Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-2

கண்ணிலே மதுச்சாரலே-2

அத்தியாயம்-2

  • Thank you for reading this post, provide your thoughts and give encouragement. 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

    “ஆதித்யா… ஆதித்யா… ஆதித்யா” என்று அவன் பெயரை பூஜையறையிலிருந்து ஏலமிட்டிருந்தார் பார்வதி.

  “இதோ வந்துட்டேன் அம்மா.” என்ற ஆதித்யாவின் குரல் ஆண்மை ததும்பும் விதமாக ஒலித்தது. இன்றுடன் இருபத்தியேழு வயதை தொடப் போகின்றான்.‌ அவனுக்கான உறவென்று அவன் பதிமூன்று வயதில் தேர்ந்தெடுத்தவர் பார்வதி அம்மா.

  அன்றிலிருந்து இன்று வரை இந்த இடைப்பட்ட பதினான்கு வருடத்தில் அவன் பார்வதி அம்மாவுக்காக மட்டுமே வாழ்கின்றான்.

   முதலில் அம்மாவாக இவனை வளர்க்க தேர்ந்தெடுத்து, கேட்டப்போது சற்று யோசித்தான்.

   ஆனால் குடும்பம் என்ற ஒன்றை அவன்‌ மனம் தேடவும் அன்னையாக ஏற்றான்.

  சாந்தகுமாரிடம் “சார் நான் அவங்களை அம்மாவா ஏற்று அவங்களோட போறேன்.” என்று மொழியவும் தான் நிம்மதி.

அனாதையாக பிறந்தவர்களுக்கும், அனாதையாக மாறியவனுக்கும் வித்தியாசம் உண்டு.

வினுசக்கரவர்த்தி கொடுத்த நன்கொடையில் பத்து வருடம் இந்த ஆசிரமத்தில் அடிக்கடி உணவை நிறைத்த காரணத்தால், அவர் பையனுக்கு ஒரு எதிர்காலம் தன்னால் நிவர்த்தி செய்தார். ஓரளவு ஆதித்யா பார்வதியுடன் நன்றாக பழகி சொந்த தாயாகவே ஏற்றான்.‌

   பார்வதியும் பெறாத பிள்ளையென கண்ணை போல வளர்த்தார்.‌ இதோ எம்.பி.ஏ படித்து நல்ல வேலையில் இருக்கின்றான். கைநிறைய சம்பாத்தியம். தந்தையை போலவே அன்பாலயம்’ ஆசிரமத்திற்கு நன்கொடை அளித்து ஒன்றிரண்டு சிறுவனின் படிப்பு தேவையை ஏற்றுக்கொண்டான்.‌

    “என்னம்மா அவசரம்?” என்று வந்தவனிடம், “அவசரமா? இதுவே லேட்டு. இருபத்தி ஐந்து வயசுலயே நான் உனக்கு கல்யாணம் செய்து வைத்திருக்கணும்.
    படிச்சதும் இரண்டு வருஷம் போகட்டும் மூன்று வருஷம் போகட்டும்னு காரணம் காட்டி கல்யாண பேச்சை தடை பண்ணிட்ட.

  இந்த முறை உனக்கு பொண்ணு பார்க்கணும் ஆதித்யா. அதை சொல்ல தான் கூப்பிட்டேன்.” என்று மனமுருகி இறைவனை வேண்டினார்.

   “அம்மா… விளையாடறிங்களா?” என்றவன் இமை மூடி இறைவனை வேண்டினான்.‌

   திருநீறு வைத்துவிட்டு “நான் விளையாடலை. எனக்கு ஒரு மருமக வேணும். ஒரு பேரன் பார்க்கணும். இரண்டு பேத்தி வேணும்” என்று அடுக்கினார்.

  “ஒரு பேரன் இரண்டு பேத்தியா? அது சரி” என்று சிரித்தான்.‌

  “ஆதித்யா… உனக்கு இப்ப பார்த்தா தான் சரியா வரும்‌. லேப்டாப்ல மேட்ரிமோனில பதிவு பண்ண போறேன். தெரிந்தவர்களிடம் தரகரிடம் சொல்லி வைக்கணும்” என்று கூற, “பாருங்க பாருங்க… ரம்பையோ திலோத்தமையோ எவ சிக்குறான்னு நானும் பார்க்கறேன்” என்று கேலி செய்தான்.

   அம்மாவும் பையனும் நேராக அன்பாலயம் வந்தார்கள். ஆதித்யா பிறந்த நாளிற்கு இனிப்பும் கேக்கும் தர வந்தான்.

