Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-6

உயிரில் உறைந்தவள் நீயடி-6

அத்தியாயம்-6

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கீச்கீச் என்ற பறவைகள் சப்தத்தில் ஜீவிதா எழுந்தாள். வீட்டை சுற்றி மரம் செடி கொடி என்றிருக்க, பறவைகள் இசை நந்தவனத்தில் ஒலிக்கும் சுப்ரபாதம்.

ஜீவிதா எழுந்ததும் நேற்று இரவு நடந்தது தான் கண் முன் வந்தது. தன் சேலை அவிழாமல், மேனி வெளியே தெரியாமல் இருக்க, என்று எட்டு சேஃப்டிபின்னை அங்கங்கே சேலையில் குத்தியிருந்தாள். சரியாக அவ்விடம் எல்லாம் கைகளை வைத்துச் சேஃப்டிபின்னை அகற்றியிருந்தான் காரியவாதி யுகேந்திரன்.

அப்படியென்றால்…..

தன்னுடலில் எங்கெங்கே பின்னை குத்தி சேலை கட்டியதை எல்லாம் நுணுக்கமாய் ஆராய்ந்திருந்திருக்கின்றான்.

மறுக்கவோ தடுக்கவோ வழியின்றி மலரிதழில் முத்தங்கள் வழங்கி, கூடலை ஆரம்பித்து விட்டான்.

தன்னிலையைப் பகிர கூட முடியாமல் சிறகை வெட்டிய கிளியாக இக்கூண்டில் இருந்தாள். அதற்காக அவன் செயலை தடுக்கவில்லை.

அவனது தேவை, தேடல், இரண்டும் அடங்கியப்பின்னே போனால் போகட்டுமெனத் தன்னை நடத்தும் விதத்தில் களைத்து ஓய்ந்த நேரம் மென்மையாக முடித்தவனை ஜீவிதாவால் அறிய முடிந்தது.

அவளுமே வலியிலும் இன்பதுன்பத்திலும் ஓய்ந்திருக்க, இதோ அதிகாலை எழுந்துவிட்டாயிற்று.

கடலில் சுழலில் சிக்கியவளாக இருந்தவள் போர்வையை அகற்றாமல் நடுக்கத்தோடு பிடித்திருந்தாள்.

போர்வைக்குள் தன் நிலவரம் என்னவோ? அதை அறியாமல் எழமுடியுமா?!

“எந்திரிச்சிடிடயா? எவ்ளோ நேரம் தூங்குவா? குளிச்சிட்டு விரசா டீயை கொண்டா. வயிறெல்லாம் பகபகன்னு பசியாயிருக்கு.” என்றவன் குரலில் தனக்குப் பின்னால் இருப்பதை உணர்ந்தாள்.

போர்வை போர்த்தியே நடந்து, பீரோவில் அடுக்கிய துணியில் புதுத் துணியை எடுத்தாள் ஜீவிதா.

பதிலும் பேசவில்லை, அழுது ஆர்ப்பாட்டம் செய்யாமல் நகர்ந்தவளிடம் பல்லை கடித்தபடி காத்திருந்தான். அவள் சற்று கலங்கி அழுவாளென்று எதிர்பார்த்தான்.

அவசரத்தில் சென்றவள் சேஃப்டிபின் இல்லாமலே குளித்துச் சேலை அணிந்து வர, அவளிடம் நேற்று நீக்கிய சேஃப்டிபின்னை கையில் எடுத்துக் காட்டினான்.

“அவசரத்துக்கு இத்தனை பின் குத்தியிருந்தா சரிவராது. இனி இங்க ஒன்னு. அங்க ஒன்னு மட்டும் குத்து போதும்” என்று தோளிலும் அடிவயிற்றிலும் கைவைத்து காட்டிட தலையாட்டினாள் ஜீவிதா.

அவன் ஜம்பமாய்க் கூறி அவளை ஆராய, அவள் கூந்தலில் லேசாகத் தளர பின்னி க்ளிப்பை போட்டுக் குங்குமத்தை நெற்றி வகிட்டில் சூடினாள்‌. டீ கேட்டவனுக்காக வாசல் புறம் சென்றவளை தொடர்ந்து பின்னால் வந்தான்.

சமையல் அறையில் கருப்பட்டி போட்டு டீயை எடுத்து வந்தாள்.

“என்னால நாள் கணக்கா இங்க தங்க முடியாது. எதுனாலும் இன்னிக்கே முடிச்சி என் வீட்டுக்கு போகணும். உங்கப்பா அம்மாவிடம் சொல்லிடு” என்றான் கூடத்தில். எப்படியும் அவன் கணீர் குரலே கதிரவன் ரேகாவிற்கு எட்டியிருக்கும்.

“இரண்டு நாள் இருந்துட்டு போகலாமே. எனக்கு…” என்றவளிடம், “சொன்னதை மட்டும் கேட்டு தலையாட்டணும். சரியா… பதிலுக்குக் கேள்வி கேட்க கூடாது.” என்றான் திட்டவட்டமாய்‌.

மௌனமாக அவன் குடித்து முடித்துத் தந்த டீ டம்ளரை பெற்றுக் கொண்டாள்.

ரேகா மகளிடம் பேச முயற்சிக்க, “அம்மா அவர் இன்னிக்கே கிளம்பணுமாம். உங்களிடம் சொல்ல சொன்னார்.” என்றாள் விரக்தியாய்.

“ஏன்டி… இரண்டு நாள் இருக்க என்ன?” என்று கேட்க நிதானமாகத் திரும்பி “அதை உங்க அண்ணன் பையனிடம் நீயே கேளும்மா. அவர் தான் அங்க கத்தியது இங்க உனக்குக் கேட்டியிருக்குமே” என்றாள் கோபத்தில். அன்னையிடம் கோபத்தைக் காட்டலாமே. அன்னை என்ன அவனைப் போலவா?! அவள் குரலும் அவன் செவிக்கு விழும் அளவிற்குத் தான் பேசினாள். அவள் மட்டும் என்ன தக்காளி தொக்கா?

அதன்பின் இவ்வீட்டில் கேள்விகள் பிறக்கவில்லை.

உம்மென்று ஜீவிதா நடமாட, அவளுக்குத் தேவையான நகை துணிகளை எடுத்து வைத்தார் ரேகா. வீடே நிசப்பதமானது.

வினிதா ஓடிப்போனதால் கோபத்தில் அவளுக்கு வாங்கிய நகையும், ஜீவிதா நகையும் என்று அனைத்தும் ஜீவிதாவிடமே கொடுத்தார்கள்.

”அம்மா… அக்கா திரும்பி வந்தா அவளுக்குரிய நகையை அவளிடம் கொடுக்கணும். நீ ஏன் எல்லாத்தையும் என்னிடம் தள்ளற?” என்றாள்‌ ஜீவிதா. வினிதாவுக்கு வாங்கிய நகை என்று அறிந்ததால் அதைத் தவிர்க்க பார்த்தாள்.

“இந்த நகை அவளுக்காக வாங்கியது இல்லைடி. இப்ப நடக்கற கல்யாணத்துக்கு வாங்கியது. இப்ப யாருக்குக் கல்யாணம் நடந்தது? சும்மா உங்க அக்காவை இழுக்காத.

அக்காவுக்கு வக்காலத்து வாங்கறேன்னு ஆதரவா பேசிட்டு திரியாத. மானம் ரோஷம் எல்லாம் வந்து வார்த்தை விடாத. தப்பு செய்த இடத்துல நாம இருக்கோம்.” என்று கூறவும் ஜீவிதாவுக்குப் புரிந்தது.

உண்மை தான் மச்சான் யுகேந்திரனிடம் அக்காவுக்காக வாதாடும் விதமாகவோ அதையே பேசவும் அவருக்குக் கோபம் அதிகமாகும்.

இனி தவிர்ப்பது நலம் என்ற நோக்கில் இருந்தாள். இதே எண்ணத்தை அவன் நினைத்தால் தானே?

அவளை வதைக்கும் எண்ணத்தோடு மணந்தவனுக்கு வேறு பொழுதுபோக்கே இல்லை.

அன்று மதியம் வரை மாப்பிள்ளைக்குக் கறிவிருந்து உபசரிக்க, மாலை மூன்று மணியளவில் தன் வீட்டிற்குச் செல்லும் நோக்கத்தில் இருந்தான்.

ஏற்கனவே புறப்படுவதாக அவன் நோக்கம் அறிந்த ஜீவிதா பெற்றவர்கள், கார் டிக்கியில் பலகாரம் வெள்ளி பாத்திரம் என்று நிறைத்தனர்.

காரில் பின்னிருக்கையில் பாலக்கார பைகள், என்று அடுக்க, வேடிக்கை பார்த்தவனாகப் போனில் மூழ்கினான். ஜீவிதாவிடம் நகை பையைக் கொடுத்தார்கள்.

கிளம்பும் நேரம் தலையை உயர்த்தி “வர்றேன் மாமா வர்றேனுங்க அத்தை” என்று உட்கார, ஜீவிதா கண்ணீரோடு தாய் தந்தையரை பார்த்துப் பிரிவு துயரில் மிதந்தாள். வீட்டுக்கு வந்து விடுவதாகக் கூறியவர்களிடம் ‘பார்மாலிட்டிஸ்லாம் எதுக்கு மாமா’ என்று கூறிவிட்டான்.

ரேகா கண்ணீரை துடைத்து விட்டு, “எங்க அண்ணன் வீட்டுக்கு தானடி போற, பக்கத்து ஊரு அடிக்கடி பார்க்காமலா?” என்று அவருமே கண்ணீரை உகுத்தி மகளின் கண்ணீரை துடைத்தார்‌.

கதிரவனுக்குச் செல்ல மகள் இனி கூடவே இருக்க மாட்டாளென்ற நிதர்சனம் புரிந்து, அழுகை வந்தாலும் ஆண் மகனாகத் தெம்பாக நடமாட முயன்றார்.

என்ன முயன்றும் ரேகா ஜீவிதா கட்டிப்பிடித்து அழுவதில் உடைந்து போனார்.

யுகேந்திரன் செரும காரில் உட்கார்ந்தாள் ஜீவிதா.

அவர்கள் வீட்டுக் கேட்டை தாண்டவும், “சீட்பெல்டை உங்கப்பா வந்து போட்டு விடணுமா? அன்னைக்கே சொல்லணும்னு நினைச்சேன். உங்கப்பா அம்மா இருந்தாங்களேனு மரியாதைக்குச் சொல்லலை. எப்பவும் இப்படிச் செய்தா என்ன அர்த்தம்” என்று பாய்ந்தான்.

‘ இரண்டு தெரு கூடத் தாண்டவில்லை ஆரம்பித்து விட்டாரே’ என்று தோன்றியது ஜீவிதாவுக்கு.

“எனக்குக் கார்ல போய்ப் பழக்கமில்லை. கார்ல சீட்பெல்ட் போட தெரியாது.” என்றவள் அதனை அணிய பழகினாள். தெரியாவிட்டாலும் இனி கற்றுக்க வேண்டுமே.

கார்ல போய்ப் பழக்கமில்லை என்றதுமே யுகேந்திரன் கைகள் தானாகக் காரை ஒட்டியபடி மறுகையால் அவளது சீட்பெல்டை எடுத்தான்.

திருப்பத்திலிருந்து வண்டியை நேர் பாதையில் செலுத்தியதும் இரண்டு கையால் சீட்பெல்டை அணிவித்து முடித்தான்‌.

அவன் கைகள் முன்னழகு மேனியில் உரச, “அய்யோ” என்று பயந்திட, அவன் முறைத்த முறைப்பில் “ரோ…ரோடு. கையை விட்டு ஓட்டறிங்க. அதுக்குக் கத்தினேன்.” என்று பேச்சை மாற்றினாள். அவன் தீண்டியதிலும் கார் ஸ்டீயரிங் விடுத்து ரோட்டை காணாமல் தனக்குச் சீட்பெல்ட் அணிந்ததிலும் பயந்தே பேசினாள்.

“பச் எனக்கு நல்லாவே கார் ஓட்ட தெரியும்‌” என்றான்.

நீண்ட நேரம் காரின் ஜன்னல் பக்கம் திரும்பி ரோட்டை கவனித்தாள்.

“உங்க அக்காவோட இப்பவும் சிநேகிதம் இருக்கா? அப்படியிருந்தா அடியோடு மூட்டை கட்டிட்டு இந்தப் போனை எடுத்துட்டு வா. வீட்ல வந்து மறைஞ்சு மறைஞ்சு பேசி, என் பீபியை ஏத்தாதே” என்றவன் அவள் திரும்ப, அவளை ஆராய்ந்தபடி ரோட்டை கவனித்தான்.

“சரிங்க மச்சான்” என்று ஜீவிதா பதில் தரவும், “இந்த மச்சான் நொச்சான்னு கூப்பிடாத. அப்படிக் கூப்பிட்டா ஏதோ உங்க அக்கா புருஷன் முறையில் என்னைக் கூப்பிடற உணர்வா வருது. அதனால் அந்த மச்சானை தவிர்த்திடு” என்றான்.

“நீங்க மாமன் மகன் அப்படித் தானே முறையில கூப்பிடணும்.” என்று அப்படியொரு முறையை முன்னிருத்தி உரைத்தாள்.

“அந்த மாதிரி கூப்பிட வோண்டாம்னா சரின்னு சொல்லணும். உறவுமுறை தெரியாமலா சொல்லுறாங்க. இல்லை எனக்கு அறிவில்லையா?” என்று கோபத்தை வேகத்தில் காட்டினான்.

‘கடவுளே சரிசரி என்று சொல்ல மனதிற்குள் பழக முடிவெடுத்தாள்.’ “அப்ப… எப்..படி கூப்பிட?” என்று கேட்டு விட்டாள்.

அதற்கும் திட்டுவானோ என்ற பயம் வாட்டியது.

“ஏங்க, என்னங்க, வாங்க, போங்க இப்ப இந்த முறை போதும்‌.” என்றான் வெடுக்கென.

ஜீவிதாவோ ‘இப்ப இந்த முறை போதும்னா?’ என்று யோசித்து அவனை ஏறிட, “வீடு வந்துடுச்சு இறங்கு” என்றான்.

“இ…இது” என்று சீட்பெல்டை காட்டினாள்‌. புஷ் பண்ணினா அவிழற மெத்தட் தானே? படிச்சா புள்ள தானே நீ? மங்குனி மாதிரி கேள்வி கேட்குற” என்றதும் ஜீவிதா முகம் வாடியது.

சீட்பெல்டை போட்டு விடும் போது ஏதோ யுகேந்திரன் முகம் தன் மீது கரிசனம் காட்டியது. அதை மீண்டும் எதிர்பார்த்தாள்.

சிடுசிடுவென எடுத்து விட்டு அவன் வீட்டுக்குள் சென்றான்.

நகை பையை மட்டும் கஷ்டப்பட்டு ஜீவிதா சுமந்து வர, “ஏன்டா அந்தப் பையை நீ தூக்கிட்டு வரலாம்ல” என்று கடிந்தார்‌ உமாதேவி.

“அதெல்லாம் அவ அப்பா வீட்டு சீரு, நானா நகை கேட்டேன். இல்லை நானா நகை வாங்கித் தரமாட்டேன்னு சொன்னேன். அவளா பெருமைக்குத் தூக்கிட்டு வர்றா. அப்ப அவ தான் சுமக்கனும்” என்றவன் “சண்முகா கார் டிக்கியில் பாத்திரம் பண்டம் பலகாரம் வேற, கொண்டாந்து அவ சொல்லற இடத்துல ஸ்டோர் ரூம்ல போட்டுவிடு.” என்றான்‌.

ஸ்டோர் ரூமா? என்று தான் ஜீவிதா அதிர்ந்தாள். அம்மா எவ்வளவு ஆசையாக வாங்கித் தந்தது. ஸ்டோர் ரூமில் போட சொல்கின்றாரே என்று கவலை உண்டானது. ஆனால் இப்படி ஏடாகூடமாய் நடப்பது யூகித்தவை தானே?! ஆனால் பாவம் இங்கே எல்லாப் பொருளும் ஸ்டோர் ரூமில் தான் பாதுகாத்து வைத்திருப்பார்கள்.

ஸ்டோர் ரூம் என்றாலும் தனித் தனிப் பீரோ சாவி என்று சுத்தமாக இருக்குமிடம், அவள் போகப் போக அறியலாம்.

நகை மட்டும் அவள் எடுத்து வந்து அவர்கள் மெத்தையில் வருத்தமாய் அமர்ந்தாள்.

யுகேந்திரன் மடமடவெனச் சட்டை பொத்தனை அகற்றி சட்டையை ஹாங்கரில் போட்டுக் குளிக்கச் சென்றான்.

உமாதேவி கருப்பட்டி டீயை போட்டு வந்து ஜீவிதாவிடம் நீட்டினார்.

“உடனே அழைச்சிட்டு வந்துட்டான் என்று வருத்தமா? அரைமணி நேரம் தானே. எப்ப அம்மா அப்பாவை பார்க்க தோணுதோ காரை எடுத்துட்டுக் கிளம்பு. இதுக்குப் போய்” என்று கூறினார்உமாதேவி.

“அத்தை ஸ்டோர் ரூம்ல பாத்திரம் இருந்தா உங்களுக்கு அப்ஜெக்ஷன் இல்லையே” என்றாள்.

“அட உன் பாத்திரம்னு இல்லை. அங்க நான் கொண்டு வந்ததும் அங்க தான் பீரோல அடுக்கி கிடக்கு‌. வெள்ளி பாத்திரம் உட்பட” என்று தங்கள் வீட்டின் அமைப்பை கூறினார்.

குளித்து முடித்ததும் பேண்ட் ஷர்ட் என்று மாற்றி வாட்சை மாட்டினான். அம்மாவும் மனைவியும் பேச, கவனிக்காதது போல எங்கோ செல்ல தயாரானான்.

‘இந்த நேரத்துல இவர் எங்க போறார்?’ என்று ஜீவிதா நினைக்க, ”அத்தை நகையெல்லாம் நீங்க பார்க்கலையா?” என்று கேட்டாள்.

“அதெல்லாம் அவசரமேயில்லை. எங்கயாவது போனா வந்தா கண்குளிர நீ போடறப்ப பார்த்துக்கறேன். கையோட எடுத்து பத்திரப்படுத்திக்கோ. அவன் பேக்ட்ரி வரை ஓரெட்டு பார்த்துட்டு வருவான்” என்று அவளது பார்வைக்கு விளக்கம் தந்தார்.

யுகேந்திரன் திரும்பவும் சட்டெனப் பார்வையை மாற்றிக் கொண்டாள்‌.

சாவி எடுத்து சென்றவன், கோவமாய்ப் பைக்கை உதைத்து புறப்பட்டான்‌.

திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகள் நிறைய உண்டு. அதில் யுகேந்திரன் அப்பா வழி தாத்தா மகேந்திரனுக்கு மூதாதையர் ஆரம்பித்ததை, வழிவகையாக லாபமீட்டி, தற்போது திறம்பட நடத்துவது யுகேந்திரன்.

இரண்டு நாளாக அங்குச் செல்லாததால் புறப்பட்டு ஓரெட்டு காண முடிவெடுத்தான்.

ஜீவிதாவிடம் சற்று நேரம் பேசிவிட்டு உமாதேவியும் அவ்விடம் விட்டுச் சென்றதும், ஜீவிதா நகையை மாமியார் கூறியது போலப் பத்திரப்படுத்தி வைத்தாள்.

யுகேந்திரன் உபயோகப்படுத்தும் பீரோவில் லாக்கரில் நகையை வைக்கக் கூறியதால் அப்படியே நகை பெட்டியை வைத்து முடித்தாள்‌‌.

கட்டு கட்டாய் பணமும் இருந்தது, அதைக் காண அச்சத்தைத் தரவும் அவசரமாய் மூடி அத்தை மறைத்து வைக்கக் கூறிய இடத்தில் சாவியை வைத்து விட்டாள்.

மெத்தையில் அமர்ந்து அங்குமிங்கும் முதல் நாள் கண்களை உருட்டியது போலப் பார்வையிட்டாள்.

பட்டுச் சட்டை ஹாங்கரில் தொங்கவும், ‘இவர் ஏன் இப்ப போனார். இந்த நேரத்துல கல்யாணமான இரண்டாவது நாளே பேக்ட்ரி போனா மத்தவங்க என்ன நினைப்பாங்க? வேண்டுமின்னே பண்ணுறார்’ என்று மனதிற்குள் முனங்கினாள்.

‘நீ அந்தத் தேளை போலக் கொட்டும் முரட்டு பீஸை தேடுகின்றாயா?’ என்று மனசாட்சி கேட்க, இல்லைவேயில்லை என்று உடனே இதயத்திடம் மறுத்தாள்.

மூளை மட்டும் ‘அப்ப அந்தத் தேள் எப்ப போனா என்ன? தனியாக இருக்க நிம்மதியடைவானேன்.

அவன் சட்டை மாற்றிப் புறப்பட ‘எங்க போகறிங்க?’ என்று தவிப்பாய் காண்பதேனோ? என்று கேலி பேசியது.

‘இந்த இதயத்தைக் கூட அடக்கிவிடலாம். மூளை நம்மைக் கேலி செய்து அசிங்கப்படுத்துகின்றது.’ என்று கொஞ்சம் கொஞ்சமாய் இளவட்ட கல்லை நெஞ்சிற்கு மேல் தோளில் தூக்கி வேர்வை சொட்ட நின்றவனின் புகைப்படத்தில் கண்கள் தாவியது.

-தொடரும்.

6 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-6”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி…!
    எழுத்தாளர்: ப்ரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 6)

    அட ராமா..! அவன் கொட்டுறான்னு தெரிஞ்ச போதும் அவனையே தேடுது பாருங்க மனசும், புத்தியும்…
    இது தான் பதி பக்திங்கிறது.
    ஆனா, பாருங்க அவனுக்கு சதி பக்தி துளிக்கூட இல்லாமப் போயிடுச்சே.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    ponnungaluku kaluthula thali nu onnu erinathum purushan evlo kaya paduthinalum veliya kelambina manasu theduthu parunga athu tha pondati solrathu vera yarum ippadi ninaika matanga

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!