Skip to content
Home » மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9

அத்தியாயம்-9

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

   பாரதி பஸ்ஸில் பயணம் செய்தபடி சோர்வுடன் திரும்பிக் கொண்டிருந்தாள். அந்தநேரம் சாலைக்கு மறுபக்கம் கருப்பு நிற கார் ஒன்று சீறிப்பாய்ந்து சென்றது.

   பாரதியின் அந்த காரை கண்டு, நெற்றி சுருங்க, நினைவுகளில் பின்னோக்கி சென்றதில், ரஞ்சித் தன்னை தூக்கி சென்று தள்ளியது இந்த மாதிரி ஒரு காரில் என்று பரபரப்பாய் தலையை எக்கி கவனித்தாள்.
 
   அவளுக்கு அந்த கார் தான் என்று எண்பது சதம் தோன்றினாலும், தன்னை வன்புணர்வு செய்தவன், இப்படி இயல்பாக நடமாடுவானா? என்று குழம்பி, அந்த காராக இருக்காது என்று நினைத்தாள்.

   அப்படியிருந்து அந்த காரின் எண்ணை உடனே மனனம் செய்து மனதில் குறித்து கொண்டாள். அப்படியே தன் போனில் பதிவு செய்ய எடுத்தாள். ஆனால் பேட்டரி இல்லாமல் போன் உயிர் துறந்திருந்தது.
  
  வீட்டுக்கு வரும் போது, அங்கே சரவணன் கழிவுநீர் தொட்டியில் சுத்தம் செய்து, வந்திருக்க, அவளை கடந்தப்பொழுது அவளோ முகத்தை சுழித்து சென்றாள்.

“ஏங்க.. அந்த பேனா‌.” என்றவன் பாரதியிடம் பார்க்கர் பேனாவை பற்றி ஏதோ கேட்க வந்து, பாரதியின் நெற்றி சுருக்கம் முகசுழிப்பை கண்டு, தன் மீது நாற்றம் எடுக்க நிற்காமல் போனதாக கருதினான்.

  பாரதிக்கு ரஞ்சித் காராக இருக்குமோ என்று, எண்ணை அங்கிருந்த நோட்டில் எழுதி முடித்தாள்.

   சட்டென மறந்து போய் விட்டாள். போனிலும் பதிவு செய்யமுடியாது இருந்ததால் எதிரில் யார் என்ன என்று கூட அவளால் கவனிக்க முடியவில்லை.

  சில நேரம் கடவுளே நேரில் வந்தாலும், கஷ்டத்தில் உள்ளவனுக்கு தெரியாது அல்லவா.! இங்கே தன்னை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தவன் பேச வந்ததை உதாசினம் செய்ததாக போனது.

  பாரதி அன்றைய நாளெல்லாம் யோசித்து, இந்த கார் நம்பரை வச்சி அட்ரஸ் வாங்கி ரஞ்சித் தானானு பார்க்கணும். ‘அப்படி ரஞ்சித் காரா இருந்தா என்ன செய்வ?’ என்று மனசாட்சி கேட்டதும், அவனை போய் கொண்ணுடுவேன்.’ என்றாள் கோபத்துடன்.

  ‘இந்த உலகத்துல கற்பழிச்சவனை கோர்ட்ல போய் நிறுத்தினாலும், கோர்ட் தண்டிக்காது.
  பணத்தை பலவழியில் வாங்கிட்டு கொஞ்ச நாளோ, வருஷமா, விருந்துக்கு வந்த மாப்பிள்ளை போல கவனிச்சி, சொகுசா இருக்க வச்சி என்னைக்காவது வெளியே அனுப்பிடுவாங்க.
  ஆனா பாதிக்கப்பட்ட பொண்ணோ குழந்தையோ செத்து மண்ணோட மண்ணா புதைந்து புல் வளர்ந்திருக்கும்.
  வேற எதுவுமே மாறாது’ என்று நிதர்சனத்தில் நடப்பதை உணர்ந்தவளாக நின்றாள்.

  அவள் இட்லி பாத்திரத்தில் மாவை  ஊற்ளி, அடுப்பில் வைத்துவிட்டு, நின்றியிருக்க, அவள் மனம் போல நெருப்பு திகுதிகுவென வேகமாய் எரிய, இட்லி பாத்திரத்தில் உள்ள நீரானது வறண்டு போய் அடிப்பிடித்து இட்லி கருகி, அந்த வாடை, பக்கத்து வீட்டில் உள்ளவர்களை வரிசையாக அவளது வீட்டுக்குள் படையெடுக்க வைத்தது.

“அக்கா… அக்கா” என்று அனிதா உலுக்க, அவசரமாய் ஓடிவந்த சரவணனோ இட்லி பாத்திரத்தை அணைத்துவிட்டு அதனை எடுத்து பாத்திரம் தேய்க்கும் குழாயில்விட்டு நீரை திறந்துவிட்டான். கரித்துணி இல்லாமல் தூக்கியதால் சூடான பாத்திரம் அவன் கரத்தை சுட்டது.

அதற்கும் கையை ஊதியவாறு தண்ணீரில் காட்டினான்.

“அடுப்புக்கு முன்ன தான் கண்ணை திறந்துட்டு இருக்கு. அப்பறம் என்ன? கருகவிட்டு வேடிக்கை?” என்று விமலா வந்தார்.

  மகன் என்னவோ அவள் வீட்டில் அடுப்பை அணைப்பதும், மாத்திரத்தை நீரில் காட்டவும், சிடுசிடுப்பு வந்தது.

அனிதா உலுக்கியதில் பாரதி ‘ஆஹ்” என்று திடுக்கிட்டாள். தன் வீட்டுக்குள் சரவணன் குடும்பமும் பக்கத்தில் இருந்த சிலரும் வந்து எட்டி பார்க்க, நிலைமையை கவனித்தாள்.

  ஓரளவு காரடம் புரிந்தவளாக, “சாரி.. கவனம் சிதறிடுச்சு. அடுப்பை” என்று அணைத்திட குனிய அது ஏற்கனவே அணைந்திருக்க, சுற்றியிருப்போரை பார்த்தாள்.

“யார் நீயு? உனக்கும் இந்த வீட்டுக்கும் சம்பந்தமேயில்லை. இதுல அடுப்பை அணைக்காம வேடிக்கை பார்க்கற. ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்காது. இங்க என்ன தான் சிமெண்ட் வீடு இருந்தாலும், நெருக்கமா சில குடிசை வீடும் இருக்கு. ஏதாவது நெருப்பு பத்திக்கிட்டா இன்னா பண்ணுறது.” என்று ஆளாளுக்கு கேள்விக் கேட்க, “ஐ எம் ரியலி. இட்ஸ் மை மிஸ்டேக். கொஞ்சம் கேர்ப்புல்லா இருந்திருக்கணும். பட்.. அன்பார்ச்சினட்லி கவனிக்கலை.” என்று பேச, அங்கு வந்திருந்தவர்கள், ஆளாளுக்கு எதிர்தரப்பில் உள்ளவர்களின் முகத்தை பார்த்து கிளம்பினார்கள்.

   விமலாவோ “ஏய் அனிதா.. போய் படி” என்று விரட்டிவிட்டு செல்ல, அங்கே சரவணனோ ”ஜாக்கிரதைங்க.” என்று வெளியேறினான்.

   வாழ்க்கை பல நேரம் திடமாக இருக்க நினைத்தாலும் சில நேரம் உயிர்ப்பை தொலைத்துவிட்டு, இப்படி ஜடமாய் நின்றுவிடுவது புரிகின்றது. அவள் இழந்தது தன் பொண்மையை. அதனால் இதைவிட அபத்தங்கள் நிகழ்ந்திருக்க வேண்டியது. பாரதி தெளிவான முடிவில் வாழ்க்கையை தத்தி நடந்து கடக்கின்றாள்‌.
 
    வீட்டில் இருந்து மாவு எல்லாம் இட்லி பாத்திரத்தில் கருகி போயிருக்க, மேற்கொண்டு சமைக்க தெம்பின்றி, அப்படியே அமர்ந்தாள்.

  இங்கு சரவணன் வீட்டில், “நானும் பேசக்கூடாது, கேட்க கூடாதுன்னு இருந்தேன். அதென்னடா… பக்கத்து வூட்ல டம்ளர் விழுந்தா கூட எட்டி பார்க்குற?
 
   அந்த ஊட்ல வாடகைக்கு அந்த பொண்ணுக்கு வீடு புடுச்சு கொடுத்தது கூட நீ தானமே.
   அந்த பொண்ணுக்கும் உனக்கும் இன்னா தொடர்பு?” என்று விமலா கேட்க, அனிதா தட்டில் கை வைத்து சாதத்தை பிசைந்தவள் அண்ணனை கவனித்தாள்.

  சரவணனோ “கலாக்காவுக்கு தெரிந்த பொண்ணும்மா. அவங்க தான் அன்னிக்கு வீட்டை காட்டா உதவுச்சு. இப்ப பக்கத்து வூட்டு பொண்ணும்மா. அவ்ளோ தான் தெரியும். இப்ப இன்னாத்துக்கு என் மேல பாயுற?
   எனக்கும் அந்த பொண்ணுக்கும் என்ன தொடர்பு இருந்துட போகுது? நான் குப்பைக்காரன்.‌ அது தனியார் கம்பெனில மாச சம்பளத்துல வேலைக்கு போகுது. போட்டுனு போற துணிமணியை பார்த்தல்ல? எந்த ஏங்கிலில் உனக்கு சந்தேகம் வந்துச்சு. காலத்துக்கும் என்னை தகட்டினே இருக்கறது தான் உனக்கு பிடிக்கும்னா வாயை மூடாம பேசு.” என்று சாப்பிட்டான்.

  விமலாவோ யோசித்தபடி அமைதியாகிவிட்டார். பாரதி அணிந்து செல்லும் உடையெல்லாம், அவள் சாமானியவள் என்று உரைக்கவில்லை. ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியால், பாரதியின் வசதி ஒரளவு புலப்படுகின்றது. ஆனாலும் அவள் இங்கு வந்து தனியாக தங்குவது எல்லாம் புதிர்.

   அந்த தலைவலி தனக்கெதற்கு என்று விமலா சாப்பிட்ட தட்டை விலக்குவதற்கு பின்வாசல் பக்கம் சென்றார்.

   சரவணன் கையை கழுவி உதறியவன், சட்டை போட்டு வேகமாய் வெளியேறினான்.
  அவன் சட்டை பாக்கெட்டில் பழைய இருபது ரூபாய் நோட்டு இருந்ததை தொட்டு பார்த்தான். இதே தெருவில் முக்கில் தள்ளு வண்டி கடையில் இட்லி விற்கும். இரண்டு இட்லி பத்து ரூபாய் என்று விற்க, ‘அந்த பொண்ணு இருக்கற சோகத்துக்கு நாலு இட்லி எல்லாம் சாப்பிடாது. எதுக்கும் இரண்டு இட்லி வாங்குவோம்’ என்று இருபது ரூபாய் நோட்டை நீட்டி, “வனஜாஅக்கா.. இரண்டு இட்லி கொடு” என்று கூப்பிட, சாம்பார் பொட்டலத்தை சூடாக பாலீதின் பையில் ஊற்றி ரப்பரை போட்டு சாம்பார் பொட்டலத்துக்கு கொண்டையிட்ட பெண்மணியோ “யாரு… சரவணனா? எப்பா… காலையில் இந்த குப்பையை எல்லாம் மொத்தமா அள்ளிடேன். லேட்டானா இந்த தெரு பொம்பளைங்க என்னமோ நான் தான் குப்பையை போட்டு போற வழியை நாறடிக்கற மாதிரி பேசுதுங்க” என்றார்.‌

“நீ கவர்ல கட்டி மூலையில் வச்சிடுக்கா. நான் வந்து அள்ளிப்பேன்” என்றான்.
 
  “ம்கூம்… ராவிக்கு கவர்ல தான் முடிச்சு போடறேன். எங்க.. தெரு நாயுங்க குப்பை கவரை மோவ்தி பிரிச்சி பிராண்டி வச்சி இடத்தையே அமர்க்களம் பண்ணிடுது. இந்தா ராசாத்தி வீட்டுக்கு முன்ன படுத்திருக்கற நாய் நேரா இந்த தள்ளுவண்டில படுத்துக்குது.” என்று கூறியபடி இட்லி சாம்பாரை கட்டி நீட்டினார்.

  பத்து ரூபாய் சில்லரை நீட்டியவரோ இவன் தந்த இருபது ரூபாய் தாளை கண்டு, “ஏ… சரவடா… நோட்டு செல்லுமா?” என்று உற்று உற்று பார்க்க, “எக்கா… எல்லாம் செல்லும்” என்று கூறி விரைந்து வந்தான்.

  இன்னமும் விமலா பாத்திரம் விலக்கி முடிக்கவில்லை.
தங்கை அனிதாவை கூப்பிட்டு, “அனிதா இத்த அந்த பொண்ணுக்கிட்ட தந்து சாப்பிட சொல்லு. தேமேனு உட்கார்ந்திருக்கும். அது இரீக்கற நிலலமைக்கு வேற சமைக்காது. நான் தந்தா அம்மா ஏதாவது தப்பா பேசும். நீ கூட கொடுத்துட்டு சாப்பிட சொல்லிட்டு சட்டுனு வந்துடு‌” என்று கொடுக்க அண்ணனை கண்டு சந்தேகமாய் வாங்கினாள்.

  “வேகமா கொடுத்துட்டு வா.” என்று அனுப்ப, அனிதா பெற்றுக் கொண்டு பாரதி வீட்டுக்குள் நுழைந்தாள்.

“அக்கா… சாப்பிடலையா?” என்று கேட்க, “இ..இல்லை. தோசை மாவு காலி. கோதுமை மாவு கரைக்கணும்” என்று பொய் கூறினாள்.

“அக்கா.. இந்த இட்லியை அண்ணா தந்துச்சு. நீங்க இருக்கற நிலைமைக்கு வேற சமைக்க மாட்டிங்கன்னு சொன்னார். ஏன்க்கா? என்னாச்சு?” என்று கேட்க, “அ..அது” என்று சமாளகக்க முடியாத பாரதியோ, “அனிதா… நீ வீட்டுக்கு போ. உங்கம்மா தேடுவாங்க. நான் காலையில் காரணம் சொல்லறேன்” என்றுகூற அனிதா தலையாட்டி வெளியேறும் சமயம், “அனிதா… உங்க அண்ணாவுக்கு தேங்க்ஸ் சொல்லிடு” என்றாள்.

அனிதா விழித்தபடி சரியென்று, அவள் வீட்டிற்கு வந்தாள்.

  இதுவரை எண்ணத்தின் கசப்பான ஊர்வலத்தில் சாப்பாட்டை மறந்தவள். அது கண்முன்தெரிய பிரித்தாள்.

   இரண்டீ இட்லி சட்னி சாம்பார்அவளை இழுத்தது. பாரதி இருந்த நிலைமைக்கு நிச்சயம் சாப்பிடாமல் தவிர்த்திருப்பாள். நிச்சயம் சமைத்திருக்க மாட்டாள். ஆனால் க
இட்லியை பார்த்ததும் பசி வாட்டியது. வேகமாய் சாப்பிட்டாள்.

  மனதில் சரவணனுக்கு நன்றி கூறினாள்.
  அவள் நேரம் சரவணன் இன்றி அவள் இந்த நிலையை தொட்டிருக்க முடியாது.
   எப்படியாவது இந்த காரின் முகவரியை கூட சரவணனின் உதவியோடுயார் கார் என்று அறிய வேண்டும். என்று திட்டம் தீட்டினாள்.

  இங்கு சரவணன் முன்னிருந்த அனிதாவோ “அந்தக்கா நிஜமா யாருனு தெரியாதா? அப்பறம் ஏன் உதவற?” என்று அனிதா அண்ணன் முன் கேட்க, “தெரியலையே” என்று கூறினான்.

  இதென்ன பதில்? அனிதாவுக்கு இப்படி தான் தோன்றியது. எதுவானாலும், அண்ணன் முகத்தில் பொய் கள்ளத்தனம் இல்லாததை அறிந்தாள். அதனால் ‘என்னவோ போ’ என்று புத்தகத்தை எடுத்து மடியில் வைத்துக் கொண்டாள். விமலாவோ, “இன்னும் நீ தூங்கலையா?” என்று அதட்ட, சரவணனோ “தூங்கிட்டேன் டவுட்னா அனிதாவிடம் கேளுங்க” என்றவன் கொர் கொர்ரென்று குறட்டை விடுவது போல விளையாட ஆரம்பித்தான்.

-தொடரும்.
-பிரவீணா தங்கராஜ்
  

4 thoughts on “மட்கும் வாழ்வில் மட்காத காதல்-9”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!