Skip to content
Home » நிலவோடு கதை பேசும் தென்றல்-8

நிலவோடு கதை பேசும் தென்றல்-8

💟-8

    நான் இங்க இருப்பது சரியா இல்லை அவந்திகா இங்க இருப்பது சரியா… ஊர் அறிய தாலி கட்டி இங்க தான் இருக்கனும். சட்டமா அம்மா அப்பா சொன்னாங்க… ஆனா அதை அப்படியே கேட்டு நடக்கிற நல்லவ நான் இல்லை. தாலிக்கு மரியாதை கொடுத்து இருக்கேனா.? என்றவள் நூறாவது முறையாக இதையே யோசித்து முடித்தாள். 

கவியரசன் உடை எல்லாம்  சேராக வந்தவன் குளிக்க சென்றான்.

“என்ன சேத்துல உருண்டுட்டு வந்தியா?” என்று கேட்டாள்.

“அது இன்னிக்கு டிராக்டர் எடுத்து உழ ஆரம்பிச்சிட்டேன். அதான் டிரஸ்ல சேரு” ஆளை பாரு கோவிலில் அந்தம்மா சொன்னதை வைத்து ஏதாச்சும் கேட்குறாளா…. நாமாளா தான் சொல்லனுமோ? கடவுளே இவளிடம் எப்படி சொல்ல? என்றவனின் பார்வை அவளிடம் நிலைத்தது.

“நாம மொட்ட மாடியில் போகலாமா?” என்ற தன்ஷி பேச்சில் சரியென்று சென்றான்.

மொட்டை மாடியில் நிலவும் உணவும் வைத்து பரிமாற உண்ண செய்தான். தன்ஷி வந்ததும் சாதம் உண்ண அமர வைத்து அதன் பின்னே பேச்சை ஆரம்பித்தாள்.

“அவந்திகாவுக்கும் உங்களுக்கும் நடுவுல ஏதாவது பிரச்சனையா? அவள் அமைதியா யாரையும் எதிர்த்து பேச மாட்டா… ஆனா அவளோட பார்வை இன்னிக்கு பொறாமையில் நிற்பதை பார்க்க முடிந்தது. சரி அவள் லைப்ல நான் குறுக்கே இருக்கேன் அதுல அவ என் மேல கோவமா இருக்கா புரியது. ஆனா இதை நானா விரும்பி ஏற்கலை என்று அவளுக்கும் தெரியும் தானே” என்று தாலி சுட்டி காட்டி சொன்னாள். 

“இதுல உங்க நெஞ்சில் இருக்கற மச்சம் கூடவா அவ கண்ணில் படலை… அப்புறம் எப்படி…” என்றவள் அடுத்த வார்த்தை பேச திணறினாள். அதை கண்டு கொண்ட கவியரசன் புன்னகை உதிர்த்தான். 

“லெமன் ரைஸ் கரண்டியால் அடிச்சிடுவேன் பார்த்துக்கோ லைப்பே கொஸ்டின்னா இருக்கு யோசித்து மண்டை வெடிக்குது உனக்கு சிரிப்பு வருது” என்றதும்.

“சொல்றேன் அது என்ன லெமன் ரைஸ் கூப்பிடற அதுக்கு என்ன காரணம்” என்றான். இதற்கு முன்னும் இவ்வாறு அழைத்திருந்தாள். அதனால அறிய ஆவல். அதோடு தான் நல்ல நிறம் என்பதாய் செல்லமாய் உரைகின்றாளா? என்ற எதிர்பார்ப்பு.

“அடேய் உன்னை” கரண்டியால் மொத்த போக அவனோ தடுத்திட அவனுக்குள் செல்ல சண்டையை மனதில் இரசிக்க ஆரம்பித்தான்.

அவன் கரண்டியை பிடித்ததால் உணவினை உண்டு, குடிக்க வைத்த நீர் இருக்க அதனை செம்போடு அவன் தலையில் கொட்ட அவனின் கேசம் முகம் நீரால் நனைத்து விட்டது.

“ச…சா..ரி.. தயவு செய்து விளையாடாம சொல்லுங்க எனக்கு எதுவும் புரியாம கஷ்டமாக இருக்கு” என்று கைகளை உதறினாள்.

“எனக்கு அப்பா அம்மா இல்லை சின்ன வயதில் இறந்துட்டாங்க அப்பத்தா தான் வளர்த்தது… எனக்கு கல்யாணம் பண்ண அப்பத்தா ஆசைப்பட்டுச்சு… தெரிந்த தரகர் மூலமா சொல்லி தான் அவந்திகா புகைப்படம் எனக்கு கிடைத்தது.

5 years back

“பொண்ணு பார்க்க நல்லா இருக்கு ஏய்யா நம்ம அரசு தரகர் போட்டோ கொடுத்து இருக்கார். செத்த பார்த்து சொல்லிட்டா பார்த்து பேசி முடிச்சிடுலாம்” என்றதும் வாங்கியவன் பிரிக்க போக ‘ என்ன இருந்தாலும் நேரில் பார்ப்பது போல இருக்காது… அப்பத்தா பார்த்து இருக்கு நல்லா இல்லைனா நம்மகிட்ட காட்டுமா மாலையில் நேரில் பார்ப்போம்… அது வரை பார்க்க வேண்டாம்… கொஞ்சம் ஆர்வம் அதிகமா இருக்கும்’ என்ற படி போட்டோ அங்கேயே வைத்து விட்டு சென்றான்.

அப்பத்தா பொண்ணு பார்க்க வர மறுத்து விட்டார். அவருக்கு விதவை நல்ல காரியத்தில் முன்னே நிற்க கூடாது என்று அப்படி யோசித்து கவினோடு சில ஊரின் பெரியவர்களை துணைக்கு அனுப்பி வைத்தார்.

கூட வந்தவர்கள் மூவர் தான். மர நாற்காலியில் அமர்ந்து ஊர் கதை பேச கவியரசன் கண்கள் தான் அங்கிருந்த நான்கு வழி மீதும் விழி வைத்து எந்த அறையில் இருந்து பெண் வருவாள் என்று பார்த்திருந்தான்.

கிச்சன் எதிரதிர் இரு அறைகள் மேலும் ஒரு அறை தோட்டம் பக்கம் என்று இருக்க ‘கொஞ்சம் பேசாம அவளை கூப்பிடுங்க டா சாமி’ என்றது கவியரசன் மனம்.

அப்பொழுது தான் பின் வாசல் பக்கமாக தன்ஷிகா பள்ளி உடையுடன் வந்தவள் வேகமாக அவந்திகா முன் வந்து

“அவந்தி… மாப்பிள்ளை பார்த்தியா.. எப்படி இருக்கார்?” என்று முகம் அலம்பியவாறு கேட்க அவந்திகா அந்த உலகத்தில் இல்லை அந்த கேள்விக்கு.

தன் அக்கா கேள்விக்கு பதில் சொல்லாமல் இருக்க பார்த்த தன்ஷி தாவணி அணிந்த படி அதனை சரி செய்து வந்து தலையை விரித்து க்ளிப் போட்டு முடிக்க அவந்திகாவை உலுக்க நிமிர்ந்து பார்த்த தன்ஷிகாவிடம்

” தன்ஷி காபி தட்டை நீ கொண்டு போயி கொடுக்கறியா எனக்கு நெர்வஸ்ஸா இருக்கு காபி கீழே சிந்திடும் அப்பறம் அம்மா திட்டும். நீ கொண்டு போயி கொடு நான் பின்னாடி வர்றேன்” என்றதும் அவந்திகா பேச்சில் சரி என தன்ஷிகா அங்கு இருந்த காபி தட்டை ஏந்தி மெல்ல வர தனக்கானவளின் வருகை என்று ஆயிரம் எதிர்பார்ப்போடு கவியரசன் மனம் பார்வை தன்ஷிகா மேல் விழ கடவுளுக்கு நன்றி தெரிவித்தான்.

   அவனுக்கு தன்ஷிகாவை பிடித்து இருந்தது. அவள் மற்ற மூவருக்கு காபி நீட்டும் பொழுதும் தன்னிடம் அவள் வருவதற்குள்ளும் அவளோடு மனதில் தனக்கானவள் என்று அளவோடு பேச, சிரிக்க, செல்ல சண்டையிட என்று ஒரு பாடலையே பாடி முடித்து இருந்தான் மனதில்.

அக்கணம் தன்ஷி தாய் ‘அக்கா எங்க?’ என்றதற்கு ‘வர்றா’ என்றதை அவன் கவனிக்கவில்லை

காபி வாங்க அவளை கூர்ந்தான். எல்லா பெண் பார்க்கும் படலம் போல முகம் எங்கும் பவுடர், பட்டு நகை என்று அலங்கரித்து அவள் நிற்காது மெரூன் தாவணி சம்பந்தமே இல்லாமல் டார்க் ப்ளூ வளையல்(யூனிபார்ம் டார்க் ப்ளூ அதுக்கு மேட்சிங் போட்டு இருப்பா) சின்ன பொட்டு முகம் சரியாக துடைக்காது கழுத்தில் சில நீர்த்துளிகள். காது ஒட்டியே கம்பல் என்று வெட்கம் பயம் இல்லாமல் குறும்பான உருட்டும் கண்கள் என்று நிற்க ஆண் மகன் கவியரசன் மனம் அவளிடம் தானாய் விழுந்தது.

ஐந்து நிமிட இடைவெளிக்கு பின் “பொண்ணை கூப்பிடுங்க பார்த்து மற்றது பேசுவோம்” என்றதும் கவியரசன் குழம்பி கூட வந்தவரை பார்த்தான். அதே நேரம் தன்ஷி தனக்கு பின் திரும்பி திரும்பி பார்க்க அங்கே பட்டு புடவையில் தலைக்குனிந்து படி பெண் வர கவியரசன் அக்கணம் தான் உணர்ந்தான்.

தான் இதற்கு முன் பார்த்த பெண் தங்கை என்றதே. கவியரசன் முகம் வெளிறிவிட்டது.

கடினபட்டு பார்வை தன்ஷிகா மீது இருந்து எடுத்து அவந்திகாவை பார்த்தான்.

கொஞ்ச நேரமுன் தன்ஷிகாவை தன்னவளாக பார்த்து விட்டு அடுத்த நொடி அவந்திகாவை தன்னவளாக பார்க்க முடியாது தவித்தான்.

ஆனால் அதனை வெளியே சொல்லவும் முடியாது துடித்தான். சே வீட்டிலே புகைப்படம் பார்த்து வந்து இருந்தால் இந்த குழப்பம் தவிப்பு தவிர்த்து இருக்கலாம் என்றது அவன் மனம்.

ஏற்கனவே பேசியபடி அவந்திகா கவியரசன் திருமண நிச்சயம் பேசி நடக்க அங்கே கூப்பிட்டு வந்தவர்கள் மற்ற விவரம் பேச கவியரசன் மனம் கடினமானாலும் நடப்பவையை ஏற்றது.

பின்னே பெண் பிடிக்கவில்லை என்றால் போட்டோவிலே பார்த்து சொல்லி இருக்கலாம். இங்கு வந்து சொன்னால் தவறு. அதுவும் ஒரு பெண் மனம் நோகும். அக்கா தவிர்த்து தங்கை பிடித்து இருக்கு சொன்னாலும் தவறு தான் என்று அமைதியாக நடப்பவையை ஏற்க முனைந்தான்.

எத்தனை பேரின் முதல் காதல் தோல்வி கண்டு வேறு திருமணம் செய்திருப்பார்கள். 

    5 நிமிடத்தில் பார்த்த இவளை மறக்க முடியாதா என்ற பக்குவம் வர தெளிவு பெற்றான்.

அவந்திகாவை நேராக பார்த்தவன் கண்கள் அங்கே ஜன்னலின் வழியே எக்கி மாங்காய் பறித்து இருந்த தன்ஷிகா மேல் பட மனதிற்கு சவால் விடவே கடவுள் இவளிடம் மாட்டிவிட்டு என்னை சோதிக்கிறாரென தலையை உலுக்கி திரும்பி கொண்டான்.

மீண்டும் சற்று நேரத்திற்கு பின் அனிச்சையாக பார்வை திரும்ப அங்கே கிணற்றின் மேலே அமர்ந்து மாங்காய்க்கு உப்பு மிளகாய் போட்டு தன்ஷிகா திண்ண கண்டான்.

இதில் தன்ஷிகாவும் பார்த்து ‘வேணுமா’ என்றது போல செய்கையால் கேட்க கவியரசன் படக்கென்று திரும்பி விட்டான். அதன் பின் பார்க்கவே இல்லை.

அவந்திகா கவியரசன் நிச்சயம் அந்த மாதத்தின் இறுதியில் பேசி இனிதாக வணக்கம் வைத்து கிளம்பினான்.

