Skip to content
Home » ஐயங்காரு வீட்டு அழகே-18

ஐயங்காரு வீட்டு அழகே-18

அத்தியாயம்-18

Thank you for reading this post, don't forget to subscribe!

  ராவணன் பக்கத்தில் நட்நது சென்று மதிய உணவை வாங்கி வந்தான்.
  காருண்யாவிடம் நீட்ட, “நேக்கு வேண்டாம்” என்று முகம் சுழித்தாள்.
   அவள் முகத்திருப்புதல் அறிந்தவனோ, ‘போறப்ப அமைதியா தானே இருந்தா? இப்ப என்ன?’ என்று விழித்தான்.

  “ஏன் வேண்டாம்? பசிக்கும்ல… நான் பிரியாணி எல்லாம் வாங்கலை” என்று கேலிக்கு இழுத்தான்.

  “ஓ… கிண்டல் பண்ணறேளா? நேக்கு எதுவும் வேண்டாம்” என்று ப்ரிட்ஜை பார்த்து அவனையும் கண்டு முனங்கினாள்.

  ப்ரிட்ஜ் திறந்திருக்க, “ப்ரிட்ஜை ஓபன் பண்ணினா மூடமாட்டியா?” என்று மூட வரும் பொழுது, அவன் கண்ணில் சிக்கியது பச்சை பாட்டில்.

  நொடியில் காருண்யா கோபம் புரிந்தவனாக, “எம்மா தாயே… இது என்னுடையது இல்லை. எனக்கு ஸ்மோக் டிரிங்க்ஸ்ல நாட் இன்ட்ரஸ்ட். அதனால் இந்த பாட்டில் என்னுடையது கிடையாது. பேட்சுலர் பார்ட்டி அப்ப எந்த எருமையோ வச்சியிருக்கும். எனக்கு வாங்க தெரியாதுன்னு யாரிடமோ என் போனை கொடுத்து ஆர்டர் போட சொன்னேன். அவனவன் அவனுக்கு பிடிச்ச பிராண்டை ஆர்டர் போட்டானுங்க. எவன் சில்லுனு வேண்டும்னு ப்ரிட்ஜ்ல வச்சியிருந்து மறந்திருக்கான்” என்று கூற, நம்பாமல் பார்த்தாள்.

  “இதப்பாரு… எனக்கு இருக்கற ஒரே கெட்ட பழக்கம் நல்லா தூங்குவேன். சனி ஞாயிறு ஆனா சாப்பாட்டை கூட ஸ்கிப் பண்ணிட்டு தூங்க பிடிக்கும். அதை தவிர்த்து இந்த டிரிங்க்ஸ் ஸ்மோக் எல்லாம் பிடிக்காது. எனக்கு என் உடம்பு ரொம்ப முக்கியம்.” என்று சத்தியம் செய்யாத குறையாக கூறினான்.

  “அப்ப இதை டாய்லெட்டுல ஊத்துங்கோ” என்றாள்.

   ப்ரிட்ஜிலிருந்த பாட்டிலை எடுத்து விலையை பார்வையிட்டான்.
“மூவாயிரம் போட்டிருக்கு” என்று அவளை பார்த்தான்.

  “எவ்ளோ விலையா இருந்தா என்ன? உங்களுக்கு அந்த பழக்கம் இல்லையோனோ? டாய்லெட்ல ஊத்துங்கோ.” என்று என்றவள் ‘ட்ரீட்டு கேட்டா வயிறு நிரம்ப சாப்பாடு வாங்கி தர்றதோடு நிறுத்தணும். இதென்ன குடிக்க வாங்கி தர்றது. இதென்ன பெருமாள் தீர்த்தமா?’ என்று முனங்கினாள்.

   காருண்யாவின் முகபாவம் அதை வீசியெறிய போகின்றாயா இல்லையா என்று பிடிவாதம் பிடித்தபடி முனங்கிக் கொண்டேயிருக்க, பாட்டிலை திறந்து வாஷ்பேஷனில் அவளை பார்வையிட்டவாறு கவிழ்த்தான். அந்த விலையுயர்ந்த பானத்தை கொட்டினான். 

