அறத்துபால் | துறவறவியல்| வெகுளாமை-31
குறள்: 301
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன்; பலிக்காத இடத்தில் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?
- 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁
குறள்: 302
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற
பலிக்காத இடத்தில் (தன்னைவிட வறியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு; பலிக்கும் இடத்திலும் (மெலியவரிடத்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறில்லை.
குறள்: 303
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்
யாரிடத்திலும் சினங் கொள்ளாமல் அதை மறந்துவிட வேண்டும்; தீமையான விளைவுகள் அந்தச் சினத்தாலேயே ஏற்படும்.
குறள்: 304
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற
முகமலர்ச்சியையும் அகமகிழ்ச்சியையும் கொல்கின்ற சினத்தைவிட ஒருவனுக்குப் பகையானவை வேறு உள்ளனவோ?
குறள்: 305
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்
ஒருவன் தன்னைத்தான் காத்துக்கொள்வதானால், சினம் வாராமல் காத்துக்கொள்ள வேண்டும்; காக்காவிட்டால் சினம் தன்னையே அழித்துவிடும்.
குறள்: 306
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு, ஒருவனுக்கு இனம் என்னும் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.
குறள்: 307
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தைப் பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாததுபோல் ஆகும்.
குறள்: 308
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று
பல சுடர்களை உடைய பெருநெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்தபோதிலும், கூடுமானால் அவன்மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.
குறள்: 309
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்
ஒருவன் தன் மனத்தால் சினத்தை எண்ணாதிருப்பானானால், நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.
குறள்: 310
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
சினத்தில் அளவுகடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவார்.