Skip to content
Home » கண்ணிலே மதுச்சாரலே-10

கண்ணிலே மதுச்சாரலே-10

அத்தியாயம்-10

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

     திலோத்தமா இடிந்து அமர்ந்திருக்க தந்தையிடம் இதை தான் கூறியிருப்பாரோ? அதனால் தான் இதயநோய் வந்திருக்கும் என்று முடிவெடுத்தவளாக முதலில் நிதானித்தாள்.

முதலில் தந்தையின் உடல்நலம் மேம்பட்டப்பின் வீட்டிற்கு வந்து நிதானமாக அவரிடம் பேசுவோம்‌. இதற்கிடையே கணவர் ஆதித்யாவிடம் பேசலாம் என்று முடிவெடுத்தாள்.

   சுரேந்திரன் அன்று மாலையில் ஹாஸ்பிடலில் இருந்து கிளம்ப முடிவெடுத்தார். ஓரளவு மருந்துமாத்திரையில் அன்பான கவனிப்பில் இருந்தால் போதுமென்று டாக்டர் இரண்டு நாளில் தங்கிவிட்டு செல்ல கூற, மருந்துமாத்திரையோடு வீட்டுக்கு செல்லவே துடித்தார்.
  
   திலோத்தமா மனநிலையில் வீட்டுக்கு சென்றிட அவளுமே தலையாட்டி விட்டாள்.

   தந்தையை அழைத்து அவர் வீட்டுக்கு அடியெடுத்து வைத்தாள். கைலாஷும் பார்வதியும் கூடவேயிருந்து மாலை அவர்கள் வீட்டுக்கு விட்டுவிட்டு செல்ல கிளம்பும் நேரம், “அத்தை நானும் வர்றேன் அவரிடம் பேசணும்.” என்று கூறி தந்தையிடம் “அப்பா… நான் இப்ப வந்துடுவேன்‌” என்று கைப்பையை எடுக்க போனாள்.

  “நீ இனி அவன் வீட்டுக்கு போக வேண்டாம் திலோத்தமா. அவனுக்கும் உனக்கும் டிவோர்ஸ் வாங்கிடலாம்.
   கொஞ்ச நாளில் நல்லவனா, வீட்டோட மாப்பிள்ளையா ஒருத்தனை கல்யாணம் பண்ணி வைக்கிறேன். ” என்று கூறவும் திலோத்தமா அதிர்ச்சி அடைந்தவளாக உறைந்தாள்.

   இது பேச வேண்டிய தருணம் அல்லவா?! “என்னப்பா சொல்றிங்க? என்ன பிரச்சனை? ஏன் இப்படி பேசறிங்க. வரதட்சணை வேண்டாம்னு சொன்னார்‌. அதுக்கு பாராட்டலாமே. ஏன் இப்படி?” என்று ஆதித்யாவிற்கு ஆதரவாய் பேசவும், “அதெல்லாம் பாராட்ட ஒன்னும் இல்லை. அவன் வேண்டாம்‌மா.” என்று தன் திருட்டு தனத்தை கூறாது பொத்தம் பொதுவாய் கூறினார்.

  தன் வாழ்க்கையை பற்றிய பெரிய விஷயம் தந்தை இப்படி சர்வசாதாரணமாக சொல்கின்றார்.

  ஆதித்யாவோடு தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தம்? அவனை ஆசை ஆசையாய் மணந்தது இப்படி தந்தை சொன்னதும் விலகுவதற்கா?

   “அவர் என்ன பேசினார்? அதையாவது சொல்லுங்க. அவர்‌ மேல தப்பிருந்தா நான் அவரிடம் பேசறேன்.” என்று திரும்ப திரும்ப கூறவும், “அப்பா மேல அன்பிருந்தா சொல்றதை கேளு திலோத்தமா. அவன் உனக்கு வேண்டாம்” என்று கறாராக கூறினார்.

  இதென்ன சோதனை மருத்துவமனையிலிருந்து வந்ததும் மீண்டும் அவர் உடல்நிலையை கெடுத்துக்க போகின்றார் என்று முதலில் சாந்தப்படுத்த முயன்றாள்.

   மகள் ஆதித்யாவை தேடி செல்லாமல் தன் பேச்சிற்கு செவி சாய்க்கவே சுரேந்திரன் திடம் கொண்டார்.

   கைலாஷும் பார்வதியும் வீட்டுக்கு புறப்படுவதாக சொல்லாமல் கிளம்பினார்கள்.

  திலொத்தமா தன் மாமியாரை பார்த்து சூழ்நிலை கைதியாக நின்றாள்.

  திலோத்தமாவும் ‘இப்ப எப்படியும் ஆபிஸ் கிளம்பியிருப்பார். நைட் வீட்ல தான் இருப்பார். அப்ப நேர்ல போய் பேசிடணும்’ என்று தந்தைக்காக அவர் வீட்டில் நடமாடினாள்.

   சுரேந்திரனும் மகளை கவனித்தார். போதாத குறைக்கு மருத்துவமனை வாசம் சென்று வந்ததால் விட்டுவிட்டு சோர்வு தாக்கியது.
    அதனால் ஓய்வெடுக்க நாடினார். திலோத்தமாவும் தந்தையின் கவலையை பெரிதாக்கவில்லை.

  ஆனால் மாலை நேரம் தந்தை உறங்குவும், வேலையாட்களிடம் கூறிவிட்டு ஆதித்யாவை காண ஓடிவந்தாள். தனியாக வந்தால் பேசுவானோ என்னவோ என்று மாமியாரை துணைக்கு அழைத்து வந்தாள். அவரும் ஆதரவாய் வந்தார்.

  வீட்டில் காலிங் பெல் அடிக்க, கதவை பாதி திறந்தான் ஆதித்யா.

  “அம்மா” என்றவன் அவருக்கு பின்னால் வந்த திலோத்தமாவை கண்டு, “இவ எதுக்கு இங்க வந்தா?” என்று கதவை முழுதாய் திறக்காமல் தடையாய் நின்றான்.‌

   “என்ன ஆச்சு… ஏன் என்னை வெறுக்கறிங்க? அப்பா எதுக்கு அப்படி பேசறார். நீங்க ஏன் டிவோர்ஸ் பத்தியெல்லாம் பேசறிங்க? எனக்கு ஒன்னுமே புரியலை. அப்பா என்ன செய்தாலும் மன்னிச்சிடுங்க. நீங்க சொன்ன உடனே வரமுடியாம போயிடுச்சு.” என்று முன் வர, “அங்கேயே நில்லு. உனக்கு கொடுத்த நேரம் முடிஞ்சிடுச்சு. இனி நீ இந்த வீட்டுக்கு வரவேண்டியது இல்லை. உங்கப்பாவோட அங்கேயே இரு. அம்மா நீங்க மட்டும் உள்ள வாங்க” என்று கூறவும், “எங்கப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். அந்த நிலையில் ஹாஸ்பிடல்ல ஒரு மகளா இருந்தேன். நீங்க வர சொன்ன நேரத்துக்கு வரமுடியலை. அதுக்கு இப்படியா?” என்று கேட்டு மன்றாடினாள்.

  “ஆதித்யா… அவளுக்கு காரணம் தெரியாது. பாவம்டா அவ” என்று பார்வதி கூறவும், “அவங்க அப்பாவுக்கு காரணம் விலாவரியா சொல்லிட்டேனே அம்மா. அவரிடம் கேட்டுக்க சொல்லுங்க. நான் சொன்ன நேரத்துக்கு வந்திருந்தா இவ என்‌ மனைவி. இப்ப அவ சுரேந்திரன் பொண்ணு” என்று கூற சுரேந்திரன் கார் வாசலில் கிறீச்சிட்டு வந்திருந்தது.

காரிலிருந்து சுரேந்திரன் இறங்கி வந்து, “நீ ஏன்மா இந்த அனாதை பையலோடு வீட்டுக்கு வந்திருக்க. நீ நம்ம வீட்டுக்கு வா. இந்த அன்னகாவடி பேசறதை எதையும் காதுல வாங்காதே. இவனோடு கல்யாணம் முடிந்ததை கனவா நினைச்சிக்கோ. உனக்கு அப்பா வேறவொருத்தனை கல்யாணம் பண்ணி வைக்கறேன்‌ வாம்மா. ” என்று இழுத்தார்.

   “அய்யோ அப்பா. முதல்ல அவரோட பேச விடுங்க. இங்க எதுக்கு வந்திங்க‌” என்று உதறினாள்.

  ஆதித்யா நகைத்தபடி, “இன்னோரு கல்யாணமா? வாவ் பண்ணி வையுங்க. உங்க பொண்ணு தானே. இன்னொருத்தனை கல்யாணம் செய்ய அஞ்சமாட்டா. என்னை என்ன சொன்னிங்க? அனாதை பையலா? அன்னகாவடியா..‌?

  நீங்க உங்க முதலாளியான என் அப்பா வினுசக்கரவர்த்தியிடம் சொத்தை சுருட்டி அதிர்ச்சி தராம இருந்திருந்தா, இன்னிக்கு நான் அப்பா அம்மாவை இழந்து அனாதையா இருந்திருக்க மாட்டேன்.
அப்பறம் என்ன சொன்னிங்க அன்னகாவடியா…? நீங்க இருக்கற வீடு ஆபிஸ் எல்லாம் என்னுடையது. நீங்க நயவஞ்சகமா ஏமாத்திட்டு என்னை பேசறிங்க…‌ நான் இப்பவும் சக்கரவர்த்தி குடும்பம். எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் தனித்து சுயமா அடைந்திருக்கேன். உன்னை மாதிரி இல்லை. உன்னை மாதிரி துரோகிகள் பணத்துக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வாங்க‌. போ… உன் பொண்ணுக்கு இன்னொரு கல்யாணம் செய். உன்னால் அதை தான் செய்ய முடியும்.” என்று கூறவும் திலோத்தமா ஸ்தம்பித்தாள்.

  ஆதித்யா பேச்சு தன்னை காயப்படுத்த அவனை வலியோடு பார்வைமிட்டாள்.

   சுரேந்திரனோ, “நீ வாம்மா. இவனோடு இந்த புறாக்கூட்டில் வாழறதா.” என்று இழுத்து சென்றார்‌.

  ஆதித்யாவை இமைக்காது பார்த்து தந்தை இழுப்பிற்கு சென்றாள்.
   அவளுக்கு இன்னமும் காரணம் சரிவர தெரியாதே. ஆதித்யா இப்படி பேச அதிர்ச்சியடைந்து இருந்தாள்.
தற்போது தான் ஆதித்யாவிற்கும் தந்தைக்கும் ஏதோ வேறு பிரச்சனை என்றே சிந்தித்தாள்‌.
  
   காரில் ஏறியப்பின்னும் ஆதித்யாவையே காண அவனோ பார்வதி அன்னையை மட்டும் அழைத்தவன், கதவை தாழிட்டு இருந்தான்.

  காரில் திலோத்தமா முகம் பொத்தி அழுதாள்.

   “என்ன தான் நடந்துச்சு? ஏன் இப்படி மாறியிருக்கிங்க. கொஞ்ச நாள் முன்ன கூட, வீட்டோட மாப்பிள்ளையா வரமாட்டார்னு புரியுது. வரதட்சணையும் வாங்கலை. நல்லவரா இருக்கார், நான் மன்னிப்பு கேட்கணும்’ இப்படியெல்லாம் பேசனிங்களே அப்பா” என்று வர, “எனக்கு இதயநோய் வந்து மரணத்தை தொட்டுட்டு வந்திருக்கேன். தயவு செய்து அந்த வெட்டி பயலை பத்தி பேசி என்னை வருத்தப்பட வைக்காத.” என்று கோபமாய் முடித்தார்.

   “அவர் என்னவோ சொன்னாரே அப்பா. அது என்ன? அவர் அப்பாவோட சொத்தை நீங்க நயவஞ்சகமா ஏமாத்திட்டதா? நம்ம இருக்கற வீடு ஆபிஸ் அவரோடையதா? எனக்கு உண்மையை சொல்லுங்க” என்று பிடிவாதம் பிடிக்க, சுரேந்திரன் பதட்டமானார்.

   “காரை நிறுத்துங்க… காரை நிறுத்துங்க” என்று கத்தவும், சுரேந்திரன் நிறுத்தினார்.

