ரிஷிவா-25
🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
அடுத்த நாள் காலை இனிதாய் மலர, ரிஷி எழுந்து அலுவலகம் செல்ல தயாரானான்.
டிரஸை அயர்ன் செய்து முடிக்கும் நேரம் ஷிவாலி எழுந்து கண்ணை கசக்கி கொட்டாவி விடுத்தாள்.
“குட் மார்னிங்” என்று ரிஷி கூற, இடுப்பில் ஒரு டவல் அணிந்து தோளில் ஒரு டவலை மாலையாய் போட்டு நின்றிருந்தவனை கண்டு கோபமாய் வந்தது.
“எதுக்கு என் முன்ன இப்படி நிற்கற.” என்று எரிச்சலில் கத்தினாள். வேகமாய் எழுந்து பாத்ரூம் போய் பல் விளக்கி முடித்து முகம் அலம்பி மௌத் வாஷ் போட்டு முடித்து திரும்பினாள்.
வெளியே வந்த நேரம் பேண்ட் அணிந்து டவலை மாலையாய் போட்டு சட்டையை அயர்ன் செய்தான்.
அவனின் மாவிலை போன்ற சிகையில் முத்து போன்றதொரு நீர்த்துளிகள் கோர்த்து வழிந்தது.
“தலையை ஒழுங்கா துடைக்கலாம்ல” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.
“ஏய்.. வாட்ஸ் யுவர் பிராப்ளம். இங்க வா” என்று கை புஜத்தை பிடித்து அருகே அமர வைக்க போக, “பச் டச் பண்ணாம பேசறியா.” என்று அதற்கும் எரிந்து விழுந்தாள்.
“ஓ.. ஓகே.. ஓகே… இங்க பாரு… ரொம்ப டென்ஷனோ குழப்பமோ ஆகாதே. உனக்கென்ன பிரச்சனைனு உட்கார்ந்து நிதானமா என்னிடம் சொல்லு. காது கொடுத்து கேட்கறேன். அதே போல நான் உன்னிடம் ஷேர் பண்ணறேன். நமக்குள்ள பேசி தீர்க்க வேண்டியதை தலைக்குள் திணித்து, டென்ஷனாக்கி ஏன் எரிச்சலடையிற” என்று தோளில் இருந்த துண்டால் தலையை துவட்டினான்.
அதன் சிறு சிறு துளிகள் ஷிவாலி மீது படவும் அவனின் ஆப்டர் ஷேவ் லோஷன் வேறு வாசம் மணக்க, டியோடரண்ட் வேறு நெஞ்சு முழுவதும் சுகந்தம் தந்தது. இதில் அவனின் வெற்று மார்பிலும் நீர்த்திவலைகள் சேர்ந்து இருந்தது.
“என் முன்னாடி இப்படி நிற்காதே.” என்றாள்.
“ஓகே.. பனியன் போட்டுடறேன்.” என்றவன் வேகமாக வெள்ளை பனியனை அணிந்து நின்றான்.
அதிலும் கூடுதல் அழகாக தான் இருந்தானே தவிர அவனை பார்த்து சலனமேற்படும் மனதை அடக்க முடியவில்லை.
“ஏ… பொடிடப்பி… நாம சீரியஸ் கப்பிள் இல்லை. ஜாலியான கப்பீளா இருக்கணும்னு ஆசைப்படறேன். உனக்கு என்ன தோணுதோ அதை பேசு. அது தப்பா சரியா என்று யோசிக்காதே. பீ பிராங்” என்றதும் “இப்பத்திக்கு டச் பண்ணாதே. இப்படி முன்ன அரைகுறையா வராதே.” என்று பேசி முடித்தாள்.
“அப்போ நீ என்ன டிரஸ் போட்டிருக்க ஷிவ்?” என்றதும் தொடை தெரிய ஷார்ட்ஸ் அணிந்தவள் “பார்த்தியா… நீ என்ன ஏதாவது சொல்லிட்டே இருக்கே. நான் அம்மா வீட்டுக்கே போறேன்.” என்று திரும்பியவளிடம், “ஓகே… ஓகே… சும்மா கீழே விழுந்த ரெக்கார்ட் மாதிரி பேசாதே. எனக்கு டைம் ஆகுது. அம்மா நெய் தோசை சுட்டு இருப்பாங்க. சாப்பிட்டு கிளம்பணும். டிபன் வேற கட்டினாங்களானு தெரியலை. நீ என்னோட கீழே வா. நான் ஈவினிங் ஆறு இல்லை ஏழு மணிக்கு வருவேன். சாப்பிட என்ன வேண்டும்.” என்று கேட்டான்.
