட் பண்ணிட்டா. நோ நோ… முதல்ல சமர்த்தா போய் இங்க பாருடா தம்பி நீ என்னை விட பெரியவன் அதனால இது செட்டாகாதுனு சுட்டி காட்டணும். அவனா ஓகே சொல்லிடுவான். அக்காவுக்கே பரிதாபப்பட்டவன் நான் கொடுக்கற ஆக்டிங்ல பாவம் சின்ன பொண்ணுனு அவனே மேரேஜை டிராப் பண்ணிடணும்’ என்று திட்டங்களை தீட்டியபடி அன்றைய நாளை கடந்தாள்.
வீட்டுக்கு வந்த ரிஷிக்கோ ‘சின்ன பொண்ணு தானே பாவம்னு நினைச்சோம். இல்லைடா ரிஷி இது ஓவரா பண்ணிடுச்சு. சட்னியா ஊத்துது. ஊமக்குசும்பு வேலை எல்லாம் பார்க்கும் போல. கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும். இதோட காலம் பூரா வாழ முடியுமா?’ என்று சிந்திக்க, மனசாட்சியோ ‘டேய் ரிஷி, உன் போட்டோ பார்த்த பொண்ணுங்க எனக்கு பிடிச்சிருக்கு இவனைனு சொல்லுச்சு. அந்த பொண்ணு போட்டோவும் உனக்கும் பிடிச்சது. என்ன பண்ண நேர்ல போய் பார்க்காமலேயே எத்தனை பொண்ணுங்களை ஜாதகம் என்ற அரக்கன் தட்டி விட்டான். இந்த பொண்ணையும் விட்டா காலம் பூரா நீ பேட்சுலரா இருக்க போறியா?’ என்று கேள்விகள் முன் வந்தது.
ரிஷிக்கே சற்று ஜர்க் ஆனது.
போன வருடத்துக்கு முன்ன இரண்டு வீட்டில் தன்னை காண வந்தவர்கள் சொந்த வீடு இல்லை நல்ல வேலையானு கேட்டாங்க. ரீசண்டா ஆபீஸ்ல லோன் போட்டு இப்ப வீட்டை வாங்கி ஆல்டரேஷன் பண்ணினா, வீடு இருக்கு, வேலை இருக்கு, வயசு இல்லையேனு அப்பாவிடம் சொல்லிட்டு போறாங்க.
இனியும் பாவம் பட்டேன். அவளா நானானு கல்யாணத்துக்கு பிறகு பார்த்துக்கறேன். அதுவரை அந்த ‘வாலி’யிடம் பேச்சு வார்த்தையே வச்சிக்க கூடாது என்று ஷிவாலியை பார்க்க கூட செய்வதில்லையென ரிஷி மனதில் சபதமாக எண்ண அடுத்த நாள் ஷிவாலி தன்னை காண வருவதை அறியாது நன்றாக உறங்கினான்.
கண்ணபிரான் சரண்யா ரிஷி மூவரும் சென்றதை கவிதாவிடம் கூற, ”ஏன் மா போயும் போயும் அந்த பொண்ணா. தம்பிக்கு இன்னும் அழகா பார்க்கலாம். நீங்க ஏன் போனிங்க. ஒரு வாரம் போன் பண்ணலை, தகவல் இல்லைனு புலம்பின. அப்படியே சொல்லி நழுவியிருக்கலாமே.
இதுல ஒரே மண்டபத்துல இரண்டு கல்யாணமா.. அம்மா.. ஒரே நேரத்துல இரண்டு கல்யாணம் நடந்தா ஒன்று தான் தழைக்குமாம்.” என்று கவிதா கூறி கொண்டே போக, “கவிதா.. சாப்பாட்டை அடுப்புல வச்சிருக்கேன் டி கருகுற வாடை வருது அப்பறம் பேசறேன்” என்று போனை துண்டித்தார்.
‘இவ பெரிய அழகி. அந்த பிள்ளைக்கு என்ன குறைச்சல். என் மகனுக்கு நல்லாவே பொருத்தமா இருப்பா. வயிற்றெறிச்சல் பிடிச்சதுங்க. எல்லாம் இருக்கற இடத்துல இருந்து பேசற நெகட்டிவ் வைப்ரேஷன்” என்று சரண்யா முனங்கினார்.
“ஏன் மா… சின்ன பொண்ணு சரிகாவிடம் பேசலை.” என்று கண்ணபிரான் வேண்டுமென்றே கூறினார்.
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். காலையில போக போறதா சொல்லியாச்சுல. அவளுக்கு அண்ணன் வாழ்க்கையில அக்கறை இருந்தாலோ இல்லை கதை கேட்க ஆர்வமிருந்தாலோ அவளே போன் போடட்டும்.
இந்த முறை என் பையனுக்கு கல்யாணம் பண்ணி கண்குளிர பார்க்காம விடப்போறதில்லை.” என்று சரண்யா சபதம் இயற்றினார்.
கண்ணபிரானோ, “ஒருவனுக்கு நல்லதோ கெட்டதோ இப்ப நடக்கறதை வச்சி முடிவு பண்ண முடியாது சரண்யா. அவன் பிறந்தப்பவே எழுதி அனுப்பியிருப்பார் அந்த கடவுள். இன்னாருக்கு இன்னாருனும் இன்னாருக்கு இப்படி திருமணம், வேலை, படிப்பு, குழந்தை குட்டி, வீடு வாசல்னு எல்லாமே தலையில எழுதியிருக்கும்” என்று தத்துவம் பேசினார் கண்ணபிரான்.
இங்கு ஷிவாலி உருண்டு பிரண்டு படுத்தவள் காலையில் ரிஷியின் அலுவலகம் சென்று பெயரை கூறி தேடுவதற்கு தோதாக புகைப்படத்தை தேடி பூஜையறை அருகே வந்தாள்.
ஜாதகத்தோடு இருந்த புகைப்படத்தை எடுத்து தன் போனில் ஒரு க்ளிக் செய்து வந்து படுத்து கொண்டாள்.
எதற்கும் ஒரு முறை அந்த ரிஷியை பார்ப்போம் என்று கேலரி ஓபன் செய்ய, அந்த புகைப்படம் கண்டு, “இந்த குழிப்பனியாரம் மாதிரி மூஞ்சை பாரு. உப்பிட்டு” என்று கூறியவள் தான் பீட்சா போல வறட்சியாக இருப்பதாக அவன் கூறுவன் என்பதை அறியாது போனை அணைத்து வைத்தாள்.
-சட்னி சாஸ் தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Wow super super. Very intresting sis.
Thitrathu kooda saapatu itemave solringa
vena shivu nalaiku nee avan illama nan ilanu solra alavuku aga pothu ninikiren
Super 👏