    “உண்மையை சொல்லுங்க.. என்ன நடந்துச்சு?” என்று கேட்க சுரேந்திரன் மௌனம் சாதித்தார்.
  மகளின் கதறலில் மௌனத்தை உடைத்தார். “ஆதித்யாவோட அப்பாவிடம் தான் நான் வேலை பார்த்தேன். அவரோட பி.ஏ. என்பதால் எல்லா பொறுப்பையும் என்னை நம்பி ஒப்படைச்சார். அப்படியிருந்த தருணத்தில் அடிக்கடி பிளாங் பேப்பரில் கையெழுத்து வாங்கினேன். சமயம் பார்த்து சொத்தை என் பெயர்ல மாத்திட்டேன். அது அவருக்கு தெரிய வரவும் அதிர்ச்சியில் காரை தறிக்கெட்டு ஓட்டப் போய் விபத்து நடந்துடுச்சு.
  
   வினுசக்கரவர்த்தி, அனுராதா இரண்டு பேருமே இறந்துட்டாங்க. பையனை பத்தி அவ்வளவா விசாரிக்கலை. அவனை யாரோ கூட்டிட்டு போயிட்டாங்கன்னு மட்டும் தெரியும்‌. நான் சொந்தக்காரங்க யாரோ அழைச்சிட்டு போனதா நினைச்சேன்‌. ஆனா ஆசிரமத்துல கூட்டிட்டு போய் அவனை கைலாஷ் மனைவி தத்தெடுத்து, கைலாஷ் பையனா நம்மிடம் அறிமுகமாகி இப்ப ஆதித்யா யாருனு தெரிய வந்துது.
  
  அவன் வீட்டை சொத்தை அபகரிச்சது நான் தான்னு அவனுக்கு தெரிந்திருக்கவும் இப்ப சமயம் பார்த்து பழிவாங்கிட்டான்.” என்று முகம் சுழித்தார்.
  
  “ஏன்ப்பா… உங்களால் அவர் சொத்தை, அவர் அப்பா அம்மாவை இழந்திருக்கார். அது உங்க கண்ணுக்கு தெரியலையா?” என்று கோபமாய் கேட்டு முடித்தாள்.

  “இத்தனை நாள் நீ சந்தோஷமா, அனுபவிச்சதை யோசி. அவன் இழப்பை விட நம்ம பொருளாதாரத்தில் உயர்ந்தாச்சு” என்று கூறவும் காதை பொத்தினாள்‌.

   சுரேந்திரன் அத்தருணத்தை பயன்படுத்தி காரை தங்கள் வீட்டுக்கு இயக்கினார்‌.

      ஆதித்யா மனம் எந்தளவு பாடுபடுமென்று திலோத்தமாவால் உணர முடிந்தது. அவனை உடனடியாக மன்னிப்பு கேட்டு தன்னை ஏற்கவும் முடியாதென்ற உண்மை புரியவும் ஸ்தம்பித்தாள்.

  ஒருவேளை பழிவாங்க தன்னை மணந்திருந்தால்? அதை நினைக்கவே இதயக்கூடு காலியானது. மூச்சடைத்த உணர்வும் தாக்கியது. தன் உயிரே ஆதித்யா என்றல்லவா மாறிவிட்டாள். ஆக்ஸிஜன் இன்றி கூட வாழ பழகிடுவாள். ஆதித்யா இல்லாமல் வாழ்வதா? என்ற அச்சம் பரவ கண்ணீர் வழிந்தது.

  அதற்குள் தன் வீடு வரவும், அதை மிரட்சியாக பார்த்தாள்‌. இது உன் அப்பா வீடு அல்ல‌. ஆதித்யாவின் வீடு அதாவது தன் வீடு என்றாலும் உரிமையாக நடமாடியிருக்க வேண்டியவன் ஆதித்யா மட்டுமே.
  இதற்கு தான் பெண் பார்க்க வந்த அன்று கைப்பிடியையும் ஓவியத்தையும் ஒருவித தவிப்பாய் பார்த்தாரா? என்று கால்கள் செயலிழந்தது போல தடுமாறி ஏறினாள்.

  சுரேந்திரன் மகள் மௌனமாய் செல்வதிலேயே நிம்மதியடைந்தார்‌.

  திலோத்தமா அவளது அறைக்கு வந்து, மெத்தையில் அமர, பால்கனி காற்று சில்லென்று வீசியது. அன்று ஆதித்யா பால்கனி வந்து நின்றது நினைவு வந்தது. ‘இங்க எப்பவும் சில்லென்ற காற்று வரும்’ என்று தான் கூறியதற்கு, ‘தெரியும்’ என்றானே.

  அவரது அறையில் இத்தனை நாளாக சுகபோக வாழ்வில் நான் வளர்ந்திருக்கின்றேன்.
  அவர் ஆசிரமத்தில் எந்தளவு கஷ்டப்பட்டாரோ. பெற்றவர்கள் இறந்தப்பின் அந்த வயதில் எப்படி பாடுபட்டார். இதே மனதை கொன்றது. தந்தை மீது அதீத கோபம் உருவானது.
 
   அத்தை பார்வதிக்கு அழைத்து ஆதித்யா  நிலையை அறிய எண்ணினாள்.
 
  “நான் எவ்வளவோ எடுத்து சொல்லிட்டேன்மா. அவன் அமைதியா இருக்கான். என்னால ரொம்ப அழுத்தம் கொடுத்து பேசவும் முடியலை. எங்க ஏதாவது ஒரு கட்டத்தில் இறந்து போனது எங்க அப்பா அம்மா என்று சொல்லி, நீங்க என்னை வளர்த்தவங்கன்னு சொல்லிடுவானோனு பயமா இருக்கும்மா. ஆதித்யா அப்படி பேசறவன் கிடையாது. ஆனாலும் உங்கப்பாவோட நண்பன் தானே என் வீட்டுக்காரர்‌.” என்று கூறவும், திலோத்தமா அமைதிக்காத்திட, “அம்மா… கைலாஷ் அப்பா உங்களை கூப்பிட்டார்.” என்றவன் குரல் ஒலித்தது.
  
  “சரிம்மா… நான் அப்பறம் பேசறேன்” என்று துண்டித்தார்.

  ‘ஆதித்யாவின் குரல் இன்னும் கொஞ்சம் கேட்டிருக்கலாம்.’ என்றவள் விழிகள் கலங்கியிருந்தது.
  
    பார்வதியோ கணவரை ஏறிட்டு மகனை பார்த்து, “ஆதித்யா… நீயும் எங்களோடு வந்து தங்கலாமே” என்று கேட்டு விட்டு அவனை நோக்க, “இல்லைம்மா… கைலாஷ் அப்பாவும் நீங்களும் நீண்ட வருடம் கழிச்சு பரஸ்பரமா ஒன்னா சேர்ந்திருக்கிங்க. இழந்துப்போன வருஷத்துக்கு பதிலா நிறைய பேசுங்க.
   அதோட இல்லாம கைலாஷ் அப்பாவோட பிரெண்ட் சுரேந்திரன் அவரை பார்க்க வரலாம். நான் அப்ப இருந்தா நல்லாயிருக்காது. நீங்க போங்க… எனக்கும் கொஞ்சம் தனிமை தேவைப்படுது. நான் இங்கேயே இருக்கேன்.” என்றான் ஆதித்யா.

  கைலாஷிற்கு இந்த பதில் மிகவும் நிம்மதியளித்தது. கூடவே வந்தால் தனக்கும் தலைவலி தான்.
 
பார்வதியோ மகனை வாஞ்சயாய் முகத்தை வருடி, “காலம் கடந்து ஞானோதயம் வந்து பேசி மன்னிப்பு கேட்கறதுல ஒன்னா வாழலாம். ஆனா கடந்துப் போன வருடத்தில் வாழ முடியாது. நீ திலோத்தமாவை எந்த வகையில் சேர்த்து வாழ்ந்தேன்னு எனக்கு தெரியாது. ஆனா என் ஆதித்யா நல்ல பையன். அவனுக்கு அறிவுரை சொல்ல எனக்கு அவசியம் இருக்காது. நல்ல முடிவா எடுப்பா” என்று கூறி கைலாஷோடு நடந்தார்.

தன் பெற்றவர்களை அழித்த சுரேந்திரனின் மகளோடு இனியும் வாழ வேண்டுமா? என்ற எண்ணம் செல்ல, ‘நெவர்’ அப்படியொரு வாழ்க்கையே வேண்டாம்’ என்று உறங்க சென்றான்.

-தொடரும்.










9 thoughts on “கண்ணிலே மதுச்சாரலே-10”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!