“சிக்கன் சீஸ் பால்.” என்று கூறியதும் ‘அதுசரி’ என்றவன் “உன்னோட ஸ்நாக்ஸ் காலியாகிடுச்சு. இங்க தேன்மிட்டாய் பர்பி இருக்கு. அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. நான் கிளம்பறேன்.” என்று சட்டை பொத்தானை மாட்டினான்.
“நான் ஒன்னும் குழந்தை இல்லை. என்னை சைல்ட் மாதிரி ட்ரிட் பண்ணாதே.” என்றாள்.
தலைவாறியபடி, “சரி… ஷிவ் அந்த கப்போர்ட்ல என் ஒயிட் கர்ச்சீப் எடுத்து தாயேன்” என்று மீசையின் முடியை சீப்பு கொண்டு வாரினான்.
“நீயே எடுத்துக்கோ. உனக்கு கையில்லை. இதெல்லாம் முன்ன நீயா தானே எடுத்துப்ப, இப்ப தாலி கட்டி என்னை கூட்டிட்டு வந்தா நான் செய்யணுமா?
எனக்கு இந்த விஷயமே புரியலை. கல்யாணத்துக்கு முன்ன வரை அயர்ன் பண்ணறது, கர்ச்சீப் எடுத்து ஷாக்ஸ் எடுத்து ஷூ போட்டுக்கிட்டு, டிபன் பாக்ஸை கூட நீங்களா தானே எடுத்து வச்சிப்பிங்க. தாலி கட்டின ஒருத்தி வந்தா அவ செய்யணுமா? இதென்ன லாஜிக். அவங்க அவங்க வேலை அவங்க அவங்க தானே செய்யணும்.” என்றாள்.
நேரத்தை பார்த்தவன் “உன் குவிஸ்டின் சரி ஷிவ். பசங்க ரொம்ப மோஷம் தான்” என்றவன் அவனே கர்ச்சீப் எடுத்து மடித்து பாக்கெட்டில் திணித்து ”லிப்ல கொடுக்காதேனு சொல்லிட்ட. சோ கன்னத்துல கொடுத்துக்கறேன்.” என்று பட்டும் படாமலும் முத்தம் வைத்து பேக்பேகை மாட்டி கீழே இறங்கினான்.
“என்ன பண்ற” என்று கீழே போக முயன்றவள் உடையை எண்ணி வேகமாக புல் ஸ்கர்ட் அணிந்து தலையை க்ளிப்பில் அடக்கி ஸ்கார்ப் கழுத்தில் போட்டு வந்தாள்.
சரண்யா தோசை சுட, கண்ணபிரான் ரிஷிவேநதன் மற்றும் ஹரிஷ் உணவு மேஜையில் அமர்ந்து சாப்பிட்டனர்.
“நீங்க சாப்பிடலையா” என்று சரிகாவிடம் கேட்டாள் ஷிவாலி.
“இப்ப தான் வாமிட் எடுத்தேன் அண்ணி.” என்று சோபாவில் துவண்டு போயிருந்தாள்.
“பச்… படுத்துக்கோங்க.” என்று சோபாவை சுட்டி காட்டினாள்.
“அங்க ஏன் பார்க்கறிங்க. யார் இருந்தா என்ன. டயர்டா இருந்தா தூங்கலாம்” என்று சரண்யா கொடுத்த ராகி மால்ட்டை பருகி குடித்தாள்.
சரிகா தயங்கி படுத்துக் கொள்ள, “அத்த நான் வெளியூர் போய் கான்ட்ரக்ட் பிடிக்கணும். சைன் வாங்கணும். அம்மா தனியா இருப்பாங்க. சரிகா அங்க இருந்தா தான் நல்லது. பட் இந்த மாதிரி நேரத்துல அங்க தனியா விடவும் மனசில்லை. உங்களுக்கு கஷ்டமில்லைனா நீங்க மாமா அங்க வந்து நான் திரும்பி வர வரை இருக்க முடியுமா. சரிகாவை பார்த்துக்கிட்ட மாதிரியும் இருக்கும். அம்மாவையும் தனியா விட்ட பீல் இருக்காது.” என்றான் ஹரிஷ்.
சரண்யா கண்ணபிரானை பார்க்க, “சரி மாப்பிள்ளை. நான் ஈவினிங் அங்க போயிடறோம். எம்மா சரண்யா டிரஸ் எடுத்து வச்சி ஆட்டோல போங்க. நான் ஈவினிங் அங்க வந்திடறேன்.
ரிஷி நீயும் மருமகளும் வீட்டை பார்த்துக்கோங்க.” என்றதும் ரிஷி சரியென்று தலையாட்டினான்.
ஹரிஷ் கண்ணபிரான் இருவரும் அலுவலகம் சென்றிட, சரிகா வாசல் வரை வழியனுப்பினாள்.
சரண்யாவோ அப்போ டிரஸ் எடுத்து வைத்து மதியத்துக்கு மேல வெயில் தால கிளம்பறோம். ஷிவாலி வேற தனியா விட முடியாதே. ரிஷி சாயந்திரம் விரைவா வந்துடு.” என்றதும் ரிஷி தலையாட்டினான்.
ஷிவாலிக்கோ திட்டினாலும் ரிஷி கூடவே பேசி பழகியது சற்று நிறைவாய் இருந்தது. தற்போது சரண்யா சரிகா என்று இருவர் மட்டும் என்றால் எப்படி என்னு விழித்தாள்.
அவள் நெற்றி சுருங்க ஏதோ யோசிப்பதை அறிந்தவன் கை அலம்பி அவளருகே வந்தான். “ஷிவ் ஆபிஸ் கிளம்பறேன். அம்மா சரிகா இரண்டு பேருமே கவிதா மாதிரி எதுவும் பேசமாட்டாங்க. பட் நீ எதுவும் ஹார்டா பேசாதே. ஜஸ்ட் இந்த குடும்பத்தோட பாண்டிங்கா இருக்கற பீல் கொடு. மற்றது பழக பழக வந்திடும்.” என்றான் அவளை தனியாக விட்டு செல்வதால் சிறு கவலையாய் பேசினான். பேசிக்கொண்டே அவளை வாசல் வரை தீண்டாமல் அழைத்தும் வந்து நின்றான்.
“என்ன பார்த்தா சண்டை போடுறவளா தெரியுதா. ஏதோ சொல்லணும்னு பேசிட்டு போகாதே. ஐ ஹேட் யூ” என்றாள் ஷிவாலி.
“பொடிடப்பி ஐ லவ் யூ.” என்று சவதானமாக மூக்கை பிடித்து ஆட்டி பைக்கை உயிர்பித்தான்.
“பனியாரம்.. இவனுக்கு கோபமே வராதா” என்று மென்னகையோடு உள்ளே வரவும் சரண்யா சரிகா மலர்ந்து வரவேற்றார்.
“வா டா. உட்கார்.. பசிக்கும் தோசை சாப்பிடறியா? சுடவா?” என்று சரண்யா கேட்க, “முட்டை தோசை வேணும். நெய் தோசை இரண்டு போதும்” என்றாள்.
சரிகாவோ அன்னையை பார்த்து கண் சாடையில் ஏதோ தெரிவிப்பது புரிய ஷிவாலிக்கு ஒரு மாதிரி பிடிக்காது நின்றாள்.
சரண்யா சரியென்று தோசை சுட்டு எடுத்து வந்தார். ஷிவாலி சாப்பிட்டதும் “தேங்க்யூ ஆன்ட்டி” என்றவள் கையை பிசைந்து மேலே சென்றிடலாமா என்று பார்த்தாள்.
அதற்குள் மனோகரி சரண்யாவுக்கு போன் செய்து, “சரிகா உண்டாகியிருப்பதற்கு மகிழ்ச்சி தெரிவித்து பேத்தியை பற்றி விசாரித்தார். ராஜலட்சுமி இரவு தான் சரிகா கருவுண்டானதை கூறியதால் காலையில் பேச அழைத்து விட்டார்.
சரண்யா இரண்டு மூன்று நொடி பேசிவிட்டு, போனை ஷிவாலியிடம் கொடுத்தார்.
“என்னடிம்மா எப்படியிருக்க? ரிஷி பேரனை நிம்மதியா இருக்க விடறியா. இல்லை அரை நொடிக்கு ஒரு முறை சண்டை பிடிச்சி அவரை டென்ஷன் ஏத்தறியா?” என்று கேட்டார்.
“பாட்டி அவன் தான் டென்ஷன் ஏத்தறான். நான் இல்லை. அவன் நிம்மதியா இருக்கான். நான் தான் ஒரு மாதிரி இருக்கேன். எனக்கு இந்த இடம் ஏதோ ஊர்ல கோவிலுக்கு போறச்ச லாட்ஜ்ல ரூம் எடுத்து ஸ்டே பண்ணுவோமே. ரூமும் அட்டாச் ஆகாம நாமும் ஏதோ அன்னியமா அது மாதிரி இருக்கு பாட்டி.” என்றாள்.
