யாரோ-12
Thank you for reading this post, provide your thoughts and give encouragement.
ஷ்யாமோடு இருந்த சௌமியா இதை கேட்க நேர்ந்திட, “பார்த்தியா ஷ்யாம். என்னை தடுத்த.. ஆனா அதே காரணத்துல தான் உங்கப்பா ஷண்முகம் செத்து போயிருக்கார். ஒரு வார்த்தை முன்னவே கண்டிச்சி இருந்தா என்னவாம். அவரால எத்தனை பொண்ணுங்க உயிர் போச்சோ.” என்று குமைந்தாள்.
“ஏ.. எனக்கென்ன தெரியும். அவரிடம் வர்ற பொண்ணுங்க காசுக்கு வருதுங்கனு இருந்தேன். இப்படி இருக்கும்னு நினைச்சேனா.
அதுவுமில்லாம நானே காலேஜ் முடிச்சி இங்க என்னைக்கோ ஒருநாள் வருவேன். அதுகூட உன்னை பார்க்க வருவேன். ஸ்கூல்ல லவ் பண்ணின பொண்ணுனு. இல்லைனா இந்த கிராமத்துல நான் உட்கார்ந்து இருப்பேனா.
இப்ப தான் கல்யாணம் பேசணும்னு ஒரு வருஷமா இங்கேயே இருக்கேன். சரி விடு.. நான் அந்த சந்தானம் தான் பழிக்கு பழி கட்சி பதவினு கொன்னுட்டாரேனு பீல் பண்ணினேன். ஒரு பொண்ணை தற்கொலைக்கு தூண்ட வச்சவர்னு தெரிந்துடுச்சு. இனி அவர் இறப்பை நான் பேசுவேனா? கொஞ்ச நாள்ல மேரேஜ் முடியட்டும்.
இப்ப லாக்கப்பில இருக்கற இரண்டு பேர் உங்கப்பா அனுப்பலைல அது போதும். உண்மை இருக்கறப்ப எதுக்கு பயம். அதை மீறி அந்த மேடம் நற்பவி கேட்டா எக்ஸ்பிளைன் பண்ணறேன். முதல்ல திமிரா தெரிந்தா. ஆனா இப்ப அப்படி தோணலை நிமிர்வா தெரியறா” என்று ஷ்யாம் பேச சௌமியா முறைக்க, என்று கொஞ்சினார்கள்.
ஞானவேலோ பேசி விட்டு திரும்ப அங்கே மேலதிகாரி நமச்சிவாயன் நின்றிருந்தார்.
உடனடியாக உள்ள நுழைந்தவர் “என்ன நற்பவி கொலையாளியை பிடிச்சிட்டிங்க போல. வாக்கு மூலம் எல்லாம் வாங்கிட்டிங்களா.?” என்று கேட்டு வரவும் நற்பவி எழுந்து சல்யூட் அடித்தாள்.
“சார் கடைசியா அவர் சொன்னதை நீங்க கேட்கலையா? அவர் கொலை செய்யலை” என்று கூறியதை சுட்டி காட்டினாள்.
“என்னமா இது சர்க்கரை பாகுல எறும்பு இருக்கு. ஆனா எறும்பு இனிப்பை திண்ண வரலைனு சூடம் அடிச்சி சொல்வீங்க போலயே.” என்றதும் நற்பவி பதில் கூற இயலாது தடுமாறினாள்.
“அதில்லை சார். அவரோட பேச்சுல உண்மை தெரியுது.” என்று கூறினாள்.
“சட்டத்துக்கு தேவை ஆதாரம் மா.” என்றவர் ஞானவேலிடம் வாக்குமூலத்தை பதிவு செய்ய கூற, நற்பவியை கண்டு கேஸ் பைல் செய்ய ஆரம்பித்தார்.
“நல்ல வேளை நான் வந்தேன். திவாகர் தரணை லாக்கப்ல போடுங்க” என்று நமச்சிவாயன் கூறவும் தரண் அழுதுக் கொண்டே உள்ளே சென்றார். அவரின் பார்வையில் என்னை காப்பாற்ற யாருமில்லையா என்ற வருத்தம் மேலோங்கி இருந்தது.
அடுத்தடுத்த நாட்களில் நற்பவிக்கோ யார் அந்த குற்றவாளியா இருப்பான் என்ற எண்ணமே உதிக்க மீனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தாள்.
மேலிடத்தில் தரணின் வாக்கு மூலத்தை பதிவு செய்ததால் சந்தானம் கைது செய்ய ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தது.
சௌமியாவும் ஷ்யாமும் பூங்கொத்து வாங்கி வந்து நற்பவிக்கு வாழ்த்து கூறி நன்றி நவில்ந்தனர். ஒரு நாள் விருந்துக்கு கூட இன்வெயிட் செய்து சென்றனர்.
நல்லதம்பி மற்றும் சாமுவேல் கொலை செய்ய முயன்றதற்காக மட்டும் தண்டனை பெற்றனர். நல்லதம்பிக்கு வந்த மெஸேஜ் கால் எல்லாம் கலெக்ட் செய்து அது சந்தானத்தின் வீட்டு எல்லைக்குள் இருந்து லோகேஷன் பதிவாக மாணிக்க விநாயகம் என்ற பெயர் அடிப்பட்டது. சந்தானம் குற்றத்தை திருப்ப ஷ்யாமின் மாமனாரை உபயோகப்படுத்தியதாக கணித்து விட்டிருந்தாள்.
அடுத்தடுத்த நாட்களில் சந்தானம் கைதானார். ஆனால் அதற்குள் மீண்டும் முன் ஜாமீன் பெற்று வெளிவந்தார்.
சையத்தோ அவரது வக்கீல் பழனியிடம் தரணின் வாக்குமூலத்தில் கூறினார். அதனால் ஸ்டேஷன் வந்து அனைத்தும் வாசித்து முடித்து அவனின் தனிப்பட்ட கொலைக் காரணத்துக்காக தான் ஷண்முகத்தை கொலை செய்தான் என்று திரிக்க காத்திருந்தார். போலிஸ் ஸ்டேஷனில் அமைதியாக வணக்கம் வைத்து திரும்பினார்.
“யோவ் தரணே கொலை செய்ததுக்கு காரணமா அவன் தங்கைக்காகனு சொல்லிட்டான். இப்ப நாம என்ன செய்யணும் கோர்ட்ல கேஸ் வந்தா சந்தானத்தை காரணியா வச்சி தப்பிக்க முயற்சி பண்ணறதா கேஸை திசை திருப்பணும். தொலைந்து போன உன் கார் சாவியை வச்சி உன் கார்ல தப்பிச்சதா சித்தரிக்கணும். இதை செய்தாலே சந்தானம் விடுதலை ஆகிடுவாரு.” என்று கூறிட அடுத்தடுத்த நாட்களில் அதுவே நடந்தது. சந்தானம் மாலையும் பூங்கொத்துமாக கையசைத்து வெளிவந்தார்.
நற்பவிக்கு மனம் தாளவில்லை. ஏனோ தரணின் செய்கை அவர் கொலையாளி அல்ல என்ற உள்ளுணர்வு உணர்த்தியது.
அதனால் அவரை கண்டு மேல் முறையீட்டிற்கு தானே வழக்கு தொடர்ந்து குற்றவாளியை கைது செய்வதாக கூறினாள்.
தரணோ பத்திரிக்கை தாளை நீட்டி “என் தங்கை இதழினி பெயரை கொட்ட எழுத்துல போட்டு, பக்கம் பக்கமா ஷண்முகத்தோட கொலைக்கு அவளுக்குமான தொடர்பை விவரித்து எழுதி வச்சிருக்காங்க.
கொலை செய்துட்டு தலைமறைவா கொஞ்ச காலம் இருந்துட்டு சொந்த ஊர்ல தலைநிமிர்ந்து வாழ்ந்து விதியிருந்தா கல்யாணம் பண்ணி நிம்மதியா வாழ நினைச்சேன். என் தங்கை என் மகளா பிறப்பா என்று கனவு கண்டேன். எல்லாம் மண்ணா போச்சு மா. என்னவொரு சின்ன சந்தோஷம் அந்த ஷண்முகசுந்தரம் செத்துட்டான் அது போதுமா.” என்று பேசி செல்பவரை கண்டு வருந்தி வெளியேறினாள்.
மாலை அன்மருதை வந்தப் பொழுது சோர்ந்தவளாய் காபி பருக மதிமாறன் ஹோட்டல் தேடி வந்தாள்.
மதிமாறனோ அவளை தவிர்க்க கல்லா பெட்டியருகே இருந்தான்.
மதிமாறனை பார்த்து புன்னகைக்க அவனோ முறுவலித்து வீட்டுக்கு கிளம்ப முயன்றான்.
காபி குடித்து விட்டு வந்த நற்பவியோ, “என்னாச்சு மாறன் சைலண்டா போறிங்க.” என்றதும் “வீட்ல கொஞ்சம் வேலை நற்பவி” என்று அகலவும், நற்பவி அமைதியாக சைராவுக்கு மட்டும் மட்டன் வாங்கி வந்தாள்.
மீனா துணிகளை பிழிந்து காயை போட்டவள், “என்னம்மா கொலைக்காரனை பார்க்க பெரிய ஜெயிலுக்கு போனதா கேள்விப்பட்டேன்.” என்று கேட்டாள்.
“ஆமா மீனா தரண் என்ன தான் குற்றவாளியா காட்டினாலும் உண்மையான குற்றவாளி அவனில்லைனு என் மனசு அடிச்சு சொல்லுது. என்ன செய்ய தெரியலை.
ஆமா மதிமாறன் ஏன் டல்லா இருக்கார். இன்னிக்கு என்ன வேலை?” என்று கேட்டாள்.
“என்னம்மா இப்படி கேட்கறிங்க? அன்னிக்கு உங்களை கொலை செய்ய வந்தாங்களே இரண்டு பேர் அன்னிக்கு முழுக்க மதிமாறன் ஐயாவோட வண்டி உங்க வீட்டு முன்ன இருக்கவும், நைட்டு டென்டு கொட்டாய்ல படம் பார்த்து வந்த சிலருங்க உங்களையும் அவரையும் சேர்த்து வச்சி அவர் காதுபட பேசிட்டாங்க.
பாவம் அவரு ஒவ்வொருத்தோட சண்டை போட முடியுமா.? இல்லை விளக்கிட்டு இருக்க முடியுமா? உங்களுக்கு எதுவும் அவப்பெயர் வந்திடக் கூடாதுனு விலகிப் போறாரு. ஆனாம்மா அவருக்கு உங்க மேல ஏதோ இருக்குமா. இல்லைனா தினமும் நீங்க சாப்பிட்டிங்களா? உங்களுக்கு எந்த தொந்தரவும் இல்லையேனு விசாரிப்பாரு. சைராவுக்கு எலும்பு கறி அதுயிதுனு கறிகடை ஆட்களிடமிருந்து கழிவை வாங்கி வச்சி எடுத்தாந்து கொடுக்கறாரு. அவருக்கு நிஜமா உங்க மேல அக்கறை மா.
எனக்கே நீங்களும் அவரும் காதலிக்கறிங்களோனு டவுட் வந்துச்சினா பாருங்க.
அதனாலையோ என்னவோ மதிமாறன் ஐய்யா அவராவே ஒதுங்கிடறாரு.” என்று விசனப்பட்டு கொண்டே உடைகளை அடித்து துவைத்து பிழிந்து காயப் போட்டபடி கூறினாள் மீனா.
நன்விழியோ தயக்கமாய் மீனா பேச்சை தவிர்த்து அமைதியாய் பதில் தராமல் அறைக்குள் சென்றாள்.
“ஒரு பதிலும் சொல்லலை… ஒரு வேளை ஊரு சொல்லறது முழு உண்மையா. பரவாயில்லை நல்லஜோடி தான்” என்று முனங்கி வீட்டை ஒதுங்க வைத்து சென்றாள்.
அடுத்தடுத்த நாட்கள் நற்பவியோ மதிமாறன் எதிரே வந்தாலும் சிறு மிதமான புன்னகையோடு அவனை போலவே கடந்து சென்றாள்.
முன்பு ஊர்மக்கள் நற்பவியை இகழ்ந்தவர்கள் இம்முறை எங்கு சென்றாலும் வணக்கம் வைத்து மதிக்க கொஞ்சம் கொஞ்சமாய் அந்த ஊரின் மக்களில் ஒரு பிரதிநிதியாக மாறிக்கொண்டிருந்தாள்.
ஏதோவொரு அழுத்தம் தாக்க, தந்தைக்கு போன் செய்தாள்.
அவரோ அக்கா வீட்டில் இருக்க தந்தையோடு அக்கா மாமா என்று இருவரிடமும் உரையாடினாள்.
வீடியோ காலில் நிறை மாத நிலவாக நன்விழி அக்கா தெரிய பூரித்தாள்.
அந்த பக்கம் நன்விழியோ தான் ஆசைப்பட்ட பணியை தங்கை செய்யவும் பெருமை பொங்க ரசித்தாள்.
“ஏய் பாப்பா… உங்க அக்காவை பார்த்தது போதும். மாமா என்னிடம் பேசணும்னு ஆர்வமிருக்கா இல்லையா? முன்ன எல்லாம் தினமும் பேசுவ. உங்கக்கா பேசிக்கிட்டே சாப்பிட இரண்டு வாய் கூடுதலா சாப்பிடுவா. இப்ப எல்லாம் போனே பண்ணறதில்லை. பயங்கர பிஸியோ…? கொலைக்காரனை உள்ள தள்ளியும் அப்சட்டாவே சுத்தற” என்னு கேட்டான் நன்விழி கணவன் நடிகன் ப்ரனித்.
“மாம்ஸ் எங்கக்கா எக்ஸ்ட்ரா சாப்பிடணும்னா சூட்டிங் போகாம அவளை நீங்க தாங்கணும். நைஸா என்னை கால் பண்ண சொல்லறிங்க. கேஸல்லாம் முடிந்தது ஆனா உண்மையான கொலையாளி பிடிக்கலையோனு மனசு அடிச்சிக்கிட்டே இருக்கு. அந்த டிஸ்அப்பாயிண்மெண்ட்.
மாமா என்னோட ஸ்டெரஸ் ரிலீப்பே உங்க படம் தான். உங்க படம் விதுரநீதி எப்ப ரிலீஸ் ஆகப் போகுது. செம மாஸா நடிச்சிருக்கிங்கனு கேள்விப்பட்டிருக்கேன். படம் நூறு நாள் ஓடுமா?” என்று கிண்டலாய் மனதை மாற்றிக் கொள்ள பேசினாள்.
“நீ என் ரசிகை தானே படம் வந்ததும் பார்த்து சொல்லு. பார்ட் டூ வேற எடுக்கணும்னு பிரடியூசர் கேட்டிருக்காங்க. முதல்ல இது எப்படி ஓடுதுனு பார்த்துட்டு சொல்லறேன்னு அவங்களிடம் சொல்லிட்டேன்.” என்றதும் நன்விழி பிடுங்கி “ஏய் சைரா மடியிலயே வச்சிருக்க, லைட்டா வெயிட் போட்டிருக்கு. சைரா வளர்ந்துட்டாளா?” என்று கேட்டாள் நன்விழி.
“ம்ம்… ஆமா… என்னோடவே தூங்கும் தெரியுமா.” என்று முத்தம் வைத்தாள் சைராவுக்கு.
நேரங்கள் கூட கூட நற்பவியின் தந்தை நித்திஷ் வாசுதேவ் “அக்கா தூங்கணும் டா நாளைக்கு பேசு. டைம்க்கு சாப்பிட்டு அக்கா தூங்கணும்னு டாக்டர் சொல்லிருக்காங்க. நீயும் நேரத்துக்கு ஓய்வெடு.” என்றதும் நற்பவியோ “ஓகே ப்பா… அக்காவை பார்த்துக்கோங்க” என்று கத்தரித்தாள்.
தன் குடும்பத்தினர் மூவரும் கையசைத்து மகிழ பறக்கும் முத்தமாய் வீடியோ காலில் கொடுத்து அணைத்து வைத்தாள்.
தன் குடும்பத்தோடு பேசியதும் ஒரு அழுத்தம் விலக உறங்கினாள்.
இங்கு தரணோ வீசிங் இருக்க எப்பொழுதும் உபயோகிக்கும் இன்ஹலரை மறந்து வந்திருக்க, சுவாசத்திற்கு போராடி மூச்சு திணறிக் கொண்டிருந்தான்.
-யாரோ தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்.
Super super super interesting