Skip to content
Home » ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

ஓர் ஊரில் ஒரு நிலவரசி-8

8
குடிசையின் கூரையில் இருந்த பொத்தல்கள் வழியே அதிகாலை இளஞ்சூரியனின் கிரணங்கள்
வீட்டிற்குள் விழுந்தது. அதுவும் சீலைத்துணியால் போர்த்திக் கொண்டிருந்தவனின் முகத்தில்
காசுக்களைப் போல வாரியிறைத்திருந்தது. அந்த சிறு வெளிச்சம் கண்களை கூச செய்ததால்
போர்த்திருந்த சீலையை இன்னும் நன்றாக இழுத்து முகத்தை மூடிக் கொண்டு புரண்டு
படுத்தான் ராஜேந்திரன்.
“கட்டையில போறவனே, விடிஞ்சி அந்த சூரியனே வந்து உன் மூஞ்சியைக் குத்தி எழுப்புது.
எழுந்துரு” சொன்னவள் சீலையைப் பிடித்து இழுத்தாள்.
“ம்ம்……….ஆ…..! தூக்கத்தைக் கெடுக்காதே. சும்மா இரு” இன்னும் நன்றாக முடங்கிக்
கொண்டு படுத்தான்.
கையில் இருந்த குடத்தை அவன் மேல் கவிழ்த்தாள்.”ஊரே ரெண்டு பட்டுக் கிடக்கு. துரைக்கு
தூக்கம் கேட்டுப் போச்சோ!”
சில்லென்று தண்ணீர் மேலே விழுந்த வேகத்தில் அடித்துப் பிடித்து எழுந்து உட்கார்ந்தான்
அவன். “ஏம்மா இப்படி அலும்பு பண்ணுவே”
“வெட்டி முறிச்சிக் கிடக்கிராறு. தூக்கத்தைப் பாரு. விடிஞ்சி எம்மாம் நேரமாவுது” வெளியே
சண்டையிட்டு வந்ததினாலா அல்லது நாம் இப்படிக் கஷ்டப்படுகிறோம் இவன் இப்படி
நிச்சிந்தையாக உறங்குகிரானே என்ற வெப்ராளமா என்று பிரித்து பார்க்க இயலாத ஒரு
உணர்ச்சிக்குவியலாக கிடந்தாள் மாரியம்மா.
“ம்ம்ம்……ஆ …ஏனம்மா காலையிலேயே சிடுசிடுன்னு இருக்கே?” நனைந்திருந்த சீலையை
பிழிவதற்கு குடிசைக்கு வெளியே போனவன் அங்கே ஒரு பெரிய கூட்டம் கூடியிருப்பதையும்
அதன் நடுவே பக்கத்து வீட்டு கோமேதகம் அவிழ்ந்து கிடந்த கூந்தலை எடுத்து முடிந்தவாறே
இவன் வீட்டைப் பார்த்து சப்தம் போட்டுக் கொண்டிருந்ததையும் கண்டான்.
“இன்னைக்கு யாரு கூட சண்டை உனக்கு? தினம் யார்ட்டயாவது சண்டை போட்டாத் தான்
உனக்கு பொழுதே விடியும்”
“ஆமாம். நான் தான் தின்ன சோறு செரிக்காமல் சண்டைக்கு போறேன். போடா பொசக்
கெட்டப்பயலே. உன்னாலே தினம் நான் தான் அவமனப்பட்டுக்கிட்டு இருக்கேன்”
“யம்மோய். நான் என்ன பண்ணினேன்? செவனேன்னு படுத்துக் கிடக்கறவனை ஏன்மா வீணா
வம்புக்கு இழுக்கிறே?”
“கோமு தான் ஊளையிட்டுக் கிட்டு இருக்கா?” அவளிடம் மல்லுக்கட்ட முடியாமல் சோர்ந்து
போய் தரையில் சரிந்து அமர்ந்தாள். அவளைப் பார்க்க பாவமாக இருந்தது ராஜுக்கு.