  பதினான்கு வருடத்திற்கு முன்னால் தந்தை வினுசக்ரவர்த்தி மற்றும் அனுராதா அம்மாவோடு வந்து கேக் வெட்டி, கொண்டாடி, இங்கிருக்கும் குழந்தையோடு விளையாடி, வீட்டுக்கு செல்வான்.

    அன்று பள்ளியில் ஆண்டு விழா முடித்திருந்த ஆதித்யாவை தந்தை தாயோடு அவனை அழைத்து வந்த சமயம், தறிக்கெட்டு கார் ஒரு பாலத்தில் முட்டி மோதியது. அவன் அந்த இடத்தில் இருந்தான்‌. தந்தை தன்னை மட்டும் அந்த நேரத்தில் காப்பாற்றி விட்டாரா? அல்லது கோரவிபத்தில் அவன் மட்டும் பிழைக்க வேண்டுமென்ற விதியோ?!

   “ஆதித்யா?” என்று பார்வதி தீண்டவும், “ஒன்னுமில்லைம்மா… ஒரு மாதிரி கவனம் சிதறிடுச்சு” என்று குரல் பிசிறியது.

   ”சாந்தகுமார் சார் உன்னை கூப்பிட்டராம் சுபாஷ் சொல்லிட்டு போனார். ஓரெட்டு பார்த்ததுட்டு வந்துடு” என்று அனுப்ப மகிழ்ச்சியாக தலையாட்டினான்‌.

    ஆதித்யா அந்தப்பக்கம் செல்லவும் இந்தப்பக்கம் பரமசிவம் ஒரு நபரை அழைத்து வந்தான்.‌

   “சார் நீங்க கேட்ட பார்வதி.” என்று சுட்டிக்காட்ட, “இனி நான் பேசிக்கறேன் தம்பி” என்றதும் பரமசிவம் நகர்ந்தார்.

    “எப்படியிருக்க பார்வதி” என்று கேட்டதும் பார்வதிக்கு கோபம் உருவாக, “ரொம்ப ரொம்ப சந்தோஷமா நிம்மதியா இருக்கேன். என் நிம்மதி குலைப்பதற்காகவே இப்ப நீங்க இங்க வந்திங்களா? ” என்றார் நிமிர்வாய்‌.

    எதிரே நின்ற நபரோ “நான் எப்படியிருக்கேன்னு கேட்க மாட்டியா?” என்று அன்பாய் கேட்டார் கைலாஷ். பார்வதியை தாலி கட்டிய கணவர் அவர்.
 
  “உன்னால ஒரு குழந்தையை பெற்று தர முடியலை.‌ நீ எனக்கு வேண்டாம்’னு என்னை நிர்க்கதியாக வீட்டை விட்டு துரத்திட்டு, இன்னொருத்தி கூட குடும்ப நடத்த சந்தோஷமா போனவர் தானே நீங்க. நல்லா தானே இருப்பிங்க” என்று சுடுசொற்களாய் வீசினார் பார்வதி.

  கைலாஷ் உடனே மனம் துவண்டவராய், “அந்த தப்புக்கு தான் இப்ப தண்டனை அனுபவிக்கறேன் பார்வதி. உன்னை வேண்டாம்னு சொல்லி  இன்னொருத்தி பின்னாடி போனதுக்கு தான், கடவுள் என்னை கண்ட கருமத்தை கண்ணால் பார்க்க வச்சி தண்டிச்சிட்டார்.‌

   என் பி.ஏ என்னுடைய பெட்ரூம்ல அந்த சிறுக்கி கூட” என்று மேற்கொண்டு சொல்ல இயலாமல் வாயை பொத்தி துடித்தார்.

   பார்வதிக்கு கேட்கும் போது கண்டதை மிதித்த உணர்வு. என்னயிருந்தாலும் கணவரோடு வாழ்ந்தவர் ஆயிற்றே. பிடிவாதமும் வீம்பும் கொண்டு, பணம் தான் உலகில் பிரதானமென்று  வாழந்தவர். சிறு காயமும் பார்த்திராதவர் இந்த வலியை எப்படி தாங்கினார்.
  இவர் எதிரில் கட்டிய பெண் அவருக்கு கீழ் வேலை செய்தவனோடு உறவாடியதை நேரில் பார்த்திருந்தால் இறக்க முடிவெடுத்திருப்பாரே.’ என்று அதிர்ச்சியாக கணவரை நோக்கினார்.‌

   “நல்லவனு நினைச்சி குழந்தைக்கு ஆசைப்பட்டு தான் யமுனாவை கல்யாணம் செய்தேன்‌ பார்வதி. ஆனா அவ கர்ப்பமாகிட கூடாதுன்னு மாத்திரையை போட்டு தவிர்த்திருக்கா. அவ என்னை விரும்பலை. என் பணத்தை விரும்பியிருக்கா. நான் இல்லாதப்ப என் பி.ஏ வினோத்தோட என் பெட்ரூம்ல இருந்ததை பார்த்ததும், துரத்தி விட்டுட்டேன்.

  குழந்தை செல்வமும் கிடைக்கலை. அவளையும் இப்ப பணத்தை தந்து கழிச்சி கட்டியிருக்கேன்.

  தனியா இருந்தப்ப இறந்துடலாம்னு கூட நினைச்சேன். அப்பதான் உன்‌னோட நினைவு வந்தது‌ பார்வதி‌. கணவனே கண் கண்ட தெய்வமா என்னை நினைச்சி வாழ்ந்த நீயெங்க? உன் குணத்தை புரிஞ்சுக்காம போனேனே, உன்னிடம் மன்னிப்பு கேட்காம நான் செத்துப்போனா எனக்கு நரகம் தான் கிடைக்கும்” என்று சுற்றுப்புறம் எதையும் யோசிக்காமல் காலில் விழுந்தார்.

  பார்வதி பதறி தள்ளி நின்று, “என்னங்க பண்ணறிங்க. எழுந்து நில்லுங்க. தயவு செய்து எழுந்து நில்லுங்க” என்று தூக்கினார். என்னயிருந்தாலும் பதிபக்தி என்று அறிந்து வளர்ந்த பெண்மணி. இத்தனை நாட்கள் பிரிந்து வளர்ந்தாலும் அந்த பக்தி வந்துவிடுகின்றதே.

   பார்வதி தூக்கவும் ஆதித்யா பார்வதி பக்கம் வந்திருந்தான்.

     ”என்னாச்சும்மா? என்ன பிரச்சனை?” என்று வந்தவனிடம், கைலாஷை என்னவென்று அறிமுகப்படுத்த, தயக்கம் கொண்டவராய் கையை பிசைந்து நின்றார்.‌

  ஆனால் கைலாஷோ, “நான் பார்வதியோட புருஷன். வைரத்தை தொலைச்சுட்டு கண்ணாடியை நம்பி போனவன். இப்ப வைரத்தை புரிஞ்சுண்டு வந்து நிற்கறேன். என் பார்வதி என்னை மன்னிச்சு சேர்த்துப்பாளானு ஏங்கி நிற்கறேன்” என்று கரகரப்பான குரலில் கலங்கி கூறினார்.‌

  ஆதித்யாவுக்கு பார்வதி அம்மாவின் கணவர் என்று புரிய, “அம்மா..” என்றவன் கைலாஷை ஏறயிறங்க பார்த்து, “பேசிட்டு வாங்கம்மா. உங்க முடிவு தான் என்‌ முடிவும்” என்று இருவருக்கும் தனிமை தந்து நகர்ந்தான்.

சற்றுமுன் சாந்தகுமார் இவரை பற்றி கூறுவதற்கு ஆதித்யாவை அழைத்து பார்வதியின் கணவர் என்று ஒருவர் வந்து விசாரித்ததை கூறிவிட்டார். பார்வதியாக கணவரை ஏற்றுக்கொண்டால் அவரை நீயும் தந்தையாக ஏற்றுக்கொள் என்று அறிவுறுத்தினார்.

  கைலாஷ் பதினைந்து நிமிடம் கல்லும் கரையும் விதமாக பேசி அழுதார். பார்வதி மென்மை மனம் கொண்டவர் கரைய மாட்டாரா?

   முடிவில் “நடந்ததை மறந்துடுங்க” என்று ஆறுதல் கூறினார்.‌

  “நீ என்னை மன்னிச்சேன்னு சொல்லு பாரு” என்று பிடிவாதமாய் பார்வதி காலை பிடிக்கவே முயன்றார்.

“அய்யோ நான் மன்னிச்சிட்டேன் போதுமா” என்று நகர்ந்தார் பார்வதி.  

   இருவரும் பேசி தீர்த்ததும், “நான் உங்களை மன்னிச்சிருக்கலாம். ஆனாலும் உங்களை நம்பி வரமாட்டேன்.‌ நான் என் பையனோட தான் இருப்பேன்.‌” என்றுரைத்தார்.

  இங்கு வரும் முன்னரே இந்த ஆசிரமத்திலிருந்து ஒரு சிறுவனை பார்வதி எடுத்து வளர்ப்பதை அறிந்ததால், “நான் உன்னை என்னோட அழைச்சிக்க மாட்டேன். உன்னோட நானும் வர்றேன். உன் பிள்ளைக்கு நான் அப்பாவா இருக்கலாமா?!” என்று அன்பாய் கேட்டார்.‌
  
  கணவர் தன்னை மட்டுமின்றி தான் வளர்த்த ஆதித்யாவையும் மகனாக உறவுக்கொண்டாட மகிழ்ந்தவர் “நான் அம்மான்னா நீங்க தானேங்க அப்பா” என்று கூறி கண்ணீரை துடைத்து “வாங்க ஆதித்யாவை அறிமுகப்படுத்தறேன்.” என்று ஆதித்யா இருக்குமிடம் அழைத்து வந்தார்.

  பார்வதி கூற தயங்கும் விஷயத்தை அவர் மனதை படித்தவன் போல, “அம்மா… கைலாஷ் அப்பாவும் நம்ம கூட தானே வர்றார்” என்று கேட்டு வைத்தான்.‌

  பார்வதியோ “என்‌ முகம் பார்த்து மனதை படிக்கறவன்னாச்சே நீ.” என்று மகனை உச்சி முகர்ந்து ஆமென்பதாய் கைலாஷையும் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.‌

  அன்றைய பொழுது ஆதித்யா பார்வதி கைலாஷ் மூவரும் ஒரு குடும்பமாய் பேசி சிரித்து மகிழ்ந்தார்கள்.

  பார்வதிக்கு மனம் பூரித்தது. இதற்கு மேல் ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்? கணவரும் வந்துவிட்டார். தன் வயிற்றில் பிறந்திருந்தால் கூட இத்தனை அன்பு காட்டும் மகன் இருக்க மாட்டான். ஆதித்யாவின் அன்பு உள்ளத்தை நிறைத்தது.

   கைலாஷுமே மனைவியிடம் சேர்ந்தபின், மனைவி கையால் பரிமாற ருசியான உணவுண்டார்.

‌ நிறைய இழந்துவிட்டதாக பார்வதி கையை பிடித்து அடிக்கடி வருந்தினார்.‌

    ஆதித்யா இருக்க பார்வதி நெளிந்து கையை விடுவித்து கொண்டார்.

  ஆதித்யாவோ இவர்கள் இருவரையும் பார்த்து தன் அன்னை அனுராதா, தந்தை வினுசக்கரவர்த்தி இருவரின் நினைவுக்குள் சென்றான்.

  தந்தை வினுசக்கரவர்த்தி அனுராதாவுமே அன்பான தம்பதிகள்.

  இப்படி தான் ஒரு நாளில் அனுராதா தந்தைக்கு உணவு பரிமாற, வினுசக்ரவர்த்தி அனுராதா செய்த உணவை ருசித்து, உணவை செய்த கைக்கு முத்தமிட்டார்.‌

  ஆதித்யா படியில் தடாலென ஓடிவர, ‘பையன் வருகின்றான்’ என்று அனுராதா கணவரை விட்டு நகர்ந்து சென்றார்.
  மாடியிலிருந்து தாய் தந்தையின் அன்பை கண்டு அந்த அன்பில் அவனும் நுழைந்துவிட வந்தான். குழந்தைகள் தாய் தந்தை கொஞ்சும் போது வேண்டுமென்றே இடையில் புகுந்து என்னை கொஞ்சுங்கள் என்று பிடிவாதம் பிடிக்குமே. உங்கள் அன்பு எனக்கு மட்டும் என்பது போல…. அன்று ஆதித்யா‌ அப்படி தான் சிறுபிள்ளையாக சிறுவனாகவே நுழைந்தான்.

அதெல்லாம் போன ஜென்மத்தில் நிகழ்ந்தது போல நினைத்து பார்த்தான்.‌ கண்ணீர் விழியோரம் சேரவும் சுதாரித்து விட்டான்.‌

     இன்னமும் சிலநேரம் அந்த விபத்து அவன் கண் முன் வந்து சென்றிடும். அவ்வப்போது அவ்வெண்ணத்திலேயே உழன்று தவிப்பான்.
  
   “அம்மா… நான் தூங்கப்போறேன். நீங்க பேசிட்டு இருங்க” என்று தன் வருத்தத்தை மறைத்து அறைக்கு நழுவினான்.‌

-தொடரும்.

3 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-2”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *