Skip to content
Home » 90’s பையன் 2K பொண்ணு-26

90’s பையன் 2K பொண்ணு-26

ரி-ஷி-வா-26

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     ஷிவாலி மதியம் இரண்டு வரை மாடியிலேயே குளித்து முடித்து, ரிஷி கால் செய்யும் நேரம் வரை போனில் மூழ்கியிருந்தாள். 

      “ஷிவ்… சாப்பிட்டியா?” என்றதும் தான், “உப்ஸ் ஐ பார்கெட். நான் போய் சாப்பிடறேன். ஏய்… ஆன்ட்டி திட்ட மாட்டாங்களே. மார்னிங் நீ போனதும் மேல வந்தேன். அதுக்கு பிறகு கீழே போகலை. கொட்டிக்க மட்டும் வந்து நிற்கறானு பேசுவாங்களா?” என்று கேட்டாள்.

      “ஷிவ்… எங்கம்மா அப்படி பேசமாட்டாங்க. நீ இருக்கறது உன் வீடு தான். சோ கேஸ்வலா போய் சாப்பிடு. அப்பறம் ரொம்ப முக்கியம். அவங்க ஆன்ட்டி இல்லை அத்தை.

    நாம பக்கத்து வீடு எதிர்வீடு முன்ன பின்ன தெரியாதவங்களை தான் ஆன்ட்டி அங்கிள்னு சொல்வோம்.

    எங்கம்மா அப்பா உனக்கு அத்தை மாமா டி. முறை வச்சி பேசு.” என்று மெதுவாய் பேசினான்.

   பேசும் போதே குரல் தெளிவாய் கூறியது அவன் அலுவலகத்திலிருந்து பணிவாய் பேசி முடிக்கின்றானென.

     “ஐ வில் ட்ரை ரிஷி.” என்று கத்தரித்து கீழே சென்றாள்.

     “ஷிவ்… பொடிடப்பி சரிடானு சொல்லறாளா’ என்று முனங்கி வைத்தான்.

     ஷிவாலியோ கீழே இறங்கவும், சரிகா அங்கே உணவு முடித்து கை அலம்பினாள்.

    “வாங்க அண்ணி… வாமிட் எடுத்தப்ப பசிச்சுதா சாப்பிட்டேன். அம்மா உங்களை கூப்பிட வர தான் நினைச்சாங்க. நீங்க தூங்கிட்டு இருப்பிங்களோனு தொந்தரவு பண்ணலை.” என்று வரவேற்றாள்.

     “சாரி சாரி… நான் சாப்பிடறதை மறந்துட்டேன். போன் பார்த்துட்டே நேரம் போச்சு. ஐ ரியலி ரியலி சாரி.” என்று சரண்யாவை தேடினாள்.

     “அம்மா… பழக்கடைக்கு போயிருக்காங்க.” என்று சரிகா கூறவும் ஷிவாலி உணவு மேஜையிலிருந்த உணவை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள்.

    பாதி சாப்பிட்டு முடிக்க, “உங்களுக்கு இப்ப பரவாயில்லையா.” என்று கேட்டதும் பரவாயில்லை அண்ணி” என்று கூறவும், நான் ஒன்னு கேட்கலாமா?” என்று பீடிகை போட்டாள். 

     “உங்களுக்கு இந்த மேரேஜ், கமிட்மெண்ட், பேபி இதெல்லாம் உங்களுக்கு பிடிச்சு செய்யறிங்களா. ஆக்சுவலி உங்க எய்ம் ஆசை என்ன?” என்று கேட்டாள்.

       “அக்காவுக்கு இருபத்தி ஒரு  வயசுல மேரேஜ் ஆச்சு. எனக்கு இருபத்தி மூன்றுல மேரேஜ். அக்கா அதுக்கே சண்டை போட்டா. என்னை மட்டும் படிக்க வைக்கிறாங்கனு.

     ஆனா நல்லா படிச்சேன். அதனால தான் டபுள் டிகிரி முடிச்சேன். அக்காவுக்கு அதுல கடுப்பு.

    இந்த வயசுல மேரேஜ் முடிக்கறது சரியா இருக்கும்னு அம்மா சொன்னாங்க. ஹரிஷ் நல்ல பையன்னு அப்பா சொன்னாங்க.

     அண்ணாவும் விசாரிச்ச வரை எனக்கு மேட்சுனு சொன்னார். அதனால கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.

     பேபி பத்தினா… அத்தை ரொம்ப எதிர்பார்த்தாங்க. அவரோ ரொம்ப ரொம்ப… இது ஏழாவது மாசம் ஆகியிருக்கு. ஆனா ஒவ்வொரு மாசமும் எதிர்பார்த்து ஏமாந்தார்.

    அதனால தான் கடவுளிடம் தினமும் எனக்கு சீக்கிரம் குழந்தையை கேட்டேன்.

    இப்ப அவர் ஹாப்பி” என்று கூறினாள் சரிகா.

      “சரிகா… உங்க லைப் உங்களுக்குனு என்ன வாழ்ந்திங்க அந்த அனுபவம் சொல்லுங்களேன்?” என்று கேட்டதும் எப்பவும் போல தான் இதுல என்ன இருக்கு. படிச்ச உத்தியோகத்துக்கு வேலைக்கு போக ஆசைப்பட்டேன் எங்க அத்தை விடலை. அதனால கிச்சன் டிவி அதுயிதுனு பொழுது போகும்.

    கவிதா அக்கா வந்தா பீச் பார்க் தியேட்டர்னு அண்ணா கூட்டிட்டு போவான். செம ஜாலியா இருக்கும். இப்ப இனி இந்த மதர் பீலிங்கை என்ஜாய் பண்ணணும்.” என்றவளிடம் ஷிவாலி தனக்கான பதிலோ கேள்வியோ புரியாது விழித்தாள். ஆனாலும் எளிதில் பின்னடைய பிடிக்காது சரிகா தனியாக இருக்கும் காரணத்தாலும் செருமிக்கொண்டு கேட்டாள்.

   ஹரிஷ் அண்ணா உங்களுக்கு முன்ன பின்ன பழக்கமில்லையே எப்படி பழகினிங்க” என்று கேட்டு நின்றாள்.

    “எப்படின்னா… அவர் தான் அவருக்கு பிடிச்சதை சொல்வார் கேட்டுப்பேன். அதுபோல இருக்க ட்ரை பண்ணுவேன். முடிஞ்சளவு மாறிடுவேன்.” என்றதும் படுக்க சென்றவளை கண்டு கன்னத்தில் கை வைத்தாள்

       மாடிக்கு போகலாமா வேண்டாமா என்று பட்டிமன்றம் நடத்த, சரண்யா பழக்கடையில் பாதியை வீட்டுக்கு எடுத்து வந்திருந்தார்.

     “இந்தா டா… இதெல்லாம் ப்ரிட்ஜ் மேல அடுக்கி வை.” என்று கொடுக்க மறுக்காமல் ஷிவாலி எடுத்து வைத்தாள்.

     இதெல்லாம் சரிகா வீட்டுக்கு எடுத்துட்டு போகணும். இதுலயே இருக்கட்டும். ஆமா நீ சாப்பிட்டியா.” என்றதும் தலையாட்டினாள்.

     “என்ன மா… போரடிக்கா டிவி பாரு.” என்றார் சரண்யா.

     வேண்டாமென தலையை ஆட்டி மறுத்தாள்.

     “மாடில டிவியை எடுத்துட்டு போடானா. வேண்டாம்மா இங்கயே இருக்கட்டும். தேவைப்பட்டா வாங்கிக்கறேன்னு சொல்லிட்டான்.” என்று சரண்யா கூறவும், “நான் மோஸ்டா டிவி பார்த்ததில்லை. எல்லாமே போன் தான்.” என்று ஷிவாலி பதில் தந்தாள்.

     வார்த்தைகள் ஆன்ட்டி என்று கூட வராது மொட்டையாய் வந்து விழுந்தது. ‘டேய் ரிஷி பேசாம ஆன்ட்டியாவது கூப்பிட்டு இருப்பேன். இப்ப அத்தையும் வரலை ஆன்ட்டினும் வரலை.’ என்று அவனையே திட்டினாள்.

     “சாப்பிட்டியா மா.” என்று கேட்டதும் தலையாட்டினாள்.

     சரிகா உறங்க சென்றதால், “நீயும் தூங்கறதுனா போய் தூங்குடா.” என்று அனுப்பினார்.

    “இல்லை அத்த… பகல்ல தூங்க மாட்டேன்.” என்று பதில் கொடுத்தாள்.

     “அப்படியா அப்ப டிவி பாரு மா” என்று ரிமோடை எடுத்து நீட்டவும், “வேண்டாம். அவங்களே இப்ப தான் தூங்கறாங்க டிஸ்டர்பா இருக்கும். நான் போன்ல ப்ரைம்ல மூவி பார்த்துக்கறேன்” என்று தவிர்த்தாள்.

     “சரிமா.. ஷிவா.. சொல்ல மறந்துட்டேன். நாங்க அங்க போறதால உனக்கு கஷ்டமில்லையே. நாளைக்கு சனி ஞாயிறு தானே ரிஷி வீட்ல தான் இருப்பான். எதுனாலும் அவன் பார்த்துப்பான். உங்களுக்கும் தனிமை கிடைக்கும். மனசு விட்டு பேசுங்க. உங்க அம்மா வீட்ல நீ எப்படி இருந்தியோ அதே மாதிரி நம்ம வீட்லயும் இருக்கலாம்” என்று கூறிவிட்டு புன்னகைத்தார்.

     “அத்த.. சம் டைம் அதுவா ஆன்ட்டி வந்தா டோண்ட் மிஸ்டேக் மீ. நான் அத்தைனு கூப்பிட தான் முடிஞ்சளவு ட்ரை பண்ணறேன்.” என்றாள் ஷிவா.

    “ஷிவா… பொறுமையாவே பழகு. இங்க என்ன அவசர உலகத்துல கால்ல றெக்கை கட்டிக்கிட்டு இருக்காங்க. நாம ஏன் அப்படி இருக்கணும். பொறுமையா நிதானமா பழகுவோம், சமைக்க கத்துக்குவோம், அதெல்லாம் ரிஷி அவங்க அப்பா மாதிரி பொறுமைசாலி” என்று விளக்கினார் சரண்யா.

     “எனக்கு ரிஷியை பார்க்க உங்களை மாதிரி தெரியுது. உங்களை மாதிரி பேசறார். நீங்க அங்கிள்..  சாரி மாமா மாதிரினு சொல்லறிங்க.” என்று ஐயத்தை முன் வைத்தாள்.

     “உங்க மாமா ரிஷி மாதிரி தான் நான் கோபப்பட்டா கூப்பிட்டு உட்கார வச்சி உனக்கு என்ன பிரச்சனை பேசி சால்வ் பண்ணுவோம் வானு பேசுவார்.

   சண்டை போட நின்றாலும் அதுக்கு பிறகு மனசு கேட்காது. ரிஷி கூட பொண்ணு பார்க்க எத்தனை முறை வாடா அதுயிது படுத்தி எடுத்தப்ப, கூலா என்னம்மா பிரச்சனை பொறுமையா பொண்ணு தேடு.

    வானதி கழட்டி விட்டா என்ன? நான் பீல் பண்ணலைனு சொன்னான்.
   
   உனக்கு வானதி பத்தி சொல்லியிருப்பான்னு நினைக்கிறேன்.

   பொண்ணு கிடைக்காம இல்லைமா, அவனுக்கு பிடிச்சமாதிரி அமையணும்னு தான் டிலே ஆகிட்டே இருந்தேன்.” என்று சரண்யா பகிரவும் ஷிவாலி சரிகா உறங்கவும் தனது ஐயத்தை கேட்டாள்.

      “நான் ரிஷிக்கு எப்படி மேட்ச் ஆவேன். அவனை உங்களை புரிந்துக்க முடியலை. ஏதோ இடிக்குது.

    என்னால மிங்கிள் ஆகவே முடியலை. என்னால மரியாதை தர முடியலை. அவன் இவன்னு பேசறேன். உங்களை முறை வச்சி கூப்பிட கூட சட்டுனு வரலை.” என்று கையை பிசைந்தாள்.

    “அதெல்லாம் சூப்பரா மேட்ச் ஆவ. நீ பார்க்கற பாயிண்ட் ஆப் வியூல இருந்து மாத்தி பாரு.

   நாங்க உன்னை அப்படி தான் பார்த்தோம்.

      தாத்தாவுக்காக பாட்டிக்காக உன் லைப்பையே என் மகன் கூட பிணைக்க சம்மதிச்சிட்ட. பெரியவங்களுக்கு இதை விட மரியாதை தர்ற பொண்ணு யாரு இருக்கா.

  தாத்தா உடம்பு சரியில்லைனு வந்து உன்னை பார்க்கறப்ப, சுத்தி ஆளுயிருந்தும் சட்னி கொட்டி வாலு தனம் பார்த்தியாமே. பொண்ணுங்களுக்கு அந்த வாலு தனமும் சேட்டையும் வேணும். அப்ப தான் லைப் இன்ட்ரஸ்டிங்கா மூவ் ஆகும்.

    அதை விட தைரியம் என் பையனை தேடி போய் ‘உன்னை வேண்டாம்னு’ சொல்ல சொல்லி மிரட்டியிருக்க. அந்த தைரியம் யாருக்கு வரும்.” என்றவர் மென் குரலில், “எங்க வீட்ல கவிதா சரிகாவுக்கு கூட இந்த தைரியம் இல்லை. நீ தைரியசாலி டா” என்று பாராட்டினார்.

  ஷிவாலி மனமோ ‘அடேய் ரிஷி பனியாரமே… எல்லாத்தையும் அம்மாவிடம் ஓப்பிச்சியிருக்க’ என்று பற்கடித்தாள்.

      “அவனா எதுவும் சொல்லலை டா. சட்னி கொட்டின இடம் என்ன துடைச்சாலும் கரை மார்க் தெரியும். வீட்ல வந்து கேட்டப்ப சொன்னான்.

    சாஸு கூட அப்படி தான். ஆனா என்ன சட்டை வாஷ் பண்ணினாலும் கை பட்டன் கிட்ட சரியா வாஷ் பண்ணலை அதனால மாட்டிக்கிட்டான். நான் கேட்டதும் மழுப்பலை.

    உங்க மருமக கைகார்யம் அதுயிதுனு புலம்பினான்.” என்று பேசி சிரித்தார்.

    ஷிவாலிக்குமே தற்போது அனைத்தும் நினைத்து பார்க்க முறுவல் தோன்றியது.

      “சரி டீயா காபியா. மணி நாலாகுது. குடிச்சிட்டு நேரத்துக்கு சரிகாவை கூட்டிட்டு போகணும். நீ இரண்டும் குடிக்க மாட்டியே.. பாரு மறந்து மறந்து போறேன். ரோஸ் மில்க் குடிக்கிறியா.” என்று கூந்தலை அவிழ்த்து மீண்டும் கொண்டையிட்டு பாலை சூடுப்படுத்த சென்றார்.

   மணி போனதே தெரியாது ரிஷிபுராணம் கேட்டதும் பேசியதும் அறிந்து கொடுத்த ரோஸ் மில்கை பருகினாள்.

     அடுத்து சரிகா எழுந்திருக்க அவளுக்கு காபி கொடுத்து குடித்து முகமலம்பி புறப்பட தயாரானார்கள்.

    “இந்த ஆட்டோ ஸ்டாண்ட் தூரமா இருக்கு. இதுக்கே ஒரு ஆட்டோ பிடிக்கணும்” என்று சரிகாவை எழுப்பினார் சரண்யா.

    “ஆன்ட்டி ப்யூ மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க ஓலோ புக் பண்ணறேன்” என்று போனை எடுத்து இரண்டு நொடியில் போட்டு “டூ செகண்ட்ல வந்துடும்” என்றாள்.

    “ரிஷி ஆறு ஏழு மணிக்கு வருவானே மா. அதுவரை தனியா இருந்தா கீழே டிவி பாரு. இல்லைனா கீழே வீட்டை பூட்டிட்டு மேல உங்க ரூமுக்கு போ போன்ல படம் பாரு.” என்று கூறவும் சரி ஆன்ட்டி எது தோணுதோ அதை செய்யறேன்.” என்று ஆட்டோவில் ஓடிபி கூறி வழியனுப்பினாள்.

   “ஆன்ட்டி நான் ஆன்லைன் பேமெண்ட் தந்துட்டேன். நீங்க தரவேண்டாம். எனக்கு ஆபர் கிப்ட் இருக்கும்.” என்று அறிவுறுத்திவிட்டு கை அசைத்தாள்.

   சரிகா சரண்யா கிளம்பவும் கீழே டிவியை போட்டுவிட்டு சோபாவில் நீட்டி படுத்து படம் பார்த்தாள்.

       நேரம் போக போக போனில் பாடலும் கண் டிவியிலும் இருந்திட, சத்தமில்லாமல் ரிஷி வந்து சோபாவில் அவளின் காலை எடுத்து மடியில் வைத்த நொடி திக்கென்று பயந்து எழுந்தாள்.

     “இடியட் நீ தானா.. பயந்துட்டேன்.” என்று நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கினாள்.

   இதயம் அதிவேகமாக துடித்திருக்க வேண்டும். தனியாக இருந்ததில் சட்டென காலை பிடித்தால் வந்த பயம் அது.
  
     “அப்படி பயப்படுறவ லாக் பண்ண வேண்டியது தானே. “ஏய்.. சிக்கன் சீஸ் பால். சூடாயிருக்கு சாப்பிடு” என்று எழுப்பினான்.

    “இன்னிக்கு ப்ரை டே நினைவுப்படுத்தலாம்ல. வெறும் சீஸ் பால் இல்லை வேற ஏதாவது வாங்கி வர சொல்லியிருப்பேன்.” என்று அலுத்து கொண்டாள்.

      “அடப்போமா நானே சம்டைம் அதெல்லாம் பார்க்க மாட்டேன். எங்கக்கா கவிதா தான் ஓவரா சீன் போடுவா. நீ சாப்பிடு.” என்றதும் ஷிவாலி அவனை கண்டு சாப்பிட துவங்கினாள்.
  
    “நீ எடுத்துக்கலை.” என்று கேட்டதும். சாப்பிட்டு வை. பேஸ் வாஸ் பண்ணிட்டு வர்றேன்” என்று கூறி ஐந்து நிமிடத்தில் வந்தான்.

      அதன் பின் கதவை தாழிட்டு படம் பார்த்து முடித்து சாப்பிட்ட பிறகே மாடிக்கு தன் வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

    அங்கு வந்ததும் ஒரு சிறு குளியல் போட்டு வந்ததும் இன்றைய நாளை பற்றி பேச, “நீ என்ன ஆன்ட்டியிடம் எல்லாம் உளறியிருக்க” என்றாள்.

    “ஷிவ் அம்மாவை ஹர்ட் பண்ணிட்டியா. ஏய் அவங்க தப்பா எடுத்துக்க மாட்டாங்க. உனக்கு எதாவது கஷ்டமா இருக்கா.” என்றான். 

     “முதல்ல பயந்துட்டேன் . அப்பறம்… ஆன்ட்டி சோ ஸ்வீட். வித்தியாசமா இருக்காங்க. எங்க வீட்ல மனோகரி பாட்டி அப்படி தான்.” என்றாள்.

      “தேங்க் காட் நீ எதுவும் பேசி முகம் காட்டலையே.” என்றதும் “டேய்… நான் கொஞ்சம் நல்லவ தான்” என்று தலையணையை எடுத்து அவன் முதுகில் போட்டு அடித்தாள்.

    “நானும் அதே தான் சொல்லறேன். கொஞ்சூண்டு நல்லவ நீ.” என்று தாடை பிடித்து கொஞ்சினான்.

    ஏனோ அந்த நொடி அவன் தன்னை கொஞ்சிக்கொண்டே இருக்க ஆசைக்கொண்டது.

   ஆனால் ரிஷி போன் வரவும் எக்ஸ்கியூஸ் கேட்டு வெளியேறினான்.
    
     தன் குரங்கு மனம் போகும் பாதை எண்ணி ஷிவாலி விதித்திரமானாள்.

      ‘ரிச்சார்ட், ரூபனிடம் எத்தனையோ முறை அருகே அமர்ந்து பேசியிருக்கின்றாள். எதிரெதிரே இதே போல பல விஷயங்களை அலசி சண்டையிட்டு சமாதானமாகி பேசி கடந்திருக்கின்றாள். ஏன் ரிச்சார்ட் ரூபன் கொஞ்சும் போது கூட தனக்கு இப்படி ஒரு எண்ணம் உதிக்கவில்லை.

   இது தான் நெருங்க விட்டு பாரு. உன் மனசு எல்லாரிடமும் என்னிடம் இருக்கற உரிமையோட பழகாதுனு ஆணித்தரமா சொன்னானா?’ என்று தோன்ற போன் பேசுபவனை பார்த்து கொண்டிருக்க கண்கள் சொருக அப்படியே உறங்கினாள்.

    ரிஷி நாளை சனி கிழமை லீவு எடுத்து வந்த காரணத்தால் இன்றே போனில் சில வேலையை பற்றி கேட்டுக்கொண்டிருக்க அவன் விவரிக்க என்று நேரம் கழித்து வந்து பார்த்த பொழுது உறங்கும் பெண்ணவளை கண்டு போர்வை போர்த்தி விட்டு நெற்றியில் இதழ் பதித்தான்.

-அலப்பறை தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.

3 thoughts on “90’s பையன் 2K பொண்ணு-26”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!