“என்னவாம்?” முகம் கழுவ வெளியே போக கதவருகில் போனவனை தடுத்தவள் “ஏலே
வெளியே போகாதே. அந்த கொள்ளிக் கண்ணுக்காரி சும்மாவே உன்னை சாபம் விட்டுகிட்டு
இருக்கா. அவ கண்ணு முன்னாலே போய் வலிய நிக்காதே”
“நான் என்னம்மா பண்ணினேன்?”
“போன வாரம் ஒரு மாடு வாங்கிகிட்டு வந்தியே. அது அவ வூட்டு மாட்டை கூட்டிக்கிட்டு
எங்கேயோ போயிருச்சுன்னு சண்டை வாங்கறா”
“நம்ம வெள்ளையனையும் காணுமா?”
“பின்னே. நீ மவராசனா தூங்கு. உன் மாடு கூடவா உன்னை மாதிரியே அடுத்த வீட்டு
வம்புக்குன்னு அலையும்”
“ம்மா…..! நம்ம மாடு எங்கே போச்சு?” இப்போது சண்டை மறந்து போயிற்று இருவருக்கும்.
மாடு காணாமல் போனது தான் இப்போதைய தலையாய பிரச்சினை இருவருக்கும்.
“இன்னும் ஒரு மாடு வாங்கிட்டேனா வயலுக்கு ஏரு பூட்டி அடிப்பேன். சந்தையில வாங்கும்
போதே ரெண்டா வாங்கிட்டுப் போ தம்பின்னாரு நல்லசிவம். என்னிட்ட காசு இல்ல.
பரவாயில்லை. எனக்கு ஏரு ஓட்டி கழிச்சிக்கலாம்னு சொன்னாரு’”
“இருக்கிற ஒரு மாட்டையே காப்பாத்திக்க துப்பு இல்லையாம். இதுல கடனில் இன்னொரு
மாடு வாங்குவாராம் துரை”
‘அம்மா இப்போ என்னம்மா பண்ணுவது?”
அந்த தாய் பதில் சொல்லத் தேவையில்லாமல் இவ்வளவு நேரமும் குடிசையின் வெளியே
நின்று கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த கோமேதகம் உள்ளே வந்தவள் “உங்க அம்மாட்ட
ஏன் கேட்பே? என்னைக் கேளு?”
“உன்னை எதுக்கு கேட்பதாம்?”
“பின்னே? உன் மாடு தானே என் மாட்டை இழுத்துக் கொண்டு போயிருக்கு”
“உன் மாடு தான் என் மாட்டை இழுத்துக் கொண்டு போயிருக்கு”
அது நேரம் வரை சண்டையிட்டுக் கொண்டிருந்தவள் சட்டென்று ராஜுவின் அருகில்
உட்கார்ந்தாள்.”ராசு, எத்தனை முறை என் புருஷனுக்குத் தெரியாமல் உனக்கு எங்க மாடு பால்
கறந்திருக்கும்” என்றாள் ஏக்கமாக.
அவ்வளவு நேரமும் சோர்வோடு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த மாரியம்மாளும்
நியாயம் உணர்ந்தவளாக “ஆமாம் தம்பி. கோமு சொல்வது உண்மை. பாவம் அந்த பசு மாடு
உனக்கு எத்தனை தடவை பால் கறந்திருக்கும்”
“சரிம்மா. அதுக்கு நான் என்ன செய்வது?”
“நம்ம மாடும் காணும்”
“ஆமாம்”
“தம்பி கொஞ்சம் வெளியே தெருவுல போய் நம்ம ரெண்டு மாட்டையும் தேடிகினு வந்துடுப்பா”
ராசு யோசனையாக உட்கார்ந்திருந்தான். ”தம்பி உன் அம்மாவிடம் சண்டையிட்டு
பிரயோசனம் இல்லை. நீ தான் கொஞ்சம் மாட்டை தேடி கொண்டு வாப்பா. எம் புருஷனும்
தேடிக்கிட்டுத் தான் போயிருக்காரு. இளந்தாரி நீ போனா கொஞ்சம் சிரமம் பாராமல் தேடுவே.