“டேய் கண்ணா.. சம்பந்தி பக்கத்துல இருக்காங்களா?.. அவன் இவன்னு பேசற. சாப்பிட்டியா இல்லையா?” என்று கேட்டார் மனோகரி.
“அதெல்லாம் தொலைவா வந்துட்டேன். இப்ப தான் முட்டை தோசை சாப்பிட்டேன் மனோ” என்றாள்.
“என்னடி சொல்லற. நீயா சுட்டுக்கிட்டியா?” என்றதும், “இல்லை அந்த ஆன்ட்டி தான் சுட்டாங்க.” என்று கூறினாள்.
“முட்டை தோசை அவங்களா சுட்டாங்களா” என்று மனோகரி ஐயத்தோடு கேட்டார்.
“இல்லை நான் தான் கேட்டேன். ஏன்?” என்று தன் முன் சிகையை கையால் சுருட்டி கொண்டே பேசினாள்.
“இன்னிக்கு வெள்ளிகிழமை. நீ என்ன பண்ணி வச்சிருக்க. உங்கம்மா நம்மவீட்லயே நீ கேட்டா செய்ய மாட்டா. அங்க போய் கேட்டிருக்கியே.” என்றதும் ஷிவாலி நகத்தை பல்லில் வைத்து “அச்சோ சாரி மனோ. மறந்துட்டேன். இந்த ரிஷி ஆபிஸ் போயிட்டான். அவனும் சொல்லலை.” என்றதும் ஷிவாலி ஏதோ தவறு செய்தவளாய் நின்றாள்.
“மனோ நான் அப்பறம் பேசறேன்.” என்று கத்தரித்து சரண்யாவிடம் போனை கொடுத்து “தேங்க்யூ” என்று நீட்டினாள்.
“எதுக்கு நன்றிம்மா?” என்று சரிகா தலையை பின்னிக்கொண்டு கேட்டார்.
“டுடே ப்ரை டே. அது தெரியாம எக் தோசா கேட்டுட்டேன்.” என்று அசடு வழிந்தாள்.
“சே சே… நீயே மேரேஜ் ஆகறதுக்கு முன்ன இதெல்லாம் தெரிந்து வச்சிருக்க மாட்ட. இப்ப நாளு கிழமைனு சொன்னா பாவம் உனக்கு புரியாதுலயா.
நீ வந்தப்பிறகு வாய் திறந்து கேட்ட. செய்து கொடுக்காம வெள்ளி செவ்வாய்னு சொன்னா உனக்கு முதல் நாளே என் மேல மாமியாருனு பயம் வராதா. இல்லை… என்னிடம் சகஜமா பேசுவியா. அதான் பிறகு பொறுமையா பழகிட்டு எடுத்து சொன்னா புரிஞ்சுக்க போற” என்று தலைவாறி முடித்து பூவை சூடினாள்.
ஷிவாலிக்கு ரிஷியின் செய்கைகள் எங்கிருந்து வந்திருக்குமென புரிய முறுவல் புரிந்தாள்.
“நீ குளிச்சிட்டா இந்த பூவை வச்சிக்கோ மா.” என்று நகர்ந்தார்.
சரிகா உறக்கம் வருவதாக படுக்க சென்றாள்.
ஷிவாலியும் பூவை முகர்ந்து வாசம் இழுத்து மாடிக்கு குளிக்க சென்றாள்.
‘பரவாயில்லை முதல் நாள் எப்படி பழகணும் என்ற நாகரீகம் தெரியுதே. இந்த ராஜலட்சுமி எப்ப பாரு ஹாஸ்டல் விட்டு காஞ்சி போய் வந்தா கூட முட்டையை கண்ணுல காட்ட மாட்டா. பிரதோஷம் அதுயிதுனு சொல்லி மறுத்துடுவா. சரண்யா ஆன்ட்டி சோ ஸ்வீட். ரிஷி மாதிரியே.’ என்று நீர்திவலைகள் மேலே பட, ரசித்து முகத்தை அதில் காட்டினாள்.
ஏனோ சம்மந்தமேயில்லாமல் ரிஷியின் சிகையில் வடிந்த நீர்த்துளிகள் கண்முன் வந்து சென்றது அவளுக்கு.
-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

Super super. Sorry I understand Sarika and sandhiya confusion.intresting sis.
Super maamiyar
Rishi ah love panra aana atha othuka matra la tak tak nu unaku avan niyabagam than varuthu paru