17
பிறகு பேச்சு வேறுவகையில் திரும்பியது. லேடீஸ் டாக். என்னென்னவோ பேசி கொண்டே முகப்பு கட்டிடத்தின் உள்ளே நுழைந்து பின்புறமாக நடந்தார்கள். பின்னால் இருக்கும் புதிய கட்டிடத்தில் தான் இருந்தது ஆடிட்டோரியம்.
போகும் வழியில் பச்சை புல்வெளி கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. புதிய பூக்கள் பூத்திருந்தது. ஒருவிதமான மணம் நாசியை துளைத்தது. நேற்றிரவு பெய்திருந்த மழையில் நனைந்திருந்த செடிகள் கும்மென்று விரிந்திருந்தது. மரங்களோ இலைகளில் ஒட்டியிருந்த மழைத்துளியை அங்கொன்றும் இங்கொன்றுமாக உதிர்த்து கொண்டிருந்தது. அவ்வாறாக விழுந்த ஒரு மழைத்துளி சாருவின் கன்னத்தில் பட்டென்று விழுந்து உருண்டு ஓடி கீழே விழுந்தது. அண்ணாந்து பார்த்தவளின் தலையில் மீண்டும் ஒரு மழைத்துளி. அந்த துளியின் சில்லிப்பு எலும்பு வரை ஊடுருவ உடலை குலுக்கி சிலிர்த்து கொண்டாள்.
தலையை உலுக்கியவளின் பார்வை வட்டத்திற்குள் விழுந்தவன் கௌதம் சேகர். அவனை சுற்றி ஒரு பெண்கள் கூட்டமே இருந்தது. அவனுடைய வகுப்பு தோழிகள் போலும். என்னவோ சீரியசாக அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள். கடைசி நேர தயாரிப்பு. ஆனால் கௌதமின் கைகளில் லாப்டாப்போ வேறு எந்த உபகரணமோ இல்லை. அவன் அந்த பெண்கள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தான். மிகவும் நிதானமாகவே காணப்பட்டான். சாம்பல் நிறத்தில் கோட்டும் சூட்டுமாக நன்றாக உடுத்தியிருந்தான். கண்களில் ஒரு அலட்சியம் இருந்தது.
இன்று பாடத்தில் தானே தேர்வு. இவன் அதற்கு தயாரானவன் போல் இல்லையே. என்னமோ
ஆணழகன் போட்டிக்கு போவது போல என்ன ஒரு அலங்காரம். கண்களிலும் உடல்மொழியிலும் தான் என்ன ஒரு இறுமாப்பு?
அதுசரி. நன்றாக தயார் ஆனவர்கள் தான் இன்றைக்கு மிகவும் நன்றாக செய்ய வேண்டுமே என்று பதறுவார்கள். இவனுக்குத் தான் அத்தகைய கவலை இல்லையே. போன தடவையே அவ்வளவு நன்றாக செய்யவில்லை. இப்போது ஏன் அலட்டி கொள்ளவேண்டும் என்று நினைத்து விட்டான் போலும். எப்படியோ போகட்டும். நமக்கென்ன வந்தது?
“ஹாய் சாரு”
“ஹாய் சேகர். ஆல் தி பெஸ்ட்”
கையை அசைத்து விட்டு மேல்கொண்டு அங்கே நிற்காமல் நடந்தாள். அவன் அழைத்ததும் அவள் நின்று பேசுவாள் என்று எதிர்பார்த்தவர்கள் அவள் பேசாமல் உடன் வருவதை கண்டு அவர்களாகவே கௌதமை பற்றி பேசி கொண்டு வந்தார்கள்.. அவன் உடையை பற்றி. அவன் ஆடம்பரத்தை பற்றி தொடங்கியவர்கள் போன தடவை அவனுடைய பிரசென்டேசனில் நல்ல ஆழம் இருந்தது என்றும் நன்றாக தன்னம்பிக்கையுடன் பேசினான் என்றும் சிலாகித்து கொண்டார்கள்.
###
ஆடிட்டோரியம் நிரம்பி இருந்தது. மாணவர்கள் மத்தியில் மட்டுமல்லாது ஆசிரியர்கள் இடையிலும் ஒரு பரபரப்பு இருந்தது. மேடையில் மட்டும் ஒளி வட்டம் இருந்தது. கல்லூரியின் முதல்வர் அன்று நடக்க கூடிய தேர்வை பற்றியும் கம்பனிகளின் வருகையை பற்றியும் மாணவர்கள் நிதானமாக சிறப்பாக தேர்வை செய்து முடிக்க வேண்டும் என்றும் ஒரு சிறு முகவுரை கொடுத்து எல்லோரையும் வரவேற்று வாழ்த்தி விட்டு அமர்ந்தார்.
நிகழ்ச்சி தொடங்கியது. சிலர் நன்றாகவும் சிலர் சிறப்பாகவும் செய்தார்கள். சொதப்பல்களும் இருக்கத் தான் இருந்தது. ராகவனை போன்ற சிலரின் அருமையான விஷய ஞானம் அவர்களுடைய தடுமாற்றத்தில் அடிபட்டு போயிற்று. சிலர் தன்னம்பிக்கையுடன் செய்தார்கள். ஆனால் போதுமான விஷயங்களை தயாரித்ததில் சறுக்கல்.
ஆனால் சாரு ஆச்சரியப்படத் தகுந்த வகையில் கௌதமின் பிரசென்டேசன் மிகவும் நன்றாக இருந்தது. அவனுடைய ஸ்டைலும் நிமிர்வும் விஷய ஞானமும் மொழித் திறனும் மிகவும் பாராட்டப் பெற்றது.
இறுதியாக டாப் பைவ் மாணவர்கள் மேடைக்கு அழைக்கப்பட்டார்கள். எதிர்பார்த்தது போலவே லிடியா, ஜான், வில்லியம்ஸ், அகோரா, மற்றும் கௌதம். டாப் பைவில் கண்டிப்பாக எதிர்பார்க்கப்பட்ட ராகவன் இல்லை.
கூட்டத்தில் அவன் முகத்தை பார்க்க முடியவில்லை. ஆனாலும் நிச்சயமாக கண்களை துடைத்து கொண்டு இருந்திருப்பான். பாவம்.
முதல் ஐந்து மாணவர்களையும் ஒவ்வொருவர் பெயரையும் அறிவித்து மேடைக்கு அழைத்து நல்ல நல்ல டாப் கம்பனிகளில் அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை கொடுக்க கொடுக்க கூட்டத்தில் கைத்தட்டல். இறுதியாக ஜெர்மன் கம்பனியில் தேர்வானவன் கௌதம் சேகர். இப்போது கைத்தட்டல் கட்டிடத்தையே கிடுகிடுக்க வைத்தது.
இவனா..! கௌதம் சேகர்.? ஜெர்மன் கம்பனியில்..? அதிர்ஷ்டம் என்றும் சொல்லி விட முடியாதபடி அவனுடைய திறமைக்கு இன்று இந்த கல்லூரி வளாகமே சாட்சி சொல்லுமே.
அப்படியானால் உண்மையிலேயே கௌதம் திறமைசாலி தான். நமக்குத் தான் அவன் அருமை தெரியவில்லை.
வேண்டாம். தெரிய வேண்டாம். அவனும் அவன் பழக்க வழக்கங்களும். நட்பு கொள்ள கூட தகுதியானவன் இல்லை.
கூட்டம் ஒருவரை ஒருவர் வாழ்த்தி கொண்டு கலையத் தொடங்கியது. ராகவனையோ பிரதேசத்தில் காணவில்லை. கௌதமையோ அருகே கூட நெருங்க முடியவில்லை.
சாருலதாவும் ரேணுவும் வெளியே வந்தார்கள். மெல்லியதாக சிணுங்க தொடங்கியிருந்த மழையில் காலாற நிதானமாக நடந்து போனார்கள்.
சாருவிற்கு மனது மட்டும் கௌதம் மேடையில் நின்றிருந்த ஸ்டைலையும் அவனுடைய ஏற்ற இறக்கமான குரலையும் மொழித்திறனையும் அவன் ஆளுமையையும் நினைத்து கொண்டிருந்தது.
இவன் விளையாட்டு பிள்ளை இல்லை. ஆழமானவன். விவரமானவன். எல்லோரையும் மயக்கி மாயம் செய்து விடக்கூடிய வித்தை அறிந்தவன்.
18
கூட்டம் கலைந்து சாருலதா வெளியே வந்த போது தூறல் முழுமையாக நின்றிருந்தது. ராகவனை கண்கள் தேடியது. காணவில்லை. தேடியவாறே காம்பவுண்ட் கேட்டை நோக்கி வந்தாள். ராகவன் அவன் சக மாணவர்களுடன் பேசி கொண்டிருந்தான். இவளைக் கண்டதும் அருகில் வந்தவன் “என்ன சாரு. தனியாக போகிறாய்? என்று கேட்டான்.
“ரேணு அவளுடைய் பிரெண்ட்ஸ் உடன் போய் விட்டாள். அவள் உங்களை வாழ்த்துவதற்காக ரொம்ப நேரமாக தேடிக் கொண்டிருந்தாள். எங்கே போய் விட்டீர்கள் ராகவன்?”
“ரொம்ப கடுப்பா இருந்தது.”
“ஏன்?”
“நான் எவ்வளவு கஷ்டப்பட்டு தேர்விற்கு தயார் செய்தேன். ஆனால் இப்படி ஆகி விட்டதே”
“ஏன் நன்றாகத் தானே செய்திருந்தீர்கள்? நல்ல கம்பனியில் வேலையும் உறுதியாகி விட்டது. இன்னும் எதற்கு கடுப்பு?”
“சொல்ல கூடாது தான். ஆனாலும் மனசு கேட்கலை. அதனால் சொல்கிறேன்”
“என்ன பீடிகை பலமாக இருக்கிறது?”
“இல்லை. எந்நேரமும் கண்டவர்களுடன் சுற்றி கொண்டிருப்பவனுக்கு பார்த்தாயா எப்படி ஒரு அதிர்ஷ்டம் என்று”
“யாரு……? கௌதமை சொல்கிறீர்களா?”
“ஆமாம் அவனைத் தான் சொல்கிறேன்”
அதிர்ஷ்டமா? அவனுக்கா? இல்லையே. அத்தனை பெரிய கூட்டத்தில் எத்தனை அருமையாக அழகாக அற்புதமாக தன்னுடைய பிரேசென்டேசனை செய்தான். கட்டிடமே கிடுகிடுத்து போகுமளவிற்கு எப்படி ஒரு கைத்தட்டல். இது அதிர்ஷ்டத்தினால் கிடைக்க கூடியது இல்லையே. திறமை அல்லாமல் வேறு என்ன? இவனுக்கு கிடைக்காத உயர்வு அவனுக்கு கிடைத்ததினால் எப்படி எல்லாம் பேசுகிறான் இவன்.
“அப்படியா சொல்கிறீர்கள்? அதிர்ஷ்டத்தினால் மட்டும் ஒருவனுக்கு இத்தகைய உயர்வு கிடைத்து விடுமா என்ன?”
“கிடைத்து விடுமா என்று ஏன் கேட்கணும்? அது தான் கண்ணாலேயே பார்த்தோமோ. இன்னும் என்ன?
அவளுக்கு இதை ஒப்பு கொள்ள மனம் வரவில்லை. அவர்கள் அனைவருமே தொழில் நிர்வாகம் தானே படிக்கிறார்கள். அவளுக்குமே அவர்களுடைய தேர்வின் விவரம் புரிந்து தானே இருந்தது.
ராகவன் அடிப்படையில் நிர்வாக சீர்கேட்டால் நலிந்திருந்த ஒரு தொழிலை சரி செய்து அதை மேம்படுத்த வேண்டும் என்பதான பிரசென்டேசனில் அந்த தொழிலைப் பற்றிய ஒரு முன்னுரை அதனுடைய வருடாந்திர லாபம் வரவு செலவு பங்கு மதிப்பு சந்தை நிலவரம், அதில் எங்கே நிர்வாக சீர்கேடு? எதனால்? யாரால்? அதாவது எத்தகைய ஊழியர்களால்? எப்படி களைவது? களைந்து எப்படி தொழிலை மேலும் விஸ்தரிப்பது என்று விரிவான திட்ட அறிக்கையாக தந்திருந்தான்.
கௌதமோ முற்றிலும் புதியதான ஒரு தொழிலை தொடங்குவதைப் பற்றி விளக்கி இருந்தான். எப்படி? எங்கே? யாரிடம் எல்லாம் மூலதனம் சேகரிப்பது? எத்தகைய பொருளை உற்பத்தி செய்வது? எந்த நாட்டில் அதற்கான சூழல் உள்ளது? சந்தையில் அந்த பொருளின் தேவையின் அளவு? உற்பத்திக்கு மூலப்பொருட்கள் கொண்டு வருவது, பொருட்கள் தயாரிப்பு, சந்தைபடுத்துதல் என்று ஒரு அரிய ஒப்பீட்டு அறிக்கையை சமர்ப்பித்திருந்தான்.
அப்படி உருவாக்கப்படும் தொழிற்சாலையில் எங்கெல்லாம் நிர்வாக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது? அதன் ஊற்றுகண் எது? அதை எப்படி விலக்குவது? அதனால் ஏற்படக்கூடிய சேதாரம். அதிலிருந்து எப்படி மீள்வது? தொழிலை எப்படி விஸ்தரிப்பது? தொழிலின் அல்டிமேட் இலக்கு எது? அதை அடைய நடைமுறை வாய்ப்புகள் எவ்வளவு? என்று புதிதாக அவனே ஒரு
தொழிலை தொடங்கி செய்வது போல இருந்தது.
முக்கியமாக அவனுடைய உழைப்பு இதில் தெரிந்தது. நீண்ட ஆராய்ச்சியும் அதீத படிப்பும் நிறைய அனுபவபாடமும் இருந்தது. என்னமோ ஆண்டாண்டு காலமாக ஒரு வெற்றி பெற்ற தொழிலை நடத்தி வருபவர்களைப் போன்று அவனுடைய பிரசெடேசனில் ஒரு தெளிவு இருந்தது. யாரோ அனுபவப்பட்டவன் போன்று அல்லது அனுபவசாலி யாருடனோ கலந்து இதை செய்தது போன்று அத்தனை கனகச்சிதமாக இருந்தது.
அதில் இருந்த அனுபவப் பாடத்தை பார்த்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கௌதமிற்கு வேலைக்கான ஆர்டரை கொடுத்த போது சொன்னார்.
“வி பீப்பிள் ஆர் டாக்கிங். பட் திஸ் மேன் ஈஸ் டூயிங்”
அந்த அளவிற்கு கௌதமின் படைப்பு பார்வையாளர்களை மட்டும் அல்லாமல் தேர்வாளர்களையும் கவர்ந்தது என்றால் அதுவே அவனுக்கு ஜெர்மன் கம்பனியில் வேலை கிடைக்க காரணமாகவும் இருந்தது.
உண்மை இவ்வாறாக இருக்கையில் ராகவன் கௌதமிற்கு இந்த வேலை கிடைத்தது முற்றிலுமாக அதிர்ஷ்டத்தினால் தான் என்று அறுதியிட்டு உறுதியாக சொன்னது முற்றிலும் பொறாமையினால் என்பது சாருவிற்கு புரிந்தது.
‘”சரி வாருங்கள் ராகவன் அறைக்கு போகலாம்” என்று கூப்பிட்டாள்.
அவளுடைய ரியாக்சன் ராகவனுக்கு அவ்வளவாக பிடிக்கவில்லை. கௌதமின் குறைகளை நம்மோடு சேர்ந்து சாருவும் பெரியதாக பேசுவாள் என்று நினைத்திருந்ததற்கு மாறாக சாரு ஒரு வார்த்தை கூட கௌதமை குறைத்து பேசினாள் இல்லை. குறைந்தபட்சம் கௌதமின் அதிர்ஷ்டத்தை பற்றி ஒரு சில வார்த்தைகளை அவள் பேசி இருந்திருந்தால் ராகவனுக்கு சற்றே மனது ஆறுதலாக இருந்திருக்கும். பேசியவருக்கு ஆறுதலுக்காக கூட சாரு கௌதமை குறைத்து பேசாதது ராகவனுக்கு குறையாக இருந்தது. அதற்கு மேல் அவளுடன் பேசுவதற்கு அவனுக்கு ஒன்றும் இல்லாமல் போயிற்று.
“இல்லை சாரு, நீ போ. நான் பிறகு வருகிறேன்”
“ஹாய் ராகவன், எங்கே போய் இருந்தீர்கள்? ரொம்ப நேரமாக உங்களைத் தேடி கொண்டிருந்தேன்.”
‘எதற்கு தேடினே ரேணு?”
“என்ன இப்படி ஈசியா கேட்டுட்டீங்க? சூப்பரா வேலை கிடைச்சிருக்கு. கன்க்ராசுலேட் பண்ண வேண்டாமா உங்களை?”
“ஆமாம். பொல்லாத பெரிய வேலை. நீ வேறு வாழ்த்துவதற்கு. அடப்போ ரேணு. நானே கடுப்பிலே இருக்கேன்”
“ஏன் கடுப்பு? சூப்பெரா இருந்தது உங்களுடைய தயாரிப்பு. மேற்கொண்டு மிகவும் நன்றாகவே செய்தீர்கள். நல்ல கம்பனியில் வேறு வேலை கிடைத்து விட்டது. இன்னும் என்ன?”
நீ தான் என்னை மெச்சிக்கணும்”
“அப்கோர்ஸ், நான் தான் உங்களை மெச்சிக்கணும். வேறு யார் புகழனும் உங்களுக்கு?”
“என்ன புகழ்ந்து என்ன? டாப் பைவில் வரலையே”
“ஓஹோ அதைச் சொல்கிறீர்களா?”
“ஆமாம். வருஷம் பூராவும் எத்தனை கஷ்டப்பட்டு உழைத்தேன். நோகாமல் சில பேர் எப்படி முதல் இடத்தை தட்டி கொண்டு போய்ட்டாங்க”
“ஓ, நீங்க கௌதமை சொல்கிறீர்களா?”
“ஆமாம்”
“அவனை விடுங்க. அதெல்லாம் அதிர்ஷ்டம்”
“அந்த அதிர்ஷ்டம் எனக்கு இல்லையே”.
”அது அப்படித் தான். உழைப்பு இருக்கும் இடத்தில் அதிர்ஷ்டம் இருக்காது. அது தெரிந்தது தானே.”
“நீ ஈசியா சொல்லிட்டே. அவனுடைய அதிர்ஷ்டத்தை யாரும் சொல்ல மாட்டார்களே. அவன் என்னவோ மிகப் பெரிய திறமைசாலி என்று தானே கொண்டாடப்படுவான்”
“அவன் முதல் இடத்தை பிடித்து விட்டதினால் மட்டும் திறமைசாலி ஆகி விட முடியுமா? வேலைக்கு போகும் இடத்தில் அதை நிருபிக்க வேண்டாமா?”
“ஏன் அங்கேயும் கூடத் தான் நிரூபிப்பான்.”
“அதெல்லாம் சும்மா ராகவன். எல்லா நேரமும் எல்லா இடத்திலும் அதிர்ஷ்டம் துணைக்கு வராது”
பாரு இதைத் தான் நான் எதிர்பார்த்தேன் என்பது போன்று சாருவை ஒரு பார்வை பார்த்தான் ராகவன். புரிகிறது. ஆனால் ரேணு சொன்னதை சாருவால் ஒப்ப முடியவில்லையே. திறமையே இல்லாமல் வெறும் அதிர்ஷ்டத்தால் மட்டும் ஒருவனால் இத்தகைய இடத்திற்கு உயர்விற்கு வரமுடியாதே. தனக்கு ராகவனிடம் சொல்வதற்கு எதுவும் இல்லை. ரேணுவை போல பேசவில்லை நீ. எனக்கு ஆறுதலுக்கேனும் அப்படி ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசி இருந்திருக்கலாம் என்ற ராகவனின் குற்றம் பிடிக்கும் கண்களை சந்திக்கவும் அவளுக்கு விருப்பம் இல்லை.
Yennaku thiramai erukkunu kaatikanumaaa… Illaaa namma talent ah nirubikanumaaa…. Ithula porama yenga erunthu varuthu???
nice