போய்யா” என்றவள் “அக்கா போய் வாறன்” என்று மாரியம்மாவிடமும் நைச்சியமாகவே
சொல்லி விட்டு போனாள்.
“யம்மா..”
“என்ன ராசு. கோமு அம்மாம் நேரம் சொல்லுது. போப்பா. போய் கொஞ்சம் தேடிட்டு வா. இரு.
பழைய சோறு போடறேன்.” என்று சட்டியில் சோற்றை வைத்து சுட்ட கருவாட்டையும் உடன்
வைத்தாள்.
“நேத்திக்கு ரெண்டு மாடும் பேசிக்கிட்டு இருந்ததுங்க மா”
“இவன் ஒருத்தன். என்னத்தையாவது பேசிக்கிட்டு”
“அம்மா நெசமாத் தான்”
“கனாகினா கண்டாயா?”
“நான் சொன்னா என்னைக்குத் தான் நம்பியிருக்கே?”
“நம்பற மாதிரி என்னைக்கு நீ சொல்லிருக்கே?”
“அய்யே கேளும்மா”
“சரி சொல்லு. என்ன பேசிச்சு உன் மாடுங்க?” சொன்னவள் அவன் சாப்பிட்டு வைத்த
பாத்திரத்தை எடுத்து போய் கழுவி கவிழ்த்தாள்.
“நம்ம வெள்ளையன் தான்மா ஆரம்பிச்சது”
“என்னன்னு?”
“நக்கல் பண்ணாமல் கேளு”
“இந்த வெட்டி ரோஷத்துக்கு ஒன்னும் குறச்சல் இல்ல”
“போம்மா. நான் போறேன். நீயே தேடிக்கோ”
“சரி சொல்லு”
“நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு அப்புறம் சொல்லு நான் என்ன பண்ணனும்னு”
“ஓ அப்படி சொல்றியா! சரி சொல்லு”
“அவுங்க வீட்டு மாட்டை கொட்டாயில வெச்சி தானே வளக்கிறாங்க”
“நம்ம ஊர்ல மகாசுரனுக்கு பயந்து யாருமே மேய்ச்சலுக்கு மாட்டை ஓட்டி விடுவதில்லையே”
“அது நான் சந்தையில வாங்கியாந்த வெள்ளைக்கு தெரியாதே”
“அதுவும் சரி தான். மாட்டுக்கு எல்லாம் தெரிஞ்சிருமா”
“தெரியாது தான். அதனால் தான் பக்கத்து வூட்டு மாடு அவுங்க போடற புல்லையும் பருத்திக்
கொட்டையையும் தின்னுட்டு அதும் பாட்டுக்கு அமைதியா கொட்டாயிலேயே இருக்கு.
ஆனால் நம்ம வெள்ளை வெளியூர் ஆளு இல்லையா. அதுக்கு எல்லாம் தெரியும்”
“உன்னை மாதிரி”
“போம்மா” சிணுங்கினான்.
“எங்கே இருந்து தான் இத்தனை கதை விட கத்துக்கிட்டியோ” சிரித்தாள்.
“இது தான்மா சொல்லிச்சி. அதோ அங்கே தெரியுதே காடு. அதும் பக்கத்திலே நல்ல
பச்சைபசேல் என்று புல்லு கிடைக்கும். ஒருநாள் தின்னால் ஆயுசுக்கு மறக்க முடியாதுன்னு”
“நம்ம வெள்ளை சொல்லிச்சி?”
“ஆமாம்”
“நான் நம்பனும்?”
“உன் இஷ்டம்”
“சரி. நம்பறேன். மேலே சொல்லு”
“அப்போ அந்த மாடு கேட்டுச்சு. காட்டுக்கு எப்படி போவதுன்னு?”
“அட கொடுமையே. இதைத் தான் மேயற மாட்டை நக்கற மாடு கெடுக்கறதுன்னு சொல்லுவது
போல” அங்கலாய்த்துக் கொண்டாள். இவ்வளவு நேரமும் அவன் சொன்னதை நம்பாமல்
கிண்டல் செய்து கொண்டிருந்தவள் அவன் சொன்ன கதையின் சுவாரஸ்யத்தில் “. அப்புறம்”
என்று கேட்டாள்.