  அது குறைய குறைய காருண்யா சீராக இயல்புக்கு மாறினாள். ராவணன் அவளையே பார்வையிட்டான், இவ சொல்லறதை கேட்கறேனே என்ற அர்த்தத்தில், அவளோ சாப்பாட்டை ஆராய சென்றாள். அங்கே இரண்டு பிரிஞ்சி சாதம் இருந்தது.
  ஒன்றை எடுத்து தண்ணீர் பாட்டிலுடன் சோபாவில் அமர, டீப்பாயின் மீது அவனும் தனக்கான உணவோடு அமர்ந்தான்.

   அவளிடம் ஏதேனும் பேச வேண்டுமென்ற முடிவில் இருக்க, போன் அழைத்தது.

“உங்கப்பா தான்” என்று காதில் வைத்தான்.
  ”மாப்பிள்ளை வீட்டுக்கு தேவையானதா சில பொருட்களை வாங்கி அனுப்பியிருக்கு. பத்து நிமிஷத்துல வந்துடுமாம். உங்களிடம் விவரம் சொல்ல அழைச்சேன். அங்கே எல்லாம் சௌகரியமா இருக்கா.” என்று கேட்க, “பத்து நிமிஷத்துலயா? சரி மாமா. அதெல்லாம் சௌகரியமா வந்துட்டோம்” என்றான். அவன் பேச்சில் பத்து நிமிடத்தில் வீட்டிற்கு பொருட்கள் வரப்போவதை உணர்ந்து காருண்யா வேகமாக அள்ளி சாப்பிட்டாள்.

  “காருண்யாவிடம் ஒரு ஒன் ஹவர் முன்ன பேச போட்டேன். ஆபிஸ் ஓர்க் மீட்டிங் போகுது அப்பானு சொன்னா. இப்ப தொந்தரவு தந்துடலையே” என்று கேட்டார்.

  “இல்லை மாமா.. லஞ்ச் டைம்.  பிரிஞ்சி சாப்பிட்டு இருக்கோம். தொந்தரவு எல்லாம் இல்லை. அவளிடம் கொடுக்கறேன்” என்றான் பவ்யமாக.

    போன் பேசியபடி வேகமாய் சாப்பிட்டவன், அவளிடம் போனை தந்துவிட்டு, தந்தை அறை கதவை திறந்து வைத்தான். காருண்யாவும் “பிரயாணம் அலுப்பு இல்லைப்பா. வந்ததும் சப்பாத்தி சாப்பிட்டு படுத்தாச்சு. இப்ப எழுந்ததும் செம்பருத்தி டீ குடிச்சிட்டு, வேலையை பார்க்க உட்கார்ந்தோம்‌.
  இங்க ஆத்துல சமைக்க எல்லாம் சாயந்திரம் போய் வாங்கலாம்னு சொல்லிட்டா. வெளி சாப்பாடு சாப்பிட்டு முடிச்சாச்சு. ஸ்கூட்டி எடுக்க போகறப்ப, மளிகை பொருட்கள் வாங்கணும்ப்பா” என்று அடுக்கினாள்.

   அதே நேரம் வெளியே வண்டி வந்ததும், ராவணன் “இந்த பொருட்கள் எல்லாம் அந்த ரூம்ல வச்சிடுங்க” என்று சுட்டிக்காட்ட, ஆட்களும் பெட்டி பெட்டியாக எடுத்து வந்து வைத்தார்கள்.

  “எதுவும் இங்க கொண்டு வர வேண்டாம்னு சொன்னா இஷ்டத்துக்கு அனுப்பி வைக்கறது.” என்று அவனும் முனங்க, காருண்யா அவனை முறைத்திட, வேலைக்கான நேரம் வந்துவிட்டதாக சென்றான்.
  
  காருண்யாவுக்கு தற்போது என்ன செய்வதென்ற தவிப்பு.
  வந்தவருக்கு ஒரு வாய் காபி கூட போடாமல் தவிக்க, அடிக்கடி ராவணனை கண்டாள்.

  மடமடவென பதினைந்து நிமிடத்தில் ‘டிங்டான் பேக்கேஜ் சர்வீஸ்’ தங்கள் கொண்டு வந்தவையை வீட்டில் அடுக்கி வைத்தனர்.
  ராவணன் சரியாக வந்து, மாஸா பாட்டிலை திறந்து கண்ணாடி டம்ளரில் குளிர்பானத்தை ஊற்றி தந்தான்.

  “தேங்க்ஸ்” என்று வந்தவர்கள் பருகினார்கள்., சீனிவாசன் ஏற்கனவே பணத்தை ஜிபே மூலமாக அனுப்பியதில், சென்றுவிட்டார்கள்.

    ராவணன் அலுவலகம் சார்ந்த விஷயத்தை கவனித்தப்படி ஐந்து மணி வரை நேரம் சென்றது. அதன் பின் காருண்யாவை செம்பருத்தி டீ போட சொல்லிவிட்டு, பேக்கேஜ் பிரித்தான்.

   கிச்சன் ஐயிட்டம் உள்ள பெட்டியை அவன் வைக்கவும் அதையெல்லாம் காருண்யா அவளுக்கு தோதாக மாற்றி வைத்தாள்.

  கட்டில் ஏற்கனவே இருப்பதாக கூறியதால் பீரோவும் டிரஸிங் டேபிளும் அவனது அறைக்குள் அடைக்கலமாக வந்தது.
  ஹாலை நிரப்ப டைனிங்டேபிள் போதுமானதாக மாறியது.
   ஏற்கனவே ப்ரிட்ஜ் இருக்க வாஷிங் மெஷன் வந்திறங்கியது.
    இரண்டையும் அதனதன் இடத்தை வைத்து நிமிர ஆறானது.
   ‘சாரதா அக்கா’ என்ற போன் மின்னி மறைய, “சொல்லுங்க அக்கா” என்றாள்.
 
இங்க வருவதா சொன்னியேம்மா” என்றதும், “ஆமாக்கா…வரணும்… அப்பா சீர்வரிசையை ஆத்துக்கு அனுப்பி வைக்கவும், அதெல்லாம் வீட்ல செட் பண்ண நாழியாச்சு. முடிஞ்சா வர்றேன் அக்கா.” என்று ராவணனை பார்த்தாள்.

“சரிம்மா… நினைவுப்படுத்தினேன்.” என்று பேசி துண்டித்தார்.

   ராவணனோ “என்னாச்சு?” என்றதும் ஹாஸ்டலில் உள்ள சாரதா அக்கா தான் இன்று வருவதாக கூறியதால் எதிர்பார்த்ததை தெரிவித்தாள்.
  
  “அதனால என்ன? இப்ப கிளம்பிடலாம். டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்துடறேன்.” என்றான்.

  “நீங்க… ஸ்னானம் பண்ணலையா?” என்று மெதுவாக கேட்க, “வந்து பார்த்துக்கலாம், ப்ரோவிஷனல் வேற வாங்கணும்” என்று அசட்டையாக கூறினான்.‌

  ‘ஸ்னானம் பண்ணாம எப்படி’ என்று கையை பிசைய, அவனோ மடமடவென ஜீனும் ஷர்டும் போட்டு நின்றான்.‌

    குளிக்காமல் வருபவனை கண்டு மீண்டும் முகம் தூக்கி வைத்து, வந்தாள். ஆட்டோவில் ஏறியதும் பக்கத்தில் அமரவும் மூச்சு விட மறந்தாள்.

  முன்பு போல ஆட்டோக்காரனை இடிச்சிக்கிட்டு ராவணன் உட்கார இயலாதென்ற நிதர்சனம் புரிந்தாலும், தன்னுடன் அமர்ந்துவிட்டதை ஏற்க பழகினாள். கல்யாணம் ஆனப்பொழுது ஊஞ்சலில் அவன் பக்கத்தில் தானோ உரசியபடி அமர வேண்டிய நிர்பந்தம் அமைந்தது. மேலும் அவள் வீட்டில் சோபாவில் அமரும் பொழுது அப்படி தான் அமர்ந்தான்.
ஆட்டோவில் மட்டும் ராவணன் தள்ளி அமர வேண்டுமா? ஆனால் இவன் குளிக்காமல் வருகின்றான் என்றதில் அவனை ஏறிட, நல்ல மணமாகவே இருந்தான்.
  ‘பெர்ஃப்யூம் வாசம், ஸ்னானம் செய்யாட்டியும் நன்னா மணமா இருக்கான். பாட்டி மட்டும் ஆத்துல இருக்கறச்ச இவன் இப்படி செய்திருந்தா பாட்டி ஆத்த விட்டே ஓடியிருப்பா’ என்று நினைக்க சிரிக்க தோன்றியது.

   “என்ன தனியா இளிப்பு” என்று கேட்டதும், அவனை பார்த்து நினைத்ததை உரைத்தாள்.

  “ஏய்… என்ன பார்த்தா எப்படி தெரியுது? நேத்து நைட் தூங்கும் போது குளிச்சேன். காலையில் முழுக்க வீட்லயே இருந்தேன். சோ குளிக்க தோணலை.
   ஆப்டர்னூன் திங்க்ஸ் எல்லாம் எடுத்து தள்ளி வச்சேன். இப்ப இங்க மறுபடியும் வர்றப்ப ப்ரோவிஷனல் வாங்கணும். எப்படியும் வந்ததும் கசகசனு இருக்க மறுபடியும் குளிக்கணும் தானே? அப்ப குளிச்சிக்கறேன்.
   இப்ப ஒருக்க குளிக்கணும்‌ போயிட்டு வந்து வேற குளிக்கணும். டைம் வேஸ்ட், தண்ணி வேஸ்ட், சோப் வேஸ்ட்” என்று அடுக்கியபடி கூற, காருண்யா வாய் விட்டே சிரித்தாள்.

  “ஏன்… நீ ஹாஸ்டல் போயிட்டு டிப்பார்ட்மெண்ட் ஸ்டோருக்கு போயிட்டு குளிக்க மாட்டியா?” என்று கேட்டு புருவம் உயர்த்த, சிரிப்பு மறைந்து போனது.

  “ஹாஸ்டல் வந்துடுச்சு” என்று இறங்க கூறி பணத்தை தர, “நேக்கு எதுக்கு நீங்க தர்றேள்” என்று தடுக்க பார்க்க, “உங்க அப்பா பாட்டி எதிரே ‘உனக்கு நான் செலவு பண்ண வேண்டாம்னு சொல்லு.’ பண்ணாம இருக்கேன்” என்று ஒருவித கோபத்தை அடக்கி உரைத்தான்.

   “போ… உள்ள போய் பைக், திங்க்ஸ் பேக் பண்ணியதை கொண்டு வா அந்த கடையில் வெயிட் பண்ணறேன்.” என்றான்.‌ ‘குளிக்காம வந்தது தப்பா’ என்று முனங்கினான்.

  “காரிடர்ல தெரிந்தவா வெயிட் பண்ணலாம்” என்று கூற, பெரிய கும்பிடு போட்டு வேண்டாம் என்பது போல உரைத்தான்.‌

  காருண்யா தனது அறைக்கு வந்தால், இந்தும் ராகவியும் ‘வீ மிஸ் யூ’ என்று கட்டிப்பிடிக்க, “நானும் உங்களை மிஸ் பண்ணுவேன்” என்றாள்.

“அய் பெரிய பொய். அந்த ராவணனை கட்டிபிடிச்சி சேட்டை செய்து தூங்குவிங்க. எங்களை எப்படி மிஸ் பண்ணுவியாம்.” என்று இந்து கேட்டதும், “சீ… உதைப்பட போற‌. என்ன ராகவி இவா இன்னும் மாறாம பேசுறா” என்று தோழியை துணைக்கு கூப்பிட, “அவ உண்மையை தானே சொல்லறா.” என்று ராகவியும் காருண்யாவை வாறினாள்.

  “போங்கோ… கிண்டல் பண்ணறதே வேலையா வச்சிண்டு இருக்கேள்” என்று தன் உடைமையை சாரதா உதவியால் இரண்டு அட்டைப்பெட்டியில் அடைத்துவிட்டாள். துணிமணி ஒரு பெட்டியில் திணித்தாள்.

  சாப்பிடும் பொருள் எல்லாம் ராகவியிடம் கொடுத்து, நீங்களே காலி பண்ணிக்கோங்கோ” என்று தள்ளிவிட்டாள்.

    “இதெல்லாம் எடுத்துட்டு போயிடுவியா?” என்று சாரதா கேட்க, “வெளியே தான் அவர் காத்திருக்கார் அக்கா‌. எடுத்துட்டு போயிடுவோன்னு நினைக்கறேன். இல்லைன்னா ஆட்டோ கேப் புக் பண்ணிடுவேன்.” என்றாள்.

  “சரி நீ முன்ன போய் அன்னப்பூரணிம்மாவிடம் ஹாஸ்டல் வெக்கட் பண்ணியதை சொல்லிட்டு வா. இதை நான் கொண்டு வர்றேன்” என்று சாராதா கூறினார். சாரதா இதெல்லாம் உதவ கூடியவரே.

“சரிங்கக்கா.” என்று சென்றாள். ”ரொம்ப சந்தோஷம்மா… கல்யாணத்துக்கு தான் என்னால வரமுடியலை. எ ஸ்மால் பிரசன்ட்” என்று கொடுக்க வாங்கிக் கொண்டாள்.
 
  “அவர் வந்திருக்காரா. இங்க அழைச்சிருக்கலாமே.” என்று கூறி வாசல் பக்கம் வந்தார்கள்.

  “அவா தான்… பிஸ்தா க்ரீன் டீஷர்ட் ஜீன்” என்று சுட்டிக்காட்ட, “கூப்பிடு விஸ் பண்ணறேன்.” என்று கூற, ரோட்டில் அவனை எவ்வாறு அழைப்பதென்று திருதிருவென விழித்தாள்.‌

“ஏங்கே.. ஏங்கே…” என்று கத்த, ராவணன் காருண்யா குரல் என்றதும் திரும்பினான்.‌

  “செத்த வாறேளா” என்றாள். ராவணன் தன்னை சுற்றிமுற்றி பார்த்து அவஸ்தையுடன் வந்தான்.‌

“பெயர் சொல்லி கூப்பிடலாம்ல. ஏங்க என்னங்கன்னு” என்று வந்தவன், “எப்படியிருக்கிங்க அக்கா… ஹாய்ங்க.” என்று சாரதாவிடமும் ராகவி இந்துவிடமும் புன்னகைத்தான்.‌

  “நல்லாயிருக்கோம் தம்பி. ஹாஸ்டல் வார்டன்” என்று சுட்டிக்காட்ட அன்னபூரணியோ வணக்கம் வைத்தார்.

  “நம்ம விவாஹத்துக்கு வரமுடியலைன்னு மேம் கிஃப்ட் கொடுத்தாங்க. நீங்க வந்திருக்கேள்னு சொன்னேன். உங்களை பார்க்க கூப்பிட்டா” என்று அறிமுகப்படுத்தினாள்.

  “ரொம்ப நல்ல பிள்ளை. அவளுக்கு ஏத்த பையனா தெரியறிங்க. பத்திரமா பார்த்துக்கோங்க, இந்த பக்கம் வந்தா அவளை ஒரெட்டு கூட்டிட்டு வாங்க.” என்று கூறினார்.‌

  “சூர் மேம்.” என்றவன், காருண்யாவை பார்த்து ”போலாமா?” என்று கேட்டான்.

  லக்கேஜ் பைக்ல வைக்க முடியுமானோ? இல்லை கேப் புக் பண்ணிடவா?” என்று அவனிடம் ஆலோசனை கேட்டாள்.‌

“ஜஸ்ட் இரண்டு பாக்ஸ், ஒரு சூட்கேஸ் தானே? கொண்டு போயிடலாம்.” என்று முன்னே இரண்டு பெட்டியை வைத்தான். பெட்டியை மட்டும் அவள் அமர்ந்தப்பின் பிடித்துக் கொள்ள கூறினான்.‌

  அவளும் அவ்வாறே அமர்ந்து அன்னபூரணி மேடம் சாரதா அக்கா, ராகவி, இந்து என்று நால்வரிடம் விடைப்பெற்றார்கள்.
 
   மணி ஏழை நெருங்க வீட்டில் அட்டை பெட்டியை சூட்கேஸை வைத்து விட்டு, கையோடு டிபார்ட்மெண்ட் கடைக்கு வந்தார்கள்.

  காருண்யாவுக்கு கல்லூரி படிக்கும் காலத்திலேயே மளிகை பொருட்களை வாங்கி பழக்கம். வீட்டில் மூன்று பேருக்கு எத்தனை வாங்க வேண்டுமென்று அமிர்தம் கணகச்சிதமாக பட்ஜெட் போடுவார்‌. அந்த பழக்கமும் சேர்ந்ததால் இருவருக்கும் அதே அளவு வாங்கிவிடலாமென்று மடமடவென எடுத்து போட்டாள்.

   “ராத்திரி உப்புமா பண்ணட்டுமா?” என்று கேட்டாள் காருண்யா. ராவணன் சங்கடமாக இருந்தாலும் தலையாட்டி விட்டான். அவனுக்கும் உப்புமாவுக்கும் ஏழாம் பொருத்தம். ஆனால் காருண்யா அதை செய்யவா? என்று ஆவலாய் கேட்க, மறுக்க தோன்றவில்லை‌.

  பில் போடும் சமயம் அமிர்தம் போன்‌ போட ஆரம்பித்தார்.

“சொல்லுங்கோ பாட்டி” என்று அசதியில் காதில் வைத்தாள்.
  “என்னடி சொல்லணும்.. எல்லாம் அன்னைக்கே சொல்லிட்டேன். மணி ஒன்பதுக்கு சாந்தி முகூர்த்தம். அலங்காரம் எல்லாம் பண்ணிட்டியோனோ” என்றதும், போனையும் ராவணனையும் மாறி மாறி பார்த்தாள்.‌

  “பாட்டி.” என்று பேசுவதற்கு கூச்சப்பட்டு திகைத்து விழிக்கவும், இன்றைய நாள் நினைவு வந்தது.

  “பாட்டி சரியா கேட்கலை.. வீட்டுக்கு போய் பேசறேன். கடையில இருக்கேன்” என்றாள்.
பாட்டியோ, “ஏன்டிம்மா கடையில இருக்கேளா? ஏழு ஆகுது வீட்டுக்கு போய் குளிச்சிட்டு அலங்காரம் செய்யணும். நாழியாக போகுது” என்று பாடம் நடத்த, “பாட்டி… செத்த சும்மாயிருக்கேளா‌. எங்களுக்கு முன்ன இரண்டு மூன்று பேர் பில் போட நிற்கறாள். நாங்க காலையில் காபி குடிக்க சமைச்சி சாப்பிட, மளிகை சாமான் வாங்கிட்டு வீட்டுக்கு போக எட்டு ஆகும். சும்மா சும்மா போன் போடாதேள். முக்கியமா கொஞ்ச நேரத்துக்கு முன்ன பேசும் விஷயத்தை பத்தி என்னிடம் இனி கேட்காதேள். அதை காதுல வாங்கவும் பிராணம் போகுது. நான் குழந்தை இல்லை. நேக்கு என் வாழ்க்கை எப்படி வாழணும்னு பார்த்துக்க தெரியும். அவர் இருக்கறச்ச அடிக்கடி கேட்டேள் உங்களை தப்பா நினைப்பாள்.” என்று எச்சரிக்கை விடுத்தாள்.
 
  “சரிடிம்மா… ஆம்படையானுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ. வேறொன்னும் இல்லை. நோக்கு என்  ஆசிர்வாதம் பண்ணலாமேனு போன் போட்டேன். தப்பு தான் வச்சிடவா?” என்று சலிப்படைய, “உங்க ஆசி நேக்கு எப்பவும் உண்டு பாட்டி.” என்று கூறி அணைத்தாள்.

பில் போடுமிடம் வரவும், ராவணன் க்ரிடிட் கார்ட் நீட்டினான். பில் போட்டதும் டோர் டெலிவெரி சொல்லிவிட்டு அட்ரஸை எழுதி தந்து நகர்ந்தான்.

  எப்படியும் இனி பொருட்கள் வீடு தேடி கால் மணி நேரத்தில் அனுப்பி விடுவார்கள்.

  ஸ்கூட்டியை ராவணன் ஓட்ட, காருண்யா பின்னால் அமர்ந்து வந்தாள்.
ராவணன் நன்றாக பைக் ஓட்டும் விதம் கண்டு, “நீங்க நன்னா பைக் ஓட்டறேள். பிறகு ஏன் பைக் வாங்கலை.” என்றாள்.

  ராவணனோ “ஒரு கோவிலுக்கு போனப்ப அங்கிருந்த ஒரு பூசாரி எனக்கு ஏதோ தோஷம்னு சொல்லிட்டான். ஏழரை வருஷத்துக்கு பைக் தெடக்கூடாதாம். கல்யாணம் முடியறவரை வாகனத்தால் ஆபத்துன்னு சொல்லிட்டு காசை பிடுங்கிட்டு ஓடிட்டான். அம்மா அதுலயிருந்து பைக் வாங்க விடலை. 7 வருஷம் நெருங்குது. நானா வாங்கிடுவேன். அம்மா மனசு சங்கடமாகும். அதனால் வெயிட் பண்ணறேன். இன்னும் கொஞ்ச காலத்துல ஏழரை முடியும், பைக் என்ன? காரே வாங்கிடுவேன்.” என்று பெருமை பேசினான்.‌

  காருண்யாவோ ஏதோ கதை விடறான் என்று ராவணனை பார்வையிட, ”முதல்ல போனதும் குளிக்கணும். பிரெஷ் ஆகணும்.” என்று முனங்கினான்.
 
இதை கேட்ட காருண்யாவோ, ‘முதலிரவுக்கு தயாராகும் முடிவில் இருக்கின்றானா ‘ என்று மயக்கம் வராத குறையாக அஞ்சினாள். ஆனால் ராவணன் எண்ணத்தில் தான் தடை போட முடியாது என்று புரிந்தது. இதில் அலங்காரம் செய்ற வேண்டுமா? என்றது தான் மனதில் ஓடியது.

“தொடருரும்‌
_பிரவீணா தங்கராஜ்.
 

 

 

9 thoughts on “ஐயங்காரு வீட்டு அழகே-18”

  1. Dharshini

    Super sis nice epi 👌😍❤️ renduperum avanga avanga mananilaiyila different ah yosikiranga konjam porumaiya mathavangaluku vittu kuduthu yosicha nalla vazhalam parpom enna Panna poranga nu🧐

  2. M. Sarathi Rio

    ஐயங்காரு வீட்டு அழகே..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 18)

    ஆனாலும், இவளுக்குன்னே வந்து வாச்சிருக்கான் பாருங்க ஒரு அசமஞ்சன். அதிகாரம் ரொம்பத்தான் தூள் பறக்குது.
    அவன் செய்ய வேண்டிய எல்லாத்தையும் இவ செஞ்சிட்டிருக்கா. குளிக்கிறதுல இருந்து எல்லாத்தையும் இவ கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வரணும்ன்னு நினைக்கிறாளே… ஆனாலும் இது ரொம்ப ஓவரோன்னு தோணுது.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *