Skip to content
Home » மயங்கினேன் நின் மையலில்…29

மயங்கினேன் நின் மையலில்…29

காலை சூரியன் தன்னுடைய பணிக்கு வந்துவிட்டது.  ஆனால் தருண் இன்னும் வீட்டிற்கு வரவில்லை  பூஜாவோ சோபாவில் அமர்ந்தபடியே தூங்கி விட்டாள்.

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

காலை 8:30 மணிக்கு செழியன் வழக்கம் போலவே அவன் வீட்டிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தான்.

அப்பொழுது அங்கே வந்த பேருந்து எப்பொழுதும் போல கூட்டம் நிரம்பி வலிந்தபடியே வர, “அடக்கடவுளே…. இன்னைக்கும் இவ்ளோ கூட்டமா?  இந்த பஸ் என்னைக்காவது ஃப்ரீயா வந்தா மட்டும் தான் அதிசயம்” என்று தன் மனதில் நினைத்தவாரே பேருந்தை நோக்கி நடந்தான்.

பேருந்துக்கு  சுமார் 20 அடி தொலைவில் செழியன் நடந்து வந்துகொண்டிருக்கும் போது, சரியாக அவனின் முன்பு வந்து தன்னுடைய ஸ்கூட்டியை நிறுத்தினாள் ஜமுனா.

ஜமுனாவை அங்கே எதிர்பார்க்காதவனோ “நீங்க எப்படி இங்க? என்று கேட்டான்.

“நான் உங்க கூட ஒன்னா டிராவல் பண்ணலாம்னு நினைச்சேன். ஆனா நீங்க தான் எப்பவும் பஸ்ல தான் வருவேன்னு சொல்லிட்டீங்க. நம்ம ரெண்டு பேரும் வேற வேற ரூட். அப்புறம் எப்படி ரெண்டு பேரும் ஒன்னா டிராவல் பண்ண முடியும்? அதான் ரொம்ப நேரம் யோசிச்சு பார்த்தேன். நான் தானே உங்க கூட ட்ராவல் பண்ண முடியாது? ஆனா நீங்க என் கூட ட்ராவல் பண்ணலாமே…. அதான் வண்டியை எடுத்துட்டு நேரா உங்களை பிக்கப் பண்ணிக்க  வந்துட்டேன்” என்று அவளோ  வாழ்க்கை பயணத்தையும் வழிப்பயணத்தையும் சேர்த்து கோர்த்தவாரே கோர்வையாய் பேசினாள்.

அவள் சொல்வதின் உள்ள இரண்டு அர்த்தத்தையும் ஓரளவு புரிந்தவன் “நீங்க ஆபீஸ் போற ட்ராவலை மட்டும் தான சொல்றீங்க?”  என்று  அதை உறுதிப்படுத்திக் கொள்ள

“உங்களுக்கு இப்போ அது மட்டும் தானே புரிஞ்சது? இல்ல வேற எதுவும் புரிஞ்சுதா?”  என்று அவனின் வாயாலேயே அவளுடைய காதலை சொல்ல வைக்க சூழ்ச்சியாக  பேசினாள்.

ஆனால் அவளின் சூழ்ச்சி  வலையில் சிக்காதவனோ எனக்கு “யாரோட ஹெல்ப்பும் எனக்கு தேவை இல்லை. நான் பஸ்ஸிலையே போயிக்கிறேன்”  என்று சொன்னான்.

“இவ்ளோ தூரம் வந்துட்டேன். இதுக்கு அப்புறம் திரும்பி ஆபீஸ் போகணும்னா தனியா தான் போகணும். நான் தனியா போனாலும் ஒரே அளவு பெட்ரோல் தான் செலவாக போகுது. நீங்க என்கூட வந்தாலும் ஒரே அளவு பெட்ரோல் தான் செலவாக போது. டிக்கெட் காசு மிச்சம். சோ இப்போவே ரெண்டு பேரும் சேர்ந்து போனா பணமும் மிச்சம்….  அலைச்சலும் மிச்சம்…கஷ்டமும் மிச்சம்” என்று அவளோ மறுபடியும் இரண்டு அர்த்தத்துடனே பேசிட

“நீங்க எப்பவுமே இப்படித்தானா?” என்று அவளை ஆச்சரியமாய் பார்த்தபடியே கேட்டான் செழியன்.

“எப்பவுமே இப்படி இல்ல…… இப்போ தான் இப்படி… உங்களை பார்த்துக்கு அப்புறம்”  என்று அவள் பேசும் வார்த்தைகளில் கொஞ்சம் மயங்கி தான் போனான் அவன். ஆனாலும் அதை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

அவள் பேசியதற்கு பதில் எதுவும் பேச முடியாதவன் அமைதியாகவே நிற்க, அந்த இடைவெளியில் பேருந்து அந்த இடத்தை விட்டு நகர்ந்தது.

பேருந்து நிறுத்தத்தை தாண்டி பேருந்து செல்வதை கவனித்த ஜமுனாவோ “அங்க பாருங்க… உங்க பஸ் போயிருச்சு…  இதுக்கப்புறம் எப்படி ஆபீஸ் போவீங்க? உங்களுக்கு வேற வழியே இல்ல… என் கூட தான் வந்தாகனும்…. ”  என்று வில்லத்தனமான சிரிப்பு ஒன்றை சிரித்தபடியே சொன்னாள்.

“அட ஏங்க இப்படி பண்றீங்க?” என்று அலுத்து கொண்டவாரே அவனும் அவளுடைய வண்டியில் ஏறினான்.

“ஆபீஸ்க்கு மட்டும் இல்ல செழியன்… வாழ்க்கையிலும் நீங்க என் கூட தான் வந்தாகணும். உங்களுக்கு வேற வழியே இல்ல” என்று அவளோ மெதுவான குரலில் சொல்லிட, அது சரியாக காதில் விழுகாதவனோ “என்ன சொன்னீங்க?’ என்று கேட்டான்.

“இல்ல…  வீட்ல இருந்து ரொம்ப தூரம் வண்டி ஓட்டிட்டு வந்தேனா… சோ… கை  கொஞ்சம் வலிக்குது. அதனால நீங்க ட்ரைவ் பண்றீங்களா?”  என்று அவளோ நைசாக அவளுடைய ஆசையை நிறைவேற்ற திட்டம் ஒன்றை தீட்டிட,

“அவ்ளோ கஷ்டப்பட்டு உங்களை யாரு இங்க வண்டி எடுத்துட்டு வர சொன்னா?”  என்று அவனும் அவள் மேல் உள்ள அக்கறையில் அவளிடம் கோபித்துக் கொண்டான்.

“இல்ல…. இவ்வளவு தூரம் தனியா வரும்போது வலி தெரியல…. ஆனா இப்போ நம்ம கூட  நமக்காக ஒருத்தர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் வலிக்குது…”  என்று அவள் சொல்வதின் அர்த்தத்தை அப்போது அறிந்திடாதவனோ “சரி ஓகே… நானே டிரைவ் பண்றேன்… வாங்க” என்று வண்டியை விட்டு எழுந்தான்.

ஜமுனாவின் ஸ்கூட்டியை செழியன் ஓட்டிட, அவளோ அவன் பின்னால் அமர்ந்தபடியே, முதல் முறையாக வாழ்க்கையையும் அந்த பயணத்தையும் ரசித்த படியே வந்து கொண்டிருந்தாள்.

பூஜாவோ கண்விழித்துப் பார்க்க மணி ஒன்பதை தாண்டி இருந்தது. ஆனாலும் இன்னும் தருண் வரவில்லை.

சுவர் கடிகாரத்தை பார்த்தவள், இப்பொழுது தன்னுடைய போனை எடுத்து தருணுக்கு போன் செய்தாள்.

நேற்று இரவு வரை ரிங்கான அவனின் போன், இப்பொழுது ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. இதை கேட்டவளுக்கு பயம் நெஞ்சை அடைத்தது.

“அச்சச்சோ இந்த தருணுக்கு என்னதான் ஆச்சு? எனக்கு வேற ரொம்ப பயமா இருக்கு. இப்போ என்ன பண்றது?” என்று அந்த அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தாள்.

அப்பொழுது யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்கவே, தருணாக இருக்குமோ என்று நினைத்து வேக வேகமாக ஓடி சென்று கதவை திறந்தாள்.

அவள் எதிர்பார்த்தது போலவே தருண் தான் வந்திருந்தான். அவனை பார்த்த பிறகு தான் அவளுக்கு நிம்மதியான மூச்சே வந்தது.

இவ்வளவு நேரம் இருந்த அதீத பயத்திலும், இப்பொழுது அவள் கண் முன்னே நல்லபடியாக அவன் நிற்பதை பார்த்த சந்தோஷத்திலும், அவனை அணைக்க, அவனை நெருங்கி வேகமாக சென்றவளை, ஏதோ ஒன்று  தடுக்க, அவனின் கையை மட்டும் இறுக்கமாக பிடித்த படியே “எங்க போனீங்க தருண்? போன் பண்ணி ஒரு வார்த்தையாவது சொல்லி இருக்கலாமே…  நான் எவ்வளவு பயந்தே போயிட்டேன் தெரியுமா? நைட் முழுசும் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருந்தேன்”  என்று படபடவென்று பதற்றமாக சொல்லி முடித்தாள்.

“என்ன சொல்றீங்க பூஜா? எனக்காக பயந்து போயிட்டீங்களா? என் மேல உங்களுக்கு அவ்வளவு பாசமா? இந்த பாசத்துக்கும் அன்புக்கும் பேர் என்ன வச்சுக்கலாம் ?நீங்களே சொல்லுங்க?”  என்று அவள் வாயிலிருந்து வார்த்தைகளை வரவழைக்க இப்படி பேசினான் தருண்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ,அவன் கேட்ட கேள்விக்கு அவளிடம் எந்த பதிலும் இல்லை.

“நீங்க இன்னும் என்னை ஹஸ்பண்டா ஏத்துக்கவே இல்ல. அப்படி இருக்கும் போது நேத்து நைட் முழுசும் நான் வரலைன்னு நீங்க எதுக்காக வருத்தப்படணும்? நீங்க எதுக்கு எனக்காக காத்திருக்கணும்? எதுக்காக நீங்க என்ன நினைச்சு பயப்படணும்? இது எல்லாத்துக்கும் மேல நான் இப்போ இங்க வந்து நின்னுதும் எதுக்காக நீங்க சந்தோஷப்படணும்? இது எதுவுமே எனக்கு புரியலையே”  என்று அவன் கேட்க

“என்ன பேசுறீங்க தருண்? இவ்வளவு நாள் நீங்க என் கூட இருந்திருக்கீங்க. அப்படி இருக்கும் பொழுது உங்களை காணோம் அப்படின்னா என் மனசு துடிக்காதா? எனக்காக நீங்க நிறைவே பண்ணி இருக்கீங்க. நிறைய இடத்துல என்னை புரிஞ்சு நடந்திருக்கீங்க. அப்படி இருக்க ஒருத்தருக்கு ஏதாவது பிரச்சனைன்னா எனக்கு கஷ்டமா இருக்காதா?”  என்று அவள் தன் தரப்பு நியாயத்தை சொல்ல முயற்சி செய்ய, அந்த நியாயம் அவனுக்கு ஏற்புடையதாய் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அவனும் ஒரு வெற்று புன்னகை ஒன்றை உதிர்த்தபடியே வீட்டினுள் நுழைந்தான்.

அவன் உள்ளே வந்ததும் “எங்க போனீங்க தருண்? ஒரு போன் பண்ணி சொல்லியிருந்தா எனக்கு இவ்ளோ டென்ஷன் இல்லையே… அட்லீஸ்ட் நான் பண்ண போனையாவது எடுத்து பேசி இருக்கலாம்”  என்று அவள் கேட்க.

“இங்க பாருங்க பூஜா…. நான் எங்க போறேன், எங்க வரேன்னு, உங்க கிட்ட சொல்லனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.  உங்க மனசாட்சியை தொட்டு சொல்லுங்க. நீங்க என்கிட்ட எல்லாத்தையும் ஷேர் பண்றீங்களா?” என்று அவன் கொஞ்சம் கோபமாய் கேட்டிட, அந்த வார்த்தை அவள் நெஞ்சை குத்துவது போல் இருந்தது.

அவன் கண்ணன் விஷயத்தை தான் கேட்கிறானோ என்ற தயக்கம் அவளுக்குள் இருந்ததால், அவன் கேட்ட கேள்விக்கு அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அமைதியாகவே இருந்தாள்.

“நீங்க என்கிட்ட உண்மையா இல்லாதபோது, நான் மட்டும் எதுக்காக எங்க போனேன்னு சொல்லணும்?” என்று அவன் சொல்லிட, அதைக் கேட்டவளுக்கு அழுகையே வருவது போல் இருந்தது

“சாரி தருண்…. தெரியாம கேட்டுட்டேன். உங்களோட வாழ்க்கையில என்னோட இடம் எதுன்னு தெரியாம நடந்துகிட்டேன். நீங்க என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம். இதுக்கப்புறம் உங்களை பத்தி நான் கேட்கவே மாட்டேன்” என்று சொன்னவளோ கண்ணீரோடு பூர்ணா இருக்கும் அறையை நோக்கி நடந்தாள்.

அவள் உள்ளே போவதை பார்த்தவனோ “நில்லுங்க பூஜா… உங்க அப்பா கிட்ட நான் போன் பண்ணி பேசுனேன்….”  என்று  சொன்னதும் அவளோ அவன் புறம் திரும்பி கேள்வியாய்  பார்த்தாள்.

அவளின் கேள்வியை, அந்த ஒற்றை பார்வையிலேயே உணர்ந்தவன் “பூர்ணா இங்க இருக்கிறத பத்தியும், நீங்க இந்த வீட்ல இருக்குறத பத்தியும் சொன்னேன். என்னோட தம்பி எல்லா சொத்தையும் எழுதி வாங்கிட்டதையும் சொன்னேன். ரொம்ப கோபப்பட்டாங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல இங்க வந்து உங்களை கூட்டிட்டு போய்டுவாங்க” என்று தருண் சொன்ன விஷயம்  அவள் மனதில் அடுத்த இடி விழுவது போல இருந்தது.

இதற்கு முன்பு அவன் பேசிய வார்த்தைகளையே தாங்கிக் கொள்ள முடியாதவளுக்கு இந்த விஷயம் இன்னும் அதிர்ச்சியாக தான் இருந்தது.

தருண் சொன்னது போலவே அடுத்த ஐந்தே நிமிடத்தில் பார்வதியும் மெய்யரசனும் பூஜா இருக்கும் வீட்டிற்கு வந்தார்கள்.

வேகவேகமாக உள்ளே நுழைந்த மெய்யரசனும், தருணின் சட்டையை பிடித்து “நீ எல்லாம் மனுஷனாடா? கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம என்னை ஏமாத்தி  என்னோட பொண்ணை  கல்யாணம் பண்ணியிருக்க? அது மட்டும் இல்லாம மூணு மாசமா எங்க எல்லாரையும்  ஏமாத்திருக்க. என்னோட பொண்ணு இந்த விஷயத்தை என்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லல. அந்த அளவுக்கு நீ அவளை மிரட்டி வச்சிருக்க?” என்று கோபத்தில் வார்த்தைகளை கொட்டினார்.

பார்வதியோ தன் மகளிடம் என்ன பேசுவது என்று தெரியாமல், பூஜாவை கட்டியணைத்து அழுக ஆரம்பித்தார். “என்ன பூஜா…. இப்படி ஆயிடுச்சேடி….”   என்று கண்ணீரோடு தன் மகளைப் பார்த்து சொன்னார்.

தன்னுடைய அப்பா அம்மாவின் குரலை கேட்ட பூர்ணாவோ, அறையில் இருந்து கஷ்டப்பட்டு மெதுவாக எழுந்து ஒவ்வொரு அடியாக வைத்து வெளியே வந்தாள்.

தன்னுடைய அப்பா அம்மாவை பார்த்தவளுக்கு சந்தோஷமாக இருந்தாலும், இப்பொழுது எப்படி அவர்களிடம் போய் பேசுவது என்ற தயக்கமும் பயமும் இருக்கத்தான் செய்தது. அவர்களிடம் பேச வார்த்தைகள் இன்றி அந்த அறையின் வாசலில் நின்றபடியே தன்னுடைய அப்பாவையும் அம்மாவையும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

கதவோரத்தில் நின்று கொண்டிருக்கும் பூர்ணாவை அவளுடைய அப்பாவும் அம்மாவும் பார்க்க தவறவில்லை.

தன்னுடைய அப்பா தருணின் சட்டையை பிடித்து கோபமாக பேசுவதை பார்த்தவளோ “அப்பா…. அவர் கிட்ட எதுக்கு இப்படி நடந்துக்குறீங்க? நீங்க நினைக்கிற அளவுக்கு அவர் மோசமானவரு  கிடையாது. நீங்க  தப்பா புரிஞ்சுட்டு பேசுறீங்க.  அவர் தம்பி பண்ண தப்புக்கு அவரு என்ன பண்ணுவாரு?”  என்று பூஜா அவளுடைய கணவனுக்கு சாதகமாய் பேசிட

இவ்வளவு நேரம் தருணிடம்  கோபமாக பேசியவர் இப்பொழுது பூஜாவை நோக்கி வந்து “சாரிம்மா… அப்பாவை மன்னிச்சுடுடா… உன்னோட வாழ்க்கையை அப்பா இப்படி நாசம் பண்ணிட்டேனே… என் பொண்ணு நல்லா வாழுவான்னு நம்பி தான்டா இந்த ஃப்ராடுக்கு உன்னை கல்யாணம் பண்ணி வச்சேன். ஆனா இவன் இப்படி ஏமாத்துவான்னு  நான் கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கலம்மா”  என்று பூஜாவின் இரு கைகளையும் பிடித்து தன்னுடைய கண்களின் மேல் வைத்த அழுக ஆரம்பித்தார்.

“அப்பா… நீங்க அழுகாதீங்கப்பா… ப்ளீஸ்ப்பா…. நீங்களும் அம்மாவும் எதுக்காகவும் வருத்தப்படக்கூடாதுன்னு  தான் இந்த கல்யாணத்தையே பண்ணிக்கிட்டேன். அப்படி இருக்கும்போது என் கண்ணு முன்னாடியே நீங்க அழுகிறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்குப்பா”  என்று இப்பொழுது பூஜாவும் அழுக ஆரம்பித்தாள்.

பூஜாவும் அழுவதை பார்த்த மெய்யரசனுக்கு மனது வலித்திட “பூஜா….. நீ அழுகாதம்மா….  தயவுசெஞ்சு நீ அழுகாதம்மா…. என்னோட பொண்ணு இதுக்கு அப்புறம் அழுகவே கூடாது. இப்பவே அப்பா கூட கிளம்பி வா…போலாம்….  இந்த மாதிரி ஏமாத்துக்காரன் கூட நீ இருக்கவே கூடாது” என்று தன் மகளின் கையைப் பிடித்து அழைத்துச் செல்ல தயாரானார்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பூஜாவோ “அம்மா…. அப்பா கிட்ட வேண்டாம்னு சொல்லுமா…. தருணை பத்தி உங்களுக்கு தெரியாது. இப்போ அவர் கூட யாருமே இல்லம்மா… நானும் இல்லன்னா அவரு உடைஞ்சு போயிருவாரும்மா… ப்ளீஸ்மா…. ” என்று  தன் அம்மாவை பார்த்து சொன்னவளோ இப்பொழுது தன் அப்பாவை பார்த்து “அப்பா…. ப்ளீஸ்ப்பா…. இப்போவாவது நான் சொல்றதை கேளுங்களேன்… நான் எங்கேயும் வரல. தருண் கூடவே இருந்துக்கிறேன்”  என்று தன் அப்பாவிடமும் அழுது கொண்டே  கெஞ்சினான்.

“இல்ல பூஜா …. இந்த மாதிரி ஒருத்தனை  நம்பி இதுக்கு அப்புறமும் உன்னை எங்களால விட்டுட்டு போக முடியாது. அப்பா சொன்னா கேப்பியா? மாட்டியா? இப்போவே நீ அப்பா கூட கிளம்பி வா”  என்று பூஜா சொல்வதை கொஞ்சம் கூட காதில் வாங்காதவரோ அவளின் கையை பிடித்து, வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றார்.

மெய்யரசன் பூஜாவை வலுக்கட்டாயமாக இழுத்து செல்வதை பார்த்த தருணும் “அங்கிள்… உங்களோட பெரிய பொண்ணு இங்க தான் இருக்காங்க. தயவு செஞ்சு அவங்களையும் கூட்டிட்டு போங்க”  என்று சொன்னான்.

“எனக்கு ஒரே ஒரு பொண்ணு தான்…  அந்த பொண்ணை தான் நான் இப்போ இங்க இருந்து கூட்டிட்டு போறேன். வேற யார் எப்படி போனாலும் எனக்கு எந்த கவலையும் இல்ல. எனக்கு இருக்கிறது ஒரே ஒரு பொண்ணு தான். அது பூஜா மட்டும் தான்”  என்று சத்தமாக வேண்டுமென்றே  பூர்ணாவின் காதில் கேட்கும் படி சொன்னவரோ,  பூஜாவை அவளின் அனுமதி இன்றி அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

1 thought on “மயங்கினேன் நின் மையலில்…29”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!