“நீ ஏன் கவலைப்படறே? நான் உன்னைக் கூட்டிக் கிட்டுப் போறேன்னு சொன்னதும்மா நம்ம
வெள்ளை”
“அடி செருப்பாலே” என்று தன்னை மீறி சொன்னவள் “அப்படின்னா நம்ம வெள்ளை தான்
அதை கூட்டிக் கிட்டு போச்சா?”
“ஆமாம்ம்மா”
“ஏண்டா நீ இதை எல்லாம் என்னிடம் முன்னமே சொல்லலை?”
“நீ எங்கே நான் சொல்றதை நம்பவே?”
“இல்லடா தம்பி. இனிமே நீ சொல்லுவதை நான் கட்டாயமா நம்பறேண்டா”
“இப்போ நம்பி என்ன பிரயோசனம்?”
“ஏண்டா?”
“ரெண்டு மாடும் ஓடிப் போச்சே?”
“எப்படிடா நம்ம கண்ணை மறச்சிட்டு ரெண்டும் கிளம்பி போச்சு?” முகவாய் கட்டையில் கை
வைத்துக் கவலைப்பட்டாள்.
நம் கதையை அம்மா நம்பிவிட்டால் என்றதும் ராசு உற்சாகமாகிப் போனவனாக
தொடர்ந்தான். “அதுக்கு வெள்ளை சொன்னது…! நாளைக்கு காலமே நீ இங்கே வா. நாம்
ரெண்டு பேரும் கிளம்பி போகலாம்”
“அட நாசமத்து போறதுங்களே. இப்படியா பண்ணும்?” அரற்றினாள்.
“ரெண்டும் காட்டு பக்கம் தான் போயிருக்கும்மா”
“அங்கே மகாசுரன் இருப்பானே”
“அவன் தான் அவன் நாட்டுக்குப் போயிட்டான்னு சொன்னியே”
“போயிட்டான் தான். இருந்தாலும் காட்டுப்பக்கம் தான் இருப்பான். நீ எப்படி போவே?”
“வேறே என்னம்மா பண்ணுவது? நம்ம வெள்ளைப் போனால் கூடப் பரவாயில்லை. நம்ம
கோமு அக்கா மாடும் இல்லே போயிருக்கு. அதுகிட்ட எத்தனை நாள் பால் குடிச்சிருப்பேன்.
அதைக் காப்பாத்த வேண்டாமா?’”
அவனுடைய நியாய புத்தியை மெச்சிக் கொண்டவள் “உண்மை தான் தம்பி. பாவம் அந்த
பசுமாடு. வாயில்லா பிராணிப்பா அது. எப்படியும் அதைக் கண்டுபிச்சி கூட்டி வரணும். இப்ப
என்ன செய்யறது?”
“கோமு அழுவறதைப் பார்க்க சகிக்கவில்லை”
“ஆமாம் ராசு” என்றாள் அவளுமே கவலையுடன்.
சட்டென்று எழுந்து நின்றான் ராசு.”அம்மா நான் என் கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு
காட்டுப் பக்கம் போகிறேன் மாடுகளைத் தேடி”
அவள் மறுப்பேதும் சொல்லவில்லை. விருப்பமாகவும் விடைக் கொடுக்கவில்லை.
செய்வதறியாது மகனையேப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அம்மா கவலைப்படாதே. வருகிறேன்” என்று சொல்லியவாறு எரவாணத்தில் சொருகி
வைத்திருந்த அவன் தந்தை கன்னியப்பனின் புல்லாங்குழலை எடுத்து இடுப்பில்
சொருகியவாறு குடிசையை விட்டு வெளியேறினான்.
இனி ராசு என்றழைக்கப்படும் ராஜேந்திரனின் மாட்டைத் தேடிக் கொண்டு கிளம்பிய
பயணத்துடன் நாமும் பயணிப்போமா !

Thank you for reading this post, don't forget to subscribe!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *