15
ஒருவேளை கோயிலுக்கு வருவதற்காக என்று புடவையில் வந்ததினால் தானோ? அது தான் அவனை சலனப்படுத்தியதோ? இது என்னடா சோதனை? புடவை என்பது நம் பாரம்பரிய உடை ஆயிற்றே. அன்றும் இப்படித் தான் முருகன் கோயிலில் கௌதம் தன்னை புடைவையில் கண்டு இல்லாத வம்பெல்லாம் செய்தான். வம்பு செய்வதும் துறுதுறு என்று அலைவதும் அவன் இயல்பு. அதனால் தானே எப்பவும் அவனை சுற்றி ஒரு பெருங்கூட்டமே இருக்கும். ஆனால் அப்படியும் சொல்வதற்கு இல்லையே. புதுவருட இரவிலும் கூடத் தான் கௌதம் என்னை தன்னுடன் வரும்படி அழைத்தான். அவனுக்கு உடை ஒரு பொருட்டு இல்லை. தன்னை உடன் அழைத்து செல்லவேண்டும் என்ற பிடிவாதம். ஒருவேளை அவன் கண்களுக்கு தான் அழகாக இருக்கிறோமோ? அல்லது அவனுடைய அத்தனை பெண் நண்பர்கள் மத்தியிலும் தான் தனித்து தெரிகிறோமோ? தெரியவில்லை. நம்மூர்காரி என்பதனால் ஒரு ஒட்டுதலா? அப்படி என்றால் ரேணுவிடமும் அத்தகைய உணர்வு இருக்க வேண்டுமே? அப்படி தெரியவில்லையே.
ஆனால் இன்று இந்த ராகவனுக்கு என்ன ஆயிற்று? தாபத்தினால் அவன் கண்களின் ஓரம் கசிந்திருந்தது. சாருவிற்கு பாவமாக இருந்தது.
ஒருபுறம் எல்லோரும் பக்தி பரவசத்தில் நடனமாடிக் கொண்டிருந்தார்கள். மனசும் உடலும் தளர்வாக ஆனது. இவள் ராகவனை கண்டு கொண்டதை அறிந்து தன்னை அவளுக்கு உணர்த்திவிட்டதான நிம்மதியில் எழுந்து அங்கே கோலாகலமாக ஆடிக் கொண்டிருந்த பக்தர்களுடன் சேர்ந்து மெய்மறந்து ஆடிக் கொண்டிருந்தான் ராகவன்.
அவன் ஆடுவதை பார்த்து ரேணுவும் தானும் ஆடலாமா வேண்டாமா என்று யோசித்து நின்ற இடத்திலேயே மெல்லமாக அசைந்தாடிக் கொண்டிருந்தாள்
ஆட்டமும் பாட்டமும் முடிந்து அந்த பிரதேசமே குண்டூசி விழும் சத்தம் கேட்க கூடிய அமைதியாக ஆனது. தீபாதாரனைக்கு உண்டானா முஸ்தீபுகள் ஏற்பாடாயிற்று. .
தீபஹாரத்தி முடிந்ததும் வெளியே வந்தார்கள். அங்கேயே கோயிலின் அருகில் கோயிலின் ஒருபகுதியாக இருந்த ரெஸ்டாரண்டில் இரவு வட இந்திய உணவை முடித்து கொண்டு வீட்டிற்கு திரும்பினார்கள்.
“இன்றைக்கு கோயிலில் சுவாமி அலங்காரம் எவ்வளவு அருமையாக இருந்தது இல்லை சாரு”
சாரு பதில் சொல்லும் மனநிலையில் இல்லை. ஏனோ முருகன் கோயிலும் முருகனின் ராஜ அலங்காரமும் கண்களுக்குள் இருந்தது. கூடவே நெற்றியில் திருநீறு இட்டிருந்த களையான முகமும் கண்களை இழுத்தது. அவள் கவனம் அவளிடத்தில் இல்லை.
ஆனால் ரேணு மிகுந்த ஆர்வத்துடன் ராகவனுடன் பேசி கொண்டு வந்தாள்.
“அதுமட்டுமா.! நீங்கள் எத்தனை அழகாக ஆடினீர்கள்”
“ஆமாம் ரேணு. அது ஒரு மெய் மறந்த அனுபவம். எதுவும் இதற்கு ஈடாகாது”
அங்கே பாடப்பெற்ற பஜனை பாடல்களை மெல்ல முணுமுணுத்து கொண்டே வந்தான் ராகவன். அவனும் ரேணுவும் பேசி கொண்டிருக்கும் விஷயத்திற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போன்ற பாவனையில் இருந்தாள் சாரு. ராகவன் அவ்வப்போது அவனுக்கும் ரேணுவிற்கும் இடைய நடந்த உரையாடலில் .பங்கெடுத்து கொள்ளும் விதமாக சாருவை உள்ளே இழுப்பான்.
“நானும் இங்கே வரவேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். இன்று தான் வர முடிந்தது”
“நான் அடிக்கடி அதிலும் முக்கியமாக வாரக்கடைசியில் கட்டாயம் வருவேன். மனதிற்கு மிகவும் உற்சாகமாக இருக்கும்.”
“ஏன் ராகவன், நம்மூர் மாணவர்கள் எல்லாம் வாரக்கடைசி நாட்களில் கூட எங்கேனும் அவுட்டிங் அது இது என்று சுற்றுவார்களே நீங்கள் அப்படி எல்லாம் போவது இல்லையா?”
“எனக்கு அதில் எல்லாம் நாட்டம் இல்லை. அய். ஆம். நாட் தட் ஸ்டப். அதெல்லாம் எல்லாராலேயும் முடியாது. அதற்கெல்லாம் நம் கௌதம் தான் லாயக்கு”
“ஆமாம். இந்நேரம் எந்த நாட்டில் யாருடன் சுற்றி கொண்டிருக்கிறாரோ?”
“பாரிசில் லிடியாவுடன் சுற்றி கொண்டிருப்பான்”
“ஹே, உங்களுக்கு எப்படித் தெரியும்?”
இதுவரை அவர்கள் இருவரும் பேசி கொண்டிருந்ததில் எந்த நாட்டமும் காட்டாத சாரு கௌதமின் பெயர் காதில் விழுந்த மாத்திரத்தில் தன்னை அறியாமல் கேட்டாள்.
“தெரியும்”
“அது தான் எப்படி என்று கேட்கிறேன்?”
“ஓ, அதுவா.? இன்று காலையில் நம்ம ஜான்னை ரயில்வே ஸ்டேசனில் வழியனுப்ப போய் இருந்த போது லிடியாவும் கௌதமும் அதே ரயிலுக்கு போவதற்காக காத்திருந்தார்கள். அதனால் தான் தெரியும்”
“ஓஹோ.”
சாருவின் குரலில் சின்னதாக ஒரு ஏமாற்றம் இருந்தது. என்னவோ தான் வரவில்லை என்றதும் அவன் பயணத் திட்டத்தையே ரத்து செய்து விட்டு சோகத்தில் தாடி வைத்து கொண்டு அலைவான் என்று எதிர்பார்த்தது போல ரொம்பவே தான் பீல் பண்ணினாள்.
கௌதம் தன்னைத் தானே டூருக்கு அழைத்தான். நாம் தானே ஊர் விட்டு ஊர் வந்தால் வேர் விட்டு போகுமா? என்று கேட்டு அவனை தவிர்த்தோம். போதாக்குறைக்கு ராகவனையும் அழைத்து வருவதாக சொன்னோமே. அப்போது அவன் முகம் போன போக்கை இப்போது நினைத்தாலும் சிரிப்பாகத் தான் இருக்கிறது.
தனக்குத் தான் என்ன ஒரு இறுமாப்பு………..? என்று தன்னைத் தானே உலுக்கி சிந்தனையை கௌதமின் நினைவிலிருந்து வேறுபுறம் திருப்பி கொண்டாள்.
அறிவு சரியாகத் தான் கேள்வி கேட்கும். ஆனால் ஆசை கொண்ட மனசு இருக்கிறதே அது வினாடி நேரத்தில் ஏழு உலகையும் சுற்றி வரும் ஆற்றல் கொண்டதாயிற்றே.
மனதிற்குள் லிடியாவுடன் யூரோப் டூர் போன கௌதம் தான் நிறைந்திருந்தான். அவனை
நினைக்கவும் பிடிக்கவில்லை. லிடியாவுடன் எங்கெல்லாம் சுற்றி வருகிறானோ என்று கற்பனையில் கண்டு அவஸ்தை படுவதையும் நிறுத்த முடியவில்லை.
முருகனிடம், இந்த ஒழுக்கம் கெட்டவன் வேண்டவே வேண்டாம் என்று தீர்மானமாக வேண்டி கொண்டு விட்டு இப்போது ஏன் அவனையே நினைத்து கொண்டிருக்கிறாய் என்று அறிவு கேட்கும் கேள்விக்கு அவளுடைய மனதிடம் தான் பதில் இல்லை.
16
அன்று பல்கலைகழக வளாகமே பரபரப்பாக இருந்தது. சீனியர் மாணவர்களின் புராஜெக்ட் சப்மிசன். அவர்கள் பவர்பாய்ன்ட் ப்ரேசெண்டேசன் செய்யணும். பலகட்ட ஒத்திகைக்குப் பிறகு, பற்பல திருத்தங்களுக்குப் பிறகு இன்று தான் பைனல் செலக்சன். வெறும் கடைசி வருட தேர்வாக மட்டும் இது இருந்திருந்தால் இத்தகைய பரபரப்பு இந்த வளாகத்தில் இருந்திருக்காது. இன்று தேர்வுடன் இண்டர்நேசனல் கம்பனிகள் தங்களுக்கான ஊழியர்களை தெரிவு செய்வதற்கான இன்டர்வியூ நேரமும் கூட.
ஆடிட்டோரியாத்தில் எல்லா வகுப்பு மாணவர்களும் குழுமி இருந்தார்கள். இது மற்றைய மாணவர்களுக்கு நேரடி அனுபவ பாடம் ஆயிற்றே. அதனால் எல்லோருமே ஆஜர் ஆகி இருந்தார்கள்.
ரேணுவும் சாருவும் கல்லூரிக்குள் நுழையும் போது நிகழ்ச்சி தொடங்க நிறைய நேரம் இருந்தது. ஒவ்வொரு சீனியர் மாணவனை சுற்றியும் அவனுடைய ஜுனியர்களும் நண்பர்களும் குழுவாக கூடி இருந்தார்கள். அவரவர் குழுவில் கடைசி நேர ரிகர்சலை செய்து கொண்டிருந்தார்கள். கைகளில் லாப்டாப் வைத்து கொண்டு எதையோ விளக்கி கொண்டிருந்தார்கள். இன்றைய தேர்விற்கான முஸ்தீபுகளில் மும்முரமாக இருந்தார்கள்.
ரேணுவும் சாருவும் ராகவனை தேடிக் கொண்டிருந்தார்கள். அவன் ஏற்கனவே சொல்லி இருந்த இடத்தில் அதாவது அவர்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்தில் இன்னும் சிலருடன் இருந்தான். இவர்களை கண்டதும் ஹாய் என்று கையை அசைத்தவன் மிகவும் டென்சனாக காணப்பட்டான். கண்களில் இரவு தூக்கமின்மை அப்பட்டமாக தெரிந்தது. நெற்றியில் திருமண் இல்லை.
“ஹாய் ராகவன்.”
“ஹாய் சாரு”
“ஏன் ராகவன் நெற்றியில் இன்று நாமம் போட்டு கொள்ளவில்லை?”
“என்னது நெற்றியில் நாமம் இல்லையா? அச்சச்சோ. இது என்ன அபசகுனமா போச்சு.”
அவன் இப்படி பதறுவான் என்று சாரு நினைக்கவில்லை. ஏன்டா சொன்னோம்? என்று இருந்தது அவளுக்கு. இன்று தேர்வு முடிவு சரியாக இல்லை என்றால் இவன் நம்மை அல்லவா குறை சொல்வான் என்று நினைத்தாள். அதனால் அவனை சமாதானப்படுத்தும் விதமாக
மென்மையாகவே சொன்னாள்.
“இதில் என்ன இருக்கு? பக்தி மனசிலே இருந்தா போதும். ஏன் காலையில் தயாராகும் போது கண்ணாடியை பார்க்கலையா?”
“பார்த்தேன். அவசரத்தில் கவனிக்காமல் வந்து விட்டேன். ரொம்ப படபடன்னு இருக்கு சாரு”
“டென்சனாக இருக்காதீங்க. நல்லா செய்வீங்க. கவலைப்படாதீங்க”
“தேங்க்ஸ் பார் யுவர் விஷஸ். நல்ல கம்பனியில் பிளேஸ்மென்ட் ஆகணுமே என்று தான் டென்சன்.”
“எல்லாம் நல்லதா கிடைக்கும்”
“தேங்க்ஸ் ரேணு”
“சரி போய் வருகிறேன். உங்களை பார்த்து விட்டுத் தான் போகணும் என்று காத்திருந்தேன்”
“ஆல் தி பெஸ்ட்”
அவன் விரைந்து மறைந்து போனான். இவர்கள் இருவரும் நிதானமாக நடந்து கொண்டிருந்தார்கள். இவர்களுடன் நிகோசியும் திவ்யாமேனனும்,ஜெஸியும் வந்து சேர்ந்து கொண்டார்கள். பேச்சு இன்றைக்கு வரப்போகும் பன்னாட்டு கம்பனிகளைப் பற்றி இருந்தது. எந்தந்த கம்பனிகள், அதனுடைய தயாரிப்புகள், அதனுடைய வருட லாபங்கள், எத்தனை நாடுகளில் எத்தகைய கிளைகள், அதன் முதலாளி யார், எங்கே தலைமையிடம், எத்தனை சம்பளம் கிடைக்கும்? கம்பனியில் ஊழியர்களின் எதிர்கால வாய்ப்புகள் என்னென்ன? என்று சகல விவரங்களையும் அலசி ஆராய்ந்திருந்தார்கள்.
அதில் முக்கியமாக, டாப் பைவ் கம்பனிகளில் இன்று வருகின்ற ஜெர்மன் கம்பனி தான் முதலில் இருந்தது. நல்ல சம்பளமும் சலுகைகளும் கிடைக்க கூடிய ஜெர்மன் கம்பனியில் வேலை கிடைப்பது தான் இன்று தேர்வில் பங்கு பெரும் மாணவர்கள் அனைவரின் லட்சியமாக இருந்தது. அதில் யாருக்கு வேலை கிடைக்குமோ என்று அவர்களுக்குள் தர்க்கம் ஏற்பட்டது..
“லிடியா எலிசபத் ஆண்ட்ரூஸ் தான் முதலில் வருவாள்”
“இல்லை இல்லை. ஜான் ரிச்சர்ட் தான்”
“ஏன் அமெரிக்கர்கள் தான் வரவேண்டும் என்று ஏதேனும் சட்டமா?”
“அதானே, அகிரோ கூடத் தான் நன்றாக செய்கிறான்”
“அப்படி சொல்லு ஜெஸ்ஸி”
“யாரு?”
“அவன் தான் அந்த ஜப்பான்காரன் தான்”
“ஆமாம். அவனுடைய பெயருக்கு ஏற்ப மிகவும் பிரைட்டாக இருப்பானே அவன் தானே.”
“இத்தனை பேர் நன்றாக செய்யக்கூடியவர்கள் இருக்கையில் நீ என்னமோ அந்த அமெரிகன்ஸ் மட்டும் தான் நன்றாக செய்வதாக சொல்கிறாயே. நம் நாடுகள் இந்த பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்து விட்டாலும் கூட இன்னும் இந்த வெள்ளை தோலிடம் நமக்கு உள்ள பிரமிப்பும் கவர்ச்சியும் குறையவில்லை”
“அப்படி இல்லை நிகோசி, பொதுவாகவே இவர்கள் இருவரின் முந்தைய ப்ரேசெண்டேசன் மிகவும் நன்றாக இருந்தது. அதனால் தான் அத்தனை திட்டவட்டமாக சொல்கிறேன்”
“எங்கள் வில்லியம் சண்டே கூட வரலாம். அவனும் போன தடவை நன்றாகவே செய்திருந்தான்.”
“நிகோசி சொல்வது சரி. ஏன் நம் ரேணுவின் ஆள் கூடத் தான் நன்றாக செய்திருந்தான்”
“என்னது? என்ன சொன்னே?”
“நீ ஏன் இவ்வளவு ஆச்சரியப்படுகிறாய் சாரு? நான் ரேணுவின் ஆளைத் தான் சொன்னேன்”
திவ்யா மலையாள உச்சரிப்பில் உடைந்த தமிழில் நிறுத்தி நிதானமாக சொன்னாள். ரேணுவை திரும்பி பார்த்த சாரு அவள் முகத்தில் இருந்த வெட்கத்தை கண்டு அதிசயப்பட்டு கேட்டாள்.
“யாரு ரேணு உன் ஆள். எனக்கு கூட தெரியாமல்?”
“உனக்குத் தெரியாமல் என்ன? உனக்கும் கூடத் தான் தெரியும்”
“எனக்கு தெரியாது ரேணு சத்தியமா. யார் என்று சொல்”
“அவளிடம் ஏன் கேட்கிறே? அவள் என்னவோ இப்போது தான் கல்யாணம் ஆனவள் போல புதிதாக வெட்கப்படுகிறாள். என்னை கேள் நான் சொல்கிறேன்”
“ஏய் ரேணு. நிகோசிக்கு கூட தெரிந்திருக்கிறது. உன் ரூம்மேட் நான். எனக்குத் தெரியவில்லை பார்.ச்சே”
“ஏய், ரொம்ப அலட்டிக்காதே. நம் ராகவனைத் தான் எல்லோரும் அப்படி சொல்கிறார்கள்”
“ராகவனா?”
குரலில் ஒலித்த வியப்பை விட உள்ளத்தில் ஏற்பட்ட நிம்மதிக்கு அளவேயில்லை சாருலதாவிற்கு. அப்பாடா தொல்லை விட்டது. எப்படியோ இருவரும் நன்றாக இருக்கட்டும். நமக்கு தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போகட்டும்.
“அடியே நீ நல்லா இருக்க. எப்போதிலிருந்து?”
“எது எப்போதிலிருந்து?”
“அது தான் நீயும் ராகவனும்”
“ம்.ஊஹூம். நான் மட்டும் தான். ராகவனுக்கு தெரியாது. இன்னும் சொல்லவில்லை”
“அப்புறம் எப்படி இவர்கள் உன்னை கலாட்டா செய்கிறார்கள்?”
“என்னை கேள் சாரு நான் சொல்கிறேன்”
“சொல்லு திவ்யா.”
“ராகவனை கண்டதும் நம் ரேணுவின் முகம் மாறுவதையும் மலர்வதையும் பார்க்கணுமே. அடடடா…………..! எல்லோருக்கும் தெரிகிற மாதிரி தான் இருக்கும்”
“ஆனால் எனக்கு தெரியவில்லை. எனி வே ஆல் தி பெஸ்ட் ரேணு”
“ஆமாம் ரேணு. சீக்கிரமே ராகவனிடம் சொல்லி விடு. பிறகு யாரேனும் அவனை கொத்தி கொண்டு போய் விடப் போகிறார்கள்”
நிகோசி ஒருவேளை தன்னைத் தான் சொல்கிறாளோ என்று சின்னதாக ஒரு சந்தேகம் சாருவின் மனதிற்குள் மின்னலென வந்து போயிற்று.
ச்சே, ச்சே. இருக்காது.
nice