“அக்கா மாப்பிள்ளை என்னை பார்க்கிற மாதிரி உன்னை பார்க்கிறாரு பாரு” என்று தன்ஷி  அவந்திகாவை இடிக்க, இது வரை பார்க்காமல் ‘எவன் வந்தா எனக்கு என்ன?’ என்ற ரீதியில் இருந்து வேண்டா வெறுப்பாய் பார்த்தவள் கவியரசன் தோற்றம் கண்டு சொக்கி தான் போனாள்.

கவியரசன் சிறு புன்னகையுடன் கடந்து விடைப்பெற்று கொண்டு செல்ல அவந்திகா ஏதோ யோசனையில் சுழன்றாள்.

பெரியவர்கள் பேசி சென்றபடி அடுத்த மாதம் நிச்சயம் நடந்தது.

அவந்திகா-கவியரசன் நிச்சயம் பின்னர் தொலைப்பேசி பகிர்ந்து கொண்டாலும் அது கிராமங்களில் மாப்பிள்ளை பெண் பேச அந்தளவு நாகரீகம் வளராது போக கவியரசன் போன் செய்யாது இருந்தான்.

அப்படி பேச ஆசை கொண்ட கணம் எல்லாம் தன்ஷிகா தான் முதலில் போன் எடுக்க பேச அடுத்து அவந்திகாவிடம் இயல்பாக பேச தடுமாறி நின்றான்.

திருமணம் ஆகி அவந்திகா வந்தால் எல்லாம் சரியாகும் என்று எண்ணினான்

     ஊர் அறிய அவந்திகா கழுத்தில் தாலி அணிவிக்கும் வரை… தாலி அணிவிக்கும் நேரம் தன்ஷி சேலையில் பக்கத்தில் வந்து “மாமா தாலி கட்டுங்க” என்றதும் அவன் உள்ளுக்குள் நொறுங்கி விட்டான். அவளை தனது மனதில் இதே கலர் சேலையில் தான் மணப்பது போல கனவெல்லாம் கண்டான். அதே எண்ணம் தன்னுள் ஆழ பதிந்ததை அக்கணம் தான் உரைத்தது அவனுக்கு

   மகிழ்ச்சியாக முகத்தில் காட்டி கொள்ள பழகினாலும் அவனின் உள்மனம் என்னவோ வதைத்தது.

      அவந்திகா கவியரசன் இருவரையும் ஆலம் கரைத்து தன்ஷிகா அழைக்க சிரித்தபடி வந்தாலும் அவந்திகா கணவன் என்றது உள்ளம். அதனாலே தன்ஷியை தவிர்க்க துணிந்தான். 

   அப்படியிருந்தும் இரவு சடங்கு அவனால் ஏற்க முடியவில்லை. மனம் தங்கள் வீட்டிற்கு செல்ல மாறிடும் அங்கு அவந்திகா மனவுளைச்சல் இன்றி தன்னவளாக மாற்றிக் கொள்வோம் இங்கு வேண்டாம் என்று எண்ணி “நாம கொஞ்ச நாள் பழகி அப்பறம் தாம்பத்தியத்தில அடியெடுத்து வைப்போம்” என்று சொல்லி முடிவெடுத்தான்.

   தன்ஷி பரிட்சை முடித்து இருந்த காரணம் அடுத்து அவள் காலேஜ் என்றதில் வீட்டில் வேறு இருக்க அங்கிருந்த ஒரு வாரமும் கவியரசன் அவந்திகாவிடம் ஒதுங்கி தான் நின்றான்.

தன்ஷிகா தான் ‘மாமா எந்த காலேஜ் நல்லா இருக்கும். எந்த குரூப் பெஸ்ட்’ என்று விடாது பேச கவியரசன் பதில் சொன்னான்.

     அந்த ஒரு வாரத்தில் தன்ஷிகா தோழியாக பாவிக்க ஆரம்பித்தான். 

அவந்திகா வந்து தன்ஷிகாவை திட்ட கவியரசன் அவளை “எதுக்கு திட்டற சின்ன பொண்ணு தானே” என்றான்.

     “அவளை சொன்னா உங்களுக்கு என்ன?” என்று விழுந்தன அவந்திகா பேச்சு.

       கவியரசன் தங்கள் வீட்டை நோக்கி வந்து சேர்ந்தான்.

   இனி தன் வாழ்வு இந்த வீட்டோடு… கவியரசன் தன் கைக்குள் என்று மமதையில் அவந்திகா இருந்தாள். 

1 thought on “நிலவோடு கதை பேசும் தென்றல்-8”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *