Skip to content
Home » உயிரில் உறைந்தவள் நீயடி-17

உயிரில் உறைந்தவள் நீயடி-17

அத்தியாயம்-17

 🍁தளத்தில் கதைகளை வாசிக்கும் அன்பானவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்கள் கருத்தை comments மூலமாக பகிர்ந்து உற்சாகமூட்டவும். பேரன்பும் நன்றிகளும்.🍁  

கதிரவனும் ரேகாவும் புதுத்துணி எடுத்து வந்து கொடுக்க, பெற்றுக்கொண்டு காலில் விழுந்தாள் ஜீவிதா.

“அம்மா.. உன் அண்ணன் மகன் வாங்கித் தந்த புடவை நல்லாயிருக்கா?” என்று கேட்டாள்.

“புருஷன்னு சொல்லுடி. அதென்ன என் அண்ணன் மகன்” என்று கூறினாலும் மகளின் சேலையும் அவள் அணிந்த நகையும் அதைத் தாண்டி மகளது பூரித்த முகமும், தாய்மையும் கண்டு மனம் நிரம்பி வழிந்தது. திருமணத்தன்றும் அதற்கு முதல் நாளும் எப்படி அழுதாள். கல்யாணமே வேண்டாம் பழிவாங்க தான் கல்யாணம் செய்யறார்னு நல்லா தெரியுது. ஏன் என்னைப் புதைக்குழில தள்ளறிங்க.’ என்று தேம்பினாள்.

இன்று பூரித்த முகமாய் வாயும் வயிறுமாய் நிறைவாக நிற்கின்றாள்.

ஒரே நேரத்தில் மணந்த இரு பெண்களில், ஒருத்தி ஏற்றம் பெற்றவராக இருந்து, மற்றொருத்தி கஷ்டத்தில் இருந்தால், தாய் மனமானது கஷ்டத்தில் இருப்பவளை எண்ணி கலங்கும்‌.

அப்படித் தான் ரேகாவுக்குச் சட்டென வினிதா நினைப்பு வந்தது.

கதிரவனோ தட்சிணாமூர்த்தி மச்சானிடம் பேச ஆரம்பித்தார்.‌

உமாதேவி வந்தவருக்கு வரவேற்பு பானம் தரவும் வாங்கிப் பருகினார்கள்.‌

“யார் அண்ணி வரப்போறாங்க?” என்று கேட்க ஜீவிதா மாமியார் கூறுவதைக் கேட்க ஆர்வமானாள்.

“நம்மளை மாதிரி மனுஷங்க தான் அண்ணி” என்று சிரிக்க, “ரொம்பக் கடிக்கறிங்க. அவரைக் கேட்டாலும் சொல்லலை. நீங்களுமா மழுப்பறிங்க” என்று சோகமாக, வாசல் பக்கம் சுட்டிக்காட்டி முகத்தைத் திருப்பினார் உமாதேவி.

இரண்டு வேன் ‘நந்தவனம்’ வீட்டிற்குள் வந்து நின்றது.

அதிலிருந்து 35 முதியவர்கள் மெதுவாக இறங்கினார்கள்.‌

தட்சிணாமூர்த்தி யுகேந்திரன் வந்தவர்களை வரவேற்க சென்றார்கள்.

உமாதேவியோ, “இவங்க எல்லாம் ‘பூவானம்’ என்ற முதியோர் இல்லத்துல பிள்ளைகளால் கைவிடப்பட்டவங்க. பெரும்பாலும் வெளிநாட்டுக்கு போன பிள்ளைங்க, தனிக்குடித்தனம் போக விருபம்பறவங்க, பொண்ணைப் பெத்தவங்க, அவங்க அப்பா அம்மாவை இங்க சேர்த்துடுவாங்க. சில முதியவர்கள் மட்டும் தங்கள் ஆசையாக வளர்த்த பையனுங்க காதலிச்சு போக, தனக்குச் சொந்தம் பந்தம் வேண்டாம்னும், போக இடமில்லாத பட்சத்திலும் இங்க அவங்களா வந்துடுவாங்க.

அவங்களை மாதிரி முதியவர்களை இங்க நிறையப் பார்க்கறச்ச ஒரு நிம்மதி.

மாமா உயிரோட இருந்தப்ப, ஆளாளுக்குத் துக்கம் விசாரிக்கற மாதிரியே கேட்டு பேசவும், மனசு நிம்மதிக்காகப் ‘பூவானம்’ போவார். டொனேஷன் தருவார்.

மாமா கூடவே தானே யுகேந்திரன் சுத்துவான், அந்தப் பழக்கம் யுகேந்திரனுக்கு வந்துடுச்சு. அதனால் நல்ல நாளுக்கு எல்லாம் அங்க போவான். மாமா அத்தை இறந்த நாளுக்கும் போவான்.

இன்னிக்கு யுகேந்திரன்-ஜீவிதா கல்யாணமாகி முதல் வருடம் இல்லையா.

ஜீவிதா அதிகமா பயணம் பண்ண கூடாது. அதனால இவங்களை எல்லாம் வேன் பிடிச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டான். இன்னிக்கு மதியம் நம்ம வீட்ல தான் சாப்பாடு. சாயந்திரம் டீ காபி குடிச்சிட்டு தான் திரும்புவாங்க. அவனுக்குத் தாத்தா மகேந்திரன்- பாட்டி அம்மாள் வந்திருப்பதா ஒர் சந்தோஷம்.

ஜீவிதா… எல்லாரையும் அன்பா வணக்கம் வச்சி மரியாதை செய். அண்ணி நான் போய் நலம் விசாரிச்சிட்டு வர்றேன்.” என்று ஓடினார்.‌

அதற்குள் பொன்னம்மா மோரை தர, வாங்கிப் பருகினார்கள் வந்திருந்த முதியவர்கள்.

யுகேந்திரன் கண்அசைத்துப் பக்கம் அழைக்க, ஜீவிதா அவனருகே சென்றாள்.

“தாத்தா பாட்டி… இதான் பேத்தி… ஜீவிதா. மாசமா இருக்கா. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண வேண்டாம்னு டாக்டர் சொல்லியதால வீட்டுக்குள்ளயே இருக்கா. நீங்க வந்ததில் ரொம்பச் சந்தோஷப்படுறா.” என்று அறிமுகப்படுத்தினான்.

ஜீவிதா அவனை ஆச்சரியமாய்ப் பார்த்து, மற்றவர்களிடம் மகிழ்ச்சியாக நின்று நலம் விசாரித்தாள்.

ஆளாளுக்குத் தாடை பிடித்துக் கொஞ்சினார்கள். பேரனுக்கு ஏற்றவள் தான்’ என்று பெருமை பேசினார்கள்.

பொன்னம்மா சண்முகம் இருவரும் வந்தவர்களில் சிலரை அறிந்திருக்க அவர்களிடம் கதை கேட்டபடி உரையாடினார்கள்.

தட்சிணாமூர்த்திக் கதிரவன் உமாதேவி ரேகா என்று ஆளாளுக்கு வந்தவர்களிடம் பேசி சிரிக்க, ஜெகனோ வேனில் மனைவி செல்வி மகள் ஆல்யாவை அழைத்து வந்திருந்தான்.

”நண்பா.. பெரியவர்களை அறிமுகப்படுத்திய கையோட, இந்த விஐபி என்னையும் அறிமுகப்படுத்துடா.” என்று வந்தான்.

நண்பன் ஜெகனையும், அவன் குடும்பத்தாரையும் ஜீவிதாவிடம் அறிமுகப்படுத்த வாயெடுத்தான்.

“என்னோட நண்பன்” என்று முடிக்கும்‌முன், “ஜெகன்? பொங்கல் அப்ப அரசமரத்தடில நான் பேசியதை ஒட்டு கேட்டவரு” என்று இடையில் கைவைத்து அடையாளத்தைக் கூறினாள்.

“ஒட்டு கேட்டவன்மா. கெட்டவன் இல்லை.

நம்ம கிராமத்து ஆன்டிஹீரோ செய்த அமர்க்களத்துல என்னையும் குற்றவாளியா மாத்திடாத.” என்று கூறவும் ஜீவிதா நகைத்தாள்.

“ஏன்டா நான் கிராமத்து ஆன்டிஹீரோ?” என்று கேட்டான்‌ யுகேந்திரன்.

இல்லையா பின்ன தங்கச்சியை மூன்று நாள் அடிச்சியிருக்க உதைச்சிருக்க அழவச்சி கஷ்டப்படுத்தியிருக்க, முதலிரவு அன்னைக்கே நடத்தணும்னு புலியாட்டும் பாய்ஞ்சியிருக்க, அப்ப ஆன்டிஹீரோதான்.” என்று பேசினான்.‌

செல்வியோ ஜெகனின் பேச்சில் தலையிலடித்து “இவர் கூடக் கூட அண்ணனை கலாய்ச்சி தள்ளறதே வேலை. நீங்க தப்பா எடுத்துக்காதிங்க. இவங்க இரண்டு பேரும் இப்படித் தான். இப்ப ஆறாம் மாசம்ல? பிள்ளை அசையுதா? நல்லா சாப்பிட முடியுதா?

அண்ணனிடம் விருந்துக்குக் கூப்பிட்டுட்டு இருந்தோம். அவர் இதோ அதோனு இழுத்துட்டார். உங்களுக்கும் உடம்பு சரியில்லையா. அதான் எல்லாரையும் இங்க சந்திக்க வச்சிட்டார்.” என்று பேசவும், ஜீவிதா கணவனைக் கண்டு முறுவல் புரிந்தாள்.

“ம்ம்.. எங்கயும் போக முடியலை. எனக்கே கன்சீவா இருக்கற விஷயம் ரத்தக்கசிவு ஏற்பட்டதுல தான் தெரியும்‌ அந்தப் பயம்… சில நேரத்தில் ஐந்து நிமிஷத்துக்கு மேல நடக்கக் கூடப் பயமாயிருக்கு” என்றாள்‌ ஜீவிதா.

ஆல்யா யுகேந்திரனிடம் விளையாடிபடி, இருக்க, ஜீவிதா செல்வியிடம் பழகினாள்.

இங்கு வந்ததிலிருந்து தனக்கான வயதில் கிடைத்த முதல் பெண் தோழி.

“உங்களுக்கு நார்மல் டெலிவரியா? சிசேரியனா? அந்த அனுபவம் சொல்லுங்களேன். கொஞ்சம் ப்ரிப்பேரா இருந்துக்கறேன்” என்றாள் ஜீவிதா.

செல்வியோ நகைத்து, சில விஷயத்துக்கு எக்ஸாமுக்கு ப்ரிப்பேர் செய்யுற மாதிரி எல்லாம் இந்த அனுபவத்தில சொல்ல முடியாது‌. ஒவ்வொன்னும் கோல்டன் டைம்.

இந்த நேரத்தை மிஸ் பண்ணிடாதிங்க. ரசித்து வாழுங்க. ருசித்துச் சாப்பிடுங்க.

அண்ணனிடம் நீங்க ஆசைப்பட்டதைச் சொல்லுங்க. இளவட்ட கல்லை எல்லாம் சாதாரணமா தூக்கற ஆளு அண்ணா. மலையைப் பேத்து எடுத்துட்டு வர்ற சொல்லுங்க எல்லாம் செய்வார்.” என்று ஜெகனுக்கு ஏற்ற மனைவியாக விளையாட்டாய் ஆரம்பித்தாள்.

“அட நீயுமா மா?” என்று யுகேந்திரன் பேச, “இளவட்ட கல்லை தூக்கின போட்டோ இருக்கே? அப்ப அது பொய்யா?” என்றாள் ஜீவிதா.

”ஏய்… யாரை பார்த்து கேட்கற? அதெல்லாம் தூக்கிடுவேன் பார்க்கறியா?” என்று கேட்டான்‌ யுகேந்திரன்.

“கண்டிப்பா..‌. ஊர்த்திருவிழா நடைப்பெறுறப்ப இந்தமுறை நான் பார்க்க நீங்க இளவட்ட கல்லை தூக்கணும்” என்று கூறினாள் மனைவி.

ஆல்யாவை பார்த்து “இவரும் பெண் குழந்தை வேண்டும்னு சொன்னார்… எனக்கு ஆம்பள பையன் வேண்டும். இவரை அடக்க” என்று கணவனை ஏறிட்டாள்.

“நம்மளிடம் பாயுற இந்தக் காளைங்க பதுங்கறது குட்டி மகளிடம் தான்‌. மகளதிகாரம் தான்‌ தூள் பறக்கும். நீங்க நினைக்கிற மாதிரி பையன் பிறந்தா எல்லாம் அடக்க முடியாது” என்று செல்வி கூற, ஜெகன் ஆல்யாவிடம் மண்டியிட்டு நடக்கும் அனுபவத்தைப் பகிர்ந்தாள்.

இதற்கு முன் அக்கா வினிதாவிடம் இப்படி இணக்கமாய்ப் பேசுவது‌. இன்று‌ செல்வியிடம் மனம் விட்டுத் தோழியாகக் கதைப்பது இதம் தந்தது‌.

வினிதாவை எண்ணிய உள்ளம், அவளை வேறு அழைத்ததாகக் கணவர் கூறியிருக்க, அக்காவை காணாமல், “பேசிட்டு இருங்க” என்று செல்வியிடம் கூறி அன்னை ரேகாவிடம் கேட்டாள்.

”என்னடி சொல்லற? மாப்பிள்ளை வினிதாவை கூப்பிட்டு இருக்காரா?” என்று கேட்டார்.

“ஆமா அம்மா‌ அப்படித் தான் சொன்னார்.” என்று விழிக்க, “அன்னைக்கு வந்தப்ப வாசல்ல இருந்தாங்க கண்டுக்காம போயிட்டார். இப்ப எப்படி வீட்டுக்கு கூப்பிட்டு இருப்பார்.” என்று தங்கள் வீட்டுக்கு வந்த பொழுது வினிதா சந்திரன் இருந்ததைத் தெரிவித்து மாப்பிள்ளை யுகேந்திரன் பேசி சென்றதை தெரிவித்தார்.

வினிதா அக்கா வருவாளா? அப்படி வராமல் சென்றால் ‘நான் மனசுல வச்சிக்காம கூப்பிட்டும்‌ உங்க அக்கா வரலை’ என்று புதுப் பிரச்சனை ஆரம்பிக்குமா என்று பயந்தாள்.

நேரங்கள் நெட்டி முறிக்க, வளைகாப்பு போல ஒரு சேரில் ஜீவிதா அமரவும் அங்கு வந்த முதியவர்கள் ஆசிர்வாதித்துப் பூமழை தூவினார்கள். சில மூதாட்டிகள் வளையலிட்டு மகிழ்ந்தனர்.

ஒவ்வொருத்தரிடமும் பொதுப்படையாக யுகேந்திரன் ஆசி வாங்கினான்.‌

மதிய உணவு நேரம் நெருங்கவும், யுகேந்திரனே பார்த்து பார்த்துப் பரிமாறினான்.

‘தாத்தா அந்த ஸ்வீட்டை வையுங்க. உங்களுக்குச் சுகர் இருக்கு.’

‘ஆச்சி உங்களை ஊறுகாய் பக்கமே போகாதிங்க சொல்லி தானே கூட்டிட்டு வந்தேன் உங்களுக்கு ரத்த அழுத்தம் இருக்கு ஆச்சி’

‘சின்னத் தாத்தா உங்களுக்கு அல்சர் காரமாசலா ஐயிட்டம் வேண்டாம்’ என்று ஒவ்வொருத்தருக்கு ஏற்றது போல் தவிர்த்து பரிமாற, ஜீவிதா தற்காலிகமாக அக்காவை மறந்தாள்.

சாப்பிட்டு முடித்தவர்களிடம், தன் மனைவி தனக்குக் கொடுத்த பரிசை காட்டினான்.‌

யுகேந்திரன் முகம் பீட்ஸ் மணிகளால் ஆனதை மற்றவருக்குக் காட்டினான்.

பீட்ஸ் கலைகளில் ஆர்வமாக இருந்த மூதாட்டிகள் எப்படிச் செய்தாய்‌ என்று கேட்டார்கள். அதற்குப் பதில் கூறி முடிக்க இனிதாய் நேரம் நகர்ந்தது.

வயதானவர்கள் மாலையில் உறங்குவார்கள் என்பதால் அவர்களைப் ‘பூவானம்’ இடத்திற்கு வேனில் திரும்ப ஏற்றி விட்டார்கள்.

அங்கு வந்து திரும்பிய முதியவர்களுமே, யுகேந்திரனை நெகிழ்ச்சியாகக் கட்டி பிடித்து ஏறினார்கள். எப்பொழுதும் சாப்பிடும் நேரம் புதிதான வகையான உணவுகள் வந்தால் இன்று யாரின் திருமண நாள், பிறந்த நாள் என்று யூகித்து வாழ்த்துவார்களாம்‌

ஆனால் இன்று ஒர் குடும்பத்திற்குள் உறவாடிய சந்தோஷம். அதுவும் பேரன் பேத்தியின் வளைகாப்பிற்கு வந்ததாகக் கூறி கண்ணீரை உகுத்தினார்கள்.

“அட வளைகாப்புக்கும் உங்களை எல்லாம் கூப்பிடுவேன்” என்று அவனும் கட்டிப்பிடித்து வழியனுப்பினான்.

அந்த வண்டி செல்லவும் “தாத்தா மகேந்திரன்-பாட்டி அம்மாள் நினைவு வந்துட்டா இவங்க தான் அவங்களைக் கண் முன்ன கொண்டு வருவாங்க.

நான் தாத்தா-ஆச்சி கூட வாழ்ந்திருக்கேன். அதனால் அவங்களை மிஸ் பண்ண விரும்பலை. ஏதாவது நல்ல நாள் விழாக்கள் அப்படின்னா ‘பூவானம்’ முதியோர் இல்லத்துல போய்த் தலைக்காட்டுவேன்.” என்று கையை விரித்துத் தோளைத் குலுக்கினான்.

‘இனி நானும் வருவேன். எனக்குத் தாத்தா-பாட்டி பாசம் கிடைப்பதில்லை. இத்தனை பேர் தாத்தா பாட்டியா பாசம் தர்றப்ப, அந்த அன்பை நிராகரிக்கத் தோணுமா” என்று ஆனந்தமாய்க் கூறினாள் ஜீவிதா.

யுகேந்திரன் கண்கள், வாசல் பக்கம் பார்த்து, “உங்க அக்கா” என்று சுட்டிக்காட்டினான்.

“அக்கா.” என்று அழைக்க, சின்னக் குட்டி” என்று தன்னிரு கைகளை ஆச்சரியமாய் வாயில் வைத்து, “அம்மா கன்சீவா இருப்பதா சொன்னாங்க. ஆனா இந்தக் கோலத்தில் பார்க்க சந்தோஷமா இருக்கு” என்று கட்டிக்கொண்டாள்.

“உனக்கும் இன்னிக்கு கல்யாண நாள். வாழ்த்துகள்” என்று ஜீவிதா கூற, “சேம் டூ யூ” என்று பேசவும் “அவர்… அவர் தான் சந்திரன்” என்று அறிமுகப்படுத்தும் முன் யுகேந்திரனோ, ”உள்ள வாங்க” என்று அழைத்து, “அம்மா உமாதேவி. அப்பா தட்சிணாமூர்த்தி” என்று அறிமுகப்படுத்த, “இவரைத் தெரியாமலா? இந்த ஊர் பெரிய தலைக்கட்டு. உங்க எல்லாரையும் தெரியும். பழகியது இல்லை” என்று வணக்கம் வைத்தான் சந்திரன்.

“முன்னாடியே வரலாம்னு நினைச்சோம். ஆனா நாங்க யார் என்னன்னு யாராவது கேட்டு எல்லாருக்கும் சங்கடமா போகக்கூடாதுன்னு தான் கடைசியா வந்தோம்.

என்னயிருந்தாலும் ஒரு வீட்ல இருக்கற பொண்ணைக் காதல் கல்யாணம் என்று பேசி ரிஜிஸ்டர் மேரெஜ் செய்யறது தப்பு. குடும்பத்தோட பேசி சம்மதம் வாங்கியிருக்கணும். அந்தளவு புத்தியில்லாம போச்சு.” என்று வருத்தப்பட்டான் சந்திரன்.

”காதல் தப்பு சரின்னு நான் என்னைக்கும் சொல்லமாட்டேன். ஆனா பெத்தவங்களைத் தலைக்குனிய வச்சி ஓடிப்போன, அவங்க வளர்த்ததுக்குப் புரோஜனமேயில்லாத மாதிரி ஆயிடும். சரி உள்ள வாங்க” என்று தட்சிணாமூர்த்திக் கூப்பிட அனைவரும் வீட்டுக்குள் வந்தார்கள். பலகாரம் உணவு என்று போதும் போதுமெனக் கொடுத்து திக்குமுக்காடினார்கள்.

“தாய் மாமா வீட்டுக்கு முதல்முறை வந்திருக்க” என்று தட்சிணாமூர்த்திச் சேலை துணிமணி நகை என்று தட்டில் வைத்து உமாதேவியுடன் சேர்ந்து வழங்கினார்.

வினிதா தயங்கி மறுக்க, “அட தாய்மாமா சீர் ஒன்னும் பண்ணலை. அட்லீஸ்ட் உங்க கல்யாண நாளுக்கு வந்ததால் எல்லாம் செய்யறேன். வாங்கிக்கோமா” என்றதும் வினிதா தங்கையை ஏறிட, “மாமா அத்தை தர்றாங்கள்ல வாங்குக்கா” என்று ஜீவிதா கூறவும் தாய் தந்தையைப் பார்த்து வினிதா வாங்கினாள். சந்திரனும் நன்றியுரைத்துப் பெற்றுக்கொண்டான்.

கதிரவன் மட்டும் முகம் திருப்பிக் கொண்டார். அவருக்குப் பெத்த மகள் இப்படிச் சென்றதில் பெரிய வருத்தம். ஒருவேளை ஜீவிதா போல வினிதா கர்ப்பிணிப்பெண் கோலத்தில் நின்றால் கரைந்திடுவார்.

அதுவரை அவரை இணைப்பது சற்று கடினமே‌. அவருக்கு மாப்பிள்ளை யுகேந்திரன்‌ இந்தளவு இங்கே அழைத்ததே திருப்தி.

ரேகா தன் பிறந்து வளர்ந்த வீட்டில் தன்னிரு மகளிடம் தன்‌தந்தையிடம் தாயிடம் எப்படியெல்லாம் வாழ்ந்ததைக் கூறி கண் கலங்கினார்.

அவர்கள் சேர்க்கவில்லை என்று குற்றம் சுமத்தவும் முடியாது. சந்திரனை போலக் கதிரவன் வாசல் தேடி வந்து மன்னிப்பு கேட்டு பேசவும் இல்லை. அந்தக் காலத்து வீராப்பில் ரேகாவை அவர் பெற்றோருடன் பேசவிடவில்லை. அந்த விதத்தில் சந்திரன் பரவாயில்லை.

வினிதா யுகேந்திரன் மச்சானிடம் தனிப்பட்டு மன்னிப்பு கேட்க, “அட நீ ஓடிப்போனதால தான் எனக்கு ஜீவி கிடைச்சிருக்கா.” என்று பேசி குறுகுறுப்பை நீக்கினான்.

வினிதா-சந்திரன் இருவரையும் இரவு சாப்பிட வைத்து உமாதேவி அனுப்பினார்.‌ பட்டுச்சேலை தங்க செயின் என்று கொடுத்து வழியனுப்பி வைத்தார்.

கதிரவனோ ”உங்க கல்யாணம் நடந்தப்ப, கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஜீவிதாவை குத்தி காட்டி பேசாம வாழ ஆரம்பிச்சிருக்கலாம்னு உங்களைப் பார்க்கறப்ப எல்லாம் சொல்ல தோணும். ஆனா சொல்ல தைரியம் வராது. இப்ப மனசு நிறைஞ்சு சொல்லறேன். உங்களுக்குப் பெரிய மனசுய்யா” என்று மாப்பிள்ளை யுகேந்திரனின் இரு கையையும் பிடித்துக் கலங்கினார்.

ரேகாவுமே “என் அப்பா பெயர் மகேந்திரன். ஆனா இப்ப அவர் பேரன் யுகேந்திரனிடம் மன்னிப்பு கேட்டு நிற்கறோம்‌. அப்பாவுக்கு அந்தளவு தலைக்குனிவு கொடுத்துட்டேன்” என்று கூறினார்.

“ஆச்சி நீங்க உயிரோட இருந்தப்பவே உங்களை மன்னிச்சவங்க அத்தை. தாத்தா..‌‌ சாகறதுக்கு முன்ன மன்னிச்சிட்டார். அதனால் தான் என்‌னிடம் ‘டேய் பேராண்டி நான் உங்க அத்தையை மன்னிச்சிருந்தா, இந்நேரம் என்‌மக வயித்துப் பேத்திங்க இரண்டு பேர் இருக்காளுங்க. எவளையாவது உனக்குக் கட்டிவஞ்சியிருப்பேன்னு நான் காலேஜ் படிக்கறப்ப சொல்லுவார். இப்ப அவர் ஆசைப்படி தான் அவர் இளைய பேத்தியை கட்டியிருக்கேன். அவர் மன்னிச்சிட்டார் அத்தை.” என்று கூற, அங்கே கதிரவன் ரேகாவிற்குக் கண்கள் கண்ணீரை நிறைத்தது.

எத்தனை காதல் திருமணத்தில் காலங்கள் கடந்து பெற்றவர்களிடம் பேசாமல் கொள்ளாமல் மனதில் பாரத்தோடு, தாய் தந்தையருக்கு அவமானத்தைத் தேடி தந்து காதல் மணம் புரிந்தவர்கள் இருக்கின்றார்கள்.

என்ன தான் ஒன்று காலம் மாறி ஒன்று பேசி சேர்ந்தாலும் அவர்கள் சேர்த்து வைத்த அவப்பெயர் களைவதற்கு நாள் எடுக்குமே.

யுகேந்திரனோ, “இன்னிக்கு அத்தை மாமா வீட்ல தங்குவாங்க. நீ சாப்பிட்டு மாத்திரை‌ போட்டு தூங்கு. ரொம்ப நேரம் நின்றுட்ட. அசதியா இருக்கும்” என்று யுகேந்திரன்‌ மனைவியை விரட்டினான்.

ஜீவிதாவுமே தன் உயிருக்கும் மேலான உயிரை பாதுக்காத்திட கணவன் கூறியதை செவிக்கொடுத்து கேட்டுக் கொண்டாள் நல்ல துணைவியாக.

-தொடரும்

5 thoughts on “உயிரில் உறைந்தவள் நீயடி-17”

  1. M. Sarathi Rio

    உயிரில் உறைந்தவள் நீயடி..!
    எழுத்தாளர்: பிரவீணா தங்கராஜ்
    (அத்தியாயம் – 17)

    உண்மையிலயே காதல் தப்பு கிடையாது, ஆனால் அதில் காத்திருத்தல் என்பது ரொம்ப முக்கியம். எப்படி ஒரு நல்ல பெண், பையன்.. காதலன் காதலியா கிடைப்பதற்கு காத்திருக்கிறோமோ, அதேப்போல காதல் கை கூட பெற்றவர்களின் சம்மதத்திற்காகவும் காத்திருக்கணும். திருமணம் இரு உள்ளங்களை மட்டும் இணைப்பதல்ல. இரு வேறு குடும்பத்தையும், சுற்றத்தாரையும் இணைப்பதாகும். உறவுகளை பெருக்குவதாகும்ன்னு யார் புரிஞ்சிக்கிறாங்க.

    😀😀😀
    CRVS (or) CRVS 2797

  2. Kalidevi

    corrct thana avanga kadhalichi pona pothu therila avanga ponnu ponathum tha antha vali theriuthu kadhal thappu illa llarkittaum pesi samatham vangi pani irukalam . eppadiyo ellam pesitanga pothum

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Leave the field below empty!